(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, எண் 4, ஏப்ரல் 4, 1946, பக்கங்கள் 3522-26) 

திரு.தலைவர்: தொழிற்சாலைகள் மசோதாவை அவை இப்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த விஷயம் குறித்து நான் பேசலாம் என்று நினைக்கிறேன். இது பற்றிப் பேசும்படி மாண்புமிகு என்னுடைய சகாக்களும் என்னைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு நான் முற்றிலும் தகுதியுடையவன் என்றே கருதுகிறேன். ஏனென்றால் மொத்தத்தில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் பேசுவதற்கு அரசு உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.

திவான் சமன்லால்: (மேற்கு பஞ்சாப், முகமதியர் அல்லாதவர்): ஐயா, நான் பின்னால் பேசுவதற்கு மாண்புமிகு உறுப்பினர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் இவ்விஷயம் குறித்து இப்போது சிறிது பேச விரும்புகிறேன்.

திரு.அவைத் தலைவர்: பொது விவாதத்திற்கு மாண்புமிகு உறுப்பினர் பதிலளித்த பிறகு, அவர் ஏற்றுக் கொண்டால் கூட இதற்கு அவை விதிகளின்படி அனுமதி அளிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்: இது குறித்து ஏற்கெனவே எவ்வளவோ கூறப்பட்டு விட்டதால் மேற்கொண்டு பேசுவதற்கு அவசியம் ஏதுமில்லை.

ambedkar 400 copyதிரு.தலைவர் அவர்களே, இதுவரை நடைபெற்று வந்துள்ள விவாதத்திற்குப் பிறகு உண்மையில் நான் அதிகம் பேச வேண்டியதில்லை. ஏனென்றால் இம்மசோதாவிற்கு எதிராக ஒரு தரப்பினர் கூறியதற்கு மற்றொரு தரப்பினர் தக்க முறையில் பதிலளித்துள்ளனர். ஆகவே, இந்நிலைமையில், ஏற்கெனவே கூறப்பட்டதற்கும் அதிகமாக இக்கட்டத்தில் நான் கூறுவதற்கு எதுவுமில்லை. நான் ஏதேனும் கூற வேண்டுமென்றால் எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.வதிலால் லல்லுபாய் தெரிவித்துள்ள கருத்துகளுக்குப் பதிலளிக்கும் முறையிலேயே அது இருக்கும். அவர் பேசியதை நான் செவிமடுத்துக் கேட்டேன். இந்த மசோதா சம்பந்தமாக அவரது குற்றச்சாட்டு என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று கடுமையான துணிப் பஞ்சம் நிலவி வருவதை நானும் ஏனைய அனைவரும் முற்றிலும் உணர்ந்துள்ளோம். வேலை நேரம் சம்பந்தப்பட்ட விதிகளைப் பாதிக்கக்கூடிய விதத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தை திருத்த முற்படும்போது, அதன் காரணமாக ஜவுளி நிலைமை மேலும் மோசமாகாதபடி நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். என்னுடைய நண்பரின் விமர்சனத்துக்கு நான் அளிக்கும் பதில் இதுதான்: துணிப் பஞ்சத்தால் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பரிசீலிப்பதோடு மட்டும் நாங்கள் நின்றுவிடவில்லை; மாறாக இதர நுகர்பொருள்கள் பற்றாக்குறையால் எழக்கூடிய நிலைமையையும் பரிசீலனை செய்தோம். மேலும், பருத்தித் தொழில் துறைக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய ஓர் சட்டத்திருத்தத்தை நாங்கள் கொண்டு வந்திருப்பது மட்டுமன்றி, பயனீட்டுப் பண்டங்களை உற்பத்தி செய்யும் செய்யும் ஏனைய தொழில்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும் அந்தத் திருத்த வாசகத்தை விரிவுப்படுத்தியுள்ளோம்.

