கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பொதுவாக நாம் எலிகளை தொல்லை தரும் விலங்குகளாகவே கருதுகிறோம். ஆனால் கம்போடியாவில் சேவை செய்த மகாவா (Magawa) என்ற எலி பல விதங்களில் மனிதனைக் காட்டிலும் மகத்தான உயிரினம் என்று போற்றப்படுகிறது. தன்னை விட எத்தனையோ மடங்கு பெரிய உருவமுடைய ஆயிரக்கணக்கான மனிதர்களின் உயிர்களைக் காப்பதில் வெற்றி கண்ட மகாவா, தனது எட்டாம் வயதில் சேவையில் இருந்து ஓய்வு பெற்று 6 மாதங்களுக்குப் பிறகு 2022 ஜனவரி 8 அன்று கடைசியில் மரணத்திடம் தோல்வியடைந்தது.
யார் இந்த மகாவா?
ஐந்தாண்டுகள் வரை ராணுவ சேவை செய்த மகாவா தன் பணிக்காலத்தில் நூற்றிற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்ய உதவியது. சில நாட்களாக இதன் உடல்நிலை மோசமடைந்தது. இறக்கும்போது இதன் வயது எட்டு. 1.2 கிலோ எடையும், 70 செமீ நீளமும் உடைய மகாவா, giant pouched rat வகையைச் சேர்ந்தது.
இதன் தாயகம் டான்சானியா. பெல்ஜியத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அப்போப்போ (APOAPO) தன்னார்வத் தொண்டு நிறுவனம் மகாவாவிற்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கத் தொடங்கியது. ஓராண்டு நீண்ட கடினமான பயிற்சிக்குப் பிறகு மகாவா ராணுவத்துடன் சேர்ந்து தன் சேவையை கம்போடியாவில் தொடங்கியது.கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதில் ஹீரோ
“கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதில் மகாவா கதாநாயகனாகவே பணிக்காலம் முழுவதும் இருந்தது. பார்வைக்கு அருவருப்புடன் தோன்றும் இந்த சின்னஞ்சிறிய உயிரினம் கம்போடியாவில் ஆயிரமாயிரம் மனிதர்களை இன்று உயிருடன் வாழ வைத்துள்ளது. அவர்கள் இன்று வேலை பார்க்கின்றனர், விளையாடுகின்றனர். உயிர் பறிபோய்விடுமோ அல்லது கை கால் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் இல்லாமல் வாழ்வதற்கு முக்கிய காரணம் மகாவாவே என்று அப்போப்போ மகாவாவின் மரணத்திற்குப் பின் வெளியிட்ட அஞ்சலிக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கம்போடியா என்னும் யுத்தபூமி
1998ல் முடிவிற்கு வந்த, முப்பதாண்டுகள் நீண்ட உள்நாட்டுப் போரில் இலட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். உலகில் மிக அதிக எண்ணிக்கையில் கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்று கம்போடியா. 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் இன்னமும் வெடிக்காமல் இருக்கின்றன.
இதுவரை வெடித்துச் சிதறியவற்றால் 4000 பேர் உடல் உறுப்புகளை இழந்தனர். வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பல நிபுணர்கள், விவசாயிகள், குழந்தைகள் உட்பட பலர் கண்ணிவெடியில் சிக்கி பரிதாபமாக மரணம் அடைந்தனர். ஆனால் இந்நிலை மகாவா கம்போடியாவிற்கு வந்தபின் மாறியது.
மகாவா 225,000 சதுரமீட்டர் நிலப்பரப்பில் இருந்த கண்ணிவெடிகளை அகற்ற உதவியது. இது 42 கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பிற்குச் சமம். ஒரு மனிதன் சாதாரணமாக நான்கு நாட்களில் கண்டுபிடிக்கும் கண்ணிவெடிகளை 20 நிமிடங்களில் கண்டுபிடித்து விடும். எடை குறைவு என்பதால் வெடிபொருட்கள் நிறைந்த பகுதியின் வழியே இவற்றால் வேகமாக ஓடியாடி இடம்பெயர முடியும்.
தங்கப் பதக்கம் வென்ற உலகின் முதல் எலி
2020ல் பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பி டி எஸ் ஏ (PDSA People Dispensary for Sick Animals) என்ற தன்னார்வ விலங்குநல தொண்டு நிறுவனம் மகாவாவின் சாகசம் நிறைந்த வீரச்செயலுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தது. இந்நிறுவனத்தின் 78 ஆண்டுகால வரலாற்றில் ஒரு எலி தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. மகாவா இதன் மூலம் இந்த விருதைப் பெறும் பெருமைமிக்க மோப்ப நாய்கள், பூனைகள் மற்றும் ஒரு புறாவுடன் சேர்ந்துள்ளது.
