(1.இந்திய தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1943, பக்கங்கள் 143-144)

            விரிவடைந்த தொழிலாளர் மாநாட்டின் முதல் கூட்டத்தொடர், செப்டம்பர் 6-ஆம் நாளன்று திங்கட்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது. வைசிராய் கவுன்சிலில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக (இப்பதவி அமைச்சர் பதவிக்கு சமமானது – மொழி பெயர்ப்பாளர்) பணியாற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இக்கூட்டத் தொடரில் சொற்பொழிவாற்றினார். அவரது உரையின் முழு வாசகம் வருமாறு:-

           ambedkar 266 இந்த விரிவடைந்த தொழிலாளர் மாநாட்டின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். டில்லியில் நடைபெறவிருக்கும் ஒரு முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்கும்படி மாகாண அரசாங்கங்கள் மற்றும் இந்திய சமஸ்தானங்களின் பிரதிநிதிகளுக்கும், அவ்வாறே தொழிலாளர் மற்றும் தொழிலதிபர்களின் பிரதிநிதிகளுக்கும் பதின்மூன்று மாதங்களுக்கு முன்னர் அதாவது சென்ற ஆண்டு ஆகஸ்டு 7-ஆம் தேதியன்று இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

            நீண்டகாலமாகவே பின்வரும் கருத்து நிலவி வந்தது: அரசாங்கம், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் ஆகிய முத்தரப்பினருமே பரஸ்பரம் ஒருவர்பால் ஒருவர் பொறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்; ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும்; ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனோபாவத்தோடு செயலாற்ற வேண்டும்; இவ்வாறு செய்யவில்லை என்றால் தொழில்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும், தொழிலாளர் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது என்ற கருத்து மேலோங்கி வந்தது. ஆனால் இந்த முத்தரப்பினருமே ஒன்றுகூடி மனம் விட்டுப் பேசினாலொழிய இத்தகைய பொறுப்பு உணர்வும் பரஸ்பர மரியாதை உணர்வும் வளர்ந்தோங்குவதற்கு அதிக வாய்ப்பு இல்லை. எனவே, இந்த நோக்கத்தோடு இவர்களை ஒன்றுகூடச் செய்வதும், அவர்கள் தத்தமது பிரச்சினைகளை முன்வைத்து விவாதிக்கச் செய்வதும் அவசியம் என்பது உணரப்பட்டது.

            இத்தகைய ஒரு முத்தரப்பு அமைப்பை உருவாக்கும் யோசனை நீண்ட காலமாகவே இருந்து வந்தபோதிலும், தொழிலாளர்களின் மன உறுதியையும், உத்வேகத்தையும், விடா முயற்சியையும் வளர்த்து வலுப்படுத்துவதை யுத்தம் அவசர அவசியமாக்கி இருக்கவில்லை என்றால், இந்த யோசனை இவ்வளவு விரைவில், இத்தனை துரித கதியில் ஸ்தூல வடிவம் பெற்றிருக்குமா என்பது ஐயமே. முத்தரப்பு அமைப்பை உருவாக்கும் பணியை யுத்தம் மற்றொரு வகையிலும் துரிதப்படுத்திற்று.

துணிகரமான கொள்கை

          போரின் தாக்கம் காரணமாக, தொழில்துறைப் பிரச்சினைகளிலும், தொழிலாளர் நலப் பிரச்சினைகளிலும் மிகப் பெருமளவில் அக்கறையும் கவனமும் செலுத்தும்படியான அவசரம் இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. இவ்வகையில் மிகவும் துணிகரமான நடவடிக்கை எடுத்துக்கொள்ள அரசாங்கம் எவ்வகையிலும் தயக்கமோ மயக்கமோ காட்டவில்லை என்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறேன்.

            தேர்ச்சி பெறாத தொழிலாளர்களைத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களாக ஆக்கும் பணியை அரசாங்கம் மேற்கொண்டது. அவர்களுக்கு தேர்ந்த, சிறந்த தொழில் பயிற்சி அளித்தும், எண்ணற்ற தொழில் பயிற்சிப் பள்ளிகளை உருவாக்கியும் இப்பணியை சிறப்புற ஆற்றிற்று.

            தற்போதைய தொழிலாளர் சட்டத்தில் அது இரண்டு புதிய கோட்பாடுகளை அறிமுகப்படுத்திற்று. இவை இரண்டுமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை; வழக்கமான பாரம்பரியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை, மாறுபட்டவை.

