அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
இயற்கையைக் காக்க பூமியின் 1.2% நிலப்பரப்பை பாதுகாத்தால் போதும். இதன் மூலம் உலகின் அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றலாம் என்று புதிய ஆய்வு கூறுகிறது. நிலப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட நிலங்களை இலக்குடன் விரிவடையச் செய்தால் பூமியில் இருந்து முற்றிலும் மறையும் அபாயத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பாலூட்டிகள், பறவைகள், இரு வாழ்விகள், தாவரங்களை அழியாமல் பாதுகாக்கலாம்.
அர்ஜெண்டினா முதல் பாப்புவா நியூ கினி வரை உள்ள 16,825 இடங்களை ஆய்வுக்குழுவினர் ஆராய்ந்தனர். வேறெங்கும் காணப்படாத தாவரங்கள், விலங்குகள் வாழும் இந்த இடங்களை வரும் ஐந்தாண்டுகளில் திட்டமிட்டு பாதுகாத்தால் அவை அழிவதில் இருந்து அவற்றை மீட்கலாம். “வட அமெரிக்காவில் உள்ள சிவாவன் பாலைவனத்தில் காணப்படும் பேயோடு கேப்டஸ் (peyote cactus) என்ற பூக்கும் தாவரம் வாழிடம் சுருங்கிய நிலையில் வாழ்கிறது. வாழிடப் பரப்பின் குறைவு, அல்லது எண்ணிக்கை குறைவு போன்றவற்றால் பூமியில் இன்று காணப்படும் பெரும்பாலான உயிரினங்களும் மிக அரிதானவையே” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் ரிசால்வ் (Resolve) என்ற சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளருமான டாக்டர் எரிக் டைனஸ்ட்டைன் (Dr Eric Dinerstein) கூறுகிறார்.
இயற்கையின் எல்லா அம்சங்களையும் மனிதர்கள் பாதுகாக்க வேண்டியதில்லை. அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறுகிறது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் சூழல் மண்டலங்களை மேலாண்மை செய்தல், உயிர் பன்மயத் தன்மையை அழியாமல் காப்பது மனிதன் வாழ இன்றியமையாதது. இது பூமியில் உள்ள பாதி நிலப்பகுதியை பாதுகாத்தால் உயிர் பன்மயத்தன்மை அழிவை தடுத்து நிறுத்தலாம். பூமி மீண்டும் வளம் பெறும்.
கார்பன் சேமிப்பு அதிகமாகும் என்று 2020ல் நடந்த ஆய்வுகள் கூறின. இத்தகைய பகுதிகள் கண்டிப்பாக சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் (Conservation imperatives) என்று சூழலியலாளர்கள் அழைக்கின்றனர். இத்தகைய 38% இடங்கள் இப்போடுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.
பாதுகாக்கப்பட்ட இடங்களின் விரிவாக்கம்
இவற்றில் பாதி பிலிப்பைன்ஸ், பிரேசில், இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் கொலம்பியாவில் உள்ளன என்று அந்த ஆய்வு கூறியது. உலகின் 16.6% நிலப்பரப்பு மற்றும் உள்நாட்டு நீர்வழிகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்த பத்தாண்டிற்குள் இயற்கையின் அழிவை பெருமளவு குறைக்க முடியும் என்று ஐநா சூழல் அமைப்பு கூறுகிறது. 7% பாதுகாக்கப்பட்ட இடங்களை முக்கியத்துவம் கொடுத்து பராமரித்தால் மிக ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களின் வாழிடம் அழிவில் இருந்து தப்பிக்கும்.
குறிப்பிட்ட இடங்களைப் பாதுகாக்க வரும் ஐந்தாண்டில் 29 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணித்துள்ளனர். இந்த இடங்களின் மொத்த பரப்பு 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர். நிலப்பகுதிகளை வாங்குதல், ஆதிவாசிகளின் உரிமைகளை விரிவாக்குதல், அரசுக்கு சொந்தமான இடங்களில் பாதுகாக்கப்பட்ட இடங்களை உருவாக்குதல் போன்ற பல கூட்டு நடவடிக்கைகள் மூலம் இந்த இலட்சியத்தை அடையலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
செயற்கைக்கோள் மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, இரு வாழ்விகள், தாவரங்களின் உலகளாவிய தரவுகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உயிரினங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். அவசரமாக பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் வெப்ப மண்டல பகுதிகள், புல்வெளிப் பிரதேசங்கள், மித வெப்ப மண்டல பகுதிகள், அகண்ட இலையுள்ள மரக் காடுகள் மற்றும் துந்திரப் பகுதிகளில் உள்ளன.
“இந்த ஆய்வு உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பற்றி அறிய பெரிதும் உதவும். 30% நிலப்பகுதியை பாதுகாத்தால் மட்டும் போதாது. அப்பகுதிகளின் தரம், இருக்கும் இடம் போன்றவையும் முக்கியமானது” என்று உலகளவில் பாதுகாக்கப்பட்ட இடங்களின் கண்காணிப்புக்கு பொறுப்பான ஐநா சூழல் திட்டத்தின் உலகளாவிய சூழல் பாதுகாப்பு கண்காணிப்பு மையத்தின் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் நீல் பெர்ஜஸ் (Prof Neil Burgess) கூறுகிறார்.
