(1942 ஆகஸ்ட் 7ம் தேதி புதுடில்லியில் நடைபெற்ற கூட்டுத் தொழிலாளர் மாநாட்டில், இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய உரையின் முழு வாசகம் கீழே தரப்படுகிறது.)
(1.இந்தியத் தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1942)
இந்த முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டிற்கு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் அழைப்பைத் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டதற்கும் இன்று காலையில் இங்கு வந்து கலந்து கொள்வதில் தாங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்திற்கும் நானும் இந்திய அரசும் எங்களின் நன்றி உணர்வை போதுமான அளவு தெரிவிப்பது சிரமம். தாங்கள் கொண்டுள்ள இந்த இணக்கத்தைப்போல் இந்த மாநாட்டை வெற்றிகரமாக ஆக்குவதிலும் அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதிலும் அதே மாநிலங்களின் மனமார்ந்த ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
உங்களை அதிகம் காக்கவைக்க நான் விரும்பவில்லை; கடுமையான நெருக்கடிநிலை நிலவும் நாட்கள் இவை. ஒவ்வொரு வரும் அவர்களின் பணியிடத்திற்கு எவ்வளவு விரைவில் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவில் செல்ல வேண்டும். எனவே, இந்த சந்தர்ப்பத்தில் எந்த நீண்ட உரையையும் நான் ஆற்றப் போவதில்லை. இந்த மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி உங்களின் கவனத்திற்குக் கொண்டு வரவும் அதன் நோக்கங்களையும் லட்சியங்களையும் எடுத்துக் கூறவும் சில முக்கிய விஷயங்களை மட்டும் குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்வேன்.
இரு சிறப்பு அம்சங்கள்
இந்திய அரசாங்கத்தொழிலாளர் சார்பில் இதுவரை மூன்று தொழிலாளர் மாநாடுகள் நடந்துள்ளன என்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே. முதலாவது மாநாடு 1940 ஜனவரி 22, 23 தேதிகளிலும் இரண்டாவது மாநாடு 1941 ஜனவரி 27, 28 தேதிகளிலும் மூன்றாவது மாநாடு 1942 ஜனவரி 30, 31 தேதிகளிலும் நடைபெற்றன. எனவே அந்த வரிசையில் இந்த மாநாடு நான்காவதாகும். முந்தியவற்றிலிருந்து இந்த மாநாட்டை வேறுபடுத்திக் காட்டும் விசேட அம்சங்களை சில வார்த்தைகளில் கூறினால், இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தைத் தாங்கள் புரிந்து கொள்வீர்கள். முதலாவதாக, முந்தின மாநாடுகள் முறையாக குறிப்பிட்ட காலங்களில் நடந்த போதிலும், நிரந்தரத்தன்மை என்பது இந்த மாநாடுகளது திட்டத்தின் பகுதியாக இருக்கவில்லை. ஒருசீராக இயங்குவதில் இடைவெளி இருந்திருக்கலாம். எந்தவிதிமுறை அல்லது நடைமுறை அல்லது புரிவுணர்வுக்கோ குந்தகம் இல்லாமல் அந்த கருத்தே கைவிடப்பட்டிருக்கலாம். இந்த மாநாடு அதன் திட்டத்தின் ஒரு பகுதியாக நிரந்தரத் தன்மையைக் கொண்டுள்ளது. நாம் ஏற்படுத்தவிருக்கும் ஸ்தாபன அமைப்பு ஒரு நிரந்தரக்குழுவின் நிரந்தரத் தன்மையையும், முறையாக இயங்குவதையும் பெற்றிருக்கும். நாம் கோரும் போது இயங்கத் தயாராக இருக்கும்.