தனது அபார மோப்பசக்தியால் கண்ணிவெடியைக் கண்டுபிடித்தவுடன் மண்ணில் அந்த இடத்தை தன் கால்களால் பிராய்ந்து குண்டு செயலிழக்கச் செய்பவர்களுக்கு அடையாளம் காட்டும். ஒரு டென்னிஸ் மைதானம் அளவுள்ள நிலத்தை 30 நிமிடங்களுக்குள் ஆராய்ந்து முடித்துவிடும். மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தி கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க மனிதனுக்கு நான்கு நாட்களாகும்.
உலக வரலாற்றில் ஒரு எலி மனித உயிர்களைக் காக்கும் பணியை வெற்றிகரமாக செய்து ஓய்வு வழங்கப்பட்டு வாழ்ந்து சென்றது இதுவே முதல்முறை. எறும்பு முதல் எலி வரை எல்லா உயிரினங்களையும் இயற்கை மனிதனுக்கு சுலபமாக புலப்படாத அர்த்தத்துடன்தான் படைத்துள்ளது என்பதற்கு மகாவாவின் வாழ்வே சிறந்த எடுத்துக்காட்டு.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஜப்பான் நிலப்பரப்பில் காணப்படும் எல்லா வகையான ஸ்பின்ரான்ஸ் இன அலங்கார மலர்களும் ஒரே வகையைச் சேர்ந்தவை என்று இதுவரை கருதப்பட்டது. செழுமை மிக்க தோட்டக்கலை வரலாறைக் கொண்ட நாடு ஜப்பான். இந்நாட்களில் இங்கு ஒரு புதிய தாவர இனத்தைக் கண்டுபிடிப்பது என்பது மிக அரிதானதே.
ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய இனம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த அழகான ஓர் இனமே. ஸ்பின்ரான்ஸ் ஹெச்சைஜோன்சிஸ் (Spinranthes Hachijoensis) என்ற இந்த புதிய இனப் பூவின் இதழ்கள் பார்ப்பதற்கு அழகிய கண்ணாடி வேலைப்பாடு போலவே தோன்றும். இவை புல்வெளிப் பிரதேசங்கள், பூங்காக்கள், தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படுபவை.
இதுவரை இங்கு உள்ள எல்லா ஸ்பின்ரான்ஸ் தாவரங்களும் ஒரே இனம் என்று கருதப்பட்டதால் பெயரிடப்படாமல் இருந்தது. ஆங்கிலத்தில் லேடிஸ் டெரெஸ்ஸஸ் (Lady’s tresses) என்று அழைக்கப்படும் ஸ்பின்ரான்ஸ் ஆஸ்ட்ராலிஸ் (Spinranthes australis) என்ற இதே குடும்பத்தைச் சேர்ந்த, பொதுவாகக் காணப்படும் மற்றொரு தாவரத்தில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஸ்பின்ரான்ஸ் இனம் ஜப்பானில் மிகப் பிரபலமான அலங்காரச் செடி.ஆஸ்ட்ராலிஸ் மலர் ஜப்பான் மக்களுக்கு மிக நெருக்கமான ஒன்று. எல்லா இடங்களிலும் பொதுவாகக் காணப்படக் கூடியது. கி.பி. 759ம் ஆண்டைச் சேர்ந்த ஜப்பானின் பழமையான மனியாக்ஸ்ஃஹூ (Manyoxhu) என்ற கவிதை நூல் உட்பட பழஞ்கால இலக்கியங்களில் இந்த மலர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. கோஃப் (Kobe) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பேராசிரியர் கென்ஜி சுட்சுக்கூ (Pro Kenji Suetsugu) ஆஸ்ட்ராலிஸ் பற்றிய கள ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த சகோதர இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்பின்ரான்ஸ் ஆஸ்ட்ராலிஸ் சிறிய முடிகளற்ற தண்டுப்பகுதியுடன் உள்ளது. ஆனால் புதிய இனம் மாறுபட்டு காணப்படுகிறது. டோஹோகு (Tohoku) மற்றும் தாய்வான் வன ஆய்வுக்கழகம் இணைந்து ஜப்பான், தாய்வான், லாவோஸ் நாடுகளில் வளரும் மலர்கள் மற்றும் அவற்றின் மாதிரிகளைச் சேகரித்து ஆராயும் பத்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கென்ஜி மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் ஜப்பானின் அலங்காரத் தாவரங்களை ஆராய்ந்தபோதே இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த டி.என்.ஏ மரபணு பரிசோதனைகள், நில அமைப்பு, கள ஆய்வுகள், இனப்பெருக்க உயிரியல் போன்றவற்றின் மூலம் ஆய்வுக்குழுவினர் பார்வைக்கு ஒன்று போலத் தோற்றம் அளித்தாலும் ஹெச்சைஜோன்சிஸ் ஆஸ்ட்ராலிஸ் இனத்தில் இருந்து முற்றிலும் புதிய மூலக்கூறு மாறுபாடுடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஸ்பின்ரான்ஸ் ஹெச்சைஜோன்சிஸ் ஆஸ்ட்ராலிஸ் செடியுடனேயே வளர்கிறது என்றாலும் ஒரு மாதம் முன்பே பூக்க ஆரம்பிக்கிறது.
