அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
நிலக்கரி, எண்ணெய் போன்ற படிம எரிபொருட்களில் இருந்து மனித குலம் விலகிப் போகும் நாள் வந்து கொண்டிருக்கிறது. மாற்று எரிசக்தியாக காற்றாலைகளை நம்பி நிற்கும் காலம் தொலைவில் இல்லை. வீசும் காற்றுக்கு காசு கொடுக்கவேண்டியதில்லைதான். ஆனால் காற்றாலைகளின் சுழலிகளினால் சுற்றுப்புற வானிலை பாதிக்கப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சங்கிலித் தொடராக அமைக்கப்பட்ட காற்றாலைகளின் சுழலும் விசிறிகள் சுற்றுப்புற காற்றை மேலும் கீழுமாக அதிர்வடையச் செய்கின்றன. இந்த அதிர்வுகள் பல மைல் தூரத்திற்கு இருக்கும். சுழலும் விசிறிகளில் இருந்து வீசும் காற்று பூமியின் மேற்பரப்பை உலரச் செய்துவிடுகிறது. பல மைல் தூரம் வரை இந்த விளைவு இருக்கும். அக்கம் பக்கத்து வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு அதிக மின்சக்தி செலவாகும். அந்தப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு அதிகமான நீர் தேவைப்படும். காற்றாலைகளினால் ஏற்படும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு எளிமையானது. சுழலிகளையும், விசிறிகளையும் திறமையாக வடிவமைக்க வேண்டும். இதனால் காற்றாலைகளின் திறன் கூடும். மின் சக்தியின் விலையும் குறையும்.
காற்றாலைகளினால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் இரவு நேரங்களில்தான் அதிகமாக இருக்கிறதாம். காற்றுவீசும் வேகம் இரவு நேரத்தில் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காற்றாலைகள் அதிகமாக தோன்றிக் கொண்டிருக்கின்றன. உள்ளூர் காலநிலையில் மாற்றம் ஏற்படவும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.
காற்றாலையின் பாகங்கள் பிளாஸ்டிக் மற்றும் உலோகங்களால் ஆனவை. எனவே கதிரியக்க ஆபத்து காற்றாலைகளில் இல்லை. தேவையற்ற இரைச்சல் இல்லை. வாயுமண்டலம் அழுக்கடைவதில்லை. ஆனால் காற்றாலைகளில் மின்சக்தி தொடர்ச்சியாக கிடைப்பதில்லை. காற்று வீசாத காலத்தில் மின் உற்பத்தி இருப்பதில்லை. காற்றாலை மின் ஆற்றல் மற்ற வகையான மின் உற்பத்திகளுடன் இணைந்து பயன்படுத்த வேண்டியதாகும். காற்றாலைகளை மட்டுமே நம்பியிருந்தால் தமிழ்நாட்டில் இப்போதுள்ள மின்வெட்டு போன்று அரசாங்கங்கள் அவதிப்பட வேண்டியிருக்கும்.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஆமாம்... காற்று மண்டலத்தில் வாயு உருவத்தில் இருக்கும் அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்சைடை சிறைப்பிடித்து ஓர் இடத்தில் அடைத்து விட்டால் புவியின் வெப்பநிலையை குறைக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
நிலக்கரியும், கச்சா எண்ணையும் பூமியின் ஆழத்தில் இருக்கும் படுகையில் கிடைக்கிறது. கார்பன் டை ஆக்சைடு வாயுவை இந்த எண்ணெய் படுகைக்குள் செலுத்தி சேமிப்பது சாத்தியமே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எண்ணெய் படுகைக்குள் குழாய்கள் மூலம் கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தும்போது, எண்ணெய்க் கிணற்றில் இருந்து வெளியேறும் எண்ணையின் அளவு அதிகரிப்பதால் எண்ணையின் உற்பத்தி செலவு குறைகிறது. கார்பன் டை ஆக்சைடு வாயுவை சிறை பிடிப்பதற்கான செலவு இதனால் ஈடுசெய்யப்படுகிறது.
கடலுக்கடியிலும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை செலுத்தி சேமிக்கமுடியுமாம். ஆனால் கார்பன் டை ஆக்சைடு கடல்நீரில் கரையும்போது அடர்த்தி மிகுதியால் கடலுக்கடியில் கார்பன் டை ஆக்சைடு ஏரியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. கடல் நீரின் அமிலத்தன்மை மிகுந்து கடல் உயிரினங்கள் அழிந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவதாக, சில தாது உப்புக்களுடன் கார்பன் டை ஆக்சைடை வினைபுரியச் செய்து உலோக ஆக்சைடுகளாக மாற்றியும் சேமிக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்த வினை மெதுவாக நடைபெறக்கூடியது. வினையை விரைவுபடுத்த வேண்டுமென்றால் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். இதன் விளைவாக கச்சா எண்ணையின் விலை 180 சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
பூமி வெப்பமடைவதை தடுக்க வேண்டுமென்றால் எந்த விலையும் கொடுக்கத்தானே வேண்டும்!