இந்த மாநாட்டின் இந்த அம்சத்தை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது அம்சத்தைத் தங்களது சிறப்பு கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் யார் யார் என்பது பற்றியது அது. முந்திய மாநாடுகளில் அரசுப் பிரதிநிதிகள் மட்டுமே – மத்திய மாநில அரசுகள், சில சமஸ்தான அரசாங்கங்களின் பிரதிநிதிகள் மட்டுமே – கலந்து கொண்டனர். மிக முக்கியமானவர்கள், அவசியமானவர்கள் – அதாவது முதலாளிகளும் அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களும் இந்த மாநாடுகளில் பிரதிநிதித்துவம் பெறவில்லை. முதலாளிகளையும் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்தாபனங்களோடு தொடர்பு ஏற்படுத்தவும். அவற்றைக் கலந்து ஆலோசனை பெறவும் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதில் ஐயமில்லை. உதாரணமாக எனது மதிப்பு வாய்ந்த சகாவான மாண்புமிகு. சர்.ஏ.ராமசாமிமுதலியார், அவர் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக இருந்தபோது, கல்கத்தாவுக்கு வருகை தந்தார். அச்சமயம் தொழிலாளர், முதலாளிகள் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அதேபோல், இந்த மாநாடு கூடுவதற்கு மூலகாரமாக இருந்தவரும், எனது மதிப்பிற்குரிய சகாவுமான மாண்புமிகு சர் பிரேஷ்கான் நூன், அவர் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக இருந்தபோது, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசனை பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்தினார். எனினும் தொழிலாளர் மாநாடுகள் வரலாற்றில் முதல் தடவையாக இந்த கூட்டு மாநாட்டின் கட்டுக்கோப்பிற்குள் முதலாளிகளதும், தொழிலாளர்களதும் பிரதிநிதிகள் நேருக்குநேராக சந்திக்கும்படிச் செய்யப்பட்டிருக்கின்றனர்.
எனது கருத்தில், மாநாட்டின் இந்த அம்சம் சம்பந்தப்பட்ட அனைவரின் குறிப்பாகத் தொழிலாளர் பிரதிநிதிகளின் மிக நல்ல வரவேற்பினைப் பெற வேண்டும். இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பற்றி தனது அறிக்கையில் விட்லி கமிஷன் இந்தியாவில் தொழிற்சாலைகள் கவுன்சில் நிரந்தரத் தன்மை கொண்ட அமைப்பாக நிறுவப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்ததிலிருந்து இந்த யோசனையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கிளர்ச்சி செய்து வந்துள்ளனர். பல்வேறு காரணங்களால், தொழிற்சாலைகள் கவுன்சில் அமைக்கும் குறிக்கோளை நிறைவேற்றுவது சாத்தியமில்லாது போயிற்று. இந்த யோசனையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யும்படி இந்த மாநாட்டைக் கேட்டுக்கொள்வதன் மூலம் அந்தக் குறிக்கோளை எய்தும் பாதையை இம்மாநாடு வகுக்கும் என்பது பற்றி எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அந்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையில் பெரிய அளவு முன்னேற்றத்தை இது குறிக்கிறது என்று நான் சொன்னால் அது மிகைப்படுத்தப்படுவதாக நீங்கள் கருத மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
தொழிலாளர் சம்பந்தமான சட்டங்கள்
இந்த மாநாட்டின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பற்றி ஓரிரு வார்த்தைகள் இப்பொழுது சொல்லப் போகிறேன். முந்தின மாநாடுகளில் கலந்துகொண்ட உங்களில் சிலர் இந்த மாநாடுகள் நடைபெறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, தொழிலாளர்கள் சம்பந்தமான சட்டங்களில் காணப்படும் வேறுபாட்டுத் தன்மையிலிருந்து எழும் அபாயத்தைத் தெரிவிக்க வேண்டுமென்ற மேலான விருப்பம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
தொழிலாளர்கள் சட்டங்களை இயற்றுவதற்கு மாகாணங்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத்தின் விளைவாகவே நாட்டிற்கு இந்த அச்சுறுத்தல் எற்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் ஓர் ஒன்றிணைந்த அரசாங்கமாக இருக்கும் வரை தொழிலாளர் சட்டங்கள் ஒரே தன்மை கொண்டவையாக இருப்பதில் சிரமம் ஏதும் இல்லை. ஆனால் கூட்டாட்சி அரசியல் சட்டத்தை ஏற்படுத்திய இந்திய சர்க்காரின் 1935 ஆம் ஆண்டுச் சட்டம் தொழிலாளர் சம்பந்தமான சட்டங்களை மத்திய அரசும் மாகாண சர்க்கார்களும் இயற்றலாம் என்று நிர்ணயித்ததால் அது மிக மோசமான நிலைமையை ஏற்படுத்தியது. ஒரு மத்திய சட்டம் இல்லையென்றால், ஒவ்வொரு மாகாணமும் தனக்கு விருப்பமான ஆனால் அடுத்துள்ள மாகாணங்களின் சட்டங்களிலிருந்து மாறுபட்ட சட்டத்தை இயற்றக்கூடும் என்று அஞ்சப்பட்டது. பொதுவான, தேசிய முக்கியம்வாய்ந்த நோக்கத்திற்குப் பதிலாக, மாகாண சௌகரியங்கள் ஆதிக்கம் செலுத்துவதை இது ஊக்குவிக்கும் என்றும் கருதப்பட்டது.
