கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், முன்னால் இஸ்ரோ விஞ்ஞானியும், மத்திய திட்டக் குழு உறுப்பினருமான திரு கஸ்தூரிரங்கன் தலைமையிலான, மேற்கு தொடர்ச்சி மலை தொடர்பான உயர்மட்ட பணிக்குழுவின் பரிந்துரைகளை கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தவுடன், கேராளாவில் எதிர்க்கட்சியான சி.பி.எம் பந்துக்கு அழைப்பு விடுத்தது.

இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் மலைப்பகுதியினை ஒட்டிய மக்களிடம் தாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவோம் என்ற அச்சம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக கேரளா அரசு மூன்று நிபுணர்களை நியமித்து அவர்கள் நவம்பர் 26 முதல் டிசம்பர் 5 வரை கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்குச் சென்று கருத்து கேட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்றும், அதன் அடிப்படையில் கேரள அரசு மத்திய அரசிடம் தனது நிலையினைத் தெரிவிக்கும் என்றும் கேரளா முதல்வர் உம்மன்சான்டி கூறினார்.

தமிழகத்தில் இப் பிரச்சனை பொதுத் தளத்தில் விவாதப்பொருளாக மாறாத நிலையில், தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி பகுதிகள் இவ் அறிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படும் நிலையிலும் தமிழக அரசு வெளிப்படையாக இந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான நிபுணர் குழு குறித்து ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எந்த நிலைபாடும் இதுவரை எடுக்கவில்லை.

குஜராத்தின் தென் பகுதியில் தப்தி நதிக்கரையில் துவங்கி மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் குமரி மாவட்டம் வரை 129037 சதுர கிலோமீட்டர் நீண்ட பரப்பு கொண்டதாக மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது. ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் உலகின் பள்ளுயிர்ப் பெருக்கம் உள்ள 34 பாரம்பரிய மிக்க இடங்களில் (Bio diversity hot spot) மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று என அறிவித்துள்ளது. சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கோண்டுவனா எனற பெருங்கண்டத்திலிருந்து இன்றைய மடகாஸ்கர் பகுதியிலிருந்து உடைந்து வந்த பகுதியாக சில ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படும் இம் மலைத்தொடர் தன்னகத்தே தேசிய பூங்காக்கள் மகாராஷ்டிராவில் 4, கர்நாடகாவில் 10, கேரளாவில் 20, தமிழகத்தில் 5 என மொத்தம் இம் மலைத்தொடர்ச்சி 39 வகையான கானுயிர் காப்பகங்களைக் கொண்டுள்ளது. இம் மலைத்தொடர்ச்சி தனக்கே உரிய சுமார் 5000க்கும் மேற்பட்ட அபூர்வ தாவரங்கள், 134 வகையான பலூட்டிகள், 508 வகையான பறவை இனங்கள், 325 வகையான அரிய உயிரினங்கள் வாழும் பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவின் ஜீவாதாரமாக விளங்கும் கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, குந்தி போன்ற நதிகளின் பிறப்பிடமாகவும் இது உள்ளது.

அறிஞர் மாதவ் காட்கில் குறிபிட்டது போன்று அகஸ்திய மலையினைத் தலையாகவும், நீலகிரியினையும், ஆனைமலையினையும் மார்புகளாகவும், கனரா முதல் கோவா வரை நீண்ட உதடுகளையும் வடக்கு சகயதிரியினை கால்களாகவும் கொண்ட பெண் அவள். ஒரு காலத்தில் பளபளக்கும் பச்சை உடையுடன் செழுத்திருந்த அவள் உடைகள் சுயநல சக்திகளால் கிழித்தெறியப்பட்டு அவமரியாதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணாக இன்று காட்சி தருகின்றாள்.