            நியாயமான ஊதியங்களையும் நேரிய வேலை நிலைமைகளையும் வகுத்துத் தரும் உரிமையை தனது கடமையாகவும் பொறுப்பாகவும் அது ஏற்றுக்கொண்டுள்ளது.

            தங்களுக்கு இடையே உள்ள தகராறுகளை மத்தியஸ்துக்கு விடும்படி தொழிலாளர்களையும் தொழிலதிபர்களையும் நிர்ப்பந்திப்பதை தனது கடப்பாடாகவும் பொறுப்பாகவும் அது வரித்துக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தொழிலாளர்களின் சேமநலனை உத்தரவாதம் செய்யும் பொறுப்பினையும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக என்ன செய்ய வேண்டும் என்று ஆணைகள் பிறப்பிப்பதோடு அரசாங்கம் நின்று கொள்ளப்போவதில்லை; அந்த ஆணைகள் முறையாக, சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கு ஓர் அமைப்பையும் அது நியமிக்க இருக்கிறது.

            இந்த துணிகரமான கொள்கையை தனது சொந்த முயற்சியின் பேரிலும், மதிப்பீட்டின் பேரிலும், பகுத்தாய்வின் பேரிலுமே இந்திய அரசாங்கம் வகுத்துக் கொண்டிருக்கிறது. எனினும் ஒரு விஷயம்; தன்மீது சார்ந்துள்ள இந்தப் புதிய கடமைகளை, பொறுப்புகளை உறுதியோடு, தன்னம்பிக்கையோடு நிறைவேற்றுவதற்கு மாகாண அரசாங்கங்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்களின் ஆலோசனையைப் பெறுவது உகந்ததாக இருக்குமே என்று அரசாங்கம் உணர்ந்தது; இதன் பொருட்டு ஓர் அமைப்பைத் தோற்றுவிப்பது அரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கை மேம்படவும் சிறக்கவும் துணைபுரியும் என்றும் அது கருதிற்று.

இரண்டு அமைப்புகள் உதயம்

          இந்த இரட்டை நோக்கத்துக்காகவே முத்தரப்பு தொழிலாளர் மாநாடு கூட்டப்பட்டது. தொழிலாளர் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அவற்றின் சட்ட மற்றும் நிர்வாக அம்சங்களின் பகைப்புலனில் விவாதிப்பதற்கும், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதில் மிகவும் திருப்திகரமான நடவடிக்கைகள் எடுத்துக்கொள்வது சம்பந்தமாக இந்திய அரசாங்கத்துக்கு தக்க ஆலோசனை கூறுவதற்கும் ஒரு நிரந்தரமான, பிரதிநிதித்துவம் வாய்ந்த அமைப்பினை உருவாக்குவதற்கு காலம் கனியவில்லையா என்பதை ஆழ்ந்து பரிசீலித்து உகந்த முடிவை எடுக்குமாறு மாநாடு கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த பிரதிநிதிகள் இந்த யோசனையை ஏகமனதாக, முழுமனதோடு ஏற்றுக்கொண்டனர்; இது சம்பந்தமாக இரு அமைப்புகளை உருவாக்கவும் தீர்மானித்தனர். இவற்றில் ஒர் அமைப்பு பெரியது; அது விரிவடைந்த தொழிலாளர் மாநாடு என்று அழைக்கப்பட்டது. மற்ற அமைப்பு சிறிது; தொழிலாளர் நிலைக்குழு என்பது அதன் பெயர்.

            யுத்த நிலைமைகளே முத்தரப்பு தொழிலாளர் மாநாடு கருவாகி உருவாவதற்கு அடிப்படைக் காரணமாகும். எனினும் யுத்தம் முடிந்த பிறகும் இது நீடிக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் ஒரு நிலையான, நிரந்தரமான இடம் வகிக்கும் ஓர் அமைப்பாக அது திகழப்போகிறது.

            தொழில் துறைப் பிரச்சினைகளையும் தொழிலாளர் பிரச்சினைகளையும் பற்றி விவாதிப்பதற்கு இத்தகைய ஒரு பிரதிநிதித்துவம் வாய்ந்த அமைப்பை உருவாக்குவது சம்பந்தமாக மேற்கொண்ட முடிவு மிகவும் விவேகமானது என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது. கடந்த 13 மாதங்களாக நடைபெற்றுள்ள பணியை ஆய்வுசெய்தாலே இத்தகைய ஐயமெல்லாம் பறந்தோடி விடும் என்பது திண்ணம்.

