சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் மனித குலம் இன்றுவரை அறியாத பல நூறாண்டுகள் பழமையுடைய மரம் செடி கொடிகள் அடர்ந்த காடுடன் கூடிய மிகப் பெரிய பள்ளம் (sinkhole) ஒன்றை பல மணிநேரப் பயணத்திற்குப் பிறகு கண்டுபிடித்துள்ளனர். ஜிங்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி 630 அடி/192 மீட்டர் ஆழமுள்ள இதன் அடியில் காடு அமைந்துள்ளது. இப்பள்ளம் அமெரிக்கா மிசௌரி மாகாணத்தில் மிசிசிபி நதியின் மேற்குக் கரையில் செயிண்ட் லூயி நகரில் அமைந்திருக்கும் நுழைவாயில் வளைவை (St Luiz Gateway arch) மூழ்கச் செய்யும் அளவிற்கு ஆழமானது.

குகை ஆய்வுகள்

குகைகள் பற்றி அறிவியல்ரீதியாக ஆராயும் ஆய்வாளர்கள் (Speleologists) மற்றும் பொழுதுபோக்கிற்காக இயற்கையில் கரையக்கூடிய சுண்ணாம்புக்கல், டோலமைட், ஜிப்சம் போன்ற கற்களால் அமைந்த நிலப்பகுதிகள் (karsts), குகைகளை ஆராய்பவர்கள் (Spelunkers) மே 6 2022 அன்று இந்த பிரம்மாண்டப் பள்ளம் மற்றும் அதனுள் இருக்கும் வனப்பகுதியைக் கண்டுபிடித்தனர்.giant sinhole 720அழகிய இந்த அமைப்பில் குகைக்கு மூன்று வாசல் காணப்படுகிறது. இதன் அடியில் இருக்கும் காட்டில் 131 அடி/40 மீட்டர் உயரமுள்ள பழமையான மரங்கள் பள்ளத்தின் நுழைவாயில் வரை சூரியஒளியைப் பெற கிளை பரப்பி நீண்டு நிமிர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன.

இது மிக மகிழ்ச்சி தரும் செய்தி என்று அமெரிக்க தேசிய குகைகள் மற்றும் கார்ஸ்ட்ஸ் ஆய்வுக்கழகத்தின் (National Caves & Karsts Research Institute NCKRI) இயக்குனர் மற்றும் சர்வதேச புகழ்பெற்ற குகை நிபுணர் ஜார்ஜ் வெனி (George Venni) கூறுகிறார்.

குகைகளின் தாயகம் தென் சீனா

இந்த ஆய்வுகள் அமெரிக்க ஆய்வுக்கழகம் மற்றும் சீன புவியியல் ஆய்வுக்கழக விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டன. தென் சீனா இதுபோன்ற பள்ளங்கள், குகைகள், கார்ஸ்ட்ஸ் நில அமைப்புகளின் தாயகம் என்றாலும், மனிதன் தீண்டாத அடர்ந்த காடு இதனுள் அமைந்திருப்பது இயற்கையின் விந்தை என்று வெனி கூறுகிறார். கரையும் கற்களாலான நில அமைப்புகள் (Karsts) அடித்தட்டுப் பாறைகள் (bedrocks) சிதைவதால் உண்டாகின்றன.

பள்ளங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?

சிறிது அமிலத் தன்மை உடைய மழை நீர் மண்ணின் வழியாக கீழிறங்கும்போது கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி மேலும் அமிலத் தன்மை அடைகிறது. இது வேகமாக அடித்தட்டுப் பாறை விரிசல்கள் வழியாக செல்லும்போது அவற்றை விரிவடையச் செய்து சுரங்கங்கள், வெற்றிடங்களை உருவாக்குகிறது. காலப்போக்கில் இந்த அமைப்புகள் பெரிதாகும்போது இவற்றின் மேற்கூரை உடைந்து பெரும் பள்ளங்களை (sinkholes) உண்டாக்குகிறது.

உலகில் காணப்படும் பள்ளங்கள்

பிரதேசரீதியில் காணப்படும் புவியியல் அமைப்பு, காலநிலை, மற்ற காரணங்களால் இந்த அமைப்புகள் உருவாகும் விதம் வேறுபடுகிறது. இதுபோன்ற வியப்பூட்டும் அமைப்புகள் பல சீனாவில் உள்ளன. ஆனால் உலகில் பல இடங்களில் ஒன்றிரண்டு மீட்டர் மட்டுமே விட்டமுடைய இத்தகைய அமைப்புகள் காணப்படுகின்றன. 

