மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா! நான் பின்கண்டவாறு பிரேரேபிக்கிறேன்:

   ambedkar 286  “மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) அவசரச் சட்டம், 1942ஐ திருத்தும் இந்த மசோதாவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.”

     இது ஒரு எளிமையான நடவடிக்கை. அவை நினைவில் கொள்வதுபோல், பல்வேறு அவசரச் சட்டங்கள் மூலம் பல்வேறு நபர்களின் சேவையை நாட்டின் பாதுகாப்புக்காக சர்க்கார் ஆணையின் மீது பெறப்பட்டிருக்கிறது.

     மதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: மொத்தத்தில் எத்தனை பேர்?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: என்னிடம் தகவல் இல்லை என அஞ்சுகிறேன்; ஆனால் பொதுவான உண்மை நன்கு தெரிந்ததே. அவற்றில் ஒன்று மோட்டார் வாகன ஓட்டுனர்களின் சேவை நாட்டுக்குப் பெறப்பட்டதாகும். அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டபிறகு, மற்ற அவசர சட்டத்தில், உள்ள ஒரு பிரிவு மோட்டார் வாகனங்கள் ஓட்டுனர் அவசரச் சட்டத்தில் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மோட்டார் வாகன ஓட்டுனரின் சேவை எந்த அதிகாரத்தின்படி கோரப்பட்டதோ, அந்த சேவையின் தேவை பூர்த்தியானபின், சொந்தக்காரர் அவரை மீண்டும் வேலைக்கு வைத்துக்கொள்ள கோரும் எந்தப் பிரிவும் அவசரச் சட்டத்தில் இல்லை. இந்த இடைவெளியை நிரப்ப இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்தத் திருத்தத்தின் நோக்கங்கள் மூன்று தன்மை கொண்டது. சர்க்காரால் ஒரு ஓட்டுனரின் சேவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும், அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்தும் கட்டாயக் கடமை முதலாளிக்கு இருப்பதை இந்த திருத்தம் அறிவிக்கிறது. இரண்டாவது, முதலாளியின் இந்த பொறுப்பு சம்பந்தமாக எழக்கூடிய சர்ச்சைகளுக்குத் தீர்வு காணுவதற்கான வழிமுறைகளை வகுக்கிறது; மாகாண சர்க்கார் சார்பில் நியமிக்கப்படும் அதிகாரி பற்றி இந்த மசோதா குறிப்பிடுகிறது; மூன்றாவது, அந்த அதிகாரி பிறப்பிக்கும் ஆணையை நிறைவேற்றாததற்காக அபராதம் விதிப்பது பற்றியும் இதில் கூறப்பட்டிருக்கிறது. ஒரு மோட்டார் வாகன ஓட்டுனருக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு உரிமையின் வரம்புகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கின்றன மசோதாவின் மற்ற பிரிவுகள்; அவை இரு-தன்மை வாய்ந்தவை. முதலாவதாக, மீண்டும் வேலைக்கு சேர்க்கப்படும் உரிமையை கோருவதற்கு, அவர் ஆறுமாத காலத்திற்கு தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, நாட்டுக்கான சேவையிலிருந்து விடுபட்ட இரண்டு மாதங்களுக்குள் அவர் மீண்டும் வேலைக்கமர்த்தப்படுவதற்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் திருப்தி செய்யப்பட்டால், நாட்டு சேவைக்காக கோரப்பட்ட மற்றவர்கள் நிலையில் இவரையும் இந்த மசோதா வைக்கிறது. இந்த மசோதா பற்றி மேலும் சொல்ல எதுவுமில்லை. ஐயா! இந்த வார்த்தைகளுடன், மசோதாவை நான் பிரேரேபிக்கிறேன்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் வருமாறு:

‘மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) அவசர சட்டம், 1942ஐ திருத்தும் இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.”

     தீர்மானம் நிறைவேறியது.

*     *     *

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): பிரிவு 2.