நம்மை வாழ வைக்கும் உயிரினங்களை பாதுகாப்போம். பூமியை காப்போம். அதன் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
கென்யாவின் டர்க்கானா மக்கள் மரபணு ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் மோசமான சூழலிலும் தங்களைத் தகவமைத்துக் கொண்டு வாழ்கின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. இவர்களில் காணப்படும் மரபணு மாற்றங்கள் குறைந்த அளவு நீர் மற்றும் இறைச்சி நிறைந்த உணவுடன் எவ்வாறு வாழ்கின்றனர் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
தீவிர காலநிலை நிலவும் வடக்கு கென்யாவில் ஆப்பிரிக்க, அமெரிக்க ஆய்வாளர்கள் டர்க்கானாவில் செயல்படும் ஒரு சமூக அமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட ஆய்வில் முக்கிய மரபணு ரீதியான தகவமைப்பின் மூலம் அதி தீவிர வெப்பநிலை, நீர்ப் பற்றாக்குறை, குறைவான பயிர் வளர்ப்பு உள்ள இப்பகுதியில் மேய்ச்சலை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்த மக்கள் இங்கு வாழ்கின்றனர் என்பதை இந்த ஆய்வு விளக்குகிறது.
இந்த சூழல் நூற்றுக் கணக்கான ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் இவர்களிடம் ஏற்படுத்திய இயற்கைத் தேர்வால் இத்தகைய மரபணு தகவமைப்பு காணப்படுகிறது என்று சயன்ஸ் (Science) இதழில் இது பற்றி வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரை விவரிக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளில் மனித மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றம் பற்றி இந்த ஆய்வு விளக்குகிறது.
“டர்க்கானா மற்றும் சஹாரா பாலைவனத்தின் தெற்கில் உள்ள துணை சஹாரா பகுதியில் வாழும் மக்களின் மரபணு ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதில்லை. வரலாற்று ரீதியாக ஆதிவாசி மக்கள் இந்தத் துறையில் குறைவாகவே பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றனர்” என்று ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவரும் கென்யா மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (Kenya Medical Research Institute (Kemri)) முனைவர் பட்ட மாணவருமான சார்ல்ஸ் மியானோ (Charles Miano) கூறுகிறார்.
முழுமையான 366 மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டு இயற்கைத் தேர்வின் அடிப்படையில் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏழு மில்லியன் மரபணு வேறுபாடுகள் ஆராயப்பட்டன.
டர்க்கானா ஆரோக்கியம் மற்றும் மரபணுவியல் திட்டத்தின் (THMP) கீழ், கெம்ரி, டர்க்கானா வடிநிலப் பகுதி கழகம் (Turkana Basin Institute (TBI), டென்னஸி வாண்டர்பில்ட் (Vanderbilt) பல்கலைக்கழகம், கலிபோர்னியா பெர்க்லி (Berkeley) பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வுகள் நடத்தின. இதில் எட்டு டிஎன்ஏ பகுதிகளில் இயற்கைத் தேர்வு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இவற்றில் சிறுநீரகங்களில் வெளிப்பட்ட எஸ்டிசி1 (STC1) என்ற மரபணு மனிதர்கள் அதி தீவிர சூழலில் வாழத்ட் தேவையான தகவமைப்பைத் தருகிறது. இறைச்சி, இரத்தம் ஆகியவற்றில் அதிகம் உள்ள புயூரின் (Purine) அடங்கிய உணவுகள் பதப்படுத்தப்படுவதால் இந்த மரபணு நீரிழப்பை ஏற்படுத்துகிறது. புயூரின் என்பது டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ-வின் கட்டுமானத் தொகுதிகளாக உள்ள ஒரு கரிம வேதிப்பொருள்.
பியூரின் அதிகமுள்ள உணவுகளும் மக்களின் வாழ்வும்
இது இயற்கையாக நம் உடலில் உற்பத்தியாகிறது. இறைச்சி, கடல் உணவுகள், பீர் போன்ற சில உணவுப் பொருட்களிலும் இது காணப்படுகிறது. மரபணு உருவாக்கத்திற்கு உதவுகிறது. அடினோசின் ட்ரைபாஸ்பேட், குவானோசின் ட்ரைபாஸ்பேட் போன்ற மூலக்கூறுகளில் இது உள்ளது. செல் ஆற்றள் வழங்குதல், சமிக்ஞை பரிமாற்றம், வளர்சிதை மாற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
உடலில் உருவாகும் யூரிக் அமிலம் சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டு, சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால், அல்லது சிறுநீரகங்களால் போதுமான அளவு வெளியேற்றப் படவில்லையென்றால் அதன் அளவு இரத்தத்தில் அதிகரிக்கிறது. அதிகப்படியான யூரிக் அமிலம் மூட்டுகளில் ஊசி போன்ற படிகங்களாகப் படிந்து, வீக்கம், சிவத்தல் மற்றும் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. இதனால் முடக்குவாதம் உண்டாகிறது.
