அகில இந்திய வானொலியின் பம்பாய் நிலையத்திலிருந்து டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய உரை

(1.இந்தியத் தகவல் ஏடு, 1943 ஜனவரி 10 தேதி, பக்கம் 16-19)

“இது புதிய நாஜி அமைப்பிற்கு எதிரான யுத்தம் என்கிற போது, பழைய அமைப்பிற்கு ஆதரவான யுத்தம் என்று இதற்கு அர்த்தமல்ல என்பதை தொழிலாளர் அறிவர். பழைய அமைப்பிற்கும் நாஜி அமைப்பிற்கும் எதிரான யுத்தமே இது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை வெறும் கோஷங்களாக அல்லாமல் வாழ்க்கையின் யதார்த்தங்களாகத் திகழும் புதிய அமைப்பை ஏற்படுத்துவதுதான் இந்த யுத்தத்திற்குத் தரப்படும் விலையாக இருக்கும் என்பதையும் தொழிலாளர் அறிவர்”, என்று அகில இந்திய வானொலி பம்பாய் நிலையத்திலிருநது “ இந்த யுத்தத்தில் வெற்றி பெற ஏன் இந்தியத் தொழிலாளர்கள் உறுதிபூண்டுகள்ளனர்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இந்திய சர்க்காரின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குறிப்பிட்டார்.

     ambedkar 248டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆற்றிய உரையின் முழுவாசகம் வருமாறு:

     தொழிலாளருடன் சம்பந்தப்பட்டவர்கள், அவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் பலர் உரை நிகழ்த்தவிருக்கிறார்கள். இந்த வானொலி உரைகளின் வரிசையில் இன்றிரவு நான் ஆற்றும் இந்த உரை முதலாவதாகும். என் உரையின் பொருள் பொதுத் தன்மையுடையது. அடுத்து தொடர்ந்து வரிசையாக நிகழ்த்தப்படவிருக்கும் உரைகளுக்கு இது முன்னிலையாக இருக்கும். உரைக்கு நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட தலைப்பு, ‘இந்த யுத்தத்தில் வெற்றி பெற ஏன் இந்தியத் தொழிலாளர்கள் உறுதிபூண்டுள்ளனர்’ என்பதாகும். எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் ஒரு விஷயம் இதில் உள்ளது. யுத்தத்தின்பால் இந்தியத் தொழிலாளர்கள் கொண்டுள்ள கண்ணோட்டம் பற்றியதாகும் அது. இந்தியாவில் இப்பொழுது யுத்த முயற்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் சூடு பிடித்திருக்கும் நிலைமையில் யுத்தத்தை நடத்துவதில் இந்தியத் தொழிலாளர் தீவிரமாக ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர். இதுபற்றி எத்தகைய ஐயப்பாட்டுக்கும் இடமில்லை. இதைச் செய்வதனின்று அவர்களைத் திசைதிருப்ப பல முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதிலும், தொழிலாளர் தங்களின் ஒத்துழைப்பை அளித்துக் கொண்டுவருகின்றனர். அதில் உறுதிபூண்டுள்ளனர்.

தொழிலாளர் விரும்புவது என்ன?

     யுத்தத்தின் போது, பல நன்மைகளைத் தொழிலாளர் பெற்றுள்ளனர்; இன்னும் பலவற்றை அடைவர் என்பது நிச்சயம். நான் அண்மையில் எடுத்துக்காட்டியது போல, சட்டத்தின் மூலம் தொழிலாளர் பாதுகாப்பைப் பெற்றுள்ளனர். தொழிலாளர் நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி முதலாளிகளை மத்திய சர்க்கார் நிர்ப்பந்தித்துள்ளது. இதன்மூலம் தொழிலாளர்கள் பாதுகாப்பையும் பந்தோபஸ்தையும் சிலபல உரிமைகளையும் பெற்றனர். யுத்த முயற்சியை தீவிரப்படுத்த அனைத்தையும் செய்ய தொழிலாளர் உறுதிபூண்டிருப்பதற்கு இத்தகைய உடனடி நன்மைகளைப் பெற்றிருப்பது மட்டுமே காரணமல்ல. இந்த உறுதிக்கு அடிப்படையாக அமைந்துள்ள தேவையான நல்ல சூழ்நிலைகளைப் பெற்றுக் கொள்வதோடு தொழிலாளர் திருப்தியடையவில்லை. தொழிலாளர் விரும்புவது என்னவெனில், நல்ல வாழ்க்கை நிலைமைகள். நல்ல வாழ்க்கை நிலைமைகள் என்று தொழிலாளர் கருதுவது என்ன என்பதை விளக்குகிறேன்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