மூன்று முக்கிய நோக்கங்கள்
இந்தப் போக்கை மாற்றுவதற்கான மிக அவசியமான திருத்தத்தை அமைக்கவும், தொழிலாளர் சம்பந்தப்பட்ட சட்டங்கள் ஒரே தன்மை கொண்டவையாக இருக்க வேண்டுமென்ற ஆரோக்கியமான கோட்பாட்டிற்கு மரியாதையளிக்கும் போக்கை வளர்க்கவும் இம்மாநாடுகளில் கோரப்பட்டது. இந்த மாநாட்டைக் கூட்டுவதில் தொழிலாளர் சட்டங்கள் ஒரேதன்மை கொண்டவையாக இருக்க வேண்டுமென்ற முந்திய மாநாடுகளின் லட்சியத்தைக் கைவிட நான் கோரப்போவதில்லை. இந்த மாநாடு பரிசீலிக்கும் நோக்கங்களில் ஒன்றாக அது இருக்கும். இத்தோடு மேலும் இரு நோக்கங்களைச் சேர்க்க நான் விரும்புகிறேன். அதாவது, தொழிற்சாலைகளில் (முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்குமிடையே ஏற்படும்) சச்சரவுகளைத் தீர்த்துவைக்க ஒரு வழிமுறையை அமைத்துக் கொடுப்பதும், தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஏற்படும் அகில இந்திய முக்கியம் வாய்ந்த எல்லா விஷயங்கள் பற்றி விவாதிப்பதும் அந்த இரு நோக்கங்கள் ஆகும். ஆக, மாநாட்டின் முன் மூன்று முக்கிய நோக்கங்களும் குறிக்கோள்களும் இருக்கும்:
- தொழிலாளர் சட்டங்களில் ஒன்றுபட்ட தன்மையை வளர்ப்பது
- தொழிற்சாலைத் தகராறுகளைத் தீர்க்க வழிமுறைகளை வகுப்பது
- முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் பற்றி விவாதிப்பது.
முதல் விஷயத்தைப் பொறுத்தவரை, நம்முடைய குறிக்கோள்களில் அதை ஏன் உட்படுத்தியிருக்கிறோம் என்பதை சொல்ல வேண்டியது அவசியமில்லை. பலநிர்வாக, மாகாண எல்லைகளை கொண்ட இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டிற்குத் தொழிலாளர் சட்டங்கள் ஒருமித்த தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான விஷயமாகவே எப்போதும் இருந்து வரும் என்பது தெளிவு. எனவே சென்ற காலத்தை போலவே வருங்காலத்திலும் அது கவனத்தைத் தொடர்ந்து ஈர்க்கும்.
