அகில இந்திய வானொலியின் பம்பாய் நிலையத்திலிருந்து டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய உரை

(1.இந்தியத் தகவல் ஏடு, 1943 ஜனவரி 10 தேதி, பக்கம் 16-19)

“இது புதிய நாஜி அமைப்பிற்கு எதிரான யுத்தம் என்கிற போது, பழைய அமைப்பிற்கு ஆதரவான யுத்தம் என்று இதற்கு அர்த்தமல்ல என்பதை தொழிலாளர் அறிவர். பழைய அமைப்பிற்கும் நாஜி அமைப்பிற்கும் எதிரான யுத்தமே இது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை வெறும் கோஷங்களாக அல்லாமல் வாழ்க்கையின் யதார்த்தங்களாகத் திகழும் புதிய அமைப்பை ஏற்படுத்துவதுதான் இந்த யுத்தத்திற்குத் தரப்படும் விலையாக இருக்கும் என்பதையும் தொழிலாளர் அறிவர்”, என்று அகில இந்திய வானொலி பம்பாய் நிலையத்திலிருநது “ இந்த யுத்தத்தில் வெற்றி பெற ஏன் இந்தியத் தொழிலாளர்கள் உறுதிபூண்டுகள்ளனர்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இந்திய சர்க்காரின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குறிப்பிட்டார்.

     ambedkar 248டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய உரையின் முழுவாசகம் வருமாறு:

     தொழிலாளருடன் சம்பந்தப்பட்டவர்கள், அவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் பலர் உரை நிகழ்த்தவிருக்கிறார்கள். இந்த வானொலி உரைகளின் வரிசையில் இன்றிரவு நான் ஆற்றும் இந்த உரை முதலாவதாகும். என் உரையின் பொருள் பொதுத் தன்மையுடையது. அடுத்து தொடர்ந்து வரிசையாக நிகழ்த்தப்படவிருக்கும் உரைகளுக்கு இது முன்னிலையாக இருக்கும். உரைக்கு நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைப்பு, ‘இந்த யுத்தத்தில் வெற்றி பெற ஏன் இந்தியத் தொழிலாளர்கள் உறுதிபூண்டுள்ளனர்’ என்பதாகும். எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் ஒரு விஷயம் இதில் உள்ளது. யுத்தத்தின்பால் இந்தியத் தொழிலாளர்கள் கொண்டுள்ள கண்ணோட்டம் பற்றியதாகும் அது. இந்தியாவில் இப்பொழுது யுத்த முயற்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் சூடு பிடித்திருக்கும் நிலைமையில் யுத்தத்தை நடத்துவதில் இந்தியத் தொழிலாளர் தீவிரமாக ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். இதுபற்றி எத்தகைய ஐயப்பாட்டுக்கும் இடமில்லை. இதைச் செய்வதனின்று அவர்களைத் திசைதிருப்ப பல முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதிலும், தொழிலாளர் தங்களின் ஒத்துழைப்பை அளித்துக் கொண்டுவருகின்றனர். அதில் உறுதிபூண்டுள்ளனர்.

தொழிலாளர் விரும்புவது என்ன?

     யுத்தத்தின் போது, பல நன்மைகளைத் தொழிலாளர் பெற்றுள்ளனர்; இன்னும் பலவற்றை அடைவர் என்பது நிச்சயம். நான் அண்மையில் எடுத்துக்காட்டியது போல, சட்டத்தின் மூலம் தொழிலாளர் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர். தொழிலாளர் நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி முதலாளிகளை மத்திய சர்க்கார் நிர்ப்பந்தித்துள்ளது. இதன்மூலம் தொழிலாளர்கள் பாதுகாப்பையும் பந்தோபஸ்தையும் சிலபல உரிமைகளையும் பெற்றனர். யுத்த முயற்சியை தீவிரப்படுத்த அனைத்தையும் செய்ய தொழிலாளர் உறுதிபூண்டிருப்பதற்கு இத்தகைய உடனடி நன்மைகளைப் பெற்றிருப்பது மட்டுமே காரணமல்ல. இந்த உறுதிக்கு அடிப்படையாக அமைந்துள்ள தேவையான நல்ல சூழ்நிலைகளைப் பெற்றுக் கொள்வதோடு தொழிலாளர் திருப்தியடையவில்லை. தொழிலாளர் விரும்புவது என்னவெனில், நல்ல வாழ்க்கை நிலைமைகள். நல்ல வாழ்க்கை நிலைமைகள் என்று தொழிலாளர் கருதுவது என்ன என்பதை விளக்குகிறேன்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

      தொழிலாளர் சுதந்திரத்தை விரும்புகின்றனர். இதில் புதியது எதுவும் இல்லாமலிருக்கலாம். சுதந்திரம் பற்றி தொழிலாளர் கண்ணோட்டத்தில் புதியது என்ன? கட்டுப்பாடு இல்லாதது என்ற எதிர்மறையான கண்ணோட்டமல்ல சுதந்திரம் பற்றிய தொழிலாளர்களின் கண்ணோட்டம். வாக்கு அளிக்கும் உரிமையை மக்களுக்கு அங்கீகரிப்பதுடன் மட்டும் சுதந்திரம் பற்றிய தொழிலாளர் கண்ணோட்டம் முடிவடைந்து விடுவதில்லை. அவர்களது கண்ணோட்டத்தில் சுதந்திரம் என்பது ஆக்கப்பூர்வமானது; மக்களால் ஆன அரசாங்கம் என்ற கருத்தை அது உள்ளடக்கியுள்ளது. மக்களாலான அரசாங்கம் என்பது, தொழிலாளர் கருத்துப்படி, நாடாளுமன்ற ஜனநாயகம் என்று ஆகாது. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது ஒரு அரசுவடிவம். அதில் மக்களின்பங்கு என்னவெனில் தங்களின் எஜமானர்களுக்கு வாக்களித்து, ஆட்சி செலுத்துவதை அவர்களிடம் விட்டுவிடும் அமைப்பாகும். அத்தகைய அரசாங்க அமைப்பு, தொழிலாளர் கருத்தில், மக்களாலான அரசு என்பதைக் கேலிக்கூத்தாக்குவதாகும். மக்களாலான அரசு பேருக்கு மட்டுமின்றி யதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்று தொழிலாளர் விரும்புகின்றனர். இரண்டாவதாக, தொழிலாளர் கருத்துப்படி சுதந்திரம் என்பதில் சமசந்தர்ப்பத்திற்கான உரிமைகளையும், ஒவ்வொரு தனி நபரின் தேவைகளுக்கு ஏற்ப அரசின் கடமையும் உட்படும்.

     தொழிலாளர் சமத்துவத்தை விரும்புகின்றனர். தொழிலாளர் சமத்துவம் என்று கூறுவது சட்டத்தில், அரசுப் பணிகளில், ராணுவத்தில், வரிவிதிப்பில், வாணிகம், தொழில்களில் எல்லா விதமான தனி உரிமைகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதாகும். உண்மையில் சமத்துவமின்மைக்கு இட்டுச் செல்லும் எல்லா வழிமுறைகளும் நீக்கப்பட வேண்டும்.

     தொழிலாளர்கள் சகோதரத்துவத்தை விரும்புகின்றனர். சகோதரத்துவம் என்பதை சர்வவியாகமான மனிதநேய சகோதரத்துவம் என அவர்கள் கருதுகின்றனர்; உலகில் சமாதானம், மனிதன்பால் நல்லெண்ணம் என்ற அடிப்படையில் எல்லா வர்க்கங்களையும் எல்லா நாடுகளையும் ஐக்கியப்படுத்துவது அதன் லட்சியம்.

நாஜிகளின் புதிய அமைப்பு

     தொழிலாளரின் லட்சியங்கள் இவை. அவை புதிய அமைப்பின் அடிப்படை; அது அமைக்கப்பட்டால்தான் மனித சமுதாயத்தை நாசத்தினின்று காப்பாற்ற முடியும். நேசநாடுகள் யுத்தத்தில் தோற்றால் இந்தப் புதிய அமைப்பை ஏற்படுத்தமுடியுமா? அதுதான் தலையாய கேள்வி; இதிலிருந்து நழுவுவது அல்லது தவிர்ப்பது நாசத்தை விளைவிக்கும் என்று தொழிலாளர்கள் அறிவர். கைகட்டிக் கொண்டு சோம்பேறித்தனமாக உட்கார்ந்து கொண்டு போராட மறுத்தால் இந்தப் புதிய அமைப்பை ஏற்படுத்த முடியுமா? நேச நாடுகள் வெற்றி பெறுவதுதான் இத்தகைய புதிய அமைப்பைத் தோற்றுவிப்பதற்கான ஒரே நம்பிக்கை என்பதைத் தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர். நேசநாடுகள் தோற்றாலும் நிச்சயம் ஒரு புதிய அமைப்புவரும்; ஆனால் அது நாஜி அமைப்பைவிட வேறு எதுவாகவும் இருக்காது. அந்த ஆட்சியில் சுதந்திரம் நசுக்கப்படும், சமத்துவம் மறுக்கப்படும், ஆபத்தான சித்தாந்தம் என்று சகோதரத்துவம் அகற்றப்படும்.

     நாஜிகளின் புதிய அமைப்பு என்பதன் முழுமை இத்துடன் முடிவதில்லை. நாஜி ஏற்பாட்டில் சில பகுதிகள் பற்றி ஒவ்வொரு இந்தியனும் – அவனுடைய மதம், அவனது சாதி, அவனது அரசியல் நம்பிக்கை இவை எதுவாக இருந்தாலும் – அதன் அபாயத்தைப் பற்றிக் கவலையுடன் சிந்திக்க வேண்டும். அதன் மிக முக்கிய பாகம் வருண இன அடிப்படையில் மனிதவர்க்கத்தை வகை பிரிப்பதாகும். நாஜி ஆட்சிமுறையில் இதுதான் பிரதான கோட்பாடாகும். ஜெர்மன் இனத்தை மிக உன்னதமான மனித இனமாக நாஜிகள் கருதுகின்றனர். மற்ற வெள்ளையர் இனத்தவர்களையும் ஜெர்மன் இனத்திற்கு கீழாகவே வைக்கின்றனர். பழுப்பு இனத்தாரை – இதில் இந்தியர்களும் உட்படுவர் – தர வரிசையில் கடைசியில் வைக்கின்றனர். இந்த அளவுக்குக் கேவலப்படுத்துவது போதாது என்பது போல், எல்லாப் பழுப்புநிற இனத்தவர்களும் ஜெர்மன் மற்றும் வெள்ளை இனத்தாருக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்றும் நாஜிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர். அவர்களுக்குக் கல்வி வசதி அளிக்கக்கூடாது; எந்த சுதந்திரமும் – அரசியல் அல்லது பொருளாதார சுதந்திரம் – அவர்களுக்கு வழங்கப்படக் கூடாது என்பது நாஜிகளின் சித்தாந்தம்.

நேரடி அபாயம்

     இந்தியர்களுக்குக் கல்வியும் அரசியல் சுதந்திரமும் அளித்ததற்காக ஹிட்லர் தனது மெயின்காம்ப் என்ற நூலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆத்திரத்துடன் கண்டித்திருப்பது நன்கு அறிந்த ஒன்றே. நாஜி சித்தாந்தம் இந்தியர்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் நேரடி அபாயமாகும். இந்த உண்மையைக் கணக்கில் கொண்டால், நாஜிசத்தை எதிர்த்து போராட ஏன் இந்தியர்கள் கட்டாயம் முன்வர வேண்டுமென்பதற்கு மிகப் பலமான காரணம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். நாஜி ஆட்சி அமைப்பை, தொழிலாளர்கள் தங்கள் மனத்தில் கொண்டுள்ள புதிய ஆட்சி அமைப்போடு ஒப்பிடும் எவரும், நேச நாடுகளுக்கு ஆதரவாகப் போராடி, நாஜிசத்தை அழித்தொழிக்க தொழிலாளர் உறுதிபூண்டிருக்கும் நிலை, எந்த புத்திசாலி மனிதனும் எடுக்க வேண்டிய நிலைதான் என்பதை பற்றி சந்தேகம் கொள்ள முடியாது. எனினும், இத்தகைய ஒரு கண்ணோட்டத்தை மேற்கொள்ள மறுக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.

     நாஜி வெற்றி பற்றியோ அதையடுத்து ஏற்படும் புது நாஜி ஆட்சி அமைப்பு பற்றியோ தங்களுக்கு கவலையில்லை என்று நினைக்கும் சிலர் உள்ளனர். ஆனால் நாட்டில் இத்தகையோர் அதிகம் இல்லை என்பது அதிர்ஷ்டவசமானது. இத்தகைய கருத்துக் கொண்டவர்கள் தங்களைப் பற்றியே அக்கறை கொள்ளாதவர்கள். அவர்களைப் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அதிருப்தியடைந்துள்ள அரசியல்வாதிகள் அவர்கள். அவர்கள் நினைக்கிற படி நடக்க அனுமதிக்காவிடில் அவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். அவர்களது தாரக மந்திரம் ‘எல்லாம் எனக்கே அல்லது நாசகமாகப் போகட்டும்.”

     யுத்தங்கள் தவறு என்று வாதிக்கும் அமைதிவாதிகள் உள்ளனர். ஏராளமான மனித முயற்சியினால் மனிதர்கள் கட்டி வளர்த்த மனித நாகரிகத்தை கெடுத்து நாசமாக்கியதற்கும், உலகத்திலுள்ள எல்லாக் கஷ்டங்களுக்கும் பிரதானமாக யுத்தங்களே காரணம் என்று அவர்கள் வாதிக்கின்றனர். அது உண்மைதான். அப்படியிருந்தும் அமைதிவாதத்தை வாழ்க்கையில் கோட்பாடாக ஏற்க தொழிலாளர்கள் மறுக்கின்றனர். தாக்கப்படும்போது போராட மறுப்பதால் மட்டும் யுத்தங்களை ஒழித்து விட முடியாது. பலாத்கார சக்திகளுக்கு சரணடைவதன் மூலம் கிடைக்கும் சமாதானம், சமாதானமே அல்ல. அது ஒரு தற்கொலைச் செயலாகும். அதற்கு எந்த நியாயத்தையும் காண்பது கடினம். ஒரு கண்ணியமான மனித வாழ்க்கையை பாதுகாப்பதற்கு உன்னதமானதும் தேவையானதுமான எல்லாவற்றையும் அநாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும், தியாகம் செய்வதாகும் அது.

     யுத்தத்தை ஒழிப்பதற்குத் தொழிலாளர்களுக்குள்ள வழி சரணடைவதல்ல. தொழிலாளர்கள் கருத்துப்படி இரண்டு விஷயங்கள் மட்டுமே யுத்தத்தை ஒழிக்கும்; ஒன்று யுத்தத்தில் வெல்வது; மற்றது நியாயமான சமாதானத்தை ஏற்படுத்துவது. தொழிலாளர் பார்வையில் இரண்டும் சம அளவில் முக்கியமானவை. யுத்தம் தோன்றுவது மனிதனின் ரத்த தாகத்தால் அல்ல. தோற்றவர்கள் மீது ஜெயித்தவர்கள் கேவலமான சமாதானத்தை அடிக்கடி சுமத்துவதில் யுத்தத்தின் தோற்றுவாயைக் காணலாம். யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, அமைதியாளரின் கடமை நழுவுவதோ அல்லது போராட மறுப்பதோ அல்ல என்பது தொழிலாளர்களின் கருத்து. யுத்தம் நடக்கும்போது மட்டுமல்லாமல் சமாதான விதிமுறைகள் உருவாக்கப்படும்போதும் தீவிரமாக செயல்படுவதும் விழிப்பாக இருப்பதும் அமைதிவாதியின் கடமை என்று தொழிலாளர்கள் நம்புகின்றனர். சரியான காரியத்தைச் சரியான நேரத்தில் செய்யத் தவறுகிறார் அமைதிவாதி. யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது அதற்கு எதிராக அமைதிவாதி தீவிரமாகச் செயல்படுகிறார். யுத்தம் முடிந்து சமாதானம் மேற்கொள்ளப்படும்போது அவர் செயலற்றும் அக்கறை யற்றும் பேசுகிறார். இந்த விதத்தில் இரண்டையும், யுத்தத்தையும் சமாதானத்தையும் அவர் இழந்து விடுகிறார். இந்த யுத்தத்தில் போராட தொழிலாளர்கள் விரும்புகிறார்கள் என்றால், அமைதி வாதம் யுத்தத்தை ஒழிப்பதற்கான தொழிலாளர்கள் வழியல்ல என்பதால்தான்.

பிரெஞ்சுப் புரட்சியை நினைவுகூருவோம்

     வெற்றியைத் தொடர்ந்து புதிய அரசியல் அமைப்பு ஏற்படும் என்பதற்கு உத்திரவாதம் எதுவும் இல்லை என்று கூறும் அவ நம்பிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த அவநம்பிக்கைக்கு ஒருவேளை இடம் இருக்கலாம். தொழிலாளர்களுக்கு ஒரு சிறந்ததான நாட்டின் புதிய அரசியல் அமைப்புக்கான வேர்கள் பிரான்ஸ் நாட்டின் புரட்சியில் இருக்கின்றன. பிரெஞ்சு புரட்சி இரு கோட்பாடுகளை முன்வைத்தது சுயாட்சி என்ற கோட்பாடும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடும் சுயாட்சி என்ற கோட்பாடு, மற்றவர்களால் மன்னர்கள், சர்வாதிகாரிகள் அல்லது சலுகைபெற்ற வர்க்கங்கள் யாராக இருந்தாலும் அவர்களால் ஆட்சி செலுத்தப்படுவதற்குப் பதிலாக மக்கள் தங்களாலேயே ஆட்சி செய்யப்பட வேண்டும் என்ற அபிலாஷையை வெளிப்படுத்துகிறது; பொதுவான லட்சியங்களாலும் நோக்கங்களாலும் ஒன்றுபடுத்தப்பட்ட மக்களின் அபிலாஷையை வெளிப்படுத்துகிறது. அதுதான் ‘ஜனநாயகம்’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவான லட்சியங்களாலும் நோக்கங்களாலும் ஒன்றுபடுத்தப்பட்ட மக்களின் அபிலாஷை எதுவோ அதன்படி தங்களின் அரசியல் அந்தஸ்தை எந்தவித வெளி நிர்பந்தமும் இல்லாமல் முடிவு செய்யும் உரிமைதான் சுயநிர்ணய உரிமை; அது சுதந்திரம், பரஸ்பரம் சார்ந்திருப்பது அல்லது உலகத்தின் மற்ற மக்களுடன் இணைந்து இருப்பது எதுவானாலும் இதுதான் தேசியவாதம் எனப்படும். மனித சமுதாயத்தின் நம்பிக்கை இந்த கோட்பாடுகள் நிறைவேறுவதை மையமாகக் கொண்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக, சுமார் 140 ஆண்டுகள் முடிந்தபின்பு இந்த கோட்பாடுகள் வேரூன்றி வளரத் தவறிவிட்டன. பழைய ஆட்சி முறை அதனுடைய எல்லா அப்பட்டமான தன்மையிலோ அல்லது இந்த இரு கோட்பாடுகளுக்கு போலித்தனமான சலுகைகளை அளித்தோ தொடர்ந்து உலகில் சுயாட்சி அரசுகளோ அல்லது சுய நிர்ணய உரிமையோ இல்லாமல் போயிற்று. இதெல்லாம் நிச்சயமாக உண்மைதான். ஆனால் தொழிலாளர் மேற்கொண்ட கண்ணோட்டத்திற்கு எதிரான வாதமல்ல இது; புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்துவதற்குப் பூர்வாங்க நிபந்தனை நாஜிச சக்திகள் மீது வெற்றி பெற வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கண்ணோட்டம். இதற்கு அர்த்தம் என்னவெனில், தொழிலாளர் அதிகம் உஷாரோடு இருக்க வேண்டும் என்பதே ஆகும். நாஜிகள் மீது வெற்றி பெறுவதோடு யுத்தம் முடிந்து விடக் கூடாது. அதேபோல் பழைய ஆட்சி அமைப்பு, அது எங்கிருந்தாலும் அதன் மீது வெற்றி பெறாமல் சமாதானம் கூடாது.

தொழிலாளர்களும் தேசியமும்

      தொழிலாளர்களை மிக அதிகமாக எதிர்ப்பவர்கள் நிச்சயமாக தேசியவாதிகளே. இந்திய தேசியத்திற்கு முரணான, அதற்கு தீங்கான கண்ணோட்டத்தை தொழிலாளர்கள் கொண்டுள்ளனர் என்று தொழிலாளரை அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இரண்டாவது ஆட்சேபனை, இந்தியாவின் சுதந்திரம் பற்றி எந்த வாக்குறுதியும் பெறாமலேயே, யுத்தத்திற்காக போராட தொழிலாளர்கள் ஒப்புக்கொண்டனர் என்பது. இந்தப் பிரச்சினைகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன; மிக அக்கறையுடன் வாதிடப்படுகின்றன; எனவே இவர்களைப் பற்றித் தொழிலாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறுவது அவசியம்.

     தேசியத்தைப் பொறுத்தவரை, தொழிலாளர்களின் கண்ணோட்டம் மிகத் தெளிவானது. தேசியத்தை போலித்தன்மை வாய்ந்ததாக ஆக்க தொழிலாளர்கள் தயாராக இல்லை. தேசியம் என்றால் புராதன காலத்தை பூஜிப்பது, தோற்றுவாயில் ஸ்தல தன்மையில்லாத, வடிவம் இல்லாத எல்லாவற்றையும் தள்ளிவிடுவது – எனில், தேசியத்தைத் தனது கோட்பாடாக தொழிலாளர் ஒப்புக்கொள்ள முடியாது. கடந்த காலத்தின் சித்தாந்தத்தைத் தற்காலச் சித்தாந்தமாகத் தொழிலாளர்கள் ஏற்பதற்கில்லை. தொடர்ந்து விரிவடைந்துவரும் மனித உணர்வு கடந்த காலத்தின் கரத்தால் குரல்வளை பிடித்து நசுக்கப்படுவதை தொழிலாளர்கள் அனுமதிக்க முடியாது; இன்றைக்கு அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது; எதிர்கால நம்பிக்கையும் கிடையாது. ஸ்தலப் பிரத்தியேகத்தன்மை என்ற குறுகிய சட்டைக்குள் வட்டத்திற்குள் அதனை அமுக்கி விடுவதை அனுமதிக்கவும் முடியாது. மற்ற நாடுகளின் அனுபவத்தை வழிகாட்டியாகக் கொண்டும், நமது குறைகளை சீர்செய்தும், மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்தவும், அரசியல் வாழ்க்கையை மாற்றிப் புனரமைக்கவும் தொழிலாளர்கள் தொடர்ந்து வற்புறுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கையைப் புனர்நிர்மானித்து வடிவமைப்பதற்குத் தேசியம் குறுக்கே நின்றால், அப்பொழுது தேசியத்தைத் தொழிலாளர்கள் மறுதலிக்க வேண்டும்.

     தொழிலாளரின் கோட்பாடு சர்வதேசியமாகும். எனினும் தொழிலாளர்கள் தேசியத்தில் அக்கறை கொண்டுள்ளனர். ஏனெனில் ஜனநாயகத்தின் சக்கரம் – பிரதிநிதித்துவம் வாய்ந்த நாடாளுமன்றம், பொறுப்பான நிர்வாகம், அரசியல் சட்ட சம்பிரதாயங்கள் ஆகியவை – தேசிய உணர்வால் ஐக்கியப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் நன்றாகச் செயல்படுகிறது. தொழிலாளர்களுக்குத் தேசியம் என்பது தங்களது லட்சியத்தை அடையும் ஒரு வழிதான். அவ்வாறில்லாமல், வாழ்க்கையின் அத்தியாவசிய கோட்பாடுகள் என்று தொழிலாளர்கள் எவற்றைக் கருதுகிறார்களோ அவற்றைத் தியாகம் செய்ய அவர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய இறுதி லட்சியமாக அது ஆகிவிட முடியாது.

சுதந்திரம்: ஒரு தவறான அணுகுமுறை

     சுதந்திரத்தைப் பொறுத்தவரை, அதன் முக்கியத்துவத்தைத் தொழிலாளர்கள் உணர்கின்றனர். ஆனால் சுதந்திரம் பற்றி ஒரு தவறான அணுகுமுறையும், அதன் முக்கியத்துவம் பற்றி தவறான கருத்தும் உள்ளது என்றும் தொழிலாளர்கள் நினைக்கின்றனர். ஒரு நாட்டின் சுதந்திரம் ஐய நிலையிலான எந்தக் குறிப்பிட்ட தன்மை கொண்ட சர்க்கார் அல்லது சமூக அமைப்புடன் முடிச்சுப் போட்டுக் கொள்வதில்லை. பெயரளவிலான சுதந்திரம் உள் அடிமைத்தனத்தையே தோற்றுவிக்கும்.