      தொழிலாளர் சுதந்திரத்தை விரும்புகின்றனர். இதில் புதியது எதுவும் இல்லாமலிருக்கலாம். சுதந்திரம் பற்றி தொழிலாளர் கண்ணோட்டத்தில் புதியது என்ன? கட்டுப்பாடு இல்லாதது என்ற எதிர்மறையான கண்ணோட்டமல்ல சுதந்திரம் பற்றிய தொழிலாளர்களின் கண்ணோட்டம். வாக்கு அளிக்கும் உரிமையை மக்களுக்கு அங்கீகரிப்பதுடன் மட்டும் சுதந்திரம் பற்றிய தொழிலாளர் கண்ணோட்டம் முடிவடைந்து விடுவதில்லை. அவர்களது கண்ணோட்டத்தில் சுதந்திரம் என்பது ஆக்கப்பூர்வமானது; மக்களால் ஆன அரசாங்கம் என்ற கருத்தை அது உள்ளடக்கியுள்ளது. மக்களாலான அரசாங்கம் என்பது, தொழிலாளர் கருத்துப்படி, நாடாளுமன்ற ஜனநாயகம் என்று ஆகாது. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது ஒரு அரசுவடிவம். அதில் மக்களின்பங்கு என்னவெனில் தங்களின் எஜமானர்களுக்கு வாக்களித்து, ஆட்சி செலுத்துவதை அவர்களிடம் விட்டுவிடும் அமைப்பாகும். அத்தகைய அரசாங்க அமைப்பு, தொழிலாளர் கருத்தில், மக்களாலான அரசு என்பதைக் கேலிக்கூத்தாக்குவதாகும். மக்களாலான அரசு பேருக்கு மட்டுமின்றி யதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்று தொழிலாளர் விரும்புகின்றனர். இரண்டாவதாக, தொழிலாளர் கருத்துப்படி சுதந்திரம் என்பதில் சமசந்தர்ப்பத்திற்கான உரிமைகளையும், ஒவ்வொரு தனி நபரின் தேவைகளுக்கு ஏற்ப அரசின் கடமையும் உட்படும்.

     தொழிலாளர் சமத்துவத்தை விரும்புகின்றனர். தொழிலாளர் சமத்துவம் என்று கூறுவது சட்டத்தில், அரசுப் பணிகளில், ராணுவத்தில், வரிவிதிப்பில், வாணிகம், தொழில்களில் எல்லா விதமான தனி உரிமைகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதாகும். உண்மையில் சமத்துவமின்மைக்கு இட்டுச் செல்லும் எல்லா வழிமுறைகளும் நீக்கப்பட வேண்டும்.

     தொழிலாளர்கள் சகோதரத்துவத்தை விரும்புகின்றனர். சகோதரத்துவம் என்பதை சர்வவியாகமான மனிதநேய சகோதரத்துவம் என அவர்கள் கருதுகின்றனர்; உலகில் சமாதானம், மனிதன்பால் நல்லெண்ணம் என்ற அடிப்படையில் எல்லா வர்க்கங்களையும் எல்லா நாடுகளையும் ஐக்கியப்படுத்துவது அதன் லட்சியம்.

நாஜிகளின் புதிய அமைப்பு

     தொழிலாளரின் லட்சியங்கள் இவை. அவை புதிய அமைப்பின் அடிப்படை; அது அமைக்கப்பட்டால்தான் மனித சமுதாயத்தை நாசத்தினின்று காப்பாற்ற முடியும். நேசநாடுகள் யுத்தத்தில் தோற்றால் இந்தப் புதிய அமைப்பை ஏற்படுத்தமுடியுமா? அதுதான் தலையாய கேள்வி; இதிலிருந்து நழுவுவது அல்லது தவிர்ப்பது நாசத்தை விளைவிக்கும் என்று தொழிலாளர்கள் அறிவர். கைகட்டிக் கொண்டு சோம்பேறித்தனமாக உட்கார்ந்து கொண்டு போராட மறுத்தால் இந்தப் புதிய அமைப்பை ஏற்படுத்த முடியுமா? நேச நாடுகள் வெற்றி பெறுவதுதான் இத்தகைய புதிய அமைப்பைத் தோற்றுவிப்பதற்கான ஒரே நம்பிக்கை என்பதைத் தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர். நேசநாடுகள் தோற்றாலும் நிச்சயம் ஒரு புதிய அமைப்புவரும்; ஆனால் அது நாஜி அமைப்பைவிட வேறு எதுவாகவும் இருக்காது. அந்த ஆட்சியில் சுதந்திரம் நசுக்கப்படும், சமத்துவம் மறுக்கப்படும், ஆபத்தான சித்தாந்தம் என்று சகோதரத்துவம் அகற்றப்படும்.