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
வெப்பமாகிக் கொண்டிருக்கும் இந்த பூமியைக் காப்பாற்ற என்னவெல்லாம் செய்யலாம் என்று மனிதகுலம் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. புவிக்கோளத்தின் பருவநிலையோ, மனிதர்களைப்பற்றி கவலைப்படாமல் தன்போக்கில் தாறுமாறாக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. எண்ணெய் சார்ந்த எரிபொருட்களை எரிப்பதால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடின் அளவை எவ்வாறு குறைப்பது என்பதை உலகத்தலைவர்கள் எல்லோரும் கூடிப் பேசி வரும் காலம் இது. பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்கும்போது புவியின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது.
கலிபோர்னியா-லாஸ்ஏஞ்சலீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு சையனோபாக்டீரியத்தின் மரபியல் பண்புகளை மாற்றியமைப்பதன் மூலம் கார்பன் டை ஆக்சைடை ஐசோபுயூட்டனால் என்னும் திரவ எரிபொருளாக மாற்ற முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள். இந்த ஐசோபுயூட்டனால் தற்போது பயன்பாட்டில் இருக்கும் எரிவாயுவிற்கு ஒரு மாற்றாக இருக்குமாம். இந்த வேதியியல் வினையை சூரிய ஒளியின் ஆற்றலைக் கொண்டே நிகழ்த்தமுடியும் என்பது கூடுதல் சிறப்பு. டிசம்பர் 9 ஆம் தேதியிட்ட Nature Biotechnology இதழில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பு இரண்டு நீண்டகால பயன்களைக் கொடுக்கவல்லது. முதலாவதாக, நம்மை அச்சுறுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடின் அளவை வளிமண்டலத்தில் இருந்து குறைக்கமுடியும். இரண்டாவதாக, சூரிய ஆற்றலை எரிபொருளாக மாற்றமுடியும். இன்றைய வாகனங்களை இயக்க இந்த எரிபொருள் போதுமானது. தாவரங்களில் இருந்தும் ஆல்காக்களில் இருந்தும் எரிபொருளைப் பெறும் தொழில்நுட்பம் தற்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அதிகமான படிநிலைகளைக் கடந்த பின்னரே இந்த உயிரி எரிபொருளை பெற இயலும். மேலும் தாவரங்களில் காணப்படும் செல்லுலோஸ் அழிக்கப்பட்ட பிறகே இந்த உயிரி எரிபொருள் கிடைக்கும். இதன்விளைவாக ஏற்படும் பொருளாதார சிக்கல்களில் இருந்து நம்மை விடுவிக்க புதிய ஆய்வு துணை செய்கிறது.
RuBisCO என்னும் என்சைம் காற்றில் உள்ள அனங்கக கார்பனை அங்கக கார்பனாக மாற்றவல்லது. அதாவது உயிரற்ற பொருளில் உள்ள கரிமத்திற்கும் உயிருள்ளவற்றில் உள்ள கரிமத்திற்கும் இணைப்புப்பாலமாக செயல்படுகிறது இந்த என்சைம். ஒளிச்சேர்க்கையின்போது RuBisCO என்சைம் காற்றில் உள்ள கரிமத்தை தாவரங்களுக்கும், அதன்மூலம் மனிதர்கள் உட்பட்ட மற்ற உயிர்ப்பொருட்களுக்கும் மாற்றித் தருகிறது.
ஆய்வின் முதல்படியில் cyanobacterium Synechoccus elongates என்னும் பாக்டீரியாவைப் பயன்படுத்தி RuBisCO என்சைமின் அளவு அதிகரிக்கப்பட்டது. பிற நுண்ணியிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜீன்களின் உதவியால் cyanobacterium ல் மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். இதன் விளைவாக கார்பன் டை ஆக்சைடும் சூரிய ஒளியும் உறிஞ்சப்பட்டு isobutyraldehyde வாயு உருவானது. இந்த வாயு குறைந்த கொதிநிலையும், அதிகமான வாயு அழுத்தமும் கொண்டது. எனவே இதனை பிரித்தெடுப்பது எளிதாக இருந்தது. Isobutyraldehydeல் இருந்து ஐசோபியூட்டனால் என்னும் எரிபொருள் பெறப்படுகிறது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகாமையில் இந்த சாதனங்களைப்பொருத்துவதன் மூலம், வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடை உடனுக்குடன் சிறைபிடித்து எரிபொருளாக மாற்ற இயலுமாம். இந்த ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எரிபொருளின் உற்பத்தித்திறன் இன்னும் மேம்படுத்தப்படவேண்டும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். அமெரிக்க அரசின் எரிசக்தி துறையின் நிதி உதவியுடன் இந்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் படிக்க:http://www.sciencedaily.com/releases/2009/12/091210162222.htm
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- க.மணி
- பிரிவு: சுற்றுச்சூழல்
தென்னிந்தியாவில் நிலத்தடி நீர் வளம் நல்லபடியிருப்பதாகவும் வட மேற்கு இந்தியாவில் நிலத்தடி நீர்வளம் வேகமாக காலியாகிக்கொண்டிருப்பதாகவும் ‘கிரேஸ்' (GRACE Gravity Recovery And Climate Experiment) என்ற நாஸா விண்கலம் ஆராய்ந்து தெரிவிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக (2002-2008) தொடர்ந்து செய்யப்பட்ட அலசல்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.