     சுதந்திரம் என்பது ஒரு நாடு வெளி நிர்ப்பந்தம் இல்லாமல் அதன் அரசாங்க வடிவத்தையும் அதன் சமூக அமைப்பையும் நிர்ணயிக்க அதற்குள்ள சுதந்திரத்தைக் குறிக்குமே தவிர வேறல்ல. எத்தகைய அரசாங்கம் அமைக்கப்படுகிறது, எத்தகைய சமுதாயம் நிர்மாணிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உள்ளது சுதந்திரத்தின் மதிப்பு. எந்த நோக்கத்துக்காக உலகம் இன்று போராடிக் கொண்டிருக்கிறதோ அந்த நோக்கத்துக்கு எதிராக அரசாங்க வடிவமும் சமுதாய அமைப்பும் இருக்குமாயின் அந்த சுதந்திரத்திற்கு மதிப்பு அதிகம் இல்லை. புதிய இந்தியா என்ற கோஷத்துக்கு அதிக முக்கியத்துவமும், ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற கோஷத்துக்கு குறைந்த முக்கியத்துவமும் இருக்க வேண்டுமென்று தொழிலாளர்கள் கருதுகின்றனர். புதிய அரசியல் அமைப்புக் கொண்ட இந்தியாவை நிறுவ வேண்டும் என்ற அறைகூவல் சுதந்திரம் வேண்டும் என்ற அறைகூவலை விட அதிகம் வலுமிக்கதாக இருக்கும். ஒரு புதிய இந்தியாவில் ஒரு புதிய அரசியல் அமைப்பு என்ற கருத்தோட்டம் விடுதலை பெற வேண்டும் என்ற உறுதியைப் பெரிதும் பலப்படுத்தும். எதற்காக சுதந்திரம், யாருக்காக சுதந்திரம் என்றெல்லாம் இப்போது கேட்கப்படும் பல இக்கட்டான, தர்ம சங்கடமான கேள்விகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும்.

     இரண்டாவதாக, யுத்த முயற்சிக்கு ஆதரவளிப்பதற்காக உடனடியாக சுதந்திரம் பெற வேண்டுமென்று ஒரு நிபந்தனை போடுவதை புரிந்து கொள்ள தொழிலாளர்களுக்கு கஷ்டமாக உள்ளது. சில நபர்களின் கண்ணோட்டத்தில் இந்த நிபந்தனை ஒரு திடீர் மாற்றத்தைக் குறிக்கிறது. விடுதலைபெற இந்தியாவிற்குள்ள உரிமையைக் கபளீகரம் செய்ய ஏதேனும் திடீர் சதி நடக்குமானால் இந்த நிபந்தனையை நியாயப்படுத்த முடியும். அவ்வாறு சதி நடைபெற்றுவருவதற்கான சான்று ஏதும் இல்லை. ஒருக்கால் அத்தகைய சதி ஏதாவது இருக்குமானால், சதிகாரர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் வெற்றிபெற முடியாது. மக்களின் ஐக்கிய பலத்துடன் இந்தியா சுதந்திரம் கோரினால், சுதந்திரத்திற்கான அதன் உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவின் சுதந்திரம் இன்னமும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியர்களிடையே உள்ள ஒற்றுமையின்மைதான். இந்திய சுதந்திரத்தின் எதிரிகள் இந்தியர்களே தவிர வேறு எவர்களும் அல்ல.

தொழிலாளர்களும் யுத்தமும்

     இந்த யுத்தத்தில் என்ன சம்பந்தப்பட்டுள்ளது என்பதை முழுமையாகப் புரிந்துகொண்ட பின்பே யுத்தத்தின்பால் தொழிலாளரின் கண்ணோட்டம் உருவாயிற்று. உலகத்திலிருந்து யுத்தம் ஒழிக்கப்பட வேண்டுமெனில் யுத்தத்தையும் சமாதானத்தையும் அவசியம் வெல்ல வேண்டுமென்பதைத் தொழிலாளர் புரிந்து கொண்டுள்ளனர். நாஜிகளைத் தோற்கடித்து ஒரு புதிய நாஜி அரசியல் அமைப்புகான சாத்தியப்பாடுகளை அழித்தால் மட்டும் போதாது என்பதையும், இது பழைய அமைப்பிற்கான போர் அல்ல என்பதையும் தொழிலாளர்கள் அறிவார்கள். ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதே இந்த யுத்தத்திற்குத் தரப்படும் விலையாக இருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வெறும் கோஷங்களாக இல்லாமல் வாழ்க்கையின் யதார்த்தமாகத் திகழும். ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் மேலான கேள்வி, இந்தப் புதிய அமைப்பு எப்படி யதார்த்தமாகும் என்பதாகும். இந்தக் கேள்வி பற்றி தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர். இந்த லட்சியங்களெல்லாம் நிறைவேற வேண்டுமானால், அதற்கு அடிப்படையான நிபந்தனை உண்டு. யுத்தத்தில் வெற்றி பெறுவதுதான் அந்த நிபந்தனை என்று தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இன்றைய யுத்தத்தின் இரு அம்சங்கள்

     இந்த யுத்தத்தால் ஏராளமான நல்ல பலன்கள் கிட்டும் சாத்தியப்பாடுகள் உள்ளன. ஒரு புதிய அமைப்பை தோற்றுவிப்பதை அது உறுதி செய்கிறது. இந்த யுத்தம் மற்ற யுத்தங்களிலிருந்து மாறுபட்டது என்பதைத் தொழிலாளர்கள் காண்கின்றனர். மற்றயுத்தங்களிலிருந்து வேறுபடுத்தும் இரு அம்சங்கள் உள்ளன. முதலாவதாக முந்திய யுத்தங்களில் போல, உலகின் பிரதேசங்களை மிகவும் பலம் வாய்ந்த நாடுகளிடையே பங்கு போட்டுக் கொள்வதற்கான யுத்தமல்ல இது. இந்த யுத்தத்தில், உலகின் பிரதேசங்களை பங்குபோட்டுக் கொள்வது ஒரே காரணமாக இல்லை. எத்தகைய அரசு வடிவங்கள் மற்றும் அமைப்புகளின் கீழ் மனித சமுதாயம் வாழப்போகிறது என்பதுபற்றிய தத்துவார்த்த மோதல் இந்த யுத்தத்தில் இருக்கின்றன. இரண்டாவதாக, மற்ற யுத்தங்கள் போல் இந்த யுத்தம் வெறும் யுத்தம் மட்டுமல்ல. எதிரியை முறியடித்து அவனது தலைநகர்நோக்கி முன்னேறி, சமாதானத்தை திணிப்பது மட்டுமல்ல இந்த யுத்தத்தின் நோக்கம். இந்த யுத்தம், யுத்தமாக இருப்பதோடு ஒரு புரட்சியுமாகும்; வாழ்க்கையில் அடிப்படை மாற்றத்தை கொண்டு வந்து புனரமைக்கும் புரட்சியாகும். இந்த அர்த்தத்தில் இது ஒரு மக்கள் யுத்தமாக இருக்க முடியும். அப்படி இல்லாமலிருந்தால்தான் அதை ஒரு மக்கள் யுத்தமாக மாற்ற முடியும், மாற்ற வேண்டும்.

     இந்த உண்மைகளின் பின்னணியில் இந்த யுத்தம் பற்றியும் அதன் பலனைப் பற்றியும் தொழிலாளர்கள் அக்கறையில்லாமல் இருக்கமுடியாது. சென்றகாலத்தில் புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மீண்டும் மீண்டும் முறியடிக்கப்பட்டன என்பதைத் தொழிலாளர்கள் அறிவர். அதற்குக் காரணம், ஜனநாயகம் அமைக்கப்பட்டபின், அது பிற்போக்காளர் கரங்களில் விடப்பட்டதேயாகும். எதிர்காலத்தில் இம்மாதிரி தவறு மீண்டும் செய்யப்படாமல் இருப்பதை உலக மக்கள் கவனித்து கொள்வார்களேயானால், இந்த யுத்தத்தில் போராடியும் புதிய அரசியல் அமைப்பை நிறுவி அதனை உலக ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக ஆக்க முடியும். 

சரியான தலைமை

     நாட்டிற்கு ஒரு தலைமை தேவைப்படுகிறது; யார் வழிகாட்டமுடியும் என்பதுதான் கேள்வி. நாட்டிற்குத் தேவைப்படும் தலைமையை அதற்கு அளிப்பதற்குத் தொழிலாளர்களுக்கு திறமை உள்ளது என்று துணிந்து கூறுவேன். மற்ற விஷயங்களோடு, சரியான தலைமைக்குத் தேவைப்படுபவை லட்சியநோக்கும் சுதந்திரமான சிந்தனையும். மேல்மட்டத்தினருக்கு லட்சியநோக்கு இருப்பது சாத்தியமே; ஆனால் சுதந்திரமான சிந்தனை சாத்தியமில்லை. நடுத்தரவர்க்கத்தைப் பொறுத்தவரை, லட்சியநோக்கும் சுயசிந்தனையும் சாத்தியமில்லை. மேல்தட்டினருக்கு உள்ள தாராளப்போக்கு மத்தியதரவர்க்கத்திற்குக் கிடையாது; ஏனெனில் லட்சியநோக்கை வரவேற்று வளர்க்க தாராளப்போக்கு அவசியம். புதிய அரசியல் அமைப்புக்கான வேட்கை மத்தியதர வர்க்கத்திடம் இல்லை; அந்த நம்பிக்கையில்தான் தொழிலாளர் வாழ்கின்றனர். எனவே தங்களின் அரசியல் லட்சியத்தை அடைய இந்தியர்கள் பின்பற்றிய சென்றகாலத்தின் நியாயமான, பாதுகாப்பான வழிகளை திரும்பக் கொண்டு வருவதில், தொழிலாளர்களுக்கு ஒரு தெளிவான பொறுப்பு உள்ளது. இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் தொழிலாளரின் தலைமை என்பது போராடுவதற்கும் ஐக்கியத்தை ஏற்படுத்துவதுமாகும். இந்த வெற்றியின் பலன்கள் சுதந்திரமும் புதிய சமூக அமைப்புமாகும். இத்தகைய வெற்றியை ஈட்ட எல்லோரும் போராட வேண்டும். வெற்றியின் பலன்கள் எல்லோருக்குமான மூதாதையர்கள் வழி சொத்தாக இருக்கும். அந்த சொத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு ஐக்கிய இந்தியாவுக்குள்ள உரிமைகளை மறுப்பதற்கு யாரும் இருக்க முடியாது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, செப்டம்பர் 14, 1942, பக்கம் 76)

     டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, பின்கண்ட தீர்மானத்தை முன்மொழிகிறேன்;

ambedkar in bombayமண்ணியல் மதிப்பாய்வு நிறுவனப் பயன்பாட்டுக் கிளையின் பணிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி ஆலோசனை வழங்க இந்திய அரசாங்கம் அமைத்துள்ள ஆலோசனைக் குழுவில் செயல்படுவதற்கு, மாண்புமிகு தலைவர் ஆணையிடும்முறையில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க இந்த சட்டமன்றம் நடவடிக்கை மேற்கொள்கிறது.”

      தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): முன்மொழிவு விவாதத்திற்கு முன்வைக்கப்படுகிறது:

‘இந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனத்தின் பயன்பாட்டுக் கிளையின் பணிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றி ஆலோசனை வழங்க இந்திய அரசாங்கம் அமைத்துள்ள ஆலோசனைக் குழுவில் செயல்படுவதற்கு மாண்புமிகு தலைவர் ஆணையிடும் முறையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுக்க இந்த சட்டமன்றம் நடவடிக்கை மேற்கொள்கிறது.”

      மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மதிப்பிற்குரிய என் நண்பருக்கு என்னுடைய கன்னி உரையைக் கேட்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்பது உண்மைதான். எனது வாழ்நாளில் பல உரைகள் ஆற்றியிருக்கிறேன். ஒரு கன்னி உரையை ஆற்றுவதற்கு அஞ்சுவேன் என நான் நினைக்கவில்லை. (2.மேற்படி, பக்கங்கள் 78-79)

     இந்தத் தீர்மானத்தை ஆதரித்து நான் பேசாததற்குக் காரணம் இந்த சபைக்கு இந்தத் துறை தெரியப்படுத்தத் தயாராக இல்லாத ஒரு மூடிமறைக்கப்பட்ட விஷயம் ஏதோ இருக்கிறது என்று எனது நண்பர் சுட்டிக் காட்டினார். இந்தத் தீர்மானம் குறித்து நானோ, அல்லது இந்திய அரசாங்கமோ வெட்கப்படக்கூடிய எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என மதிப்பிற்குரிய உறுப்பினருக்கு நான் உறுதியளிக்க முடியும்.

     இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிந்தபோது இத்தகைய தீர்மானங்கள் பற்றி எவ்வாறு முடிவுசெய்யப்படுமோ அவ்வாறே இதுவும் முடிவு செய்யப்படும் என்று நான் நினைத்தேன். எனது நண்பர் இந்த விஷயங்களை எழுப்புவார் என்று கிஞ்சித்தேனும் தோன்றியிருந்தால் இந்தப் பிரச்சினைகள் பற்றி விவரங்களுடன் வந்திருப்பேன்.

     மதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: இந்த அவையின் நடைமுறையை தாங்கள் அறிந்திருக்க வேண்டும்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் அவைக்கு புதியவன், இந்த அவை சற்று அதிகம் பெருந்தன்மை காட்டுமென எதிர்ப்பார்க்கிறேன். இந்தத் தீர்மானத்தை விவாதிக்க அனுமதிக்கும் முன் எனது நண்பரிடம் தகவல்கள் இருந்தால் இந்த விவாதம் பின்பு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படலாம் என்பது என் யோசனை. அப்பொழுது எனது நண்பர் விரும்பும் தகவல்களை நான் அளிக்க முடியும்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): கனம் உறுப்பினர் (திரு.நியோகி) ஒரு கேள்வியை எழுப்புவதன் மூலம் அவர் விரும்பும் தகவல்களைப் பெறமுடியும். இந்தத் தீர்மானம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பது அவையின் விருப்பம் என்று நான் ஊகிக்கிறேன்.

(குரல்கள் “ஆம்”)

விவாதம் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள நிலைமை

      தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானத்தின் மீது அவை விவாதத்தைத் துவக்கும்.

     ‘இந்தியாவில் தற்போது உள்ள நிலைமை பற்றி பரிசீலனை செய்ய வேண்டும்’.

*     *     *

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, செப்டம்பர் 18, 1942, பக்கம் 281-287)

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக பிரேரணையின் மீது நடந்து கொண்டிருக்கும் விவாதம் இந்த அவையின் உறுப்பினர்கள் இரண்டு திட்டவட்டமான கருத்தோட்டங்களை கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர்களை கைது செய்ததும் திடீரென வெடித்த பலாத்கார இயக்கத்தை நசுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை நியாயமற்றது என்பது ஒரு கருத்தோட்டம். அரசாங்கம் எடுத்த நடவடிக்கை முற்றிலும் நியாயமானது என்று அவையின் ஒரு பகுதி கருதுகிறது. இம்மாதிரியான நிலைமையில் அவையின் ஒரு பகுதி எடுத்த நிலையை மற்ற பகுதி மறுதலிக்கிறது என்ற காரணத்திற்காக, இந்த விவாதத்தில் தாங்கள் தலையிடுவது அவசியமற்றது என அரசாங்கம் கூறமுடியும். ஆனால் உறுப்பினர் கூறியதிலிருந்து, அரசாங்க உறுப்பினர்கள், குறிப்பாக நிர்வாகக் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் இந்திய உறுப்பினர்கள், இந்த விஷயத்தை அப்படியே விடுவதை அனுமதிப்பது சரியாக இருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது. அவையின் ஒரு பகுதி மீது பொறுப்பை சுமத்துவதை விட, உறுப்பினர்கள் தங்கள் மீது சுமையை எடுத்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று நான் கருதுகிறேன். எனவே, நடவடிக்கை நியாயமற்றது என்று கருதும் அவையின் ஒரு பகுதி எழுப்பிய சில விஷயங்களை எடுத்து கொள்ள விழைகிறேன். எழுப்பப்பட்ட முக்கிய விஷயங்கள் இரு வகையானவை. சில விஷயங்கள் அவற்றின் முக்கியத்துவத்திலும் தன்மையிலும் குறிப்பிடத்தக்கவை. சில விஷயங்கள் பொதுவான முக்கியத்துவத்திலும் தன்மையிலும் குறிப்பிடத்தக்கவை. சில விஷயங்கள் பொதுவான முக்கியத்துவம் மட்டுமன்றி பொதுவான விஷயங்கள் பற்றியும் பேசுவது விரும்பத்தக்கதாயினும், நேரம் மிகக் குறைவாக இருப்பதால், பதிலளிப்பதற்கு எழுப்பப்பட்ட சில குற்றச்சாட்டுகளைத்தான் ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே சர்க்காருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து எனது கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். சர்க்காரை விமர்சிப்பவர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களை சர்க்கார் கைது செய்தது நியாயமல்ல என்று கூறினர். அவர்களது வாதத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டேன் என்றால், அவர்களது வாதம். காங்கிரஸ் அகிம்சையில் நம்பிக்கை வைத்துள்ள ஸ்தாபனம், காங்கிரஸை சுயமாக இயங்க அனுமதித்திருந்தால் பலாத்காரம் தோன்றுவதை தடுத்து நிலைமையை கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்பதாகும். அகிம்சை என்ற கோட்பாட்டைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காங்கிரஸூக்கும் காரியக் கமிட்டி உறுப்பினர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை இந்த வாதத்தை முன்வைக்கும் உறுப்பினர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் காங்கிரஸின் கூட்ட நடவடிக்கைகளைப் படித்துப் பார்த்தபோது, காங்கிரஸ் பிரகடனப்படுத்தும் அகிம்சை என்ற கோட்பாட்டில் பயங்கரமான சரிவு ஏற்பட்டுள்ளது என்ற கருத்து எனது மனதில் பதிந்தது. அகிம்சை ஆழமாகக் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. இவ்வாறு கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

     அவைக்கு சில உண்மைகளை எடுத்துக் கூறுகிறேன். ஐயா! 1939 டிசம்பர் 22ம் தேதி, சட்டமறுப்பு என்ற அச்சுறுத்தலை காங்கிரஸ் முதலில் வெளியிட்டது. 1940 மார்ச் 19ல், காங்கிரஸின் வருடாந்திர மகாசபை ராம்ஹாரில் நடைபெற்றது. அந்த வருடாந்திரப் பொதுசபைக் கூட்டத்தில் திரு.காந்தி சர்வாதிகாரியாக ஆக்கப்பட்டார். போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் முழுப் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி, திரு.காந்தி தலைமை தளபதி ஆனார். ஆனால் 1940 ஜூன் 22ம் தேதி, அதாவது மூன்று மாதங்களுக்குள், பிரதான தளபதி பொறுப்பிலிருந்து திரு.காந்தி அகற்றப்பட்டார். அகிம்சைத்தான் தங்களது வழிகாட்டுநெறி என்ற கோட்பாட்டைக் காரியக் கமிட்டி ஏற்க மறுத்தது. திரு.காந்தி தமது ராஜிநாமாவைச் சமர்ப்பிக்க வேண்டியதாயிற்று.

      டாக்டர் பி.என்.பானர்ஜி (கல்கத்தா புறநகர் பகுதி; முகமதியரல்லாத நகரப் பகுதி): அது யுத்தம் சம்பந்தமாக.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தயவுசெய்து என்னை இடைமறிக்காதீர்கள்.

     1940 டிசம்பர் 15ல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பம்பாயில் கூடியது. திரு.காந்தியை மீண்டும் பிரதான தளபதியாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போராட்டத்தை நடத்தும் படியும் அவரைத் தீர்மானம் கேட்டுக் கொண்டது. 1941 டிசம்பர் வரை திரு.காந்தி தொடர்ந்து தளபதியாக இருந்தார். 1941 டிசம்பரில் ஒரு காரியக்கமிட்டிக் கூட்டம் பர்டோலியில் நடைபெற்றது. திரு.காந்தியை மீண்டும் அந்தப் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேறியது. டிசம்பர் 1941 ல் ஏற்பட்ட நிகழ்வின் முக்கிய அம்சத்தை இந்த அவையின் உறுப்பினர்கள் நன்கு அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஒருபுறம் திரு.காந்திக்கும் அகிம்சையில் முழு நம்பிக்கைகொண்ட அவரை பின்பற்றுபவர்களுக்கும், மற்றொருபுறம் அகிம்சையில் நம்பிக்கையில்லாத காரியக்கமிட்டியின் மற்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் பிளவு ஏற்பட்டது. வார்தாவில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின் முன் அதன் முடிவுக்காக இந்தப் பிரச்சினை வைக்கப்பட்டது. இந்தப் பிரச்சினை மீது ஒரு முடிவு எடுக்கும்படி திரு.காந்தி செய்வார் என்று இந்தியாவில் ஒவ்வொருவரும், குறிப்பாக காரியக் கமிட்டி உறுப்பினர்கள் எதிர்பார்த்தனர். அதாவது பர்டோலியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வாபஸ் பெற செய்வது அல்லது அவரால் அது முடியவில்லையெனில் அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்த்தனர். வார்தாவில் அந்தத் தீர்மானம் அங்கீகாரத்திற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்வந்த போது, மிகவும் ஆச்சரியப்படத்தக்க ஒரு காரியத்தை திரு.காந்தி செய்தார். அகிம்சையின் காவலரான அவர் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு வற்புறுத்த வேண்டாமென தம்மைப் பின்பற்றுவோருக்கு ஆணையிட்டார். அதுமட்டுமல்ல. காங்கிரஸ் காரியக் கமிட்டியுடன் தம்மை இணைத்துக் கொண்டு பிரதான தளபதியாகத் தொடர்ந்து இருந்து வந்தார். காங்கிரஸ் முன்னாலேயே – திரு.காந்தியின் முன்னாலேயே – பலாத்காரம் என்ற உணர்வு காங்கிரசை ஆட்கொண்டது. இந்த விஷயத்தில் இதைவிட வேறு நல்ல ருசு எவரால் அளிக்க முடியும் என்பது எனக்குத் தெரியாது.

     மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் தெரிந்து கொண்டிராத மற்றொரு விஷயமும் இருக்கிறது என நினைக்கிறேன். அதுபற்றி கொஞ்சம் விவரங்களை அளிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்கள் அநேகமாக எல்லோரும் – எப்படியும் அவர்களில் மிகப் பெரும்பான்மையோர் இந்தக்கோட்பாட்டின் மீது அக்கறையற்றவர்களாக ஆகிவிட்டனர் என்பது உண்மை மட்டுமல்ல. திட்டமிட்ட பலாத்கார இயக்கத்திற்காக காங்கிரசுக்கு உள்ளேயே ஒரு முயற்சி இருந்தது என்பதைக் காட்டுவதற்கு போதுமான ருசு உள்ளது.

     சர்தார் சாந்த் சிங்: யுத்தத்தைப் பொறுத்தவரை…..

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தயவுசெய்து எனக்கு தடங்கல் ஏற்படுத்தாதீர்கள்.

     மதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள்: அது உண்மை அல்ல, அதற்கு ருசு இல்லை

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தவறான எந்த விஷயத்தையும் நான் கூறவில்லை. ஒரு சான்று பற்றி அவையில் இதுவரை குறிப்பிடவில்லை. அதைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

     திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் காவலில் வைக்கப்பட்டிருந்த தியோலி பாதுகாப்பு முகாமில் ஒரு நிகழ்ச்சி நிடந்தது. திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் தமது மனைவியாருக்கு சிறைக்கு வெளியே ரகசியமாக அனுப்ப முயன்ற சில ஆவணங்களைக் கைபற்றுவதில் அந்தப் பாதுகாப்பு முகாமின் கண்காணிப்பாளர் வெற்றிபெற்றார் என்பதை இந்த அவை அறிந்திருக்கலாம். இந்த சம்பவம் 1941 டிசம்பரில் நிகழ்ந்தது. காங்கிரஸூக்கு உள்ளே – காரியக் கமிட்டிக்கு உள்ளே என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் அந்த ஆவணம் பற்றி மிக அதிக கவனத்தைச் செலுத்தியாக வேண்டும். அந்த ஆவணம் நான்கு, ஐந்து விஷயங்களை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வார்த்தைகளையே இங்கு உபயோகிக்கிறேன். திரு.காந்தி நடத்தி வந்த சத்தியாக்கிரகம், பெரும்பாலான காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக்கொண்ட அந்த சத்தியாக்கிரகம் மதியீனமான ஒரு கேலிக்கூத்தாகும். அது விவேகமற்றது, பொருளற்றது. இரண்டாவதாக, தனது லட்சியத்தை அடைய காங்கிரஸ் விரும்பினால், தார்மிக வெற்றிகளை அடையும் முயற்சியை விட்டு விட்டு அரசியல் வெற்றிகளை அடைய முயல வேண்டும் என்று திரு.ஜெயபிரகாஷ் நாராயணன் கருதினார். திரு.காந்திக்கு எதிரான தாக்குதலாகும் அது. அந்த ஆவணம் வெளிப்படுத்தும் இரண்டாவது உண்மை என்னவெனில், அகிம்சையில் நம்பிக்கை இல்லாத, ஆனால் வன்முறையில் நம்பிக்கை கொண்ட சில கட்சிகள் இந்தியாவில் உள்ளன என்பதாகும். இவை எல்லாம் காங்கிரஸூக்குள் செயல்படுகின்றன. அவை: இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, வங்காளத்திலுள்ள புரட்சிகர சோஷலிஸ்டுக் கட்சி, காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சி, இந்துஸ்தான் சோஷலிஸ்டுக் குடியரசுச் சங்கம். இந்த அமைப்புகளெல்லாம் ஒரே ஸ்தாபனமாக இணைக்கப்பட வேண்டுமென்பது திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணனின் திட்டமாக இருந்தது. இந்த ஒன்றுபட்ட ஸ்தாபனம் காங்கிரஸூக்குள் செயல்படும் ரகசியக் கட்சியாக இருக்க வேண்டும். அது தலைமறைவாக பணியாற்ற வேண்டும். இந்த ரகசியக் கட்சி காங்கிரஸூக்கு உள்ளே இருக்க வேண்டுமென்பது மட்டுமல்லாமல், அதன் கொள்கையை செயல்படுத்துவதற்கான நிதியை பெறுவதற்காக அரசியல் கொள்கைகளை நடத்த வேண்டும் என்றும் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் யோசனை கூறினார். நான் குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள், அகிம்சைக் கோட்பாட்டை பெயரளவில் மட்டும், உதட்டளவில் மட்டும் கூறிவரும் காங்கிரஸை நம்ப முடியாது என்ற உண்மையை நியாய உணர்வு படைத்தவர்களை ஒத்துக்கொள்ள செய்ய முடியாதெனில், நியாயமான ஒரு மனிதரை நம்பவைக்க இதைவிட வேறு நல்ல அத்தாட்சி இருக்க முடியுமா என்பதை நான் அறியேன். ஐயா! அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளான சூழ்நிலைமைகளில் இதுவும் ஒன்றாகும்.

