இந்தியாவின் மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் இருப்பது போல, தென்னமெரிக்காவில் ஆன்டீஸ் மலைத்தொடர் உள்ளது. கிழக்கில் உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளான அமேசான் காடுகளில் பூமியின் மிகப் பெரிய அமேசான் நதி ஓடுகிறது. மேற்கில் பெரும் பரப்பில் அட்டகாமா (Atacama) பாலைவனம் அமைந்துள்ளது. அட்டகாமாவின் சிறப்புகள் அனைத்தும் அதன் தனித்தன்மையால் உலகப் புகழ் பெற்றவை.

சராசரி 600 மீட்டர் உயரமுள்ள இந்த பாலைவனத்தில் 4,000 மீட்டர் வரை உயரமுடைய பிரதேசங்கள் அமைந்துள்ளன. வடக்கு சிலி, பொலிவியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் இப்பாலைவனம் பரவியுள்ளது. துருவப் பகுதிகளைத் தவிர உலகில் மிக வறண்ட பாலைவனமாக இது கருதப்படுகிறது. இந்த அளவு கடுமையான வறட்சி உள்ளபோதும், பல தாவரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பசுபிக் கடலோரம் அமைந்துள்ள இது கேரள மாநிலத்தின் பரப்பைப் போல இரண்டரை மடங்கு பெரியது.

ஹம்போல்ட் நீரோட்டம்

மிகக் குறைவான மழை மட்டுமே பெய்யும் இந்தப் பாலைவனத்தின் சில பகுதிகளில் வரலாற்றில் ஒரு முறை கூட மழை பெய்ததாகப் பதிவுகள் இல்லை.atacama desert chileதென்னமெரிக்காவின் மேற்கில் நிலநடுக்கோட்டுத் திசையில் அட்டகாமாவின் வட பகுதியில் கரையில் இருந்து 500 - 1,000 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு நோக்கி ஹம்போல்ட் அல்லது குளிர் நீரோட்டம் என்று அழைக்கப்படும் நீரோட்டம் செல்கிறது. குறைந்த உவர் தன்மையுடைய நீரால் ஆன இத்தகையவை ஹம்போல்ட் நீரோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இதில் அடங்கியிருக்கும் குளிர்ந்த நீரும் அதனுடன் வீசும் காற்றும் மழைமேகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதுவே இப்பகுதி ஒரு பாலைவனமாக மாறக் காரணம். இது தவிர அமேசான் கரையில் இருந்து ஈரப்பதம் உடைய வாயு இப்பகுதிக்கு வராமல் ஆண்டீஸ் மலைத்தொடர் தடுத்து நிறுத்துகிறது. இதனால் இப்பகுதி முழுமையான ஒரு பாலைவனமாக மாறியது.

ஆய்வுகளின் பரிசோதனைக்கூடம்

கடும் வறட்சி, மிகக் குறைவான தாவரங்கள், தாதுக்கள் அடங்கிய வளமான நிலப்பகுதி ஆகியவற்றால் இந்த இடம் செவ்வாய் கோளின் நில மேற்பரப்பை ஒத்துள்ளது. இதனால் நாசாவும், மற்ற விண்வெளி நிறுவனங்களும் இப்பாலைவனத்தை செவ்வாயில் பயணிக்கும் ஊர்தி வாகனங்கள் (rowers) மற்றும் பிற கருவிகளைப் பரிசோதித்துப் பார்க்கும் தளமாக பயன்படுத்துகின்றன. கடினமான வாயு மண்டலம் உள்ளதால் இது போன்ற இடங்களில் நிலவும் சூழ்நிலையை சமாளித்து வாழ உதவும் வாழ்க்கை முறை பற்றி ஆராயும் இடமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

வறண்ட நிலப்பகுதியாக இருந்தாலும் அட்டகாமாவில் பலதரப்பட்ட சூழல் மண்டலங்கள் காணப்படுகின்றன. இதில் உவர் நிலப்பரப்புகள், உப்பு தடாகங்கள், வெப்ப நீரூற்றுகள், தாவரங்கள் வாழவே முடியாத அளவு வறண்ட பகுதிகள் போன்றவை அடங்கும். கடற்கரைப் பகுதியில் உருவாகும் மூடுபனியில் இருந்து கிடைக்கும் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி வளரும் சில தனிச்சிறப்புமிக்க தாவரங்கள் மற்றும் விலங்குகளை இங்குள்ள சில பகுதிகளில் காணலாம்.

