(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி IV, நவம்பர் 13, 1943, பக்கங்கள் 252-254)
மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):
“1926 – ஆம் வருட இந்தியத் தொழிற்சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தக் கோரும் இந்த மசோதாவை பொதுமக்களின் கருத்தறிய சுற்றுக்கு விட வேண்டுமென்று முன்மொழிகிறேன்.”
இந்த மசோதா குறித்து பொதுமக்களின் கருத்து அறியும் பொருட்டு சுற்றுக்கு விடுவதே இதன் நோக்கமாகும். எனவே, இந்த மசோதாவில் அடங்கியுள்ள விதிகள் குறித்து எவ்வகையிலும் விரிவான விவாதம் நடத்தி அவையின் நேரத்தை எடுத்துக் கொள்வது அவசியமற்றது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த மசோதாவின் பிரதான அம்சங்கள் என்ன, இதனை அரசு ஏன் கொண்டுவருகிறது என்பதை அவைக்குக் கூறினால் போதுமானது என்று கருதுகிறேன்.
இந்த மசோதா மூன்று பிரதான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக, தொழிற்சங்கத்தை தொழிலதிபர் அங்கீகரிப்பதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது. இரண்டாவதாக, இவ்வாறு தொழிலதிபரால் அங்கீகரிக்கப்படும் தகுதியைப் பெறுவதற்கு தொழிற்சங்கம் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென்று மசோதா கோருகிறது. மூன்றாவதாக, இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா நிபந்தனைகளையும் முறையாக நிறைவேற்றி, அங்கீகாரத்துக்குத் தகுதிபெற்ற தொழிற்சங்கத்தை தொழிலதிபர் அங்கீகரிக்க மறுப்பதை சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க ஒரு குற்றமாக மசோதா அறிவிக்கிறது.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, இந்த மசோதாவின் தகுதிகள் குறித்து இப்போது விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. இந்த மசோதா தற்போது சுற்றுக்கு விடப்படுவதால் இப்போதைய கட்டத்தில் அதில் அரசாங்கம் முன் வைத்திருக்கும் ஷரத்துகள் தற்காலிகமானவையே என்பது தெளிவு. இவை இறுதியானவை அல்ல. தொழிலாளர் தலைவர்கள், தொழிலதிபர்கள், மாகாண அரசாங்கங்கள், மற்றும் இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர் போன்றோரின் கருத்துகளைப் பெறும் வரை இந்த ஷரத்துகளை இறுதியானவையாக்கும் உத்தேசம் ஏதும் அரசாங்கத்துக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, மசோதா சுற்றுக்கு விடப்படுவதன் விளைவாக பெறப்படும் பல்வேறு பரிந்துரைகளையும், யோசனைகளையும் கருத்திற்கொண்டு அரசாங்கம் செயல்படும்போது இம்மசோதா இப்போதிலிருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கக்கூடும்.
திரு.என்.எம்.ஜோஷி (அதிகார சார்பமற்ற நியமன உறுப்பினர்): இதுவே சரியான நடைமுறை.
மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அனைவரது கருத்தும் இவ்வாறே இருக்கும் என்று நம்புகிறேன். எனவே, இப்போது அவைக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் இந்திய அரசாங்கம் இந்தப் பொறுப்புகளை ஏன் ஏற்றுக்கொண்டது என்பதைத்தான்.