கோவா மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டும் தொழிலில் சுமார் ரூபாய் 6,500 கோடி மதிப்புள்ள வளத்தினைத் திருடியுள்ளதாக அரசு கூறிய போதிலும் இது குறித்து ஆய்வு செய்த ஷா கமிசன் இந்த திருட்டு ரூபாய் 35,000 கோடி என மதிப்பிட்டது. மகாராஷ்ட்ராவின் ரத்தனகிரி மாவட்டத்தில் லோட்-பரசுராம் தொழிற் பேட்டையின் ரசாயன தொழிற்சாலைக் கழிவினால் போஜ்ரா அணை நீர் செந்நிறமாகிப்போனது. கேத் நகரின் குடிநீர் ஆதாரமான அது, இன்று குடிக்க அருக‌தையற்றதாக மாறியுள்ளது. சுமார் 20,000 மீனவர்கள் தங்களின் வாழ்வாதரத்தை இழந்தார்கள். கேராளாவின் பாலக்காட்டில் பிளாச்சிமடாவில் கோக கோலா கம்பெனியால் உண்டான நிலத்தடி நீர் பாதிப்புக்கு எதிராக அந்தப் பஞ்சாயத்து, ஆலை மூட முடிவு செய்த தீர்மான‌த்தை எதிர்த்து கம்பெனி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பஞ்சாயத்துக்கு அந்த அதிகாரம் உள்ளது உறுதி செய்யப்பட்டது.

இந்தப் பின்னணியில் மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவியல் அறிஞர் மாதவ் காட்கில் தலைமையில் 13 நபர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இக் குழு மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டி பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு, 2011 ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையினை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் சமர்பித்தது. ஆனால் மத்திய அமைச்சரகம் அந்த அறிக்கையினை வெளியிடவில்லை. இதன் தொடர்ச்சியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அறிக்கையானது மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியானது.

மாதவ் காட்கில் தலைமையிலான மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியினை மூன்று சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகப் பிரிப்பது என்றும் இதில் இப் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அல்லது மலை வசிப்பிடங்கள் எதையும் புதிதாக உருவாக்கக்கூடாது, மலை கிராம மக்களின் குடியிருப்புகளுக்கு நிலம் வழங்குவது தவிர புதிதாக விவசாயம் சாராத செயல்பாடுகளுக்காக நிலங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது, மலைப்பகுதியில் பாரம்பரியமான இயற்கை விவசாயத்தை நிறுவுவது, பூச்சி மருந்து அல்லது மரபினி மாற்றுப் பயிர்களுக்கும், மலைப்பகுதிக்கு தொடர்பற்ற குரோட்டன்ஸ் வகை செடிகளுக்குத் தடை விதிப்பது, யூக்கலிப்டஸ் மரங்களைத் தடுப்பது, சூழல் முக்கியத்துவப் பகுதி 1ல் பூச்சி மருந்து, இரசாயன உரப் பயன்பாட்டை 5 ஆண்டுகளுக்குள் முற்றிலும் தடுப்பது, சூழல் முக்கியத்துவ பகுதி 2ல் அந்த தடையினை 8 ஆண்டுகளுக்குள்ளும், 3 வது பகுதியில் 10 ஆண்டுக்குள்ளும் நடைமுறைப்படுத்துவது, வன உரிமைச்சட்டம் 2006ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவது, மக்களுக்கு அதன் படி நில உரிமை வழங்க முயற்சிப்பது,

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள வனக்கூட்டு நிர்வாக முறைக்கு பதிலாக வன உரிமைச்சட்டம் படி வளங்களை நிர்வகிப்பது, சிறு நில உரிமையாளர்கள் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக சூழல் சேவைத் தொகை வழங்குவது, குறிப்பாக சூழல் முக்கியத்துவப்பகுதி 1 ல் உள்ள சுரங்கங்களை 2016க்குள் கை விடுவது, சட்டவிரோத சுரங்கங்களை உடனே தடுப்பது, இரண்டாம் பகுதியில் உள்ள சுரங்கங்களை தீவிரமாக கண்காணிப்பது, புதிய சுரங்கங்களுக்கு அனுமதி மறுப்பது, பகுதி 3ல் தீவிரமான ஆய்வுக்குப் பின் சுரங்க அனுமதி தருவது, ஆனால் மக்கள் இத் திட்டங்களை ஆய்வு செய்ய அனுமதிப்பது, பகுதி 1 மற்றும் 2ல் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கும் புதிய சிவப்பு மற்றும் ஆரஞ்சு வகை தொழிற்கூடங்களுக்கு அனுமதி மறுப்பது, மூன்றாம் பகுதியில் தொழிற்சாலைகளை தீவிர கண்காணிப்புக்குப் பின் அனுமதிப்பது, அதே சமயம் சூழலுக்கு ஏற்ற பச்சை மற்றும் நீலத் தொழிற்சாலைகளை அனுமதிப்பது,

