(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I,1943 பிப்ரவரி 23, பக்கம் 443-46)

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, பின்வருமாறு முன்மொழிகிறேன்:

            “1939 ஆம் வருட நிலக்கரிச் சுரங்கங்கள் பாதுகாப்பு (பராமரிப்பு) சட்டத்தை மேற்கொண்டும் திருத்துவதற்கான இந்த மசோதாவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.”

         ambedkar law   ஐயா, 1939 ஆம் வருட நிலக்கரிச் சுரங்கங்கள் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று இந்த மசோதா கோருகிறது. இந்த நிலக்கரிச் சுரங்கங்கள் சட்டம் 1939ல் நிறைவேற்றப்பட்டது என்பது மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு நினைவிருக்கும். அது பராமரிப்புக் குழுமம் என்னும் அமைப்பை உருவாக்கிற்று. நிலக்கரி மற்றும் சுட்ட நிலக்கரி மீது விதிக்கப்படும் வரியைக் கொண்டு உருவாக்கப்படும் நிதியத்தை நிர்வகிப்பதும், சுரங்கங்களில் தீ விபத்துகள் ஏற்படாதபடி தடுக்கும் பொருட்டு நிலக்கரிச் சுரங்கங்களை முறையாகப் பராமரிப்பதற்கு இந்த நிதியத்திலிருந்து பணம் செலவிடுவதுமே குழுமத்தின் பிரதான பணியாகும். இந்த சட்டத்தைச் செயல்படுத்தும்போது, பரிகாரம் காண வேண்டிய சில குறைபாடுகள் அதில் இருப்பது தெரியவந்தது. இத்தகைய மூன்று பிரச்சினைகளைக் கையாள்வதற்கு இந்த மசோதா வகை செய்கிறது; ஏனென்றால் இவைதான் மிக அவசரமான, உடனடிக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினைகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இம்மூன்று பிரச்சினைகளில் முதல் பிரச்சினை 8ஆவது பிரிவை திருத்துவது சம்பந்தப்பட்டதாகும். இந்தப்பிரிவு குழுமத்தின் பணிகளை நிர்ணயித்துத் தருவதோடு, இந்த நிதியத்திலிருந்து என்னென்ன காரியங்களுக்குப் பணம் செலவிடப்பட வேண்டும் என்பதையும் வகுத்துத் தருகிறது. நிர்வாகம் செய்வதற்கு ஆகும் செலவுகளைச் சரிகட்டுவதற்கு பணம் செலவிடுவதை பிரிவு 8 அனுமதிக்கிறது. இரண்டாவதாக, பராமரிப்பு நடவடிக்கைக்காக நிலக்கரிச் சுரங்கங்களின் உரிமையாளர்களுக்கோ, அவர்களது பிரதிநிதிகளுக்கோ அல்லது நிர்வாகிகளுக்கோ பராமரிப்பு சாதனங்களையும், பொருள்களையும் இதர உதவிகளையும் குழுமம் வழங்க அது அனுமதிக்கிறது. சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவது சம்பந்தப்பட்ட இதர பணிகளை மேற்கொள்வதற்கு குழுமத்தை பிரிவு 3 அனுமதிக்கிறது;

நான்காவதாக சுரங்கப் பராமரிப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுப் பணிக்காக பணம் செலவிடுவதற்கு குழுமத்துக்கு அதிகாரமளிக்கிறது. குழுமம் தானே மேற்கொள்ளும் பராமரிப்புப் பணிகளுக்குப் பணம் செலவிட அதனை அனுமதிக்கும் ஏற்பாடு எதுவும் பிரிவு 8ல் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது ஒரு மாபெரும் தவறாகும். இத்தகைய அதிகாரம் குழுமத்துக்கு அளிக்கப்படுவது அவசியம் என்பது நிபுணர்களின் கருத்து. எனவே, பிரிவு 8-ஐச் சேர்ந்த 1 ஆவது விதியிலுள்ள உபவிதி (iii) வாசகத்தை மாற்ற வேண்டுமென்று மசோதாவின் 2ஆவது விதி கோருவது. இது அது கோரும் முதலாவது திருத்தமாகும்; இந்தத் திருப்பம் பராமரிப்புப் பணியை நேரடியாக தானே மேற்கொள்வதற்கும், தனது கட்டுப்பாட்டிலுள்ள நிதியை இந்த நோக்கத்துக்காக செலவிடுவதற்கும் குழுமத்தை அனுமதிக்கிறது. மசோதாவின் இரண்டாவது திருத்தம் விதி 10 சம்பந்தப்பட்டதாகும். நிலக்கரியைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளும்படி நிலக்கரிச் சுரங்கத்தின் உரிமையாளருக்கோ அல்லது அவரது பிரதிநிதிகளுக்கோ பிரதம சுரங்க ஆய்வாளர் ஆணையிடுவதை நிலக்கரிச் சுரங்கப் பாதுகாப்பு (பராமரிப்பு) சட்டத்தின் 9ஆவது பிரிவின் உபபிரிவு (31 அனுமதிக்கிறது. இந்த சட்டத்தின் 10 ஆவது பிரிவு இந்த ஆணையை கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய ஆணையாக ஆக்குகிறது ஆனால் இவ்வாறு நிலக்கரிச் சுரங்க நிபுணரோ அல்லது ஆய்வாளரோ பிறப்பிக்கும் ஆணை கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய ஆணையாக இருக்கும்; அதேசமயம் இதனை எதிர்த்து சுரங்க உரிமையாளர் மேல்முறையீடு செய்வதற்கு சட்டத்தில் வழிவகை ஏதும் செய்யப்படவில்லை.

