பொதுவாக நாம் எலிகளை தொல்லை தரும் விலங்குகளாகவே கருதுகிறோம். ஆனால் கம்போடியாவில் சேவை செய்த மகாவா (Magawa) என்ற எலி பல விதங்களில் மனிதனைக் காட்டிலும் மகத்தான உயிரினம் என்று போற்றப்படுகிறது. தன்னை விட எத்தனையோ மடங்கு பெரிய உருவமுடைய ஆயிரக்கணக்கான மனிதர்களின் உயிர்களைக் காப்பதில் வெற்றி கண்ட மகாவா, தனது எட்டாம் வயதில் சேவையில் இருந்து ஓய்வு பெற்று 6 மாதங்களுக்குப் பிறகு 2022 ஜனவரி 8 அன்று கடைசியில் மரணத்திடம் தோல்வியடைந்தது.

யார் இந்த மகாவா?

ஐந்தாண்டுகள் வரை ராணுவ சேவை செய்த மகாவா தன் பணிக்காலத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்ய உதவியது. சில நாட்களாக இதன் உடல்நிலை மோசமடைந்தது. இறக்கும்போது இதன் வயது எட்டு. 1.2 கிலோ எடையும், 70 செமீ நீளமும் உடைய மகாவா, giant pouched rat வகையைச் சேர்ந்தது.

இதன் தாயகம் டான்சானியா. பெல்ஜியத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அப்போப்போ (APOAPO) தன்னார்வத் தொண்டு நிறுவனம் மகாவாவிற்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கத் தொடங்கியது. ஓராண்டு நீண்ட கடினமான பயிற்சிக்குப் பிறகு மகாவா ராணுவத்துடன் சேர்ந்து தன் சேவையை கம்போடியாவில் தொடங்கியது.magawaகண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதில் ஹீரோ

“கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதில் மகாவா கதாநாயகனாகவே பணிக்காலம் முழுவதும் இருந்தது. பார்வைக்கு அருவருப்புடன் தோன்றும் இந்த சின்னஞ்சிறிய உயிரினம் கம்போடியாவில் ஆயிரமாயிரம் மனிதர்களை இன்று உயிருடன் வாழ வைத்துள்ளது. அவர்கள் இன்று வேலை பார்க்கின்றனர், விளையாடுகின்றனர். உயிர் பறிபோய்விடுமோ அல்லது கை கால் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் இல்லாமல் வாழ்வதற்கு முக்கிய காரணம் மகாவாவே என்று அப்போப்போ மகாவாவின் மரணத்திற்குப் பின் வெளியிட்ட அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கம்போடியா என்னும் யுத்தபூமி

1998ல் முடிவிற்கு வந்த, முப்பதாண்டுகள் நீண்ட உள்நாட்டுப் போரில் இலட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். உலகில் மிக அதிக எண்ணிக்கையில் கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்று கம்போடியா. 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் இன்னமும் வெடிக்காமல் இருக்கின்றன.

இதுவரை வெடித்துச் சிதறியவற்றால் 4000 பேர் உடல் உறுப்புகளை இழந்தனர். வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பல நிபுணர்கள், விவசாயிகள், குழந்தைகள் உட்பட பலர் கண்ணிவெடியில் சிக்கி பரிதாபமாக மரணம் அடைந்தனர். ஆனால் இந்நிலை மகாவா கம்போடியாவிற்கு வந்தபின் மாறியது.

மகாவா 225,000 சதுரமீட்டர் நிலப்பரப்பில் இருந்த கண்ணிவெடிகளை அகற்ற உதவியது. இது 42 கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பிற்குச் சமம். ஒரு மனிதன் சாதாரணமாக நான்கு நாட்களில் கண்டுபிடிக்கும் கண்ணிவெடிகளை 20 நிமிடங்களில் கண்டுபிடித்து விடும். எடை குறைவு என்பதால் வெடிபொருட்கள் நிறைந்த பகுதியின் வழியே இவற்றால் வேகமாக ஓடியாடி இடம்பெயர முடியும்.

தங்கப் பதக்கம் வென்ற உலகின் முதல் எலி

2020ல் பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பி டி எஸ் ஏ (PDSA People Dispensary for Sick Animals) என்ற தன்னார்வ விலங்குநல தொண்டு நிறுவனம் மகாவாவின் சாகசம் நிறைந்த வீரச்செயலுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தது. இந்நிறுவனத்தின் 78 ஆண்டுகால வரலாற்றில் ஒரு எலி தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. மகாவா இதன் மூலம் இந்த விருதைப் பெறும் பெருமைமிக்க மோப்ப நாய்கள், பூனைகள் மற்றும் ஒரு புறாவுடன் சேர்ந்துள்ளது.

தனது அபார மோப்பசக்தியால் கண்ணிவெடியைக் கண்டுபிடித்தவுடன் மண்ணில் அந்த இடத்தை தன் கால்களால் பிராய்ந்து குண்டு செயலிழக்கச் செய்பவர்களுக்கு அடையாளம் காட்டும். ஒரு டென்னிஸ் மைதானம் அளவுள்ள நிலத்தை 30 நிமிடங்களுக்குள் ஆராய்ந்து முடித்துவிடும். மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தி கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க மனிதனுக்கு நான்கு நாட்களாகும்.

உலக வரலாற்றில் ஒரு எலி மனித உயிர்களைக் காக்கும் பணியை வெற்றிகரமாக செய்து ஓய்வு வழங்கப்பட்டு வாழ்ந்து சென்றது இதுவே முதல்முறை. எறும்பு முதல் எலி வரை எல்லா உயிரினங்களையும் இயற்கை மனிதனுக்கு சுலபமாக புலப்படாத அர்த்தத்துடன்தான் படைத்துள்ளது என்பதற்கு மகாவாவின் வாழ்வே சிறந்த எடுத்துக்காட்டு.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It