இது பெரும்பாலும் பெருவிரலில் தொடங்குகிறது. சிறுநீரகங்களில் படிந்து தீவிர நிலையில் சிறுநீரகச் செயலிழப்பை ஏற்படுத்துகிறது. புயூரின் அதிகமுள்ள இறைச்சி, இரத்தம் மக்களின் முக்கிய உணவு. உலகின் மிக வறண்ட பகுதிகளில் ஒன்றான இப்பகுதி வடக்கு கென்யாவின் பெரும் பரப்பில் அமைந்துள்ளது. டர்க்கானாவில் மர நிழல்கள் அரிது. நீர் என்பது அதை விட அரிது.
கணிக்கமுடியாத குறுகிய கால மழை, குடிநீர், கால்நடை, ஒட்டகங்கள், ஆடுகளுக்கு நீர் தேடியலைவது மக்களின் அண்றாட வேலை. நீருக்காக பசுமைப் பரப்புகளற்ற பகுதிகள் வழியாக பல மைல் தேடல். 70 முதல் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு விலங்குகளின் பால், இரத்தம், இறைச்சி ஆகியவையே முக்கிய உணவு மூலம். மேய்ச்சல் தொழில் செய்பவர்களின் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க இந்த உணவுகளே உதவுகின்றன.
பயிர்கள் வளராத, கால்நடையாக நடந்து சென்று உணவைப் பெற இயலாத அளவு தொலைதூரத்தில் சந்தைகள் அமைந்துள்ள இத்தகைய சூழலுள்ள இடங்களில் உலகம் முழுவதும் வாழும் மக்கள் சமூகங்களில் இந்நிலை பொதுவாக காணப்படுகிறது. என்றாலும் பல ஆண்டுகளாக ஆரோக்கியத்தை மதிப்பிட டர்க்கானா மக்களின் வாழ்க்கை முறை, இரத்தம், சிறுநீர் மாதிரிகள் ஆவணப்படுத்தப்பட்டன. பியூரின் அதிகமுள்ள உணவுகளை உண்பதால் ஏற்படும் முடக்குவாதம் இவர்களிடையில் மிக அரிதாகவே காணப்படுகிறது.
தகவமைப்பு என்ற பாதுகாப்பு கவசம்
“மதிப்பிடப்பட்ட சுமார் 90% மக்கள் நீரிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆரோக்கியத்துடன் இருந்தனர். இந்த மக்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றிவருவதால் மிக அசாதாரணமான மனித பறிணாமத்தை இவர்களை ஆராய்வதன் மூலம் அறிய முடிகிறது” என்று திட்டத்தின் இணைத் தலைமை ஆய்வாளர்களில் ஒருவரும் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக பேராசிரியருமான ஜூலியன் ஏரோல்ஸ் (Prof Julien Ayroles) கூறுகிறார்.
இப்பகுதியில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மரபணு ரீதியான தகவமைப்பு தோன்றியது. இதனால் வடக்கு ஆப்பிரிக்கா வறண்ட பகுதியாக மாறியது. இதனுடன் இணைந்து நிகழ்ந்த இயற்கைத் தேர்வு இத்தகைய சூழலில் வாழ சாதகமான நிலையை இங்கு வாழும் மக்களிடம் உருவாக்கியது என்று நம்பப்படுகிறது.
காலநிலை மாற்றத்திற்கேற்ப எமது மூதாதையரில் ஏற்பட்ட மரபணு பரிணாமம் இத்தகைய சூழலில் அவர்களை எவ்வாறு தகவமைத்துக் கொண்டு வாழ வைத்தது என்பதை இந்த ஆய்வு விவரிக்கிறது” என்று ஆரோக்கியம் மற்றும் கழிவு மேலாண்மைக்கான டர்க்கானா கவுண்டி பொறுப்பாளர் டாக்டர் எப்பம் எசக்கன் (Dr Epem Esekon) கூறுகிறார்.
ஆனால் இங்கு வாழும் மக்களில் பலர் சிறிய மற்றும் பெரிய நகரங்களை நோக்கி இடம்பெயர்வதால் அவர்களை நாட்பட்ட நோய்களில் இருந்து இதுவரை காப்பாற்றி வந்த தகவமைப்பு கவசம் அழியும் ஆபத்தில் உள்ளது. இந்த நிகழ்வு பரிணாம பொருத்தமின்மை (evolutionary mismatch) என்று அழைக்கப்படுகிறது. பரிணாம மாற்றத்தால் ஏற்படும் தகவமைப்பு மாற்றத்தால் இது ஏற்படுகிறது. ஆழமான பரிணாம வரலாறு விரைவான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
மரபணுவில் பொதிந்துள்ள தகவல், செயலாக மாற உதவும் மரபணு வெளிப்பாடுகள், உயிரி அடையாளங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது நகரங்களில் வாழும் மக்களிடையில் முன்கூட்டியே உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன் போன்ற நாட்பட்ட நோய்கள் தோன்றுவதற்கான மரபணு வெளிப்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மரபணு சமநிலையின்மை இவர்களுக்கும் கிராமங்களில் வாழும் இவர்களின் உறவினர்களுக்கும் இடையில் உள்ளதை இது காட்டுகிறது.