     நாஜிகளின் புதிய அமைப்பு என்பதன் முழுமை இத்துடன் முடிவதில்லை. நாஜி ஏற்பாட்டில் சில பகுதிகள் பற்றி ஒவ்வொரு இந்தியனும் – அவனுடைய மதம், அவனது சாதி, அவனது அரசியல் நம்பிக்கை இவை எதுவாக இருந்தாலும் – அதன் அபாயத்தைப் பற்றிக் கவலையுடன் சிந்திக்க வேண்டும். அதன் மிக முக்கிய பாகம் வருண இன அடிப்படையில் மனிதவர்க்கத்தை வகை பிரிப்பதாகும். நாஜி ஆட்சிமுறையில் இதுதான் பிரதான கோட்பாடாகும். ஜெர்மன் இனத்தை மிக உன்னதமான மனித இனமாக நாஜிகள் கருதுகின்றனர். மற்ற வெள்ளையர் இனத்தவர்களையும் ஜெர்மன் இனத்திற்கு கீழாகவே வைக்கின்றனர். பழுப்பு இனத்தாரை – இதில் இந்தியர்களும் உட்படுவர் – தர வரிசையில் கடைசியில் வைக்கின்றனர். இந்த அளவுக்குக் கேவலப்படுத்துவது போதாது என்பது போல், எல்லாப் பழுப்புநிற இனத்தவர்களும் ஜெர்மன் மற்றும் வெள்ளை இனத்தாருக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்றும் நாஜிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர். அவர்களுக்குக் கல்வி வசதி அளிக்கக்கூடாது; எந்த சுதந்திரமும் – அரசியல் அல்லது பொருளாதார சுதந்திரம் – அவர்களுக்கு வழங்கப்படக் கூடாது என்பது நாஜிகளின் சித்தாந்தம்.

நேரடி அபாயம்

     இந்தியர்களுக்குக் கல்வியும் அரசியல் சுதந்திரமும் அளித்ததற்காக ஹிட்லர் தனது மெயின்காம்ப் என்ற நூலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஆத்திரத்துடன் கண்டித்திருப்பது நன்கு அறிந்த ஒன்றே. நாஜி சித்தாந்தம் இந்தியர்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் நேரடி அபாயமாகும். இந்த உண்மையைக் கணக்கில் கொண்டால், நாஜிசத்தை எதிர்த்து போராட ஏன் இந்தியர்கள் கட்டாயம் முன்வர வேண்டுமென்பதற்கு மிகப் பலமான காரணம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். நாஜி ஆட்சி அமைப்பை, தொழிலாளர்கள் தங்கள் மனத்தில் கொண்டுள்ள புதிய ஆட்சி அமைப்போடு ஒப்பிடும் எவரும், நேச நாடுகளுக்கு ஆதரவாகப் போராடி, நாஜிசத்தை அழித்தொழிக்க தொழிலாளர் உறுதிபூண்டிருக்கும் நிலை, எந்த புத்திசாலி மனிதனும் எடுக்க வேண்டிய நிலைதான் என்பதை பற்றி சந்தேகம் கொள்ள முடியாது. எனினும், இத்தகைய ஒரு கண்ணோட்டத்தை மேற்கொள்ள மறுக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.

     நாஜி வெற்றி பற்றியோ அதையடுத்து ஏற்படும் புது நாஜி ஆட்சி அமைப்பு பற்றியோ தங்களுக்கு கவலையில்லை என்று நினைக்கும் சிலர் உள்ளனர். ஆனால் நாட்டில் இத்தகையோர் அதிகம் இல்லை என்பது அதிர்ஷ்டவசமானது. இத்தகைய கருத்துக் கொண்டவர்கள் தங்களைப் பற்றியே அக்கறை கொள்ளாதவர்கள். அவர்களைப் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அதிருப்தியடைந்துள்ள அரசியல்வாதிகள் அவர்கள். அவர்கள் நினைக்கிற படி நடக்க அனுமதிக்காவிடில் அவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். அவர்களது தாரக மந்திரம் ‘எல்லாம் எனக்கே அல்லது நாசகமாகப் போகட்டும்.”