பிரபலமாக அறியப்படும் ஒரு மலர் இனத்தில் இருந்து வேறுபட்ட புதிய இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது மக்களிடையில் இத்தாவரம் பற்றிய ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. இது பற்றிய தீவிர தாவர உள்ளமைப்பியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி Journal of Plant Research என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இயற்கையின் படைப்பில் இன்னும் எத்தனை எத்தனை உயிரினங்கள் மனித அறிவிற்கு எட்டாமல் மறைந்திருக்கின்றனவோ!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மாறி வரும் சூழ்நிலையில் இன்று வேளாண்மைத் துறை எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று வனவிலங்குகள் வயல்களுக்குள் புகுந்து பயிரை நாசமாக்கும் செயல். இதைத் தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன.
பொதுவாக யானைகள் பச்சை மிளகாய், இஞ்சி போன்ற பயிர்களை விரும்பி உண்பதில்லை. குறிப்பாக பச்சை மிளகாய் யானைகளால் வெறுக்கப்படும் ஒரு தாவரம். வடகிழக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான காரத்துடன் கூடிய மிளகாய் வகைகளைப் பயிரிடுகிறார்கள். வைக்கோலை ஒரு பந்தைப் போல சுருட்டி, அதனுள் காய்ந்த சிவப்பு மிளகாய்த் தூளை போடுகிறார்கள். அந்தப் பந்தில் இருந்து வருகின்ற புகையை யானைகள் வெறுக்கின்றன. இந்தப் புகை ஏற்படும்போது, யானைகள் அரண்டு மிரண்டு வேறுபக்கம் போய் விடுகின்றன. இது அந்த மாநில விவசாயிகளின் அனுபவம் கற்றுத் தந்த பாடம் ஆகும்.
கூட்டமாக வருகிற யானையை விட எப்போதும் தனியாக வரும் யானையே அதிக ஆபத்தானது. யானைகள் குட்டிகளுடன் இருந்தால் அவை அதிக தாக்குதல் உணர்வோடு இருக்கும். அதனால் யானை குட்டிகளுடன் இருக்கும்போது எந்த ஒரு காரணம் கொண்டும் அருகில் செல்வதைத் தவிர்க்க வேன்டும்.இப்போது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலோருக்கும் சர்க்கரை நோய் வருகிறது. அதனால் வனப்பகுதியைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் விடிகாலை நேரத்திலேயே எழுந்து நடைபயிற்சி செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். இதைத் தவிர்த்து, விடிந்தபிறகு செல்வது நல்லது. இதனால் சில சமயங்களில் யானைகளால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இருட்டில் நடைபயிற்சி செய்யச் செல்லும்போது யானை அருகே சென்று, அதனால் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்கின்றன. யானைகள் வயல்வெளிக்குள் அல்லது ஊருக்குள் நுழையும் இடங்களில் தேனீ வளர்க்கலாம். யானை வராமல் தடுப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. தேனீக்கள் சேகரிக்கும் தேனை விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம். சூழலையும் பாதுகாக்கலாம். செடிகளில் மகரந்த சேர்க்கை செய்யவும் இது உதவும். விளைச்சலும் இதனால் அதிகமாகும். உயிரியல்ரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.
யானைகளுக்குப் போதுமான நீரும், உணவும் கிடைக்காமல் போகும்போது, அவை பெரும்பாலும் வனங்களுக்குள் இருந்து வெளியே வருகின்றன. கோடை காலங்களில், வறட்சியால் யானைகள் பாதிப்பு அடையாமல் பாதுகாப்பதற்கு சிமெண்ட் தொட்டிகளைக் கட்டி அவற்றில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். ஊர் எல்லைகளிலும் இது போல அமைக்கலாம். அப்போது யானைகள் ஊருக்குள் நுழையாமல், நீரைக் குடித்துவிட்டு மனிதர்களுக்கு எந்தவிதமான தொந்தரவையும் தராமல் திரும்பிச் சென்று விடுகின்றன.
