ஆழ்கடலில் இத்தாலி சிசிலிக்கு அருகில் மூன்று புதிய எரிமலைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் விஞ்ஞானிகளால் அறியப்படாத பல அதிசயங்கள் இன்னும் உள்ளன என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இதனால் இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வுகள் ஒரு வார காலம் நடந்தன. முடிவில் உலகின் பல பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து சிசிலிக்கு தென்மேற்குப் பகுதியில் கடலுக்கு அடியில் செயல்படும் இந்த மூன்று எரிமலைகளைக் கண்டுபிடித்துள்ளனர். இவை இன்னும் தீவிரமாக செயல்படுகின்றனவா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. இந்த எரிமலைகள் குறைந்தபட்சம் 6 கிலோமீட்டர் அகலம் உடையவை. சுற்றுப்புற கடற்படுகையில் இருந்து இவை 150 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன.

புதிய கண்டுபிடிப்பும் பழைய எரிமலைக் கூம்புகளும்

இவை 2019ல் ட்ரெப்பானி (Trapani) என்ற சிசிலி பிரதேசத்தில் உள்ள மசார டெல் வாலோ (Mazara del Vallo) என்ற பகுதிக்கும், Agrigento என்ற பிரதேசத்தில் உள்ள சயக்கா (Sciacca) என்ற சிறிய நகரத்திற்கும் இடையில் தேசிய கடல்சார் ஆய்வுக்கழகம் மற்றும் புவி இயற்பியலுக்கான பரிசோதனை மையத்தைச் (National Institute of Oceanography & Experimental Geophysics OGS) சேர்ந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட எரிமலைக் கூம்புகளுக்கு அருகில் உள்ளன.meteor

The expedition onboard the Meteor was conducted by the University of Malta and OGS. Photograph: M191 (SUAVE)

மத்திய தரைக்கடல் பகுதி பல மில்லியன் ஆண்டுகளாக மனிதர்களால் ஆராயப்படுகிறது. என்றாலும் இப்பகுதியின் ஆழ்கடல் பரப்பு பற்றி மிகச் சிறிதளவு மட்டுமே இன்றும் நம்மால் அறிய முடிந்துள்ளது.

இதனால் இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளின் ஆழ்கடல் ஆய்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்று கடல்சார் ஆய்வுக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாரியோ சிவைல் (Dario Civile) கூறுகிறார்.

இதுவரை ஆராயப்படாத சிசிலியின் ஆழ்கடற்பகுதியில் இந்த ஆய்வுகள் மீட்டியர் (Meteor) என்ற ஜெர்மன் ஆய்வு வாகனத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது எரிமலையில் இருந்து பாறை மாதிரிகள், லார்வா எரிமலைக்குழம்பு படிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த எரிமலைகளில் இப்போது நீரியல் வெப்ப வினைகள் (hydrothermal activities) நடைபெறவில்லை என்றாலும் இவற்றின் வெடிக்கும் இயல்பு பற்றி இப்போதே எதையும் உறுதியாக அறிய முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாறை மாதிரிகள் முதலில் பகுப்பாய்வு செய்யப்படும். எரிமலைகளின் புவி அதிர்வு விவரங்கள் சேகரிக்கப்பட்டு விரிவாக ஆராயப்படும். இந்த ஆய்வின்போது 100X17 மீட்டர் அளவுள்ள கப்பலின் உடைந்த பகுதியை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இது கடலின் 110 மீட்டர் ஆழத்தில் லினோசா (Linosa) என்ற எரிமலையால் உருவான தீவிற்கும் சிசிலிக்கும் இடைப்பட்ட பாதி தொலைவில் பெயரில்லாத கரைப் பகுதி (nameless bank) என்று அழைக்கப்படும் (Banco Senza Nome) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த உடைந்த பகுதி பற்றி இப்போது எதுவும் தெரியவில்லை. இதன் காலம் குறித்த விவரங்களை இப்போது அறிந்து கொள்வது கடினம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பல உலகப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பு

இந்த ஆழ்கடல் ஆய்வுகள் மால்ட்டா (Malta) பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் ஆய்வுக்கழகம் மற்றும் ஜெர்மனி கீல் (Kiel) ஜியோமார் ஹெல்ம்ஹோல்ட்ல்ஸ் கடல் ஆய்வு மையம் (Geomar Helmholtz Centre for Ocean Research;MBARI), அமெரிக்காவின் மாண்ட்டரே வளைகுடா நீரியல் ஆய்வுக்கழகம் (Monterey Bay Aquarium Research Institute), நியூசிலாந்து வெலிங்க்டன் விக்டோரியா பல்கலைக்கழகம், இங்கிலாந்தின் பர்மிங்ஹாம், ஆக்ஸ்போர்டு, எடின்பரோ பல்கலைக்கழகங்கள் மற்றும் ஜெர்மனி கீல் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

கடலுக்கு அடியில் நிகழும் எரிமலை வெடிப்புகள் பற்றி அதிகம் அறியப்படுவதில்லை. என்றாலும் நீருக்கடியில் ஒரு மீட்டருக்கும் கூடுதலான உயரத்துடன் இருக்கும் எரிமலைகளின் வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இவையே உலகம் முழுவதும் நிகழும் 80% எரிமலை வெடிப்புகளுக்குக் காரணமாக உள்ளன.

