(மத்தியசட்டமன்ற விவாதங்கள் ,தொகுதி III , 1945, மார்ச்சு 29, ..2265-66)

மாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):

  துணைத் தலைவர் அவர்களே,

   ‘’1941ஆம் ஆண்டின் சுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய, திரு.எம்.அனந்தசயனம் ஐயங்கார், பேராசிரியர் என்.ஜி.ரங்கா, திரு.கே.பி.ஜீனராஜ ஹெக்டே, மெளலானா ஜாபர் அலி கான், சர் சையது ராசா அலி, திரு. அமரேந்திரநாத் சடோபாத்தியாயா, திரு.என்.எம். ஜோஷி, ராவ்பகதூர் என்.சிவராஜ், திரு.எச்.ஜி.ஸ்டோக்ஸ், திரு.எஸ்.சி.ஜோஷி ஆகியோருடன் என்னையும் சேர்த்த தெரிவுக்குழு அமைக்கப்படலாம் என்றும், குழு 1945, ஏப்ரல் 2, திங்கள் கிழமையன்று அறிக்கை தரவேண்டுமென்று கோரப்படலாமென்றும், குழுவின் கூட்டச் செயல்பாடுகளுக்குக் குறைந்தது ஐந்து உறுப்பினர்கள் தேவையென்றும்’’

தீர்மானத்தை முன்வைக்கிறேன்.

  திரு. பத்ரி தத் பாண்டே (ரோஹில்கண்டு, குமான் பகுதிகளுக்கான, முகமதியரல்லா கிராமப்புறச் சார்பபளர்): (தெரிவுக்குழுவில்) பெண் உறுப்பினர் சேர்க்கப்படாதது ஏன்?

               ambedkar in bombay திரு.டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் (சேலம், கோவை, வடஆற்காடு மாவட்டங்களின் முகமதியரல்லா கிராமப்புறச் சார்பாளர்):

                திருமதி சுப்பராயன் சேர்க்கப்படலாம்.

             மாண்புமிகுடாக்டர்பி.ஆர். அம்பேத்கர்: தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டபின், பிந்தையதோர் கட்டத்தில் திருத்தங்களை மதிப்பிற்குரிய என் நண்பர் முன்மொழியலாம். திருத்தத்தை அப்போது பரிசீலிக்கிறேன். சுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவிச் சட்டம் 1941 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதென்பதை அவையோர் அறிவர். இச்சட்டத்தைத் திருத்துவதற்காவே இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. திருத்ததின் தேவை குறித்துச் சுருக்கமாக எடுத்துரைக்க முனைகிறேன்.

  1941 ஆம் ஆண்டில் இச்சட்டம் இயற்றப்பட்டபோது நிலத்தின் மேற்பரப்பில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் மகப்பேறு நலம் பேணும் நோக்கமே கருத்தில் இருந்தது. ஆனால், நான் இவ் அவையில் ஏற்கெனவே பலமுறை விளக்கியுள்ளவாறு, நிலத்தடிச் சுரங்கங்களிலும் பெண் தொழிலாளர்களைப் பணியமர்த்த வேண்டிய, நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலைமை தற்காலிகமானதேயென்றும், நிலத்தடிச் சுரங்கங்களில் பெண் தொழிலாளர்களைப் பணியமர்த்தல் மீண்டும் விரைவில் தடை செய்யப்படுமென்றும் நம்புகிறேன். தடை மீண்டும் விதிக்கப்பட வேண்டுமென்று அவையிலும், வெளியிலும் வன்மையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தடைவிதிக்கப்படும் வரையிலான இடைக்காலத்தில், நிலத்தடிச் சுரங்கப் பெண் தொழிலாளர்கள் கருவுற்றால் அவர்களுக்கும் நல உதவிச் சலுகைகள் தருவதற்கு வழிகோலவே சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது.

  இம்மசோதாவின் முக்கியக் கூறுகள் இரண்டு. தற்போதுள்ள சட்டத்தில், பெண் தொழிலாளர்கள், பிரசவத்திற்குப் பின்னர் 4 வாரங்கள் பணிக்கு வருதல் தடைசெய்யப்பட்டுள்ளது. பிரசவத்திற்கு முன்னரும் 10 வாரங்களுக்கு நிலத்தடிச் சுரங்கங்களில் பணியாற்றுவதை இத்திருத்ததின் மூலம் தடைசெய்ய முனைகிறோம். இரண்டாவதாக, தடை செய்யப்படும் காலத்தில் அதாவது பிரசவத்திற்கு முன்னர் 10 வாரமும் பின்னர் 4 வாரமுமாக 14 வாரங்களுக்கு, நாள் ஒன்றுக்கு12 அணா (ரூ.0.75) வீதம் உதவித் தொகை வழங்கவும் சட்டத்திருத்தம் முன்மொழிகிறது. முந்தைய 6 மாத காலத்தில், குறைந்தது 90 நாட்கள் நிலத்தடிச் சுரங்கங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்பதே இச்சலுகைகளைப் பெறுதற்தான தகுதியாகும். இவையே சட்டத்திருத்த மசோதாவின் முக்கியக் கூறுகள்.