வனத்துறையினரும் யானைகளுக்குப் பிடித்தமான மர வகைகளை வனங்களுக்குள் பயிர் செய்து வளர்க்க முயல வேண்டும். பலா, வாழை, கரும்பு போன்ற பயிர் வகைகளும், வேறு சில இனிப்புசுவை உடைய மர வகைகளும் இன்று வனங்களில் இல்லாததால் யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. வனப்பகுதியை சுற்றிலும் திறந்தவெளியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் திறந்தவெளியில் தாங்கள் வருவதை மற்றவர்கள் பார்த்து விடுவார்கள் என்ற பயத்துடனேயே வனத்துக்குள் அவை இருக்கும்.
தற்போது பல இடங்களிலும் யானைகளை விரட்டுவதற்கு வெடிகளை வெடிக்கிறார்கள். முரசுகளை அறைந்து பேரொலியை எழுப்புகிறார்கள். விசில், அலாரம் போன்றவையும் பயன்படுகிறது. ஆனால், இந்தச் செயல்கள் எல்லாம் நீண்ட கால நன்மைகளைத் தருவதில்லை.
சில வெளிநாடுகளில், ஒவ்வொரு யானையின் கழுத்திலும் ரேடியோ காலர் என்னும் மைக்ரோசில்லியைப் பொருத்தி, அதன் மூலம் யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறார்கள். அதன் வரவை முன்கூட்டியே கிராம மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். இதனால் அவர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்கிறார்கள். இது உயிர் பாதுகாப்புக்கும், உடைமை பாதுகாப்புக்கும் உதவுகிறது.
யானைகள் போல அதிக பிரச்சனை தருவது காட்டுப்பன்றிகள். இவை திருவண்ணாமலை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. இவை விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன. சில விவசாயிகள் தாங்களாகவே பல நூதனமான வழிகளைக் கண்டுபிடித்து இதை சமாளித்து வருகிறார்கள். சிறிய வெடிகளை உருளைக்கிழங்கிற்குள் மறைத்து வைத்து வயலில் போட்டு விடுகிறார்கள். அவற்றை பன்றிகள் வந்து கடிக்கும்போது அவை வெடித்து பன்றிகள் இறந்து விடுகின்றன. ஆனால், எந்த ஒரு வனவிலங்கையும் கொல்வதற்கு நமக்கு உரிமை கிடையாது. அதனால் இவ்வாறு செய்வது வனவிலங்கு சட்டத்தின்படி ஒரு தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இவை வயலுக்குள் நுழையாத வண்ணம் வயலைச் சுற்றிலும் ஆழமான குழிகளைத் தோண்டி இரும்புவேலிகளை அமைக்கலாம். இவற்றின் மூக்கிற்கு நீளம் அதிகம். இதனால் அவை சுலபமாக மண்ணை நோண்டிவிடும் திறன் பெற்றவை. இதனால் இவை ஆங்கிலத்தில் digger என்றும் அழைக்கப்படுகின்றன. உருளைக்கிழங்கு, காரட் போன்ற பயிர்களை ஆழமாகத் தோண்டி தின்றுவிடும். அதனால் வேலியை ஆழமாகப் போட வேண்டும்.
காட்டு எருமைகள் பெரும்பாலும் கூட்டமாக வரும் இயல்பு உடையவை. பார்ப்பதற்கு ஒரு சாதாரண எருமை போலவே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு நாம் அருகில் சென்றால் அது உடனடியாக நம்மைத் தாக்க முற்படும். இந்த வனவிலங்கை தடுப்பதற்கும் ஒரே வழி இரும்புவேலியை அமைப்பதுதான். எந்த வனவிலங்குப் பிரச்சனை ஒரு பகுதியில் இருக்கிறதோ அதற்குப் பிடிக்காத உணவு வகைகளை நாம் தேர்வு செய்து அவற்றை அங்கு பயிரிடவேண்டும். இவ்வாறு செய்யும்போது விவசாயிக்கும் நஷ்டம் ஏற்படாத பயிரைத் தேர்வு செய்ய வேண்டும்.
வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில், இப்போது கிராமங்களில் ஆடுகளையும் செம்மறி ஆடுகளையும் வளர்க்கிறார்கள். சிலர் வெள்ளாடுகளையும் மாடுகளையும் வளர்க்கிறார்கள். அவற்றைத் திறந்தவெளிகளில் கட்டி வைக்கிறார்கள். கன்றுக் குட்டிகள், வெள்ளாடுகள் போன்றவை சிறுத்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இரைகள். நாய்கள் கூட சிறுத்தைகளுக்குப் பிடித்த ஒரு உணவாகவே கருதப்படுகின்றன. சிறுத்தையைப் பிடிப்பதற்கு ஆட்டைக் கூண்டில் கட்டி வைப்பதை விட நாயை கூண்டில் கட்டினால் சிறுத்தை சுலபமாக மாட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு சிறுத்தைக்கு நாய் பிடித்தமான உணவாக இருக்கிறது. இது போன்ற விலங்குகளை நாம் வனங்களை ஒட்டிய பகுதிகளில் வளர்க்கும்போது, வனவிலங்குகள் ஊருக்குள் வரத்தான் செய்யும். பறவைகள் இருந்தால் வனப்பகுதியில் இருக்கும் பாம்புகள் கண்டிப்பாக அவற்றைத் தேடி வரும். அதற்காக ஆடு, மாடு, பறவைகள் போன்றவற்றை வளர்க்கவே கூடாது என்பது இல்லை. எந்த ஒரு விலங்கை வளர்த்தாலும் உரிய பாதுகாப்பை அவற்றுக்குக் கொடுக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகள் இருக்கும் இடங்கள் எந்த ஒரு வனவிலங்கும் சுலபமாக உள்ளே நுழையாத வண்ணம் சரியான பாதுகாப்பைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அளவுக்கு அவை உறுதியாக கட்டப்பட்டிருக்க வேண்டும்.
மயில்களும், கிளிகளும் கூட வயலை நாசப்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்கு பளபளப்பான காகிதங்களைக் கட்டிவிட வேண்டும். அவை காற்றில் பறக்கும்போது எழுப்பும் ஒலியைக் கேட்டு இவை பயந்து வயல்பக்கம் வராமல் போய்விடும். பழைய ஒலிநாடாக்களையும் இதற்காக நாம் பயன்படுத்தலாம். வயலைச் சுற்றிலும் ஒரு வேலியைப் போல இதைக் கட்டிவிடும்போது, இதனால் ஏற்படும் சத்தத்தைக் கேட்டுப் பயந்து, இத்தகைய பறவைகள் வயல்கள் இருக்கும் பகுதியில் நுழையாமல் சென்று டுகின்றன.
புறாக்களும் கூட சில சமயங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில இடங்களில் இதைச் சமாளிப்பதற்காக தொடர்ச்சியாக சைரன் ஒலிப்பதைப் போல மெல்லிய ஒலியை எழுப்புவதற்காக, ஒரு சங்கை அமைத்தனர். இந்தச் சங்கு தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் ஒலித்துக் கொண்டே இருந்தது. இதைக் கேட்ட புறாக்கள் அதற்குப் பிறகு, அந்தப் பக்கம் வரவில்லை. இதுபோன்ற புதுமையான முறைகளையும் விவசாயிகள் கையாள்கிறார்கள்.
ஒரு சில விவசாயிகள், வயலைச் சுற்றிலும் தகர டப்பாக்களை கயிற்றில் கட்டித் தொங்க விடுகிறார்கள். இந்த டப்பாக்கள் காற்றில் ஆடும்போது அவை எழுப்பும் ஒலியைக் கேட்டு யானைகள் கூட்டமாக வந்தாலும், வயலுக்குள் நுழைவதில்லை. வனவிலங்குகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் எந்த ஒரு முறையையும் நாம் பின்பற்றி பயிர்களைப் பாதுகாக்க முயல வேண்டும். அவற்றுக்கு உடல்ரீதியாகவோ அல்லது அவற்றின் உயிருக்கோ ஆபத்து ஏற்படுத்தாத வண்ணம் நாம் மேற்கொள்ளும் செயல் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இதற்குப் பதிலாக விஷம் வைத்து புலியையும், சிறுத்தையையும் கொல்வது போன்ற செயல்கள் வனவிலங்கு சட்டத்தின் படி குற்றம் ஆகும்.