நகர வாழ்க்கை தரும் நோய்கள்
நகரச் சூழ்நிலையில் உணவு, நீர் இருப்ப்பு, செயல்பாடுகள் முற்றிலும் வேறானது. பாரம்பரியமான மேய்ச்சல் வாழ்வில் இருந்து நகர வாழ்விற்கு மாறிய மக்களைப் புரிந்துகொள்வது இவர்களுக்கான வருங்கால நலத் திட்டங்களை உருவாக்க உதவும். வேகமான சூழல் மாற்றங்களை சந்தித்துவரும் உலகில் இந்த மக்களின் கதை உள்ளுணர்வு மற்றும் நடைமுறையிலான கண்ணோட்டத்தை உலகில் உள்ள மற்ற தலைமுறைகளுக்கு உருவாக்க உதவும்.
காலநிலை மாற்றம் வாழ்விற்கான புதிய சவால்களை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த மக்கள் வளர்த்து உருவாக்கி வைத்துள்ள வழிமுறைகள் இன்றைய மாறிவரும் சூழ்நிலையில் மதிப்புமிக்க அறிவைத் தரும். ஒரு பத்தாண்டு கால அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டம் அறிவு, மரபணுவியல், சூழலியல், மானுடவியல் விஞ்ஞானிகளின் நிபுணத்துவத்துடன் நடந்தது.
“டர்க்கானா மக்களுடன் திறந்த மனதுடன் இணைந்து செயல்பட்டது பரவசமூட்டும் ஒரு அனுபவம்” என்று கெம்ரி சமூக ஆய்வுத் துறையின் இணை இயக்குனரும் இணை தலைமை விஞ்ஞானிகளில் ஒருவருமான டாக்டர் சாஸ்பெட்டர் என்கோஸா என்ஜெரு (Dr Sospeter Ngoci Njeru) கூறுகிறார். இவர்களின் சூழல், வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியம் பற்றி அறியப்பட்ட விவரங்கள் நம் உண்மையான உலக உயிரியல், வாழ்வியல் கோட்பாடுகளை இணைத்து வகுக்க உதவும்.
“ஆழமான சூழல் மற்றும் பூமியின் மிக வெப்பமான, வறண்ட பகுதிகளில் வாழ உதவும் தகவமைப்பை பற்றி இந்த ஆய்வின் மூலம் கிடைத்த பாடங்கள் காலநிலை மாற்றம் எவ்வாறு தொடர்ந்தும் மனித உயிரியலையும் ஆரோக்கியத்தையும் வடிவமைக்கிறது என்பதை அறிய உதவுகிறது” என்று டர்க்கானா வடிநிலப் பகுதி கழக இயக்குனர் டாக்டர் டினோ மார்ட்டின்ஸ் (Dr Dino Martins) கூறுகிறார்.
இதே சூழல் உள்ள கிழக்காப்பிரிக்காவின் ரெண்டில் (Rendille) , சாம்புரு (Samburu), பொரானா (Borana), மெரில் (Merille), கரமொஜாங் (Karamojong), டொப்போஸா (Toposa) உள்ளிட்ட இடங்களும் இதே போன்ற தகவமைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளன. ஆய்வுக் குழுவினர் டர்க்கானா மொழியில் தங்கள் கண்டுபிடிப்புகளை பகிர ஒரு போட்காஸ்ட் (Podcast) ஒலிபரப்பை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
போட்காஸ்ட் என்பது இணையத்தில் பதிவிறக்கம் செய்தால் டிஜிட்டல் வடிவத்தில் கிடைக்கும் ஒரு நிரல். இதில் டிஜிட்டல் ஆடியோ கோப்புகளின் தொடர்கள் இருக்கும். இதை பயனர்கள் தனிப்பட்ட சாதனத்தில் பதிவிறக்கம் செய்து கேட்கமுடியும். அதி விரைவாக நிகழ்ந்துவரும் காலநிலை மாற்றத்தால் உருவாகிவரும் நடைமுறை ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறும் வகையில் அமைந்த வழிகாட்டு ஆலோசனைகளை டர்க்கானா மக்களுக்கு வழங்க ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
காலநிலை மாற்றம் கண் முன் நிகழ்ந்து வரும் இன்றைய சூழலில் டர்க்கானா மக்களின் கதை நமக்கு வழிகாட்டியாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
பலவகையான நிலப்பரப்புகள், பசுமையிடங்கள் போன்ற வளம் மிகுந்த இடங்களில் மான்கள் முதல் பறவைகள், சிலந்திகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் முன்னுரிமை கொடுத்து வாழ்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. வசதியான சுற்றுப்பகுதிகளில் அதிக அளவில் இயற்கையின் பன்முகத் தன்மை உள்ளது. இது மனிதனின் நலவாழ்விலும் தாக்கம் செலுத்துகிறது.
