மனிதன் முதன் முதலாக பயிரிட ஆரம்பித்த ஒரு சில தாவரங்களுள் முதன்மையானது பேரீச்ச மரங்களாகும்.

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னதாக மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த மனிதன் முதலில் இம்மரங்களை பயிரிட ஆரம்பித்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. அகழ்வாராய்ச்சிகளிலும் பாறைப் படிவங்களிலும் பேரீச்சம் மரம், இலை, காய்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
ஆரம்பத்தில் மெசபொட்டேமியா, எகிப்து ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வந்த பேரீச்சம்பழம் பிற்காலங்களில் தான் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. 1765க்கு பின்னர் தன் அமெரிக்க தீவுகளில் பயிரிடப்பட்டு உள்ளது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக அரேபிய பாலைவனங்களில் பயிரடப்பட்டு வந்துள்ளது.

பேரீச்ச மரங்கள் மிகவும் பசுமையானவை. மிகக் குறைந்த நீரில் இருந்தாலே உயிர் வாழக் கூடியவை. அதே சமயம் ஒரு ஹெக்டேருக்கு அதிக மகசூல் தரக்கூடிய மரங்களுள் முதன்மையானதும் பேரீச்ச மரங்களேயாகும். ஒரு ஆண்டின் உலக பேரீச்சம்பழ உற்பத்தி சுமார் முப்பது லட்சம் டன் ஆகும்.
 
பேரீச்சம் பழங்கள் மிகவும் சத்தானவை, உடலுக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிப்பவை. ஒரு கிலோ பேரீச்சம் பழம் சுமார் 3000 கலோரிக்கும் அதிகமான எரிசக்தியை தரக்கூடியது. இது பிற உணவுகளையும் பழங்களையும் விட பல மடங்கு அதிகமானதாகும். இதில் மாவுச்சத்து பல விதமான சர்க்கரை ரகங்களாகக் காணப்படுகிறது. குளூகோஸ் ஃப்ரக்டோஸ்களாக பிரிக்கக் கூடிய மாவுச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில ரகங்களில் முழுவதுமே மாவுப்பொருட்கள் உடல் எளிமையாக எடுத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் கிடைக்கின்றது. இத்தகைய பழங்களை உட்கொள்ளும் பொழுது உடல் அதிக சக்தியை எளிமையாக பெற்றிட முடியும்.

பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் காணப்படுகின்றது. (600 மி.கி. 1 கிலோ பேரீச்சம்பழத்தில்) இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. பேரீச்சம்பழத்தை ஒரு நுண்ணூட்டச்சத்து சுரங்கம் என்றே அழைக்கலாம். ஏனெனில் அதில் எண்ணற்ற நுண்ணூட்டச் சத்துக்களும், தாதுப்பொருட்களும் உள்ளது.

நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம்.

பேரீச்சம்பழங்களை பெரும்பாலும் திறந்த வெளிகளில் உலர வைப்பதால் அவற்றில் அதிகளவு தூசி படிந்திருக்கும். எனவே அவற்றை நன்கு சுத்தம் செய்து உண்பது மிக அவசியம்.

பேரீச்சம்பழத்தை எரித்து சாம்பலாக ஆக்கி அந்த சாம்பலில் என்ன என்ன உலோகங்கள் தாதுப்பொருட்கள் உள்ளன என கண்டறிந்ததில் கீழ்க்கண்டவை இருப்பது தெரிய வந்துள்ளது.

பொட்டாசியம்-50%, குளோரின்-15%, பாஸ்பரஸ்-8%, கால்சியம்-5%, இரும்பு-0.25%, மெக்னீசியம்-12% சல்பர்-10%.

Pin It

ஏலக்காய் டீ!.. இனிய அற்புதமான மாலை வேளை.. லேசாக மழை தூறிக் கொண்டு இருக்கிறது. குளிர் தென்றல் நம் உடலைத் தீண்ட தீண்ட. மனம் சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகிறது. அட இந்த நேரத்தில் சூடா ஒரு கப் டீ இருந்தா இன்னும் கொஞ்சம் சூப்பரா இருக்குமே. ! மனம் லேசா இதை எண்ணி அசைபோடும். இது வீட்டில் என்றால், ‘அக்கா சூப்பரா ஒரு ஏலக்கா டீ போடேன். ! இந்த குளிருக்கு இதமா இருக்கும். ’ ஆர்டர் பறக்கும். அந்த டீயை அனுபவித்து குடித்திருக்கிறீர்களா ? ஏலக்காய் டீ நன்றாகவே இருக்கும். ஏலக்காயின் மகிமை அப்படி!

மணங்களின் ராணி. . !

yelakkay_370ஏல விதைக்கு அதன் சொக்கவைக்கும் மணத்தை முன்னிட்டு, அதற்கு, "சொர்க்கத்தின் தானியம் / சொர்க்கத்தின் வாசனைப்பொருள்" என்ற புனை பெயர் ஒன்றும் உண்டு. ரொம்ப பொருத்தமான பெயர்தான். ஏலம் வாசனைகளின் ராணி எனவும் மதிப்புடன் அழைக்கப்படுகிறது. அதன் வாசனையும் சுவையுமே அலாதியானது. ஏலத்தின் மணத்தை மிஞ்ச,இந்த உலகில் வேறு மணமே கிடையாது. அதனால்தான் அனைத்து இனிப்பு வகை உணவிலும், ஏலம் கலக்கப்படுகிறது. ஒரு பொருளில் ஏலத்தைக் கலந்தாலே அதன் வாசனையே அப்படியே அலாக்காக ஆளைத் தூக்கிவிடும். பொதுவாக, ஏலம் இல்லாத இனிப்பு வகையே இல்லை எனலாம்.  உலகிலேயே விலை உயர்ந்த வாசனைப் பொருள்களில் குங்குமப்பூவிற்கு அடுத்தபடியாக கருதப்படுவது வாசனை ராணியான ஏலக்காய்தான். விலைதான் குங்குமப்பூவை விட குறைவே. தவிர மணத்தில் குங்குமப்பூவை தூக்கி சாப்பிட்டு விடுவார் ஏலம்.

