ambedkar 480

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, ஏப்ரல் 4, 1944, பக்கம் 1929)

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, பின்கண்டவாறு முன்மொழிகிறேன்:

                        ‘1934 ஆம் வருடத் தொழிற்சாலைகள் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான இந்த மசோதாவை அவையின் பரிசீலனைக்கு முன்வைக்கிறேன்.”

            இந்த மசோதா மிகவும் எளிமையானதும் சர்ச்சைக்கு இடமற்றதுமாகும். நான்கு திருத்தங்கள் செய்ய இந்த மசோதா கோருகிறது; 9,19,23,45 மற்றும் 54 ஆகிய பிரிவுகள்தான் இந்த மசோதாவால் திருத்தம் செய்யப்பட வேண்டிய பிரிவுகளாகும்.

            ஒரு தொழிற்சாலையின் உரிமையாளர் அந்தத் தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு முன்னர் சில குறிப்பிட்ட தகவல்களைத் தொழிற்சாலைகளின் கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும் என்பதை 9 ஆவது பிரிவு சட்டரீதியாகக் கட்டாயமாக்குகிறது. ஆனால் இப்போது அப்படியல்ல. தற்சமயம் இந்தப் பிரிவின் படி, தொழிற்சாலைகளின் கண்காணிப்பாளர் தமக்கு அவசியமாவை என்று கருதும் சில தகவல்களைத் தொழிற்சாலையின் உரிமையாளரிடமிருந்து கோரிப்பெறமுடியாது; தொழிற்சாலையின் உரிமையாளரும் இத்தகைய தகவல்களை வழங்க எவ்விதத்திலும் கட்டுப்பட்டிருக்கவில்லை. அண்மையில், தொழிற்சாலை ஒன்றைத் தொடங்க விரும்பிய ஒருவர் தொழிற்சாலைகளின் கண்காணிப்பாளருக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட சில முக்கிய தகவல்களை அளிப்பதற்கு மறுத்துவிட்டார். இது போன்ற குறைபாடுகளை அகற்றும் பொருட்டே 9 ஆவது பிரிவு திருத்தப்படுகிறது. கண்காணிப்பாளருக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட தகவல்களைத் தரும்படிக் கோரும் அதிகாரத்தை இந்தத் திருத்தம் அரசாங்கத்துக்கு வழங்குகிறது.

            19வது பிரிவு தொழிற்சாலைகளில் தண்ணீர் வழங்கீடு, அலம்புமிடங்கள் சம்பந்தப்பட்டதாகும். இப்போதுள்ளபடி இந்தப் பிரிவு தீங்கு உண்டுபண்ணக்கூடிய, அருவருப்பான பொருள்கள் பயன்படுத்தப்படும் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகளில்தான் அலம்பிடங்கள் அமைக்க வகை செய்துள்ளது. ஏனைய தொழிற்சாலைகள் இத்தகைய அலம்பிடங்களைப் பராமரிக்க வேண்டும் என இது வற்புறுத்தவில்லை. இந்தக் கட்டுப்பாடு அகற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் தீங்கு பயக்கும், அருவருப்பான பொருள்களைப் பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி எல்லாவகையான தொழிலாளர்களுக்குமே அலம்பிடங்கள் இருப்பது அவசியமாகும். எனவே, அனைத்துத் தொழிற்சாலைகளுமே அலம்பிடங்களைப் பராமரிப்பதை இந்தத் திருத்தம் கட்டாயமாக்குகிறது.

            23 ஆவது பிரிவு எரியும் கட்டிடத்திலிருந்து ஆட்களை மீட்டுக் கொண்டு வருவதற்குரிய கருவிகளைப் பற்றியதாகும். இந்தப் பிரிவும் குறைபாடுடையதாக இருப்பதைக் காண்கிறோம். இது விஷயத்தில் இந்தப் பிரிவு தொழிற்சாலை உரிமையாளர் தனது விருப்பப்படி நடந்துகொள்ள அனுமதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலை இத்தகைய சாதனங்களை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும் என்று சட்டரீதியாக அதனைக் கட்டாயப்படுத்தும் அதிகாரத்தை இது அரசாங்கத்துக்கு வழங்கவில்லை. எனவே, ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் அங்குள்ள சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப இத்தகைய சாதனங்கள் எத்தனை வைத்திருப்பது அவசியம் என்று தொழிற்சாலைகளின் கண்காணிப்பாளர் கருதுகிறாரோ அத்தனை சாதனங்களை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசாங்கத்துக்கு வழங்கும் வகையில் 23வது பிரிவு திருத்தப்படுகிறது.