வளர்ச்சிக்காக மனிதன் உருவாக்கிய இடங்களில் இருந்து தொலைவில் இருக்கும் அடர்ந்த மழைக்காடுகள், தூய்மையான புல்வெளிப் பகுதிகள் போன்ற அழகான இடங்களில் இயற்கை செழுமையாக உள்ளது. 1990களின் பிற்பகுதியில் விஞ்ஞானிகள் தங்கள் கருத்தூன்றிய பார்வையை அரிசோனாவில் உள்ள பாலைவன நகரான ஃபீனிக்ஸ் (Phoenix) பக்கம் செலுத்தினர். சுற்றுப்புறத்தில் காணப்படும் நகர தாவரங்களை ஆராய்ந்தனர். இது பற்றி நடந்த முதல் ஆய்வு இதுவே.
அளவீட்டுக் கருவிகள், கணினியில் தற்காலிகமாக தரவுகளை சேமிக்கும் இடைநிலைப் பலகை நினைவகத்தின் உதவியுடன் மரங்கள், குத்துச்செடிகளை படமாக்கினர். சில சமயங்களில் அடர்த்தியாக வளர்ந்திருந்த குத்துச்செடிகளின் வழியாக தவழ்ந்து சென்று ஆராய்ந்தனர்.
நகரங்களில் தாவரங்களின் விநியோகம், பரவல் பற்றி விவரிக்கும் சூழலியல் கோட்பாடுகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. வனப் பகுதிகளில் தாவரங்கள் புவியியல், காலநிலை, மண்ணின் பாறைத் தன்மை, மழைப்பொழிவின் அளவு, ஒளி மற்றும் நிழலின் அளவு போன்றவற்றின் தாக்கத்தால் மரங்கள், குத்துச்செடிகள் தனித்துவம் முக்க முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. “இது இயற்கையின் ஆடம்பர விளைவு (luxury effect) எனப் பெயரிடப்பட்டது” என்று அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ஆன் கின்சிக் (Prof Ann Kinzig) கூறுகிறார்.
உயரம், அருகில் உள்ள நீர்நிலைகள், கிராமப் பகுதிகள், மண்ணின் வகை இவற்றைப் பொறுத்து தாவரங்களின் பரவல் காணப்படவில்லை.
மாறாக அருகில் வாழும் மக்களின் செழுமையே நகரங்களில் அதிக உயிரினங்கள் வாழக் காரணம் என்று தெரியவந்தது. 2003ல் இது குறித்த முதல் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. வன உயிரினங்கள் நகரப் பகுதிகளில் கூடுதலாக, அதிக பன்மயத் தன்மையுடன் இயற்கை வாழ்கிறது. மனிதனின் நல வாழ்வு, ஆரோக்கியத்துடன் இயற்கை நெருங்கிய தொடர்புடையது.
ஃபீனிக்ஸ் பகுதி நீர்ப் பற்றாக்குறை, அதி தீவிரமான வெப்பம் நிலவும் பகுதி. என்றாலும் மக்கள் பெருமளவில் செடிகளை நட்டு நீரூற்றி வளர்க்கத் தொடங்கினர். காலப்போக்கில் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வருமானம் 10,000 டாலர்களாக அதிகரித்தது. இதனால் அப்பகுதியில் 0.3 டிகிரி செல்சியர்ஸ் வெப்பநிலை குறைந்தது. இதே போன்ற நிகழ்வு மற்ற இடங்களில் காணப்படுகிறது. கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் தோட்டங்கள், கோல்ஃப் மைதானங்கள், பூங்காக்கள் அதிகமுள்ள பகுதிகளில் கறுப்பு வால் மான்கள் அதிகமாக குடியேறத் தொடங்கின என்று 2023 ஆய்வு கூறுகிறது.
வட அமெரிக்கா, பொருண்டி, சீனா, ஆஸ்திரேலியாவில் மரங்களிலும் வட அமெரிக்கா, ஐரோப்பா, நியூசிலாந்தில் பறவைகளிலும் இப்போக்கு காணப்படுகிறது. பறவைகள் தாவரங்களை உணவிற்காகவும் வாழிடத்திற்காகவும் சார்ந்து வாழ்கின்றன. அதனால் இவை இயற்கை வளம் மிகுந்த இடங்களில் குடியேறுகின்றன. சில வகை வௌவால்கள் இத்தகைய இடங்களில் அதிகமாக வாழ்கின்றன. புராதன எகிப்தில் தொழிலாளர்கள் அதிகமாக வாழ்ந்த இடங்களுக்கு அருகில் பூச்சிகளும் அதிகமாக காணப்பட்டன.