இப்போது எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் கடந்த காலத்தில் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் சிறு தீவுகள் போல வெளிப்படும். சில சமயங்களில் இவை திடீரென்று கடலின் மேற்பகுதியில் தோன்றி குறுகிய காலத்திற்குள் மீண்டும் கடலுக்கு அடியில் மூழ்கி மறைந்து விடும். இந்த போக்கு இவற்றைத் தீவிரமாக ஆராய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எரிமலை ஏற்படுத்திய போர்ச்சூழல்

இப்போது எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மத்திய தரைக்கடலின் இந்த பகுதிக்கு அருகில் 1831 ஜூலை 18ல் சயக்கா (Sciacca) நகரிற்கு 30 மைல் தொலைவில் ஓர் எரிமலை தீவு ஏற்பட்டது. இதையறிந்த சர் ஹம்ப்ரி லெ ப்ளெமிங் செண்ஹவுஸ் (Sir Humphrey Le Fleming Senhouse) என்ற பிரிட்டிஷ் கடற்படைத் தலைவர் தலைமையில் ஒரு கப்பல் படை இங்கு படையெடுத்து வந்தது. இந்த எரிமலை இருந்த பகுதியைக் கைப்பற்றியது. இதற்கு சர் ஜேம்ஸ் ராபர்ட் ஜார்ஜ் க்ரெயம் (Sir James Robert George Graham) என்ற ப்ரிட்டிஷ் பிரபுவின் பெயரைச் சூட்டியது.

சிசிலியின் அரசராக அப்போது இருந்த இரண்டாவது பெர்டினாண்டு (Ferdinand II) இதை அறிந்து தங்கள் நாடு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியை இழந்து விட்டதாக உணர்ந்தார். கோபம் கொண்ட அவர் பிரிட்டிஷார் கைப்பற்றிய பகுதியில் ஏற்றியிருந்த யூனியன் ஜாக் கொடியை அகற்ற ஒரு படையை அனுப்பினார். அதே நேரத்தில் பிரெஞ்சு படை ஒன்று அப்பகுதிக்கு வந்து அதற்கு ஜியூலியா (Giulia) என்று பெயர் வைத்தது.

இந்த நிகழ்வுகள் மூன்று நாடுகள் ஒரு எரிமலைத் தீவிற்காக போரிடும் சூழலை ஏற்படுத்தியது. ஆனால் இயற்கையே இந்த சச்சரவை சில மாதங்களுக்குள் தீர்த்து வைத்தது. 1831 டிசம்பரில் சிசிலியர்களால் ஐசோலா பெர்டினாண்டியா (Isola Ferdinandea) என்று இரண்டாம் பெர்டினாண்டு அரசரைப் போற்றும் வகையில் பெயரிட்டு அழைத்த இந்த தீவு கடலிற்குள் மூழ்கி காணாமல் போனது.

நவம்பர் 2000ம் ஆண்டில் சிசிலியர்கள் வருங்காலத்தில் பிரிட்டிஷார் இப்பகுதிக்கான இறையாண்மையைக் கோருவதில் இருந்து பாதுகாக்க நீருக்கடியில் மூழ்கிய இந்த எரிமலைப் பகுதியில் இதனுடன் தொடர்புடைய நேப்பிள் பர்பன் (Bourbon) அரச வம்சத்தினரை அழைத்து அவர்கள் முன்னிலையில் ஒரு நினைவுப் பட்டயத்தை நிறுவினர். அதில் “இந்த எரிமலை என்றும் சிசிலியர்களுக்கே சொந்தமானது” என்று பொறிக்கப்பட்டிருந்தது.

கடல் என்னும் அற்புத உலகின் ஆழ்பகுதியில் உயிரினங்கள் மட்டும் இல்லாமல் எரிமலைகள் போன்ற எத்தனையோ இயற்கையின் அதிசயப் படைப்புகள் உள்ளன. இவற்றின் கண்டுபிடிப்பு கடலையும் நிலத்தையும் மனிதன் அறிய, பாதுகாக்க உதவும் பல வியப்பூட்டும் தகவல்களைத் தரும் என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/world/2023/aug/09/three-possibly-active-underwater-volcanoes-discovered-off-sicily?

சிதம்பரம் இரவிச்சந்திரன்