     என்னுடைய இந்தக் கன்னி உரையில் நான் குறிப்பிட்டுக் கூற விரும்பும் இரண்டாவது விஷயத்திற்கு வருகிறேன். அன்று நிலவிய சூழ்நிலைமைகளில் அடக்குமுறை நியாயப்படுத்தப்படலாம் என்றாலும், அடக்குமுறையோடு நிறுத்திக் கொள்வது சர்க்காரின் கடமையாக இருக்க முடியாது என்றும், சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சர்க்கார் அவசியம் எடுத்திருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர். ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பற்றி அவையின் பல்வேறு பகுதிகள் கூறியவற்றை ஒருவர் பரிசீலிக்க வேண்டுமெனில், அளிக்கப்பட்ட ஆலோசனைகள் விசித்திரமானதாகவும் குழப்பத்தை அளிக்கும் கதம்பமாகவும் உள்ளதைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. எனவே அவற்றில் ஒன்றே ஒன்றை தேர்ந்தெடுக்கிறேன். திட்டவட்டமானதாகவும் பரிசீலிக்கக் கூடியதாகவும் அது தோன்றுகிறது. இன்றைய சர்க்கார் மாற்றப்பட்டு, புனரமைக்கப்பட்டு ஒரு தேசிய சர்க்காராக செயல்பட வேண்டுமென்று ஆலோசனை அளிக்கப்பட்டது. இந்த ஆலோசனை பற்றி நான் வலியுறுத்திக் கூற விரும்பும் விஷயத்தை அவை முன் எடுத்துக் கூறுவதை சாத்தியமாக்க, இன்றைய சர்க்கார் எத்தகையது, அதன் தன்மை என்ன என்பதைக் கூறத் துவங்கினால் உசிதமாக இருக்கும். மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு தெரிந்திருப்பதுபோல், இந்திய அரசாங்க சட்டத்தின் 33வது பிரிவு கூறுவது என்னவெனில், இந்தியாவின், சிவில் மற்றும் ராணுவ சர்க்காரைக் கண்காணித்து வழிநடத்தி கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கவர்னர்-ஜெனரலின் நிர்வாக சபைக்கு அளிக்கிறது. நான் ஓரளவுக்கு அரசியல் சட்ட சம்பந்தமான வழக்கறிஞர் நான் என்னை ஒரு நிபுணன் என்று உரிமை கொண்டாடவில்லை. ஆனால் அரசியல் சட்ட விவகாரத்தில் என்னை ஒரு மாணவன் என்று கூறமுடியும். இந்த 33வது பிரிவைப் பரிசீலித்து, அமுலில் உள்ள பிற நாடுகளின் அரசியல் சட்டங்களோடு ஒப்பிட்டு, எந்த தன்மையான சர்க்காரை இந்திய மக்கள் விரும்புகிறார்கள் என்பதையும் ஓரளவு கணக்கில் கொண்டு பார்த்தால், அளவற்ற முக்கியத்துவம் வாய்ந்த இரு குணாம்சங்களை உடைய சர்க்காரை இந்தப் பிரிவு அளிக்கிறது எனக் கூறுவதில் எனக்கு தயக்கம் எதுவுமில்லை. இந்த சர்க்கார் பெற்றுள்ள ஒரு குணாம்சம் என்னவெனில் அது யதேச்சதிகாரத்தை முற்றிலுமாக விலக்குகிறது. இந்த அரசாங்கம் பெற்றுள்ள மற்றொரு குணாம்சம் அது கூட்டுப்பொறுப்பை ஏற்படுத்துகிறது. இந்திய மக்களுக்கு மிகவும் உகந்ததாகும் இது…

     மதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: இது நடைமுறைப்படுத்தப்படுகிறதா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அந்த விஷயத்துக்கு வருகிறேன். சட்டத்தில் இதற்கு போதுமான வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பு கவர்னர்-ஜெனரலின் நிர்வாக சபைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

     திரு.ஜம்னாதாஸ் எம்.மேத்தா பம்பாய் மத்திய பிராந்தியம்: முகமதியரல்லாத கிராமப் பகுதி: இந்த அதிகாரம் இந்தியா மந்திரியின் உத்தரவுகளுக்கு உட்பட்டது.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அதற்கு வருகிறேன். அதுபற்றிக் கூறப்போகிறேன். நிலைமை என்னவெனில் நிர்வாகக் கவுன்சிலின் ஒவ்வொரு உறுப்பினரும் கவர்னர்-ஜெனரலின் சகாவாகும். அந்த உண்மையை ஒருபோதும் மறக்கக்கூடாது. மறக்கக் கூடியதுமல்ல. எனவே, நான் கூறுவது என்னவெனில், யதேச்சதிகாரத்தை ஒதுக்குகிற ஜனநாயகத் தன்மை கொண்ட, சம்பிரதாயத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் சட்டப்படி நிர்வாகத்திற்கு கூட்டுப்பொறுப்பை அளிக்கும் ஒரு சர்க்காரை இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்றால், நான் இந்த அவைக்கு கூற விரும்புவது இதுதான். நாம் இப்பொழுது பெற்றிருப்பதைவிட மேலும் நல்ல சர்க்கார் அமைப்பை நீங்கள் அமைக்க முடியாது. இந்த அரசாங்கத்துக்கு எதிராகச் சொல்லப்படுவது என்னவென்பதை நான் அறிவேன். அது அப்படியே இருக்கலாம். அந்த சர்க்கார் வைஸ்ராயின், இந்தியா மந்திரியின் ரத்து அதிகாரத்திற்கு உட்பட்டது எனக் கூறுகிறார்கள்.

     திரு.ஜம்னாதாஸ் மேத்தா: ரத்து அதிகாரம் மட்டும் அல்ல – உத்தரவுகளும் இதில் அடங்கும்

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அதை நான் ரத்து அதிகாரம் என்று கூறுகிறேன். நீங்கள் அதை உத்தரவுகள் என்று அழைக்கலாம். நான் ஓர் அரசியல் சட்ட நிபுணனாதலால், அரசியல் சட்டரீதியான பதத்தையே உபயோகிக்க விரும்புகிறேன்.

மதிப்பிற்குரிய ஓர் அங்கத்தினர்: வெள்ளை மாளிகையிலிருந்து வரும் எஜமானன் குரல்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் கூறியது என்னவெனில், இந்த அரசாங்கம் ஒரு சுதந்திர அரசாங்கம் அல்ல. இது, இந்தியா மந்திரியின் ரத்து அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். வைஸ்ராயின் ரத்ததிகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் பாதுகாப்பு, அமைதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படும் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது பொதுவான ரத்ததிகாரம் அல்ல. நாட்டின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடும் ரத்ததிகாரம் அல்ல அது.

சர்தார் சாந்த் சிங்: நான் ஒரு கேள்வி கேட்கலாமா?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இப்பொழுது நீங்கள் எந்தக் கேள்வியையும் கேட்கக் கூடாது; எனக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது; வாதத்திற்காக, ரத்து அதிகாரம் இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டங்கள் பற்றி நான் நிறையப் படித்திருக்கிறேன். எனவே ரத்ததிகாரத்தைப் பற்றி நான் பயப்படவில்லை.

சர்தார் சாந்த் சிங்: நான் ஒரு சட்ட சம்பந்தமான கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பிறகு என்னிடம் நீங்கள் கேட்கலாம். இப்பொழுது ஒரு சொற்பொழிவற்ற எனக்கு நேரமில்லை.

ரத்து அதிகாரம் இருக்கிறது என்பதை முற்றிலுமாக ஒப்புக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ரத்து அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது. ரத்து அதிகாரம் பற்றி அதிகம் கவலைப்படும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு எனது கேள்வி இதுதான். ரத்து அதிகாரத்தின் முக்கியத்துவம் என்ன? ரத்து அதிகாரம் என்றால் என்ன பொருள்? நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன். ஏனெனில் அரசியல் சட்டம் சம்பந்தமான பிரச்சினை பற்றி பேசும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் மனதிலே நிறைய குழப்பம் இருப்பதை காண்கிறேன். யதேச்சதிகார அரசுக்கும் ஒரு பொறுப்பான அரசுக்கும் என்ன வித்தியாசம். ஹிட்லரின் கீழ் ஜெர்மனியில் இருப்பதற்கும் பிரிட்டனில் நிலவும் சர்க்காருக்கும் என்ன வித்தியாசம்? இதற்கு தெளிவான பதில்… (குறுக்கீடு)

தலைவர் (மாண்புமிகு அப்துல் ரஹீம்): அமைதி, அமைதி. மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் இவ்வாறு குறுக்கீடு செய்து கொண்டிருக்கக் கூடாது.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தெளிவான பதில் இதுதான். அதைத் திட்டவட்டமான முறையில் கூற விரும்புகிறேன் – சர்வாதிகார சர்க்காருக்கும் பொறுப்பான சர்க்காருக்கும் உள்ள வித்தியாசம் – அதை மீண்டும் கூறி வலியுறுத்த விரும்புகிறேன் – என்னவெனில் சர்வாதிகாரத்தில் ரத்து அதிகாரம் இல்லை; பொறுப்பான சர்க்காரில் ரத்து அதிகாரம் இருக்கிறது. இதுதான் உண்மை. அரசியல் சட்டத்தைப் புரிந்து கொள்ள விரும்புகிறவர்களும் அரசியல் சட்டங்களை உருவாக்க விரும்புகிறவர்களும் இதை மனதில் கொள்ளட்டும். ஒரே ஒரு கேள்வி, சர்ச்சையைக் கிளர்த்தக் கூடிய ஒன்றே ஒன்று. இம்மாதிரியான வாக்குவாதத்தை நான் முற்றிலுமாக புரிந்து கொள்ள முடியும் – ரத்து அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும்? இந்தியா அமைச்சரிடமிருக்க வேண்டுமா அல்லது வைஸ்ராயிடம் இருக்க வேண்டுமா அல்லது வேறு எந்த அமைப்பிடமாவது இருக்க வேண்டுமா? இதுதான் சர்ச்சைக்குரிய ஒரே விஷயமாக இருக்க முடியும். ரத்து அதிகாரத்தைப் பொறுத்த வரை, பொறுப்புத் தன்மையில் நம்பிக்கை கொண்டவர்களிடையே, ஜனநாயக சர்க்கார் பற்றி நம்பிக்கையுள்ளவர்களிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என்று கூறுகிறேன். எனவே, எழும் கேள்வி இதுதான்; இந்தியா மந்திரியிடம் ரத்து அதிகாரத்தை நாம் வைத்து கொள்ளவில்லையெனில், நாம் வேறு எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும்? இந்தியா மந்திரிக்குள்ள ரத்து அதிகாரத்தை நீங்கள் மாற்றவிரும்பினால், அது சரியாக வைக்கப்பட வேண்டிய ஒரு இடம் சட்டமன்றமே என்று நான் படிக்கிறேன். ரத்து அதிகாரத்தை வைக்க வேறு எந்த இடமும் இல்லை.

சர் சையது ராஸா அலி: (ஐக்கிய மாகாணங்களின் நகரங்கள், முகமதியர் நகர் பகுதி) சட்டமன்றம் பற்றி மாண்புமிகு எனது நண்பர் கடைசியில் நினைத்தது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்!

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: கேள்வி இதுதான்: அது ஒரு எளிமையான கேள்வி என்றும் கருதுகிறேன். இன்று நிலவும் சட்டமன்றத்திற்கு ரத்து அதிகாரத்தை நாம் மாற்ற முடியுமா? (பண்டிட் லட்சுமி காந்த மைத்ராவின் குறுக்கீடு). தங்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தைப் போதிக்க முடியாது. இதற்காக ஒரு வகுப்பைத் தொடங்க வேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறேன். சட்டக் கல்லூரியில் அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிப் போதிப்பதில் ஐந்து ஆண்டுகள் செலவழித்தேன். என் மனதில் எழும் கேள்வி இதுதான்: சட்டமன்றத்திற்கு ரத்து அதிகாரத்தை மாற்ற முடியுமா? இன்றைய சட்டமன்றக் கண்ணோட்டத்திலிருந்து இந்தக் கேள்வியை நான் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் பிரிட்டிஷ் சர்க்கார் அதிகாரத்தை உடனே துறக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கோரிக்கை. கேள்வியென்னவெனில் இந்த ரத்து அதிகாரத்தை நாம் இதனிடம் ஒப்படைக்கக் கூடிய தகுதி இந்த சட்டமன்றத்திற்கு இருக்கிறதா?

இந்த சட்டமன்றத்தின் இயைபு என்ன? அதன் குணாம்சம் என்ன? இந்த அவையை அவமதிக்கும் எதையும் நான் சொல்லவில்லை என்று நான் நினைக்கிறேன். காலப்போக்கின் வேகத்தைக் கணக்கில் கொண்டால் இந்த அவை உயிர் பிரியும் நிலையில் உள்ளது என்பதுதான் உண்மை.

சர்தார் சாந்த் சிங்: அது அப்படித்தான் எப்பொழுதும் உள்ளது.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இது மூன்று ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் இது அநேகமாக ஒன்பது ஆண்டுக்காலம் நீடித்து இருந்து வருகிறது. இந்த அவையின் உறுப்பினர்களுக்கு அவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதிகள் அளித்த அதிகாரம் எந்த அளவு நேரடியாகவும் புதிதாகவும் இருப்பதாகக் கருத முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. கால ஓட்டத்தில் இந்த அவை சாரமற்றதாக ஆகாமலிருக்குமா என்பது பற்றி எதுவும் கூற நான் விரும்பவில்லை. ஆனால், மேலே சென்று சபையின் இயைபு பற்றிப் பரிசீலிக்கத் துவங்கலாம்.

தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): மாண்புமிகு உறுப்பினர் அவருக்கான நேரத்தை ஏற்கெனவே தாண்டிவிட்டார்.

பண்டிட் லட்சுமி காந்த மைத்ரா (ராஜதானிப் பிரிவு – முகமதியரல்லாத கிராமப் பகுதி): மாண்புமிகு உறுப்பினர் கூறுவது சபையின் முன் உள்ள பிரேரணைக்கு எந்தவிதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா! எனக்கு கொடுத்த நேரம் முடிந்துவிட்டது என்று தாங்கள் கருதினால்…

தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): எல்லா கட்சிகளின் ஒப்புதல் பேரில்தான் நேர அளவு நிர்ணயிக்கப்பட்டது. அதை நான் அமுல் நடத்தியாக வேண்டும்.

திரு.ஜம்னாதாஸ் மேத்தா: சபையை ஏன் கூட்டினீர்கள்? (மேலும் சில குறுக்கீடுகள் இருந்தன).

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: விஷயம் என்ன வெனில், ஒன்று ரத்து அதிகாரத்தை அதனிடம் ஒப்புவிப்பதற்கு தகுந்த போதுமான பிரதிநிதித்துவம் பெற்றதல்ல இந்த அவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அல்லது நாட்டின் தேசிய வாழ்வில் இடம்பெற்ற எல்லோரும், போதுமான எண்ணிக்கையில் இந்துக்கள், போதுமான எண்ணிக்கையில் முகமதியர்கள், போதுமான எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பிற பகுதியினர் ஆகியவர்களை தன்னகத்தே கொண்ட வகையில் யுத்த காலத்தில் இந்த சட்டமன்றத்தைப் புனரமைக்கும் பணியில் நாம் ஈடுபட முடியுமா என்பதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். எனவே தேசிய சர்க்கார் வேண்டுமென்ற கோரிக்கை குழப்பமான சிந்தனையின் விளைவுதான் என்று கூற விரும்புகிறேன். மிகவும் ஜீவாதாரப் பிரச்சினை என்று நான் கருதும் வகுப்பு உடன்பாடு என்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற பெரும்பாலானவர்களின் விருப்பத்தின் விளைவுதான் என்று கூற விரும்புகிறேன். புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் நிர்வாகத்தின் மீது ரத்து அதிகாரத்தைப் பிரயோகிக்கத் தகுதி வாய்ந்தது எனக் கருதும் வரையில் இந்த அவையை புனரமைப்பது இந்த வகுப்பு உடன்பாட்டை நாம் எய்தும் வரை சாத்தியமில்லை ஐயா! எனக்கு அளித்த நேரம் முடிந்து விட்டதால் இந்த விஷயத்தை மேலும் வளர்த்த முடியாது. நான் என் இருக்கையில் அமர்கிறேன்.

இந்திய மண்ணியல் நிறுவனப் பயன்பாட்டுக்கிளையின் ஆலோசனைக் குழுவிற்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தல்.

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1942 செப்டம்பர் 21, பக்கங்கள் 339-42)

      திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): செப்டம்பர் 14ம் தேதி திங்களன்று மாண்புமிகு டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த தீர்மானம் பற்றி மேலும் பரிசீலிப்பதற்கு சில தகவல்களைத் தம்மால் கொடுக்க முடியுமாதலால் இந்தக் கோரிக்கை ஒத்திவைக்கப் படலாமென்று டாக்டர் அம்பேத்கர் அப்பொழுது கூறினார்.

     மாண்புமிகு டாக்டர் அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா! திருத்தங்களை எவ்வாறு கையாள தாங்கள் உத்தேசித்திருக்கிறீர்கள்? திருத்தங்கள் முன்வைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். அப்பொழுது விவாதிக்கவிருக்கும் தீர்மானத்துடன் திருத்தங்களை பற்றியும் நான் பேசமுடியும்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): திருத்தங்களைப் பிரேரேபிக்க விரும்பும் உறுப்பினர்கள் திருத்தங்களை இப்பொழுது முறையாக முன்வைக்கட்டும். அப்போது தீர்மானத்தையும் திருத்தங்களையும் விவாதத்திற்கு அவையின் முன் வைக்க முடியும்.

     திரு.ஹெச்.ஏ.சத்தார்.எச்.ஈஸாக் சேட்: ‘தீர்மானத்திலுள்ள ‘ஒரு பிரதிநிதி’’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘நான்குபிரதிநிதிகள்’’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): திருத்தம் முன் வைக்கப்படுகிறது.

           ‘தீர்மானத்தில் உள்ள, ‘ஒரு பிரதிநிதி’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘நான்கு பிரதிநிதிகள்’’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.’‘

     பண்டிட் லட்சுமிகாந்த மைத்ரா (ராஜதானிப் பிரிவு: முகமதியரல்லாத கிராமப்புறம்): ஐயா! நான் பின்கண்ட திருத்தத்தைப் பிரேரேபிக்கிறேன்:

           ‘‘தீர்மானத்தில், ‘ஒரு பிரதிநிதி’ என்ற வார்த்தைகளுக்கு பதிலாக, ‘மூன்று பிரதிநிதிகள்’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.’’

     தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): திருத்தம் பிரேரேபிக்கப்படுகிறது:

           “தீர்மானத்தில் ‘ஒரு பிரதிநிதி என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘மூன்று பிரதிநிதிகள்’ என்ற வார்த்தைகள் இருக்க வேண்டும்.’’

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தீர்மானமும் திருத்தங்களும் இரண்டு கேள்விகளை எழுப்புகின்றன. சென்ற தடவை நான் தீர்மானத்தை முன்மொழிந்தபோது, மதிப்பிற்குரிய எனது நண்பர், திரு.நியோகி, இந்தியாவின் மண்ணியல் மதிப்பு ஆய்வு நிறுவனத்தின் பயன்பாட்டுக்கிளை பற்றி கொடுக்க வேண்டிய சில தகவல்களைப் பற்றி கேட்டார். மதிப்பிற்குரிய திரு.நியோகி இது சம்பந்தமான ஒரு கேள்வியை எழுப்பியதும் அவையின் ஞாபகத்தில் இருக்கும். பயன்பாட்டுக்கிளை சம்பந்தப்பட்ட தகவல்களை என் பதிலில் அளித்தேன்; இந்தக் கிளை பற்றி மேலும் அதிக விவரங்களை மதிப்பிற்குரிய எனது நண்பரும் இந்த சபையின் பிற உறுப்பினர்களும் விரும்புகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. இந்த சபைக்கு என்னால் கொடுக்க முடியாத சில தகவல்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்பொழுது கொடுக்க முடியாததற்குக் காரணம் பிரதான கேள்விக்குப் பதிலாகக் கொடுக்க முடியாமல் போயிற்று. அல்லது அன்று கேட்கப்பட்ட துணைக் கேள்விகளின் பிரத்தியேக தன்மையின் காரணமாகவும் இது இருக்கலாம். அன்று அவைக்கு நான் தெரிவிக்க முடியாமல் போன சில தகவலை இப்பொழுது அளிக்க விழைகிறேன்.

     தகவல் பற்றி முதலில் நான் குறிப்பிட விரும்புவது பயன்பாட்டுக் கிளையின் கடமைப் பற்றியது. இதை அன்று நான் குறிப்பிடவில்லை. பயன்பாட்டுக் கிளையின் விதிமுறைகளின்படி அதற்கு மூன்று கடமைகள் உள்ளன என்பதை அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக, தாதுப்பொருட்களின் படிமங்கள் இருப்பதாகக் கண்டறிய தேவையான களப்பணிகளைச் செய்வது; இரண்டாவதாக, தேவையான இடத்தில் சுரங்கம் தோண்டும் பூர்வாங்கப் பணிகளைத் துவக்குவது, மூன்றாவதாக, கனிமங்களை சுத்திகரிப்பது, உருக்கிப் பிரித்து எடுப்பது, மற்றும் உற்பத்தி சம்பந்தப்பட்ட இதர பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பரிசோதனை பணிகளை மேற்கொள்வது. இந்தியாவின் கனிம வளங்களை நன்கு பயன்படுத்திக்கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். இவைதான் பயன்பாட்டுக் கிளையின் பணிகள். அடுத்து, பயன்பாட்டுக் கிளையின் வேலைத் திட்டத்தைப் பொறுத்தவரை, அது ஆறு தலைப்புகளில் வருகிறது என்பதை சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன். 1.மேவாரில் உதயப்பூர் சமஸ்தானத்திலுள்ள ஸாவர் ஈயம் மற்றும் துத்தநாக சுரங்கங்களை மீண்டும் திறப்பது; 2.ராஜபுதனத்தின் மைக்கா சுரங்கங்களை அபிவிருத்தி செய்வது; 3.பலுச்சிஸ்தானின் கந்தகப் படிமங்களைப் பயன்படுத்திக் கொள்வது; 4.வங்காளத்திலும் மத்திய மாகாணங்களிலும் உலோக வகை தரும் தாதுப் பொருட்கள் பற்றிப் பரிசீலிப்பது; 5.பீஹாரிலுள்ள படிவுகள் பற்றிப் பரிசீலிப்பது; 6.தாதுக்கள் (ரத்தினக்) கற்கள், உப்புகள் மற்றும் இவை போன்ற ஏனைய பொருள்களைக் கண்டறிவது.

     மதிப்பிற்குரிய நண்பர் திரு.நியோகி தகவல் தெரிந்து கொள்ள விரும்பிய மூன்றாவது விஷயம், இந்த பயன்பாட்டுக் கிளைக்கும் விஞ்ஞானம் மற்றும் தொழில்துறை ஆய்வு வாரியத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றியது. விஞ்ஞான – தொழில்துறை ஆய்வு வாரியம் மூன்று விஷயங்களைக் கவனிக்கிறது. அதாவது, கண்டுபிடிப்புகள், கனரக ரசாயனப்பொருள்கள், இயற்கையாக தோன்றுகிற உப்புகள், பயன்பாட்டுக்கிளை தாதுப்பொருட்களைக் கண்டுபிடிப்பது, அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறது. இவற்றின் செயல்பாடுகள் வித்தியாசமானவை என்பது இதிலிருந்து தெளிவு. அதே சமயத்தில், விஞ்ஞான, தொழில்துறை ஆய்வு வாரியத்துக்கும் பயன்பாட்டுக்கிளைக்கும் இடையே இடையுறவு உள்ளது; இந்த இடையுறவு பின்கண்டவாறு அமைந்துள்ளது. இந்திய மண்ணியல் மதிப்பீட்டாய்வு நிறுவனத்தின் பொறுப்பாளராக உள்ள டாக்டர் பாக்ஸ், விஞ்ஞான தொழில்துறை ஆய்வு வாரியத்தின்கீழ் இயங்கும் கனரக ரசாயனங்கள் குழுவின் தலைவராக இருக்கிறார். மறுபுறத்தில் விஞ்ஞான, தொழில்துறை ஆய்வு வாரியத்தின் இயக்குநர், மண்ணியல் மதிப்பீட்டாய்வு நிறுவனத்தின் பயன்பாட்டுக்கிளைக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார். இரண்டாவதாக, இந்த ஏற்பாட்டால் இரு இலாக்காக்களுக்கும் இடையே பரஸ்பர பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவை தெரிந்து கொள்ள முடியும்.