பழம் பெருமை பேசும் ஏலம். !

உலகின் மிகப் பழமையான வாசனைப் பொருள்களில் ஒன்று ஏலம். ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது. அன்று இருந்த ஏராளமான் வாசனைப் பொருட்களில், வாசனையுடன் மருத்துவ குணத்திலும், சமையல் பயன்பாட்டிலும், உடலுக்குப் பயன்படுத்தும் நறுமண தைலங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது. இதன் மதிப்பும் மரியாதையும் அதிகமோ அதிகம்தான். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய சரித்திரத்தில், அதன் பாப்பிரஸ் மரப்பட்டைகளில் ஏலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அது எப்பர்ஸ் பாப்பிரசில் (Ebers Papyrus) குறித்து வைக்கப்பட்டுள்ளது. அதுதான் எகிப்தியர்களின் மருத்துவம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துள்ள தகவல் களஞ்சியம். எகிப்திய பதிவுகளில் பழமையானதும், முக்கியமான மருத்துவக் குறிப்புகள் அடங்கியுள்ளதும் இதுதான்.

ஏற்கனவே சுமார் 5000 ஆண்டுகுகளுக்கு முற்பட்ட தகவல்களை எடுத்து மீண்டும் இந்த பாப்பிரஸ் பட்டையில் ஹீராடிக் எழுத்தில் எழுதியுள்ளார்கள் , இந்த பாப்பிரஸ் சுருள் 110 பக்கங்கள் கொண்டது. 20 மீட்டர் நீளம் உள்ளது. இதில் சுமார் 700 அற்புதமான மருத்துவக் குறிப்புகள் எழுதி வைக்கப் பட்டுள்ளன. ஏலத்தை அன்று எகிப்தியர்கள் நறுமணப் பொருளாக பயன்படுத்தியதுடன், உடல் வலி போக்கும் மருந்தாகவும், மம்மிகளைப் பதப்படுத்தும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகவும்,, மதரீதியான சடங்குகளுக்கும் ஏலத்தை அதிகம் பயன் படுத்தினர்.

நாட்டுக்குள் வந்த காட்டு ராணி ஏலம். . !

ஏலம் முதலில் காட்டு செடியாகவே இருந்தது. ஏலத்தின் வரலாறு என்பது மனித இனத்தின் ஆதி கால வரலாறுடன் தொடர்புடையது. ஏலத்தின் தாயகம் கேரளத்தின் மலைப்பாங்கான பூமிதான் என்று சொல்லப் பட்டாலும் கூட, சுமார், 5 ,000 ஆண்டுகளுக்கு முன்பே இதனை, பெர்சியா, மெசபடோமியா, சீன போன்ற நாடுகளில், இதன் மருத்துவ குணத்துக்காகவும் , சமையலிலும், அதைவிட முக்கியமாக, கடவுள் தொடர்பான சடங்குகளிலும் ஏலத்தைப் பயன்படுத்தினர். கி. மு, 721 ல் பாபிலோனிய அரசனின் தோட்டத்தில், ஏலம் வளர்க்கப் பட்டதாம். மேலும் கி. பி 176 -180 ல் பேரரசர் அலெக்சாண்டரின் வரிப் பட்டியலில், வாசனைப் பொருளான ஏலத்தின் பெயரும் காணப் பட்டதாம். மத்திய தரைக் கடல் வழியே பயணம் செய்த வணிகர்கள், மணம் மிகுந்த மனதைக் கொள்ளையிடும் ஏலத்தை கான்ஸ்டாண்டி நோபிளிருந்து ஸ்காண்டிநேவியாவுக்கு கொண்டு வந்தனர். இன்றும் கூட அங்கு இதன் பெருமை குன்றாமல் இருக்கிறது. இன்றும் கூட இங்கு பாஸ்திரி, கறி உருண்டை மற்றும் ஒயினில் மணமிக்க ஏலத்தை கலக்கின்றனர்.

அனைத்துப் பொருள்களிளும் ஏலக் கலப்புதான். அங்கே ஏலத்தை வாயில் போட்டு சுவைப்பதன் மூலம் வாயின் துர்நாற்றம் போக்கவும், பல்லின் வெண்மைக்கும் இன்றும் ஏலம் பயன்படுகிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் அன்று ஏலத்தை நறுமணத் தைலங்களிலும், களிம்புகளிலும்,வாசனை எண்ணெய்களிலும்,பயன்படுத்தினர். ரோமானியர்கள் மேலும் இதனை உடலின் மணப்பொருள் தயாரிக்கும்போதும், வாயின் கெட்ட வாசனை போகவும், அதைவிட முக்கியமாக, உடலுறவைத் தூண்டும் மருந்தாகவும் பயன்படுத்தினர்.

இந்தியாவின் ஏலம் !

ஏலம் கடந்த 2000 ஆண்டுகளாக, இந்திய வணிகர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முன்பும் கூட இதனை பற்றி இந்திய வரலாற்றில் பதிவு உள்ளது. கி. மு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே, ஏலத்தை இந்தியர்கள் சமையல், வாசனைப் பொருள் மற்றும் மருத்துவத்தில் பயன் படுத்தினர் என்ற குறிப்பு காணப்படுகிறது. இந்தியாவில் 11 ம் நூற்றாண்டிலிருந்து எல்லம் நடமாடுகிறத். அப்பொது பஞ்சமுக தாம்பூலத்தில், ஏலக்காயின் பட்டியல் உள்ளது. ஏலத்தின் தாயகம், தென்னிந்தியாவின், மேற்குத்தொடர்ச்சி மலையின் அடர்ந்த பசுமை வளம் கொழிக்கும் மழைக்காடுகள் நிறைந்த கேரளம்தான். இதைதவிர, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இது காணப்படுகிறது. ஏலம் இந்தியாவிலும், மலேசியாவிலும் அக்டோபர் மாதம் ஏலம் அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் அந்த காய் முழுவதையும் சூரிய ஒளியில் வைத்தே வெயிலில் காயப்போட்டு உலர்த் துவார். அதன் நிறத்துக்கு ஏற்றாப்போல தெரிவு செய்யப்பட்டு அதன் மணம் அறிவிக்கின்றனர். இந்த ஏலத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பச்சை ஏலம். அடுத்து கருப்பு ஏலம். அவை பச்சை நிறத்தில இருந்து கருஞ்சிவப்பு /வெள்ளை கூட இருக்கிறது.