            அடுத்து, ஐயா, 45 மற்றும் 54 ஆவது பிரிவுகளுக்கு வருகிறேன். இந்தப் பிரிவுகள் இரண்டு விஷயங்களைக் கையாள்கின்றன. தொழிற்சாலையில் ஒரு குழந்தையும் ஒரு பெண்ணும் எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது பற்றியவை இந்தப் பிரிவுகள், நேர வரம்புகள் குறித்தும் இந்தப் பிரிவுகள் குறிப்பிடுகின்றன. ஒரு தொழிற்சாலையில் ஒரு பெண் அல்லது குழந்தை வேலைசெய்யவேண்டிய நேரம் அல்லது தற்போதைய 13 மணிநேர வரம்புகள் குறித்த விதிமுறைகளில் இந்தத் திருத்தம் 7.30 மணி என்பதை 8.30 மணியாக மாற்றுவதுதான். இந்த மாற்றம் செய்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் சர்வதேச நேரத்தில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம்; இரண்டாவது காரணம் வெளிச்சத்தை மிச்சப்படுத்த வேண்டிய அவசியம்.

            ஐயா, இந்த மசோதாவின் ஷரத்துக்கள் பற்றி மேற்கொண்டு விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன். எனவே இந்த மசோதாவை முன்மொழிகிறேன்.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): மசோதா முன்மொழியப்படுகிறது:

“1934 ஆம் வருடத் தொழிற்சாலைகள் சட்டத்தை மேலும் திருத்தும் இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று மௌல்வி முகமது கனி பிரரேபித்திருக்கிறார். ஆனால் அவர் தற்போது அவையில் இல்லை. எனவே, மசோதாவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் நடைமுறையை அவை இப்போது மேற்கொள்ளலாம்.

திரு.முகமது நௌமான்: (பாட்னா, சோட்டா நாக்பூர் மற்றும் ஒரிசா: முகமதியர்): ஐயா, மசோதாவையும் மாண்புமிகு உறுப்பினர் எடுத்துரைத்த அதன் கோட்பாட்டையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால் மாண்புமிகு உறுப்பினர்களையும் கலந்தாலோசிக்கவில்லை என்பதே எனது ஒரே ஆட்சேபனை; ஏனென்றால் இத்தகைய திருத்தங்கள் அவசியம்தானா என்பதை உண்மையில் கூறுவதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் அவர்கள்தான் என்பது எனது கருத்து. தொழிற்சாலைகளை நடத்தி வருபவர்கள் அல்லது அவற்றை அமைத்து வருபவர்கள் இன்னின்னவாறு நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட சில நிபந்தனைகளை விதிக்க 19ஆவது பிரிவில் வகைசெய்ய உத்தேசிப்பதுதான் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம். இந்த விஷயத்தில் வாணிக சமுதாயத்தின் கருத்தையும் தொழில் முனைவர்களின் கருத்தையும் கணக்கிலெடுத்துக் கொள்ள அரசாங்கம் உரிய முயற்சி எடுத்துக்கொண்டிருந்தால் இந்த மசோதாவை நான் மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பேன்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, மதிப்பிற்குரிய என் நண்பர் திரு.முகமது நௌமான் எழுப்பியுள்ள பிரச்சினையைப் பொறுத்தவரையில் ஒன்று கூற விரும்புகிறேன். அகில இந்தியாவிலுள்ள தொழிற்சாலைகளின் கண்காணிப்பாளர்களது மாநாடு பரிந்துரைத்துபடியே இந்த மசோதா தயாரிக்கப்பட்டது. அவர்கள்தான் இப்போதுள்ள நிலைமையில் இந்த மசோதா குறைபாடுடையது என்று கருத்துத் தெரிவித்தார்கள். இந்நிலைமையில் அரசாங்கம் செய்ததெல்லாம் அகில இந்திய தொழிற்சாலைகளின் கண்காணிப்பாளர்கள் ஒருமனதாகத் தெரிவித்த பரிந்துரைகளுக்குச் செயல்வடிவம் அளித்ததுதான். வாணிகக் கழகங்கள் கலந்தாலோசிக்கப்பட்டனவா என்பதைக் கூற இயலாத நிலைமையில் இருக்கிறேன்; அது சம்பந்தமாக ஆவணங்கள் ஏதும் என்னிடம் இல்லை. வாணிகக் கழகங்கள் தொழிற்சாலை சட்டங்கள் சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட வேண்டிய அமைப்புகள் அல்ல என்று கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தொழில் அதிபர்களது நிறுவனங்கள் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கும் என்றே நம்புகிறேன்.

திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் இதுதான்:

‘1934 ஆம் வருடத் தொழிற்சாலைகள் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான இந்த மசோதா அவையின் பரிசீலனைக்கு முன்வைக்கப்படுகிறது.”

தீர்மானம் ஏற்கப்பட்டது.

திரு.சி.சி.மில்லர்: (வங்காளம்-ஐரோப்பியர்): ஐயா, பின்கண்டவாறு பிரரேபிக்கிறேன்:

“உபபிரிவு (1) இன் (எஃப்) பகுதியுடன் சேர்க்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் மசோதாவின் ஷரத்து 2இல் பின்கண்ட சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்:

‘இந்த சட்டத்தின் நோக்கங்களுக்காக.

ஐயா, இந்தத் திருத்தம் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறேன். மதிப்பிற்குரிய உறுப்பினர் ஏற்கெனவே கூறியது போல், தொழிற்சாலை ஆய்வாளருக்கு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் சில குறிப்பிட்ட விஷயங்கள் சம்பந்தமாக வழங்க வேண்டிய தகவல்கள் குறித்து மூலப்பகுதி 9 கூறுகிறது. மேற்கொண்டு தகவல்கள் தேவைப்பட்டால் அவற்றை அளிப்பதற்கு மசோதாவின் பிரிவு 73 வகை செய்வதாகத் தோன்றுகிறது. அப்படியிருக்கும்போது இந்தத் திருத்தம் தேவைதானா என்று எவருக்கும் ஐயம் எழுவது இயல்பே. ஆனால் அரசு கொண்டு வந்திருக்கும் இந்தத் திருத்தம் முறைப்படி இருப்பதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்கும்போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஏராளமான திருத்தங்கள் கொண்டுவருவதை விட இந்தத் திருத்தம் உசிதமானது என்று நாங்கள் நினைத்தோம். நாங்கள் கேட்பதெல்லாம் தொழிற்சாலைச் சட்டம் சம்பந்தப்பட்ட தகவல்கள் மட்டுமே கோரிப்பெறும் உரிமை தொழிற்சாலை கண்காணிப்பாளருக்கு இருக்க வேண்டும் என்பதே ஆகும். மிகவும் மிதமான இந்தத் திருத்தத்தை மாண்புமிகு உறுப்பினர் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்.

திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): பின்வரும் திருத்தம் முன்மொழியப்படுகிறது:

‘உபபிரிவு (1) இன் (எஃப்) பகுதியுடன் சேர்க்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் மசோதாவின் ஷரத்து 2 இல் பின்கண்ட சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்:

                        ‘இந்த சட்டத்தின் நோக்கங்களுக்காக”

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: திருத்தத்தை ஏற்கிறேன்.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): பின்வரும் திருத்தம் முன்மொழியப்படுகிறது.

            ‘உபபிரிவு 1 இன் (எஃப்) பகுதியுடன் சேர்க்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் மசோதாவின் ஷரத்து 2ல் பின்கண்ட சொற்கள் சேர்க்கப்பட வேண்டும்:

            ‘இந்த சட்டத்தின் நோக்கங்களுக்காக”

            திருத்தம் ஏற்கப்பட்டது.

            திருத்தப்பட்ட ஷரத்து 2 மசோதாவில் சேர்க்கப்பட்டது. 3,4,5 ஷரத்துக்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டன. ஷரத்து 1 மசோதாவில் சேர்க்கப்பட்டது.

            சட்டத்தின் தலைப்பும் பீடிகையும் மசோதாவில் சேர்க்கப்பட்டன.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, பின்வருமாறு முன்மொழிகிறேன்:

            ‘திருத்தப்பட்ட மசோதா ஏற்கப்பட வேண்டும்.”

            திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): பிரேரணை இதுதான்:

            ‘திருத்தப்பட்ட மசோதா ஏற்கப்பட வேண்டும்.”

            மசோதா ஏற்கப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It