குரங்குகளைப் பொறுத்தமட்டும் நாம் பல நேரங்களிலும், அவை பாவம் என்று நினைத்து அவற்றுக்குக் கடலைப்பருப்பு போன்ற அவை விரும்பி உண்ணும் உணவு வகைகளைப் போடுகிறோம். அவ்வாறு செய்யும்போது நமக்குத் தேவையான உணவு இவர்களிடம் இருந்து கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு அந்தக் குரங்குகள் மனிதர்களுக்கு அருகில் வர ஆரம்பிக்கின்றன. அப்போது அவற்றை குச்சியை எடுத்து அடிப்பதாலும், கல்லால் அடிப்பதாலும் அவற்றின் மனதில் ஒரு முரட்டு சுபாவம் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. அதனால் அதன் பிறகு அது யாரைப் பார்த்தாலும் அருகில் வருவோரை எல்லாம் தாக்க ஆரம்பித்து விடுகிறது. எந்த ஒரு வனவிலங்குக்கும் நாம் செயற்கையாக உணவை கொடுக்கக்கூடாது. அதற்குத் தேவையும் இல்லை.
இந்த வழிமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு நாம் செயல்படும்போது வனங்களும், அவற்றில் வாழும் வனவிலங்குகளும் காக்கப்படுவதுடன் நம் வேளாண்மையும் பாதிப்பு அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகில் மிகப் பெரிய உயிரினம் எது? நீலத் திமிங்கலமா? இல்லவே இல்லை. அது ஒரு காளான். அமெரிக்காவில் ஆரிகான் தேசியப் பூங்காவில் மனி நதியில் 8.8 சதுர கிலோமீட்டர் பரவியிருக்கும் ஹனி பூஞ்சை அல்லது ஆர்மிலேரியா ரெஸ்டியின் நுண் உயிரிகளின் வலையமைப்பே அது. அங்கு மரத்தில் வளரும் நாய்க்குடைகளைக் காணலாம். மண்ணில் வாழும் பூஞ்சைகள் சுற்றுப்புறம், வயல்வெளி, வனங்களில் உள்ள உயிரிக் கழிவுகளை மக்கவைத்து மண்ணிற்கு வளம் சேர்க்கின்றன.
90% மரம் செடி கொடிகள்
இயற்கையில் 90% மரம் செடிகள் பூஞ்சைகளுடன் பரஸ்பர தொடர்புடையவை. மண்ணின் அடியில் மைக்ரோரைஸா பூஞ்சைகள் நுண் உயிரினங்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கி, தங்கள் வாழிடப் பரப்பை அதிகரிக்கின்றன. செடிகள் ஒளிச்சேர்க்கை நடத்தி உருவாக்கும் கார்போஹைடிரேட்டை உணவாக்கும் பூஞ்சைகள் பதிலிற்கு செடிகளின் வளர்ச்சிக்கு உதவும் சத்துகள், மூலகங்களை மண்ணில் இருந்து உறிஞ்சி அளிக்கின்றன.
காடுகளின் வலையமைப்பு
இத்தொடர்பு மர வலை (wood wide web)/காடுகளின் வலையமைப்பு (Internet of forests) எனப்படுகிறது. 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் தோன்றினான். ஆனால் பூஞ்சைகள் (fungus) பூமியில் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானவை. மண்ணிற்கு அடியில் வாழும் இவை இனப்பெருக்கம் செய்யும்போது உருவாகும் புதிய தலைமுறையே நாம் காணும் நாய்க்குடைகள். இவை திடீரென்று தோன்றுபவை. ஒரு இடி இடித்து மழை பெய்தால் அடுத்த நாள் இவை தென்படுகின்றன.மண்ணில் இருந்து உயிர்த்தெழும் உயிரினம்
இயல்பாக எதிர்பாராதவிதமாக மண்ணில் இருந்து உயிர்த்தெழும் இந்நிகழ்வே mushrooming என்ற சொல் பிறக்கக் காரணம். சுற்றுப்புற வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவை இவற்றின் இனப்பெருக்கத்தை நிர்ணயிக்கும் அம்சங்கள். இதனால் காலநிலை மாற்றம், புவி வெப்ப உயர்வு இவற்றைப் பாதிக்கிறது. மனிதனின் உணவுமுறை, கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய இவை பாரம்பரிய நாட்டறிவுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.
கலாச்சாரத் தொடர்புகள்
சைபீரியாவில் இவை சாமூக் சடங்குகளில் முக்கிய பங்கு வகித்தன என்று 1690களில் அந்நாட்டில் கைதியாக இருந்த பொலிஷ் குடிமகன் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் குளிரில் அமானிட்டா மஸ்காரியா என்ற அறிவியல் பெயரில் அறியப்படும் ப்ளை அபாரிக் நாய்க்குடைகளில் இருந்து திரவப் பொருட்களை சைபீரியா மக்கள் உருவாக்கி பயன்படுத்தி வந்தனர். இதில் அடங்கியிருந்த ரசாயனப் பொருட்கள் போதையூட்டுபவை.