            இந்த இரு அமைப்புகளும் 1942 ஆகஸ்டு 7-ஆம் தேதி தோன்றின. அதற்குப் பிறகு இதுவரை தொழிலாளர் நிலைக்குழு மூன்று முறை கூடியுள்ளது. முதல் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பின்கண்ட விஷயங்கள் இடம்பெற்றிருந்தன: யுத்தகால தொழிலாளர் சட்டங்கள், அனுமதியின்றித் தொழிலாளர்கள் வேலைக்கு வராமல் இருத்தல், தொழில் தகராறுகள், வேலைநேரம், மிகை உழைப்பால் தொழிலாளர்கள் சோர்வடைதல், சுகாதார ஆராய்ச்சி வாரியங்கள், உழைப்பாளர்களின் ஊதியங்கள், அகவிலைப்படி, ஆதாயப்பங்கு ஊதியங்கள், சேமிப்புகள், ஆக்கநல நடவடிக்கைகள், அடக்கவிலை தானிய விற்பனைக் கடைகள், ஏ.ஆர்.பி.க்கும் சேமநலப்பணிக்கும் கூட்டுக் குழு அமைத்தல், சில்லறை நாணயங்கள் பற்றாக்குறை ஏற்படும்போது ஊதியங்கள் வழங்குவதை பின்னமில்லாமல் முழுமையாக்குதல் முதலியவை.

            இரண்டாவது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பின்கண்ட விஷயங்களைக் கொண்டதாக இருந்தது: தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கீடு, இந்தியப் பாதுகாப்பு விதி 81-ஏ.யின் படி கட்டாய மத்தியஸ்த தீர்ப்பு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அளிக்கப்படும் போனசுகள்.

            மூன்றாவது கூட்டத்தில் பின்கண்ட விஷயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன: நியாயமான கூலியை உத்தரவாதம் செய்யும் ஒரு விதியை அரசாங்க ஒப்பந்தங்களில் சேர்த்தல், கூட்டு உற்பத்திக் குழுக்களை அமைத்தல், தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் நல அதிகாரிகளை நியமித்தல், இந்தியப் பாதுகாப்பு விதி 81-83 முறையாக செயல்படும்படிப் பார்த்துக் கொள்ளுதல், வேலை வாய்ப்பு நிலையங்களை நிறுவுதல், தொழில்துறை புள்ளி விவரத் தொகுப்புச் சட்டத்தின்படி புள்ளி விவரங்களைச் சேகரித்தல் முதலியவை.

            தொழிலாளர் நிலைக் குழுவில் எவ்விதம் மிகப் பல்வேறுபட்ட விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எனினும் இவ்வாறு விவாதிக்கப் பட்ட பல விஷயங்களில் ஒருமனதாக முடிவுக்கு வருவது சாத்தியமில்லாது போயிற்று.

மிகவும் பயனுள்ளவை

            ஆயினும் இந்த விவாதங்கள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்திருந்தன; இவற்றால் இந்திய அரசாங்கம் பெரிதும் அனுகூலமடைந்தது. விவாதிக்கப்பட்ட பெரும்பாலான விஷயங்களில் ஒருமித்த கருத்து நிலவாததன் காரணமாக அவற்றின் மீது இந்திய அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஒருமித்த கருத்து நிலவிய முடிவுகளை ஏற்றுக்கொள்வதிலோ, அவற்றை நடைமுறைப்படுத்துவதிலோ இந்திய அரசாங்கம் எத்தகைய தயக்கத்தையும் மெத்தனப்போக்கையும் கடைப்பிடிக்கவில்லை. போரில் காயமடைவோர்களுக்கு நஷ்டஈடு தரும் சட்டத்தையும், தேசிய சேவை (தொழில்நுட்ப ஊழியர் திருத்த) அவசர சட்டத்தையும் இதற்குச் சான்றாகக் கூறலாம். இதல்லாமல், தொழில்துறைப் புள்ளிவிவரச் சட்டத்தையும், வேலை வாய்ப்பு நிலையங்களை அமைக்கும் திட்டத்தையும் இவ்வகையில் மேலும் உதாரணமாக சொல்லலாம். இவ்விரண்டு விஷயங்களிலும் மாநாட்டின் முடிவுகளுக்கே இணங்க விரைவிலேயே உரிய நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும். 