வான் ஆய்வுகளின் சொர்க்கபூமி

தெள்ளத்தெளிவான வானம், குறைந்த ஈரப்பதம், குறைவான ஒளி மாசு போன்றவை உள்ளதால் இந்த இடம் வான் ஆய்வுகளுக்குப் புகழ் பெற்றது. இங்கு இருந்து இரவில் வானத்தை உற்றுநோக்கும்போது மிகச்சிறந்த வான் காட்சிகளைக் காணலாம். அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர் அரே (ALMA) உள்ளிட்ட பல முக்கிய வான் ஆய்வு கண்காணிப்பு நிலையங்கள் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய இங்கு நிறுவப்பட்டுள்ளன.

கணிசமான அளவு செம்பு சேகரம் உள்ள இப்பகுதியில் இருந்து சோடியம் நைட்ரேட், லித்தியம், தங்கம், வெள்ளி, போரான் போன்றவை கிடைக்கின்றன. நட்சத்திரங்கள் இல்லாத வானம், கடினமான இடங்களில் உயிர் வாழும் உயிரினங்களின் திறன், தாதுவளம் போன்றவற்றைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

அட்டகாமாவின் வில்லன்

மனிதனின் கால்தடம் பதியாத தனிமைப்பட்ட அழகு பூமியாக இந்த இடம் உள்ளது என்று கருதினால் அது தவறு! பெருமளவில் உலகின் பல பகுதிகளில் இருந்தும், பயன்படுத்திய பிறகு தூக்கியெறியப்படும் துணிவகைகள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. மனிதன் ஆடை பயன்படுத்தும் முறையில் கடந்த சில ஆண்டுகளில் அசுரவேக மாற்றங்கள் நிகழ்கின்றன.

மின்னல் வேகத்தில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படும் ஃபாஸ்ட் ஃபாஷன் எனப்படும் இந்த முறை ஆடை உற்பத்தியை, உடனடியாக மாற்ற வேண்டிய ஒரு முக்கிய சூழல் பிரச்சனை என்று ஐநா கூறுகிறது. 2000-2014ல் உலக ஆடை உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்தது. விற்பனையில் 60% உயர்வு ஏற்பட்டது. ஆனால் முன்பு பயன்படுத்தப்பட்டதில் பாதியளவு துணிகள் மட்டுமே இன்று பயன்படுத்தப்படுகின்றன.

இப்போது உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் ஐந்தில் மூன்று பகுதியும் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு ஆண்டிற்குள் தூக்கி எறியப்படுகின்றன. இவை தேவையான முறையில் மறுசுழற்சி செய்ய, புதுப்பிக்கவோ சாத்தியம் இல்லாத இடங்களுக்குப் போய்ச் சேர்கின்றன. அங்கு இவை மலை போல குவிக்கப்படுகின்றன, எரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு விநாடியும் உலகில் ஒரு டிரக் நிறைய துணிகள் இவ்வாறு கைவிடப்படுகின்றன.atacama desert waste clothesஇது போன்ற துணிகள் மலை போல குவிக்கப்பட்டிருக்கும் பல இடங்கள் அட்டகாமாவில் உள்ளன. மிக அழகான இந்த நிலப்பரப்பு வளர்ந்த நாடுகளின் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டும் இடமாக மாறியுள்ளது. உள்நாட்டுத் தொழிற்துறை மற்றும் பொருளாதாரத் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த சிலி கரையோரம் அமைந்துள்ள இக்யுயிக் (Iquique) துறைமுகத்தை டியூட்டி ஃப்ரீ துறைமுகமாக மாற்றியது.

இறக்குமதி மற்றும் இறக்குமதி செய்பவற்றை புதுப்பித்து ஏற்றுமதி செய்து பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கத் திட்டமிடப்பட்டது. இந்த துறைமுகம் தென்னமெரிக்காவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய டியூட்டி ஃப்ரீ துறைமுகம். அந்த நாட்டு மக்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் துணிகள் அங்கு வந்து சேர்ந்தன. ஆனால் நினைத்தது ஒன்று. நடந்தது வேறொன்று.