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஜூலை 29, பக்கம் 179-80)

     1சர் கவாஸ்ஜி ஜஹாங்கிர்: (பம்பாய் நகரம்:முகமதியர் நகர் பகுதி) ஐயா! நான் அறிந்தவரை இந்தப் பிரிவுதான் முக்கிய பிரிவு. யுத்த நோக்கங்களுக்காக சர்க்காரால் சேவைக்கு அழைக்கப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுனர்களுக்கு வேலைபெற்றுத் தருவது இந்த மசோதாவின் நோக்கம் என்று நான் காண்கிறேன்; முந்திய முதலாளி இரண்டு நிபந்தனையின்கீழ் அந்த மோட்டார்வாகன ஓட்டுனரை வேலைக்கு அமர்த்தும்படி செய்வதற்கான முயற்சி இது; அந்த நிபந்தனைகள் வருமாறு: முந்திய முதலாளியிடம் அவர் ஆறுமாதங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும்; அவரை வேலைக்கு அமர்த்த அவர் இரண்டு மாதங்களுக்குள் மனு செய்ய வேண்டும். இந்த விஷயங்களை மாண்புமிகு உறுப்பினர் கவனத்தில் கொண்டு இதுபற்றி பரிசீலனை செய்ய அவர் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மக்களுக்கும் நாட்டுக்கும் மாண்புமிகு உறுப்பினர் நன்மை செய்தவராகிறார்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மதிப்பிற்குரிய எனது நண்பர் சர் கவாஸ்ஜி ஜஹாங்கிர் கூறிய கருத்துகளைப் பொறுத்தவரை, முதலாளி தன்னுடைய முந்திய ஓட்டுனரை மீண்டும் வேலைக்கு அமர்த்திக்கொள்ளும்படிக் கோரப்படும்போது என்ன நிகழக்கூடும் என்பதைப்பற்றி அவர் உண்மையில் ஒரு பெரிய, கருப்புவர்ணத்தைப் பூசி பெரிதுப்படுத்தியுள்ளார் என்று கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விஷயம் ஒரு பெரிய தகராறுக்குரிய விஷயமாக மாறி, வழக்கறிஞர்கள் வைத்து வாதாடும் அறைக்குச் செல்லும் என்று அவர் கருதுவதாகத் தோன்றுகிறது. ஆனால் இது அத்தனை சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்காது என்று நம்புகிறேன். மாகாணசர்க்கார் இது சம்பந்தமாக ஒரு அதிகாரியை நியமிக்கும் விதியையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அந்த அதிகாரி இரு தரப்பாருக்கும் ஏற்புடையவராக இருப்பார் என்று கூறுவதில் எனக்குச் சந்தேகமில்லை.

     சர் கவாஸ்ஜி ஜவாங்கீர்: அதை நாங்கள் தெரிந்து கொள்வது எவ்வாறு?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மாகாண சர்க்கார் அதனால் சாத்தியமான அனைத்தையும் செய்யும் என்று நாம் நம்ப வேண்டும்.

     சர் கவாஸ்ஜி ஜவாங்கீர்: ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டதும் விதிமுறைகள் மிக விரிவாக இருக்கும் என்பதையும், பிரச்சினை எவ்வளவு எளிதாக இருந்தாலும் இது எப்பொழுதும் கணிசமாக அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதையும் மாண்புமிகு உறுப்பினர் அறிய மாட்டாரா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பிரச்சினையை விரைவாக தீர்த்துவைப்பதில் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாது, எனவே, இந்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு என்னை நிர்ப்பந்திக்கும் அளவுக்கு இதில் எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன். எழக்கூடிய விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருக்குமெனக் கருதுகிறேன்; இரு சாராருக்கும் அதிக கஷ்டம் அல்லது கவலை ஏற்படுத்தாமல் அவற்றைத் தீர்த்துவைக்க முடியும்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் இதுதான்:

     “பிரிவு இரண்டு மசோதாவின் ஓர் அங்கமாக அமைந்துள்ளது.” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     பிரிவு 2 மசோதாவில் சேர்க்கப்பட்டது.

     பிரிவு 3 மசோதாவில் சேர்க்கப்பட்டது.

     பிரிவு 1 மசோதாவில் சேர்க்கப்பட்டது.

     தலைப்பும் பீடிகையும் மசோதாவில் சேர்க்கப்பட்டன.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா! நான் மசோதா நிறைவேற வேண்டுமென பிரேரேபிக்கிறேன்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): தீர்மானம் வருமாறு:

     ‘மசோதா நிறைவேறட்டும்.”

     தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It