கண்ணோட்டத்தில் அடிப்படை மாற்றம்

            இந்த முன்னேற்றம் பலருக்கு அற்பமானதாகத் தோன்றக்கூடும். அவர்களது இந்த நோக்கும் போக்கும் தவறானது என்று அவர்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன். முன்னேற்றத்துக்குக் குறுக்குப் பாதைகள் எவையும் இல்லை, அப்படியே குறுக்குப் பாதைகள் இருந்தாலும் அவை சரியானவையாக இருக்கும் என்று கூற முடியாது. அமைதியான முறையில் முன்னேற்றம் காண்பது எப்போதும் மெதுவான இயக்க நிகழ்வாகவே இருக்கும்; அதிலும் என் போன்ற அவசரக்குடுக்கைகளுக்கு இந்த மெதுவான முன்னேற்றம் சில சமயங்களில் ஓரளவு வேதனை அளிப்பதாகவே இருக்கும். கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பாரம்பரியமோ, சமூக உணர்வோ இல்லாத இந்தியா போன்ற ஒரு பண்டைய நாட்டில் முன்னேற்றம் மெதுவாக இருப்பது முற்றிலும் இயல்பே. இது குறித்து எவரும் சோர்வடைய வேண்டியதில்லை. ஏனென்றால் எனது அபிப்பிராயத்தில் கண்ணோட்டத்தின் இயல்புதான் முக்கியமானதே தவிர முன்னேற்றத்தின் வேகம் முக்கியமானதல்ல.

            இந்த நோக்கில் பார்க்கும்போது, தொழிலாளர் பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம், தொழிலதிபர்கள், ஊழியர்கள் ஆகியோரின் கண்ணோட்டத்தில் அடிப்படையான மாற்றத்தைத் தோற்றுவித்திருப்பதை இந்த முத்தரப்பு மாநாடு புரிந்துள்ள மகத்தான சாதனை என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த மாநாடுகளில் பங்கு கொண்ட எவருமே இத்தகைய உணர்வைப் பெறாமல் இருக்க முடியாது. நமது கண்ணோட்டத்தில் இவ்விதம் ஆரோக்கியமான, அடிப்படையான மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலைமையில், நமது முன்னேற்றத்தின் வேகத்தைத் தீவிரப்படுத்த முடியும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

நிகழ்ச்சி நிரல்

          இந்த விரிவடைந்த தொழிலாளர் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் எட்டு விஷயங்கள் அடங்கியுள்ளன. அவை வருமாறு:

  • நிலக்கரி, மூலப்பொருள்கள் போன்றவற்றின் பற்றாக்குறைகாரணமாக தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தல்
  • சமூகப் பாதுகாப்பு; குறைந்தபட்ச ஊதியம்.
  • அகவிலைப்படியை நிர்ணயிக்கும் கோட்பாடுகள்.
  • பெரிய தொழில் நிலையங்கள் சம்பந்தமாக பம்பாய் தொழில் தகராறுகள் சட்டம் இயல் V ல் இடம் பெற்றுள்ள விதிகளின் அடிப்படையில் நிலை ஆணைகள் பிறப்பிக்க வழிவகை செய்தல்.
  • விரிவடைந்த மாநாடுக்கான நடைமுறை விதிகளை வகுத்தல்.
  • மாகாணங்களில் முத்தரப்பு அமைப்புகளை நிறுவுதல்.
  • சட்டமன்றங்களிலும் ஏனைய அமைப்புகளிலும் தொழிலாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்தல்.
  • சேம நிதிக்கான முன்மாதிரியான விதிகள்.

