நஞ்சுள்ள புல்வகைப் பட்டாணி (Grass pea) காலநிலை மாற்றத்தின் கெடுதிகளைத் தாக்குப் பிடித்து நாளைய உலகின் உணவாகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மரபணு எடிட்டிங் அல்லது தேர்ந்தெடுத்த கலப்பின செயல்முறை மூலம் புரதம் நிறைந்த, வறட்சியை சமாளித்து வளரும் நஞ்சற்ற பட்டாணி ரகத்தை உருவாக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் புவி வெப்ப உயர்வால் உலகில் ஏற்படும் பெரும் பட்டினியைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

லாத்திரஸ் சாட்டிவஸ் (Lathyrus sativus) என்ற அறிவியல் பெயருடைய இந்த செடி, உலகின் மிக மோசமான வறண்ட நிலப்பகுதிகளில் வளர்கிறது. கடினமானது , சத்துகள் நிறைந்தது என்றாலும் குணப்படுத்த முடியாத பக்கவாதத்தை குறிப்பாக பலவீனமானவர்களிடம் இந்தப் பயிர் ஏற்படுத்துகிறது. இதனால் இப்பயிர் மற்ற பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும்போது ஒரு தற்காப்புப் பயிராக மட்டுமே வளர்க்கப்படுகிறது. என்றாலும் இதன் நஞ்சினால் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எத்தியோப்பியா மற்றும் அல்ஜீரியாவில் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆனால் இப்போது இப்பயிரை ஆராய்ந்து வரும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவால் இதன் நஞ்சிற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், வெப்பமடைந்து வரும் பூமியில் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உலக மக்களுக்கு பாதுகாப்பான மதிப்புமிக்க பயிரை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இதில் இருந்து கொடுக்க முடியும் என்று நார்ஃபக் (Norfolk) ஜான் இன்னஸ் (John Innes) ஆய்வு மையத்தின் திட்ட விஞ்ஞானி டாக்டர் ஆன் எட்வர்ட்ஸ் (Anne Edwards) கூறுகிறார்.grass peaநஞ்சிற்குக் காரணமானவை

நஞ்சை ஏற்படுத்தும் முக்கிய உயிரி வேதிப்பொருட்கள் பல படிகள் மூலம் கண்டறியப்பட்டன. இதன் சிக்கலான மரபணு வரிசையில் உள்ள பொருட்கள் ஆராயப்பட்டது.

நச்சுத் தன்மையை உருவாக்கும் பொருட்களை அகற்றும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. தாவரத்தில் நஞ்சு உண்டாகும் வழிமுறைகள் எவை என்பது தெரிய வந்தது.

புதிய ரகம் நஞ்சு இல்லாமல் உருவாக்கப்பட்டால், அது வறட்சியைத் தாக்குப் பிடிக்க இயலாத பயிராக மாறிவிடக் கூடாது என்பதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்துகின்றனர். உருவாக்கப்பட்ட புதிய ரகம் முற்றிலும் அல்லது மிகக் குறைந்த அளவு மட்டுமே நஞ்சு உடையவையாக இருந்தன. சரிவிகித உணவின் ஓர் அம்சமாக உண்ணப்படும்போது இப்பயிர் பாதுகாப்பானது. ஆனால் மற்ற பயிர்களின் விளைச்சல் குறையும்போது இது மட்டுமே நன்றாக வளர்கிறது. அப்போது இதை முக்கிய உணவாக எடுத்துக் கொண்டால் லாத்தரிஸம் (Lathyrism) என்ற நோய் ஏற்படுகிறது.

இந்த நோயைப் பற்றி முதல்முதலாக கிரேக்க மருத்துவர் ஹிப்பாக்கெரட்டிஸ் (Hippocrates) கூறினார். ஸ்பெயின் ஓவியர் கோயாவின் (Goya) அக்வாட்டின் (aquatin) படம் மாட்ரிட் நகரை நெப்போலியன் கைப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கிறது. இதில் லாத்தரிஸத்தால் ஒரு பெண் நடக்க முடியாமல் அவதிப்படுவதையும், அவளைச் சுற்றி பசியால் வாடும் மக்கள் கூட்டம் நஞ்சுள்ள பட்டாணிக்காகக் காத்திருப்பதையும் காட்டுகிறது.

இருவித்திலை தாவரத்தின் பயன்கள்

இது ஒரு இருவித்திலை தாவரம். இதன் வேரில் வாழும் பாக்டீரியாக்கள் காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சி அம்மோனியம் கூட்டுப்பொருட்களாக மாற்றுகிறது. இது பிறகு மண்ணிற்கு அனுப்பப்படுகிறது. இதனால் மண்வளம் மேம்படுகிறது.

இப்பயிர்களின் எண்ணற்ற வேர்கள் அடங்கிய வேர்த்தொகுப்பு மண்ணை ஆழமாக ஊடுருவிச் செல்கின்றன. அதனால் இவற்றை மேற்கத்திய நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வறண்ட நிலப்பகுதிகளில் வளர்த்தால் பூமியில் மண்ணின் விளைச்சல் திறன் அதிகமாகும்.

நம்பிக்கையூட்டும் பயிர்

வரும் நாட்களில் காலநிலை இன்னும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வறட்சி, வெள்ளப்பெருக்கு, உப்பு நீரில் பயிர்கள் மூழ்குதல் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வளரும் புதிய ரகங்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கும்போது, இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாதுகாப்பான புல்வகை பட்டாணி ரகங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள நிபுணரும் நாரிஜ் (Norwich) நீடித்த நிலையான வளர்ச்சி மையத்தின் விஞ்ஞானியுமான டாக்டர் பீட்டர் எம்ரிச் (Dr Peter Emmrich) கூறுகிறார்.

வெப்ப உயர்வால் இயற்கைப் பேரிடர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் பூமியில் பட்டாணியின் இந்த புதிய ரகம் நாளை உலக மக்களின் பசி போக்க உதவும் பயிராகலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/jul/08/uk-scientists-could-make-poisonous-grass-pea-a-valuable-food-crop?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It