     மதிப்பிற்குரிய நண்பர் எழுப்பிய வேறு இரு பிரச்சினைகள் உள்ளன. சர்க்காரின் நடவடிக்கைகள் பற்றிய விமர்சனம் சம்பந்தப்பட்டவை அவை. இந்தியாவின் தாதுப் பொருள் வளங்களைப் பற்றி கவனக்குறைவு இருப்பதாக அவர் குறை கூறினார். இரண்டாவதாக, பர்மாவிலிருந்து வந்த அகதிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் அளிப்பதற்காகவே பயன்பாட்டுக்கிளை துவக்கப்பட்டது என்ற கருத்தையும் அவர் வெளியிட்டார். இப்பொழுது, ஐயா! முதல் கேள்வியைப் பொறுத்தவரை, இந்தியாவின் தாதுப்பொருள்களின் வளங்களை அபிவிருத்தி செய்யும் பிரச்சினை முன்பே எடுத்துக் கொள்ளப்படாததற்காக மதிப்பிற்குரிய எனது நண்பர் வருந்துவதைப் போலவே, நானும் வருந்துகிறேன். ஆனால், இப்பொழுது போல், ஒருதிட்டத்தை மேற்கொள்வதற்கு, பயன்பாட்டுக்கிளை அமைக்கும் திட்டத்தை இந்தியா எடுத்துக்கொண்டிருப்பது போல் ஒரு திட்டத்தை மேற்கொள்வதற்கு மூன்று பிரதான கஷ்டங்கள் இருந்தன என்பதை எனது நண்பர் புரிந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். இந்தக் காலகட்டம் வரை இந்திய மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனம் சுரங்கங்கள் துறையில் கல்வித் தகுதி பெற்ற அதிகாரபூர்வ ஊழியர்களைப் பெற்றிருக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். துரதிருஷ்டவசமாக இங்கிலாந்தின் மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்திய மண்ணியல் மதிப்பாய்வுக் கழகம் பின்பற்றியது. அதாவது சுரங்கங்களை மேற்பார்வையிடும் கண்காணிப்பாளர்களாக மட்டுமே அது செயல்பட்டது. இந்தியாவின் தாதுவளங்களை அபிவிருத்தி செய்யும் பணியில் ஈடுபடும் திறமையாளர்களைக் கொண்ட தொழில்நுட்ப அமைப்பாக அது செயல்படவில்லை. இரண்டாவதாக, தாதுப்பொருட்களின் படிவங்களை வெளிக் கொண்டு வருவதில் உள்ள இடர்ப்பாடுகள் காரணமாக, தாது வளங்களை பயன்படுத்துவதில் ஓரளவு தயக்கம் இருந்து வருகிறது. நாட்டில் சுரங்கங்களைத் தோண்டும்பணி நீண்டகாலமாக வழக்கொழிந்து போனதால் ஏற்றுமதி செய்வதற்கான மேங்கனீஸ், மைக்கா போன்றவை தவிர, பிற தாதுப் பொருட்களை நாடு அவ்வளவாகப் பெற்றிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான எண்ணம் இந்தியாவில் பரவியிருந்தது. அவைக்கும் எனது மதிப்பிற்குரிய என் நண்பருக்கும் நான் கூறக் கூடியது இதுதான். இந்தப் பிரச்சினையை இப்பொழுது நான் எடுத்துக் கொண்டிருப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கையாண்டிருக்க வேண்டுமென்று நாம் வருந்தும் அதேசமயம் எதுவும் செய்யாமல் இருப்பதை விட காலதாமதமாகவேனும் செய்வது உகந்ததல்லவா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

     பர்மிய அகதிகளை வேலைக்கு அமர்த்தியிருக்கும் பிரச்சினையைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் உண்மையிலேயே நமக்கு வேறு எந்த மார்க்கமும் இல்லை என்பதை மதிப்பிற்குரிய நண்பருக்கும் அவைக்கும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். என் நண்பருக்கு ஏற்கெனவே நான் தெரிவித்ததுபோல அதிகாரபூர்வ சுரங்கப் பணியாளர்கள் இல்லாததால் நாம் கஷ்டத்தில் இருந்தோம். உதாரணமாக ஈயம், துத்தநாகம் போன்றவற்றின் சுரங்கங்களை விரிவான அளவில் வைத்திருக்கும் நாடு பர்மா மட்டுமே. சுரங்கப் பொறியாளர்கள் பெருமளவில் பயிற்சிபெற்ற நாடும் பர்மாதான். இதனால், பர்மா அகதிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக இந்தத் திட்டத்தை நாம் துவக்கினோம் என்று சொல்வதைவிட, இந்த பர்மா அகதிகளின் சேவையை நாம் உபயோகப்படுத்த முடிந்ததே என்று கூறுவதுதான், சரியான விளக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன். இதனால்தான் இந்தத் திட்டத்தை நாம் மேற்கொள்ள முடிந்தது. இந்தியாவின் யுத்த முயற்சியில் இது ஒன்று என்று மட்டுமல்லாமல், இந்தியாவின் எதிர்காலத்திற்கு பயன்படும் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் இதுவிளங்கும் என்பதில் எனக்கு சந்தேகம் கிடையாது.

     ஐயா! திருத்தங்கள் விஷயத்தை எடுத்துக்கொண்டால், இந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதைப் பற்றி நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். பயன்பாட்டுக்கிளை பற்றி நான் கொடுத்த விவரங்கள் எல்லாம் மிகத் திருத்தமாக இருப்பதால், தூற்ற வந்தவர்கள் துதிபாடும் நிலையில், வழிபாடு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் ஆலயம் மிகச் சிறிய ஒன்று; வழிபாடு செய்பவர்களின் உற்சாகத்தை நான் வரவேற்றபோதிலும், சுவாசிப்பதற்கு இடமில்லாமல் இந்தச் சிறிய ஆலயத்தில் அதிகக் கூட்டம் சேர்வதை நான் அனுமதிக்க முடியாது. இந்தத் திருத்தங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாமைக்காக வருந்துகிறேன்.

     சர்.சையது ராஸா அலி (ஐக்கிய மாகாணங்களின் நகரங்கள்): ஆலயத்திற்கு நுழையக்கூட நீங்கள் அனுமதி மறுப்பீர்களா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்தத் திருத்தங்களை எதிர்க்க வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன். இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டதற்கான காரணங்களை கறாராக சபைக்கு எடுத்துச் சொல்வேன். இந்தத் திருத்தங்களை பிரேரேபித்த மதிப்பிற்குரிய உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவர நான் விரும்புவது, இந்த குழு ஒரு நிர்வாகக்குழு அல்ல என்பதை மனத்தில் கொள்ளவேண்டும் என்பதே, முடிவுகளை எடுக்கும் குழுவல்ல இது. எனவே இந்த குழுவில் செய்யப்படும் எதுவும் இந்த அவையை கட்டுப்படுத்தாது. இது ஒரு ஆலோசனைக் குழு தான். இந்தக் குழுவின் நோக்கம் தொழில் மற்றும் வணிக நிபுணர்களை ஒன்றாகக் கொண்டுவருவதுதான். இந்தக் குழுவின் பிரதான நோக்கம் இதுதான். இந்தக்குழுவின் இயைபு இந்தப் பிரதான குறிக்கோளை அடைவதை கணக்கில் கொண்டு திட்டமிடப்பட்டது. இப்பொழுது திட்டமிட்டபடி இந்த குழுவில் 16 உறுப்பினர்கள் இருப்பர். 5 நிபுணர்களும் அவர்களோடு வாணிக, தொழில்துறைப் பிரதிநிதிகள் ஐவரும் குழுவில் இடம் பெற்றிருப்பர். மண்ணியல் மதிப்பாய்வு நிறுவனத்தின் இயக்குநர் இதில் இடம் பெறுகிறார். விஞ்ஞான, தொழில் ஆய்வு வாரியத்தின் இயக்குநர் இந்திய சுரங்க-உலோகத் தொழில் கழகத்தின் பிரதிநிதி ஒருவர், இந்திய சுரங்க அமைப்பு, இந்திய சுரங்க சம்மேளனப் பிரதிநிதிகள் இருவர் குழுவில் இருப்பர். அடுத்து, வாணிக, தொழில் துறைப் பிரதிநிதிகளாக, இந்திய வாணிகக் கழகங்கள் சம்மேளனத்திற்கு 2 இடங்கள் கொடுத்திருக்கிறோம். எஃகு தொழில் துறைக்கு இரண்டு இடங்கள் தந்துள்ளோம். வாணிகத் துறையின் செயலாளர் குழுவில் வாணிகத்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். எந்த தாதுப்பொருள்களைத் தாங்கள் அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்பதை வர்த்தக, தொழிற்சாலை பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்க கூடிய நிபுணர்களையும் அதேபோன்று இவற்றை வியாபார ரீதியில் தாங்கள் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை நிபுணர்களிடம் விளக்கிக்கூறக்கூடிய தொழில் துறை, வாணிகத்துறைப் பிரதிநிதிகளையும் ஒருசேரக் கொண்டு வருவதே இந்தக் குழுவின் நோக்கம் என்பதை இதிலிருந்து அவை தெரிந்து கொள்ள முடியயும்

     இப்பொழுது ஐயா, பிரதான நோக்கம் இது என்பதை அவை மனத்தில் கொண்டால் நாட்டின் பொதுக் கருத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் எனப்படுவோர் யாரையும் குழுவில் கொள்வதற்கு இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

     டாக்டர் பி.என்.பானர்ஜி: (கல்கத்தா புறநகர்: முகமதியரல்லாத நகர்ப்புறம்): பொதுமக்களின் பிரதிநிதிகளைக் குறிப்பிடுகிறீர்களா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆம். பொதுமக்களின் பிரதிநிதிகளையே குறிப்பிடுகிறேன். அடுத்து நான் வாதிக்க விரும்புவது, இந்தக் குழு ஏற்கெனவே பெரியதாக இருக்கிறது. திட்டமிட்டபடி ஏற்கனவே 14 உறுப்பினர்கள் அதில் இருக்கிறார்கள். மேலும் 4 பேர்களைச் சேர்க்க வேண்டும் என்ற திருத்தத்தை நான் ஏற்றுக்கொண்டால், குழுவில் 18 பேர்கள் இருப்பார்கள். இன்னொன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த அவையிலிருந்து நான்கு உறுப்பினர்களை நான் அனுமதித்தால், மேல்சபை குறைந்தது மூன்று பேரையாவது கோரும். அப்படியாயின் குழு 21 உறுப்பினர்கள் கொண்டதாக இருக்கும். அப்போது எந்தப் பணியை ஆற்ற வேண்டுமென்று கோரப்படுகிறதோ அந்தப் பணியைச் செய்ய இயலாத அளவுக்கு முடியாததாகிவிடும். இந்தக் குழு எளிதில் நிர்வகிக்க முடியாததாகி விடும்.

     அவையின் கவனத்தை ஈர்க்க நான்விரும்பும் அடுத்த விஷயத்துக்கு வருகிறேன். தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் 4 உறுப்பினர்களை நியமிக்க இந்தக்குழுவின் அமைப்பு வகை செய்துள்ளது. இந்த அதிகாரத்தை பயன்படுத்துவது பற்றி எந்தக் குறிப்பிட்ட நிலைக்கும் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல், சபையின் ஓர் உறுப்பினர் நியமனம்மூலம். அதில் இடம்பெறுவது முற்றிலும் சாத்தியம் என்று நினைக்கிறேன். அவைமுன் நான் வைத்த வாதங்களைக் கணக்கில் கொண்டு, இந்தத்திருத்தங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூற வருந்துகிறேன்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

1. பம்பாய் மாநிலத்தின் பரப்பளவு 12,23,541 சதுர மைல். இதில் (1) மஹாராஷ்டிரா (2) குஜராத் (3) கர்னாடகம் (4) சிந்து என நான்கு மொழிகளைப் பேசும் வட்டாரங்கள் அடங்கி யுள்ளன. இந்தப் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த மக்களும், ஒரே நிர்வாகத்தின் கீழ் நீண்ட காலமாக இருந்து வருகிறார்கள். குஜராத், மஹாராஷ்டிரா, கர்னாடகம் ஆகியவை பம்பாய் மாநிலத்தின் பகுதிகளாகக் கடந்த 110 ஆண்டுகளாக இருந்து வருகின்றன். சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து வட்டாரம் இத்துடன் இணைக்கப்பட்டது. இந்த மாநில அமைப்பிலிருந்து தனியே பிரிந்து செல்லக் கர்நாடகமும் சிந்துவும் இப்போது விரும்புகின்றன.

ambedkar 583

இன்றுள்ள பம்பாய் மாநிலம் ஓர் இயல்பான அமைப்பு அல்லவென்றும்,மொழி, இன அடிப்படையில் ஒன்று பட்டதல்லவென்றும், ஒரினத்தன்மைக் கொண்ட பகுதிகளை வேண்டுமென்றே சிதைத்து, பலவகைக் குழுக்களைக் கொண்ட ஒரு வட்டாரத்துடன் இவை வலுக்கட்டாயமாக இணைக்கப் பட்டனவென்றும், கர்னாடகம் மற்றும் சிந்துவின் தரப்பில் விவா திக்கப்படுகிறது, இதனால் பெரும் தீங்கு ஏற்பட்டுள்ளதென்றும், கட்டாயத் துண்டாடல் காரணமாகத் தம்முடைய பண்பாட்டுத் தனித்தன்மைக்குப் பங்கம் ஏற்பட்டுள்ளதென்றும், பெரிய, வேறு இனப் பகுதிகளுடன் தாம் சேர்க்கப்பட்டதால், அரசியல் ரீதியாகத் தாங்கள் கவனிப்பற்றுப் போனதாயும் கர்னாடக, சிந்து வட்டார மக்கள் கூறுகின்றனர்.

 2. கர்னாடகத்தைப் பொறுத்தமட்டில், இந்த வாதம் ஓரளவு சரியென்றே கூறலாம். கர்னாடகம் பல்வேறு சிதறிய பகுதிகளாகத் துண்டிக்கப்பட்டு, நிர்வாக நோக்கங்களுக்காக, கர்னாடகம் அல்லாத பகுதிகளுடன் சேர்க்கப்பட்டது. இதனால் பல சிரமங் கள் ஏற்பட்டன என்பது உண்மை. பம்பாய் மாநிலத்துடன் இனணக்கப்பட்ட பகுதிக்குப் பம்பாய்ச் சட்டமன்றத்தில் போது மான பிரதிநிதித்துவம் அளிக்கப்படாததால், அப்பகுதி அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை. இவையெல்லாம் இருந்தபோதிலும், பம்பாய் மாநிலத்திலிருந்து கர்னாடகத்தைத் தனியாகப் பிரிப்பதை நான் எதிர்க்கிறேன்.

நடை முறையில் மொழிக்கு ஒரு மாநிலம் என்ற கொள்கையைச் செயல் படுத்த முடியாது. இந்தக் கோட்பாட்டை அமல்படுத்தினால், ஏராளமான மாநிலங்களை உருவாக்க வேண்டியிருக்கும்; அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பது என் கருத்து. “கடந்த காலத்தை யும், எதிர்காலத்தையும் கொண்ட, தனிப் பண்புகள் கொண்ட பண்பாட்டு மொழியாக ஒரு மொழி பேசப்படும் வட்டாரங் களிலும்,” “வலுவான மொழி உணர்வு இருக்கும் வட்டாரங் களிலும்” கூட இத்தகைய மாநிலங்களை அமைப்பது நடை முறைக்கு ஒவ்வாதது. கடந்த காலச் சிறப்புக்களைப் பெற்றிருக்கும் ஒவ்வொரு மொழிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால், அதற்குச் சிறந்த எதிர்காலம் அமையும் என்பது உண்மை; தனித்தனி மொழி பேசும் மக்கள் கூட்டத்திற்கு, அரசர்ங்க அதிகாரங்கள் வழங்கப் பட்டால், அது மொழி உணர்வைப் பெறும் என்பதும் உண்மை. இவற்றையெல்லாம் நான் மறுக்கவில்லை.

இன்றுள்ள ஏற்பாட்டின் படி, கன்னட மொழி பேசும் மக்கள் தொடர்ந்து பம்பாய் மாநிலத் திலேயே சேர்ந்திருந்தால், கன்னடக் கலாசாரத்திற்குப் பெரும் பாதிப்பு கட்டாயம் ஏற்படும் என்று கூறுவதற்கில்லையென்றா லும், ஓரளவு பாதிப்பு எற்படலாம் என்பதை நான் மறுக்க வில்லை. ஆனால், அத்தகைய விளைவு ஏற்பட்டாலும், அது பெரிதும் வருந்தத்தக்க விஷயமல்ல என்று கருதுகிறேன். ஏனெனில், பொதுமக்களிடையே பொதுவான தேசிய உணர்வை உருவாக்கி வளர்க்க வேண்டியது தான் மிகவும் இன்றியமையாத உயிர்த் தேவை (vital need) என்று நான் கருதுகிறேன்.

தாங்கள் முதலில் இந்தியர்கள் என்றும், அதன் பின்னர் தான் இந்துக்கள், முஸ்லீம் கள், சிந்திகள், கன்னடக்காரர்கள் என்னும் உணர்வு கொண் டிருப்பதற்கு மாறாக, தாங்கள் முதலிலும் இறுதியிலும் இந்தியர் கள், இந்தியர்கள் மட்டுமே என்ற பொதுவான தேசிய உணர்வை உருவாக்கி வளர்ப்பது உயிர் நாடியான பணி என்று கருதுகிறேன். இதுதான் நாம் கடைப்பிடிக்க வேண்டிய இலட்சியமென்றால், உள்ளூர்ப் பற்றையோ அல்லது குழு உணர்வையோ தூண்டி வலுப்படுத்தக் கூடிய செயல்கள் எதையும் நாம் செய்யக் கூடாது. இன்றைய பம்பாய் மாநிலம் வெவ்வேறு இன மக்களைக் கொண்ட கதம்பம் போல உள்ளது. இதிலுள்ள பல இன மக்களும் பொது வாகச் சேர்ந்து செயலாற்ற வேண்டியுள்ளது. எனவே, தனிப்பட்ட உணர்ச்சி வளருவதற்கு இது ஊக்கம் அளிக்கவில்லை, மேலும் அத்தகைய உணர்ச்சி வளராமல் தடுக்கிறது எனலாம். ஆயினும் நன்மை அளிக்கும் ஏற்பாட்டைப் பேணிக் காக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். எனவே, கர்நாடகம் தனியே பிரிக்கப்பட வேண்டும் என்பதை நான் எதிர்க்கிறேன்.

 3. தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க, எவருமே மாநாட்டில் சாட்சி கூற முன் வராத தால், எனது கூட்டாளிகள் அந்தக் கோரிக்கையை ஒட்டுமொத்த மாக மறுத்து விட்டார்கள். இந்த விஷயத்தில் நானும் எனது கூட்டாளிகளும் ஒருமித்த கருத்துக் கொண்டிருப்பதால், இதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை. ஆனால், சிந்து விஷயத்தில், எனது கூட்டாளிகள் வேறுவிதமான முடிவுக்கு வந்ததுதான் எனக்கு வியப்பு அளிக்கிறது. கர்னாடகத்துடன் ஒப்பிடுகையில், சிந்து விஷயத்தில் இத்தகைய முடிவு எடுப்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை, பம்பாய் மாநிலத்துடன் இனணக்கப்பட்ட தால்,சிந்து வட்டாரம் கணிசமான அளவு நலம் பெற்றுள்ளது என்பதைப் பற்றி இருவிதமான கருத்துக்களுக்கு இடமில்லை.

சிந்துப் பகுதி நீண்ட தூரத்தினால் பிரிக்கப்பட்டிருந்த போதிலும் மாநில நிர்வாகத்தில், அதன் நிலை வேறு; மிகவும் கெளரவமான சலுகைகள் அளிக்கப்பட்டு, உயர்ந்த மதிப்புடன் வைக்கப்பட்டிருக் கிறது. ஆளுநரை அடுத்து உயர் மதிப்புப் பெற்றுள்ள ஒரு ஆனணயர் (commissioner) சிந்துவின் விவகாரங்களை நிர்வாகம் செய்கிறார்; சிந்துவின் சுதந்திரமான செயல்பாடு பெரிதும் பாது காக்கப்பட்டுள்ளது. அதனுடைய, தொன்மையான, மரபு வழக் கான சட்டங்கள் அ ப்படியே கடைப்பிடிக்கப்படுகின்றன. பம்பாய் மாநிலத்தில் பொதுவாகப் பிரகடனம் செய்யப்பட்ட சட்டங்கள், சிந்து வட்டாரத்திற்கும் அனுகூலமானது என்று கருதப்பட்டா லொழிய, அவ்வட்டாரத்திற்கு அவை அநேகமாய் அமல் செய்யப் படுவதில்லை. அங்குள்ள நடுவர் மன்றங்கள், பம்பாய் மாநிலத் தின் நடுவர் மன்றங்களிலிருந்து முற்றிலும் தனிப்பட்டு இயங்கு கின்றன. அங்குள்ள அரசினர் பணியும்,பம்பாய் மாநில அரசி னர் பணியிலிருந்து முற்றிலும் தனித்தே செயல்படுகிறது என லாம்; பெரும்பாலும் அங்கு இந்தியர்களே அரசினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பம்பாய் மாநிலத்துடன் சேர்ந்திருப் பதால், அதற்குப் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ள தாய்க் கூற முடியாது. அதற்கு மாறாக, பரந்து கிடக்கும் பம்பாய் மாநிலத்தின் வசதிகளையெல்லாம் பயன்படுத்தி, அது வெகுவாக முன்னேறியுள்ளது; அது தனித்திருந்தால், இத்தகைய முன்னேற் றத்தைக் கண்டிருக்க முடியாது. இணைந்திருப்பதால் தான், பம்பாய் மாநிலத்தின் செல்வ வளங்களை அது நன்கு பயன் படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது. மாநில அரசின் கவனத்தை அது பெரிதும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்த பின்னர், சிந்து வட்டாரம் தனக்குரிய அளவை விட மிகக் கூடுதலான நன்மைகளை மாநில அரசிடமிருந்து பெற்றுள்ளது. இந்த உண்மைகளின் அடிப்படையில் பார்த்தால், சிந்து தனியே பிரிந்து போனால்,வேறு என்ன கூடுதல் நன்மைகளைப் பெற்று விட ,முடியும்? இணைந்திருப்பதால் ஏற்படும் தீமைகள் இல்லா மல், தனித்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் அனைத்தையும் சிந்து ஏற்கெனவே பெற்றுள்ளதல்லவா?

 4. சிந்துவில் வசிக்கும் எல்லாச் சமூகத்தினரும், ஒரே குரலில் இந்த கோரிக்கையை எழுப்பவில்லை என்பது தெளிவு. இந்தக் கோரிக்கைத் தொடர்பாக சிந்துவில் வசிக்கும் முஸ்லீம்களுக்கும் ஹிந்துக்களுக்குமிடையே பெரும் மன வேற்றுமை உள்ளது என்பது குழுவிலும் குழுவின் கூட்டு மாநாட்டிலும் அளிக்கப்பட்ட சான்று கள் தெளிவுபடுத்துகின்றன. முஸ்லீம்கள் தனி மாநிலம் கோரு கின்றனர், ஹிந்துக்கள் அதை எதிர்க்கின்றனர். இந்தப் பகுதியில், பொது மக்கள் கருத்தின் வரலாற்றைச் சற்றே ஆராய்ந்து பார்த்தால், சிந்துவின் மதிப்பு பற்றிய, பிரச்சினையை, 1917-ஆம் ஆண்டில் தான், அரசியல் உணர்வு பெற்ற, பெருமக்கள் எழுப்பி யுள்ளார்கள் என்பதைக் காணலாம்.

1917 ஆகஸ்டு மாத அறிவிப்புக்குப் பின்னர், அரசியல் சீர்திருத்தங்களின் விளை வாகச் சிந்துவின் மதிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை ஆராய்வதற்காக, 1917 நவம்பரில் சிந்தி மக்கள் சிறப்பு மாநாடு ஒன்றை நடத்தினர். சிந்திப் பகுதியின் முக்கிய முஸ்லீம் தலை வரான மதிப்புக்குரிய திரு.ஜி.எம்.புர்க்ரி (Bhurgri) வரவேற்புக் கமிட்டியின் தலைவராக இருந்தார்; திரு.ஹர்ச்சந்த்ராய் விஷின் தாஸ் (Harchandrai   vishindas) என்ற ஹிந்துப் பெருமகனார் மாநாட்டின் தலைவராக இருந்தார். மாநாட்டின் எதிரே நான்கு விதமான மாற்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன, அவை யாவன: (1) சிந்துவைத் தனி மாநிலமாக அமைத்தல்; (2) சிந்தவை யும் பலுசிஸ்தானையும் இணைத்து ஒரே மாநிலமாக்குதல்; (3) சிந்துவைப் பஞ்சாப்புடன் இணைப்பது; (4) சிந்து இப்போது உள்ளது போலவே பம்பாயுடன் இருப்பது.

