ஐரோப்பா. பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள மிக உயரமான மாண்ட் ப்ளாங்க் (Mont Blanc) மலைச்சிகரம் 2.2 மீட்டர் குட்டையாகி உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 2021ம் ஆண்டிற்குப் பிறகு சமீபகாலத்தில் இதுவே இந்த மலையின் மிகக் குறைந்த உயரம். பனி மூடிக்கிடக்கும் பாறைகள் நிறைந்த இதன் உயரத்தை ஹாட்-சேவாய் (Haute-Savoie) பிரதேச நிர்வாகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் ட்ரோன் உதவியுடன் அளந்தனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு விவரங்கள்படி இந்த மலையின் தற்போதைய அதிகாரப்பூர்வ உயரம் 4,805.59 மீட்டர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அளக்கப்பட்டபோது இந்த சிகரத்தின் உயரம் 4,807.81 மீட்டர். இந்த உயரம் 2017ல் அளக்கப்பட்டபோது இருந்த உயரத்தை விட சுமார் ஒரு மீட்டர் குறைவு. “2023, இந்த சிகரத்தின் உயரத்தைப் பொறுத்தமட்டும் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த ஆண்டு” என்று ஆய்வுக்குழு உறுப்பினர் டென்னிஸ் போரல் (Denis Borel) டிஎஃப்1 (TF1) என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த நேர்முகத்தில் கூறியுள்ளார்.

காணாமல் போன நீர்

2021ம் ஆண்டின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது இந்த மலை இப்போது ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் இருக்கும் நீரின் அளவிற்கு சமமாக சுமார் 3,500 கன சதுர மீட்டர் நீர் மற்றும் பனிக்கட்டிகளை இழந்துள்ளது. முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது இந்த இழப்பு குறிப்பிடத்தக்கது. மாண்ட் ப்ளாங்க் மலைச்சிகரம் குட்டையாகியுள்ளதை ஆல்ப்ஸ் மலைத்தொடர் பனிப்பாறைகள் இழப்பதுடன் ஒப்பிடக்கூடாது என்று காலநிலை விஞ்ஞானிகள் மற்றும் பனிப்பாறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.mont blanc2001 முதல் 15 முதல் 20 செண்டிமீட்டர் அளவிற்கு மாண்ட் ப்ளாங்க் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளது. என்றாலும் இது ஐம்பது ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகே இதன் பனிக்கட்டி உருகுதலுக்கும், புவி வெப்ப உயர்விற்கும் இடையில் இருக்கும் தொடர்பை உறுதி செய்ய முடியும் என்று காலநிலை ஆய்வாளர்கள் மற்றும் பனிப்பாறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தனித்துவம் வாய்ந்த மாண்ட் ப்ளாங்க்

ஐரோப்பிய மலைகளில் இருக்கும் பனிப் போர்வை, காற்று மற்றும் மழைப்பொழிவை பொறுத்து வேறுபடுகிறது. இதன் காலநிலை தனித்துவமானது என்பதால் மாண்ட் ப்ளாங்க்கில் நிகழும் இந்த மாற்றத்திற்கும் காலநிலைக்கும் தொடர்பில்லை என்று சாமினிக்ஸ் (Chamonix) பனிப்பாறை ஆய்வாளர் (glaciologist) லூக் மோராவ் (Luc Moreau) கூறுகிறார்.

“காற்று ஆவியாதலைத் தூண்டி வெப்ப நீக்கம் செய்யும் அப்ளேஷன் (ablation) என்ற நிகழ்வு நடைபெறுகிறது. காற்று மற்றும் பனி இந்த சிகரத்தின் உயரத்தை தீர்மானிக்கின்றன. பனியை காற்று அகற்றலாம் அல்லது அவ்வாறு நிகழாமலும் இருக்கலாம். வலுவான குளிர் காலக்காற்று சிகரத்தில் இருந்து பனியை அகற்றுகிறது. இது பாலைவனப்பகுதிகளில் மணற்குன்றுகள் மணல் மலைகள் உருவாகும் (Dune complex) நிகழ்வு போன்றது.

மலையின் உயரத்தில் 2.2 மீட்டர் குறைவு ஏற்பட கோடையில் மழைப்பொழிவு குறைந்த அளவில் இருப்பதால் நடந்திருக்கலாம். இதனால் வரும் இரண்டாண்டுகளில் இதன் உயரம் அதிகரிக்கலாம்” என்று தென்மேற்கு பிரான்சின் ஹாட்-சேவாய் புவி ஆய்வு மையத்தின் (Geometer) தலைவர் ஜீன் டெஸ் கேரட்ஸ் (Jean des Garets) கூறுகிறார். பாறைகளால் நிறைந்த இந்த மலைச்சிகரத்தின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4,792 மீட்டர்.

ஆனால் காற்று மற்றும் வானிலையைப் பொறுத்து மலையை மூடியிருக்கும் பனி மற்றும் அதன் பரப்பு ஆண்டிற்கு ஆண்டு வேறுபடுகிறது. ஆல்ப்சில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை அறிய 2001 முதல் சிகரத்தின் உயரம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை அளக்கப்படுகிறது. வருங்கால தலைமுறைக்காக இந்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. ஆல்ப்சின் ஆரோக்கியம், மாண்ட் ப்ளாங்க்கின் சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

இத்தகைய அளவீடுகளில் இருந்து பல விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆவனப்படுத்தப்படுகின்றன. இந்த சிகரத்தின் உயரம், இருப்பிடம் ஆகியவை நிரந்தரமாக மாற்றிக் கொண்டேயிருக்கிறது. உயரம் 5 மீட்டர் வரை வேறுபடுகிறது. ஆல்ப்ஸில் புவி வெப்ப உயர்வின் பாதிப்புகள் தொடர்ச்சியாக சேகரிக்கப்படுகின்றன. இந்த மலைத்தொடரின் மூன்றில் ஒரு பகுதி கன அளவிற்கு சமமான பரப்பு பனிப்பாறைகள் சமீப ஆண்டுகளில் இழக்கப்பட்டுள்ளது.

ஆல்ப்ஸ் மலைத்தொடரின் சிறப்பு

உறை நிலையில் இருக்கும் பனிப்பாறை- மண் (permafrost-soil), பாறைப்பொருட்களை இந்த மலைத்தொடர் இழந்துள்ளது. 2,200 மீட்டருக்கும் கூடுதலான உயரத்துடன் உள்ள மலைத்தொடர்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை உறைநிலையில் இருக்கும் இப்பொருட்கள் பசை போல செயல்படுகின்றன. இது இத்தகைய மலைத்தொடர்களின் சிறப்புப் பண்பு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மலைகள் வெறும் மண் மேடுகள் அல்ல. பனி மலைகள் வெறும் பனிப்பாறைகளால் ஆன வெற்று உருவங்கள் இல்லை. பூமியின் சூழலைப் பாதுகாப்பதில் இவற்றின் பங்கு மகத்தானது. மாண்ட் ப்ளாங்க்கின் மாறிக் கொண்டேயிருக்கும் உயரத்தின் இரகசியத்தை அறிய நாம் இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/oct/05/mont-blanc-height-peak-shrinks?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It