     யுத்தங்கள் தவறு என்று வாதிக்கும் அமைதிவாதிகள் உள்ளனர். ஏராளமான மனித முயற்சியினால் மனிதர்கள் கட்டி வளர்த்த மனித நாகரிகத்தை கெடுத்து நாசமாக்கியதற்கும், உலகத்திலுள்ள எல்லாக் கஷ்டங்களுக்கும் பிரதானமாக யுத்தங்களே காரணம் என்று அவர்கள் வாதிக்கின்றனர். அது உண்மைதான். அப்படியிருந்தும் அமைதிவாதத்தை வாழ்க்கையில் கோட்பாடாக ஏற்க தொழிலாளர்கள் மறுக்கின்றனர். தாக்கப்படும்போது போராட மறுப்பதால் மட்டும் யுத்தங்களை ஒழித்து விட முடியாது. பலாத்கார சக்திகளுக்கு சரணடைவதன் மூலம் கிடைக்கும் சமாதானம், சமாதானமே அல்ல. அது ஒரு தற்கொலைச் செயலாகும். அதற்கு எந்த நியாயத்தையும் காண்பது கடினம். ஒரு கண்ணியமான மனித வாழ்க்கையை பாதுகாப்பதற்கு உன்னதமானதும் தேவையானதுமான எல்லாவற்றையும் அநாகரிகத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும், தியாகம் செய்வதாகும் அது.

     யுத்தத்தை ஒழிப்பதற்குத் தொழிலாளர்களுக்குள்ள வழி சரணடைவதல்ல. தொழிலாளர்கள் கருத்துப்படி இரண்டு விஷயங்கள் மட்டுமே யுத்தத்தை ஒழிக்கும்; ஒன்று யுத்தத்தில் வெல்வது; மற்றது நியாயமான சமாதானத்தை ஏற்படுத்துவது. தொழிலாளர் பார்வையில் இரண்டும் சம அளவில் முக்கியமானவை. யுத்தம் தோன்றுவது மனிதனின் ரத்த தாகத்தால் அல்ல. தோற்றவர்கள் மீது ஜெயித்தவர்கள் கேவலமான சமாதானத்தை அடிக்கடி சுமத்துவதில் யுத்தத்தின் தோற்றுவாயைக் காணலாம். யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, அமைதியாளரின் கடமை நழுவுவதோ அல்லது போராட மறுப்பதோ அல்ல என்பது தொழிலாளர்களின் கருத்து. யுத்தம் நடக்கும்போது மட்டுமல்லாமல் சமாதான விதிமுறைகள் உருவாக்கப்படும்போதும் தீவிரமாக செயல்படுவதும் விழிப்பாக இருப்பதும் அமைதிவாதியின் கடமை என்று தொழிலாளர்கள் நம்புகின்றனர். சரியான காரியத்தைச் சரியான நேரத்தில் செய்யத் தவறுகிறார் அமைதிவாதி. யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது அதற்கு எதிராக அமைதிவாதி தீவிரமாகச் செயல்படுகிறார். யுத்தம் முடிந்து சமாதானம் மேற்கொள்ளப்படும்போது அவர் செயலற்றும் அக்கறை யற்றும் பேசுகிறார். இந்த விதத்தில் இரண்டையும், யுத்தத்தையும் சமாதானத்தையும் அவர் இழந்து விடுகிறார். இந்த யுத்தத்தில் போராட தொழிலாளர்கள் விரும்புகிறார்கள் என்றால், அமைதி வாதம் யுத்தத்தை ஒழிப்பதற்கான தொழிலாளர்கள் வழியல்ல என்பதால்தான்.