பகுதி 1 மற்றும் 2ல் புதிய பெரிய அணைக்கட்டுகளைத் தடை செய்வது, இருக்கும் பழைய காலாவதியான அணைகளைக் கைவிடுவது, புதிய நீர் மின்சார நிலையங்களை தவிர்ப்பது, சிறிய மின் நிலையங்களை ஆதரிப்பது, பகுதி 1ல் புதிய சாலைகள் ,இரயில் பாதைகளுக்குத் தடை விதிப்பது, தீவிர ஆய்வுக்குப் பின் பகுதி 2ல் இவற்றை அனுமதிப்பது, அத்தியாவசிய சாலைகளை பகுதி 3ல் அனுமதிப்பது, அதே போன்று பகுதி 1ல் சூழல் சுற்றுலா தடை செய்வது, இதை பகுதி 2 மற்றும் 3ல் அனுமதிப்பது, கேரளாவின் சாலக்குடி நீர்வீழ்ச்சி நீர் மின் திட்டத்தையும், கர்நாடகாவின் குந்தா நீர் மின் திட்டத்துக்கும் அனுமதிக்ககூடாது என்பதுடன் மேற்குத்தொடர்ச்சி மலையை நிர்வாகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலை ஆணையம் என்ற ஒன்றை தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அமைக்க வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை மாதவ் காட்கில் குழு கூறியது.

இந்த அறிக்கையினை கேரளாவில் உள்ள எஸ்டேட் உரிமையாளர்களும், நில வியாபாரிகளும் அவர்கள் சார்ந்த அரசியல் வட்டாரங்களும் முதலில் எதிர்க்கத் துவங்கினர். இந்த எதிர்ப்பு வலுத்து மாதவ் காட்கில் அறிக்கையினை முற்றிலும் கைவிடவேண்டும் என்ற நிர்பந்தம் மத்திய அரசுக்குச் சென்றது. அதன் பின்னர் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான கஸ்தூரிரங்கன் தலைமையில் மேற்குத் தொடர்ச்சி மலை உயர்மட்ட பணிக் குழு என்ற குழுவை அமைத்து மாதவ் காட்கில் குழுவின் அறிக்கையினை மறு ஆய்வு செய்தது. அந்தக் குழு தனது ஆய்வில் மேற்குத் தொடர்ச்சி மலையின் 1,64,280 கிலோ மீட்டர் தூரத்தில் 41 சதவிகித பகுதி உடனடியாக கவனிக்கப்படவேண்டிய பகுதி என்றும், அதில் 37 சதவிகிதப் பகுதி சூழல் முக்கியப் பகுதி (Eco sensitive area)இதனை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்,