புகழ்பெற்ற க்வாஞ்ஜி

எரிமலை வெடிப்பு, வேகமாக வீசும் காற்று போன்றவற்றால் உலகில் இருக்கும் 25% குகை அமைப்புகள் அமெரிக்காவில் காணப்படுகின்றன. புவியின் மொத்த நிலப்பரப்பில் 20% இத்தகைய அமைப்புகளால் உருவாக்கப்பட்டவையே. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பள்ளம், எழில் கொஞ்சும் இதுபோன்ற அமைப்புகளுக்குப் புகழ்பெற்ற க்வாஞ்ஜி ஜுவாங் (Guangxi Zhuang) சுயாட்சி மாகாணத்தில் லே பகுதியில் (Leye county) பிங் (Ping’e) என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இப்பகுதி பள்ளங்கள், பாறைத்தூண்கள், இயற்கையில் அமைந்த நிலப்பாலங்கள் போன்றவற்றினால் செழுமையுடன் விளங்குகின்றன. இதனால் இது ஐநாவின் பாரம்பரியப் பெருமைமிக்க இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.giant sinkhole 2சொர்க்கத்தின் வாசல்

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பள்ளம் 1004 அடி/360 மீட்டர் நீளம், 492 அடி/150 மீட்டர் அகலம் உடையது என்று கார்ட்ஸ்ட்கள் பற்றி ஆராயும் புவியியல் கழகத்தின் மூத்த பொறியியலாளர் ஜாங் யுவங்ஹை (Zhang Yuanhai) கூறுகிறார். சொர்க்கத்தின் வாசல் (heavenly pit) என்று பொருள்படும் வகையில் சீனாவின் மாண்டரின் மொழியில் இப்பள்ளங்கள் டியான்கெங் (tiankeng) என்று அழைக்கப்படுகின்றன.

இந்த அமைப்பின் அடிப்பகுதி மற்றொரு உலகம். ஒரு மனிதரின் தோள்பட்டையளவு உயரத்திற்கு இதன் தரை அமைந்திருக்கிறது என்று இந்த குகைப் பயணத்திற்கு தலைமை வகித்த நிபுணர் சென் லிக்சின் (Chen Lixin) கூறுகிறார். இதுபோன்ற இயற்கைப் புவியமைப்புகள் பாலைவனச் சோலை போன்றவை. விஞ்ஞானம் இதுவரை வெளியுலகிற்கு கண்டறிந்து கூறாத பல உயிரினங்கள் இந்தக் குகைகளில் வாழலாம் என்று லிக்சின் கூறுகிறார்.

பெரணிகள் வாழும் குகை

அமெரிக்கா டெக்சாசின் மேற்குப்பகுதியில் இருக்கும் ஒரு குகையில் வெப்பமண்டலப் பெரணிகள் (ferns) ஏராளமாக வளர்ந்துள்ளன. இவற்றின் ஸ்போர்களை வௌவால்கள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு பரவச் செய்கின்றன. இந்த அமைப்புகள் பல்வேறு உயிரினங்களுக்கு அடைக்கலம் தருவதுடன் பூமியின் ஆழத்தில் நீர் சேகரிக்கும் தேக்கங்களாக (aquifers) செயல்படுகின்றன. உலகம் முழுவதும் இத்தகைய நீர் நிலைகள் 700 மில்லியன் மக்களுக்கு நீர் ஆதார மூலமாக உள்ளது.

மண்ணிற்கடியிலும் மனிதனின் கைவரிசை

ஆனால் இவை சுலபமாக அடையக்கூடிய இடங்களாக இருப்பதால் மக்களால் மாசுபடுத்தப்படுகின்றன. இவை திடக்கழிவுகளால் எளிதில் மாசடையக் கூடியவை. இதுபோன்ற நீர் நிலைகளில் இருந்து கார் பேட்டரிகள், வாகன உதிரி பாகக் கழிவுகள், பேரல்கள், பாட்டில்கள் போன்ற பொருட்கள் அகற்றப்படுவது உண்டு என்று வெனி கூறுகிறார். இப்பகுதியில் இப்புதிய கண்டுபிடிப்பின் மூலம் இங்கு இருக்கும் பள்ளங்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துள்ளது.

முந்தைய ஆய்வுகள்

இதே ஆய்வுக்குழுவினர் முன்பு வடமேற்கு சீனாவின் ஷாங் ஷி (Shaanxi) பிரதேசத்தில் டஜன் கணக்கில் இதுபோன்ற பள்ளங்களைக் கண்டுபிடித்தனர். க்வாங்சி (Guangxi) மாகாணத்தில் கூட்டமாக அமைந்த, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட குகைப் பள்ளங்களை (interconnected karsts) கண்டுபிடித்தனர். இவர்களின் ஆய்வுப் பயணம் தொடர்ந்து மேலும் பல அதிசங்களை உலகிற்கு அளிக்கட்ட்டும்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It