(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131)

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்(வைசிராய் நிர்வாக சபையின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, நமது அவையின் பெண் உறுப்பினர் இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தமைக்காக மகிழ்ச்சி அடைகிறேன். என் மனத்தில் பெரும் சுமையாக அழுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் குறித்து அவைக்கு விளக்கம் அளிக்க இந்த ஒத்திவைப்புத் தீர்மானம் எனக்கு நல்வாய்ப்பினை அளிக்கிறது. இதுவே என் மகிழ்ச்சிக்குக் காரணம். இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கருதுகிறேன். இதிலிருந்தே அவை எனது உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் என்று முதலிலேயே கூறிவிடுகிறேன். இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இருப்பினும் இப்போதைய சூழ்நிலைமைகளில் இத்தகைய முடிவை மேற்கொள்ளும்படி இந்திய அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இதிலிருந்து என் நிலையை அவை வேறுபடுத்திப் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.           

ambedkar 313இந்த விஷயம் குறித்து இது வரை நடைபெற்ற விவாதத்தை நான் உன்னிப்பாக செவிமடுத்துக் கேட்டத்தில் மதிப்பிற்குரிய பெரும்பாலான உறுப்பினர்கள் மனிதநேயத்தால் உந்தப்பட்டே பேசியிருக்கிறார்கள் என்று எனக்குப்படுகிறது. அவர்கள் எதார்த்த நிலையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று விட்டார்கள் என்பதே எனது தாழ்மையான கருத்து. இந்த விவாதத்தில் பங்கு கொண்டு பேச முன்வந்துள்ள நான் எதார்த்த நிலைமையைக் கணக்கிலெடுத்துக் கொண்டே உரையாற்ற எண்ணியுள்ளேன். இந்த அவை முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் என்ற நோக்கில் பல விஷயங்கள் விவாதத்தின்போது முன்வைக்கப்பட்டன. நிலக்கரிச் சுரங்கங்களில் தற்போது தரப்பட்டுவரும் ஊதியங்கள் பற்றிக் கூறப்பட்டதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். மேலும், நிலக்கரிச் சுரங்கங்களில் தொழிலாளர்களுக்குப் போதிய வசதிகள் செய்த தரப்படாதது பற்றியும் பல உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இவற்றைப் பற்றி எல்லாம் என் உரையில் எனது கருத்துகளைக் கூறுவேன். எனினும் இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளுடன் ஒப்பிடும்போது இவை அவை முடிவெடுக்க வேண்டியிராத அத்தனை முக்கியத்துவமற்ற விஷயங்கள்.

            இந்த முகவுரையுடன் என் உரையைத் தொடங்குகிறேன். பெண்களை பூமிக்கு அடியில் வேலை செய்வதைத் தடுக்கும் நடைமுறை ஒழுங்கை அரசாங்கம் ஒருபோதும் சரிவர கடைப்பிடிப்பதில்லை. இந்த நடைமுறை ஒழுங்கைப் பின்பற்ற 1939-ல் ஒப்புக்கொண்ட அரசாங்கம் நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே அதிலிருந்து பின்வாங்கி விட்டது என்று மதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். ஐயா, இந்த விஷயத்தை சரியான கோணத்தில் அவையின் முன்வைக்கும் பொருட்டு சில கருத்துகளை இங்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். பூமிக்கு அடியில் பெண்கள் வேலை செய்வதைத் தடை செய்யும் கோட்பாட்டை இந்த மரபொழுங்கு நடைமுறைக்கு வருவதற்கு நீண்டகாலத்துக்கு முன்பே இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது அவைக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். எனக்குத் தெரிந்தவரை இந்த விஷயம் 1923ஆம் ஆண்டில் முதன் முறையாக விவாதிக்கப்பட்டது; அப்போது இந்திய நிலக்கரி சுரங்கங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கு இந்திய அரசாங்கம் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த மசோதாவின் ஆரம்ப நோக்கம் மிகவும் வரையறைக்குட்பட்டதாக இருந்தது என்பதை அவைக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். நிலக்கரிச் சுரங்கங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வதே அதன் நோக்கமாக இருந்தது. ஆனால் மசோதா தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்பட்டபோது, பூமிக்கு அடியில் பெண்கள் வேலை செய்வதைத் தடுப்பதற்கான அதிகாரத்தை இந்த மசோதா மூலம் பெறுவதற்கு இந்திய அரசாங்கம் துணிச்சலான நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவுக் குழு கருத்துத் தெரிவித்தது. பொறுக்குக் குழுவில் இந்திய அரசாங்கம் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டது.