ரிக் வேதத்தில் தேவர்கள் உண்டாக்கிய சோமரசத்தில் இவை இருந்தன என்று கூறப்படுகிறது. இவ்வகை உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் பற்றி கூறும் அறிவியல் பிரிவு தொல் மைக்காலஜி (ethano mycology). உலகளவில் சீனா மற்றும் மெக்சிகோ இவற்றின் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கின்றன. சீனாவில் 51 இனங்கள் உள்ளன. இதில் 23 இனங்களில் இருந்து 1020 வகை காளான் உணவுகள் உருவாக்கப்படுகின்றன.
புராதன காலத்தில் இருந்தே சீனாவில் இவை நாட்டு சிகிச்சையில் பயன்படுகின்றன. 2018 புள்ளிவிவரங்களின்படி இவற்றின் உலக உற்பத்தியில் 75% சீனாவில் இருந்தே வருகிறது. இந்தியாவில் இருந்து இது வெறும் 2% மட்டுமே. ஆண்டுதோறும் இவற்றின் ஏற்றுமதி மூலம் சீனா 100 இலட்சம் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டுகிறது. இதில் கும்மிங், நார்ப்புவா ஆகிய பிரதேசங்கள் முதலிடம் பிடிக்கின்றன.
உலகில் விலையுயர்ந்த காளான்கள்
மாக்சி டாக்கி, டபில்கள் உலகில் விலையுயர்ந்த வகைகளாகக் கருதப்படுகின்றன. மாக்சிடாக்கி ஒன்றின் விலை $80. டபில்கள் மண்ணில் அடியில் வளர்பவை. சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் மூலமே இவை கண்டறியப்படுகின்றன. லகோட்டோ ரொமோனியோலோ என்ற இனத்தின் விலை $3000 முதல் 5000 வரை. ஒரு கிலோ டபிலின் விலை $80 முதல் 4000. மிதமிஞ்சிய சுரண்டலால் சீனாவில் 1990 முதல் இந்த இரு இனங்கள் அச்சுறுத்தலை சந்திக்கின்றன.
சீனாவின் முன்மாதிரித் திட்டம்
இப்பிரச்சனையை நேரிட சீனா வன மறுசீரமைப்பு கொள்கை (Forest ownership reformation) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. தனி நபருக்கு நிலத்தை சொந்தமாக்காத நாட்டில் இயற்கை வளங்கள் பாதுகாப்பில் பங்காளிகளாக இவற்றைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு சட்டரீதியான உரிமை கொடுக்கப்பட்டது. அங்கு மட்டுமே வளரும் இனங்கள் பற்றி அறிய சோதனைரீதியில் காப்பு வனங்கள், தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
மெக்சிகோவில்
மெக்சிகோ உயிர்ப் பன்மயத்தன்மை செழுமை மிக்க ஒரு நாடு. 32 மாகாணங்கள் உள்ள இங்கு ஆதிவாசிகள் அதிகம் வாழ்கின்றனர். காளான்கள் பற்றிய அறிவு இவர்களிடையில் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. 480 காளான் உணவுவகைகள் இங்கு உருவாக்கப் படுகின்றன. பன்னாட்டு அளவில் 120 வகை காளான் பொருட்கள் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆசியாவில் சந்தை படுத்தப்படுகின்றன. மைக்கோ கேஸ்ட்ரானமி (Mico gastronomy) என்பது உணவு, கலை மற்றும் அறிவியல்ரீதியாக இவற்றை சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் குறித்த கல்விப் பிரிவு.
சிவப்புப் புத்தகத்தில்
1948ல் ஐநாவால் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு யூனியன் (IUCN) அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு 160 நாடுகளில் செயல்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது, தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அழியும் நிலையில் இருக்கும் காளான் வகைகளை சிவப்புப் புத்தகத்தில் வெளியிடுகிறது. உலகில் முதல்முதலாக 1984ல் தேசிய அளவில் அழியும் இனங்களை ஜெர்மனி சிவப்புப் புத்தகத்தில் வெளியிட்டது.
இன்று சிவப்புப் புத்தகத்தில் உள்ள 1,41,000 உயிரினங்களில் இன அழிவை சந்திக்கும் காளான்கள் 285. ஐம்பது இலட்சம் வகைகள் இருப்பதாகக் கருதப்படும் இவற்றில் 285 என்பது 1 சதவிகிதத்திற்கும் குறைவு.