இந்த விஷயம் ஏற்கெனவே பரிசீலிக்கப்பட்டது என்பதையும், தொழிற்சங்கங்களை தொழிலதிபர்கள் அங்கீகரிக்கும் பிரச்சினை சம்பந்தமாக மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது என்பதையும் அவை அறியும். தொழிலாளர்கள் பிரச்சினையை ஆய்வு செய்து அறிவதற்கு மன்னரால் ராயல் கமிஷன் அமைக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். தொழிற்சங்கங்கள் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியுறுவதற்கும், தொழிலதிபர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நேச உறவுகளைக் கட்டி வளர்ப்பதற்கும் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை ராயல் கமிஷன் பெரிதும் வலியுறுத்தி இருந்ததை அது வெளியிட்ட அறிக்கையைப் படித்த மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் அறிந்திருப்பார்கள். சட்ட நடவடிக்கைகள் ஏதுமின்றி, தொழிலதிபர்களின் விருப்பார்வ சம்மதத்தோடு தொழிற்சங்க அங்கீகாரத்தைப் பெற முடியுமானால் அது மிகவும் உகந்ததாகவும், விரும்பத்தக்கதாகவும் இருக்கும் என்று அப்போதைய கட்டத்தில் ராயல் கமிஷன் தெரிவித்த கருத்தும் அவைக்கு நினைவிருக்கும். அது மட்டுமல்ல, தொழிற்சங்கங்களை தாமே முன்வந்து அங்கீகரிக்க தொழிலதிபர்கள் தயாராக இல்லை என்பதை 1929-ல் 12 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு – ராயல் கமிஷன் அறிவித்ததும் கூட அவைக்கு நினைவிருக்கும். இன்னும் சொல்லப்போனால் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதை எதிர்த்து ராயல் கமிஷன் முன் தொழிலதிபர்கள் என்ன ஆட்சேபனைகளைத் தெரிவித்தார்களோ அதே ஆட்சேபனைகளைத் தான் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க மறுப்பதற்கு இப்போதும் கூறுகின்றனர். எனவே, நிலைமை எவ்வகையிலும் மேம்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
1937-ல் மாகாண சுயாட்சி உதயமாகி, புதிய சட்டத்தின்படி பெரும்பாலான மாகாண அரசாங்கங்கள் பதவியேற்ற பிறகு இந்தப் பிரச்சினை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை மதிப்பிற்குரிய அவை உறுப்பினர்கள் நினைவில் வைத்திருப்பர் என்று நம்புகிறேன். தொழிற்சங்கங்களைத் தொழிலதிபர்கள் அங்கீகரிப்பது சம்பந்தமாக பல தனிநபர் மசோதாக்களும் அமைச்சரவைகளின் மசோதாக்களும் அப்போது கொண்டுவரப்பட்டன. இது குறித்து தனியார் மசோதா ஒன்றும், அப்போதைய அமைச்சரவையின் மசோதா ஒன்றும் சென்னையில் தாக்கல் செய்யப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதே போன்று பம்பாயில் பம்பாய் தொழில் தகராறுகள் மசோதாவை அரசாங்கம் கொண்டுவந்தது. மத்திய மாகாணங்களில் இதே மாதிரியான ஒரு மசோதாவைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டு, அதற்கான நகல் ஒன்றும் தயாரிக்கப்பட்டது. ஐக்கிய மாகாணங்களிலும் இவ்வாறே செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக பம்பாயில் தவிர ஏனைய மாகாணங்களில் இந்த மசோதாக்கள் சட்டமாவதற்கு முன்பே அங்கிருந்த அமைச்சரவைகள் பதவி விலகி விட்டன. எனினும், மாகாண சுயாட்சி நடைமுறைக்கு வந்த பிறகு மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பொருட்டு இந்திய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து கொண்டது. இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று அவ்வப்போது தொழிலாளர் நலத்துறை மாநாடுகளை நடத்துவதாகும். இத்தகைய முதல் மாநாடு 1940ல் நடைபெற்றது. அப்போது இந்தப் பிரச்சினை மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் இடையே விவாதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவதற்கு மாநாட்டின் முன் போதிய தகவல்கள் இல்லை என்பது அப்போது உணரப்பட்டது. எனவே இந்த விஷயம் குறித்து மாகாண அரசாங்கங்கள், தொழிலாளர் தலைவர்கள், தொழிலதிபர்கள் போன்றோரின் கருத்தறிவதற்காக மாகாண அரசாங்கங்களுக்கு இதனை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசாங்கத்தை மாநாடு கேட்டுக் கொண்டது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட கருத்துகள் 1941-ஆம் ஆண்டில் கூட்டப்படவிருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மாநாட்டின் இரண்டாவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அது தெரிவித்தது. எனவே இதன் பேரில், இது விஷயம் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளைச் சேகரித்து அனுப்பும்படி மாகாண அரசாங்கங்களுக்கு மத்திய அரசாங்கம் கடிதம் எழுதிற்று. அவ்வாறே பல்வேறு மாகாண அரசாங்கங்களும் ஏராளமான விவரங்களையும் கருத்துகளையும் சேகரித்து மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பிவைத்தன. இவை யாவும் 1941ல் நடைபெற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போது பின்கண்ட முடிவு எடுக்கப்பட்டது: இது விஷயம் குறித்து மத்திய அரசாங்கம் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அது முற்றிலும் மாகாண ரீதியிலானதாக இருத்தலாகாது என்றும், மாகாண அரசாங்கங்களிடமிருந்தும், பிரச்சினையில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளிலிருந்தும் வரும் பதில்களை அடிப்படையாகக் கொண்டு அந்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாக மத்திய அரசாங்கம் இப்பணியை மேற்கொண்டது. பல்வேறு மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களையும் சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட தரப்பினர் தெரிவித்த கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டே இப்போதைய இந்த மசோதா தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த மசோதாவின் பிறப்பு மூலம். தொழிலாளர்கள் சம்பந்தமாக சட்டம் இயற்றுவது மாகாண அரசாங்கத்தின் பொறுப்பு என்றாலும் மத்திய அரசாங்கம் இப்பணியை தானே மேற்கொண்டதற்கு இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் காரணம்.