அவர் மேலும் இரண்டு கருத்துகளைத் தெரிவித்தார். அவரது உரையின் வாசகம் என்னிடம் உள்ளது. அவர் எழுப்பிய இரண்டு விஷயங்களுக்கும் என்னிடமிருந்து பதில் பெறுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. இந்த விதிவிலக்கை இந்த சட்டத்திலேயே இந்திய அரசாங்கம் அளித்திருக்க வேண்டும், மாகாண அரசாங்கத்தின் உசிதமான முடிவுக்கு விட்டிருக்கக் கூடாது என்று அவர் வாதிட்டார். இந்த விமர்சனத்திற்கு எனது பதில் இருவகைப்பட்டது: முதலாவதாக, விதிவிலக்கு அளிப்பது என்பது தற்போது நடப்பிலுள்ள அரசியல் சட்டத்தின்படி நிர்வாக அதிகாரத்துக்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது என்பதை மதிப்பிற்குரிய என் நண்பர் அறிவார். தொழிலாளர் நலத்துறை மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம் ஆகிய இரண்டுக்கும் பொதுவானதாகும். இதன் காரணமாக தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு மத்திய அரசாங்கம் அதிகாரம் பெற்றிருக்கிறது. ஆனால் அந்த சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் அதிகாரத்தை அது பெற்றிருக்கவில்லை. இது சம்பந்தமான எல்லா அதிகாரமும் மாகாண அரசாங்கத்தின் கைகளிலேயே இருக்கிறது. எனவே, விதிவிலக்கை இந்த சட்டத்திலேயே நாங்கள் வழங்காததற்கு அது மத்திய சட்டமன்றத்தின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டதாக இருப்பதே காரணம்.

அவரது கோரிக்கையை நாங்கள் நிறைவேற்ற இயலாதிருப்பதற்கு இரண்டாவது ஓர் இடர்ப்பாடும் இருக்கிறது. அது இதுதான்: இது போன்ற விதிவிலக்கைப் பெறுவதற்கு தகுதிபெற்ற இதர தொழில்களின் பட்டியலை இந்தச் சட்டத்தில் இடம்பெறச் செய்யாமல் பஞ்சாலைத் தொழில் போன்ற ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பதற்கு சட்டத்தில் வகை செய்வது என்பது இந்திய அரசாங்கத்தால் இயலாத காரியமாகும். அதேபோல் இதர தொழில்களின் தேவைகளை தொழிலாளர் நலத்துறையிலுள்ள எவரும் முன்கூட்டியே உணர்ந்து இத்தகைய விதிவிலக்குகளை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வதும் சாத்தியமல்ல. இத்தகைய விதிவிலக்கை அளிக்க மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரம் இருந்தாலும் இதை அந்த அரசாங்கங்கள் செய்ய மாட்டா என்ற தமது அச்சத்தையும் மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் வெளியிட்டார். இப்படிப்பட்ட விதிவிலக்குகளை மாகாண அரசாங்கங்கள் அளித்தால் அந்தந்த மாகாணங்களிலுள்ள தொழிலாளர்கள் பலவகைகளிலும் இடையூறு செய்வார்கள் என்றும் அவர் கூறினார். என்னுடைய நண்பர் கொண்டுள்ள இத்தகைய அச்சத்துக்கு ஆதாரம் இருப்பதாக நான் நினைக்கவில்லை; இந்தக் கருத்து எனக்கு உடன்பாடும் இல்லை; ஏனென்றால், விதிவிலக்குகள் வழங்குவதற்கு எதிராக தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதங்களை மாகாண அரசாங்கங்கள் உரிய முறையில் கணக்கிலெடுத்துக் கொள்ளும், ஆனால் அதே சமயம் மக்களின் அவசரத் தேவைகளையும் பொது நலன்களையும் கருத்திற் கொண்டு அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்புடைய நடவடிக்கைகளை அவை எடுத்துக் கொள்ளும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. எனவே, என்னுடைய நண்பர் எழுப்பிய முதல் விஷயத்தைப் பொறுத்தவரையில் அதனை என்னால் ஏற்க முடியும் என்று நான் நினைக்கவில்லை; ஏனென்றால் அவ்வாறு செய்ய சட்டம் என்னை அனுமதிக்காது.