இந்திய அரசாங்கம் இந்தக் கோட்பாட்டை ஏற்று கொண்டது மட்டுமன்றி மேலும் ஒரு படி மேலே சென்றது நிலத்துக்கு அடியில் பெண்கள் வேலை செய்வதைத் தடுக்கும் நோக்கத்தோடு அது திட்டவட்டமான சில நடைமுறைகளை வகுத்தது; பூமிக்கு அடியில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை வருடத்தோறும் குறைப்பதற்கு அது ஒரு தெள்ளத்தெளிவான திட்டத்தைத் தயாரித்தது. இதனால் இத்திட்டம் அவையில் அங்கீகரிக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய அரசாங்கங்கத்தின் கொள்கையின்படி, பூமிக்கு அடியில் வேலை செய்யும் பெண்கள் எவருமே இருக்கவில்லை. இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள மதிப்பிற்குரிய உறுப்பினரே இந்த உண்மையை தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியிருக்கும்போது, பூமிக்கு அடியில் பெண்கள் பணியாற்றுவதை அனுமதிக்கலாகாது என்ற மரபு ஒழுங்கு நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அதனைப் பின்பற்றிய இந்திய அரசாங்கம், சுரங்கங்களில் பெண்கள் பணியாற்றுவது கூடாது என்ற திட்டவட்டமான கருத்தின் அடிப்படையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் எடுத்துவந்த இந்திய அரசாங்கம் இப்போது இந்தத் தடையை நீக்க முன்வந்திருக்கிறது என்றால் அதற்கான காரணத்தை இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கும் மதிப்பிற்குரிய பெண் உறுப்பினர் புரிந்து கொள்ளாததற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.

            இதுவரை இருந்துவந்த இந்தத் தடையை எத்தகைய நியாயமுமின்றி இந்திய அரசாங்கம் அகற்றியிருக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இத்தகைய ஒரு குற்றச்சாட்டு கூறப்படுவது குறித்து நான் மிகுந்த வியப்படைகிறேன். ஐயா, இது விஷயத்தில் இரண்டு அம்சங்களை அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்; இந்த இரண்டு அம்சங்களும் நான் குறிப்பிடுகின்ற அவசர நிலையை உறுதி செய்பவையாக இல்லையா என்பதைப் பரிசீலித்துப் பார்க்குமாறு அவையைக் கேட்டுக்கொள்கிறேன். ஐயா, பூமிக்கு அடியில் பெண்கள் வேலை செய்வதற்கு இருந்துவந்த தடை நீக்கப்பட்டிருப்பது நிலக்கரியுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகும். இது எவ்வகையிலும் மறுக்க முடியாத உண்மை. தொழில் துறைக் கண்ணோட்டத்தில் நிலக்கரி ஒரு கேந்திரமான பொருள் இல்லையா என்று அவையைக் கேட்கிறேன; போக்குவரத்துத்துறைக் கண்ணோட்டத்தில் நிலக்கரி ஒரு கேந்திரப் பொருள் இல்லையா என்று அவையைக் கேட்கிறேன்; மக்கள் பயனீட்டுக் கண்ணோட்டத்தில் நிலக்கரி ஒரு கேந்திரப் பொருள் இல்லையா என்று அவையைக் கேட்கிறேன்.