பொருண்டி போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் இது பற்றி ஒரு சில ஆய்வுகள் மட்டுமே இதுவரை நடந்துள்ளன. ஆனால் குறைவாக வருமானம் உள்ள மக்கள் வாழும் இடங்களில் இந்தப் போக்கு காணப்படவில்லை. நேரமும் வசதியும் கூடுதலாக உள்ளபோது மக்கள் அதிகமாக செடிகளை வளர்க்கின்றனர். “நகரங்களில் மனிதர்கள் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர்” என்று அமெரிக்க அரசு ஒழுங்குபடுத்தல் துறை உயிரியலாளர் ஜெஃப் அக்லி (Jeff Ackley) கூறுகிறார்.
இந்த நிகழ்வு தோட்டங்களில் மட்டும் காணப்படவில்லை. வீட்டின் உட்பகுதிகளிலும் நிகழ்கிறது என்று வட கரோலினா ராலி (Raleigh) என்ற இடத்தில் பலதரப்பட்ட வருமானம் உள்ள 50 குடும்பங்கள் வாழும் வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறின. குறைந்த வருமானம் உள்ள வீடுகளை விட இரண்டு மடங்கு கூடுதலாக, செல்வச் செழுமை உள்ள வீடுகளில் நூறு வகை கணுக்காலிகள் காணப்பட்டன.
பன்மயத் தன்மை மிகுந்த சூழல், மண் மற்றும் விலங்குகளுடனான தொடர்பு மனித ஆரோக்கியத்தில் நேர்மறை பயன்களை ஏற்படுத்துகிறது. வசதியான மக்கள் வாழும் வீடுகள் தூய்மையானவை என்று பலர் கருதுகின்றனர். ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல. நகரங்களில் மில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் நகரச் சூழலில் நிலவும் பிரச்சனைகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்று தெரியவில்லை.
“நோய் எதிர்ப்பாற்றலிற்கு எதிரான நோய்கள் பெருகுகிறது. இதைக் கட்டுப்படுத்த பசுமையிடங்களை அதிகரிக்க வேண்டும். நம் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் நுண்ணுயிர்கள் வாழும் சூழல் மண்டலங்கள், நகரப் பகுதிகளை நாம் உருவாக்கும் பசுமியற்ற சூழலால் நாம் இயற்கையிடம் இருந்து துண்டிக்கப்படுகிறோம்” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி அறுவை சிகிச்சை நிபுணரும் இருண்ட பொருள்_நுண்ணுயிரியலின் புதிய அறிவியல் (Dark Matter: The New Science of the Microbiome) என்ற நூலின் ஆசிரியருமான டாக்டர் ஜேம்ஸ் கின்ராஸ் (Dr James Kinross) கூறுகிறார்.
உயிர்ப் பன்மயத் தன்மையின் இழப்பு ஒரு உலகளாவிய பிரச்சனையாக இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நம் நலமான வாழ்வு உயிரின அழிவு, சுற்றியுள்ள சூழலில் பரவலான வனப் பகுதிகளில் உயிரினங்களின் எண்ணிக்கை குறைவுடன் தொடர்புபடுத்தி மட்டுமே பேசப்படுகிறது. ஆனால் செழுமையான இயற்கையும் உடல் மற்றும் மன நலமும்ம் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவை என்பதை பல்வேறு ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
2024-ல் வெளிவந்த ஆய்வு இயற்கையின் இழப்பு உடல் நலத்தில் தாக்கம் செலுத்துவதைக் கூறுகிறது. இந்நிலையை மாற்ற விஞ்ஞானிகள் வெளிப்புற உலகில் உயிர்ப் பன்மயத் தன்மையை பாதுகாத்து விரிவுபடுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். பின்லாந்தில் உயிர்ப் பன்மயத் தன்மை செழுமையுள்ள தோட்டங்கள் உள்ள சூழலில் வாழும் விடலைப் பருவத்தினரிடம் ஒவ்வாமை, சுய எதிர்ப்பாற்றல் பாதிப்புகள் குறைவாக உள்ளன. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இயற்கையின் ஆடம்பர விளைவு என்ற இந்த கோட்பாடு வலியுறுத்துகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
எரிமலை அதிக செயல்பாட்டுடன் இருப்பதையும் வெடிக்கப் போவதையும் முன்கூட்டியே கண்டறிய அங்கு வளரும் மரங்களின் இலைகளில் ஏற்படும் மாற்றங்கள் உதவுகின்றன. நாசா மற்றும் ஸ்மித்சோனியன் ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த மாற்றங்களை விண்வெளியில் இருந்து கண்டறியும் ஆய்வுகளை நடத்துகின்றனர்.
பூமியின் மேலோட்டின் வழியாக எரிமலைக் குழம்பு (Magma) மேலெழும்பி வரும்போது கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற வாயுக்கள் மேற்பரப்பை அடைகின்றன. இந்த வாயுவை எடுத்துக் கொள்ளும் மரங்கள் பசுமை நிறைந்ததாக, செழுமையுள்ளதாக மாறுகின்றன.