இவற்றில் இரண்டு விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்; இவற்றை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சமூகப்பாதுகாப்பையும் தொழிலாளர் பிரதிநிதித்துவத்தையும்தான் இங்கு குறிப்பிடுகிறேன். இவை பிரிக்க முடியாதபடி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இன்னும் சொல்லப் போனால் இவை தவிர்க்க வொண்ணாதவை என்பதுதான் இவற்றின் தனிச் சிறப்பு எனக் கூற வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் உலகெங்கும் ஆழ்ந்து ஆய்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் இவை மிகுந்த ஆர்வத்தையும் அக்கறையையும் கிளர்த்தி விட்டிருக்கின்றன என்பதற்கு பீவரிட்ஜ் அறிக்கை ஒரு நிதர்சன சான்றாக அமைந்துள்ளது. இவ்வாறிருக்கும்போது இந்தியாவிலுள்ள நாம் இவற்றைப் பற்றிக் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது; அலட்சியமாக, பாராமுகமாக இருந்துவிட முடியாது. இவை சம்பந்தமாக நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், இவை விஷயத்தில் எத்தகைய போக்கை மேற்கொள்வது உசிதமானதாக, உகந்ததாக இருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இந்தப் பிரச்சினைகளுடன் நெருங்கிய சம்பந்தமுடைய இரண்டு கருத்துகளைக் கூறுவதற்கு என்னை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். இவற்றில் முதல் கருத்து வருமாறு:

இரு முரண்பாடுகள்

முதலாளித்துவத் தொழில்துறை அமைப்பிலும், நாடாளுமன்ற ஜனநாயகம் எனப்படும் அரசியல் அமைப்பிலும் வாழ்ந்து வருபவர்கள் தமது அமைப்புகள் இரண்டு முரண்பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மலைமலையாகக் குவிந்துள்ள செல்வத்துக்கும் பிணந்தின்னிக் கழுகுகளைப் போல் கொத்தியெடுக்கும் கோர வறுமைக்கும் இடையே உள்ள படுபாதாளம் முதல் முரண்பாடாகும். அதிலும் இந்த முரண்பாடு சாதாரணமானதல்ல; மிகவும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள முரண்பாடாகும். இதன் விபரீத விளைவாக இன்று நாம் என்ன பார்க்கிறோம்? ஒரு சொட்டு வியர்வைக் கூடச் சிந்தி உழைக்காமல் உல்லாசபுரியில் வாழ்பவர்கள் கோடீஸ்வரக் கோமான்களாக இருப்பதையும் அதேசமயம் நெற்றி வியர்வை நிலத்தை நனைக்க மாடாக உழைத்து ஓடாகத் தேய்பவர்கள் கொடிதினும் கொடிதான வறுமையில் வாடுவதையும் காண்கிறோம்.

இனி அடுத்து, இரண்டாவது முரண்பாடு அரசியல், பொருளாதார அமைப்புகளுக்கிடையே பொதிந்துள்ளது. அது என்ன? அரசியலில் சமத்துவம்; பொருளாதாரத்திலோ அசமத்துவம், ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரே மதிப்பு – இது நமது அரசியல் கோட்பாடு. ஆனால் பொருளாதாரத்தில் நமது கோட்பாடு நமது அரசியல் கோட்பாட்டையே மறுதலிப்பதாகும், உதாசீனம் செய்வதாகும். இந்த முரண்பாடுகளைக் களையும் விஷயத்தில் கருத்து வேறுபாடு இருக்கக்கூடும். ஆனால் இந்தக் கொடிய முரண்பாடுகள் இருந்து வருகின்றன என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு எள்ளளவும் இடமில்லை.

இந்த முரண்பாடுகள் கண்ணை உறுத்தும்படியாக, முனைப்பானவையாக இருந்தபோதிலும், கடந்த காலத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தக் கொடுமையை, அவலத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் இன்று நிலைமை அடியோடு மாறிவிட்டது. மிகவும் கூரறிவு படைத்தவர்களே முன்னர் ஏனோதானோ என்று நோக்கிய இந்த முரண்பாடுகள் இப்போது மிகவும் மந்தமான, மழுங்கலானவர்களுக்கே வெட்டவெளிச்சமாகி விட்டன.