நமது விருப்பப்படி நாம் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கூடிய ஒரு பொருளைப் பற்றியல்ல இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நமது உணவுக்கு முன்னர், இன்னும் சொல்லப்போனால் வேறு எதற்கும் முன்னர் நாம் பெற்றிருக்க வேண்டிய பொருள் இது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இது நமது அவை கவனத்திற் கொள்ள வேண்டிய முதல் அம்சமாகும். இந்த அவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய இரண்டாவது அம்சம் ஒன்றும் உள்ளது. அது இதுதான்; நிலைமை சீரடையும் வரை இந்திய அரசாங்கம் காத்துக்கொண்டிருப்பது சாத்தியமல்ல. நிலக்கரியை வழக்கமான முறையில் உற்பத்தி செய்ய முடியும் என்பதை மதிப்பிற்குரிய பெரும்பாலான உறுப்பினர்கள் அறிவார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். இவ்வாறு 1943-ல் உற்பத்தி செய்ய முடியவில்லை; 1944-ல் உற்பத்தி செய்ய முடியவில்லை; ஒருக்கால் 1945ல் இது சாத்தியமாகலாம். ஆனால் இங்கு அவை கவனத்திற்கொள்ள வேண்டிய கேள்வி என்னவென்றால், இது நாம் காத்திருக்கக்கூடிய நேரமா? வழக்கமான முறையில் நடைபெறட்டும் என்று நாம் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கக்கூடிய விஷயமா இது? மிக அவசரமாக, உடனடியாக நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்று துணிந்து கூறுவேன்; நிலைமையை சீர் செய்ய துரிதகதியில் நடவடிக்கை எடுத்துக் கொள்ளாத ஒர் அரசாங்கம் தன்னை அரசாங்கம் என்று அழைத்துக்கொள்வதற்கே தகுதியற்றதாகும். ஆதலால், நாம் ஓர் அவசர நிலையைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பதையும், நிலத்துக்கு அடியில் பெண்கள் வேலை செய்வதற்கு இருந்த தடையை அரசாங்கம் அகற்றியிருப்பது விவேகமற்ற செயலோ அல்லது பொறுப்பற்ற செயலோ அல்ல என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது, மாறாக எதார்த்த நிலைமையையும் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளையும் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நியாயமான நடவடிக்கை என்பதை நாம் மனத்திற் கொள்ள வேண்டும். எனவே, ஐயா, அரசாங்கத்தின் செயல்பாட்டை தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் கருத்திற்கொண்டு மதிப்பிட வேண்டும். இந்த இரு சந்தர்ப்ப சூழ்நிலைமைகளை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கையை எடைபோட வேண்டும், மதிப்பிட வேண்டும் என்று மதிப்பிற்குரிய உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன்; செய்ய வேண்டிய எதையேனும் அரசாங்கம் செய்யத் தவறிவிட்டதா? செய்ய வேண்டாததை எதையேனும் அரசாங்கம் செய்துவிட்டதா? நான் இங்கு குறிப்பிட்ட இரண்டு அம்சங்களின் பகைப்புலனில் பார்க்கும்போது, அரசாங்கத்தின் நடவடிக்கை முற்றிலும் நியாயமானதே என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