இந்த மாற்றங்கள் லேன்சாட் 8 (Landsat 8 ), Airborne Validation Unified Experiment: Land to Ocean (AVUELO) போன்ற நாசாவின் செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறியப்படுகின்றன. உலகில் 10% பேர் எரிமலைகளால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வாழ்கின்றனர் அல்லது எரிமலை வெடிக்கும் இடத்திற்கு ஒரு சில மைல் தொலைவில் பணி புரிகின்றனர்.
இதனால் இவர்கள் வெடித்துச் சிதறும் பாறைகள், தூசுகள், சூடான நச்சு வாயுக்களால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. எரிமலைக்கு சற்று தொலைவில் இருக்கும் மக்களும் உடைமைகளும் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து நிகழும் மண் சரிவுகள், சாம்பல் பந்துகள், சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எரிமலை வெடிப்பைத் தடுக்க உதவும் வழிமுறை எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பொதுமக்கள் பாதுகாப்புக்கு, வெடிப்பிற்கு முந்தைய அறிகுறிகள் முக்கியமானவை. அமெரிக்கா எரிமலை வெடிப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் உலக நாடுகளில் ஒன்று என்று நாசாவின் லேண்ட் சாட் திட்டத்தின் பங்காளியான அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு கூறுகிறது.
வெடிப்பிற்கு முன் எரிமலைக் குழம்பு நிலத்தின் அடியில் இருந்து மேலெழும்பி வரும்போது கார்பன் டை ஆக்சைடு , சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.
சல்பர் கூட்டுப் பொருட்கள் சுற்றுவட்டப் பாதையில் இருந்து எளிதாக கண்டுபிடிக்கப்படக் கூடியவை. சல்பர் டை ஆக்சைடின் உமிழ்வுக்கு முன் உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடை விண்வெளியில் இருந்து அறிவது சுலபமானதே என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கார்பன் டை ஆக்சைடு உமிழ்வால் தாவரங்கள் அதிக அளவு பசுமையடைவது வெடிப்பை அறிய உதவும் ஒரு கருவி.
இதனுடன் நில அதிர்வுகள், தரை உயரத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை எரிமலைக்குள் நடப்பதைப் பற்றி ஒரு தெளிவான கருத்து உருவாக உதவுகிறது.
“எரிமலைகள் ஏராளமான கார்பன் டை ஆக்சைடை உமிழ்கின்றன. ஆனால் வளி மண்டலத்தில் ஏற்கனவே கார்பன் டை ஆக்சைடு உள்ளது. இதனால் எரிமலையில் இருந்து உமிழப்படும் வாயுவின் அளவை கணக்கிடுவது கடினமாக உள்ளது. பெரிய வெடிப்புகளில் இருந்து உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடை நாசா கார்பன் கண்காணிப்பு அமைப்பு 2 (NASA's Orbiting Carbon Observatory 2) போன்ற உணரிகள் மூலம் விண்வெளியில் இருந்து முன்கூட்டிய எச்சரிக்கை சமிஞ்ஞைகள் மூலம் கண்டுபிடிப்பது கடினம். இந்நிலையில் நடுத்தர அளவில் உமிழ்வு இருந்தால் விண்வெளிப் படங்களில் இருந்து அதை அறிய முடிவதில்லை” என்று கனடா மாண்ட்ரீல் மகில் (McGill) பல்கலைக்கழக எரிமலை விஞ்ஞானி ராபர்ட் பாஃப்க் (Robert Bogue) கூறுகிறார். இதனால் விஞ்ஞானிகள் எரிமலைகளில் மீது ஏறிச்சென்று கார்பன் டை ஆக்சைடை நேரடியாக கணக்கிட வேண்டியுள்ளது.
உலகில் உள்ள சுமார் 1,350 எரிமலைகளில் பெரும்பாலானவை தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ளன. அல்லது சவாலான மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. அதனால் ஆய்வுகள் நடத்த தொழிலாளர்கள் அதிகமாகத் தேவை. செலவு அதிகம். சில சமயங்களில் ஆபத்தானது. வாயுக்களின் உமிழ்வில் காணப்படும் அதிகரிப்பு ஒரு எரிமலை வெடிக்கப் போகிறது என்பதைத் தெரிவிக்கிறது. தாவரவியலாளர்கள், காலநிலை ஆய்வாளர்களுடன் பாஃப்க் போன்ற விஞ்ஞானிகள் இணைந்து மரங்களில் நிகழும் மாற்றங்கள் மூலம் வெடிப்புகளை அறியும் வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். கார்பன் டை ஆக்சைடை நேரடியாக மதிப்பிடுவதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடிப்பதே இந்த ஆய்வுகளின் நோக்கம்.
“பகுப்பாய்வுகளை மேற்கொள்ள பல செயற்கைக்கோள்கள் உள்ளன” என்று கூறும் ஹூஸ்ட்டன் பல்கலைக்கழக எரிமலை விஞ்ஞானி நிகோல் கின் (Nicole Guinn) லேன்சாட் 8, நாசா டெரர் (Terra) செயற்கைக்கோள், ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) செண்டினல் 2 (Sentinel-2) மற்றும் பிற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் படங்களை ஒப்பீடு செய்து சிசிலி எட்னா (Etna) எரிமலையை சுற்றிலும் இருக்கும் மரங்களை ஆராய்ந்தார்.