பிரெஞ்சுப் புரட்சியை நினைவுகூருவோம்

     வெற்றியைத் தொடர்ந்து புதிய அரசியல் அமைப்பு ஏற்படும் என்பதற்கு உத்திரவாதம் எதுவும் இல்லை என்று கூறும் அவ நம்பிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த அவநம்பிக்கைக்கு ஒருவேளை இடம் இருக்கலாம். தொழிலாளர்களுக்கு ஒரு சிறந்ததான நாட்டின் புதிய அரசியல் அமைப்புக்கான வேர்கள் பிரான்ஸ் நாட்டின் புரட்சியில் இருக்கின்றன. பிரெஞ்சு புரட்சி இரு கோட்பாடுகளை முன்வைத்தது சுயாட்சி என்ற கோட்பாடும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடும் சுயாட்சி என்ற கோட்பாடு, மற்றவர்களால் மன்னர்கள், சர்வாதிகாரிகள் அல்லது சலுகைபெற்ற வர்க்கங்கள் யாராக இருந்தாலும் அவர்களால் ஆட்சி செலுத்தப்படுவதற்குப் பதிலாக மக்கள் தங்களாலேயே ஆட்சி செய்யப்பட வேண்டும் என்ற அபிலாஷையை வெளிப்படுத்துகிறது; பொதுவான லட்சியங்களாலும் நோக்கங்களாலும் ஒன்றுபடுத்தப்பட்ட மக்களின் அபிலாஷையை வெளிப்படுத்துகிறது. அதுதான் ‘ஜனநாயகம்’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவான லட்சியங்களாலும் நோக்கங்களாலும் ஒன்றுபடுத்தப்பட்ட மக்களின் அபிலாஷை எதுவோ அதன்படி தங்களின் அரசியல் அந்தஸ்தை எந்தவித வெளி நிர்பந்தமும் இல்லாமல் முடிவு செய்யும் உரிமைதான் சுயநிர்ணய உரிமை; அது சுதந்திரம், பரஸ்பரம் சார்ந்திருப்பது அல்லது உலகத்தின் மற்ற மக்களுடன் இணைந்து இருப்பது எதுவானாலும் இதுதான் தேசியவாதம் எனப்படும். மனித சமுதாயத்தின் நம்பிக்கை இந்த கோட்பாடுகள் நிறைவேறுவதை மையமாகக் கொண்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக, சுமார் 140 ஆண்டுகள் முடிந்தபின்பு இந்த கோட்பாடுகள் வேரூன்றி வளரத் தவறிவிட்டன. பழைய ஆட்சி முறை அதனுடைய எல்லா அப்பட்டமான தன்மையிலோ அல்லது இந்த இரு கோட்பாடுகளுக்கு போலித்தனமான சலுகைகளை அளித்தோ தொடர்ந்து உலகில் சுயாட்சி அரசுகளோ அல்லது சுய நிர்ணய உரிமையோ இல்லாமல் போயிற்று. இதெல்லாம் நிச்சயமாக உண்மைதான். ஆனால் தொழிலாளர் மேற்கொண்ட கண்ணோட்டத்திற்கு எதிரான வாதமல்ல இது; புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்துவதற்குப் பூர்வாங்க நிபந்தனை நாஜிச சக்திகள் மீது வெற்றி பெற வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கண்ணோட்டம். இதற்கு அர்த்தம் என்னவெனில், தொழிலாளர் அதிகம் உஷாரோடு இருக்க வேண்டும் என்பதே ஆகும். நாஜிகள் மீது வெற்றி பெறுவதோடு யுத்தம் முடிந்து விடக் கூடாது. அதேபோல் பழைய ஆட்சி அமைப்பு, அது எங்கிருந்தாலும் அதன் மீது வெற்றி பெறாமல் சமாதானம் கூடாது.

தொழிலாளர்களும் தேசியமும்

      தொழிலாளர்களை மிக அதிகமாக எதிர்ப்பவர்கள் நிச்சயமாக தேசியவாதிகளே. இந்திய தேசியத்திற்கு முரணான, அதற்கு தீங்கான கண்ணோட்டத்தை தொழிலாளர்கள் கொண்டுள்ளனர் என்று தொழிலாளரை அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இரண்டாவது ஆட்சேபனை, இந்தியாவின் சுதந்திரம் பற்றி எந்த வாக்குறுதியும் பெறாமலேயே, யுத்தத்திற்காக போராட தொழிலாளர்கள் ஒப்புக்கொண்டனர் என்பது. இந்தப் பிரச்சினைகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன; மிக அக்கறையுடன் வாதிடப்படுகின்றன; எனவே இவர்களைப் பற்றித் தொழிலாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறுவது அவசியம்.

     தேசியத்தைப் பொறுத்தவரை, தொழிலாளர்களின் கண்ணோட்டம் மிகத் தெளிவானது. தேசியத்தை போலித்தன்மை வாய்ந்ததாக ஆக்க தொழிலாளர்கள் தயாராக இல்லை. தேசியம் என்றால் புராதன காலத்தை பூஜிப்பது, தோற்றுவாயில் ஸ்தல தன்மையில்லாத, வடிவம் இல்லாத எல்லாவற்றையும் தள்ளிவிடுவது – எனில், தேசியத்தைத் தனது கோட்பாடாக தொழிலாளர் ஒப்புக்கொள்ள முடியாது. கடந்த காலத்தின் சித்தாந்தத்தைத் தற்காலச் சித்தாந்தமாகத் தொழிலாளர்கள் ஏற்பதற்கில்லை. தொடர்ந்து விரிவடைந்துவரும் மனித உணர்வு கடந்த காலத்தின் கரத்தால் குரல்வளை பிடித்து நசுக்கப்படுவதை தொழிலாளர்கள் அனுமதிக்க முடியாது; இன்றைக்கு அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது; எதிர்கால நம்பிக்கையும் கிடையாது. ஸ்தலப் பிரத்தியேகத்தன்மை என்ற குறுகிய சட்டைக்குள் வட்டத்திற்குள் அதனை அமுக்கி விடுவதை அனுமதிக்கவும் முடியாது. மற்ற நாடுகளின் அனுபவத்தை வழிகாட்டியாகக் கொண்டும், நமது குறைகளை சீர்செய்தும், மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்தவும், அரசியல் வாழ்க்கையை மாற்றிப் புனரமைக்கவும் தொழிலாளர்கள் தொடர்ந்து வற்புறுத்த வேண்டும். மக்களின் வாழ்க்கையைப் புனர்நிர்மானித்து வடிவமைப்பதற்குத் தேசியம் குறுக்கே நின்றால், அப்பொழுது தேசியத்தைத் தொழிலாளர்கள் மறுதலிக்க வேண்டும்.