தொழில் தகராறுகள்
தொழில்தகராறுகளைப் பொறுத்தவரை, யுத்தத்தின்போது தொழிலாளர்களும் முதலாளிகளும் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டனர். இக்கால கட்டத்தில் நடைபெற்றவேலை நிறுத்தங்களின் எண்ணிக்கை விரிவான அளவிலோ அல்லது கவலைப்படும் அளவிலோ இல்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் தொழிற்சாலைகளில் கிளர்ச்சி அதிகரிக்கும் போக்கு இருந்தது. இந்தியப் பாதுகாப்பு விதி 81 ஏயின் கீழ் தகராறுகளை மத்தியஸ்தத்திற்கு விடும் வழிமுறை வகுக்கப்பட்டது. சமீப மாதங்களில் இந்தப் போக்கு சற்றுக் குறைந்துள்ளது. இந்த வழிமுறை திறமையும் நம்பகமானதுமான ஏற்பாடு என்று நிரூபணமாகும் என்று நாம் நம்புகிறோம். தொழில் தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கு ஒரு வழிமுறையை ஏற்படுத்துவதை நாம் பிரேபிக்க போவது இந்த மாநாட்டின் நோக்கங்களில் ஒன்றாகும்.
நமது நோக்கங்கள், குறிக்கோள்களில் ஒன்றாக கடைசி விஷயமாக நாம் வகுத்திருப்பதில் நாம் பரந்த அளவிலான வார்த்தைகளை வேண்டுமென்றே உபயோகித்திருக்கிறோம். இதனால், தொழிலாளர், முதலாளிகள் சம்பந்தப்பட்ட எந்த முக்கியமான விஷயத்தையும் மாநாடு விவாதிப்பதைத் தவிர்க்கமுடியாதுபோகும். “அகில இந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள்” என்னும் சொற்றொடரைப் பரந்த அளவில் உபயோகிக்கும் அளவுக்கு எங்கள் மனதில் எண்ணம் இருந்ததை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். தொழிலாளர் நலன் பற்றிய எல்லா விஷயங்களையும் மற்றும் தொழிலாளர்களிடையே உற்சாகத்தை ஊட்டி வளர்ப்பதையும் இதில் உட்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இந்த நோக்கம் கடைசி விஷயமாக வைக்கப்பட்டிருந்தாலும் அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தததாகக் கருதப்பட வேண்டும் என்பதை நான் கூறத் தேவையில்லை. இதை மிகவும் அவசரமானதாக நாம் கருதுகிறோம். யுத்தத்தின் அவசியங்களால் எழுந்ததே இந்த அவசரம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான யுத்தம்
இப்போதைய யுத்தம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் யுத்தமாகும். தேவைகளை நிறைவேற்றுவது என்பது தொழிற்சாலைகளில் அமைதி நிலவுவதையே பொறுத்துள்ளது. தொழிற்சாலைகளில் அமைதியை ஏற்படுத்துவது இன்று நமக்குள்ள ஒரு அவசரமான பிரச்சினையாகும். தொழிற்சாலைகளில் அமைதி நிலவுவது இரு விஷயங்களைப் பொறுத்தது என்று நான் சொன்னால் அது தவறாக இருக்கமுடியாது. முதலாவதாக, தொழிற் தகராறுகளை விரைவாக தீர்த்து வைப்பதற்கான ஓர் அமைப்பு தயாராக இருப்பதைப் பொறுத்துள்ளது அது. இரண்டாவதாக, தொழில்துறையில் வேலைசெய்பவர்களிடையே பதற்றநிலையை ஏற்படுத்தக்கூடிய எல்லா நிலைமைகளையும் நேரம் தவறாது போக்குவதைப் பொறுத்துள்ளது. தொழிற்சாலைகளில் தகராறுகளுக்கு இட்டுச் செல்லாத சிறிய பிரச்சினைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால் அவை பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பெரிய பிரச்சினைகள். இவ்வாறு பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களில் பெரும்பான்மையானவை. சமூக நலனைப் பாதிக்கும் விஷயங்கள் எனலாம். இத்தகைய பிரச்சினைகளை அணுகுவதற்கு நம்மிடம் எந்த ஏற்பாடும் இல்லை. இதுபோன்ற விஷயங்களை அமைதியாகவும் திருப்திகரமாகவும் தீர்த்து வைப்பதற்கு சர்க்காருக்கு ஆலோசனை வழங்க ஒரு அமைப்பை உடனடியாக ஏற்படுத்துவது அவசியம் என்பதுதான் பிரதானமாக இந்த மாநாட்டைக் கூட்டியதற்கான காரணம்.