இந்த மசோதா குறித்து மேற்கொண்டு எதுவும் கூறுவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. நான் ஏற்கெனவே கூறியது போன்று இந்தப் பிரேரணைகள் எல்லாம், முன்மொழிவுகள் எல்லாம் தற்காலிகமானவையே, முடிவானவை அல்ல. இந்த நகல் மசோதா பற்றிப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் பெறும் வரை இது விஷயத்தில் முடிவு ஏதும் எடுப்பதற்கில்லை. நான் இப்போது சொல்ல விரும்புவதெல்லாம் இந்த சட்டமன்றம் எதிர் நோக்கிய மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்பதே ஆகும். மேலும் இது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த மசோதாவாகும். அமெரிக்காவையும் சுவீடனையும் தவிர மற்ற நாடுகளில் எல்லாம் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கும் விஷயம் சுயவிருப்பத்துக்கு விடப்பட்டிருக்கிறது. இது ஒரு சர்ச்சைக்குரிய மசோதாவாக இருக்காது என்று நம்புகிறேன். மசோதாவிலுள்ள எந்த ஒரு ஷரத்தையும் பற்றி நான் முடிவு எடுப்பதற்கு முன்னர் பொது மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்டறிய விரும்புகிறேன். எனவே, அது சம்பந்தமான பிரேரணையை முன்வைக்கிறேன்.
திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): பிரேரணை முன்மொழியப்படுகிறது:
“1926-ஆம் வருட இந்தியத் தொழிற்சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தக் கோரும் இந்த மசோதாவை பொதுமக்களின் கருத்தறிய சுற்றுக்கு விட வேண்டுமென்று முன்மொழிகிறேன்.”
* * *
1திரு.பி.ஜே.கிரிபித்ஸ் (அசாம்: ஐரோப்பியப் பிரதிநிதி): தலைவர் அவர்களே, பொது மக்களின் கருத்தறிய மசோதாவைச் சுற்றுக்கு விட வேண்டும் என்பதே இப்போதைய முன் மொழிவாகும்… தொழிற்சங்கங்களுக்குப் பல பகைவர்கள் இருக்கிறார்கள் என்பதை மாண்புமிகு நண்பருக்கு நினைவூட்டுகிறேன்.
மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தொழிலதிபர்கள் அவர்களில் ஒருவர்.
* * *
(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதிகள் IV, நவம்பர் 13, 1943, பக்கம் 256)
1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, சுற்றுக்கு விடுவதற்கு நான் முன்வைத்திருக்கும் மசோதா சர்ச்சையைக் கிளர்த்தி விட்டிருக்கிறது. இது எதிர்பாராததாகும். நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல் இந்த மசோதா சர்ச்சைக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதேசமயம் எத்தகைய சர்ச்சையிலும் ஈடுபட நான் விரும்பவில்லை என்பதையும், பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன் என்பதையும் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தினேன். இந்த விவாதத்தில் பங்கு கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்த மதிப்பிற்குரிய உறுப்பினர்களை எவ்வகையிலும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை நான் செய்யவில்லை. அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வேன் என்பதையும், உரிய சந்தர்ப்பம் வரும்போது அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வேன் என்பதையும் அவர்களுக்கு உறுதி கூறுகிறேன்.