இரண்டாவதாக, பொதுவாக மக்களின் நலன்களுக்கு உகந்தவற்றை மாகாண அரசாங்கங்கள் செய்யும் என்று அவற்றின் மீது நாம் ஏன் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று எனக்குப் புரியவில்லை. இது விஷயத்தில் பொறுப்பேற்க தொழில் துறையும், சிவில் சப்ளை துறையும் முன்வருமா என்பது அவர் எழுப்பிய இரண்டாவது பிரச்சினை. இந்தப் பிரச்சினையை அவர் எழுப்பி இருக்கக் கூடாது என்பதே என் கருத்து. ஏனென்றால் இந்திய அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் கருத்தில் கொண்டிருந்தால், தொழில் மற்றும் சிவில் சப்ளைத் துறையின் உறுப்பினர் அங்கம் வகிக்கும் நிர்வாகக் கவுன்சிலின் முன் அனுமதியின்றி எந்த ஒரு விஷயமும் இந்த அவையின் பரிசீலனைக்கு வராது என்பதையும், இந்த விஷயத்தில் தொழில் மற்றும் சிவில் சப்ளைத் துறை வலியுறுத்திய கருத்துகளை தொழிலாளர் நலத்துறை எவ்விதம் உரிய முறையில் கணக்கிலெடுத்துக் கொண்டது என்பதையும், அவர்களது தூண்டுதலின் பேரில்தான் விதி 5 இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் தெரிந்து கொண்டிருப்பார். தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமான பொதுவிதிகள் அத்தியாவசியமானவை, தவிர்க்க முடியாதவை என்றாலும் சில பொருள்கள் விஷயத்தில் இந்த நாடு எதிர்நோக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளையும் மனத்திற் கொள்வது அவசியம் என்று அவர்கள் கருதினர்; இதனடிப்படையில் அவர்கள் தெரிவித்த திட்டவட்டமான யோசனைகளின் பேரில்தான் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக, இது விஷயத்தில் தொழில் மற்றும் சிவில் சப்ளை துறை எவ்வகையிலும் புறக்கணிக்கப்படவில்லை, மாறாக அவர்களது அறிய மதிப்பிற்குரிய என் நண்பர் மகிழ்ச்சி அடைவார் என்று நம்புகிறேன். ஐயா, இப்போது இந்தத் தீர்மானத்தை முன் மொழிகிறேன்.

திரு.தலைவர்: தீர்மானம் வருமாறு:

“1934 ஆம் வருடத் தொழிற்சாலைகள் சட்டத்தை தெரிவுக் குழு பரிந்துரைத்தபடி மேலும் திருத்துவதற்கான இந்த மசோதாவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.”

தீர்மானம் ஏற்கப்பட்டது.

திரு. தலைவர்: விதி 2ஐ முதலிலும் விதி 1ஐ இறுதியிலும் எடுத்துக் கொள்கிறேன். திருவாளர்கள் வதிலால் லல்லுபாயும் ராமலிங்கம் செட்டியாரும் விதி 2-க்கு ஒரு திருத்தத்தை முன்மொழிந்துள்ளனர்.

திரு.வதிலால் லல்லுபாய்: நான் ஒரு கருத்தைக் கூற விரும்புகிறேன். விதிவிலக்குகள் அளிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்று டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார். ஆனால் நாங்கள் தந்துள்ள திருத்தம் ஏற்கப்பட்டால் விதிவிலக்குகள் சட்டப்படி செல்லுபடியாகும் சாத்தியக்கூறு இருக்கிறது. விதி 2-க்கு நான் தந்துள்ள திருத்தம் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

திரு.தலைவர்: மதிப்பிற்குரிய நண்பர் என்ன சொல்லுகிறார் என்று எனக்குப் புரியவில்லை.

திரு.வதிலால் லல்லுபாய்: விதிவிலக்குகளுக்கு சட்டத்தில் இடமில்லை என்று மாண்புமிகு உறுப்பினர் கூறினார். விதி 2-க்கு நான் தந்துள்ள திருத்தத்தை அவர் படித்தாரேயானால் சட்ட ரீதியாக இதற்குத் தடை ஏதும் இல்லை என்பதைக் காண்பார். சட்ட ரீதியான தடை இருப்பதால்தான் அவர் என் திருத்தத்தை எதிர்க்கிறாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக எதிர்க்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன்.