நம்முன் உள்ள பணி
இத்தகையது இந்த மாநாட்டின் முக்கியத்துவம். இத்தகையவையே அதன் நோக்கங்களும் குறிக்கோள்களும். இம்மாநாட்டின் முன் உள்ள கடமையைப் பொறுத்தவரை, நமது நிகழ்ச்சி நிரல் மிகச் சுருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதலாம். அதிக விஷயங்கள் அதில் இல்லை என்றும் நினைக்கலாம். இத்தகைய ஒரு மாநாட்டைப் பற்றிய திட்டத்தையும், அதனுடைய அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் நாம் ஒப்புக் கொள்கிறோமா என்ற அடிப்படை பிரச்சினை மீது ஒரு முடிவு எடுக்கும் வரை நாம் இப்பொழுது முன்வைத்துள்ள நிகழ்ச்சி நிரலை விட வேறு எதையும் உங்கள் முன் நாங்கள் வைத்திருக்க முடியாது. நிலைமை இதுவாக இருப்பதால் நான் இப்பொழுது செய்யக் கூடியது கீழ்க்கண்ட விஷயங்கள் பற்றி முடிவு எடுக்கும்படி உங்களுக்கு அறைகூவல் விடுப்பதுதான்:
- தொழிலாளர் மாநாட்டை குறைந்த வருடத்திற்கு ஒரு முறை கூடும். ஒரு நிரந்தர ஸ்தாபனமாக அமைத்தல்.
- இந்த மாநாட்டின் நிரந்தர ஆலோசனைக்குழுவை அமைத்தல். எப்பொழுதெல்லாம் அரசாங்கம் அழைக்கிறதோ அப்பொழுதெல்லாம், இந்த ஆலோசனைக்குழு அதன்முன் வைக்கப்படும் விஷயங்கள் பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்குதல்.
- இந்த அமைப்புகளை நிறுவுவதற்கான வழிமுறைகளை பொதுவான முறையில் வகுத்தல்.
இந்த அமைப்புகளை நிறுவுவது சம்பந்தப்பட்டவரை, இம்மாதிரியான முக்கூட்டு மாநாட்டிற்கு மிகவும் பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிற திட்டத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். இரு அமைப்புகளை நிறுவ வேண்டுமென்று நாங்கள் முன்மொழிகிறோம்:
- ஒரு விரிவடைந்த தொழிலாளர் மாநாடு, 2. ஒரு நிரந்தர ஆலோசனைக் குழு.
மத்திய சர்க்கார், மாகாண சர்க்கார், சமஸ்தான சர்க்கார், முதலாளிகள், தொழிலாளர்கள் ஆகியவர்களின் பிரதிநிதிகளைக் கொண்டதாக இருக்கும் விரிவடைந்த மாநாடு. பொதுவாக ஒவ்வொரு மாகாணமும், ஒவ்வொரு பெரிய சமஸ்தானமும் இதில் பிரதிநிதித்துவம் பெற உரிமை பெற்றிருக்கும். பிரதிநிதித்துவம் பெறாத சமஸ்தானங்களின் சார்பில் மன்னர்களின் சபை நியமிக்கும் ஒருவர் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் முக்கிய அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். தொழிலாளர்களின் பல்வேறு பிரிவினர் போதுமான பிரதிநிதித்துவம் பெறவில்லையென சர்க்கார் கருதினால் அவர்களின் பிரதிநிதிகளை நியமனம் செய்ய அரசாங்கத்துக்கு உரிமையுண்டு. விரிவடைந்த மாநாடு சம்பந்தப்பட்டவரை, சர்க்கார் பிரதிநிதிகளுக்குச் சம எண்ணிக்கையில் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது சாத்தியமாக இருக்காது.
