(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஜூலை 29, பக்கம் 176-77)

     ambedkar 248 மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்), ஐயா! பின்கண்டவாறு பிரேரேபிக்கிறேன்:

     “இந்திய கொதிகலங்கள் சட்டம், 1923ஐ மேலும் திருத்துவதற்கான மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.”

     இந்த மசோதா ஒரு எளிமையான நடவடிக்கை; வாத-பிரதிவாதத்திற்கு உட்படாத ஒன்று; எந்தக்கோட்பாட்டையும் உட்படுத்தாதது. இக்காரணங்களைக் கணக்கில்கொண்டு, இந்த மசோதாவின் விதிகளை விளக்குவதற்காக மிக விரிவாகப் பேச நான் விரும்பவில்லை. இந்தத் திருத்த மசோதாவை கொண்டுவர சர்க்காரைத் தூண்டிய சூழ்நிலைமைகளை இங்கு கூறினால் அதுவே போதுமானதாகும். சுருக்கமாக, சூழ்நிலைகள் இவைதான்:

     1942 பிப்ரவரி 23ம் தேதி பம்பாயிலுள்ள ஒரு மில்லின் கொதிகலத்தில் விபத்து நடைபெற்றது; மிக மோசமான உயிர் சேதத்தை அது விளைவித்தது. இந்த விபத்து நடந்தபோது, இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக பம்பாய் சர்க்காரால் ஒரு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வெடிப்புக்குக் காரணம் வெப்பம்-எரிபொருள் முதலியவற்றை மிச்சப்படுத்துவதற்கான ‘எகானாமைசர்’ என்று அழைக்கப்படும் இயந்திரபாகத்தில் ஏதோ கோளாறு இருந்தது என்று விசாரணையில் தெரியவந்தது. ‘ஊட்டுக் குழாய்கள்” என்று தொழில்நுட்பரீதியில் அழைக்கப்படும் குழாய்கள் நீண்டகாலமாகவே உள்ளுக்குள் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவை பலஹீனம் அடைந்திருந்தன. இந்த விசாரணையின் முடிவு சர்க்காருக்கு வியப்பூட்டுவதாக இருந்தது; ஏனெனில், 1923 ஆம் வருட இந்திய கொதிகலங்கள் சட்டம், கொதிகலங்களின் ஆய்வாளர் இந்த கொதிகலங்களை அவ்வப்போது பார்வையிட்டு, கொதிகலங்கள் சரியாக இயங்கும் நிலையில் உள்ளனவா என்று சோதித்துச் சான்றிதழ் வழங்க வேண்டுமெனக் கோருகிறது.

     சிக்கனப்படுத்தும் கருவியின் ஊட்டுக்குழாய்கள் வேலை செய்ய லாயக்கற்றவை ஆகிவிட்டதைத் தெரிந்தும் சான்றிதழை வழங்க கொதிகலங்கள் ஆய்வாளர் எவ்வாறு முடிவு செய்தார் என்ற கேள்வி எழுகிறது. ஒரு விஷயம் தெரியவந்தது. அதாவது இந்திய கொதிகலங்கள் சட்டத்தின் 28வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளைப் பொறுத்தவரை, கொதிகலத்தில் இணைக்கப்பட்டுள்ள ஊட்டுக்குழாய்களையோ அல்லது வேறு எந்த துணைக் கருவியையோ சோதித்துப் பார்ப்பது கொதிகலங்கள் ஆய்வாளரின் பணியல்ல; இதன் காரணமாகவே, வெடித்த கொதிகலத்தின் விஷயத்தில் ஊட்டுக்குழாய்கள் சோதனை செய்து பார்க்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்தக்குறையைப் போக்குவதற்குத்தான் இன்றைய திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

     இந்த மசோதா இரு திருத்தங்களைச் செய்கிறது. முதல் திருத்தம் பிரிவு இரண்டிற்கு சிசி என்ற ஒரு புதிய உட்பிரிவைக் கொண்டு வருகிறது; அது விளக்கம் அளிக்கும் உட்பிரிவு ‘ஊட்டுகுழாய்” என்ற புதிய பதத்தைச் சேர்த்து, ஊட்டுகுழாய் என்றால் என்ன என்பதை விவரிக்கிறது. இரண்டாவது, ‘நீராவி குழாய்” என்று அழைக்கப்படுவதன் பொருளை விரிவுப்படுத்துகிறது. இன்று நடப்பிலுள்ள சட்டத்தின்படி நீராவிக்குழாய் என்பது பிரதான குழாய் என்று மட்டுமே பொருள்படும்; திருத்தத்தின் கீழ், நீராவிக்குழாய், பிரதான குழாய் மட்டுமல்லாமல் ஊட்டுக்குழாயையும் உட்படுத்தும். இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதும், நீராவிக்குழாய்களை மட்டுமல்லாமல் ஊட்டுக்குழாய்களையும் சோதனை செய்து பார்ப்பது கொதிகல ஆய்வாளரின் கட்டாயக் கடமையாக்குவதற்கு பிரிவு 28ன் விதிமுறைகளைத் திருத்துவது சர்க்காருக்குச் சாத்தியமாகும். இதன் காரணமாகத்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ஐயா, இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று பிரேரேபிக்கிறேன்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் பிரேரேபிக்கப்படுகிறது.

     “இந்திய கொதிகலங்கள் சட்டம், 1923ஐ மேலும் திருத்துவதற்கான மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.”

     திரு.ஸி.ஸி.மில்லர்: ஒரு சிறுவிஷயம் பற்றி மாண்புமிகு உறுப்பினரிடமிருந்து விளக்கம் பெற விரும்புகிறேன். சிக்கனப்படுத்தும் கருவி என்றழைக்கப்படும் ஊட்டுகுழாய் அமைப்பு பற்றியது நான் கோரும் விளக்கம்; ஊட்டுக்குழாய் கொதிகலத்தின் பிரதான பாகத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அது அத்தியவசியமான பாகமல்ல; ஊட்டுக்குழாய்களின் தொடர்பை துண்டிக்க முதலாளி ஒப்புக்கொண்டாலல்லாமல், ஊட்டுக்குழாயில் சில குறைபாடு இருந்தால், கொதிகலம் நல்ல நிலைமையில் இருப்பதாக சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு ஆய்வாளருக்குச் சட்டப்படி உரிமை கிடையாது என்று நான் எடுத்துக்கொள்கிறேன்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஒரு திட்டவட்டமான பதிலை அளிப்பது எனக்குச் சாத்தியமல்ல என்பதை எனது நண்பர் புரிந்துகொள்ள வேண்டும்; எனினும் இந்த ஊகத்தை அவர் எழுப்பியதே சரியே.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் என்னவெனில்

           ‘இந்தியக் கொதிகலங்களின் சட்டம், 1923ஐ மேலும் திருத்துவதற்கான மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.”

     தீர்மானம் ஏற்கப்பட்டது. உட்பிரிவுகள் 2ம் 3ம் மசோதாவில் சேர்க்கப்பட்டன. உட்பிரிவு 1 மசோதாவில் சேர்க்கப்பட்டது.

     தலைப்பும் பீடிகையும் மசோதாவில் சேர்க்கப்பட்டன.

      மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென நான் பிரேரேபிக்கிறேன்.

     திரு.தலைவர்: (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் வருமாறு:

     “மசோதா நிறைவேற்றப்படட்டும்”

     தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It