  ஐயா, மசோதாவுக்குத் திருத்தங்கள் சில தரப்பட்டுள்ளன என்பதை நோக்குகிறேன். அரசின் சார்பில் நானும் சில திருத்தங்களை முன்மொழிய விரும்புகிறேன். ஆனால், சட்டத்திருத்தம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டுமென்னும் அவசரத் தேவையையும், அதற்குக் குறுகிய கால அவகாசமேயுள்ளது எனும் நிலைமையையும் கருத்தில் கொண்டால், இத்திருத்தங்களை உடனடியாகத் தெரிவுக் குழுவுக்கு அனுப்புவதே அனைவர் நலன்களுக்கும் உகந்ததென்று கருதுகிறேன். நான் முன்மொழியவிருக்கும் திருத்தங்களுடன் ஏனைய திருத்தங்கள் அனைத்தையும் விரிவாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் முறையில் கலந்துபேசி நல்லிணக்க முடிவுக்கு வர இயலும். மசோதா தெரிவிக்குழுவுக்கு அனுப்பப்படவுள்ளது என்பதாலேயே (அனுப்ப வேண்டுமென்று நான் முதலில் கருதவில்லை) இதைப்பற்றி மேலும் விளக்கமாக உரைப்பதை நான் தற்போது தவிர்த்து விட்டேன். எனவே இத்துடன் இம்சோதாவை நான் தாக்கல் செய்கிறேன்.

*           *           *

(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III ,1945, மார்ச்சு 29, ..2270.)

மாண்புமிகு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்: ஐயா, விவாதத்தில் கலந்து கொண்ட மதிப்பிற்குறிய உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு, நான் விரிவாகப் பதிலளிக்க வேண்டயதில்லையென்று கருதுகிறேன். குறிப்பாக ஒன்றை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்; பேசிய உறுப்பினர்கள் அனைவருமே, பெண் தொழிலாளர்களை நிலத்தடிச் சுரங்கங்களில் பணிபுரிய பெண்களுக்கு இச்சட்டத் திருத்தத்தின் மூலம் அரசு அளிக்க விருப்பும் சலுகைகளையும் ஒன்றோடொன்று கலந்து குழப்பாமல் தனித்தனிச் சிக்கல்களாக உணர்ந்து பேசிய நல்லுணர்வுக்கு எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்; விவாதத்தின் போக்கு குறித்து மகிழ்ச்சியையும் அடைகிறேன். நிலத்தடிச் சுரங்கங்களில் பெண் தொழிலாளர்கள் பணிப்புரிய அனுமதிக்கலாமா என்பது பற்றிய தத்தம் கருத்துக்களையும் பேசிய உறுப்பினர்கள் தெளிவாகவே எடுத்துரைத்தனர். இது பற்றிய அரசின் கருத்தும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கருத்திலிருந்து மாறுபடுபவர்களுடன் எனக்கு எவ்விதப் பூசலும் கிடையாது; ஆனால் திருத்த மசோதாவின் தேவையை அனைவருமே உணர்ந்து பேசினார்கள் என்பதில் மனநிறைவு கொள்வதுடன், அவை தொடர்ந்து இதே போன்ற ஒத்துழைப்பை வருங்காலத்திலும் நல்கும் என்ற எனது நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவை துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): அவைமுன் பின்வரும் தீர்மானம் வைக்கப்படுகிறது:

“1941 ஆம் ஆண்டின் சுரங்கத் தொழிலாளர் பேறுகால நல உதவிச் சட்டத்தின் மீதான திருத்த மசோதாவை, திரு.அனந்த சயனம் ஐயங்கார், பேராசிரியர் என்.ஜி.ரங்கா, திரு.கே.பி.ஜீனராஜ ஹெக்டே, மௌலானா ஜாபர் அலி கான், சர் சையது ராசா அலி, திரு.அமரேந்திரநாத் சட்டோபாத்தியாயா, திரு.என்.எம்.ஜோஷி, இராவ்பகதூர் என்.சிவராஜ், திரு.எச்.ஜி.ஸ்டோக்ஸ், திரு.எஸ்.சி.ஜோஷி மற்றும் தீர்மானம் தாக்கல் செய்யுநர் (அம்பேத்கர்) ஆகியோர் கொண்ட தெரிவிக்குழுவுக்கு அனுப்பி, குழுவின் முடிபு 1945, ஏப்ரல் 2 ஆம் நாளான திங்கட்கிழமையன்று அவைக்குத் தெரிவிக்குமாறு கோருவதுடன், குழுவின் கூட்டம் நடைபெறக் குறைந்தது ஐந்து உறுப்பினர்கள் தேவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.’’

அவை தீர்மானத்தை ஏற்று நிறைவேற்றியது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It