திரு.தலைவர்: உள்ள நிலைமையை தமது உரையில் மாண்புமிகு உறுப்பினர் போதிய அளவு தெளிவாக விளக்கி விட்டார். இது விஷயத்தில் மேற்கொண்டு ஐயத்துக்கு இடமிருக்கும் என்று நான் கருதவில்லை. சட்டம் ஒரு தடையாக இருக்கிறது என்று அவர் வாதிட்டார். இன்னொரு வாதத்தையும் அவர் முன்வைத்தார். அதாவது என்ன செய்ய வேண்டுமோ அதை அரசாங்கம் செய்யும் என்று தாம் நம்புவதாகக் கூறினார். நான் கூறுவது சரிதானே?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆம், சரிதான்.

*           *           *

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்தத் திருத்தத்தை நான் எதிர்க்க வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன். இதில் இரண்டு ஆட்சேபங்களை நான் காண்கிறேன். முதலாவது ஆட்சேபம் பொதுப்படையானது. ஒரு குறிப்பிட்ட தொழில் துறையைச் சேர்ந்த முதலாளிகள் தங்கள் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதற்கு ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வகுத்திருப்பார்களேயானால் அப்போது அன்றைய நடைமுறைக்கு ஏற்ற வகையில் சட்டம் வகுக்கப்பட வேண்டும் என்று இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கும் மதிப்பிற்குரிய உறுப்பினர் கருதுவதாகத் தோன்றுகிறது. இத்தகைய ஒரு நிலைப்பாட்டை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. பல முதலாளிகள் பிரதானமாக தங்களுக்குச் சாதகமான வழிமுறைகளைப் பின்பற்றக்கூடும். இந்நிலைமையில், நடைமுறைக்குகந்த முறையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுவதையோ அல்லது நடைமுறை மோசமாக இருந்தாலும் சட்டம் அதனை மாற்றக்கூடாது என்று அவர்கள் கோருவதையோ அரசு ஏற்கக் கடமைப்பட்டிருக்கவில்லை. இந்தத் திருத்தத்தை நான் ஏற்றுக் கொள்ள இயலாமல் இருப்பதற்கு நான் முன்வைக்கும் முதல் வாதம் இது.

இந்தத் திருத்தத்திற்கு எதிராக நான் முன்வைக்கும் இரண்டாவது வாதம் இந்த விஷயத்தை ஆழமாக, நேரடியாக, சுற்றி வளைக்காமல் பரிசீலிப்பதிலிருந்து தோன்றுகிறது. மதிப்பிற்குரிய என்னுடைய நண்பரை நான் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், அவர் தம்முடைய தொழிலாளர்களை எந்த முறையில் பயன்படுத்திக் கொள்வார் என்பதை இரத்தினச் சுருக்கமாகக் கூறமுடியும். அவர் தம்முடைய தொழிலாளர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பார். இவர்களில் ஒரு பிரிவினரை ‘ஏ’ பிரிவினர் என்றும், இன்னொரு பிரிவினரை ‘பி’ பிரிவினர் என்றும் வைத்துக் கொள்வோம். இனி அவர்களை எந்த முறையில் வேலை வாங்குவார் என்று பார்ப்போம். ‘ஏ’ பிரிவினர் காலை 8 மணிக்கு வேலை செய்யத் தொடங்கி பிற்பகல் 4 மணிக்கு வேலையை முடிப்பர். பின்னர் ‘பி’ பிரிவினர் பிற்பகல் 4 மணிக்கு வேலை செய்ய ஆரம்பிப்பர். ‘ஏ’ பிரிவினர் அவர்களை இரவு 8 மணிக்கு விடுவித்து, மீண்டும் வேலையில் ஈடுபடுவர். அடுத்து இரவு 8 மணிக்கு ‘பி’ பிரிவினர் அவர்கள் இடத்துக்கு வந்து நள்ளிரவு 12 மணி வரை வேலை செய்வர். நான் அவரை சரியாகப் புரிந்து கொண்டிருந்தால் இவ்வாறுதான் அவர் தம்முடைய தொழிலாளர்களிடம் வேலை வாங்குவார்...