இது துரதிருஷ்டவசமான ஒரு சட்டவிதி என்றும், மேல்முறையீடு செய்வதற்கு உரிமை இருக்க வேண்டும் என்றும், ஆனால் மூல உத்தரவை நிறைவேற்றுவதற்கு தடைவாங்க அனுமதிக்கப்படக்கூடாது என்றும் கருதப்பட்டது. எனவே, இப்போதைய சட்டத்தின் 10ஆவது பிரிவில் ஒரு கூடுதல் விதியை சேர்ப்பதன் வாயிலாக இந்தத் தவறை அகற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கும் மூன்றாவது திருத்தம் பராமரிப்புப் பணியைத் தானே மேற்கொள்தற்கு குழுமத்திற்கு அதிகாரம் அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்ததாகும். நிலக்கரியைப் பராமரிப்பது ஒரு முக்கியமான பணி. தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிப் போகக்கூடிய ஆபத்திலிருந்து நிலக்கரியைப் பாதுகாப்பதே இதன் குறிக்கோள். சில நிலக்கரிச் சுரங்கங்கள் கைவிடப்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றின்மீது எவரும் எத்தகைய கட்டுப்பாடும் செலுத்துவதில்லை. பூமிக்கு அடியிலுள்ள நிலக்கரி தீப்பிடித்துக் கொண்டுவிடும்போது அத்தகைய சுரங்கங்களின் உரிமையாளர்கள் அவற்றைக் கைவிட்டுச் சென்று விடுகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட சுரங்கம் யாருக்குச் சொந்தம் என்று சர்ச்சைகள் நடைபெறும் சம்பவங்களும், நிலக்கரிப் பராமரிப்புப் பணியை தாங்களே ஏற்று நடத்த முடியாத நிலைமையில் பல சுரங்க உரிமையாளர்கள் இருக்கும் சம்பங்களும் ஆங்காங்கு நடைபெறுகின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில் நிலக்கரிப் பராமரிப்புப் பொறுப்பை எவரிடமும் ஒப்படைக்க முடியாத நிலைமையும், ஆய்வாளரின் உத்தரவை எவரிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்று தெரியாத நிலைமையும் ஏற்பட்டு விடுகின்றன. இத்தகைய நிலைமையைத் தவிர்க்கும் பொருட்டு குழுமமே பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் வகையில் அதற்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்று உணரப்பட்டது. அதேசமயம், குழுமம் இத்தகைய பணியை ஏற்று நடத்தவேண்டுமானால், சுரங்க உரிமையாளரின் நிலத்தில் பிரவேசிக்கும் உரிமையும் அதற்கு அளிக்கப்படுவது அவசியம். 10ஏ என்னும் ஒரு புதிய விதியின் மூலம் இதைச் செய்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது; பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் அதிகாரத்தையும், சுரங்க உரிமையாளரின் நிலத்தில் பிரவேசிக்கும் அதிகாரத்தையும் இது குழுமத்துக்கு வழங்குகிறது.

            இந்த மசோதா மிகவும் எளிமையானது; இதுவரை நான் கூறியதற்கும் அதிகமாக விளக்கம் எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன். இது சர்ச்சைக்கு இடமற்ற ஒரு மசோதா; அவை இதனை அங்கீகரிக்கும் என்று நம்புகிறேன்.

            ஐயா, இந்த மசோதாவை நான் முன்மொழிகிறேன்.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, “இந்த மசோதா ஏற்கப்பட வேண்டும்” என்று முன்மொழிகிறேன்.

            மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர்கள் எழுப்பிய சில பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கத்தின் கண்ணோட்டத்தை விளக்குவதற்கு இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். போதிய முன்னறிவிப்பின்றி மசோதாக்களைக் கொண்டு வருவது அரசாங்கத்துக்கு வழக்கமாகி விட்டது என்று மதிப்பிற்குரிய என் நண்பர் திரு.மில்லர் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு நான் அளிக்கக்கூடிய பதில் இதுதான்: இத்தகைய மசோதாக்களைக் கொண்டுவரும் விஷயத்தில் இவ்வாறுதான் நடந்துகொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் நான் தனிப்பட்ட முறையில் எதுவும் கூறுவது சாத்தியமல்ல. ஆனால் இப்போதைய மசோதாவைப் பொறுத்தவரையில் அரசாங்கம் அவசர கோலமாக நடந்து கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்ட முடியாது. ஏறத்தாழ ஆறு மாதகாலம் இந்த மசோதா அவையின் பரிசீலனையில் இருந்துவருகிறது என்பதை மதிப்பிற்குரிய உறுப்பினருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இரண்டாவதாக மற்றொரு முக்கிய விஷயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பாரமரிப்புக் குழுமம்தான் இந்த மசோதாவைப் பரிந்துரைத்து, அநேகமாக அதற்கு வடிவம் கொடுத்தது என்பதை மதிப்பிற்குரிய நண்பர் மனதில் கொள்ளவேண்டும்; மேலும் இந்த பராமரிப்புக் குழுமம் நிலக்கரித் தொழிலுடன் சம்பந்தப்பட்ட மிகவும் பிரதிநிதித்துவம் வாய்ந்த அமைப்பு என்பதை அவர் மறந்துவிடமாட்டார் என்று நினைக்கிறேன். எனவே, இந்தக் குறிப்பிட்ட மசோதாவைப் பொறுத்தவரையில் இதனை அவசர அவசரமாகக் கொண்டு வந்ததாக என்னைக் குற்றம் சாட்டுவார்கள் என்று நான் எண்ணவில்லை.

            மதிப்பிற்குரிய என் நண்பர் மற்றொரு பிரச்சினையையும் எழுப்பினார். அவசரமான, நெருக்கடியான நிலைமை ஏற்படும் போதுதான் இத்தகைய நடவடிக்கை எடுத்துக்கொள்ளப்படும், வேறு சமயங்களில் இவ்வாறு செய்யப்படமாட்டாது என்று உறுதி அளிக்க முடியுமா என்று அவர் வினவினார். அத்தகைய உறுதிமொழியை அளிக்க நான் முற்றிலும் சித்தமாக இருக்கிறேன். உண்மையில், குழுமத்துக்கு நாங்கள் அளிக்கும் அதிகாரம் அவசரநிலைமைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களது எண்ணமாகும்.

            மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் டாக்டர் ஜியாவுதீன் தற்போது அவையில் இல்லை. அவர் தெரிவித்த கருத்தைப் பொறுத்தவரையில் அது ஏற்புடையதல்ல. நிலக்கரிச் சுரங்கப் பராமரிப்புக் குழுமத்துக்கும் நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்களுக்கும் இடையே நான் அறிந்தவரை எத்தகைய வேறுபாடோ, சர்ச்சையோ எழுந்ததில்லை. நாங்கள் இப்போது கொண்டு வந்திருக்கும் இந்த மசோதா நிலக்கரிச் சுரங்க உரிமையாளர்களுக்கும் பராமரிப்புக் குழுமத்துக்கும் இடையே எத்தகைய கருத்து வேற்றுமைமையும் உண்டு பண்ணும் என்று நான் நினைக்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை இதுவரை அவர்கள் ஏறத்தாழ ஒரு மகிழ்ச்சிகரமான குடும்பம் போலவே செயல்பட்டு வந்திருக்கின்றனர். நிலக்கரிச் சுரங்க உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த எந்த ஒரு குறிப்பிட்ட உறுப்பினரும் எதிர்க்கக்கூடிய எத்தகைய கொள்கையையும் குழுமம் கடைப்பிடித்த சம்பவம் எதையும் நான் அறிந்ததில்லை.

            மதிப்பிற்குரிய என் நண்பர் திரு.ஹூசேன்பாய் லால்ஜி ஒரு கருத்தைத் தெரிவித்தார்; அது பரிசீலனைக்குரிய ஒரு கருத்தேயாகும்; பராமரிப்புப்பணியில் அரசாங்கம் எந்தெந்த நிலக்கரிச் சுரங்கங்களுக்குப் பணம் செலவிடப்பட்டதோ அவற்றின்மீது அரசாங்கத்துக்கு சில உரிமைகள் இருக்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். இது ஒரு சிறந்த, முக்கியமான யோசனை என்பதில் ஐயமில்லை, இந்த யோசனை குறித்து அரசாங்கத்தின் நிலை என்ன என்பதை பின்னர் ஒரு கட்டத்தில் தெரிவிக்க முடியும் என்று நம்புகிறேன்.

            ஐயா, இதற்குமேல் நான் கூறுவதற்கு வேறு எதுவும் இல்லை.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It