இப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் தீவிர கண்காணிப்புக்குப் பின் அனுமதிக்க வேண்டும், இப் பகுதியில் சுரங்கம், மணல் எடுப்பது, கல்குவாரிகள் ஐந்தாண்டுக்குள்ளோ அல்லது லைசன்ஸ் முடிந்ததுமோ தடைசெய்யப்பட வேண்டும், நீர் மின்சாரம் உற்பத்தி நீரோட்டத்தின் 30 சதவிகித நீரோட்டத்தை பாதிக்காத வகையில் அனுமதிக்கலாம், நதியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் அல்லது 50 சதவீத நதிப் படுகையினை பாதிக்காத வகையில் திட்டப்பணிகள் அனுமதிக்கலாம், காற்றாலைகள் துவங்க சூழல் பாதிப்பு அனுமதி வாங்கவேண்டும், சிவப்பு வகை ஆலைகள் தடை செய்யப்பட வேண்டும், திட்டங்களுக்கு அனுமதிப்பது வெளிப்படையானதாக இருக்க வேண்டும், இப் பகுதியிலிருந்து 10 கிலோமீட்டருக்குள் துவங்கும் எல்லா திட்டப் பணிகளுக்கும் சூழல் பாதிப்பு ஆய்வு அவசியம், சூழல் பகுதியில் துவங்கப்படும் எல்லா திட்டங்களுக்கும் வன உரிமைச்சட்டத்தின் படி கிராம சபையின் ஒப்புதல் அவசியமானது, இப் பகுதியில் வன விலங்கு வலசைப் பாதைகள் சம்மந்தமான திட்டங்கள் பகுதி மக்களின் ஆலோசனையுடன் நடைபெற வேண்டும், கேரளாவின் சாலக்குடி மற்றும் கர்நாடக குண்டியா நீர் மின் திட்டத்துக்குத் தீவிரமான சுற்றுச்சூழல் ஆய்வுக்குப் பின் அனுமதிக்கலாம், இப் பகுதியில் 20,000 சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமானப்பணிகளை தடை செய்ய வேண்டும்.

மேற்கண்ட கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 13 நவம்பர் 2013 ல் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது.

மாதவ்காட்கில் குழு அறிக்கையோடு ஒப்பிடும் போது கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை கடுமை குறைந்ததாகவும் பல்வேறு தரப்பினரை திருப்தி படுத்தவேண்டும் என்ற அடிப்படையிலும் வடிவமைத்த வடிவமாக உள்ளது. கிராம சபை மற்றும் மலைப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் ஆதரவோடு மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்கும் கொள்கை கொண்டதாகவும் உள்ளது. ஆனால் இந்த அறிக்கைக்கு கூட எதிர்ப்பு வரத் துவங்கிவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாப்பது வெறும் சூழல் சார்ந்த செயல்பாட்டுக்கு மாத்திரம் அல்ல, சமூகத்தில் நதிநீர் உள்ளிட்ட பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை இயற்கை பாதுகாப்பு மேற்கண்ட எல்லா சிக்கல்களையும் தீர்க்கும் செயல்பாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

அறிஞர் குழுக்கள் திரும்பத் திரும்ப வன உரிமைச்சட்டம் மற்றும் மலைப்பகுதி மக்களின் பங்களிப்பு பற்றி குறிப்பிட்டுள்ளது. நடைமுறையில் வனத்துறை தனது அதிகாரவர்க்கப் பிடியில் மலையினையும் வனத்தையும் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றது. வனவிலங்கும் மக்களும் இணைந்து வாழும் நிலைப்பாடே வனவிலங்கு சரணாலயங்கள். ஆனால் வனவிலங்குப் பாதுகாப்புக்காக மக்கள் வெளியேற்றப்பட வேண்டுமென்று அதிகார வர்க்கம் கூறும் நடைமுறையினை எதிர்கொண்ட மக்கள் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு நடவடிக்கையிலும் தாங்கள் வெளியேற்றப்படக் கூடும் என அஞ்சுவது இயற்கையே. அரசு இந்த அச்சத்தைப் போக்கி, மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்க வேண்டும்.

- ச.பாலமுருகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

உணர்வுகளின் அடிப்படையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை ஆறு வகைகளாகக் தொல்காப்பியர் வகைப்படுத்தியுள்ளார். ஓரறிவினை

“ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே” (தொல். பொருள். மரபியல், 27)

என்றும் அதற்கு உதாரணமாகப்

“புல்லும் மரனு மோரறி வினவே

பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே” (தொல். பொருள். மரபியல், 28)

என்னும் அடிகள் மூலம் புல், மரங்களை ஓரறிவு உயிர்களாக வகைப்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

இங்கே அறிவியலார் புலன்களின் அடிப்படையில் உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளதை நாம் நோக்க வேண்டும். அறிவியல் கூறும் ஐம்புலம்கள் மெய், வாய், மூக்கு, கண், காது ஆகியனவாகும். இவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் தொடுவுணர்வு கொண்ட தாவரங்களும் மரங்களும் ஓரறிவு உள்ள உயிரிகளாக முன்னரே வகைப்படுத்தப்பட்டுள்ளது வியப்புக்குரியதன்றோ!