இரண்டாவதாக நான் கூறவிரும்பும் கருத்து இதுதான். சமூக வாழ்க்கைக்கான அடித்தளமானது அந்தஸ்திலிருந்து தொழில் ஒப்பந்தத்துக்கு மாறியதிலிருந்தே வாழ்க்கையின் பாதுகாப்பு இன்மை ஒரு சமூகப் பிரச்சினையாகி விட்டது; மனித வாழ்வின் உய்வில், உயர்வில், மேம்பாட்டில் நம்பிக்கை கொண்ட அனைவரது சிந்தனைகளுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதில் ஈடுபட்டு கொண்டன. மனிதனுக்குள்ள உரிமைகளையும் அவனுக்குள்ள பல்வேறு சுதந்திரங்களையும் நிர்ணயித்துக் கூறுவதற்கு மிகப்பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது; இவை யாவும் அவனுடைய பிறப்புரிமையாகக் கருதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மிக மிக நல்லது. இவற்றைப் பற்றி எல்லாம் அறியவரும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; உள்ளம் உவகை அடைகிறது. ஆனால் இங்கு ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்; பசிபிக் உறவுகள் மாநாட்டின் பொருளாதாரக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பது போல், இந்த உரிமைகள் எல்லாம் சாமானிய மனிதனுக்கு அமைதியான வாழ்க்கையாக , குடியிருக்கும் இல்லமாக, உடுத்தும் உடையாக, கல்வி வசதியாக, ஆரோக்கியமாக உருவெடுக்க வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் அகல்பெரும் நெடுஞ்சாலைகளில் தட்டுத் தடுமாறி விழுவோம் என்ற அச்சமின்றி, தலை உயர்த்தி, நெஞ்சு நிமிர்த்தி, கம்பீரமாக நடைபோடும் உரிமை அவனுக்கு இருக்க வேண்டும். இவை எல்லாம் இல்லை என்றால் சமூகப் பந்தோபஸ்து என்பது முற்றிலும் அர்த்தமற்றதாக, வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும்.

விழுமிய வாழ்க்கைக்கு

இந்தியாவிலுள்ள நாம் இந்தப் பிரச்சினைகள் இருந்து வருவதை உணரத் தவறுவதோ அல்லது உதாசீனம் செய்வதோ கூடாது. நிலைமைகளை மறுமதிப்பீடு செய்யத் தயாராக இருக்க வேண்டும். இந்தியாவின் தொழில் வளர்ச்சியை நமது குறிக்கோளாகக் கொண்டிருப்பது மட்டும் போதாது. இத்தகைய எந்தத் தொழில் வளர்ச்சியும் சமூக ரீதியில் விரும்பத்தக்க அளவிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் மேன்மேலும் அதிகமான செல்வத்தை உற்பத்தி செய்து குவிப்பதில் நமது ஆற்றல்களை, முயற்சிகளை ஒருமுகப்படுத்துவது மட்டும் போதாது. அனைத்து இந்தியர்களுக்கும் இந்த செல்வத்தில் பங்கு கொள்ள உரிமை உண்டு என்பதை நாம் ஏற்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தகைமை மிக்க, ஏற்றமிகு வாழ்க்கை வாழ்வது சாத்தியமாகும். மேலும், அவர்களுக்குப் பாதுகாப்பற்ற அவல நிலைமை ஏற்பட்டு விடாதபடி தடுப்பதற்கான வழிவகைகளையும் நாம் காண வேண்டும்.

என் உரையை முடிப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். நமது கூட்டங்களில் நடைபெறும் விவாதங்கள் சில சமயங்களில் சுற்றி வளைத்துச் செல்லுபவையாகவும் காரியார்த்த ரீதியற்றவையாகவும் அமைந்து விடுகின்றன.

இந்த விஷயத்தில் எவர் மீதும் குற்றம் சாட்டும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை. எனினும் இரத்தினச் சுருக்கமாகப் பேசுமாறும், சொல்லவந்த விஷயத்தை நறுக்குத் தெறுக்காக எடுத்துரைக்குமாறும் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொள்கிறேன். எந்த ஒரு பிரதிநிதியும் விவாதத்தில் பங்கு கொள்வதைக் கட்டுப்படுத்தும் உத்தேசம் எதுவும் எனக்கு இல்லை. ஒவ்வொரு பிரதிநிதியின் கருத்தையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். அவர் தமது கருத்தை தெரிவிப்பதை நாம் வரவேற்போம். ஆனால் அவர் நீண்ட, விரிவான தர்க்க நியாயங்களுடனும் வாத ஆதாரங்களுடனும் பேச வேண்டும் என்பதில்லை. அவர் முன்வைக்கும் வாதம் மனத்தில் படும்படியாக, தெள்ளத் தெளிவாக இருக்க வேண்டும். நமது மாநாட்டு நடவடிக்கைகள் முற்றிலும் காரியார்த்த ரீதியில் அமைந்திருக்க வேண்டும் என்று என்னைப் போலவே நீங்களும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். காமன்ஸ் சபைக்கு எதிராக கார்லைல் சாட்டியது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It