இப்போது நான் எழுந்து பேசுவது சபையின் முன் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வாதங்களுக்குப் பதில் கூறுவதற்காக அல்ல. எனினும் அதே சமயம் என்னுடைய நண்பர் திரு.கிரிபித்ஸ் முன்வைத்துள்ள சில விமர்சனங்களுக்கு நான் பதில்கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் தெரிவித்துள்ள ஒரு கருத்து மிகவும் நியாயமற்றது என்று கருதுகிறேன். ஒரு வகையில் தெளிவற்றதும், அவருடைய சொற்களிலேயே கூறுவதானால் பொருளற்ற ஷரத்துகளைக் கொண்டதுமான ஒரு மசோதாவை நான் கொண்டு வந்திருப்பதாக அவர் கூறினார். இத்தகைய தெளிவற்ற, பொருளற்ற ஷரத்துகளைக் கொண்ட ஒரு மசோதாவை பரிசீலிக்க வேண்டுமென்று அவையை நான் கேட்டுக் கொண்டிருப்பது நேர்மையற்றது, நியாயமற்றது என்பது அவரது வாதம். இந்த வாதத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலாவதாக இந்த மசோதாவின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குத் தெளிவற்ற அல்லது அர்த்தமற்ற எந்த விதிகளும் இதில் இருப்பதாக நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படியே ஒரு சில ஷரத்துகள் தெளிவற்றவையாகவும், வேறு சில ஷரத்துகள் இன்னும் அதிக விளக்கம் தேவைப்படுபவையாகவும் இருப்பதாக ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும்கூட இந்தக் குற்றச்சாட்டை நேர்மையானதாக நான் கருதவில்லை. இப்போது சபையின் முன் வைத்துள்ள இந்த மசோதாவை இப்போதைய அதன் வடிவத்தில் அப்படியே சட்டமாக்க வேண்டுமென்று அவையை நான் கேட்டால் அதை குறைகூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும்; ஆனால் நான் அவ்வாறு கேட்கவில்லை. மாறாக, பொது மக்களின் அபிப்பிராயத்தை அறிவதற்கு மசோதாவைச் சுற்றுக்கு விடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தான் கேட்கிறேன். இவ்வாறு சுற்றுக்கு விடப்படுமானால் பல்வேறு தரப்பினரின் வழிகாட்டுதலை அரசாங்கம் பெற முடியும்; இத்தகைய வழிகாட்டுதலின் மூலம் மசோதாவில் விடப்பட்ட இடைவெளிகளை முடிவில் நிரப்புவதும், தெளிவற்ற ஷரத்துக்களை திட்டவட்டமானவையாக ஆக்குவதும் சாத்தியமாகும். எனவே, திரு.கிரிபித்ஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன். இந்த மசோதாவை கோட்பாட்டளவில் தவறானதாகத் தாம் கருதுவதாகவும் திரு.கிரிபித்ஸ் கூறினார். இது அவரவர்களது அபிப்பிராயத்தைப் பொறுத்தது. இந்த மசோதா கோட்பாட்டளவில் முற்றிலும் ஆரோக்கியமானது, சட்டமாக்கப்படுவதற்கு அறவே தகுதியானது என்று இன்னொரு புறத்தில் பலர் கருத்துத் தெரிவித்ததையும் நாம் செவிமடுத்துக் கேட்டோம். எனவே, அவரது இந்தக் குற்றச்சாட்டை இங்கு நான் கணக்கிலெடுத்துக் கொள்ளப் போவதில்லை.
அவர் எழுப்பியிருக்கும் இரண்டாவது பிரச்சினை பிரதிநிதித்துவம் வாய்ந்த ஒரு தொழிற் சங்கம் என்பது என்ன என்பதை நான் விளக்கவில்லை என்பதாகும். இப்போது நான் கூறப்போவதை அவர் தமது மனத்தைப் புண்படுத்துவதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ஒன்றைக் கூறுகிறேன்: ஒன்று அவர் இந்த மசோதாவின் ஷரத்துக்களை படித்திருக்க மாட்டார் அல்லது அப்படியே படித்திருந்தாலும் அவற்றைப் புரிந்து கொண்டிருக்க மாட்டார். இந்த மசோதாவில் இரண்டு பிரதான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதை அதன் ஷரத்துக்களிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். முதல் நிபந்தனை – ஒரு தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் அது சில கட்டுப்பாடுகளை, வரையறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டாவது நிபந்தனை – இத்தகைய கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் அது பூர்த்தி செய்வது மட்டும் போதாது, ஒரு குழுமம் நடத்தும் தேர்வுக்குள்ளாகி அதன் தகுதிச் சான்றிதழையும் பெற வேண்டும். உண்மையில், இன்னும் சொல்லப்போனால், தொழிலாளர்கள், அரசாங்கம், தொழிலதிபர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு முத்தரப்பு குழுமம் வழங்கும் சான்றிதழில் குறிப்பிடப்படும் இதர நிபந்தனைகளைப் பொறுத்துத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதித்துவ இயல்பு அமைந்திருக்கும்; இது இந்த மசோதாவின் பிரதான கோட்பாடாக, அடிப்படை அம்சமாக இருக்கும். இது ஒருபுறமிருக்க, நிர்ணயிக்கப்படும் வேறு சில நிபந்தனைகளையும் தொழிற்சங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறும் 28 (டி) ஷரத்தின் (ஜி) உப ஷரத்தையும் என்னுடைய நண்பர் பெரிதும் ஆட்சேபித்திருக்கிறார். இந்த ஷரத்தின் நோக்கத்தை திரு.கிரிபித்ஸ் எவ்வாறு முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டார் என்பதையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இதில் அரசாங்கத்தின் நிலை என்னவென்றால்….
திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த உப ஷரத்து (ஜி) பற்றி நான் குறிப்பிடவே இல்லை.
மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மதிப்பிற்குரிய உறுப்பினரை நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அதற்காக மிகவும் வருந்துகிறேன். மேலே கூறியபடி அவர் பேசியதாகத்தான் நான் எடுத்துக்கொண்டேன். நான் கூற விரும்புவதெல்லாம் இதுதான். இது விஷயத்தில் அரசாங்கத்தின் நிலை முற்றிலும் தெளிவாக இருக்கிறது. அதனை இரத்தினச் சுருக்கமாகக் கூற முடியும். 1941ல் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், தொழிலாளர்களையும் முதலாளிகளையும் அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அமைப்புகள் எங்களுக்குத் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும் அரசாங்கம் ஐயத்துக்கிடமற்ற ஒரு முடிவுக்கு வந்தது; அதாவது தான் விதித்துள்ள நிபந்தனைகள் போதுமானவை என்ற தீர்மானத்துக்கு அது வந்தது. எனினும் இது குறித்து பிடிவாதப் போக்கைக் கடைப்பிடிக்க அரசாங்க விரும்பவில்லை. அங்கீகாரம் அளிப்பதற்கு முன்னர் மாகாண அரசாங்கமோ அல்லது முதலாளிகளோ இந்த மசோதாவில் சில நிபந்தனைகளைச் சேர்ப்பது அவசியம் எனக் கருதக்கூடும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இவ்வகையான ஒரு நிலைமை ஏற்படலாம் என்பதைக் கருத்திற் கொண்டே இந்த ஷரத்து சேர்க்கப்பட்டிருக்கிறது; மேற்கொண்டு நிபந்தனைகளை விதிப்பதற்கு இந்த ஷரத்து வகை செய்கிறது. நாங்கள் பெறக்கூடிய எந்த ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் இணைத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்துள்ளோம். மற்றபடி பிரதிநிதித்துவத்தின் இயல்பு என்ன என்பதைப் பொறுத்த வரையில் இந்த மசோதா எவ்வகையிலும் நிச்சயமற்றதாகவோ, தெளிவற்றதாகவோ இல்லை என்பதை என்னால் நிச்சயமாகக் கூற முடியும்.
திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: எனக்கு ஒரு விஷயம் தெரிய வேண்டும். புதிய ஷரத்து 28 (டி)யின் உபஷரத்தான (இ)ல் “அது பிரதிநிதித்துவம் வாய்ந்த தொழிற்சங்கமாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்த வாசகத்தின் பொருளை அவைக்கு விளக்கிக் கூறுவீர்களா?
மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பிரதிநிதித்துவம் வாய்ந்த தொழிற்சங்கம் என்று குழுமத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட தொழிற்சங்கத்தை அது குறிக்கிறது.
திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: சுயவிருப்பத்தின் பேரிலா?
மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: குழுமம் ஒரு விசாரணையை மேற்கொள்ளும். இது பற்றி என் நண்பர் திரு.ஜோஷி அபிப்பிராயம் தெரிவிக்கும்போது, தனிப்பட்ட உறுப்பினர்களின் கருத்துகள் உட்பட எல்லாவிதமான தகவல்களையும் கோரிப் பெறுவதற்கு குழுமம் அதிகாரம் பெற்றிருக்கிறது என்று கூறினார்.
திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: “பிரதிநிதித்துவம்” என்பதற்கு என்ன பொருள் என்பது குறித்து குழுமத்துக்கு ஏதேனும் வழிகாட்டுதலை அளிக்க வேண்டும் என்பது இதன் உத்தேசமா?
மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அவ்வாறுதான் நினைக்கிறேன். எந்த விஷயம் குறித்து எவ்வகையான நெறிமுறைகளை குழுமத்துக்கு வழங்க தாங்கள் விரும்புகிறார்கள் என்பது பற்றி பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: ஆக, இந்த விஷயத்தில் நீங்கள் வெறுமையான மனத்தோடு இருக்கிறீர்கள்.
மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: வெறுமையான மனமல்ல, திறந்த மனம்: எனவேதான் என் நிலையை சரி நுட்பமாக வரையறுத்துக் கொள்ள விரும்புகிறேன்.
மசோதா பற்றி உரையாற்றிய திரு.கிரிபித்சும் ஏனைய உறுப்பினர்களும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டனர்: அதாவது ஷரத்து Jயைப் பயன்படுத்துவதில் இந்த மசோதாவின் செயற்பாட்டிலிருந்து அரசு தொழில் நிலையங்களுக்கு தவறான முறையில் அரசாங்கம் விதி விலக்கு அளித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்; அவர்களது சொற்களிலேயே கூறுவதானால், இது விஷயத்தில் அரசாங்கம் தருக்க முரணாக நடந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டனர்.
நல்லது, ஐயா, முதல் வாதத்துக்கு நான் அளிக்க விரும்பும் பதில் தருக்கவியல் எப்போதுமே வாழ்க்கையாக இருப்பதில்லை என்பதுதான். தருக்க முரண்பாடு நம்மை அதிதீவிரவாதத்தை நோக்கிப் பிடித்துத்தள்ளும் பல சந்தர்ப்பங்கள் உண்டு. தருக்க முரண்பாட்டுக்குப் பதில் அதிதீவிரவாதத்தை எந்த மனிதனும் விரும்புவான் என்று நான் நினைக்கவில்லை. ஷரத்து 28 (ஜே) யைப் பற்றி தனிப்பட்ட முறையில் நான் ஏதேனும் சொல்லுவதானால் அரசாங்கம் பயங்கொள்ளி அல்ல, அரசாங்கம் தருக்க முரணாக நடந்து கொள்ளவில்லை, அரசாங்கம் விவேகமாகவே செயல்படுகிறது, அரசாங்கம் எச்சரிக்கையாகவே இருக்கிறது என்றுதான் கூறுவேன். இந்த ஷரத்து ஓரளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன். இந்த மசோதாவிலிருந்து அரசாங்கத்துக்கு விதிவிலக்கு அளிக்கும் உத்தேசம் ஏதுமில்லை. இந்த மசோதாவின் ஷரத்துகள் அரசாங்க நிறுவனங்கள் விஷயத்தில் எப்போது செயல்படுத்தப்படும் என்பதற்கு ஒரு தேதி நிர்ணயிக்கப்படும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். எனவே, அரசாங்க நிறுவனங்கள் விஷயத்தில் ஏதேனும் சலுகை காட்டப்பட்டிருக்கிறது என்றால் அது இந்த மசோதாவின் ஷரத்துக்களை அவற்றின் விஷயத்தில் செயல்படுத்துவது சம்பந்தமானதல்ல, மாறாக அரசாங்க நிறுவனங்களுக்கு அவற்றை எந்தத் தேதியிலிருந்து செயல்படுத்துவது என்பது சம்பந்தப்பட்டதேயாகும்.
திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?
மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அதற்கு அவசியம் இருக்கக்கூடும்.
திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: அப்படி என்ன அவசியம்?
மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் ஏற்கெனவே கூறியது போல் இந்தக் கட்டத்தில் நான் எத்தகைய சர்ச்சையிலும் ஈடுபட விரும்பவில்லை. ஊழியர்களை பணிக்கமர்த்திக் கொண்டிருக்கும் அரசாங்கம் இலாகாக்கள் அவர்களுடைய தொழிற் சங்கங்களை அங்கீகரிக்கப் போதிய ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக அஞ்சல் மற்றும் தந்தித் துறைச் செயலாளர் கூறியிருக்கிறார். தனியார் துறைகளைவிடத் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதால் இந்த மசோதாவை அதன் விஷயத்தில் செயல்படுத்தும் தேதியைத் தள்ளிப்போடுவதன் காரணமாக ஊழியர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஐயா, இதற்கு மேல் நான் கூறுவதற்கு எதுவுமில்லை.
திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): ஆக, பின்வருமாறு பிரரேபிக்கப்படுகிறது:
“1926 ஆம் வருட இந்தியத் தொழிற்சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தக் கோரும் இந்த மசோதா பொதுமக்களின் கருத்தறிய சுற்றுக்கு விடப்படுகிறது.”
பிரேரணை ஏற்கப்பட்டது.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)