நிரந்தர ஆலோசனைக் குழு
நிரந்தர ஆலோசனைக் குழுவை நிறுவுவதில் மிகுந்த கண்டிப்பும் கட்டுப்பாடும் கடைப்பிடிக்கப்படும் என்பதை உங்கள் முன் வைக்கப்போகிற தீர்மானத்தின் வாசகத்திலிருந்து தெரிந்து கொள்வீர்கள். பிரதிநிதித்துவம் பின்வருமாறு அமைந்திருக்க வேண்டுமென நாங்கள் பிரேரேபிக்கிறோம்:
- இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், 2. மாகாணங்களின் பிரதிநிதிகள், 3. சமஸ்தானங்களின் பிரதிநிதிகள், 4.முதலாளிகளின் பிரதிநிதிகள் 5. தொழிலாளர்களின் பிரதிநிதிகள். மத்திய சர்க்காரின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் அதன் தலைவராக இருப்பார்.
சர்வதேச சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்ட நிர்வாகக்குழு அமைக்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்த கோட்பாடுகளை சாத்தியமான அளவு நிரந்தர ஆலோசனைக்குழுவை அமைப்பதற்கான யோசனையாக முன்வைக்கிறோம். சர்வதேசத் தொழிலாளர் அலுவலகத்தின் நிர்வாகக்குழுவை அமைப்பதில் மூன்று கோட்பாடுகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன என்று என் மனதிற்குத் தோன்றுகிறது. முதலாவது, அரசுப் பிரதிநிதிகளுக்கும், அரசு சாராத பிரதிநிதிகளுக்கும் சமத்துவப் பிரதிநிதித்துவம் வழங்குதல். ஷரத்து 7, பிரிவு 1ல் இதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 32 பிரதிநிதிகளில் 16பேர் அரசாங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவர். 16பேர் முதலாளிகளையும் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவர்; இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றி நாங்கள் 10 இடங்களை அரசாங்கத்துக்கும் 10 இடங்களைத் தொழிற்சாலைகளுக்கும் வழங்குகிறோம்.
சர்வதேசத் தொழிலாளர் அலுவலகம் பின்பற்றும் இரண்டாவது கோட்பாடு முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே சம எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் அளிப்பதாகும். அதே ஷரத்தில் இதற்கு வழிவகைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசுசாராத 16 இடங்கள் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் சமமாகப் பிரித்து கொடுக்கப்படுகின்றன. இக்கோட்பாட்டைப் பின்பற்றி, தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்களை தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் நாங்கள் சமமாகப் பிரித்துக் கொடுக்கிறோம்.
மூன்றாவது கோட்பாடு
சில குறிப்பிட்ட நலன்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பது சர்வதேச தொழிலாளர் நிறுவனம் பின்பற்றும் மூன்றாவது கோட்பாடு. இதை 7வது ஷரத்தில் காணலாம். இந்த ஷரத்தின் பிரிவு (2) –இன்படி 16 இடங்களில் ஐரோப்பா – அல்லாத நாடுகளுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பிரிவு (4) –இன்படி முதலாளிகளின் ஒதுக்கீட்டிலிருந்து இரண்டு இடங்கள் ஐரோப்பா அல்லாத நாடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. முதலாளிகளுக்குக் கொடுக்கப்படும் கோட்டாவிலிருந்து ஒன்றும், தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் கோட்டாவிலிருந்து ஒன்றும் மத்திய சர்க்காரின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் நியமனம் செய்வதற்கு வழிவகை செய்வதன் மூலம் இந்தக் கோட்பாட்டை நாங்கள் கடைப்பிடிக்க விரும்புகிறோம். முதலாளிகள், தொழிலாளர்களின் பிரதான ஸ்தாபனங்களால் பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தவிர ஏனைய சில நலன்களுக்கு ஓரளவு பிரதிநிதித்துவம் அளிப்பதை இது உத்திரவாதம் செய்யும். இந்த யோசனைகளில் அடங்கியுள்ள நியாயமும் நேர்மையும் உங்களைக் கவரும் என்றும், இந்த யோசனைகளுக்குத் தங்களின் ஒப்புதலை அளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது என்றும் நம்புகிறேன்.