     தொழிலாளரின் கோட்பாடு சர்வதேசியமாகும். எனினும் தொழிலாளர்கள் தேசியத்தில் அக்கறை கொண்டுள்ளனர். ஏனெனில் ஜனநாயகத்தின் சக்கரம் – பிரதிநிதித்துவம் வாய்ந்த நாடாளுமன்றம், பொறுப்பான நிர்வாகம், அரசியல் சட்ட சம்பிரதாயங்கள் ஆகியவை – தேசிய உணர்வால் ஐக்கியப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் நன்றாகச் செயல்படுகிறது. தொழிலாளர்களுக்குத் தேசியம் என்பது தங்களது லட்சியத்தை அடையும் ஒரு வழிதான். அவ்வாறில்லாமல், வாழ்க்கையின் அத்தியாவசிய கோட்பாடுகள் என்று தொழிலாளர்கள் எவற்றைக் கருதுகிறார்களோ அவற்றைத் தியாகம் செய்ய அவர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய இறுதி லட்சியமாக அது ஆகிவிட முடியாது.

சுதந்திரம்: ஒரு தவறான அணுகுமுறை

     சுதந்திரத்தைப் பொறுத்தவரை, அதன் முக்கியத்துவத்தைத் தொழிலாளர்கள் உணர்கின்றனர். ஆனால் சுதந்திரம் பற்றி ஒரு தவறான அணுகுமுறையும், அதன் முக்கியத்துவம் பற்றி தவறான கருத்தும் உள்ளது என்றும் தொழிலாளர்கள் நினைக்கின்றனர். ஒரு நாட்டின் சுதந்திரம் ஐய நிலையிலான எந்தக் குறிப்பிட்ட தன்மை கொண்ட சர்க்கார் அல்லது சமூக அமைப்புடன் முடிச்சுப் போட்டுக் கொள்வதில்லை. பெயரளவிலான சுதந்திரம் உள் அடிமைத்தனத்தையே தோற்றுவிக்கும்.

     சுதந்திரம் என்பது ஒரு நாடு வெளி நிர்ப்பந்தம் இல்லாமல் அதன் அரசாங்க வடிவத்தையும் அதன் சமூக அமைப்பையும் நிர்ணயிக்க அதற்குள்ள சுதந்திரத்தைக் குறிக்குமே தவிர வேறல்ல. எத்தகைய அரசாங்கம் அமைக்கப்படுகிறது, எத்தகைய சமுதாயம் நிர்மாணிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உள்ளது சுதந்திரத்தின் மதிப்பு. எந்த நோக்கத்துக்காக உலகம் இன்று போராடிக் கொண்டிருக்கிறதோ அந்த நோக்கத்துக்கு எதிராக அரசாங்க வடிவமும் சமுதாய அமைப்பும் இருக்குமாயின் அந்த சுதந்திரத்திற்கு மதிப்பு அதிகம் இல்லை. புதிய இந்தியா என்ற கோஷத்துக்கு அதிக முக்கியத்துவமும், ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற கோஷத்துக்கு குறைந்த முக்கியத்துவமும் இருக்க வேண்டுமென்று தொழிலாளர்கள் கருதுகின்றனர். புதிய அரசியல் அமைப்புக் கொண்ட இந்தியாவை நிறுவ வேண்டும் என்ற அறைகூவல் சுதந்திரம் வேண்டும் என்ற அறைகூவலை விட அதிகம் வலுமிக்கதாக இருக்கும். ஒரு புதிய இந்தியாவில் ஒரு புதிய அரசியல் அமைப்பு என்ற கருத்தோட்டம் விடுதலை பெற வேண்டும் என்ற உறுதியைப் பெரிதும் பலப்படுத்தும். எதற்காக சுதந்திரம், யாருக்காக சுதந்திரம் என்றெல்லாம் இப்போது கேட்கப்படும் பல இக்கட்டான, தர்ம சங்கடமான கேள்விகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும்.