பூஞ்சைகளுக்கும் வேண்டும் அங்கீகாரம்
2022 டிசம்பரில் கனடா மாண்ட்ரீலில் நடக்கவிருக்கும் ஐநா காப் 15 உயிர்ப் பன்மயத்தன்மை உச்சிமாநாட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவர மற்றும் விலங்குகள் போல இவற்றையும் தனிப்பெரும் வளமாக என்று வகைப்படுத்த வேண்டும் என்று பூஞ்சையியல் விஞ்ஞானிகள் வலியுறுத்தவுள்ளனர்.
பூஞ்சைகளை அங்கீகரித்த முதல் உலக நாடு
2012ல் உலகில் முதல்முறையாக இந்த உயிரினங்களுக்கு தேசிய அளவில் சட்டப் பாதுகாப்பை தென்னமெரிக்கா சிலி அளித்தது. அணைக்கட்டுகள், சாலைகள், வீடுகள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்றவற்றை அமைப்பது பூஞ்சைகளின் வாழிடம், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே நடக்கிறது. டாக்டர் ஜூலியானா கொச்சி என்ற இளம் சிலி பூஞ்சையியல் விஞ்ஞானியின் இடைவிடா முயற்சியால் இது சாத்தியமானது.
இந்த அதிசய உயிரினங்களின் உலகை அறியும் ஆர்வத்தில் 1999ல் அவர் தனது 20வது வயதில் பூஞ்சைக்கான தன்னார்வ அறக்கட்டளையை (Fungi Foundation) நிறுவினார்.
இந்தியாவில்
இந்தியாவிலும் பல மருத்துவ குணங்கள் உடைய பூஞ்சைகள் உள்ளன. அதில் ஒன்று கேரளா பாலக்காடு பகுதியில் காணப்படும் இள மாங்காய். இது ஒரு நாய்க்குடை இனம். இது நாட்டு வைத்தியத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
பூஞ்சை உணவுச் சுற்றுலா
இந்த உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, பாதுகாக்க கேரள உயிர்ப் பன்மயத்தன்மை பாதுகாப்பு வாரியம் (Kerala Biodiversity Board) முதுகலை படிப்பு முடித்தவர்களுக்கு பூஞ்சை நாய்க்குடைகள் பற்றி சான்றிதழ் படிப்பு ஒன்றைத் தொடங்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்று விருப்பமுள்ளவர்களுடன் இணைந்து இவை வளரும் வாழிடங்களுக்கு நேரில் சென்று, அவற்றைக் கண்டு, ஆரோக்கியமான உணவு சமைத்துக் கொடுக்கும் மைக்கோ சுற்றுலாவிற்கான திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. மிதமிஞ்சிய பயன்பாட்டினால் இந்த அதிசய உயிரினங்கள் அழியாமல் பாதுகாப்போம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- வண்ணத்துப் பூச்சிகளுடன் ஒரு பயணம்
- முதலில் பீதியை ஏற்படுத்தியவன் பிறகு ஹீரோவான கதை
- ஏழைகளின் மரம்
- ஆகாய வயலில் இருந்து ஓர் அற்புத அறுவடை
- ஆண்டீஸ் மலையில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு
- அண்டார்க்டிகாவில் அழியும் எம்பரெர் பெங்குயின்கள்
- சூழல் காக்க உதவும் நீர்நாய்கள்
- தப்பிப் பிழைத்தன திமிங்கலங்கள்!
- வாழ வழியில்லாமல் தெருவில் அலையும் வனவிலங்குகள்
- புலி உள்ள காடே வளமான காடு
- 'காவலன்' புலி
- இலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்
- தேனீ எனும் தோழன்!
- பத்துக் கோடி ஆண்டுகளாக உயிரை கையில் பிடித்து வைத்திருந்த நுண்ணுயிரிகள்
- வெளவால்கள் பலவிதமான வைரஸ்களுக்கு ஓம்புயிரிகளாக இருந்தும் அவை நோய்வாய்ப்படுவதில்லை - ஏன்?
- வேடந்தாங்கல் எல்லைக் குறைப்பு - நமக்கு நாமே வைக்கும் கொள்ளி
- ஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்
- மாறிவிட்ட யானையின் வலசைத் தடங்கள்!
- புவி வெப்பமடைதலால் அழிந்து வரும் பம்பிள் தேனீக்கள்
- அழிந்து வரும் கழுதைகள் மற்றும் புதலிகள்