ஏலத்தின் விதை பச்சை வண்ணத்திலிருந்து, மஞ்சள், சாம்பல் வரை. இருக்கும்

ஏலத்தின் மணம் முழுவதும், ஏல விதைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனை உடைத்து பொடி செய்துவிட்டால் மணம் காலப்போக்கில் குறைந்து போகும். ஏலத்தின் அருமையான மணம் மனித மனங்களை,சுண்டி இழுக்கிறது. ஏலத்தை உலர்த்திய பிறகுதான் முழு மணமும் கிடைக்கிறது. தென்னிந்தியாவின் அடர்ந்த மழைக்காடுகளில் ஏலம் உருவானது என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் அது இன்று இலங்கை, கவுதமாலா ,இந்தோ-சீன மற்றும் டான்செனியாவிலும் பயிரிடப்படுகிறது . இந்தியாவில்தான் ஏராளமான ஏலம் விளைந்தாலும், இங்கிருந்து குறைவாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. காரணம் நாமே எல்லாவற்றையும் பயன்படுத்திவிடுகிறோம். உலகிலேயே அதிகம் ஏலம் ஏற்றுமதி செய்யும் நாடு கவுதமாலாதான். ஆனால் இங்கே சுமார் 100 ஆண்டுக்கு முன்னர்தான் ஏலம் அறிமுகமாயிற்று.

பெயர் சூடும் சூடாமணி. . !

ஏலத்திற்கு கார்டமன் (Cardamon)என்ற பெயர் பெர்சியாவிலிருந்து வந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த புதிய பெயரான ஏலேட்டரிய என்பது தெற்காசிய நாவிலிருந்து பிறந்திருக்க வேண்டும். இந்தி, பஞ்சாபி யிலும் இது எலாச்சிதான். இதன் பொருள் பச்சை ஏலம் என்பதே. ஆனால் சில மொழிகளில்கருப்பு ஏலம் என்றும் போருல்படியாகவும் அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதனை ஏலா/எல்லாகா என்கின்றனர். எல்லாம் திராவிடிய மொழியிலிருந்து வந்துள்ளது. ஆனால் ஏலம் என்பது முடிவாக தமிழ் எல்லை என்பத தெரிகிறது. தமிழ் மலையாளம், கன்னடம், இது ஏலக்காய் தான் தெலுங்கில் மட்டும் இதன் பெயர் ஏலகுலு .

வேதத்திலும், கிரேக்கத்திலும் ஏலம். !.

ஆதிகால வேத புத்தகத்திலும் ஏலத்தை பற்றி எழுதி வைத்துள்ளனர் முதலாம் , இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சரகர் மற்றும் சுஸ்ருதா என்ற இந்திய மருத்துவர்கள், பல நோய்களை குணப்படுத்த ஏலக்காயை பயன்படுத்தியாதாக குறிப்பிட்டு உள்ளனர். . . கிரேக்க மருத்துவத்தில், கி. மு 5 ம் நூற்றாண்டில், ஏலம் பற்றிய தகவல்கள் காணப் படுகின்றன. அரிஸ்டாட்டிலுக்குப் பின் வாழ்ந்த தியோபிரஸ்டேட்ஸ் என்ற கிரேக்க மருத்துவ அறிஞன் கி. மு 4 ம் நூற்றாண்டில் ஏலம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். அது மட்டுமல்ல. அதே கால கட்டத்தில், இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும், கிரேக்க, ரோமானிய நிபுணர்களும், ஏலக்காய் இந்தியாவிலிருந்து வந்தது என்றும் குறிப்பிட்டு அதன் மருத்துவ குணங்களையும் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் ஏலத்தை வாயில் போட்டு மென்று அதன் மணத்தையும், சுவையையும் அனுபவித்தனராம்.

ஏலத்தின் மணத்தில் சொக்கிய உலகப் பேரழகி. . !

போருக்கு வந்து நாட்டைக் கையகப்படுத்த வந்த மாவீரன் அலெக்சாண்டரின் போர்வீரர்கள், இங்கு இந்தியாவில் தங்கி இருந்தபோது இலக்காயால் ஈர்க்கப்பட்டனர். அதன் மணத்தில் மயங்கிய போர் வீரர்கள், மறக்காமல், தங்கள் ஊருக்குத் திரும்புமோது, கி. மு 325 ல் இந்தியாவிலிருந்து அப்படியே ஏலக்காயையும்,ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றனாராம். அப்படிப்பட்ட பெருமை உடையது ஏலம். கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஏலத்தை மருந்தாக மட்டுமின்றி, வாசனைப் பொருளாகவும் பயன்படுத்தினர். ஒரு சுவையான செய்தி! கி.மு. 27ம் ஆண்டுகளில் வாழ்ந்த ,கிரேக்க சாம்ராஜ்யத்தின் உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு ஏல மணத்தின் மீது கொள்ளைப் பிரியமாம். கிளியோபாட்ரா தான் குளிக்கும் நீரில் ஏலத்தை அரைத்து கலக்கச் சொல்லியே குளிப்பாராம். . அதன் வாசனையில் அவள் கிறங்கிப் போவாராம். அது மட்டுமா? தன் காதலன் மார்க் ஆண்டனியின் வருகையை எதிர்பார்க்கும்போதேல்லாம், தனது அரண்மனையை, உண்மையிலேயே, நெஞ்சை சொக்க வைக்கும் ஏலத்தின் புகை மணத்தில் மூழ்க வைப்பாராம். எப்போதும் அவரை சுற்றி ஏலத்தின் மணம் கமழுமாம்.