            இது மீறப்படக்கூடாத ஒரு மரபொழுங்கு என்று மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் திரு.ஜோஷி கூறினார். தன்னைத் தானே கலைத்துக் கொள்ளும் விதியைக் கொண்டிராத எழுதாச் சட்டங்களில் இதுவும் ஒன்று என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஒரு சர்வதேச மரபொழுங்கை அல்லது ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை மீறுவதற்கு ஒவ்வொரு தேசத்திற்கும் உரிமை உண்டு என்பதை எத்தகைய தயக்கமுமின்றிக் கூறுவேன். இது நன்கு நிலைநாட்டப்பட்ட ஒரு சர்வதேச நியதியாக இருந்து வருகிறது. ஜெனீவாவில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் ஏறத்தாழ இதே கருத்துத்தான் நிலவியது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா, நாங்கள் இந்த முடிவுகளை மேற்கொள்ளாதபடித் தவிர்த்திருக்க முடியுமா? இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டியதேற்பட்ட சில சந்தர்ப்ப சூழ்நிலைகளை இங்கு விவரிக்க விரும்புகிறேன். நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்று அரசாங்கம் ஆராய்ந்ததில் மூன்று காரணங்கள் தெரிய வந்தன. முதலாவதாக, இந்திய அரசாங்கம் தொடங்கிய அதிக உணவு உற்பத்தி இயக்கத்தை இவ்வகையில் குறிப்பிட வேண்டும். படைக்கல உற்பத்தித் தொழிற்சாலைகளில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பையும் இதேபோல் குறிப்பிடுவது அவசியம். அதிக உணவு உற்பத்தி இயக்கத்தின் விளைவாக வேளான் துறைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதுடனும் அதே போல் படைக்கலத் தொழிலில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதுடனும் சுரங்கத்தொழிலின் வேலைவாய்ப்பைப் பாரபட்சமின்றி ஒப்புநோக்கும் எவரும் நிலக்கரிச் சுரங்கங்களில் ஆள் பற்றாக்குறை ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பதை எனிதாகப் புரிந்து கொள்வர்.

ஐயா, உணவு தானியங்களின் விலைகள் துரிதமாக அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலைமையில், அதிக உணவு உற்பத்திக் கொள்கை வேளாண் துறைக்கு மக்களைப் பெருமளவு ஈர்ப்பது முற்றிலும் இயல்பே. நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் பணியாற்றுவோர் விவசாயிகள் என்பதால் அதிக உணவு உற்பத்திக் கொள்கை அவர்களைக் கவர்ந்து ஈர்ப்பதில் வியப்பேதும் இல்லை. அதேபோன்று அதிக ஊதியம் கிடைக்கக்கூடிய ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைகளும் இந்த மக்களை வெகுமாக ஈர்க்கின்றன. தவிரவும், நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. எனக்கு முன் பேசிய மதிப்புமிக்க சில உறுப்பினர்கள் இந்தக் காரணத்தை குறைத்து மதிப்பிட்ட போதிலும், அலட்சியம் செய்தபோதிலும் எதார்த்த நிலையை மூடி மறைத்து விட முடியாது. நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்வது ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்பதையும், அபாயகரமானதும் கூட என்பதையும் அனைவருமே அறிவர். யாருமே இந்த வேலையை விரும்புவதில்லை. வேறு எங்கேயாவது வேலை கிடைத்தால் அடுத்த கணமே அங்கு பறந்தோடிவிடுகிறார்கள். அதிக உணவு உற்பத்தி இயக்கமும் சரி, ஆயுதத் தளவாடத் தொழில்களும் சரி சுரங்கத் தொழிலாளிகளுக்கு அளிக்கும வேலை குறைந்த அபாயமுள்ளதாகவும் மனதுக்கு ஒத்ததாகவும் அமைகிறது. இரண்டாவதாக, அதிக உணவு உற்பத்தி இயக்கத்திலும் அயுதத் தளவாடத் தொழிற்சாலையிலும் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி தனக்கு மட்டுமன்றி தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த இதர உறுப்பினர்களுக்கும் சேர்த்துச் சம்பாதிக்கிறான்.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): மாண்புமிகு உறுப்பினருக்கு இன்னும் ஒரு நிமிடம் தான் பாக்கி இருக்கிறது.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மிகவும் வருந்துகிறேன். ஐயா.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): இது விஷயத்தில் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை. மாண்புமிகு உறுப்பினர் தமது உரையை முடிக்க வேண்டும்.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அவ்வாறே செய்கிறேன். சுரங்க வேலைக்கு ஆள் பற்றாக்குறை என்று சொன்னேன் அல்லவா.