சிந்துவைத் தனி மாநிலமாக அமைப்பது என்பது உள்பட மூன்று ஆலோசனை களை, சிறப்பு மாநாடு மறுத்து விட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டுமல்ல, சிந்துவிலுள்ள ஆணையரின் மதிப்பைப் பம்பாய் மாநிலத்தின் இதர பகுதிகளிலுள்ள வட்டார ஆணையர் களின் (Divisional commissioners) மதிப்பிற்குக் குறைப்பதன் மூலம், சிந்துவுக்கும் பம்பாய் மாநிலத்துக்குமிடையே மேலும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று ஹிந்துக் கள் மற்றும் முஸ்லீம்களின் பேராதரவைப் பெற்ற தீர்மானம் சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் உள்ளடக்கிய ஒரு தூதுக்குழு, இந்திய மந்திரி திரு.மாண்டேகு     (Montague)- வையும், வைசிராய்    (Viceroy Lord Reading) ரீடிங் பிரபுவையும் சந்தித்து, தனி மாநிலம் ஆவதைச் சிந்து விரும்பவில்லையென்று திட்டவட்டமாக அறிவித்தது. பின்னர் 1918, 1919, 1920-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகளிலும், இரண்டு சமுதாயங்களையும் சேர்ந்த உறுப்பினர் கள் இ ந்தப் பிரச்சினையில், இதே போன்ற ஒருமித்த கருத்தையே வெளியிட்டார்கள்.

1920-க்கு பின்னர், ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றதன் காராணமாக, மாநாட்டில் இந்தப் பிரச்சினை ஆராயப்படவில்லை. இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. அதாவது முஸ்லீம்கள்தாம் தம்முடைய நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்; ஒன்றுபட்ட கண்ணோட்டத்திலிருந்து அவர்கள் தாம் விலகிச் சென்றுள்ளார்கள்; சிந்து மாநிலக் கோரிக்கை, இப்போது ஓர் ஒன்றுபட்ட கோரிக்கை அல்ல; ஒரு பிரிவினர் அதாவது முஸ்லீம்கள் மட்டுமே இந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளனர், என்பது.

 5. மக்களில் ஒரு சாரார் எழுப்பும் இந்தக் கோரிக்கையின் பால் பரிவுகாட்டுவதற்கு முன்னர், இந்தத் தனி மாநிலக் கோரிக் கைக்கான நோக்கம் சரியானது தானா என்பதைப் பற்றி முதலில் தீர்மானிக்க வேண்டும். முஸ்லீம் தூதுக் குழு இப்போது இந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளது; ஆனால் அதே சமயம், ஹிந்து தூதுக்குழு இதை எதிர்த்துள்ளது. எனினும், தமது கோரிக்கையின் நோக்கமென்ன என்று முஸ்லீம் தூதுக் குழுவும், அதைத் தாங்கள் எதிர்ப்பதற்கான காரணம் என்ன ஹிந்து தூதுக் குழுவும் வெளிப் படையாக எதையும் கூறவில்லை. தத்தம் காரணங்களை இரு தரப்பினரும் வெளியிட்டால் தான் அதனதன் தகுதிகளை எவ ருமே நன்கு ஆய்ந்து கொள்ளவியலும். எனினும், எனக்குக் கிடைத்த தகவலின்படி இதற்கான காரணங்களை நானே எடுத் துரைக்க விரும்புகிறேன்.

ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே நேச நல்லுறவு ஏற்படுவதற்கான சில நிபந்தனைகளைச் சில முஸ்லீம் பெருமக்கள் “”டில்லி முஸ்லீம் அறிக்கைகள்”” என்ற பெயரில் 1927 மார்ச் 20-ஆம் தேதியன்று வெளியிட்டனர். அந்த அறிக்கைகள் கீழ்க்காணும் கோரிக்கைகளை முன்வைத்தன: (1) சிந்துவைத் தனி மாநிலம் ஆக்க வேண்டும், (2) வடமேற்கு எல்லைப்புற மாநிலத்துக்கு இதர மாநிலங்களின் மதிப்பு அளிக்கப் பட வேண்டும், (3) பஞ்சாபிலும் வங்காளத்திலும், அங்கே வசிக் கும் முஸ்லீம் மக்கள்தொகைக்கு ஏற்பப் பிரதிநிதித்துவம் வழங்கப் பட வேண்டும். முஸ்லீம்கள் பெரும்பான்மையோராக உள்ளக் கூடுதல் மாநிலங்களை அமைப்பதுதான் இந்த அறிக்கைகளின் குறிக்கோள் என்பது இதிலிருந்து தெளிவாகும். தற்சமயம் பஞ்சா பிலும் வங்காளத்திலும் மக்கள்தொகையில் முஸ்லீம்கள் சிறிதளவு தான் கூடுதலாயுள்ளனர்.

இந்த மாநிலங்களில் மக்கள்தொகை யின் விகிதத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கோருவதன் மூலம், இந்த மாநிலங்களில் முஸ்லீம்கள் அரசியல் பெரும்பான்மை பெற்று, முஸ்லீம் அரசினை அமைக்க விரும்புகிறார்கள் என்பது கண்கூடு. பலுசிஸ்தானிலும், வட மேற்கு எல்லைப்புற மாநிலத்திலும் முஸ்லீம்கள் மிகப் பெரும் பான்னையோராய் இருக்கின்றனர். எனினும் அங்கே பிரிதிநிதிக் துவ அரசு அமைக்கப்படவில்லை. ஆதலால், அங்கே முஸ்லீம்கள் மிகப் பெரும்பான்மையோராய் இருந்த போதிலும், ஆட்சிபுரியும் பெரும்பான்மையோராய்   இருக்கவில்லை. இந்தக் குறைபாட்டை நீக்குவதுதான் மேற்கூறிய அறிக்கைகளின் நோக்கம். இதனால் முஸ்லீம் பெரும்பான்மையுள்ள நான்கு மாநிலங்கள் உருவாகும்; அங்கே முஸ்லீம் அரசுகளை அமைக்க முடியும்.

முஸ்லீம் மக்கள் மிகக் கூடுதலாய் வசிக்கும் சிந்துவையும் தனி மாநிலமாக்கி விட் டால், அது ஐந்தாவது முஸ்லீம் மாநிலமாகத் திகழும் என்பதே அவர்களுடைய கணிப்பு. இந்த முஸ்லீம் மாநிலங்களை அமைப் பதற்குப் பின்னாலுள்ள குறிக்கோள் யாது? வகுப்புவாத வாக் காளர் தொகுதி போன்றது தான் இது என்று முஸ்லீம்கள் கருது கின்றனர். முஸ்லீம் மாநிலங்கள் பற்றிய தங்களுடைய அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், வகுப்புவாத வாக்காளர் தொகுதியைக் கைவிட்டு விட்டு, எல்லா மாநிலச் சட்ட மன்றங்களிலும், மத்திய சட்டப் பேரவையிலும் கூட்டு வாக்காளர் தொகுதியை ஏற்றுக் கொள்ள ஆயத்தம் என்று, அறிக்கைகளை முன்வைத்த முஸ்லீம் பெருமக்கள் குறிப்பிட்டுள்ளனர். வகுப்புவாத வாக்காளர் தொகுதியை அமைத்திருப்பது முஸ்லீம் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்றும், இதே நோக்கத்திற் காகத் தான் தாங்கள் முஸ்லீம் மாநிலங்களை அமைக்க வேண்டு மெனக் கோருவதாகவும் வாதாடுகின்றனர்.

முஸ்லீம் மாநிலங் களைத் தோற்றுவிப்பதன் மூலம், ஹிந்துக்கள் பெருவாரியாக உள்ள மாநிலங்களில், ஹிந்துப் பெரும்பான்மையினரிடமிருந்து முஸ்லீம் சிறுபான்மையினரை எப்படிப் பாதுகாக்க முடியும் என்பது புலனாகவில்லை. வகுப்புவாத வாக்காளர் தொகுதியின் மூலம் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய, அல்லது கிடைப்பதாக நம்பிக் கொண்டிருக்கக் கூடிய பாதுகாப்பை நீக்கி விடுவதனால், முஸ்லீம் சிறுபான்மையினருடைய நிலை பலவீனமடையும் என்று தான் உண்மையில் தோன்றுகிறது: ஆனால் இந்தத் திட்டத்தை நன்கு ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால், மேற்பரப்பில் தோன்றுவது போன்ற அவ்வளவு அப்பாவித்தனமானதல்ல இது. முஸ்லீம் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு இது மிகவும் தந்திரமான ஏற்பாடுடையது.

ஹிந்து மாநிலங்களில், ஹிந்து பெரும்பான்மை யினர் முஸ்லீம் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்கினால், ஐந்து முஸ்லீம் மாநிலங்களில், ஹிந்து சிறுபான்மையினர், முஸ்லீம் சிறுபான்மையினரால் அதே போல அடக்கி ஒடுக்கப்படுவார்கள். தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதல், பயங்கரத்திற்கு எதிர்ப் பயங்கரம், இறுதியில் கொடுங்கோன்மைக்கு எதிராகக் கொடுங்கோன்மை என்ற முறையின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு ஏற்பாடு இது. இந்த அறிக்கைகளின், இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் இதுவே; சிந்து மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை யின் உட்கருத்தும் இதுதான். இதில் எத்துணை ஐயமிருந்தாலும் அதை அகற்றிடும் பொருட்டு, நேரு கமிட்டி அறிக்கையை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அந்த அறிக்கை கூறுவதாவது: ”சிந்து மாநிலம் தனியாக அமைக்கப்பட வேண்டும் என்ற முஸ்லீம்களின் கோரிக்கை, மகிழ்ச்சியான முறையில், நேரடியாக முன்வைக்கப்படவில்லையென்று நாங்கள் கருதுகிறோம். அது வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்டது; அதனுடன் சிறிதும் தொடர்பற்ற வேறு பல கருத்துக்களுடன் அது சற்றும் ஒவ்வாத முறையில் பிணைக்கப்பட்டிருக்கிறது.” தனி மாநில கோரிக்கையின் உண்மையான அடிப்படையை நேரு கமிட்டி அம்பலப்படுத்த விரும்பவில்லை. உண்மையான அடிப்படை நோக்கம் அவ்வளவு புகழத்தக்கதல்ல என்று கருதியிருக்க வேண் டும். எனினும் அதனுடைய மோசமான தன்மையைத் தெரிந்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன்.

இதைப் பற்றி மெளலானா அபுல்கலாம் ஆஜாத் கூறியதையே கேட்போம். அண்மையில் கல்கத்தாவில் நடைபெற்ற முஸ்லீம் லீக் கூட்டத்தில் மிகவும் தெளி வாக, நறுக்குத் தெறித்தாற் போல அவர் பேசினார்; அவர் கூறிய தாவது: “”லக்னோ உடன்பாட்டின் மூலம், தங்களுடைய நலன் களை அவர்கள் விற்றுவிட்டார்கள். கடந்த மார்ச்சு மாதத்தில் வெளியிடப்பட்ட டில்லி அறிக்கைகள்தாம், இந்தியாவில் முஸ்லீம்களுடைய உண்மையான உரிமைகளின் ஒப்புதலுக்கு, முதல் தடவையாகக் கதவைத் திறந்து விட்டுள்ளது. 1917-ஆம் வருட உடன்பாட்டின் மூலம் தோன்றிய தனி வாக்காளர் தொகுதி ஏற்பாடு, முஸ்லீம் பிரிதிநிதித்துவத்திற்கு மட்டுமே உறுதி அளித்தது; ஆனால், முஸ்லீம் சமுதாயத்தினுடைய எண்ணிக்கைப் பலத்தை அங்கீகாரம் செய்வது தான், சமுதாயத்தின் உயிர் வாழ்க்கைக்கு அடிப்படையானதாகும். இந்தியாவின் எதிர் காலத் தில் தங்களுக்கு உரிய பங்கு கிடைப்பதற்கு உத்தரவாதமளிக்கும் நிலைமையை டில்லி அறிக்கைகள் தோற்றுவித்துள்ளன. மக்கள் தொகைக் கணக்கின்படி, வங்காளத்திலும் பஞ்சாபிலும் முஸ்லீம் கள் மிகக் குறைந்த பெரும்பான்மைதான் பெற்றுள்ளனர்; ஆனால், டில்லி அறிக்கைகள் அவர்களுக்கு, முதல் முறையாக ஐந்து மாநிலங்களை அளித்திருக்கின்றன. இவற்றில், சிந்து, வட மேற்கு எல்லைப்புற மாகாணம், பலுச்சிஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்கள், முஸ்லீம்கள் மிகக் கூடுதல் பெரும்பான்மை பெற் றுள்ள மாநிலங்களாகும். இந்த மகத்தான முன்னேற்றத்தை முஸ்லீம்கள் உணர்ந்து கொள்ளவில்லையென்றால், அவர்கள் உயிர்வாழத் தகுதியற்றவர்கள் (கரவொலி). இப்பொது ஒன்பது ஹிந்து மாநிலங்களும் ஐந்து முஸ்லீம் மாநிலங்களும் இருக்கும். ஒன்பது மாநிலங்களில் ஹிந்துக்கள் முஸ்லீம்களை எப்படி நடத்து கிறார்கள், அதே போலத் தான், ஐந்து மாநிலங்களில் முஸ்லீம். களை ஹிந்துக்களை நடத்துவார்கள். இது ஒரு மகத்தான இலாப மில்லையா? முஸ்லீம்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்குக் கிடைத்த புதிய ஆயுதமல்லவா இது?” (ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஜனவரி 3,1928).

சிந்து மாநிலம் தனியாகப் பிரிக்க வேண்டு மென்ற கோரிக்கையின் உண்மையான நோக்கத்தை, எத்தகைய ஐயப்பாட்டிற்கும் இடமின்றி மிகவும் தெளிவாக இந்தப் பேச்சு எடுத்துரைக்கிறது. இந்த உண்மையான நோக்கத்தை, எத்தகைய கதிப்போக்கிற்குமிடையை (Destiny of sind) எத்தகைய தொடர்பும் இல்லை என்பது தெளிவு. முஸ்லீம் சிறுபான்மையினரின் பாது காப்புக்காகத் தீட்டப்பட்ட ஒரு பெரிய திட்டத்தின் சிறிய பகுதி இது. போருக்கான தயாரிப்புக்களைச் செய்வதே, சமாதானம் காக்க மிகச் சிறந்த வழி என்ற கோட்பாட்டை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.

6. இந்தக் கோரிக்கையின் உண்மையான நோக்கத்தை அறிந்து கொண்ட பின்னர், இந்தக் கோரிக்கைக்குப் பரிவுகாட்ட வேண் டுமா என்பது தான் நம் முன் உள்ள பிரச்னை. என்னால் இதற்கு அனுதாபமோ, ஆதரவோ காட்ட இயலாது; நல்ல நிர்வாகத்தை உளமார நேசிக்கும் எவரும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், நேரு கமிட்டி எத்தகைய முடிவு எடுத்தது? தனி மாநிலம் அமைப்பதற்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டது.

“இந்தக் கோரிக்கையை வெளி யிட்டிருக்கும் பாங்கு, இந்த அறிக்கையின் தகுதிகளைப் பலவீனப் படுத்தி விட்டதாகக் கூறுவதற்கில்லை” என்று அது குறிப்பிட்டது. என்னுடைய நிலை இதற்கு முற்றிலும் மாறானது. வெளியிட் டிருக்கும் பாங்கு, உள் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என்றும், அந்த உள்நோக்கம் வெறும் அற்ப விஷயமல்லவென்றும், நிலை மையை முற்றிலும் மாற்றக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நான் கருதுகிறேன். இந்தக் திட்டத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் உள்நோக்கம் மிகவும் பயங்கரமானது என்பதில் எத்துணை ஐயமுமில்லை. பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கைகள் மூலம் நீதியையும் அமைதியையும் பராமரிக்கும் நோக்கம் கொண் டது அது. குற்றம் ஏதும் செய்திராத சிறுபான்மையினருக்கு, முஸ்லீம் மாநிலங்களில் ஹிந்துக்களுக்கும், ஹிந்து மாநிலங்களில் முஸ்லீம்களுக்கும், அவரவர் மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களில் செய்த குற்றங்களுக்காக, பழி பாவங்களுக்காகத் தண்டனை   பெறும் வாய்ப்பை இது அளிக்கிறது.

தங்களுடைய மாநிலங்களில் வசிக்கும் சிறுபான்மையினரை மக்களாகக் கருது வதற்கு பதிலாகப் பிணையக் கைதிகளாகக் வைத்திருக்க வகை செய்யும் ஒர் அமைப்பு, இவர்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர் கள் வேறொரு மாநிலத்தில் நடந்து கொண்ட மோசமான நடத் தைக்குப் பழிவாங்கும் வகையில் இந்தச் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு வகை செய்யும் ஒர் அமைப்பு, சுய கண்டனத்திற்கு     உட்பட்டதாகும். இத்தகைய       பறிமுதலுக்கு வழி வகுக்கும் குறைகள், எப்போதும் நேர்மையானவை, உண்மை யானவையென்று எவரால் கூற முடியும்? சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாக, ஒர் அற்பக் காரணம் கிடைத் தாலும், அது, மாநிலங்களுடைக்கிடையே போர் மூண்டு விடுவதற் கான காரணம் ஆகிவிடக் கூடும். இத்தகைய அறிக்கைகளின் ஏற்பாட்டின் பின்விளைவுகள் மிகவும் பயங்கரமானவை, அவற் றைக் கண்டு நாம் வாளாவிருக்க முடியாது.

ஹிந்து மாநிலங்களில் முஸ்லீம்களை அடக்கி ஒடுக்க அதே வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தினால் மட்டும், இந்த ஏற்பாட்டின் தன்மையை     மேம் படுத்தி விட முடியாது. சச்சரவுப் பூசல், சீர்குலைவு ஆகியன இந்த ஏற்பாட்டில் உள்ளார்ந்து பொதிந்துள்ளன. இத்தகைய ஏற்பாடு இல்லாமல், முஸ்லீம்கள் தம்மால் அச்சமின்றி, பாதுகாப்பாய் வாழமுடியாது என்று கருதினால் இத்தகைய ஏற்பாடு இல்லாமல் அவர்களால் பாதுகாப்போடு வாழ முடியும் என்று உறுதியளிக் கும் விருப்பு வெறுப்பற்ற நம்பிக்கை ஏற்படும் வகையிலும், தேச விடுதலையைக் கூட ஒத்திப் போடலாம் என்று நான் கூறுவேன். “தொடர்ந்தாற் போல நடைபெற்ற பற்பல வரலாற்று நிகழ்ச்சிகளின் காரணமாகத்தான், இந்தியாவில் இன்றுள்ளபடி வெவ் வேறு இன மக்கள் பரவிக் கிடக்கிறார்கள்” என்றும், சமுதாய அடிப்படையிலான மாநிலங்களை அமைப்பதன் மூலம், “இன் றுள்ள வெளிப்படை உண்மைகளைத்தான் நாம் ஒப்புகிறோம் என்றும் நேரு கமிட்டி விவாதிக்கிறது. இது உண்மைதான் என் பதில் சந்தேகமில்லை. ஆனால், வகுப்புவாத உணர்வுகள் மிதமிஞ்சி இருக்கும் இச்சமயத்தில், தேசிய உணர்வுகள் தளர்ந்து பலவீனமுற்றிருக்கும் இந்த வேளையில், மத அடிப்படை கொண்ட இத்தகைய மாநிலங்களை உருவாக்குவதற்கு நாம் சம்மதிக்க வேண் டுமா என்பது தான் நம் முன்னுள்ள பிரச்சினை.

இந்துக்களும் முஸ்லீம்களும் தம்முடைய மத உணர்வுகளை மறந்து, தாங்கள் முதலிலும் முடிவிலும் எப்போதுமே இந்தியர்கள் என்ற உணர்வைப் பெற்றிருக்கும் போது, இத்தகைய மாநிலங்களை அமைப்பதுதான் பொருத்தமாயிருக்கும். எனினும், தாங்கள் முதலில் இந்தியர்கள், பின்னர்தான் இந்துக்கள், முஸ்லீம்கள் என்று அவர்கள் உணரத் தொடங்கும் வரையிலும் இந்த மாநில அமைப்புப் பிரச்சினை காத்திருக்கத்தான் வேண்டும். தனியாக, சிந்து மாநிலம் அமைக்க வேண்டும் என்ற பிரச்சினையின்பால், எனது கூட்டாளிகள் காட்டிய அனுதாப அணுகுமுறையை, மேற்கூறிய காரணங்களி னால், நான் எதிர்க்கிறேன்.

 7. பம்பாய் மாநிலத்திலிருந்து சிந்துவைத் தனியாகப் பிரிப் பதால் ஏற்படும் நிதித்துறைச் சிரமங்களைப் பற்றி நான் எதுவும் கூறாததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதற்குக் காரணம், நான் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதல்ல. அவற் றுக்கு நான் நிச்சயம் முக்கியத்துவமளிக்கிறேன். ஆனால், அவை மட்டுமே தீர்மானகரமானவையாய் இருக்க முடியாது என்பதே எனது கருத்து; நிதி சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டா லும் அல்லது அவை திரும்பப் பெறப்பட்டாலும், சிந்துவைத் மறுப்புக்கள் உறுதியாக நிலவியிருக்கும். 

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 4, பிரிவு 1)

Pin It

     (1942 ஆகஸ்ட் 7ம் தேதி புதுடில்லியில் நடைபெற்ற கூட்டுத் தொழிலாளர் மாநாட்டில், இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்  மாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய உரையின் முழு வாசகம் கீழே தரப்படுகிறது.)

(1.இந்தியத் தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1942)

     ambedkar 292இந்த முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டிற்கு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் அழைப்பைத் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டதற்கும் இன்று காலையில் இங்கு வந்து கலந்து கொள்வதில் தாங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்திற்கும் நானும் இந்திய அரசும் எங்களின் நன்றி உணர்வை போதுமான அளவு தெரிவிப்பது சிரமம். தாங்கள் கொண்டுள்ள இந்த இணக்கத்தைப்போல் இந்த மாநாட்டை வெற்றிகரமாக ஆக்குவதிலும் அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதிலும் அதே மாநிலங்களின் மனமார்ந்த ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

     உங்களை அதிகம் காக்கவைக்க நான் விரும்பவில்லை; கடுமையான நெருக்கடிநிலை நிலவும் நாட்கள் இவை. ஒவ்வொரு வரும் அவர்களின் பணியிடத்திற்கு எவ்வளவு விரைவில் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவில் செல்ல வேண்டும். எனவே, இந்த சந்தர்ப்பத்தில் எந்த நீண்ட உரையையும் நான் ஆற்றப் போவதில்லை. இந்த மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி உங்களின் கவனத்திற்குக் கொண்டு வரவும் அதன் நோக்கங்களையும் லட்சியங்களையும் எடுத்துக் கூறவும் சில முக்கிய விஷயங்களை மட்டும் குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்வேன்.

இரு சிறப்பு அம்சங்கள்

     இந்திய அரசாங்கத்தொழிலாளர் சார்பில் இதுவரை மூன்று தொழிலாளர் மாநாடுகள் நடந்துள்ளன என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே. முதலாவது மாநாடு 1940 ஜனவரி 22, 23 தேதிகளிலும் இரண்டாவது மாநாடு 1941 ஜனவரி 27, 28 தேதிகளிலும் மூன்றாவது மாநாடு 1942 ஜனவரி 30, 31 தேதிகளிலும் நடைபெற்றன. எனவே அந்த வரிசையில் இந்த மாநாடு நான்காவதாகும். முந்தியவற்றிலிருந்து இந்த மாநாட்டை வேறுபடுத்திக் காட்டும் விசேட அம்சங்களை சில வார்த்தைகளில் கூறினால், இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தைத் தாங்கள் புரிந்து கொள்வீர்கள். முதலாவதாக, முந்தின மாநாடுகள் முறையாக குறிப்பிட்ட காலங்களில் நடந்த போதிலும், நிரந்தரத்தன்மை என்பது இந்த மாநாடுகளது திட்டத்தின் பகுதியாக இருக்கவில்லை. ஒருசீராக இயங்குவதில் இடைவெளி இருந்திருக்கலாம். எந்தவிதிமுறை அல்லது நடைமுறை அல்லது புரிவுணர்வுக்கோ குந்தகம் இல்லாமல் அந்த கருத்தே கைவிடப்பட்டிருக்கலாம். இந்த மாநாடு அதன் திட்டத்தின் ஒரு பகுதியாக நிரந்தரத் தன்மையைக் கொண்டுள்ளது. நாம் ஏற்படுத்தவிருக்கும் ஸ்தாபன அமைப்பு ஒரு நிரந்தரக்குழுவின் நிரந்தரத் தன்மையையும், முறையாக இயங்குவதையும் பெற்றிருக்கும். நாம் கோரும் போது இயங்கத் தயாராக இருக்கும்.

