பலவகையான நிலப்பரப்புகள், பசுமையிடங்கள் போன்ற வளம் மிகுந்த இடங்களில் மான்கள் முதல் பறவைகள், சிலந்திகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் முன்னுரிமை கொடுத்து வாழ்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. வசதியான சுற்றுப்பகுதிகளில் அதிக அளவில் இயற்கையின் பன்முகத் தன்மை உள்ளது. இது மனிதனின் நலவாழ்விலும் தாக்கம் செலுத்துகிறது.park 720வளர்ச்சிக்காக மனிதன் உருவாக்கிய இடங்களில் இருந்து தொலைவில் இருக்கும் அடர்ந்த மழைக்காடுகள், தூய்மையான புல்வெளிப் பகுதிகள் போன்ற அழகான இடங்களில் இயற்கை செழுமையாக உள்ளது. 1990களின் பிற்பகுதியில் விஞ்ஞானிகள் தங்கள் கருத்தூன்றிய பார்வையை அரிசோனாவில் உள்ள பாலைவன நகரான ஃபீனிக்ஸ் (Phoenix) பக்கம் செலுத்தினர். சுற்றுப்புறத்தில் காணப்படும் நகர தாவரங்களை ஆராய்ந்தனர். இது பற்றி நடந்த முதல் ஆய்வு இதுவே.

அளவீட்டுக் கருவிகள், கணினியில் தற்காலிகமாக தரவுகளை சேமிக்கும் இடைநிலைப் பலகை நினைவகத்தின் உதவியுடன் மரங்கள், குத்துச்செடிகளை படமாக்கினர். சில சமயங்களில் அடர்த்தியாக வளர்ந்திருந்த குத்துச்செடிகளின் வழியாக தவழ்ந்து சென்று ஆராய்ந்தனர்.

நகரங்களில் தாவரங்களின் விநியோகம், பரவல் பற்றி விவரிக்கும் சூழலியல் கோட்பாடுகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. வனப் பகுதிகளில் தாவரங்கள் புவியியல், காலநிலை, மண்ணின் பாறைத் தன்மை, மழைப்பொழிவின் அளவு, ஒளி மற்றும் நிழலின் அளவு போன்றவற்றின் தாக்கத்தால் மரங்கள், குத்துச்செடிகள் தனித்துவம் முக்க முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. “இது இயற்கையின் ஆடம்பர விளைவு (luxury effect) எனப் பெயரிடப்பட்டது” என்று அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ஆன் கின்சிக் (Prof Ann Kinzig) கூறுகிறார்.

உயரம், அருகில் உள்ள நீர்நிலைகள், கிராமப் பகுதிகள், மண்ணின் வகை இவற்றைப் பொறுத்து தாவரங்களின் பரவல் காணப்படவில்லை.

மாறாக அருகில் வாழும் மக்களின் செழுமையே நகரங்களில் அதிக உயிரினங்கள் வாழக் காரணம் என்று தெரியவந்தது. 2003ல் இது குறித்த முதல் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. வன உயிரினங்கள் நகரப் பகுதிகளில் கூடுதலாக, அதிக பன்மயத் தன்மையுடன் இயற்கை வாழ்கிறது. மனிதனின் நல வாழ்வு, ஆரோக்கியத்துடன் இயற்கை நெருங்கிய தொடர்புடையது.

ஃபீனிக்ஸ் பகுதி நீர்ப் பற்றாக்குறை, அதி தீவிரமான வெப்பம் நிலவும் பகுதி. என்றாலும் மக்கள் பெருமளவில் செடிகளை நட்டு நீரூற்றி வளர்க்கத் தொடங்கினர். காலப்போக்கில் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் வருமானம் 10,000 டாலர்களாக அதிகரித்தது. இதனால் அப்பகுதியில் 0.3 டிகிரி செல்சியர்ஸ் வெப்பநிலை குறைந்தது. இதே போன்ற நிகழ்வு மற்ற இடங்களில் காணப்படுகிறது. கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் தோட்டங்கள், கோல்ஃப் மைதானங்கள், பூங்காக்கள் அதிகமுள்ள பகுதிகளில் கறுப்பு வால் மான்கள் அதிகமாக குடியேறத் தொடங்கின என்று 2023 ஆய்வு கூறுகிறது.

வட அமெரிக்கா, பொருண்டி, சீனா, ஆஸ்திரேலியாவில் மரங்களிலும் வட அமெரிக்கா, ஐரோப்பா, நியூசிலாந்தில் பறவைகளிலும் இப்போக்கு காணப்படுகிறது. பறவைகள் தாவரங்களை உணவிற்காகவும் வாழிடத்திற்காகவும் சார்ந்து வாழ்கின்றன. அதனால் இவை இயற்கை வளம் மிகுந்த இடங்களில் குடியேறுகின்றன. சில வகை வௌவால்கள் இத்தகைய இடங்களில் அதிகமாக வாழ்கின்றன. புராதன எகிப்தில் தொழிலாளர்கள் அதிகமாக வாழ்ந்த இடங்களுக்கு அருகில் பூச்சிகளும் அதிகமாக காணப்பட்டன.