            இந்த அவை பரிசீலிக்க வேண்டிய மேலும் இரண்டு விஷயங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன், முதலாவதாக, இந்தப் பிரச்சினை அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்ற நோக்கோடு அவசரப்பட்டு கண்மூடித்தனமாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகுந்த முன்னெச்சரிக்கையோடு தான் அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்தத் தடை நீக்கம் முதலில் மத்திய மாகாணத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது; நிலக்கரிப் பிரதேசம் முழுவதிலும் செயல்படுத்தப்படவில்லை. இந்த அறிவிப்பை வங்காளத்துக்கும் பீகாருக்கும் விஸ்தரிப்பது அவசியம் என்பதை நவம்பரில்தான் அரசாங்கம் கருதிற்று. பிறகு டிசம்பரில்தான் அறிவிப்பு ஒரிசாவுக்கு விஸ்தரிக்கப்பட்டது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம்; இது ஒரு முக்கியமான விஷயமாகும். பால் பாகுபாடின்றி சம வேலைக்குச் சம ஊதியம் என்னும் கோட்பாடு வேறு எந்தத் தொழிலிலும் இல்லாதவாறு இத்தொழிலில்தான் முதல் முறையாக நிலைநாட்டப்பட்டது எனக் கருதுகிறேன். (இந்த வாசகங்களுக்கு அழுத்தம் தந்தது நாம் - ஆசிரியர்) 51/2 அடிக்குக் குறைவான ஊடுவழியுள்ள இடத்தில் பெண்கள் வேலை செய்யக்கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருந்தோம். இந்த அறிவிப்புகள் எல்லாம் மிகவும் தற்காலிகமானவை என்பது அவைக்கு நினைவிருக்கலாம்; இந்த விஷயத்தை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

யுத்தகாலம் வரை இந்த அறிவிப்புகள் நீடிக்கும் என்று நாங்கள் கூறவில்லை; சிலவற்றை முற்றிலும் நெகிழ்வுடையவையாகவே வைத்திருக்கிறோம்; நாங்கள் விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் மாற்றக் கூடியவையாகவே இவற்றை வைத்துள்ளோம்; இவ்வாறு செய்ய எங்களால் முடியும். இதனை முற்றிலும் அவசரமான, தற்காலிகமான நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம் என்பதை இந்த அவைக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த அறிவிப்புக் காலத்தை குறைப்பதற்கும் நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். உதாரணமாக, நாங்கள் ஒரு தொழிலாளர் முகாமை ஏற்பாடு செய்து வருகிறோம்; நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அனுப்புவதற்கு இந்த முகாம் மூலம் ஆண் தொழிலாளர்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். அறிவிப்புக் காலத்தைக் குறைப்பதற்கு நாங்கள் மற்றொரு நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்; அதாவது ராணுவ தளவாடத் தொழிற்சாலைகளுக்கு ஆட்களைத் திரட்டிவரும் ஒப்பந்தக்காரர்களின் உதவியை நாடி நிலக்கரிச் சுரங்களில் வேலை செய்வதற்குத் தொழிலாளர்களை அனுப்பிவைப்பதற்கான தகவல்களை அவர்களுக்கு வழங்குவதற்கு தொழிலாளர் உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): மாண்புமிகு உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, ஒரு நிமிடம் பேச அனுமதிப்பீர்களா….

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): நான் எதுவும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன். அவையின் விதிகள் மீற வொண்ணாதவையாக உள்ளன.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: எனவே இது முற்றிலும் ஓர் அவசர நடவடிக்கை என்பதையும், தேவைக்கும் அதிகமாக ஒரு நிமிடம்கூட அதனை நீடிக்கும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இல்லை என்பதையும் அவை உணரும் என்று நம்புகிறேன்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It