     இந்த மாநாட்டின் இந்த அம்சத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது அம்சத்தைத் தங்களது சிறப்பு கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது பற்றியது அது. முந்திய மாநாடுகளில் அரசுப் பிரதிநிதிகள் மட்டுமே – மத்திய மாநில அரசுகள், சில சமஸ்தான அரசாங்கங்களின் பிரதிநிதிகள் மட்டுமே – கலந்து கொண்டனர். மிக முக்கியமானவர்கள், அவசியமானவர்கள் – அதாவது முதலாளிகளும் அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களும் இந்த மாநாடுகளில் பிரதிநிதித்துவம் பெறவில்லை. முதலாளிகளையும் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்தாபனங்களோடு தொடர்பு ஏற்படுத்தவும். அவற்றைக் கலந்து ஆலோசனை பெறவும் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதில் ஐயமில்லை. உதாரணமாக எனது மதிப்பு வாய்ந்த சகாவான மாண்புமிகு. சர்.ஏ.ராமசாமிமுதலியார், அவர் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக இருந்தபோது, கல்கத்தாவுக்கு வருகை தந்தார். அச்சமயம் தொழிலாளர், முதலாளிகள் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அதேபோல், இந்த மாநாடு கூடுவதற்கு மூலகாரமாக இருந்தவரும், எனது மதிப்பிற்குரிய சகாவுமான மாண்புமிகு சர் பிரேஷ்கான் நூன், அவர் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக இருந்தபோது, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசனை பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்தினார். எனினும் தொழிலாளர் மாநாடுகள் வரலாற்றில் முதல் தடவையாக இந்த கூட்டு மாநாட்டின் கட்டுக்கோப்பிற்குள் முதலாளிகளதும், தொழிலாளர்களதும் பிரதிநிதிகள் நேருக்குநேராக சந்திக்கும்படிச் செய்யப்பட்டிருக்கின்றனர்.

எனது கருத்தில், மாநாட்டின் இந்த அம்சம் சம்பந்தப்பட்ட அனைவரின் குறிப்பாகத் தொழிலாளர் பிரதிநிதிகளின் மிக நல்ல வரவேற்பினைப் பெற வேண்டும். இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பற்றி தனது அறிக்கையில் விட்லி கமிஷன் இந்தியாவில் தொழிற்சாலைகள் கவுன்சில் நிரந்தரத் தன்மை கொண்ட அமைப்பாக நிறுவப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்ததிலிருந்து இந்த யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கிளர்ச்சி செய்து வந்துள்ளனர். பல்வேறு காரணங்களால், தொழிற்சாலைகள் கவுன்சில் அமைக்கும் குறிக்கோளை நிறைவேற்றுவது சாத்தியமில்லாது போயிற்று. இந்த யோசனையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யும்படி இந்த மாநாட்டைக் கேட்டுக்கொள்வதன் மூலம் அந்தக் குறிக்கோளை எய்தும் பாதையை இம்மாநாடு வகுக்கும் என்பது பற்றி எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அந்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையில் பெரிய அளவு முன்னேற்றத்தை இது குறிக்கிறது என்று நான் சொன்னால் அது மிகைப்படுத்தப்படுவதாக நீங்கள் கருத மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

தொழிலாளர் சம்பந்தமான சட்டங்கள்

     இந்த மாநாட்டின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பற்றி ஓரிரு வார்த்தைகள் இப்பொழுது சொல்லப் போகிறேன். முந்தின மாநாடுகளில் கலந்துகொண்ட உங்களில் சிலர் இந்த மாநாடுகள் நடைபெறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தொழிலாளர்கள் சம்பந்தமான சட்டங்களில் காணப்படும் வேறுபாட்டுத் தன்மையிலிருந்து எழும் அபாயத்தைத் தெரிவிக்க வேண்டுமென்ற மேலான விருப்பம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

தொழிலாளர்கள் சட்டங்களை இயற்றுவதற்கு மாகாணங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தின் விளைவாகவே நாட்டிற்கு இந்த அச்சுறுத்தல் எற்பட்டுள்ளது.

     இந்திய அரசாங்கம் ஓர் ஒன்றிணைந்த அரசாங்கமாக இருக்கும் வரை தொழிலாளர் சட்டங்கள் ஒரே தன்மை கொண்டவையாக இருப்பதில் சிரமம் ஏதும் இல்லை. ஆனால் கூட்டாட்சி அரசியல் சட்டத்தை ஏற்படுத்திய இந்திய  சர்க்காரின் 1935 ஆம் ஆண்டுச் சட்டம் தொழிலாளர் சம்பந்தமான சட்டங்களை மத்திய அரசும் மாகாண சர்க்கார்களும்  இயற்றலாம் என்று நிர்ணயித்ததால் அது மிக மோசமான நிலைமையை ஏற்படுத்தியது. ஒரு மத்திய சட்டம் இல்லையென்றால், ஒவ்வொரு மாகாணமும் தனக்கு விருப்பமான  ஆனால் அடுத்துள்ள மாகாணங்களின் சட்டங்களிலிருந்து மாறுபட்ட சட்டத்தை இயற்றக்கூடும் என்று அஞ்சப்பட்டது. பொதுவான, தேசிய முக்கியம்வாய்ந்த நோக்கத்திற்குப் பதிலாக, மாகாண சௌகரியங்கள் ஆதிக்கம் செலுத்துவதை இது ஊக்குவிக்கும் என்றும் கருதப்பட்டது.

மூன்று முக்கிய நோக்கங்கள்

     இந்தப் போக்கை மாற்றுவதற்கான மிக அவசியமான திருத்தத்தை அமைக்கவும், தொழிலாளர் சம்பந்தப்பட்ட சட்டங்கள் ஒரே தன்மை கொண்டவையாக இருக்க வேண்டுமென்ற ஆரோக்கியமான கோட்பாட்டிற்கு மரியாதையளிக்கும் போக்கை வளர்க்கவும் இம்மாநாடுகளில் கோரப்பட்டது. இந்த மாநாட்டைக் கூட்டுவதில் தொழிலாளர் சட்டங்கள் ஒரேதன்மை கொண்டவையாக இருக்க வேண்டுமென்ற முந்திய மாநாடுகளின் லட்சியத்தைக் கைவிட நான் கோரப்போவதில்லை. இந்த மாநாடு பரிசீலிக்கும் நோக்கங்களில் ஒன்றாக அது இருக்கும். இத்தோடு மேலும் இரு நோக்கங்களைச் சேர்க்க நான் விரும்புகிறேன். அதாவது, தொழிற்சாலைகளில் (முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்குமிடையே ஏற்படும்) சச்சரவுகளைத் தீர்த்துவைக்க ஒரு வழிமுறையை அமைத்துக் கொடுப்பதும், தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஏற்படும் அகில இந்திய முக்கியம் வாய்ந்த எல்லா விஷயங்கள் பற்றி விவாதிப்பதும் அந்த இரு நோக்கங்கள் ஆகும். ஆக, மாநாட்டின் முன் மூன்று முக்கிய நோக்கங்களும் குறிக்கோள்களும் இருக்கும்:

  • தொழிலாளர் சட்டங்களில் ஒன்றுபட்ட தன்மையை வளர்ப்பது
  • தொழிற்சாலைத் தகராறுகளைத் தீர்க்க வழிமுறைகளை வகுப்பது
  • முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் பற்றி விவாதிப்பது.

முதல் விஷயத்தைப் பொறுத்தவரை, நம்முடைய குறிக்கோள்களில் அதை ஏன் உட்படுத்தியிருக்கிறோம் என்பதை சொல்ல வேண்டியது அவசியமில்லை. பலநிர்வாக, மாகாண எல்லைகளை கொண்ட இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டிற்குத் தொழிலாளர் சட்டங்கள் ஒருமித்த தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான விஷயமாகவே எப்போதும் இருந்து வரும் என்பது தெளிவு. எனவே சென்ற காலத்தை போலவே வருங்காலத்திலும் அது கவனத்தைத் தொடர்ந்து ஈர்க்கும். 

தொழில் தகராறுகள்

      தொழில்தகராறுகளைப் பொறுத்தவரை, யுத்தத்தின்போது தொழிலாளர்களும் முதலாளிகளும் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டனர். இக்கால கட்டத்தில் நடைபெற்றவேலை நிறுத்தங்களின் எண்ணிக்கை விரிவான அளவிலோ அல்லது கவலைப்படும் அளவிலோ இல்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் தொழிற்சாலைகளில் கிளர்ச்சி அதிகரிக்கும்  போக்கு இருந்தது. இந்தியப் பாதுகாப்பு விதி 81 ஏயின் கீழ் தகராறுகளை மத்தியஸ்தத்திற்கு விடும் வழிமுறை வகுக்கப்பட்டது. சமீப மாதங்களில் இந்தப் போக்கு சற்றுக் குறைந்துள்ளது. இந்த வழிமுறை திறமையும் நம்பகமானதுமான ஏற்பாடு என்று நிரூபணமாகும் என்று நாம் நம்புகிறோம். தொழில் தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கு ஒரு வழிமுறையை ஏற்படுத்துவதை நாம் பிரேபிக்க போவது இந்த மாநாட்டின் நோக்கங்களில் ஒன்றாகும்.

     நமது நோக்கங்கள், குறிக்கோள்களில் ஒன்றாக கடைசி விஷயமாக நாம் வகுத்திருப்பதில் நாம் பரந்த அளவிலான வார்த்தைகளை வேண்டுமென்றே உபயோகித்திருக்கிறோம். இதனால், தொழிலாளர், முதலாளிகள் சம்பந்தப்பட்ட எந்த முக்கியமான விஷயத்தையும் மாநாடு விவாதிப்பதைத் தவிர்க்கமுடியாதுபோகும். “அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள்” என்னும் சொற்றொடரைப் பரந்த அளவில் உபயோகிக்கும் அளவுக்கு எங்கள் மனதில் எண்ணம் இருந்ததை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். தொழிலாளர் நலன் பற்றிய எல்லா விஷயங்களையும் மற்றும் தொழிலாளர்களிடையே உற்சாகத்தை ஊட்டி வளர்ப்பதையும் இதில் உட்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இந்த நோக்கம் கடைசி விஷயமாக வைக்கப்பட்டிருந்தாலும் அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தததாகக் கருதப்பட வேண்டும் என்பதை நான் கூறத் தேவையில்லை. இதை மிகவும் அவசரமானதாக நாம் கருதுகிறோம். யுத்தத்தின் அவசியங்களால் எழுந்ததே இந்த அவசரம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. 

தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான யுத்தம்

     இப்போதைய யுத்தம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் யுத்தமாகும். தேவைகளை நிறைவேற்றுவது என்பது தொழிற்சாலைகளில் அமைதி நிலவுவதையே பொறுத்துள்ளது. தொழிற்சாலைகளில் அமைதியை ஏற்படுத்துவது இன்று நமக்குள்ள ஒரு அவசரமான பிரச்சினையாகும். தொழிற்சாலைகளில் அமைதி நிலவுவது இரு விஷயங்களைப் பொறுத்தது என்று நான் சொன்னால் அது தவறாக இருக்கமுடியாது. முதலாவதாக, தொழிற் தகராறுகளை விரைவாக தீர்த்து வைப்பதற்கான  ஓர் அமைப்பு தயாராக இருப்பதைப் பொறுத்துள்ளது அது. இரண்டாவதாக, தொழில்துறையில் வேலைசெய்பவர்களிடையே பதற்றநிலையை ஏற்படுத்தக்கூடிய எல்லா நிலைமைகளையும் நேரம் தவறாது போக்குவதைப் பொறுத்துள்ளது. தொழிற்சாலைகளில் தகராறுகளுக்கு இட்டுச் செல்லாத சிறிய பிரச்சினைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால் அவை பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பெரிய பிரச்சினைகள். இவ்வாறு பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களில் பெரும்பான்மையானவை. சமூக நலனைப் பாதிக்கும் விஷயங்கள் எனலாம். இத்தகைய பிரச்சினைகளை அணுகுவதற்கு நம்மிடம் எந்த ஏற்பாடும் இல்லை. இதுபோன்ற விஷயங்களை அமைதியாகவும் திருப்திகரமாகவும் தீர்த்து வைப்பதற்கு சர்க்காருக்கு ஆலோசனை வழங்க ஒரு அமைப்பை உடனடியாக ஏற்படுத்துவது அவசியம் என்பதுதான் பிரதானமாக இந்த மாநாட்டைக் கூட்டியதற்கான காரணம்.

நம்முன் உள்ள பணி

     இத்தகையது இந்த மாநாட்டின் முக்கியத்துவம். இத்தகையவையே அதன் நோக்கங்களும் குறிக்கோள்களும். இம்மாநாட்டின் முன் உள்ள கடமையைப் பொறுத்தவரை, நமது நிகழ்ச்சி நிரல் மிகச் சுருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதலாம். அதிக விஷயங்கள் அதில் இல்லை என்றும் நினைக்கலாம். இத்தகைய ஒரு மாநாட்டைப் பற்றிய திட்டத்தையும், அதனுடைய அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் நாம் ஒப்புக் கொள்கிறோமா என்ற அடிப்படை பிரச்சினை மீது ஒரு முடிவு எடுக்கும் வரை நாம் இப்பொழுது முன்வைத்துள்ள நிகழ்ச்சி நிரலை விட வேறு எதையும் உங்கள் முன் நாங்கள் வைத்திருக்க முடியாது. நிலைமை இதுவாக இருப்பதால் நான் இப்பொழுது செய்யக் கூடியது கீழ்க்கண்ட விஷயங்கள் பற்றி முடிவு எடுக்கும்படி உங்களுக்கு அறைகூவல் விடுப்பதுதான்:

  • தொழிலாளர் மாநாட்டை குறைந்த வருடத்திற்கு ஒரு முறை கூடும். ஒரு நிரந்தர ஸ்தாபனமாக அமைத்தல்.
  • இந்த மாநாட்டின் நிரந்தர ஆலோசனைக்குழுவை அமைத்தல். எப்பொழுதெல்லாம் அரசாங்கம் அழைக்கிறதோ அப்பொழுதெல்லாம், இந்த ஆலோசனைக்குழு அதன்முன் வைக்கப்படும் விஷயங்கள் பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்குதல்.
  • இந்த அமைப்புகளை நிறுவுவதற்கான வழிமுறைகளை பொதுவான முறையில் வகுத்தல்.

     இந்த அமைப்புகளை நிறுவுவது சம்பந்தப்பட்டவரை, இம்மாதிரியான முக்கூட்டு மாநாட்டிற்கு மிகவும் பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிற திட்டத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். இரு அமைப்புகளை நிறுவ வேண்டுமென்று நாங்கள் முன்மொழிகிறோம்:

  1. ஒரு விரிவடைந்த தொழிலாளர் மாநாடு, 2. ஒரு நிரந்தர ஆலோசனைக் குழு.

     மத்திய சர்க்கார், மாகாண சர்க்கார், சமஸ்தான சர்க்கார், முதலாளிகள், தொழிலாளர்கள் ஆகியவர்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இருக்கும் விரிவடைந்த மாநாடு. பொதுவாக ஒவ்வொரு மாகாணமும், ஒவ்வொரு பெரிய சமஸ்தானமும் இதில் பிரதிநிதித்துவம் பெற உரிமை பெற்றிருக்கும். பிரதிநிதித்துவம் பெறாத சமஸ்தானங்களின் சார்பில் மன்னர்களின் சபை நியமிக்கும் ஒருவர் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் முக்கிய அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். தொழிலாளர்களின் பல்வேறு பிரிவினர் போதுமான பிரதிநிதித்துவம் பெறவில்லையென சர்க்கார் கருதினால் அவர்களின் பிரதிநிதிகளை நியமனம் செய்ய அரசாங்கத்துக்கு உரிமையுண்டு. விரிவடைந்த மாநாடு சம்பந்தப்பட்டவரை, சர்க்கார் பிரதிநிதிகளுக்குச் சம எண்ணிக்கையில் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது சாத்தியமாக இருக்காது.

நிரந்தர ஆலோசனைக் குழு

     நிரந்தர ஆலோசனைக் குழுவை நிறுவுவதில் மிகுந்த கண்டிப்பும் கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப்படும் என்பதை உங்கள் முன் வைக்கப்போகிற தீர்மானத்தின் வாசகத்திலிருந்து தெரிந்து கொள்வீர்கள். பிரதிநிதித்துவம் பின்வருமாறு அமைந்திருக்க  வேண்டுமென நாங்கள் பிரேரேபிக்கிறோம்:

  1. இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், 2. மாகாணங்களின் பிரதிநிதிகள், 3. சமஸ்தானங்களின் பிரதிநிதிகள், 4.முதலாளிகளின் பிரதிநிதிகள் 5. தொழிலாளர்களின் பிரதிநிதிகள். மத்திய சர்க்காரின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் அதன் தலைவராக இருப்பார்.

     சர்வதேச சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்ட நிர்வாகக்குழு அமைக்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்த கோட்பாடுகளை சாத்தியமான அளவு நிரந்தர ஆலோசனைக்குழுவை அமைப்பதற்கான யோசனையாக முன்வைக்கிறோம். சர்வதேசத் தொழிலாளர் அலுவலகத்தின் நிர்வாகக்குழுவை அமைப்பதில் மூன்று கோட்பாடுகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன என்று என் மனதிற்குத் தோன்றுகிறது. முதலாவது, அரசுப் பிரதிநிதிகளுக்கும், அரசு சாராத பிரதிநிதிகளுக்கும் சமத்துவப் பிரதிநிதித்துவம் வழங்குதல். ஷரத்து 7, பிரிவு 1ல் இதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 32 பிரதிநிதிகளில் 16பேர் அரசாங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவர். 16பேர் முதலாளிகளையும் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவர்; இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றி நாங்கள் 10 இடங்களை அரசாங்கத்துக்கும் 10 இடங்களைத் தொழிற்சாலைகளுக்கும் வழங்குகிறோம்.

     சர்வதேசத் தொழிலாளர் அலுவலகம் பின்பற்றும் இரண்டாவது கோட்பாடு முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே சம எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் அளிப்பதாகும். அதே ஷரத்தில் இதற்கு வழிவகைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசுசாராத 16 இடங்கள் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் சமமாகப் பிரித்து கொடுக்கப்படுகின்றன. இக்கோட்பாட்டைப் பின்பற்றி, தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்களை தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் நாங்கள் சமமாகப் பிரித்துக் கொடுக்கிறோம்.

மூன்றாவது கோட்பாடு

     சில குறிப்பிட்ட நலன்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பது சர்வதேச தொழிலாளர் நிறுவனம் பின்பற்றும் மூன்றாவது கோட்பாடு. இதை 7வது ஷரத்தில் காணலாம். இந்த ஷரத்தின் பிரிவு (2) –இன்படி 16 இடங்களில் ஐரோப்பா – அல்லாத நாடுகளுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பிரிவு (4) –இன்படி முதலாளிகளின் ஒதுக்கீட்டிலிருந்து இரண்டு இடங்கள் ஐரோப்பா அல்லாத நாடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. முதலாளிகளுக்குக் கொடுக்கப்படும் கோட்டாவிலிருந்து ஒன்றும், தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கோட்டாவிலிருந்து ஒன்றும் மத்திய சர்க்காரின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் நியமனம் செய்வதற்கு வழிவகை செய்வதன் மூலம் இந்தக் கோட்பாட்டை நாங்கள் கடைப்பிடிக்க விரும்புகிறோம். முதலாளிகள், தொழிலாளர்களின் பிரதான ஸ்தாபனங்களால் பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தவிர ஏனைய சில நலன்களுக்கு ஓரளவு பிரதிநிதித்துவம் அளிப்பதை இது உத்திரவாதம் செய்யும். இந்த யோசனைகளில் அடங்கியுள்ள நியாயமும் நேர்மையும் உங்களைக் கவரும் என்றும், இந்த யோசனைகளுக்குத் தங்களின் ஒப்புதலை அளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது என்றும் நம்புகிறேன்.

     இந்த அமைப்புகளை மத்தியில் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய சர்க்காரை விட மாகாண சர்க்கார்களைப் பற்றித்தான் தொழிலாளர் அதிகம் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள். மத்தியில் அமைக்கப்படும் அமைப்புக்கு கீழ்மட்டத்திலிருந்து ஆதரவு தேவைப்படும். எனவே இத்தகைய அமைப்புகளை உருவாக்க மாகாண அரசாங்கங்கள் மத்திய அமைப்பு சமாளிக்கும் விஷயங்கள் குறித்து ஆவண செய்ய விரும்பினால் இந்தப் பொதுவான விஷயம் பற்றிய எந்த யோசனையையும் நாங்கள் உற்சாகத்துடன் வரவேற்போம் என்று மத்திய அரசாங்கம் சார்பில் வாக்குறுதி அளிக்கிறேன்.

விரிவடைந்த தொழிலாளர் மாநாடும் நிரந்தர குழுவும் அமைத்தல்

     முக்கூட்டுத் தொழிலாளர் மாநாட்டில், ஒரு விரிவடைந்த தொழிலாளர் மாநாட்டையும் ஒரு நிரந்தரக்குழுவையும் நிறுவுவதென ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

     மத்திய, மாகாண அரசுகள், சில சமஸ்தானங்கள், தொழிலாளர்களின் எல்லா முக்கிய ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளாக மாநாட்டில் 50 பேர் கலந்து கொண்டனர்; மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

     முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மாநாட்டின் குறிக்கோள்களுக்கு முழு ஆதரவு அளித்தனர்.

     அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவர் திரு.வி.வி.கிரி தொழிலாளர் மாநாடு என்ற இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதை வரவேற்றார். விவாதங்களில் தீவிரமாக ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தொழிலாளர் முன்னேற்றம் பற்றிய பிரச்சினையிலும் தொழிற்சாலைகளில் சுமூக நிலையை ஏற்படுத்துவதிலும் அது அக்கறை கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

     இந்தியத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான திரு.ஜம்னாதாஸ் மேத்தா, இந்த மாநாட்டு அமைப்பு, குறிப்பாக இந்த நெருக்கடியான காலகட்டத்தில், தொழிற்சாலைகளில் சுமூக நிலையையும் திருப்தியையும் ஏற்படுத்த பாடுபட வேண்டுமென்று சொன்னார்.

     இரண்டு அகில இந்தியத் தொழில் அதிபர்கள் சங்கங்களின் தலைவர்களான சர்.ஏ.ஆர்.தலாலும் திரு.ஶ்ரீராமும் தத்தம் பிரதிநிதி குழுக்களுக்குத் தலைமை வகித்தனர். சமஸ்தான மன்னர்கள் சபையின் பிரதிநிதிகளும் ஹைதராபாத், பரோடா, குவாலியர் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் விவாதங்களில் பங்குகொண்டனர். இந்திய சமஸ்தானங்கள் பங்கேற்றதை எல்லாப் பிரதிநிதிகளும் முழுமனதாக வரவேற்றனர்.

     விரிவடைந்த மாநாடு 44 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும் இந்திய சர்க்காரின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் அதன் தலைவராக இருப்பார். பல்வேறு அரசாங்கங்களை 22 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவர்; 11 பேர் தொழிலாளர்களையும் 11 பேர் தொழிலதிபர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவர்.

     இதேமாதிரி நிரந்தரக்குழு 20 உறுப்பினர்களைக் கொண்டதாகவும் தொழிலாளர் நலத்துறை உறுப்பினரைத் தலைவராகக் கொண்டதாகவும் இருக்கும். ஒருபக்கம் சர்க்காரின் பிரதிநிதிகளும் மறுபக்கம் தொழிலதிபர்கள் – தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் சம எண்ணிக்கையில் இருப்பர். மாநாட்டுக்குத் தலைமைதாங்கிய மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை உறுப்பினர், தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய எல்லா அமைப்புகளின் பிரதிநிதிகளும் அத்தகைய ஸ்தாபனங்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஏற்றுக்கொண்டார்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

ஒரு காலத்தில் இந்தியக் கிராமம் குடியமர்ந்த சமூகத்தினரையும் சிதறுண்ட சமூகத்தினரையும் கொண்டதாக இருந்தது; அவர்களில் ஒரு சமூகத்தினர் கிராமதிற்குள்ளேயும் இன்னொரு சமூகத்தினர் கிராமத்திற்கு வெளியேயும் தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும் அவர்களிடையே சமூகஉறவுகள் வளர்வதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. இதையெல்லாம் இதுவரை நாம் நடத்தியுள்ள ஆய்வுகளும் விவாதங்களும் காட்டுகின்றன. ஆனால் பசு புனிதமான பிராணியாக்கப்பட்டு, மாட்டிறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட பிறகு சமுதாயம் இரண்டாகப் பிளவுபட்டது. குடியமர்ந்த சமூகத்தினர் தீண்டத்தக்க சமூகத்தினராகவும், சிதறுண்ட மக்கள் தீண்டப்படாத சமூகத்தினராகவும் ஆனார்கள். சிதறுண்ட மக்கள் தீண்டப்படாதவர்களாக எப்போதுமுதல் கருதப்பட்டனர்? இதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய கடைசிக் கேள்வியாகும். தீண்டாமை தோன்றிய காலத்தை துல்லியமாக நிர்ணயிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. தீண்டாமை என்பது சமூக மனோபாவத்தின் ஓர் அம்சமாகும். அது ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரிடம் காட்டும் ஒரு வகையான சமூக அருவருப்பு. சமூக மனோபாவத்தின் இயல்பான விளைவான தீண்டாமை ஒரு குறிப்பிட்ட உருவத்தையும் வடிவத்தையும் எய்துவதற்கு சில காலம் பிடித்திருக்க வேண்டும். அநேகமாக ஆரம்பத்தில் ஒரு மனிதனது உள்ளங்கை அளவு மேகமாக உருவாகி வளர்ந்து பெருகி இறுதியில் இன்று பிரம்மாண்டமான வடிவத்தை எய்தியுள்ள ஒரு நிகழ்வுப்போக்குத் தொடங்கிய காலத்தைத் துல்லியமாக அறுதியிட்டு உறுதியாகக் கூறுவது எவராலும் இயலாது. தீண்டாமைக்கான விதை எப்போது விதைக்கப்பட்டிருக்கும்? இது சம்பந்தமாக ஒரு துல்லியமான காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமில்லை என்றாலும் ஏறத்தாழ சரியாக இருக்கக்கூடிய ஒரு காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமா?

     ambedkar 184சரி நுட்பமான காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமல்ல. எனினும் தோராயமான காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமே. இதற்கு முதலாவதாக செய்ய வேண்டியது தீண்டாமை நடைமுறையில் இல்லாத அதிகபட்ச காலவரம்பை நிர்ணயிப்பதும், அதேபோன்று அது நடைமுறைக்கு வந்த குறைந்தபட்ச காலவரம்பை நிர்ணயிப்பதும் அவசியம்.