பொருண்டி போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் இது பற்றி ஒரு சில ஆய்வுகள் மட்டுமே இதுவரை நடந்துள்ளன. ஆனால் குறைவாக வருமானம் உள்ள மக்கள் வாழும் இடங்களில் இந்தப் போக்கு காணப்படவில்லை. நேரமும் வசதியும் கூடுதலாக உள்ளபோது மக்கள் அதிகமாக செடிகளை வளர்க்கின்றனர். “நகரங்களில் மனிதர்கள் எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர்” என்று அமெரிக்க அரசு ஒழுங்குபடுத்தல் துறை உயிரியலாளர் ஜெஃப் அக்லி (Jeff Ackley) கூறுகிறார்.

இந்த நிகழ்வு தோட்டங்களில் மட்டும் காணப்படவில்லை. வீட்டின் உட்பகுதிகளிலும் நிகழ்கிறது என்று வட கரோலினா ராலி (Raleigh) என்ற இடத்தில் பலதரப்பட்ட வருமானம் உள்ள 50 குடும்பங்கள் வாழும் வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறின. குறைந்த வருமானம் உள்ள வீடுகளை விட இரண்டு மடங்கு கூடுதலாக, செல்வச் செழுமை உள்ள வீடுகளில் நூறு வகை கணுக்காலிகள் காணப்பட்டன.

பன்மயத் தன்மை மிகுந்த சூழல், மண் மற்றும் விலங்குகளுடனான தொடர்பு மனித ஆரோக்கியத்தில் நேர்மறை பயன்களை ஏற்படுத்துகிறது. வசதியான மக்கள் வாழும் வீடுகள் தூய்மையானவை என்று பலர் கருதுகின்றனர். ஆனால் இது முற்றிலும் உண்மையல்ல. நகரங்களில் மில்லியன் கணக்கான நுண்ணுயிரிகள் நகரச் சூழலில் நிலவும் பிரச்சனைகளால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்று தெரியவில்லை.

“நோய் எதிர்ப்பாற்றலிற்கு எதிரான நோய்கள் பெருகுகிறது. இதைக் கட்டுப்படுத்த பசுமையிடங்களை அதிகரிக்க வேண்டும். நம் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் நுண்ணுயிர்கள் வாழும் சூழல் மண்டலங்கள், நகரப் பகுதிகளை நாம் உருவாக்கும் பசுமியற்ற சூழலால் நாம் இயற்கையிடம் இருந்து துண்டிக்கப்படுகிறோம்” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி அறுவை சிகிச்சை நிபுணரும் இருண்ட பொருள்_நுண்ணுயிரியலின் புதிய அறிவியல் (Dark Matter: The New Science of the Microbiome) என்ற நூலின் ஆசிரியருமான டாக்டர் ஜேம்ஸ் கின்ராஸ் (Dr James Kinross) கூறுகிறார்.

உயிர்ப் பன்மயத் தன்மையின் இழப்பு ஒரு உலகளாவிய பிரச்சனையாக இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நம் நலமான வாழ்வு உயிரின அழிவு, சுற்றியுள்ள சூழலில் பரவலான வனப் பகுதிகளில் உயிரினங்களின் எண்ணிக்கை குறைவுடன் தொடர்புபடுத்தி மட்டுமே பேசப்படுகிறது. ஆனால் செழுமையான இயற்கையும் உடல் மற்றும் மன நலமும்ம் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவை என்பதை பல்வேறு ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

2024-ல் வெளிவந்த ஆய்வு இயற்கையின் இழப்பு உடல் நலத்தில் தாக்கம் செலுத்துவதைக் கூறுகிறது. இந்நிலையை மாற்ற விஞ்ஞானிகள் வெளிப்புற உலகில் உயிர்ப் பன்மயத் தன்மையை பாதுகாத்து விரிவுபடுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். பின்லாந்தில் உயிர்ப் பன்மயத் தன்மை செழுமையுள்ள தோட்டங்கள் உள்ள சூழலில் வாழும் விடலைப் பருவத்தினரிடம் ஒவ்வாமை, சுய எதிர்ப்பாற்றல் பாதிப்புகள் குறைவாக உள்ளன. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இயற்கையின் ஆடம்பர விளைவு என்ற இந்த கோட்பாடு வலியுறுத்துகிறது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.