பைபிளிலும் சொர்க்கத்தின் மகனுக்கும் ஏலம்...!

yelakkay_380இங்கிலாந்து நாட்டினருக்கு நார்வேனியர் மூலம்தான், கி.பி.11 ம் நூற்றாண்டில்தான் ஏலம் அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தாலும் கூட, ஐரோப்பாவுக்கு, கி.பி 17 ம் நூற்றாண்டு வரை, டச்சு , போர்த்துகீஸ் மற்றும் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம் மூலம்தான், ஏலம் இறக்குமதியானது. கிறித்துவ புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாட்டில், இதனை குற்றமற்ற என்ற பொருள் தரும்படியான கிரேக்க வார்த்தையில் "அமோமன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 1,000 ஆண்டுகளில் சீன அரசின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், தங்களின் பேரரசரிடம் நிற்கும் முன், வாயில் ஏலத்தின் விதையை போட்டுமெல்ல கொண்டுதான பேரரசர்களைச் சந்திக்க வேண்டுமாம். அரசர்கள் முன் இவர்கள் வாய் நாற்றத்துடன் பேசிவிடக்கூடாதல்லவா? அதான். ஏனெனில், சொர்க்கத்தின் மகன்களான பேரரசர்கள் முன்னே மணம் பரப்பும் வாசனை காற்றை அவர்கள் விட வேண்டுமாம். அதிகாரியின், வாய் நாறாமல் இருப்பதற்குத்தான் இந்தபந்தவான படாடோபமான ஏற்பாடெல்லாம். . !வாய் நாறினால் பின் எப்படி பேச. . . ! அதான் இது.

நாங்க இஞ்சி குடும்பம்தாங்க. . !

இப்படி பார் புகழும் ஏலக்காய் இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. இது வருடம் முழுவதும் காய்க்ககூடியது. வேர்ப்பகுதியில்தான் இதன் பூவும், காயும் காணப்படும். பொதுவாக இது வெப்ப நாடுகளின் நறுமணப் பொருளாக இருந்தாலும், இதற்கு, ஏராளமான மழையும், 22 டிகிரி வெப்பமும் தேவை. அடர்வான மரங்களின் நிழலிலேய இதனை வளர்க்க முடியும். ஏல செடி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,000-15,000 மீ உயரத்திலேயே ஈரப்பாங்கான பகுதிகளில் வளரும் பயிரிட்டு 4 ஆண்டுகள் ஆன செடிதான் காய்க்கும். சுமார் 20 காய்கள் வந்த பின் இதனைப் பறித்து சூரிய வெப்பத்தில் உலர வைப்பர். காய்கள் அழகான இளம்பச்சை நிறத்தில் இருக்கும். நன்கு முதிர்ந்த காயில் 10 -20 விதைகள். காணப்படும். இவை கருப்பாகவும் பிசுக்குத் தன்மையுடனும் இருக்கும். நல்ல தரமான விதைகள் நல்ல கருப்பாக இருக்கும். இன்று ஏலம் இந்தியா தவிர, இலங்கை, தாய்லாந்து, மத்திய அமெரிககா,தமிழ் நாடு மற்றும் கர்நாடகத்திலும் பயிரிடப் படுகிறது. ஆனாலும்கூட, இந்திய ஏலம்தான் இதன் மணம், தரம், அளவு, எண்ணெய் மற்றும் நிறத்துக்காக உலக சந்தையில் பெயர் பெற்றுள்ளது. மேலும் உலகின் 90 % ஏலம் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதியாகிறது. அந்நிய செலாவணியைத் தரும் மிக முக்கியமான் பொருள்

அரேபியரின் உபசரிப்பு ஏலத்தின் மதிப்பு. . . !

ஏலக்காய். கிழக்கிந்தியர்கள், ஸ்காண்டிநேவியர்கள் , அரேபியர்கள், மற்றும் மத்திய ஆப்பிரிக்கர்கள் தான் ஏலக்காயை அடிக்கடி தங்களின் உணவில் பயன்படுத்து கின்றனர். அரேபியர்கள் காபியில் எலாம் கலந்து தருவதை உபசரிப்பின் உச்சபட்ச மரியாதை என்று நினைக்கின்றனர் . அரேபியர்களின் காபியில் ஏலத்தின் மணம் கட்டாயம் கலந்து அருமையாய் இருக்கும். அவர்களின் காபியில் ஏலப் பொடியோ முழு விதையோ நிச்சயமாய் இருக்கும். , ஏனெனில், அவர்கள், விருந்தினரின் முன், ஏலவிதையை, காபி கொடுக்கு முன் காண்பிப்பதை பாரம்பரிய வழக்கமாகவும், அவர்களுக்கு தரும் உயர்ந்த பட்ச மரியாதை என்றும் கருதுகின்றனர். அரேபியர்கள் மாமிசத்திலும் , அரிசி சோற்றிலும் ஏலம் போடுவார். இன்றும் கூட முகமதியர்கள் வீட்டில் சாதம் சமைக்கும் போது அரிசியுடன் ஏல அரிசியும் கலந்து போட்டே சமைக்கின்றனர். இந்திய உணவில் ஏலம் கலப்பது சாதாரணமான ஒன்றுதான். . புலவு, மசாலா, ஆட்டுக் கறி பாயசம், அல்வா, குலாப் ஜாமூன்,உப்புமா என அனைத்துப் பொருளகளிலும் மற்றும் பிற இனிப்புகளில்மும் ஏலத்தின் வாசனை தூள் கிளப்பும்! எதியோபியாவிலும் இதே கதைதான். அவர்களும் விதம் விதமாக ஏலத்தை காபியில் கலந்து பரிமாறுவார்கள். மத்திய ஆசியாவிலும், உஸ்ப்கிச்தானிலும் அரிசி, கறி மற்றும் இனிப்பில் என அனைத்துப் பொருள்களிலும் சும்மா சகட்டு மேனிக்கு கலந்து உண்கின்றனர் . உலகில் அதிக அளவில் ஏலம் பயபடுத்துவதில் முதல் பரிசுதான் அரேபியாவுக்கு.

மருத்துவ குணம் கொண்ட ஏலக்காய். . . !