இவரே மர இலைகளின் நிறங்களுக்கும் எரிமலைக் குழம்பினால் உமிழப்பட்ட கார்பன் டை ஆக்சைடிற்கும் இடையில் இருக்கும் தொடர்பை முதலில் கண்டுபிடித்துக் கூறினார். கார்பன் டை ஆக்சைடு உமிழ்வின் அளவை துல்லியமாக மதிப்பிட சாப்மேன் (Chapman) பல்கலைக்கழக எரிமலை விஞ்ஞானி ஜோஷ் பிஷர் (Josh Fisher) போன்ற ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பனாமா மற்றும் கோஸ்ட்டரீகாவில் எரிமலைகளுக்கு அருகில் இருக்கும் மரங்களின் இலைகளில் ஏற்படும் மாற்றங்களை அறிய நாசா மற்றும் ஸ்மித்சோனியன் ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் ஓர் ஆய்வு விமானத்தில் நிறமாலைமானியைப் பொருத்தி ஆராய்ந்து வருகின்றனர். கோஸ்ட்டரிக்கா ரிங்கன் டெல வியஜ (Rincon de la Vieja) எரிமலையைச் சுற்றி இருக்கும் மர இலை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. கார்பன் டை ஆக்சைடின் அளவும் மதிப்பிடப்படுகிறது.
“இந்த ஆய்வுகள் சூழலியல் மற்றும் எரிமலையியல் இணைந்து மேற்கொள்ளப்படுபவை. மரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்ளும் அளவு குறித்தும் ஆராயப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் மரங்களின் இலைகளை செயற்கைக் கோள்கள் முழுமையாகப் படம் பிடிக்க முடிவதில்லை. வெவ்வேறு அளவு கார்பன் டை ஆக்சைடு உமிழ்விற்கு மரஙகள் வெவ்வேறாக பதில்வினை புரிகின்றன. மாறுபடும் வானிலை, காட்டுத் தீ சம்பவங்கள், தாவர நோய்கள் போன்றவற்றாலும் மரங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் மர இலைகளை மட்டும் முன்னறிவிப்புக்கு பயன்படுத்துவதில் வரையறைகள் உள்ளன” என்று பிஷர் கூறுகிறார்.
ஷ்வாண்ட்னர் பிலிப்பைன்ஸ் மெயொன் (Mayon) எரிமலைப் பகுதியில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு உமிழ்வுகளின் கண்காணிப்பை மேம்படுத்த உணரிகளைப் பயன்படுத்தினார்.
டிசம்பர் 2017ல் விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட புதிய முறையை பயன்படுத்தி வெடிப்பிற்கு முன் சுமார் 56,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினர். இதனால் ஜனவரி 23, 2018ல் வெடிப்பு தொடங்கியபோது பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மரங்களை செயற்கைக்கோள் படங்களின் மூலம் கண்காணிப்பதால் வருங்கால வெடிப்புகளை முன்கூட்டியே அறியலாம்.
எரிமலை சம்பவங்களை தடுப்பதற்கு இந்த தொழில்நுட்பம் ஒரு நிரந்தரத் தீர்வு ஆகாது என்றாலும் இப்புதிய முறை இந்தத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேற்கோள்: https://phys.org/news/2025-05-nasa-satellite-images-early-volcano.html
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- ஆடுகளுடன் போர் செய்த ஒரு நாட்டின் கதை
- நிறம் மாறும் அண்டார்டிகா
- ஆழ்கடலில் அதிசய எரிமலைகளின் கண்டுபிடிப்பு
- நஞ்சுள்ள பட்டாணி நாளைய உலகின் உணவாகுமா?
- பவளப் பாறைகளுக்கு மரங்களால் ஒரு புது வீடு
- இந்தியாவில் லித்தியம்
- உலகின் குப்பைத் தொட்டியா அட்டகாமா பாலைவனம்?
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை
- நிறம் மாறும் கடல்கள்
- ஆழ்கடலில் புதிய பவளப் பாறைகளின் கண்டுபிடிப்பு
- உலகை அச்சுறுத்தும் பூஞ்சைகள்
- அதிகரிக்கும் வானவில் நாட்கள்
- பூமியின் வட கோடியில் ஒரு புதிய தீவின் கண்டுபிடிப்பு
- சூரியனின் கதிர்களை திசை திருப்பி விட்டால் பூமியில் சூடு குறையுமா?
- புதையுண்ட பூமிக்குள் ஓர் அற்புதக் காடு
- 2050ல் உலகின் அணைக்கட்டுகள் எப்படி இருக்கும்?
- எரிமலைகள் வரமா? சாபமா?
- ஜெட் ஸ்ட்ரீம்
- அன்னை பூமியின் மடியில் அற்புத அமைப்புகள்
- கதை சொல்லும் காற்று
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.