கண்ணிமைக்காமல் பூமியைத் தொடாமல் பல்லாயிரக் கணக்கான மைல்கள் பயணம் செய்யும் பறவைகளின் ரகசியங்கள் மனிதரால் இன்னும் அறியப்படாத மர்மமாகவே உள்ளது. பறவைகளைப் பற்றி படிக்க, அவை பற்றிய செய்திகளைச் சொல்ல இன்று உலகம் முழுவதும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவற்றின் வலசை பற்றி அறிய மனிதன் கண்டுபிடிக்கும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் இன்னும் பலன் தரவில்லை.

வழி தப்பிப் பறப்பதில்லை

மனிதர்களுக்கு வழி தப்பிப் போகலாம். முன்பின் தெரியாத காட்டிலோ, மேட்டிலோ சென்று அகப்பட்டுக் கொண்டால் மனிதன் திகைத்து நிற்கிறான். ஆனால் வலசை செல்லும் பறவைகளுக்குப் பொதுவாக வழி மாறுவதில்லை. ஒரு சில கிராம் மட்டுமே எடையுடைய சைனீஸ் மைனா (White sholded starling) கிழக்கு சீனாவில் இருந்து முன்பின் தெரியாத கேரளாவின் வெள்ளாயினிக் காயலிற்குத் துல்லியமாக வந்து போவது இன்றும் ஒரு அதிசயமே!

ரகசியம் எங்கே ஒளிந்திருக்கிறது?

இவற்றின் பறத்தல் ரகசியம் எங்கே ஒளிந்திருக்கிறது? இவற்றின் பயணத் தொலைவிற்கான கணக்கு என்ன? கூட்டல் கழித்தல்கள் எங்கிருக்கிறது? ரஷ்ய விஞ்ஞானிகள் முட்டையை செயற்கை முறையில் பொரித்து குஞ்சுகளை வளர்த்தனர். பெரிதானபோது அவற்றைப் பறக்க விட்டனர். அப்போதும் அவை ரஷ்யாவில் இருந்து பங்களாதேஷுக்குப் போய் துல்லியமாகத் திரும்பி புறப்பட்ட இடத்திற்கே வந்தன!.

காலநிலை மாற்றத்தின் கெடுதிகளில் இருந்து பூமியைக் காக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பறவைகளின் வலசை பற்றி ஆராய புதிய தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

பறவைகள் செல்லும் பாதையைக் கண்காணிக்க உதவும் டாப்ளர் ரேடார் தொழில்நுட்ப தளங்களின் நெஸ்ட்ராக் (Nestrack) இவற்றில் முக்கியமானது. செயற்கைக்கோள் டெலிமெட்ரி ஆய்வுகளும் நடந்து வருகின்றன.birds 700வளையம் இடாமல் வலசைப் பறவைகளைக் கண்காணிக்கும் வசதி

ஃப்பேர்ட் ஃப்ளோ (birdflow) என்ற பெயரில் ஒவ்வொரு வலசைப் பறவையின் அசைவுகள், இருக்குமிடங்கள் பற்றி துல்லியமாகக் கணித்துக் கூறும் ஒரு மாதிரி மென்பொருளை மாசிசூசெட்ஸ் ஆர்ம்ஹெஸ்ட் (Armhest) பல்கலைக்கழக கணினிப் பிரிவு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இயந்திரக் கற்றல் தொழில்நுட்பமே (Machine learning) இதன் அடிப்படை.

இ ஃபேர்ட் மற்றும் செயற்கைக்கோள் வழியறியும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருந்து வாரம்தோறும் கிடைக்கும் தரவுகள் இந்த மென்பொருள் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. இதனால் பறவைகளைப் பிடிக்க வேண்டியதில்லை. அவற்றின் கால்களில் வளையங்களைப் பொருத்த வேண்டியதில்லை.

பயணங்கள் ஆபத்தானவை

பறவைகளில் 20% வலசை செல்கின்றன. குளிர் அதிகமுள்ள நாடுகளில் இருந்து குளிர் குறைவாக இருக்கும் நாடுகளை இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை வலசை செல்கின்றன. இப்பயணங்கள் ஆபத்து நிறைந்தவை. தளர்வடையச் செய்பவை. சுகமாகத் தூங்க முடியாது. என்றாலும் பறப்பதற்கு நடுவில் ஒரு சில விநாடிகள் இவை கண்களை மூடிக் கொள்கின்றன.

வழியில் காலநிலைப் பேரிடர்களில் உயிர் பறி போகலாம். போய்ச் சேரும் நாடு பாதுகாப்பானது என்று எந்த நிச்சயமும் இல்லை. வலசை செல்லும் இடத்தில் புற்காடுகள் எரிந்து போயிருக்கலாம். நதிகளில் நீர் வற்றிப் போயிருக்கலாம். மனித வடிவிலும் மற்ற வடிவங்களிலும் வேட்டைக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கலாம்.

அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு

அமெரிக்காவில் அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியா டாஸ்மேனியாவிற்கு 13,560 கிலோமீட்டர் தூரம் பறந்த பார் டைய்ல்டு காட்விட் (bar tailed Godwit) பறவையே இதுவரை உலகில் நீண்ட தூரம் பறந்த பறவை என்ற சாதனையைப் புரிந்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. செயற்கைக்கோள் கருவி (tag) பொருத்தப்பட்டு பறந்த இச்சிறிய பறவை ஒரு இடத்திலும் இறங்காமல் 2022 அக்டோபர் 13 அன்று பயணம் தொடங்கி 11 நாட்கள் ஒரு மணி நேரம் பறந்து இலக்கை அடைந்தது.

உடல் எடை ஒரு பிரச்சனை இல்லை

பெரும் நிலப்பரப்புகளைத் தாண்டும் பறவைகளுக்கு அவற்றின் உடல் எடை ஒரு பிரச்சனையில்லை. மூன்று நான்கு கிராம்கள் மட்டுமே எடையுடைய ரூபி தொண்டை ஹம்மிங் பறவை (ruby throated humming bird) எங்கும் இடைநிற்காமல் 600 மைல் நான்ஸ்டாப்பாக வலசை செல்கிறது! அமெரிக்கக் கரையில் இருந்து மெக்சிகன் கடலின் குறுக்கே மெக்சிகோவில் யுகாதான் வளைகுடாவை நோக்கி இந்தப் பயணம் நடக்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

வலசைப் பறவைகள் எல்லைகள் இல்லாத உலகக் குடிமக்கள். Global citizans! இவர்களுக்கு எந்த நாட்டின் பாஸ்போர்ட்டும் தேவையில்லை! 30 நாடுகளில் இருந்து சைபீரியன் நாரை, பெரும் பூநாரை (Greater Flemingo), மற்ற சைபீரியன் பறவைகள் உட்பட 320 இனங்களைச் சேர்ந்த பறவைகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவிற்கு வலசை வருகின்றன. தென்னிந்தியாவிற்கு யுரேசியன் ரோலர், அமுர் பால்கன் உள்ளிட்ட 150 வகையான வலசைப் பறவைகள் வருகின்றன.

ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு

ஐரோப்பாவில் இருந்து பறவைகள் பொதுவாக இந்தியாவிற்கு வருவதில்லை என்று பறவையியலாளர் மற்றும் பாதுகாவலர் சுஜன் சாட்டர்ஜி கூறுகிறார். ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு குறைவான பறவைகளே வலசை வருகின்றன. பறவைகள் எப்போதும் சுலபமான வழியையே தேர்ந்தெடுக்கின்றன. வலசை செல்ல இந்தியாவை விட அவற்றிற்கு அருகில் இருக்கும் ஆப்பிரிக்காவிற்குச் செல்வதே சுலபம்.

ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு வர வேண்டுமென்றால் அவை ஆறு மலைத்தொடர்களைக் கடக்க வேண்டும். மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் பறவைகள் ராக் ஆஃப் ஜிப்ரால்டரைக் கடந்து ஆப்பிரிக்காவிற்கு செல்கின்றன. இந்தியாவிற்கு வரும் பெரும்பாலான வலசைப் பறவைகள் ரஷ்யா, சைபீரியா, சீனா, மங்கோலியா, கஜக்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தே வருகின்றன.

யுரேசியன், மத்திய ஆசிய நாடுகளில் நீர் நிலைகள் குளிர்ந்து உறைந்து போகும்போது நார்த்தேர்ன் பின் டயில் கட்வால், கார்கனி போன்றவை கல்கத்தாவிற்கு வருகின்றன. ஐரோப்பாவில் வசந்தம் ஆரம்பிக்கும்போது இவை இமயமலையைக் கடந்து தாயகம் செல்கின்றன.

வான் பாதைகள்

காடுகளில் யானைகளுக்கு தனிப்பாதைகள் இருப்பது போல இவற்றிற்கும் வானில் தனிப்பாதைகள் (bird flyways) இருக்கின்றன! இப்பாதைகளின் வழியாக இவை கூட்டமாக வலசை வருகின்றன. ஒரு வான் பாதையில் ஒரு மணி நேரத்தில் 9,000 பறவைகள் வரை பயணம் செய்கின்றன என்று ரேடாரில் பதிவாகியுள்ளது.

எப்போது எங்கே செல்ல வேண்டும் என்பது பற்றி இவை எவ்வாறு புரிந்து கொள்கின்றன? பயணத்திற்காக அவை தனியாகத் தங்களைத் தயார் செய்து கொள்கின்றனவா?