ஏலம் பல வகைகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது. இதில் அற்புதமான உணவு மதிப்பு கொண்டது. இதில் மிகக் குறைந்த கொழுப்பும், அதிக புரதமும், முக்கிய வைட்டமின்களாகிய A ,B& C உள்ளன. 10% ஆவியாகக்கூடிய எண்ணெய் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான, அரேபியா,துருக்கி போன்றவைதான் உலகின் அதிகமான ஏலம் உட்கொள்பவர்கள். வடஇந்திய கிராமிய பாடல்களிலும் கூட, வெற்றிலை பாக்கில் ஏலம் கலப்பது பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. ஏலம், குடல், சிறுநீர், நரம்பு மற்றும் இனப்பெருக்க உறுப்பு தொடர்பான நோய்களை நிவாரணம் செய்யுமாம், ஏலம் இருமலை சரி செய்யும் மருந்தாகவும், உணவு தூண்டுவதாகவும், உடலின் சூட்டைத் தக்கவைக்கவும், எதிர் உயிரியாகவும், எதிர் பூஞ்சைக்காலன் பொருளாகவும், , டானிக்காகவும்,வயிற்றை சரி செய்யும் மருந்தாகவும், உடல்வலியைக் குறைக்கும் மருந்தாகவும் இருக்கிறது. 100 கிராம் ஏலத்தில் உள்ள சத்துப் பொருள்கள் : மேலும் வயிற்றுப் போக்கு மலமிளக்குதல் போன்ற மருத்துவ குணங்கள் கொண்டது இது. வயிற்றுப் பிரச்சினை உள்ளவர்கள் இதனைக் கட்டாயம் வா உன்ன வேண்டும். நெஞ்சு சளிக்கும் இது நல்லது. பொதுவாக கருவுற்ற பெண்கள் இதனை உண்ணக்கூடாது.

தங்கத்தில் குளித்த ஏலக்காய்...!

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும், தைத்திரிய சம்ஹிதாவிலும் திருவிழா காலத்திலும், சடங்குகளிலும் ஏலம் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அதைவிட ஒரு சுவாரசியமான தகவல். இந்தியர்கள், தங்களின் விருந்தினர்களுக்கு மிகுந்த மரியாதை செய்வதற்காக, ஏலக்காயை தங்கத்தில் முக்கி எடுத்து அதனை, இனிப்பின் மீது வைத்து பரிமாறுவார்களாம்.

1801ல் இந்தியாவிலிருந்து, கிழக்கிந்திய கம்பெனியால், இங்கிலாந்துக்கு எடுத்து செல்லப் பட்ட தங்கத தகடு போர்த்திக் கொண்ட ஏலக்காய்கள் இவை. இவற்றை இந்தியா அருங்காட்சியம் என்ற பெயரில் இந்தியா இயற்கைப் பொருள்களை இங்கிலாந்தில் வைத்திருந்தனர். . 1879ல் அங்கிருந்த அருங்காட்சியகம் மூடப்பட்டதால், அதனை லண்டன் அருங்காட்சியகத்துக்கும், ராயல் தாவர தோட்டத்திற்கும் மாற்றப்பட்டது. பின்னர், இவை தென் ஆசியா கடந்து, சீனா தாண்டி உலகம் முழுமைக்கும் விரவிக் கிடக்கிறது. பிற நாட்டு முதலாளிகள் எம் சொத்து கொள்ளை கொண்டு போகவோ என்று நாம் அலறவேண்டியதுதான். வேறென்ன செய்ய?

Pin It

minmini_370_copyநீங்கள் கிராமத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? அல்லது கோடைகால இரவு நேரங்களில் கிராமத்துக்குப் போனதுண்டா? அது ஒரு சுவையான அனுபவம்தான். அதனை அனுபவித்து உணர்ந்தால்தான் அறிய முடியும். கோடையிலிருந்து கார்த்திகை மாதம் வரை, முக்கியமாக மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை அறுவடை முடிந்த வயல் வெளிகளை ஒட்டியும், நீர்நிலைகளை ஒட்டியும் இருக்கும், மரங்களில் இரவு நேரத்தில் வெளிச்சப் பட்டாளங்கள் திரியும்.

மனதை மயக்கும் பசுமஞ்சள் நிறம். நாம் சொக்கியே போவோம் அந்த ஒளியின் நிறத்தில். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஆச்சரியத்தில் பிரமித்து விடுவீர்கள். மரத்தை சுற்றித் திரிந்து பறக்கும் குட்டி மின்னல் கூட்டம் ஒரு பக்கம். தரையில் புல் நுனியில் அமார்ந்து தியானம் செய்வது போல மினுக்கும் விளக்கு வண்டுகள் மறு பக்கம். இரண்டுமே நம்மை ஆச்சரியத்தால் கட்டிப் போட்டுவிடும். விளக்கு பூச்சி விட்டு விட்டு வெளிச்சத்தை பீற்றி அடிக்கும். அதற்குப் பதில் சொல்வது போல கீழே கிடக்கும் மினுக்கும் வண்டும் அதற்கு ஈடாகவே விட்டு விட்டுப் பிரகாசிக்கும். நிஜமாலுமே அது உண்மைதான். ஆனால் காதல் தூதை முதலில் அனுப்புவர் பெண்ணேதான். பின்னர்தான் ஆண் பதிலுக்கு சம்மதம் தெரிவிப்பார். கீழே கிடக்கும் பெண் பூச்சியை மையம்/மையல் கொண்டுதான் மேலே பறக்கும் ஆண் பூச்சி ஒளியைத் தூதுவிடுகிறது தன் காதலுக்கு. அதற்கு எழுதப் படிக்க, பேசத் தெரியாதல்லவா? காதலுக்கு விழி வழி தான் பேச வேண்டுமா? ஒளி வழியும் கூட பேசலாமே, இணக்கம் தெரிவிக்கலாமே! அதனால் தனக்குத் தெரிந்த மொழியில் தூதுவிடுகிறது பூச்சி.. தன் இணைவுக்கு இணக்கமா என ஒளியால் கேட்கிறது பெண். ஒளியின் வழி மொழியிலேயே ஆணும் சம்மதம் தெரிவிக்கிறது. 

இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மின்மினிக்களின் வாழ்க்கை இப்படித்தான். இவைகளின் அளவு 5 to 25 மி.மீ தான். (up to 1 inch).இவைகளில் 2000 வகைகள் உள்ளன. பொதுவாக இவை இரவு நேரங்களில் மட்டுமே சஞ்சரிக்கும், சிலவகை பகலிலும் வரும். ஆனால் இரவில் இருட்டில் சுற்றுபவர்களுக்குத்தானே விளக்கும், வெளிச்சமும் வேண்டும். அதனால்தான் இந்தப் பூச்சிகள் ஒரு விளக்கைச் சுமந்து கொண்டு, அது தரும் ஒளியில் ஆகாயத்தில் அழகாக, அற்புதமாய், தன்னைத் தானே மினுக்கி, மயக்கி வலம் வருகிறது. ஆண் பூச்சியின் மேல் தோல், வண்டின் தோல் போல கடினமாக இருக்கும். பெண்ணோ பரம சாது.. ரொம்ப மென்மையானவளும் கூட. அவளுக்கு தோல் கடினம் கிடையாது. பஞ்சு போல மென்மையாக இருக்கும். அது மட்டுமா, அவள் பறந்து ஓடிவிடாமல் இருக்க, அவளின் இறக்கை உருவாக்கப்படவில்லை. அது மட்டுமல்ல பெண் முதிர்ச்சி அடைந்துவிட்டால் அவள் தாய்மைப் பொறுப்பேற்க உணவு உண்ணமாட்டாள். அதற்காகவே பறப்பது ஆண் மட்டுமே. பெண்ணுக்கு அந்த விடுதலை இல்லை. அவளின் கரங்கள், பறக்கும் கரங்கள் வெட்டப்பட்டுவிட்டன இயற்கையால். அதிக பட்சம் பெண் பூச்சி ஒரு செடி/புல்லின் மேல் ஏறலாம். ஆணும் பெண்ணும் ஒரு குறிப்பிட்ட கால கதியில் ஒளியை விட்டு விட்டுப் பிரகாசிக்கும். பெண் சம்மதம் தெரிவித்த பின், இருவரும் இணை சேருவார்கள்.. பின்னர் இயற்கை நியதிப்படி பெண்மை கருவுரும். பின்னர் அங்கேயே கொஞ்ச நாள் கழித்து பெண், பாதுகாப்பாக முட்டைகளை ஈர மண்ணில் புதைத்து வைப்பாள். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சுமார் ஒரு வருட காலம், இளம் பிள்ளையாய் சுற்றித் திரியும். கோடை வந்ததும்தான் அவர் இணை சேரும் பக்குவம் அடையும். பெண் இறக்கை இன்றியே காலம் கழிப்பாள்.
 
minmini_450அது சரி.. இந்த வெளிச்சம் எப்படி என்கிறீர்களா? அந்த ஒளி மின்மினியின் உடலிலிருந்து உருவாகிறது. மின்மினிப் பூச்சிகள் இளம்பருவத்திலிருந்தே மினுக்கும் தன்மையவை. ஆனால் இதில் இன்னொரு ஆச்சரியமும் அடங்கி இருக்கிறது. அதுதான் எப்படி இவை இந்த ஒளியால் இறந்து போகாமல் அதனூடேயே வாழ்கின்றன. பொதுவாக, ஒரு பொருள் ஒளிவிடும்போது, அதிலிருந்து பெரும்பாலும் வெப்பமே வரும். அதாவது ஒரு மின் விளக்கில் 90% வெப்பமும், 10% ஒளி மட்டுமே வரும். அப்படி என்றால் இந்த குட்டியூண்டு பூச்சி வெந்து கருகிவிடாதா? இங்கே அப்படி எல்லாம் நடப்பது இல்லை. மின்மினியின் உடலில் உருவாகும் ஒளி குளிர் ஒளி(cold light) /உயிர் ஒளி (Bioluminescence)என்றே அழைக்கப்படுகிறது. ஏன் தெரியுமா? அந்த ஒளியிலிருந்து இந்தப் பூச்சிகள் ஒரு மந்திரக் கோலை தன் வயிற்றில் வைத்துள்ளன. அதுதான் ஒளியைத் தரும் சிறப்பு செல்கள். அவை முழுக்க முழுக்க ஒளியை மட்டுமே தரும், துளிக்கூட வெப்பம் தருவதில்லை. அதாவது மின்மினியிலிருந்து வரும் ஒளியில் 100% ஒளி மட்டுமே. வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கும் குறைவே..!

ஏனெனில் மின்மினியின் உடலிலிருந்து பார்வை ஒளியலைகள் (Visible light) மட்டுமே உருவாக்கப்படுகின்றன. புறஊதாக்கதிரோ, அகச்சிவப்பு கதிரோ உற்பத்தி செய்யப்படுவதில்லை. அது மட்டுமல்ல, அதன் வெப்ப அளவு, பூச்சி எவ்வளவு விரைவில் பிரகாசிக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல இருக்கும். விரைவான காலகதி என்றால் வெப்ப அளவு அதிகம். இரு மினுக்குகளுக்கு இடையே, கொஞ்ச நேரம் அதிகமானால், ஒளியின் வெப்பம் கொஞ்சம் குறைவு. இந்த ரிதமால்தான் ஆண்கள் ஈர்க்கப்படுகின்றன. இணை தேட மட்டுமல்ல, சமயத்தில் இரை தேடவும், இந்தப் பூச்சிகள் ஒளியைத் தூண்டிலாகப் போடுகின்றன. 