     இரண்டாவதாக, யுத்த முயற்சிக்கு ஆதரவளிப்பதற்காக உடனடியாக சுதந்திரம் பெற வேண்டுமென்று ஒரு நிபந்தனை போடுவதை புரிந்து கொள்ள தொழிலாளர்களுக்கு கஷ்டமாக உள்ளது. சில நபர்களின் கண்ணோட்டத்தில் இந்த நிபந்தனை ஒரு திடீர் மாற்றத்தைக் குறிக்கிறது. விடுதலைபெற இந்தியாவிற்குள்ள உரிமையைக் கபளீகரம் செய்ய ஏதேனும் திடீர் சதி நடக்குமானால் இந்த நிபந்தனையை நியாயப்படுத்த முடியும். அவ்வாறு சதி நடைபெற்றுவருவதற்கான சான்று ஏதும் இல்லை. ஒருக்கால் அத்தகைய சதி ஏதாவது இருக்குமானால், சதிகாரர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் வெற்றிபெற முடியாது. மக்களின் ஐக்கிய பலத்துடன் இந்தியா சுதந்திரம் கோரினால், சுதந்திரத்திற்கான அதன் உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவின் சுதந்திரம் இன்னமும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியர்களிடையே உள்ள ஒற்றுமையின்மைதான். இந்திய சுதந்திரத்தின் எதிரிகள் இந்தியர்களே தவிர வேறு எவர்களும் அல்ல.

தொழிலாளர்களும் யுத்தமும்

     இந்த யுத்தத்தில் என்ன சம்பந்தப்பட்டுள்ளது என்பதை முழுமையாகப் புரிந்துகொண்ட பின்பே யுத்தத்தின்பால் தொழிலாளரின் கண்ணோட்டம் உருவாயிற்று. உலகத்திலிருந்து யுத்தம் ஒழிக்கப்பட வேண்டுமெனில் யுத்தத்தையும் சமாதானத்தையும் அவசியம் வெல்ல வேண்டுமென்பதைத் தொழிலாளர் புரிந்து கொண்டுள்ளனர். நாஜிகளைத் தோற்கடித்து ஒரு புதிய நாஜி அரசியல் அமைப்புகான சாத்தியப்பாடுகளை அழித்தால் மட்டும் போதாது என்பதையும், இது பழைய அமைப்பிற்கான போர் அல்ல என்பதையும் தொழிலாளர்கள் அறிவார்கள். ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதே இந்த யுத்தத்திற்குத் தரப்படும் விலையாக இருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வெறும் கோஷங்களாக இல்லாமல் வாழ்க்கையின் யதார்த்தமாகத் திகழும். ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் மேலான கேள்வி, இந்தப் புதிய அமைப்பு எப்படி யதார்த்தமாகும் என்பதாகும். இந்தக் கேள்வி பற்றி தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர். இந்த லட்சியங்களெல்லாம் நிறைவேற வேண்டுமானால், அதற்கு அடிப்படையான நிபந்தனை உண்டு. யுத்தத்தில் வெற்றி பெறுவதுதான் அந்த நிபந்தனை என்று தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இன்றைய யுத்தத்தின் இரு அம்சங்கள்