தாவரங்களுக்கும் இசை கேட்கும் ஆற்றல் உண்டு என்று கூறுவோரும் உள்ளனர், ஒரு சில அறிவியல் ஆய்வுகளும் இதனை வலியுறுத்தியபோதிலும், இக்கருத்தினை அறிவியல் உலகம் இன்னும் ஏற்கவில்லை. இருந்தபோதிலும் அறிவியல் உலகம் தாவரங்களுக்குத் தொடுவுணர்வு உண்டு என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்குச் சான்றாகத் தொட்டாற் சிணுங்கிச் (Touch me not plant- Mimosa pudica) செடியினையும் பூச்சிகளை உண்ணும் தாவரத்தினையும் (Venus fly trap - Dionaea muscipula) கூறலாம்.

கடுகு குடும்பத்தினைச் சார்ந்த தாவரமான குதிரைப்புல்லில் (Arabidopsis thaliana) அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலமாக தாவரங்கள் மழை, காற்று முதலானவை ஏற்படுத்தும் அதிர்வுகளையும் உணர்ந்து செயல்படுகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

Pin It

thookkanangukuruvi_360பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது தூக்கணாங்குருவிக் கூடு ஒன்றுதான். நூற்றுக்கணக்காண வைக்கோல், நீளமான புல்கள், தென்னை நார்கள், ஈரக்களிமண், மாட்டுச்சாணம், மின்மினிப்பூச்சி இவைகளால் சுமார் 3 வாரங்களாக முழு மூச்சுடன் இந்த கூடுகளை தூக்கணாங்குருவிகள் நெய்கின்றன. இந்த சேமிப்பிற்காக ஆயிரம் முறைக்கு மேல் பறக்கிறது.

 செல்போன் கதிர்வீச்சு, வாகனங்களின் இரைச்சல், அளவுக்கதிகமாக செல்போன் டவர்கள், வயல்களில் பயன்படுத்தப்படும் உரங்கள் போன்றவைகளால் நாளுக்கு நாள் தூக்கணாங்குருவி இனம் அழிந்து வருகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான குருவி இனங்கள் அழிவை நோக்கி சென்று விட்டன. டோடோ என்ற குருவி இனம் அந்தமான் காடுகளில் அழிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோது அந்த ஒப்பந்தத்திற்கு டோடோ என்று பெயர் வைத்தனர். அந்தளவிற்கு குருவி இனம் புகழ்பெற்றது.

 தேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் தூக்கணாங்குருவிகள் தென்னை மரங்கள், பனை மரங்கள், கிணறுகள் என கூடுகட்டி வாழந்து வந்தன. ஆனால் சாலை விரிவாக்கத்தின்போது ஏராளமான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. அப்போது தூக்கணாங்குருவிகளும் அழிந்தன. தற்பொழுது செல்போன் கதிர்வீச்சால் தூக்கணாங்குருவி இனத்தின் முட்டைகள் கரு உற்பத்தியாகாத நிலை ஏற்பட்டு அழிவை தேடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய வாழ்நாள் உழைப்பையெல்லாம் ஒருங்கிணைத்து கட்டிய கூடுகள் கொடைக்கானல் சாலையில் விற்பனைக்கு வந்தது வேதனைக்குரியது மட்டுமல்ல, மனிதனால் ஒரு இனத்தை அழித்த வரலாற்றையும் நினைவுபடுத்துகிறது.