இந்த அமைப்புகளை மத்தியில் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய சர்க்காரை விட மாகாண சர்க்கார்களைப் பற்றித்தான் தொழிலாளர் அதிகம் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள். மத்தியில் அமைக்கப்படும் அமைப்புக்கு கீழ்மட்டத்திலிருந்து ஆதரவு தேவைப்படும். எனவே இத்தகைய அமைப்புகளை உருவாக்க மாகாண அரசாங்கங்கள் மத்திய அமைப்பு சமாளிக்கும் விஷயங்கள் குறித்து ஆவண செய்ய விரும்பினால் இந்தப் பொதுவான விஷயம் பற்றிய எந்த யோசனையையும் நாங்கள் உற்சாகத்துடன் வரவேற்போம் என்று மத்திய அரசாங்கம் சார்பில் வாக்குறுதி அளிக்கிறேன்.
விரிவடைந்த தொழிலாளர் மாநாடும் நிரந்தர குழுவும் அமைத்தல்
முக்கூட்டுத் தொழிலாளர் மாநாட்டில், ஒரு விரிவடைந்த தொழிலாளர் மாநாட்டையும் ஒரு நிரந்தரக்குழுவையும் நிறுவுவதென ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மத்திய, மாகாண அரசுகள், சில சமஸ்தானங்கள், தொழிலாளர்களின் எல்லா முக்கிய ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளாக மாநாட்டில் 50 பேர் கலந்து கொண்டனர்; மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மாநாட்டின் குறிக்கோள்களுக்கு முழு ஆதரவு அளித்தனர்.
அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவர் திரு.வி.வி.கிரி தொழிலாளர் மாநாடு என்ற இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதை வரவேற்றார். விவாதங்களில் தீவிரமாக ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தொழிலாளர் முன்னேற்றம் பற்றிய பிரச்சினையிலும் தொழிற்சாலைகளில் சுமூக நிலையை ஏற்படுத்துவதிலும் அது அக்கறை கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான திரு.ஜம்னாதாஸ் மேத்தா, இந்த மாநாட்டு அமைப்பு, குறிப்பாக இந்த நெருக்கடியான காலகட்டத்தில், தொழிற்சாலைகளில் சுமூக நிலையையும் திருப்தியையும் ஏற்படுத்த பாடுபட வேண்டுமென்று சொன்னார்.
இரண்டு அகில இந்தியத் தொழில் அதிபர்கள் சங்கங்களின் தலைவர்களான சர்.ஏ.ஆர்.தலாலும் திரு.ஶ்ரீராமும் தத்தம் பிரதிநிதி குழுக்களுக்குத் தலைமை வகித்தனர். சமஸ்தான மன்னர்கள் சபையின் பிரதிநிதிகளும் ஹைதராபாத், பரோடா, குவாலியர் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் விவாதங்களில் பங்குகொண்டனர். இந்திய சமஸ்தானங்கள் பங்கேற்றதை எல்லாப் பிரதிநிதிகளும் முழுமனதாக வரவேற்றனர்.
விரிவடைந்த மாநாடு 44 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும் இந்திய சர்க்காரின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் அதன் தலைவராக இருப்பார். பல்வேறு அரசாங்கங்களை 22 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவர்; 11 பேர் தொழிலாளர்களையும் 11 பேர் தொழிலதிபர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவர்.
இதேமாதிரி நிரந்தரக்குழு 20 உறுப்பினர்களைக் கொண்டதாகவும் தொழிலாளர் நலத்துறை உறுப்பினரைத் தலைவராகக் கொண்டதாகவும் இருக்கும். ஒருபக்கம் சர்க்காரின் பிரதிநிதிகளும் மறுபக்கம் தொழிலதிபர்கள் – தொழிலாளர்களின் பிரதிநிதிகளும் சம எண்ணிக்கையில் இருப்பர். மாநாட்டுக்குத் தலைமைதாங்கிய மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை உறுப்பினர், தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்களுடைய எல்லா அமைப்புகளின் பிரதிநிதிகளும் அத்தகைய ஸ்தாபனங்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஏற்றுக்கொண்டார்.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)