லட்சக்கணக்கான டன் பயன்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட துணிவகைகள் துறைமுகத்தின் வழியாக உள்ளே நுழைந்தது. கடந்த 2022ல் மட்டும் நான்கரை கோடி டன் துணிகள் இங்கு வந்தன. ஆனால் வருவதில் பெரும்பகுதியும் பின்னர் ஒருமுறை கூட பயன்படுத்த முடியாத துணிகளே. நம் ஊர் குப்பைக் கிடங்குகளில் பயன்படக்கூடிய பொருட்களைப் தேடும் மனிதர்கள் போல நல்ல துணிமணிகள் ஏதேனும் உள்ளனவா என்று தேடும் மனிதர்களை இங்கு சர்வசாதாரணமாகக் காணலாம்.

தரம் பிரிக்கப்படும் பாழான துணிகள்

இறக்குமதி செய்யப்படுபவற்றைத் தரம் பிரித்து ஏற்றுமதி செய்வதே இதற்கான திட்டத்தைக் கொண்டு வந்தபோது இருந்த நோக்கம். இதனுடன் தொடர்புடைய தொழிற்பிரிவுகள் இங்கு ஏராளமாக செயல்படுகின்றன. இத்தகைய 2000 பிரிவுகளில் பாதிக்கும் மேற்பட்டவை வெளிநாட்டு உரிமையாளர்களின் கைவசம் உள்ளவை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வரும் துணிகளை ஊழியர்கள் அவற்றின் தரத்திற்கேற்ப வகைப்படுத்துகின்றனர்.

இவற்றில் சிறந்தவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரமற்றவற்றை டிரக் டிரைவர்கள் நகரப் பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். அவை அங்கு மறுபடி தரம் பிரிக்கப்பட்டு உள்ளூர் கடைகளில் விற்கப்படுகின்றன. ல வெஃப்ராடில்லா என்ற ஒரு கடைத்தெருவில் இத்தகைய துணிகளை விற்கும் ஏழாயிரம் கடைகள் உள்ளன. கடைகளில் விற்கப்பட முடியாதவை நேராக பாலைவன பூமியில் கொண்டு போய் மலை போல கொட்டப்பட்டு குவிக்கப்படுகின்றன.

இறக்குமதி செய்யப்படுபவற்றில் பெரும்பகுதி ஒருவிதத்திலும் பயன்படுத்த முடியாதவை. செயற்கை நூலிழைகளால் உருவாக்கப்பட்ட துணிவகைகள் ஒருபோதும் மக்காமல் ஆண்டுகள் கணக்கில் கொட்டப்பட்ட இடங்களிலேயே கிடக்கின்றன. இந்த பாழ் துணி மலைகள் அளவில் பெரிதாகும்போது எரிக்கப்படுவதும் உண்டு. பாலியெஸ்ட்டர் போன்ற பிளாஸ்டிக் நாரிழைகளால் ஆன துணிகள் அணையாமல் தொடர்ந்து எரியும்.

அழிவில் இருந்து மீட்கப்படுமா இந்த அழகு பாலைவனம்?

கடுமையான நச்சுவாயுப் புகை காற்று மண்டலத்தில் நிறையும். குப்பை போடுபவர்களுக்கு சிலி அரசாங்கம் அபராதம் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்த போதும் அந்தப் பட்டியலில் தூக்கியெறியப்படும் துணிகள் சேர்க்கப்படவில்லை. புதிய சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட்டால் மட்டுமே அட்டகாமா என்ற இந்த அழகு பூமி அழியாமல் பாதுகாக்கப்படும்.

** ** **

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/atacama-desert-fashion-pollutions-eco-story-by-vinay-raj-1.8568581

&

https://www.ecowatch.com/chile-desert-fast-fashion-2655551898.html

&

https://en.m.wikipedia.org/wiki/Iquique

&

https://www.aljazeera.com/gallery/2021/11/8/chiles-desert-dumping-ground-for-fast-fashion-leftovers

 

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It