- வைகை அனிஷ்

Pin It

மே மாதம் இறுதியில் பௌர்ணமி தினத்து அன்று முதுமலை காட்டுப் பகுதியில் உள்ள சிறியூர் கிராமத்தில் இருந்து மாலை நேரத்தில் மசினகுடி நோக்கி காட்டுப்பாதையில், பொலிரோ ஜீப்பில் மெதுவாக வந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு திருப்பத்திலும் கவனமாக இருபுறமும் கூர்ந்து கவனித்து கொண்டு, யானை நிற்கிறதா... என்று ஆவலோடு அனைவரும் அமைதியாக கவனித்து கொண்டும், கானகத்தை இரசித்து கொண்டும், இரதம் போல் சென்று கொண்டிருந்த வண்டி ஒரு திருப்பத்தில் திரும்பும் பொழுது, மயக்கும் மாலை வேளையில், இடப்புறம் புல் மேட்டில் அறிக்குருவி ஓன்று எங்கள் கண்களில் பட்டது. நாங்கள் பார்த்த அதே வேளையில் அறிக்குருவியும் தலையை நிமிர்த்தி எங்களை பார்த்தது. வண்டியை நிறுத்தினோம். சில வினாடிகளில் தலையைத் தாழ்த்தி புல்லில் மேயத் தொடங்கியது.

 Pipits என்று பறவை இயலில் அழைக்கப்படும் அறிக்குருவிகள், பெரியது (Larger Pipits), சிறியது (Smaller Pipits), என பதிமூன்று வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் சில வகைகள் குளிர்காலத்தில் வலசைப் பறவைகளாக வந்து செல்கின்றன. பெரும்பாலும் இமயமலைப் பகுதியில் இருந்தும், வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்தும் குளிர்காலத்தில் இந்தியா முழுவதும் இடம்பெயர்ந்து பரவலாக காணப்படுகின்றன. மேற்கு மலைத் தொடர்ச்சியில், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழக்கூடிய (Endemic) அறிக்குருவி, நீலகிரி அறிக்குருவி, Nilgiri Pipit (Anthus Nilghiriensis) என்று அழைக்கப்படுகிறது. நீலகிரி அறிக்குருவி மேற்கு மலைத் தொடரில் உள்ள நீலகிரி மற்றும் பழனி மலை தொடர்களில் சுமார் 1000 மீட்டர் உயரத்தில் இருந்து  1500 மீட்டர் உயரம் வரை காணப்படுகின்றன. களக்காடு முண்டந்துறை பகுதியிலும் நீலகிரி அறிக்குருவிகள் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 அறிக்குருவிகள் வானம்பாடியைப் போல உடல்வரிகள் தோற்றமளித்தாலும் வானம்பாடி (Lark) குடும்பத்தை சேர்ந்தது அல்ல. அறிக்குருவிகள் வாலாட்டி (Wagtail) குடும்பத்தை சேர்ந்தது. தலை அமைப்பும், கால்களும் வேறுபடுத்திக் காட்டுவதை உற்று கவனித்து அறிந்துக் கொள்ள முடியும். இது சிட்டுக்குருவியை விட சற்று நீண்ட வாலும், நீண்டு மெலிந்த அலகும், உடலின் மேற்பாகம் தவிட்டு நிறத்தில் கருப்புக்கோடுகள் நிறைந்து காணப்படும். தெளிவான தவிட்டு நிற கண் புருவமும், உடலின் மேற்பாகத்தில் இருக்கும். கறுப்பு கோடுகளும் அறிக்குருவிகளை அடையாளம் காண உதவும். அறிக்குருவிகள் மரங்களின் நிழல்களிலும், புல்வெளிகளிலும், இரை மேயும் இடத்தில் அசையாது நின்று விட்டால், கண்களுக்கு புலப்படாது. தொல்லை ஏற்பட்டால் அருகில் உள்ள செடி அல்லது மரங்களின் கிளைகளில் சென்று அமர்ந்து கொள்ளும். நகர்ந்து செல்லும் போதும், இலைக்களுக்கு அடியில் உள்ள சிறு வண்டுகள், பூச்சிகள், விதைகள் போன்றவற்றை இரையாக மேயும் போதும் அதன் நடையும், வரிகள் உள்ள அதன் உடலும், நமது கண்களையும், மனதையும் மயக்கும்.
 