     இந்த யுத்தத்தால் ஏராளமான நல்ல பலன்கள் கிட்டும் சாத்தியப்பாடுகள் உள்ளன. ஒரு புதிய அமைப்பை தோற்றுவிப்பதை அது உறுதி செய்கிறது. இந்த யுத்தம் மற்ற யுத்தங்களிலிருந்து மாறுபட்டது என்பதைத் தொழிலாளர்கள் காண்கின்றனர். மற்றயுத்தங்களிலிருந்து வேறுபடுத்தும் இரு அம்சங்கள் உள்ளன. முதலாவதாக முந்திய யுத்தங்களில் போல, உலகின் பிரதேசங்களை மிகவும் பலம் வாய்ந்த நாடுகளிடையே பங்கு போட்டுக் கொள்வதற்கான யுத்தமல்ல இது. இந்த யுத்தத்தில், உலகின் பிரதேசங்களை பங்குபோட்டுக் கொள்வது ஒரே காரணமாக இல்லை. எத்தகைய அரசு வடிவங்கள் மற்றும் அமைப்புகளின் கீழ் மனித சமுதாயம் வாழப்போகிறது என்பதுபற்றிய தத்துவார்த்த மோதல் இந்த யுத்தத்தில் இருக்கின்றன. இரண்டாவதாக, மற்ற யுத்தங்கள் போல் இந்த யுத்தம் வெறும் யுத்தம் மட்டுமல்ல. எதிரியை முறியடித்து அவனது தலைநகர்நோக்கி முன்னேறி, சமாதானத்தை திணிப்பது மட்டுமல்ல இந்த யுத்தத்தின் நோக்கம். இந்த யுத்தம், யுத்தமாக இருப்பதோடு ஒரு புரட்சியுமாகும்; வாழ்க்கையில் அடிப்படை மாற்றத்தை கொண்டு வந்து புனரமைக்கும் புரட்சியாகும். இந்த அர்த்தத்தில் இது ஒரு மக்கள் யுத்தமாக இருக்க முடியும். அப்படி இல்லாமலிருந்தால்தான் அதை ஒரு மக்கள் யுத்தமாக மாற்ற முடியும், மாற்ற வேண்டும்.

     இந்த உண்மைகளின் பின்னணியில் இந்த யுத்தம் பற்றியும் அதன் பலனைப் பற்றியும் தொழிலாளர்கள் அக்கறையில்லாமல் இருக்கமுடியாது. சென்றகாலத்தில் புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மீண்டும் மீண்டும் முறியடிக்கப்பட்டன என்பதைத் தொழிலாளர்கள் அறிவர். அதற்குக் காரணம், ஜனநாயகம் அமைக்கப்பட்டபின், அது பிற்போக்காளர் கரங்களில் விடப்பட்டதேயாகும். எதிர்காலத்தில் இம்மாதிரி தவறு மீண்டும் செய்யப்படாமல் இருப்பதை உலக மக்கள் கவனித்து கொள்வார்களேயானால், இந்த யுத்தத்தில் போராடியும் புதிய அரசியல் அமைப்பை நிறுவி அதனை உலக ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக ஆக்க முடியும். 

சரியான தலைமை

     நாட்டிற்கு ஒரு தலைமை தேவைப்படுகிறது; யார் வழிகாட்டமுடியும் என்பதுதான் கேள்வி. நாட்டிற்குத் தேவைப்படும் தலைமையை அதற்கு அளிப்பதற்குத் தொழிலாளர்களுக்கு திறமை உள்ளது என்று துணிந்து கூறுவேன். மற்ற விஷயங்களோடு, சரியான தலைமைக்குத் தேவைப்படுபவை லட்சியநோக்கும் சுதந்திரமான சிந்தனையும். மேல்மட்டத்தினருக்கு லட்சியநோக்கு இருப்பது சாத்தியமே; ஆனால் சுதந்திரமான சிந்தனை சாத்தியமில்லை. நடுத்தரவர்க்கத்தைப் பொறுத்தவரை, லட்சியநோக்கும் சுயசிந்தனையும் சாத்தியமில்லை. மேல்தட்டினருக்கு உள்ள தாராளப்போக்கு மத்தியதரவர்க்கத்திற்குக் கிடையாது; ஏனெனில் லட்சியநோக்கை வரவேற்று வளர்க்க தாராளப்போக்கு அவசியம். புதிய அரசியல் அமைப்புக்கான வேட்கை மத்தியதர வர்க்கத்திடம் இல்லை; அந்த நம்பிக்கையில்தான் தொழிலாளர் வாழ்கின்றனர். எனவே தங்களின் அரசியல் லட்சியத்தை அடைய இந்தியர்கள் பின்பற்றிய சென்றகாலத்தின் நியாயமான, பாதுகாப்பான வழிகளை திரும்பக் கொண்டு வருவதில், தொழிலாளர்களுக்கு ஒரு தெளிவான பொறுப்பு உள்ளது. இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் தொழிலாளரின் தலைமை என்பது போராடுவதற்கும் ஐக்கியத்தை ஏற்படுத்துவதுமாகும். இந்த வெற்றியின் பலன்கள் சுதந்திரமும் புதிய சமூக அமைப்புமாகும். இத்தகைய வெற்றியை ஈட்ட எல்லோரும் போராட வேண்டும். வெற்றியின் பலன்கள் எல்லோருக்குமான மூதாதையர்கள் வழி சொத்தாக இருக்கும். அந்த சொத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு ஐக்கிய இந்தியாவுக்குள்ள உரிமைகளை மறுப்பதற்கு யாரும் இருக்க முடியாது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It