சர் டி..ராமலிங்கம் செட்டியார்: மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த ஏற்பாடு நேர ஏற்பமைவாக்கக் கோட்பாட்டுக்கு அடிப்படையிலேயே முரணானதாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கோட்பாடு என்ன கூறுகிறது? சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள வேலை நேரத்திற்கு அதிகமாக எந்தத் தொழிலாளியும் தொழிற்சாலை வளாகத்தில் தங்கியிருக்கும்படி நிர்ப்பந்திக்கக் கூடாது என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது. ஒருநாளில் வேலைநேரம் 9 மணியாக இருக்க வேண்டும் என்று இந்த மசோதாவில் நாங்கள் நிர்ணயித்திருக்கிறோம். இவ்வாறிருக்கும்போது இந்தத் திருத்தம் ஏற்றுக் கொள்ளப் படுமானால், தொழிலாளி கூடுதலாக மூன்று மணி நேரம் தொழிற்சாலையில் தங்க வேண்டியிருக்கும். நேர ஏற்பமைவாக்கக் கோட்பாட்டுக்கு இது இசைந்ததல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தொழிற்சாலை என்பது ஒரு பூங்காவல்ல; அதிலும் ஒரு தொழிற்சாலை பெற்றிருக்க வேண்டிய அனைத்து வசதிகளையும் இன்றைய தொழிற்சாலை பெற்றிருக்கவில்லை. இத்தகைய நிலைமையில் ஒரு தொழிலாளி கூடிய மட்டும் எவ்வளவு விரைவில் தொழிற்சாலையிலிருந்து கிளம்பி வீடு போய்ச் சேர முடியுமோ அவ்வளவுக்கு மிகவும் விரும்பத்தக்கது. அங்கு அவன் சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடியும்; முடிந்தளவு வசதிகளை அனுபவிக்க முடியும்; சட்டம் அனுமதிக்கும் ஓய்வு நேரத்தை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே, இந்தக் காரணங்களை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்தத் திருத்தம் ஒரு சரியான, சிறந்த திருத்தம் அல்ல என்று கருதுகிறேன். ஆதலால் இதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

*           *           *

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்தத் தீர்மானத்தை ஏற்கச் செய்வதில் என்னுடைய ஒத்துழைத்த அவை உறுப்பினர்களுக்கும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர இந்தக் கட்டத்தில் வேறு எதுவும் கூறத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இந்தத் தீர்மானத்தின் மீது பேசிய பலர் அநேக யோசனைகளைக் கூறினர்; இதுபற்றி நான் கூறக்கூடியதெல்லாம் எந்த அரசாங்கம் அதிகாரத்தில் இருந்தாலும் இந்த யோசனைகளை மனத்திற் கொள்வது அவசியம் என்பதில் ஐயமில்லை என்பதேயாகும். மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் திவான் சமன்லால் குறிப்பிட்டது போன்று, தொழிற்சாலைக் கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டது போன்ற காலத்தில் நாம் இப்போது வாழவில்லை. உலகம் முன்னேறிவிட்டது. தற்காலத்திய நாடுகள் போன்றே நாமும் நமது தொழில்துறை உறவுகளுக்கு ஆதார அடிப்படையாக அமையும் தார்மிக நெறிகளை மதித்துப் போற்றுவோம் என்பதைக் காட்ட வேண்டும். உறுப்பினர்கள் கூறிய யோசனைகளை மனத்தில் இருத்துவோம் என்பதிலும், அவற்றைச் செயல்படுத்துவோம் என்பதிலும் எனக்கு எத்தகைய ஐயமும் இல்லை.

ஐயா, என்பால் காட்டிய அன்புக்கும் மரியாதைக்கும் அவைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.தலைவர்: தீர்மானம் வருமாறு:

“திருத்தத்தோடு மசோதா ஏற்கப்பட வேண்டும்”.

தீர்மானம் நிறைவேறியது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It