பறவைகளில் உயிர்க்கடிகாரம் (biological clock) உள்ளது. வலசைக்கான நேரம் நெருங்கும்போது கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பறவைகள் கூட வலசை செல்ல முடியாததால் அதிருப்தி அடைகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட தூரப் பயணத்திற்கு சற்று முன்னால் இவற்றின் உடலில் சில உடல்ரீதியான முன்னேற்பாடுகள் நிகழ்கின்றன. அப்போது இவை உடலில் இருக்கும் கொழுப்பை தற்காலிகமாக அதிகமாகச் செலவிடுவது இல்லை. சில உள் உறுப்புகளில் அந்த சமயத்தில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. பறக்கப் பயன்படும் திசுக்கள், இதயம் ஆகியவற்றின் அளவு பெரிதாகிறது. ஈரல், வயிறு மற்றும் இரைப்பை ஆகியவை சுருங்குகின்றன.

பயணத்திற்கு நடுவில் வழியில் தங்க இடம் இருந்தால் இந்த உறுப்புகள் பழைய நிலையை அடைகின்றன. உடல் இரு நிலைகளுக்கும் இடையில் பயனுள்ள விதத்தில் மாறிக் கொண்டிருக்கும். சமீபத்தில் யுரேசியாவில் இருந்து யுரேசியன் சிப்பி ஈ பிடிப்பான் (Yurasian oister fly catcher) என்ற பறவை மேற்கு வங்காளத்தில் சுந்தர்பன் காடுகளில் கண்டறியப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிசய விருந்தாளி

கல்கத்தாவிற்கு அருகில் ஹூக்ளியில் வடக்கு ஐரோப்பா, ரஷ்யா, சைபீரியா, மங்கோலியாவில் புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் பருந்து இனத்தைச் சேர்ந்த ஹென்ஹாரியர் பறவை வலசை வந்தது. இதுவரை இப்பகுதிக்கு வராத இவை, இப்போது எவ்வாறு இங்கு வந்து சேர்ந்தன என்பது இன்னமும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

இருக்கும் இடத்தை எவ்வாறு அறிவது?

பறப்பதற்கு நடுவில் எங்கே வந்து சேர்ந்திருக்கிறோம் என்று இவை எவ்வாறு தெரிந்து கொள்கின்றன? போய்ச் சேரும் இடம் வசதியாக இல்லையென்றால் அருகில் இருக்கும் அதைவிட நல்ல இடத்திற்கு வலசை செல்கின்றன. குறிக்கோளை அடைய, செல்லும் இடத்தைப் புரிந்து கொள்ள, வழி மாறிப் போனால் சரியான வழியைக் கண்டுபிடிக்க பறவைகளுக்கு இருக்கும் திறன், வடக்கு அமெரிக்காவில் வாழும் ஒயிட் க்ரவுண்ட் ஸ்பேரோ (White crowned sparrow) என்ற பறவையைக் கண்காணித்து கண்டறியப்பட்டது.

காந்த சக்தி கண்கள்

காலநிலை மாற்றங்கள் பறவைகளை வழி மாற்றிவிடலாம். ஆனால் நல்ல காலநிலையிலும் சில சமயங்களில் இவை நிலையான பாதையைத் தவற விடுகின்றன. இது வாக்ரான்சி என்று அழைக்கப்படுகிறது. இவை தங்கள் கண்களில் இருக்கும் காந்த ஏற்பிகளை (magnetto receptors) பயன்படுத்தி பூமியில் காந்த மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை அறிய முடியும்.

புவி காந்த மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் பறவைகளை வழி தவறிப் போகச் செய்யலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வுகள் கூறுகின்றன. முன்பே பழக்கமான பிரதேசங்களில் புவியியல் அறிவு, பழக்கம் இல்லாத பகுதிகளில் புவி காந்தவியல் (geo magnetism) அறிவைப் பயன்படுத்தி இவை பயணம் செய்கின்றன.

புவி காந்த மண்டலம், கடற்கரை போன்ற முக்கிய அடையாளங்கள், சூரியனின் இடம், இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் இருக்கும் இடம், போன்றவற்றைச் சார்ந்தே இவை வலசை செல்கின்றன. ஒலி, அழுத்தம், துருவ விடியல், வாசனை என்று இன்னும் பல கருப்பொருட்களை நம்பியே இவை பயணிக்கின்றன என்றாலும், இது பற்றி இன்னும் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். அப்போது வலசைப் பயணங்களின் இரகசியங்கள் மேலும் வெளிப்படும்.

** **

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/all-you-need-to-know-about-migratory-pattern-in-birds-1.8301049

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It