கிரேஸ் விண்கல ஆராய்ச்சியில், 220 கிலோமீட்டர் உயர இடைவெளியில் இரண்டு விண்கலங்கள் ஆகாயத்தில் பூமியைச் சுற்றி பறந்து கொண்டே தொடர்ந்து பூமியின் கிராவிட்டியில் (நிறையீர்ப்பு) ஏற்படும் வேறுபாடுகளை கணிக்கப்படுகிறது. நிலத்தடி நீரின் இடப்பெயர்ச்சிகளால் கிராவிட்டியில் ஏற்படும் சிறிய மாற்றங்களை வைத்து நிலத்தடிநீரின் அளவைக் கணிக்க முடியும். கடந்த 6 ஆண்டுகளாக ஆராய்ந்து வந்ததில் வட மாநிலங்களில் நிலத்தடி நீர் ஆண்டுக்கு ஒரு அடி வீதம் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறது (படத்தில் வடக்கே வட்டமாக காட்டப்பட்டுள்ள பகுதி) என்பதும், சில இடங்களில் மிகவும் அதிகமாக, அபாயகரமான அளவுக்கு இறங்கிக்கொண்டிருப்பதாகவும் சேட்டிலைட் தரவுகள் தெரிவிக்கின்றன.
நிலத்தடி நீர் என்பது மழை பொழிவிலிருந்து வரும் நீர் மண்ணில் உறிஞ்சப்பட்டு கீழே பாறை இடுக்குகளிலும், மெல்லிய குகைகளிலும், சொரிப்பாறைகளிலும், களிமண்களிலும் தேங்கிவிடுவதே. மழை பொழிவு குறைவதும் அளவுக்கு அதிகமாக போர் கிணறுகளைப் போட்டு உறிஞ்சுவதும் நிலத்தடி நீர்நிலை குறைவதற்குக் காரணமாக ஆகிவிடுகின்றன. நாம் நீரை எடுக்கும் வேகத்தில் நீர், நிலத்தில் இறங்குவதில்லை. ஒரு நாளில் எடுக்கப்பட்ட நீரை நிரப்ப குறைந்தது ஆறுமாத மழை பொழிவாவது வேண்டும்! பல மில்லியன் ஆண்டுகளாக தேங்கியிருந்த நீரை நாம் போர்வெல் கண்டுபிடித்த கொஞ்சகாலத்திலேயே தீர்த்துவிட்டோம். அதை நிரப்ப எத்தனை காலம் ஆகுமோ தெரியாது. தென் மாநிலங்களுக்கும் அந்த கதி வந்துவிடாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை. நீர் சிக்கனம் மிக அவசியம்.
- முனைவர் க.மணி
- ஓசோன் மெலிவு மனிதருக்கு நலிவு
- புவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்
- கிளிஞ்சலுக்கு வந்த இடைஞ்சல்
- கடலை விஷமாக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
- மரபு மாற்று விதைகள் – இயற்கையை விஞ்சுமா செயற்கை?
- வெப்பத்தை ஏற்று வளரும் பவளப்பாறைகள்
- கொல்லப்படும் சுற்றுச்சுழல் போராளிகள்
- சுற்றுச்சூழல் செய்திகள்
- திட்டமிடப்பட்டு அழிக்கப்படும் இயற்கை மரபுசார் விவசாயம்
- மீன் இனத்தை அழிக்கும் CO2
- கரியமில வாயுவின் இன்னொரு முகம்
- புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?
- பற்றி எரிகிறது பூமி
- முல்லை பெரியாறு அணை - ஓர் பார்வை
- பாழாகும் பாலாறு
- அண்டார்க்டிகாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்
- பூமியின் 1.2% நிலப்பகுதியை காப்பாற்றினால்…
- டர்க்கானாவின் மக்கள்
- இயற்கையின் ஆடம்பர விளைவு
- எரிமலை வெடிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் மரங்களின் இலைகளும் செயற்கைக்கோள் படங்களும்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.