     அதிகபட்சக் காலவரம்பை நிர்ணயிக்கும் பிரச்சினையைப் பொறுத்தவரையில், நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் அந்த்யஜாக்கள் என அழைக்கப்படுவோர் வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் என்பதாகும். ஆனால் அவர்கள் தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை என்பது மட்டுமின்றி, தூய்மையற்றவர்களாகவும் கூட பாவிக்கப்படவில்லை. இந்த முடிவுக்கு ஆதரவாக கானேயின் நூலிலிருந்து பின்கண்ட பகுதியை மேற்கோள் காட்டுவது உசிதமாக இருக்கும். கானே கூறுகிறார்: (தர்ம சாஸ்திரம் தொகுதி II பாகம் I பக்கம் 165)

“ஸ்மிருதிகளில் அந்த்யஜாக்கள் எனப் பேசப்படும் பலசாதிகளின் பெயர்கள் ஆரம்பகால வேத நூல்களில் காணப்படுகின்றன. ரிக்வேதத்தில் (VIII 8.38) சார்மன்னாக்களும் (தோல் பதனிடுபவர்கள்), வாஜ்நேய சூத்திரத்தில் சண்டாளர்களும் பவுல்காசர்களும், ரிக் வேதத்தில் வேபர்கள் அல்லது வப்தாக்களும் (நாவிதர்கள்) வாஜ்நேய சூத்திரத்தில் விடாலகரர்கள் அல்லது பிடாலகரர்களும் (ஸ்மிருதிகளில் கூறப்பட்டிருக்கும் புரூடர்களைப் போன்றவர்கள்), அதே வாஜ்நேய சூத்திரத்தில் ஸ்மிருதிகளின் இரசகர்களை ஒத்த தய்களும் (சலவைத் தொழில் செய்யும் பெண்கள்) குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இவர்கள் எல்லோரும் தனிச் சாதியினராகக் கூறப்பட்டிருந்த போதிலும் தீண்டப்படாதவர்கள் அல்ல.”

     இவ்வாறு, வேத காலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. தர்மசூத்திரங்கள் காலத்தைப் பொறுத்தவரையில் தூய்மையின்மை இருந்து வந்ததைக் காண்கிறோமே தவிர தீண்டாமை இருந்து வந்ததை நாம் காணவில்லை.

     மனு காலத்தில் தீண்டாமை இருந்து வந்ததா? இந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதிலளிப்பது சாத்தியமல்ல. நான்கு வருணங்கள் மட்டுமே இருக்கின்றன, ஐந்தாவது வருணம் என்று எதுவும் இல்லை என்று அவர் சுலோகத்தில் (மனு X. 4) கூறுகிறார். இது புதிரான சுலோகமாகக் காணப்படுகிறது. அதன் பொருளைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. மனு தமது தர்ம சாஸ்திரத்தை எழுதிவந்த காலத்தில் எழுந்த ஒரு சர்ச்சைக்கு முடிவுகட்ட அவர் மேற்கொண்ட முயற்சியை இந்த சுலோகம் காட்டுவதாக தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்புக்கும் சதுர்வருண அமைப்புக்கும் இடையேயான சம்பந்தாசம்பந்தம் பற்றிய சர்ச்சையே இது என்பது தெள்ளத்தெளிவு. இந்த சர்ச்சைக்கு மையமான விஷயமும் முக்கியமானது என்பது கண்கூடு. சுருக்கமாகக் கூறினால், இந்த வகுப்பை சதுர்வருண அமைப்புக்கு உட்பட்டதாகக் கருதவேண்டுமா அல்லது ஆதி நான்கு வருணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஓர் ஐந்தாவது வருணமாக இதைக் கருதவேண்டுமா என்பதே இந்தச் சர்ச்சைக்குரிய விஷயம். இவையாவும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் புரியாத விஷயம் மனு எந்த வகுப்பை இங்கு குறிப்பிடுகிறார் என்பதுதான். சர்ச்சைக்குள்ளான இந்த வகுப்பை அவர் திட்டவட்டமான முறையில் இனம் காட்டாததுதான் இதற்குக் காரணம்.

     மனுவின் முடிவு தெளிவில்லாமல் இருப்பதும் இந்த சுலோகம் புதிராக இருப்பதற்கு மற்றொரு காரணமாகும். ஐந்தாவது வருணம் இல்லை என்பது மனுவின் முடிவு. பொதுவான முன்மொழிதல் என்றமுறையில் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய அர்த்தத்தை அது கொண்டிருக்கிறது. ஆனால் எந்த வகுப்பின் அந்தஸ்து சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறதோ அந்த வகுப்பு விஷயத்தில் இந்த முடிவை ஸ்தூலமான முறையில் பிரயோகித்துப் பார்க்கும்போது அது என்ன பொருளைக் குறிக்கிறது? இதற்கு இரண்டு விதமாகப் பொருள்கொள்ளமுடியும். சதுர்வருண அமைப்பின்படி ஐந்தாவது வருணத்துக்கு இடமில்லையாதலால், சம்பந்தப்பட்ட வகுப்பை அங்கீகரிக்கப்பட்ட நான்கு வருணங்களில் ஒன்றைச் சேர்ந்ததாகக் கருதவேண்டும் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். ஆனால் அதேசமயம், ஆதி வருண அமைப்பில் ஐந்தாவது வருணத்துக்கு இடமில்லையாதலால், சம்பந்தப்பட்ட வகுப்பு வருண அமைப்புக்கு அறவே வெளியே உள்ளதாகக் கருதவேண்டும் என்றும் இதற்கு அர்த்தம் செய்யலாம்.

மனுவின் இந்த சுலோகம் தீண்டப்படாதவர்களையே குறிக்கிறது என்றும், இவர்களது அந்தஸ்துதான் சர்ச்சைக்குரியதாக இருந்தது என்றும், இதுவே மனுவின் முடிவு சம்பந்தப்பட்ட விஷயம் என்றும் வைதீக இந்துக்கள் காலம் காலமாகவே இதற்கு வியாக்கியானம் செய்து வந்துள்ளனர். இந்த விளக்கமே இந்துக்களை சவர்ணர்கள் (சதுர்வருண அமைப்புக்குள் இருப்பவர்கள்) என்றும், அவர்ணர்கள் (சதுர்வருண அமைப்புக்கு வெளியே இருப்பவர்கள்) என்றும் பிரிப்பதற்கு வழிவகுத்தது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்தக் கண்ணோட்டம் சரிதானா? மனுவின் இந்த வாசகம் யாரைக் குறிப்பிடுகிறது? தீண்டப்படாதவர்களை அது குறிக்கிறதா? இந்தப் பிரச்சினைக்குறித்த விவாதம் பரிசீலனையிலுள்ள பிரச்சினைக்கு சம்பந்தப்படாதது, அதற்கு அப்பாற்பட்டது என்று தோன்றலாம். ஆனால் இது சரியல்ல. ஏனென்றால் இந்த வாசகம் தீண்டப்படாதவர்களைத்தான் குறிக்கிறது என்றால் மனு காலத்தில் தீண்டாமை இருந்து வந்ததை அது உறுதிப்படுத்துகிறது – இந்த முடிவு பரிசீலனையிலுள்ள பிரச்சினையின் மையத்தையே தொடுகிறது. எனவே, இந்த விஷயத்தை ஆழ்ந்து ஆராய்ந்து அதற்கு ஒரு தீர்ப்பு காணுவது அவசியமாகிறது.

மேலே கூறிய வியாக்கியானம் தவறு என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. மனுவின் வாசகம் எவ்வகையிலும் தீண்டப்படாதவர்களைக் குறிக்கவில்லை என்று உறுதியாகக் கருதுகிறேன். எவரது அந்தஸ்து சர்ச்சைக்குரியதாக இருக்கிறதோ அந்த ஐந்தாவது வருணத்தினர் யார் என்பதையும், இந்த வாசகத்தில் மனு தெரிவித்திருக்கும் முடிவு எவரது அந்தஸ்தைப் பற்றியது என்பதையும் அவர் கூறவில்லை. அவரது வாசகம் தீண்டப்படாதவர்களைக் குறிக்கிறதா அல்லது வேறு ஏதேனும் வகுப்பினரைக் குறிக்கிறதா? அந்த வாசகம் தீண்டப்படாதவர்களை எவ்வகையிலும் குறிக்கவில்லை என்பதே என் முடிவு. நான் இந்த முடிவை மேற்கொள்வதற்கு இரண்டு சூழ்நிலைகளை ஆதாரமாகக் கொள்கிறேன். முதலாவதாக, மனுவின் காலத்தில் தீண்டாமை இருக்கவில்லை. தூய்மையின்மைதான் இருந்து வந்தது. மனு வெறுப்போடு குறிப்பிடும் சண்டாளனும் கூட தூய்மையற்றவனே தவிர வேறல்ல. இவ்வாறிருக்கும்போது, இந்த வாசகம் தீண்டப்படாதவர்களைக் குறிப்பதாக இருக்கமுடியாது. இரண்டாவதாக, இந்த வாசகம் அடிமைகளைக் குறிக்கிறதே அல்லாமல் தீண்டப்படாதவர்களைக் குறிக்கவில்லை என்ற கருத்துக்குப் போதிய சான்று இருக்கிறது. தீண்டாமையின் தொழில்ரீதியான மரபுமூலம் குறித்த அத்தியாயத்தில் நாரதஸ்மிருதியிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கும் மேற்கோளை அடிப்படையாகக் கொண்டது இந்தக்கருத்து. அடிமைகளை ஐந்தாவது வருணமாக நாரதஸ்மிருதி கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாரதஸ்மிருதியில் வரும் ஐந்தாவது வருணம் என்பது அடிமைகளைக் குறிக்கிறது என்றால், மனுஸ்மிருதியில் வரும் ஐந்தாவது இனம் என்பதும் அடிமைகளை குறிப்பதாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று எனக்குப் புரியவில்லை. இந்தக் கருத்து சரியானதாக இருக்கும்பட்சத்தில் மனுவின் காலத்தில் தீண்டாமை நிலவியது என்று கூறப்படும் வாதத்தின் ஆணிவேரையே அது தகர்த்தெறிகிறது. மேலே கூறிய காரணங்களால், மனுவின் வாசகம் தீண்டாமையைக் குறிக்கவில்லை என்பதும், மனுவின் காலத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டது என்ற முடிவுக்கு வருவதற்கு நியாயமோ, காரணமோ இல்லை என்பதும் தெளிவு.

இவ்வாறு தீண்டாமை தோன்றியதன் அதிகபட்சக் காலவரம்பை நம்மால் நிச்சயமாக நிர்ணயிக்கமுடியும். மனுஸ்மிருதி தீண்டாமையை எவ்விதத்திலும் குறிப்பிடவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியும். எனினும் இங்கு முக்கியமான கேள்வி எழுகிறது: மனுஸ்மிருதியின் காலம் எது? இந்தக்கேள்விக்கு விடை காணாமல், ஒரு குறிப்பிட்ட காலத்தில் தீண்டாமை அனுஷ்டிக்கப்பட்டதா, இல்லையா என்பதைக் கூறுவது சாத்தியமல்ல. மனுஸ்மிருதியின் காலம் குறித்து அறிஞர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. சிலர் அதனை மிகத்தொன்மையானது என்று வாதிடுகின்றனர். எல்லாத் தகவல்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டு, பேராசிரியர் புஹ்லர் சரியானதெனத் தோன்றும் ஒரு காலத்தை நிர்ணயித்துக்கூறுகிறார். மனுஸ்மிருதி அதன் இப்போதைய வடிவத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிற்று என்று புஹ்லர் நிர்ணயிக்கிறார். இவ்வாறு மனுஸ்மிருதிக்கு மிக அண்மைக்காலத்தை நிர்ணயிப்பதில் புஹ்லர் மட்டும் தனித்திருக்கவில்லை. திரு.டப்தாரியும் இந்த முடிவுக்கே வருகிறார். அவரது கருத்துப்படி மனுஸ்மிருதி தோன்றியது கி.மு.185 ஆம் ஆண்டுக்குப் பிறகே தவிர முன்பல்ல. இதற்கு டப்தாரி ஒரு காரணம் கூறுகிறார். மனுஸ்மிருதிக்கும் மௌரிய வம்சத்தின் பௌத்த பேரரசரான பிரிகத்ரதன் அவனுடைய பார்ப்பன பிரதம தளபதியான புஷ்யமித்தர சுங்கனால் கொலை செய்யப்பட்டதற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. இந்த நிகழ்ச்சி கி.மு.185க்குப் பிறகுதான் எழுதப்பட்டிருக்கவேண்டும். இத்தகைய ஒரு முக்கிய முடிவுக்கு வலுவூட்ட பிரிகத்ரத மௌரியன் புஷ்யமித்தரனால் கொலை செய்யப்பட்டதற்கும் மனுஸ்மிருதி எழுதப்பட்டதற்கும் தொடர்பு உண்டு என்பதை வலுவான, நம்பத்தகுந்த சான்றுகளால் நிலைநாட்டுவது அவசியம். ஆனால் துரதிருஷ்டவசமாக த்ரயு.டப்தாரி இவ்வாறு செய்யத் தவறிவிட்டார். இதனால் அவரது முடிவு வலுவிழந்து காணப்படுகிறது. இத்தகைய ஒரு தொடர்பு இருந்ததை நிரூபிப்பது முற்றிலும் இன்றியமையாதது. அதிருஷ்டவசமாக இதற்கான சான்றுகளுக்கு பஞ்சம் இல்லை.

பிரிகத்ரத மௌரியன் புஷ்யமித்தரனால் கொலையுண்டது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகக் கருதப்படாதது துரதிருஷ்டவசமானதாகும். எப்படியிருப்பினும் இந்நிகழ்ச்சி அதற்குரிய கவனத்தைப் பெறவில்லை என்றே கூறவேண்டும். இரு தனிநபர்களிடையே ஏதோ சொந்தப்பகைமையினால் நிகழ்ந்த ஒரு சாதாரண நிகழ்ச்சியாகவே வரலாற்றாசிரியர்கள் இதனை எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் விளைவுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்த்தோமானால் இது சகாப்தகர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்பது தெற்றெனப் புலனாகும். மௌரியர்கள் போய் சுங்கர்கள் ஆட்சிபீடமேறிய ஒரு வெறும் வம்சாவழி மாற்றமாக மட்டுமே இந்த நிகழ்ச்சியைக் கருதினால் அதன் முக்கியத்துவத்தை அளவிட முடியாது. உண்மையில், இது பிரஞ்சு புரட்சிபோன்ற ஒரு மாபெரும் அரசியல் புரட்சியாகும். பௌத்த மன்னர்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பார்ப்பனர்கள் திட்டமிட்டுச் சூழ்ச்சிசெய்து நடத்திய புரட்சியாகும். புஷ்யமித்திரன் பிரிகத்ரதனைக் கொலை செய்ததை இவ்வாறுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வெற்றிகண்ட பார்ப்பனியத்துக்கு தன்னை நிலைநாட்டிக் கொள்வதற்கு, வலுப்படுத்திக்கொள்வதற்குப் பல விஷயங்கள் தேவைப்பட்டன. பௌத்தர்கள் ஏற்கமறுத்த சதுர்வருண அமைப்பு முறையை நாட்டின் சட்டமாக்குவது பார்ப்பனியத்துக்கு அவசியமாக இருந்தது. அதேபோன்று பௌத்தர்கள் ரத்துசெய்த பிராணிகள் பலியை சட்டபூர்வமாக்குவதும், பார்ப்பனியத்துக்கு அவசியமாக இருந்தது. இதுமட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களும் பார்ப்பனியத்துக்குத் தேவைப்பட்டன. பௌத்த மன்னர்களின் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்த பார்ப்பனியம் அனைவராலும் புனிதமானவையாகவும் மீறவொண்ணாதவையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டின் காலகாலமான இரண்டு சட்டவிதிகளை மீறவேண்டியிருந்தது. முதல்விதி ஒரு பார்ப்பனன் ஆயுதத்தை தொடுவதுகூட பாபம் என்று கூறிற்று. இரண்டாவது விதி அரசர் புனிதமானவர் என்றும் அரசர் கொலை மாபெரும் பாபம் என்றும் பிரகடனம் செய்தது.

இந்த இரண்டு விதிகளையும் தாங்கள் மீறுவதை நியாயப்படுத்தக்கூடிய மகத்தான அதிகாரம் கொண்ட மதச்சார்புடைய ஒரு நூல் வெற்றிக்கொண்ட பார்ப்பனித்துக்குத் தேவைப்பட்டது. இந்தத் தேவதையை மனுஸ்மிருதி பூர்த்தி செய்தது. மனுஸ்மிருதியின் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அது சதுர்வருண அமைப்பு முறையை நாட்டின் சட்டமாக்குகிறது; யாகத்துக்கு விலங்குகள் பலியிடப்படுவதை சட்டபூர்வமாக்குகிறது; அது மட்டுமின்றி அவசியம் நேரிடும்போது பார்ப்பனன் ஆயுதமேந்துவதையும், அரசனைக் கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது. இதில் மனுஸ்மிருதி முந்தைய வேறு எந்த ஸ்மிருதியும் செய்யாததைச் செய்திருக்கிறது. இது முற்றிலும் அப்பட்டமான பிறழ்வாகும். இது ஒரு புதிய கோட்பாடாகும். மனுஸ்மிருதி இதை ஏன் செய்தது? புஷ்யமித்திரன் செய்த கொலை பாதகங்களையும், அத்துமீறிய செயல்களையும் அது தத்துவார்த்தரீதியில் நியாயப்படுத்தவேண்டியிருந்ததாலேயே அது இவ்வாறு செய்தது என்பதே இதற்கு ஒரே பதிலாக இருக்கமுடியும். புஷ்யமித்திரனுக்கும் மனு வகுத்தளித்த இந்தப் புதிய கோட்பாட்டுக்கும் இடையேயான பரஸ்பரத் தொடர்பு எதைக் காட்டுகிறது? மனுஸ்மிருதி கி.மு.185க்குப் பிந்தைய ஒருகாலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இது பேராசிரியர் புஹ்லர் நிர்ணயித்துக்கூறிய காலத்திலிருந்து அதிகம் விலகியதல்ல என்பது தெளிவு. மனுவின் காலத்தை இவ்வாறு நிர்ணயித்தபிறகு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தீண்டாமை இருந்திருக்க முடியாது என்று நம்மால் கூறமுடியும்.

அடுத்து, தீண்டாமையின் தோற்றம் குறித்த குறைந்தபட்சக் கால நிர்ணயத்துக்கு வருவோம். இதற்கு, இந்தியாவுக்கு வருகை தந்த சீனப்பயணிகளையும், இந்திய மக்களின் பழக்கவழக்கங்கள் குறித்து அவர்கள் கூறியுள்ள விவரங்களையும் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இந்தப் பயணிகளில் ஒருவரான பாஹியான் கூறியிருப்பது மிகவும் சுவையானதாகும். அவர் கி.பி.400ல் இந்தியாவுக்கு வந்தார். அவர் கூறிய விவரங்களில் ஒரு பகுதி வருமாறு: (மேற்கத்திய இந்தியாவிலுள்ள பௌத்த ஆவணங்கள், பியல். முன்னுரை பக்கம் XXXVIII)

“மதுராவிலிருந்து தெற்கே மத்தியதேசம் எனும் ஒருநாடு இருக்கிறது. இந்த நாட்டின் பருவநிலை பனியோ, மூடுபனியோ இல்லாமல் ஒரே சீராகவும் வெதுவெதுப்பாகவும் இருக்கிறது. தலை வரியோ, அதிகாரிகளின் கெடுபிடியோ இன்றி மக்கள் நலமாகவும் வளமாகவும் இருக்கிறார்கள். அரசக் குடும்பத்துக்குச் சொந்தமான நிலங்களை உழுது பயிரிடுபவர்களே மகசூலில் ஒரு பகுதியை அவர்களுக்குத் தருகிறார்கள். அவர்கள் நிலத்தை விட்டுப்போக விரும்பினால் போகிறார்கள்; நின்றுகொள்ள விரும்பினால் நின்றுவிடுகிறார்கள். மரண தண்டனை ஏதும் விதிக்காமல் மன்னர்கள் ஆளுகிறார்கள்; சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ அபராதம் விதிக்கிறார்கள். ராஜ துரோகத்துக்குக்கூட வலதுகரத்தை மட்டுமே வெட்டிவிடுகிறார்கள். மன்னரின் பாதுகாவலர்களுக்கு நிர்ணயமான சம்பளம் உண்டு. நாடு முழுவதும் மக்கள் எந்த உயிர்ப் பிராணிகளையும் கொல்வதில்லை; மது அருந்துவதில்லை; வெங்காயத்தையோ வெள்ளைப்பூண்டையோ உண்பதில்லை; சண்டாளர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. சண்டாளர்கள் ‘தீயவர்களாகக்’ கருதப்படுகிறார்கள்; மற்றவர்களிடமிருந்து அவர்கள் தனித்து வசிக்கிறார்கள். அவர்கள் ஒரு நகரத்துக்குள்ளோ, சந்தைக்குள்ளோ நுழையும்போது தங்களைத் தனியே பிரித்துக் காட்டுவதற்காக மர ஊதுகுழலால் ஒலி எழுப்புகிறார்கள்; இந்த ஒலியின் மூலம் அவர்கள் அவர்கள் வருவதைத் தெரிந்துகொண்டு மக்கள் விலகிச் செல்லுகிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கிறார்கள். இந்த நாட்டில் மக்கள் பன்றிகளையோ, கோழிகளையோ வளர்ப்பதில்லை; கால்நடை வாணிகம் செய்வதில்லை; அவர்களது அங்காடி இடங்களில் இறைச்சிக் கடைகளையோ, மதுபானக் கடைகளையோ காணமுடியாது. சிப்பிகளையே அவர்கள் பண்டமாற்று நாணயமாகப் பயன்படுத்துகிறார்கள். சண்டாளர்கள் வேட்டையாடுவதிலும் இறைச்சி விற்பதிலும் மட்டுமே ஈடுபடுகிறார்கள்."

பாஹியான் காலத்தில் இந்தியாவில் தீண்டாமை நிலவியது என்பதற்கு இந்த விவரங்களைச் சான்றாக எடுத்துக் கொள்ள முடியுமா? சண்டாளர்கள் நடத்தப்பட்டவிதம் குறித்த அவரது வருணனையின் சில பகுதிகள் தீண்டாமையை குறிக்கின்றன என்ற முடிவுக்கு வருவதற்கு இட்டுச் செல்லக்கூடியதாக இருப்பதாகத் தோன்றக்கூடும்.

ஆனால் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதில் ஒரு சிரமம் இருக்கிறது. சண்டாளர்கள் சம்பந்தப்பட்ட சில உண்மைகள் காரணமாகவே இந்த சிரமம் எழுகிறது. இந்த நாட்டில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு சண்டாளர்கள் விஷயத்தை ஒரு திட்டவட்டமான சான்றாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஏனென்றால் பார்ப்பனர்கள் எப்போதுமே சண்டாளர்களைத் தங்களது பரம்பரை பகைவர்களாகப் பாவித்து வந்திருக்கின்றனர்; அவர்கள் வெறுக்கத்தக்க நடத்தை உடையவர்கள் என்று அவர்கள்மீது பழிசுமத்தும் மனசார்புடையவர்களாக இருந்து வந்திருக்கின்றனர்; அவர்கள் மீது வசைமொழிகளைப் பொழிந்து வந்திருக்கின்றனர்; அவர்கள் மீது வேண்டுமென்றே விஷத்தை கக்கி வந்திருக்கின்றனர். எனவே, சண்டாளர்களுக்கு எதிராகக் கூறப்படுவதைப் பெருமளவுக்குத் தயக்கத்தோடுதான் நோக்க வேண்டும்.

இந்த வாதம் வெறும் யூகத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் நம்பகத்தன்மையைப் பற்றி ஐயப்படுபவர்கள் சண்டாளர்கள் நடத்தப்படும் விதம் பற்றிய வேறுபட்டதொரு வருணனையை பாணரின் காதம்பரியில் காணலாம். காதம்பரி கதை மிகவும் சிக்கலானது. அது குறித்து நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு சண்டாள யுவதி வளர்க்கும் வைசம்பாயணன் என்ற கிளி ஷூத்ரக மன்னனுக்குக் கூறும் கதைதான் இது என்பதை நாம் தெரிந்து கொண்டால் போதுமானது. காதம்பரியிலுள்ள பின்கண்ட பகுதிகள் நமது நோக்கத்துக்கு மிகவும் முக்கியமானவை. ஒரு சண்டாளர் குடியிருப்பு வட்டாரம் பற்றிய பாணரின் வருணனையோடு தொடங்குவது உசிதமானது. அது வருமாறு: (காதம்பரி (ரிட்டிங்கின் மொழிபெயர்ப்பு) பக்.204.)