நீலகிரி அறிக்குருவிகள்  மலைப்பகுதிகளில் உள்ள மண் தடத்தில் அல்லது சிறு கற்கள் அடர்ந்த சிறு மண் கட்டிகள் உள்ள ஓரத்தில் தட்டு போன்ற ஆழமில்லாத அழகான கூட்டை கட்டுகின்றன. சில இடங்களில் சிறு புதர் செடிகளுக்கு அடியிலும் அறிக்குருவிகளின் கூட்டை காண முடியும். கூட்டில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் வெளிறிய மஞ்சள் நிற முட்டைகள் இருக்கும்.
 மனிதன் கால் படாத காடுகளே இல்லை என்று குறிப்பு ஓன்று உள்ளது. நம் நாட்டில் மனித நடமாட்டம் மட்டும் அல்லாமல் மனித தலையீடும், அட்டகாசம் இல்லாத காடுகளே இல்லை எனலாம். ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் மனிதர்களால் தீ வைக்கப்பட்டு அழிந்து போகும் இயற்கை வளங்களும், அழிந்து போகும் உயிரினங்களின் வாழ்விடங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ள படாத அழிவுகளின் நிலைகள் ஏராளம். விளைவுகள் நம்மை மெல்ல மெல்ல தாக்கி கொண்டு இருப்பது கூட அறியாமல், செய்த தவறையே திரும்ப திரும்ப செய்து கொண்டு இருப்பதும். இதை அறிந்தவர்களும், அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது இயற்கை ஆர்வலர்களுக்கும், இயற்கை நேயர்களுக்கும் வேதனை அளிப்பதாக உள்ளது.
நீலகிரி அறிக்குருவிகள், புல்வெளிகள், புற்கள் உள்ள சதுப்பு வெளிகள் சார்ந்து வாழும் மலைப்பகுதிகளில் கால்நடைகளின் மேய்சல் நிலமாக மாறி வருவதும் அதன் வாழ்விடங்கள் சேதாரம் ஏற்பட்டு மெல்ல அழிந்து வருவதும், நீலகிரி அறிக்குருவிகள் அழிவை நோக்கி தள்ளப்பட்டு வரும் பாதிக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் தீயினால் காடுகளில் உள்ள புல்வெளிகளும், புதர் செடிகளும், சிறு தாவரங்களும் அதை சார்ந்து வாழும் உயிரினங்களும் அழிந்து வருவதுடன், நீலகிரி அறிக்குருவிகள் வாழ்விடங்கள் குறைந்து, சுருங்கி அதன் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது. நாங்கள் பார்த்து கொண்டிருந்த அறிக்குருவி தலையை தூக்கி எங்களை பார்ப்பதும், பிறகு இரையை மேய்வதுமாக இருந்தது. அடுத்த முறை நாம் வரும் போது அறிக்குருவியோ அதன் வாழ்விடமான புல்வெளியோ இல்லாமல் இருக்கலாம். மனிதனின் அடுத்த தலைமுறைக்கு நீலகிரி அறிக்குருவி இது தான் என காட்டுவதற்காக ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டோம்.
பறவைகளை பார்த்து மகிழ்ச்சியோடு நாம் வீடு திரும்புவது போய், துக்கத்தோடு, கவலையோடு காட்டை விட்டு வெளியேறும் நிலை இன்றைக்கு வந்து விட்டது. அரிதான, அழகான பறவைகளை பார்க்கும் போது இனி இதை பார்க்க முடியுமா? என்கிற சந்தேகம் வந்து விட்டது. “பறவைகள் இன்றி மனிதர்கள் வாழ முடியாது” என்று பறவை இயல் அறிஞர் டாக்டர் சலீம் அலி கூறிய கருத்துப்படி நமது அடுத்த தலைமுறை வாழ முடியாத அவல நிலை ஏற்பட்டு கொண்டு இருப்பதை அறிய முடிகிறது. மெல்ல எங்கள் வண்டியை நகர்த்தினோம். வண்டி சத்தத்தில் நீலகிரி அறிக்குருவி விர்ர்ர்...... என்று பறந்து அருகில் உள்ள சிறு மரத்தின் கிளையில் அமர்ந்தது.
Pin It