மின்மினியின் வயிற்றுப் பகுதியில் ஒளியை உருவாக்கும் சிறப்பு ஒளிசெல்கள் (Photcytes) உள்ளன. இதில் லூசிபெரின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது பூச்சியில் உடலுக்குள் வரும் காற்றுக் குழாயிலிருந்து (Trachea) ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது. பின் லூசிபெரினும், ஆக்சிஜனும் லூசிபெரேஸ்(Luciferase) என்ற நொதியினால் இணைந்து ஆக்சிலூசிபெரிலின் (oxyluciferin) என்ற பொருளாக மாறுகிறது. அப்போதே ஒளியையும் கக்குகிறது மின்மினியின் வயிற்று செல்கள்.

luciferin + ATP -------------> luciferyl adenylate + PPi
adenylate + O2 -------------> oxyluciferin +AMP + light

minmini_371இந்த ஒளியின் அலை நீளம் 510 & 670 நானோ மீட்டர். இதன் நிறம் வெளிர் மஞ்சளிலிருந்து பசு மஞ்சள், இளஞ்சிவப்பு பச்சை ஆகியவை.ஆனால் இதன் ஒளி விடும் கட்டுப்பாட்டை நிறுத்தி, ஓடச் (On -Off mechanism) செய்பவைகள் நரம்பு செல்கள் + ஆக்சிஜன் வரத்து மட்டுமே. அதன்கடை நிலை லூசிபெரேஸ் மட்டும் சமீபத்தில் அறியப்பட்டுள்ளது. அதன் மரபணுவும் பிரிக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு அறிவியல் முன்னேறிய நிலையிலும், நம்மால் மின்மினி போன்ற ஒளியை உற்பத்தி செய்ய முடியவில்லை. லூசிபெரின் உருவாக்கம் இன்னும் முழுமையாய் விஞ்ஞானிகளுக்குப் பிடிபடவில்லை.

முடிவாக ஒரு வரலாற்றுத் தகவல்:

முதல் உலகப்போர் நடந்த காலத்தில், இராணுவ முகாம்களில், மின் விளக்கு வசதி கிடையாது. அப்போது காயம் பட்ட வீரகளுக்கு சிகிச்சை அளிக்கவும், அறுவை சிகிச்சை செய்யவும், லாந்தர் விளக்கில் மின்மினியைப் பிடித்துப் போட்டு வைத்துக் கொண்டு, சிகிச்சை செய்தனராம். அது போல, இராணுவ வீரர்கள் கடிதம் படிக்க மின்மினியின் உலர்ந்த உடலைப் பொடி செய்து, அதில் உமிழ் நீர் உமிழ்ந்து, கலந்து அதன் ஒளியில் படித்தனராம். இப்போதும் கூட, ஆதிவாசிகளின் இல்லங்களில் இரவில் மின்மினி விளக்குகள்தான் கண்ணாடி பெட்டியில்/லாந்தரில். பழங்கால சீனர்களும், மின்மினியை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வெளிச்சம் தர பயன்படுத்தினர்.

Pin It

மேற்கு மலைத் தொடர்ச்சியின் ஒரு பகுதியான ஆனைமலைத் தொடரில், அடர்ந்த மழைக் காடுகள் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த மானாம்பள்ளி என்ற கானகப் பகுதிக்கு இயற்கை அன்பர்கள் குழு, இரு நாட்கள் பயணமாக காட்டுயிர் ஆசிரியர் திரு முகமது அலி அவர்களின் தலைமையில், இயற்கை வரலாறு அறகட்டளையின் தலைவர் டாக்டர் வசந்த் ஆல்வா அவர்களின் ஏற்பாட்டின் பேரில், பௌர்ணமி நிலவு கானக கூட்டத்திற்காக, காலை நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டோம்.

சுற்று சுழல் பற்றி மக்களிடம் உள்ள விழிப்புணர்வு,சுழல்மாசுபடுவதில் உள்ள பண்பாட்டு சீரழிவு,சுழல்பாதிக்கபடுவதில் பணக்கார மற்றும் நடுத்தர வர்க்க மக்களை விட ஏழைகளால் பாதிப்பு குறைவு பற்றியும்,அவை சார்ந்த அனுபவங்களை, ஆழமான பார்வையில் - தமிழ்நாட்டில் சமூகம் சார்ந்த காட்டுயிர் ஆய்வில் முதன்மையானவரும்,காட்டுயிர் இதழ் ஆசிரிருமான திரு முகமது அலி அவர்களின் அறிவு சார்ந்த பேச்சின் ஊடே பயணம் களை கட்டியது.

இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட வால்பாறை சரகத்தை நோக்கி நகர்ந்த பொழுது, வால்பாறை மலைக்காடுகளால் சூழப்பட்ட பகுதி அல்ல -தேயிலை தோட்டங்களால் சூழப்பட்ட, மழைக்காடுகள் அமைந்த பகுதியாகதான் எங்கள் கண்களில்பட்டது. ஏனென்றால் "எங்கெங்கு காணினும் தேயிலை தோட்டங்களே" இருந்தன. "யானைகள் அட்டகாசம்", "யானைகள் ஊருக்குள் புகுந்தன", போன்ற செய்திகள் எவ்வளவு அறியாமைமிக்கது என்பதை இந்த தேயிலை தோட்டங்ககளை பார்க்கும் பொழுது எங்களால் உணர முடிந்தது.காடுகள் சிறுத்தும், தோட்டங்கள் பெருத்தும், இருப்பதால் வன விலங்குகள் குறைந்தும், அழிந்தும், தப்பி பிழைத்த உயிர் இனங்கள் குறிப்பாக யானைகள் உணவிற்காகவும், குடிநீருக்காகவும் எங்கு செல்லும்? அவை சார்ந்த பிரச்சனைகளை அசை போட்டபடி எங்கள் பயணம் தொடர்ந்தது.

பல அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகளை தன்னகத்தே கொண்ட இப்பகுதில் சில வகை மரங்களையும் பறவை இனங்களையும் கண்டு களித்துடன் அதன் சிறப்புகளை பற்றி ஆசிரியரிடம் கேட்டோம். குறிப்பாக தாகை செடிகள் (fern) எனப்படும் பெரணிகள் டைனோசர் காலத்தில் இருந்து இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பதை ஒரு உயரமான கோங்கு மரத்தின் அடியில் நின்று கொண்டு உரை ஆற்றியது எங்களது அறிவுக்கு பரவசத்தை ஊட்டியது. மேலும் பெரணிகளை(fern) ஆனைமலை காடுகளில் இருந்துதான் நீலகிரி காடுகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது பற்றி ஆசிரியர் கூறிய விதம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