“ஒரு காட்டுமிராண்டிக் குடியேற்றத்தை என் முன்னே பார்க்கிறேன்; தீய செயல்களின் சந்தைக்கூடமாக அது அமைந்துள்ளது. எல்லாப் பக்கங்களிலும் சிறுவர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்; வேட்டை நாய்களை அவிழ்த்துவிட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள்; வல்லூறுகளைப் பழக்கிக்கொண்டிருக்கிறார்கள்; பொறிவலைகளைச் சீர்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; ஆயுதங்களை ஏந்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்; அருவருப்பான அவர்களது உடைகளில் பார்க்கும்போது ஏதோ பேய்கள் போல் அவர்கள் காணப்படுகிறார்கள். அவர்களது குடியிருப்புகளின் நுழைவாயில்கள் அங்குமிங்குமாக உள்ளன; ஓங்கி வளர்ந்து அடர்ந்த மூங்கில் காடுகளுக்கிடையே அவர்களது இருப்பிடங்கள் மறைந்துபோயுள்ளன; மேல் எழுப்பிவரும் புகையைக் கொண்டுதான் அங்கு வீடுகள் இருப்பதையே தெரிந்து கொள்கிறோம். எல்லாப்புறங்களிலும் வேலி அடைப்புகள் மண்டையோடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன; சாலையிலுள்ள குப்பைக் குவியல்களில் எலும்புகள் நிறைந்துள்ளன; சேரிகளின் முற்றங்கள் இரத்தமயமாகவும், கொழுப்பும் இறைச்சித்துண்டுகள் மயமாகவும் காட்சியளிக்கின்றன. அங்கு வாழ்க்கை வேட்டையாடுவதாகவும், உணவு இறைச்சி உண்பதாகவும், எண்ணெய் கொழுப்பாகவும், ஆடைகள் முரட்டுப் பட்டாகவும், படுக்கைகள் விலங்கு தோலாகவும், வீட்டு வேலையாட்கள் நாய்களாகவும், சவாரி செய்யும் விலங்கு பசுக்களாகவும், ஆடவர்களின் தொழில் மதுவும் மங்கையாகவும், தெய்வங்களுக்கான நைவேத்தியம் இரத்தமாகவும், உயிர்ப்பலி கால்நடைகளாகவும் உள்ளன. சுருங்கச் சொன்னால் நரகத்தை இங்கு காணலாம்.”

     இத்தகைய ஒரு குடியிருப்பிலிருந்துதான் சண்டாளர் இனத்தை சேர்ந்த மேலேகூறிய யுவதி தனது கிளியுடன் மன்னன் ஷூத்ரகனது அரண்மனைக்குச் செல்லுகிறாள். மன்னர் ஷூத்ரகன் அரசவையில் தனது தளபதிகளுடன் அமர்ந்திருக்கிறார். அப்போது ஒரு பணிப்பெண் வந்து இவ்வாறு அறிவிக்கிறாள்: (காதம்பரி (ரிட்டிங்கின் மொழிபெயர்ப்பு) பக்கம்.6)

“அரசே தென்புலத்திலிருந்து வந்துள்ள ஒரு சண்டாளக் கன்னி பெண் வாயிலில் வந்து நிற்கிறாள். வானுலகிற்குச் சென்று, சீற்றமுற்ற இந்திரனது ஆணையால் அங்கிருந்து விழுந்த திரிசங்கு ராஜாவின் இனத்தில் வழிவந்த பேரழகி அவள், ஒரு கூண்டில் கிளியுடன் அவள் வந்திருக்கிறாள். தங்களிடம் பின்வருமாறு கூறும்படி அவள் சொல்லியனுப்பினாள்: “பேரரசரே, எல்லையற்ற மாகடல் போன்றவர் தாங்கள், இந்த உலகம் முழுவதன் மகத்தான செல்வங்களைப் பெறத் தகுதிபெற்றவர் தாங்கள் ஒருவரே, அத்தகைய செல்வங்களை வாரிவழங்கக்கூடிய இந்த அதியற்புதப் பறவையைத் தங்களது திருப்பாதங்களில் சமர்ப்பிக்க வந்துள்ளேன்.” மாட்சிமை தாங்கிய மன்னர் பிரானே, அவளின் இந்தச்செய்தி கேட்டு தாங்கள் முடிவு செய்யவேண்டும்!” இவ்வாறு அந்த பணிப்பெண் தன் பேச்சை முடித்தாள். இது மன்னரின் ஆர்வத்தை வெகுவாகக் கிளர்த்திவிட்டது. சுற்றிலுமுள்ள பரிவாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, ‘ஏன் கூடாது’ அவளை இங்கு அழைத்து வா’ என்று கூறி தனது ஒப்புதலை அளிக்கிறார். பணிப்பெண் உடனே அரசனின் ஆணையின்பேரில் அவளை உள்ளே அனுமதிக்கிறாள். யுவதியும் அரசவைக்குள் பிரவேசிக்கிறாள்.

     அரசரும் அவருடைய பரிவாரத்தினரும் முதலில் அவளைக் கவனிக்கவில்லை. அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அவள் மூங்கிற்தடியால் தரையில் அடிக்கிறாள். மன்னர் விழிப்படைகிறார். இதன்பின்னர் பாணர் அவளுடைய எழில்மிகு தோற்றத்தை சுவைபட வருணிக்க ஆரம்பிக்கிறார்: (காதம்பரி நூல், பக்கங்கள் 8-10)

“பின்னர் மன்னர் தமது பரிவாரத்தினரைப் பார்த்து ‘அதோ பாருங்கள்’ என்றுகூறி, அந்தச் சண்டாள மங்கையை வைத்த கண் எடுக்காமல் ஊன்றிக் கூர்ந்து நோக்கினார். அவளுக்கு முன்னால் ஒரு மனிதன் சென்றான். வயதானதன் காரணமாக அவனது தலைமுடி நரைத்துப்போயிருந்தது. அவனது கண்கள் சிவப்பு ரோஜாவின் வண்ணத்தைப் பெற்றிருந்தன. இளமை அவனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு சென்றிருந்தாலும், இடையறாத சலியாத, சளையாத உழைப்பால் அவனது மூட்டெலும்புகள் உறுதியும் வலுவும் அடைந்திருந்தன. அவனது உருவம் மதங்கனுடையதாக இருந்தாலும் வெறுக்கும்படியானதாக இல்லை. அரசவைக்கு வருவதற்குப் பொருத்தமான வெண்ணிற ஆடை அவன் அணிந்திருந்தான். அவளுக்கு பின்னால் ஒரு சண்டாளச் சிறுவன் வந்தான். அவனுடைய மயிர்க்கற்றைகள் இருபுஜங்களிலும் விழுந்து புரண்டுக்கொண்டிருந்தன. அவனது கையில் ஒரு கூண்டுக்கிளி இருந்தது. அதன் கம்பிகள் பொன்னால் உருவாக்கப்பட்டிருந்தபோதிலும் கிளியின் இறகுகள் உமிழும் ஒளிக்கதிர்கள் பட்டு அவை மரகதக்கற்கள் போல் பிரகாசித்தன. அவளுடைய கருநிற சாயலேகூட அரக்கர்கள் அபகரித்துக்கொண்ட அமிழ்தத்தை மீட்பதற்கு சாமர்த்தியமாக பெண்வேடம் பூண்ட கார்மேக வண்ணன் கிருஷ்ணனை அப்படியே உரித்துவைத்தாற் போலிருந்தது. நீலமணிக்கல் பதுமை தன்னந்தனியே நடந்துவருவது போன்று அவள் காட்சியளித்தாள்; அவள் அணிந்திருந்த நீலநிற மேலங்கி கணுக்காலைத் தொட்டுக் கொண்டிருந்தது; அவளது செம்பட்டு முகத்திரை அந்தி நேர கதிரவன் ஒளி நீலத் தாமரை மீது ஒளிர்வதுபோல் தவழ்ந்து கொண்டிருந்தது. ஒரு காதிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த காதணி அவளது கன்னக்குழியைப் பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்தது; உதயச் சந்திரனின் தண்ணொளிகளால் உட்பதித்து ஒப்பனை செய்யப்பட்ட இரவின் முகம் போல் அது காட்சியளித்தது; அவளது நெற்றியில் பழுப்பு மஞ்சள் நிறத் திலகம் மிளிர்ந்து கொண்டிருந்தது; அது மூன்றாவது கண்போல் மின்னியது; சிவனின் உடைபாணியை அனுசரித்து, மலை உடை அணிந்த பார்வதி போல் அவள் தோன்றினாள்.

நாராயணனது மேனியின் நீலவண்ணக்கதிர்கள் அவளது மார்பகத்தின் மீது தவழ்ந்த தளர்த்தியான மேலங்கி மீது மின்னிட அவள் ஸ்ரீயைப் போல் தோன்றினாள்; கடுஞ்சினம் கொண்ட சிவனது நெற்றிக்கண்ணால் மன்மதன் சுட்டெரிக்கப்பட்டபோது எழுந்தபுகையால் நிறம்மாறிய ரதியைப்போல் அவள் தோற்றமளித்தால்; மூர்க்க வெறிகொண்ட பலராமனின் உழுமுனையோடு சேர்த்து இழுத்துச் செல்லப்பட்டு விடுவோமோ என்று பயந்து பாய்ந்தோடும் யமுனையைப் போல் அவள் தென்பட்டாள்; வருணிக்க வொண்ணா உக்கிரத்துடன் மகிசாசுரனை மிதித்துத் துவைத்தபோது அவனது இரத்தத்தால் துர்க்கையின் பாதங்கள் சென்னிறமடைந்ததுபோல், பெரிதும் அலங்காரம் செய்யப்பட்ட வார் இழை அழுத்த அவளது தாமரைமலர் பாதங்கள் அரும்பும் தளிர்கள்போல் காட்சியளித்தன.

அவளது நகங்கள் அவளுடைய இளஞ்சிவப்பு விரல்களின் ஒளிவண்ணத்தில் செந்நிறமாகப் பிரகாசித்தன, பளிங்குக்கல் பரவியதளம் அவளது பூப்போன்ற பாதங்களை நோகச் செய்தது போலும், எனவே இளந்தளிர்களை தரையின்மீது வைப்பது போன்று மெதுவாக அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்து வந்தாள்.

அவளது கால் கொலுசுகளின் ஒளிக்கதிர்கள் அனற்கொழுந்து நிறத்தில் எழுந்து அவளைச்சுற்றி வளைத்துக் கொண்டதுபோல் தோன்றிற்று; அக்னியே அவளது நிரதிசய அழகில் மயங்கி, அவளது வம்சத்தைத் தூய்மைப்படுத்தி படைப்புக் கடவுளைப் பழிப்பதுபோல் இது இருந்தது.

அவளது ஒட்டியாணம் அன்பெனும் யானையின் நெற்றியில் பதிக்கப்பட்ட நட்சத்திரங்கள்போல் காட்சியளித்தன; அவளது கழுத்தாரம் பிரகாசமிக்க பெரியபெரிய முத்துக்கள் கோத்த முத்து வடமாக இருந்தது; இப்போதுதான் யமுனை சங்கமமான கங்கையின் நீரோட்டம்போல் அது தென்பட்டது.

இலையுதிர்காலம்போல் அவள் தனது தாமரைக்கண்களைத் திறந்தாள்; மழைக்காலம்போல் அவள் அடர்த்தியாக கூந்தலைக் கொண்டை போட்டிருந்தாள்; மலாயா குன்றுகளைப்போல் அவளிடம் சந்தனமணம் கமிழ்ந்தது; இரவி மண்டலம்போல் விண்மீன்கள் போன்று ஒளிரும் இரத்தினக்கற்களால் தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்தாள்; ஸ்ரீயைப் போல் கையில் தாமரையைப் பிடித்திருக்கும் அழகு அவளிடம் மிளிர்ந்தது; மூர்ச்சையைப்போல் அவளது வனப்பு உள்ளதை வசீகரிப்பதாக இருந்தது; கானகத்தைப்போல் அவளிடம் உயித்துடிப்புமிக்க அழகு கொஞ்சியது; ஒரு தேவதையின் குழந்தையைப்போல் அவள்மீது எந்த இனமும் உரிமை கொண்டாடவில்லை; நித்திரையைப் போல் அவள் கண்களுக்கு எழில் கூட்டினாள். கானகத்திலுள்ள தாமரைக்குளத்தை யானைகள் கலங்குவதுபோல் அவளது மதங்கா பிறப்பு அவளை ஒளி மங்க வைத்தது; ஆவியைப் போல் அவளை யாரும் தொடமுடியாது; எழுவதைப்போல் அவள் கண்களை மட்டுமே மகிழ்வித்தாள்; வசந்தகால மலர்கள் எத்தனை எத்தனையோ இருந்தும் அவளுக்கு ஜாதிமலர் கிடைக்கவில்லை; மன்மதனது வில்லின் நாண் போன்ற அவளது குறுகிய இடையை ஒரு கைப்பிடிக்குள் அடக்கிவிடலாம்; சுருள் சுருளான கூந்தலுடன் அலக்காவின் யட்சமன்னனது லட்சுமிபோல் இருந்தாள். அவள் வாழ்வின் கட்டிளம் பருவத்தை மலர்ச்சிப் பருவத்தை எய்தி ஈடுஇணையற்ற அழகியாகத் திகழ்ந்தாள். இந்த எழில் ஓவியத்தைக் கண்டு, மன்னன் திகைத்துப் போனான். அப்போது அவன் மனத்தில் பின்கண்டவாறு எண்ணங்கள் அலைமோதின: ‘பிரஜாபதி இந்த அழகியை தவறான இடத்தில் படைத்துவிட்டார்! இவளுக்கு உரிய துணைவன் கிடைக்காத ஓர் இடத்தில் இவளை ஏன் படைக்கவேண்டும்? இது மாசுமருவற்ற அழகையே பழிப்பதாகும். அவள் இந்த நிலவுலக லட்சுமிபோல் பேரெழில்மிக்க வடிவத்தைப் பெற்றிருந்தாலும் அவளது இழிவான பிறப்பு தெய்வங்களுக்கு ஒரு நிரந்தரமான அவப்பேறாகும். இவ்வாறு மன்னன் தன் மனத்தில் எண்ணிக்கொண்டிருந்தபோது, காதுவரை மலர்மாலை சூடியிருந்த அந்த அழகி தனது வயதுக்குமீறிய தன்னம்பிக்கையுடன் மன்னருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தினாள். இவ்வாறு வணக்கம் தெரிவித்துவிட்டு ஒரு சில அடிகள் முன்னால் சென்றபோது, அவளுடன் வந்திருந்தவன் கூண்டுக்குள் இருந்த கிளியை வெளியே எடுத்து அதை அரசனிடம் காட்டிப் பின்வருமாறு கூறினான்: “மாமன்னரே, இந்தக் கிளியின் பெயர் வைசம்பாயணன். அனைத்து சாஸ்திரங்களின் பொருளும் இதற்கு தெரியும். அரசுக் கொள்கையைச் செயல்படுத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்தது; கதைகள், வரலாறு, புராணங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றது; பாட்டுகளிலும் வாத்திய இசையிலும் பரிச்சயமுள்ளது; பாடுவதில் தனித்திறமை வாய்ந்தது; நேர்த்தியான, நேர்நிகரற்ற வீரகாவியங்களையும், காதற் கதைகளையும் நாடகங்களையும் கவிதைகளையும் இன்ன பிறவற்றையும் தானே இயற்றவல்லது; வீணை, புல்லாங்குழல், மத்தளம் முதலியவற்றை வாசிப்பதில் நிகரற்றது. நாட்டியத்தின் பல்வேறு அசைவுகள் அதற்கு அத்துபடி; ஓவியத்தில் நுண்திறம் மிக்கது; விளையாட்டில் மிகவும் துணிகரமானது; காதலனுடனான சச்சரவில் காதலியைச் சமாதானபடுத்துவதில் கைதேர்ந்தது; யானைகள், குதிரைகள், ஆடவர்கள், பெண்டிர்கள் இவர்களின் இயல்புகளை நன்கு அறிந்தது. அது இந்த உலகம் முழுவதன் இரத்தினம்; முத்துகள் சமுத்திரத்திற்குச் சொந்தமாக இருப்பதுபோல, இந்த உலக செல்வங்கள் எல்லாம் உங்களுக்குச் சொந்தம் என்ற எண்ணத்தில் இந்த அபூர்வமான கிளியை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்க உங்கள் மகள் போன்ற இவள் வந்திருக்கிறாள். ஓ வேந்தே! இதனை உங்களுடையதாக ஏற்றுக் கொள்ளுங்கள்.”

     சண்டாளர் குலத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணைப் பற்றிய வருணனையைப் படிக்கும்போது பல கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, பாஹியான் தெரிவித்த கருத்துகளிலிருந்து இது எந்த அளவுக்கு வேறுபடுகிறது? இரண்டாவதாக, பாணர் வத்ஸ்யாயன பார்ப்பனர். இந்த வத்ஸ்யாயன பார்ப்பனர் சண்டாளர்களின் குடியிருப்புகள் பற்றி மிகமோசமாக, கேவலமாக வருணித்தபிறகு, அதே சண்டாளர் இனத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை மனசாட்சி உறுத்தல் அணுவளவும் இன்றி, சொல் நயத்தோடு, கருத்து வளத்தோடு மிக அற்புதமான முறையில் வருணித்திருக்கிறார். இந்த வருணனை தீண்டாமையுடன் சம்பந்தப்பட்ட இகழ்ச்சி, ஏளனம், வெறுப்பு, அருவருப்பு, அவமதிப்பு, புறக்கணிப்பு போன்ற உணர்வுகளுக்கு இசைந்ததுதானா? சண்டாளர்கள் தீண்டப்படாதவர்கள் என்றால் தீண்டாதோர் இனத்தைச் சேர்ந்த ஓர் யுவதி அரண்மனையில் எவ்விதம் பிரவேசித்திருக்க முடியும்? பாணர் போன்றவர்கள் தீண்டாதோரை எவ்வாறு வானளாவப் புகழ்ந்திருக்க முடியும்? (காதம்பரி நூல், தொகுதி 1, பக்.142)

     பாணர் காலத்து சண்டாளர் இழிந்தவர்களாக இல்லாமல் அவர்களிடையே ஆளும் குடும்பத்தினரும் இருந்திருக்கின்றனர். பாணர் தமது நாடகத்தை சுமார் கி.பி.600ல் எழுதியிருக்கிறார். கி.பி.600 ஆம் ஆண்டுவாக்கில் சண்டாளர்கள் தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை. எனவே, பாஹியான் விவரித்துள்ள நிலைமைகள் தீண்டாமையை நெருங்கியதாக இருக்கலாமே அன்றி, உண்மையிலேயே தீண்டாமை நிலவியதற்கு சான்றாக அவற்றை எடுத்துக்கொள்ளமுடியாது. பார்ப்பனர்கள் அதிதீவிரமாகக் கடைபிடித்து வந்த தூய்மையின்மை எதிர்ப்பாக இது இருக்கலாம்; ஏனென்றால் புரோகிதத்துவத்தில் அளவுக்கு மீறிப் பங்கெடுத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்கள் அவர்கள். பாஹியான் இந்தியாவுக்கு வந்த போது குப்தமன்னர்களின் ஆட்சி நடைபெற்றுவந்தது என்பதை மனத்தில் கொண்டால் இந்தக் கருத்து சரியானதாகத் தோன்றுவதைப் பார்க்கலாம். குப்தமன்னர்கள் பார்ப்பனியத்தின் புரவலர்களாக இருந்து வந்தனர். பார்ப்பனியம் பல வெற்றிகளும் புத்துயிரும் பெற்றுவந்த காலம் அது. பாஹியானது வருணனை தீண்டாமையைக் குறிக்கவில்லை. மாறாக சில வகுப்பினரை குறிப்பாக சண்டாளர்களை சடங்குரீதியில் தூய்மையற்றவர்களாகக் கருதும் அதீதப்போக்கை பார்ப்பனர்கள் கடைப்பிடித்து வந்ததையே அது குறிப்பதாக இருப்பது முற்றிலும் சாத்தியமே.

இந்தியாவுக்கு வருகை தந்த இரண்டாவது சீன யாத்திரிகர் யுவான் சுவாங் கி.பி.629ல் இந்தியாவுக்கு வந்தார். அவர் இந்தியாவில் 16 ஆண்டுகள் தங்கி நாட்டின் மூலைமுடுக்குகளை எல்லாம் சுற்றிப் பார்த்தார். இந்திய மக்களின் பழக்கவழக்கங்களை மிக ஆழமாக ஆராய்ந்து அவர் மிக துல்லியமான தகவல்களைச் சேகரித்திருக்கிறார். இந்திய நகரங்கள் மற்றும் கட்டிடங்களின் பொது இயல்புகளைப் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்: (வால்டர்ஸ், யுவான் சுவாங், தொகுதி I. பக். 147)

“அவர்கள் வசிக்கும் ஊர்களையும் நகரங்களையும் பொறுத்தவரையில், நகரங்களின் நாற்கோணமான சுவர்கள் பரந்தவைதிருக்கின்றன. சத்திரங்களும் சாவடிகளும் சாலையின் இரு மருங்கிலும் உள்ளன. கசாப்புக் கடைக்காரர்கள், மீனவர்கள், கூத்தாடிகள், மரணதண்டனைகளை நிறைவேற்றுபவர்கள், தோட்டிகள் போன்றோரின் உறைவிடங்கள் ஒரு குறிப்பிட்ட அடையாளத்துடன் தென்படுகின்றன. அவர்கள் நகருக்கு வெளியே வசிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கிராமங்களுக்குள் செல்லும்போது இடதுபுறமாக அஞ்சியஞ்சிப் பதுங்கிச் செல்லுகிறார்கள்.”

மேலே கண்ட விவரங்கள் மிகச் சுருக்கமாக இருப்பதால் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. எனினும் ஒரு விஷயம் இங்கு கவனத்துக்குரியது. பாஹியானது வருணனை சண்டாளர்களை மட்டுமே குறிப்பிடுகிறது. ஆனால் யுவான் சுவாங்கின் வருணனையோ சண்டாளர்களைத் தவிர்த்த இதர சில வகுப்பினர்களைப் பற்றிக் கூறுகிறது. இது மிக முக்கியமான விஷயமாகும். இந்த வருணனை சண்டாளர்களைத் தவிர்த்த இதர வகுப்பினர்களைக் குறிப்பிடுவதால் இதனை ஏற்பதற்கு எதிராக மேலே கண்டவாறு வாதம் செய்யமுடியாது. எனவே, யுவான் சுவாங் இந்தியாவுக்கு வந்த காலத்தில்தான் இந்தியாவில் தீண்டாமை பிறக்க ஆரம்பித்திருக்கிறது எனக் கூறலாம்.

மேலே கண்ட அடிப்படையில் பார்க்கும்போது, கி.பி.200ல் இந்தியாவில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படவில்லை. கி.பி.600 ஆம் ஆண்டு வாக்கில்தான் அது தோன்றிற்று என்ற முடிவுக்கு நாம் வரமுடியும்.

இவைதான் தீண்டாமையின் தோற்றத்தை நிர்ணயிப்பதற்கான அதிகபட்ச, குறைந்தபட்சக் காலக்கெடுவாகும். இதனடிப்படையில் தீண்டாமை பிறந்த காலத்தைத் தோராயமாக நாம் நிர்ணயிக்கமுடியுமா? தீண்டாமைக்கு மூலக்காரணமாகக் கூறப்படும் மாட்டிறைச்சி உண்பது ஆரம்பமாக எடுத்துக்கொண்டால் இவ்வாறு நாம் நிர்ணயிக்கமுடியும். மாட்டிறைச்சி உண்பது தடைசெய்யப்பட்டதை ஒரு முன்னோடி நடவடிக்கையாக எடுத்துக்கொண்டால் தீண்டாமை தோன்றிய காலம் பசுவதையும் மாட்டிறைச்சி உண்பதும் தடை செய்யப்பட்டதுடன் மிக நெருங்கிய சம்பந்தமுடையது என்பது தெள்ளத்தெளிவாகிறது. எப்போது பசுவதை ஒரு குற்றமாகவும், மாட்டிறைச்சி உண்பது ஒரு பாவமாகவும் ஆக்கப்பட்டது என்ற கேள்விக்கு விடையளிக்க முடியுமானால் தீண்டாமை தோன்றிய காலத்தை ஏறத்தாழ நிர்ணயிக்க முடியும்.

பசுவதை எப்போது ஒரு குற்றமாக்கப்பட்டது?

மாட்டிறைச்சி உண்பதை மனு தடைசெய்யவில்லை என்பதையும், பசுவதையை அவர் ஒரு பாபமாக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம். கி.பி.4 ஆவது நூற்றாண்டில் பசுவதை குப்த மன்னர்களால் ஒரு தலையாயக் குற்றமாக்கப்பட்டது என்று டாக்டர் பி.ஆர். பண்டர்கர் நிலைநாட்டியிருக்கிறார்.

எனவே, கி.பி. சுமார் 400 ஆவது ஆண்டுவாக்கில் தீண்டாமை தோன்றியிருக்கவேண்டும் என்று ஓரளவு நம்பிக்கையோடு நாம் கூறமுடியும். மேலாதிக்கம் பெறுவதற்குப் புத்தமதத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்திலிருந்தே தீண்டாமை தோன்றிற்று. இந்தியாவின் வரலாற்றுப் போக்கையே முற்றிலுமாக மாற்றிய இந்த நிகழ்வுபோக்கை ஆய்வுசெய்யும் பணியை இந்திய வரலாற்று மாணவர்கள் உதாசீனம் செய்தது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 16)

Pin It