மானாம்பள்ளி ஆற்றங்கரையோர கானக விடுதிக்கு,அந்தி சாயும் நேரத்தில் வந்து சேர்ந்தோம். பறவைகளின் ஒலிகளும், கானகத்து பூச்சிகளின் ஒலிகளும் மனதை இரம்மியமாக்கியது. ஆற்றங்கரையின் மேல் பகுதியில் வட்டமிட்டு அமர்ந்து காட்டுயிர் அன்பர்களின் அறிமுக கூட்டம் ஆரம்பித்தது. இயற்கை பாதுகாப்பு, இயற்கையை அறிந்து கொள்ளுதல், மட்டுமின்றி இயற்கையை இரசிக்கவும் கற்று கொள்ள வேண்டும் எனத் தொடங்கி இயற்கை வரலாற்று அறகட்டளையின் எதிர்கால திட்டங்கள்,அதற்கான அன்பர்களின் பங்களிப்பு, அவரவர் வாழ்வியலில் நடைமுறை பழக்க வழக்கங்கள், காட்டிற்குள் செல்லும் போது பின்பற்ற வேண்டிய அம்சம்கள் பற்றி விரிவாக பேசப்பட்டது.

இரவு சூழ்ந்தது, நிலவு வெளிச்சம் இரவை பனி படர்ந்த பகலாக மாற்றியது. நிலவொளியில் எங்களது அறிவு பயணம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கானகத்து ஒலிகளில், 'சிள்' வண்டுகளின் சத்தம் திடீரென்று நின்றது, அனைவரும் அமைதியானோம். எங்கோ ஓரிடத்தில் மந்தியின் குரல் எச்சரிக்கை ஒலி எழுப்பியது. ஆற்றில் நீரின் சலசலப்பு கேட்டது. அனைவரும் காதுகளை கூர்மையாக்கினோம். ஆற்றங்கரை யின் எதிர் திசையில் இருந்து கடா மானின் சத்தம், அக்கானகத்தின் குறிப்பிட்ட தூரம் வரை எதிரொலித்தது, சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தது. நாங்கள் பரவசம் அடைந்தோம்.அனைவரும் ஆசிரியரின் முகத்தை நோக்கினோம். "நன்றாக கவனியுங்கள்" என்று கூறி ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி காட்டினார்.

மரம் அறுப்பதைப் போன்ற ஒரு விதச் சத்தம் சில நிமிடங்கள் நீடித்தது. 'சிறுத்தை' என மெல்லிய குரலில் ஆசிரியர் கூறியதும், அனைவரது உடலிலும் மின்சாரம் பாய்வது போல பரவசமும், பயம் கலந்த மகிழ்சியும் உண்டாயிற்று.

சிறுத்தை தன் உணவு வேட்டைக்காக கடாமானை(Sambar(deer)குறி வைத்து நகர்ந்து செல்லும் இந்நிகழ்ச்சி- எங்களது அருகில் நடக்கும் இச் சம்பவம் சில மணித்துளிகள் நீடித்தது. அற்புதமான இச்சம்பவம் எங்களது கானக பயணத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. வெகு நேரம் கழித்து இம்மகிழ்ச்சிலே உறங்கபோனோம்.

அதிகாலை ஆற்றங்கரையில் சிறுத்தையின் காலடி தடத்தைப்பார்த்து மகிழ்ந்து,இரசித்து,அதே இடத்தில இயற்கை கேள்வி-பதில் நிகழ்ச்சியை காட்டுயிர்ஆசிரியர் நடத்தினார்.

பூனை குடும்பத்தில் புலியை விட சிறுத்தை வலிமை குறைந்தது என்றாலும் தன் இரையை வேட்டையாடும் போது நெடும் பாய்ச்சல் பாயும் ஆற்றல் பெற்றது. சிறுத்தை எளிதில் மரம் ஏறக்கூடியது. அழகிய செம்பழுப்பு மஞ்சள் உடலில் கருப்பு புள்ளிகளுடன் கலந்து கவர்ச்சியுடன் காணப்படும் சிறுத்தை, மனிதர்களுடான மோதலில் சிக்கி இன்றைக்கு பல இடங்களில் கூண்டு வைத்து பிடிக்கப்படும் விலங்குகளில் சிறுத்தை முதலிடம் வைக்கிறது.சிறுத்தைகள் வாழும் இடங்களில் மனிதர்கள் ஆக்ரமிப்பு செய்ததும்,காடுகளை அழித்து தோட்டங்களை உருவாக்கியதும்,அங்கு கால்நடைகளை வளர்ப்பதும் தான்,மனிதர்களுக்கும்,சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட மூல காரணம்.மனிதர்களுடன் மோதிய உயிரினங்கள் வெற்றி அடைந்ததாக வரலாறு இல்லை.இனி எதிர்காலத்தில்(விரைவில்)சிறுத்தைகள் அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடிக்கும் என நம்பபடுகிறது. இந்நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும் என காட்டுயிர் ஆசிரியரிடம் கேட்டோம். நம் மக்கள் அனைவரும் இயற்கையை அறிவியல் ரீதியாக அறிந்து கொண்டு, உயிர் இலக்கணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வருத்தத்துடன் சொல்லி முடித்தார். மக்கள் அறிந்து,புரிந்து கொள்ளும் காலத்தை அளந்து பார்த்தால்- சிறுத்தை என்ற சொல் இருக்கும் சிறுத்தை இருக்காது.

பயணம் முடிந்தது, கானகத்தை விட்டு வெளியேறி, நாங்கள் வால்பாறை சரகத்தை விட்டு கடக்கும் பொழுது, மனம் தளர்ந்து, ஒரு விதச் சோகத்துடனே பொள்ளாச்சி திரும்பினோம். இனி எதிர் காலத்தில் இதுப் போன்ற மிச்சம் மீதி இருக்கின்ற கானக செல்வங்களையும் காப்பாற்ற முடியுமா? பாதுகாக்க முடியுமா? அடுத்த தலைமுறை இதை அனுபவிக்க முடியுமா? அல்லது நாம் தான் அடுத்த முறையும் இதை காண முடியுமா? என்ற ஏக்கத்துடன் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கையசைத்து கலைந்து போனோம்!!!

அ.மு.அம்சா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It