15 டிகிரி செல்சியஸில் நுண் பிளாஸ்டிக்குகளை உண்ணும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நுண்ணுயிரிகளை ஆல்ப்ஸ் மற்றும் ஆர்க்டிக்கில் இருந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சியில் இது திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது. இது போன்ற பல நுண்ணுயிரிகள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றாலும் அவை 30 டிகிரி செல்சியஸிற்கும் கூடுதலான வெப்பநிலையில் மட்டுமே இயங்குபவை.

இந்த நுண்ணுயிரிகள் தொழிற்சாலைகளில் இவற்றைப் பயன்படுத்த அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. இது அதிக செலவு பிடிக்கக் கூடியது. தொழிற்சாலை நடைமுறையில் இது கார்பன் நடுநிலைத் தன்மையற்றது. ஆனால் இப்போடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.plastic bottles 720பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும்

சுவிஸ் பெடரல் கழகத்தின் (WSL) விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக் கட்டுரை, Frontiers in microbiology என்ற ஆய்விதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுவிஸ் கழகத்தின் டாக்டர் ஜோல் ரூத்தை (Dr Joel Ruthi) மற்றும் அவரது குழுவினர் 19 பாக்டீரியா, 15 பூஞ்சை மாதிரிகளை க்ரீன்லாந்து, ஸ்வால்பார்டு (Svalbard) மற்றும் சுவிட்சர்லாந்தில் ஓராண்டு காலம் மண்ணில் புதைந்திருந்த பிளாஸ்டிக் பொருட்களில் வளர்த்து ஆராய்ந்தனர்.

திசு வளர்ப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் நுண்ணுயிரிகள் உட்கொள்ளும் பல்வேறு வகை நுண் பிளாஸ்டிக்குகள் ஆராயப்பட்டன. இந்த நுண்ணுயிரிகள் 13 ஜெனரா (13 genera) வகையைச் சேர்ந்த பைலோ ஆக்டினோ பாக்டீரியா (Phyla actinobacteria), ப்ரோட்டோ பாக்டீரியா (Proteobacteria) ஆகிய பாக்டீரியா வகைகளைச் சேர்ந்தவை.

10 ஜெனரா வகையைச் சேர்ந்த பைலோ அஸ்காமிகோடா (Phyla ascomycota), மியூக்கோராமிகோடா (Mucoromycota) பூஞ்சையினங்களும் ஆய்விற்குப் பயன்படுத்தப்பட்டன.

பிளாஸ்டிக் வகைகள்

மக்கும் தன்மையற்ற பாலி எத்திலீன் (PE), மக்கும் தன்மையுடைய பாலியெஸ்ட்டர், பாலி யூரித்தேன் (Poly Urethane PUR) மற்றும் வணிகரீதியாகக் கிடைக்கும் பாலி ப்யூட்டிலின் அடிபேட் தெரிஃப்ப்தேலேட் (Polybutylene adipate terephthalate PBAT) பாலி லேக்டிக் அமிலம் (PLA) ஆகியவை கலந்த கலவை பயன்படுத்தப்பட்டன.

எந்த நுண்ணுயிரி வகையும் 126 நாட்கள் வைக்கப்பட்டிருந்த பிறகும் பாலி எத்திலீனை மக்கச் செய்யவில்லை. ஆனால் ஆராயப்பட்டதில் 56% நுண்ணுயிரிகள் அதாவது 11 பாக்டீரியாக்கள் மற்றும் 9 பூஞ்சையினங்கள் 15 டிகிரி செல்சியஸில் பாலி யூரித்தேன் பிளாஸ்டிக்குகளை உண்டன. 14 பூஞ்சைகள், 3 பாக்டீரியாக்கள் பாலி ப்யூட்டிலீன் அடிபேட் தெராஃப்ப்தலேட் மற்றும் பாலி லேக்டிக் அமிலம் கலந்த பிளாஸ்டிக் கலவையை உட்கொண்டன.

குறைந்த செலவில் மறுசுழற்சி

இதன் மூலம் நொதித்தலால் நடைபெறும் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு ஆகும் செலவு மற்றும் சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும் என்று கருதப்படுகிறது. ஆராயப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகை நுண் பிளாஸ்டிக்கை உட்கொண்டன. மேலும் விஞ்ஞானிகள் Nneodevriesia, Lachnellula ஆகிய பூஞ்சையினங்கள் பாலி எத்திலீனை தவிர மற்ற எல்லா வகை நுண் பிளாஸ்டிக்குகளையும் உட்கொள்கின்றன என்று கண்டறிந்தனர்.

1950களில் இருந்தே பிளாஸ்டிக்குகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தாவர செல்களில் இருக்கும் சில அமைப்புகளை நுண்ணுயிரிகள் ஒத்திருப்பதால் அவை பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்கின்றன. தாவர செல் சுவர்களை உடைக்கும் செயலின்போது நுண்ணுயிரிகள் பாலிமர்களை மக்கச் செய்யும் நொதிகளை உற்பத்தி செய்கின்றன என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் பீட் ஃப்ரே (Dr Beat Frey) கூறுகிறார்.

பாலிஸ்ட்டர்களை மக்க வைக்கும் பூஞ்சைகள்

தாவரங்களில் கிருமிகளை உண்டாக்கும் பூஞ்சைகள் பாலிஸ்ட்டர்களை மக்க வைக்கின்றன. இப்பூஞ்சைகள் க்யூட்டினேசிஸ் (Cutinases) என்னும் பொருளை உற்பத்தி செய்யும் திறண் பெற்றுள்ளன. இது தாவரங்களில் இருக்கும் க்யூட்டின் போன்ற பாலிமரை ஒத்திருப்பதால் இவை பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் 4 முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை நன்கு வேலை செய்கின்றன.

பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்யும் நொதிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நுண்ணுயிரி வகைகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் விஞ்ஞானிகள் இப்போது ஈடுபட்டுள்ளனர். சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத இது போன்ற கண்டுபிடிப்புகள் வருங்காலத்தில் ப்ளாஸ்டிக் மாசைப் பெருமளவில் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/may/10/microbes-digest-plastics-low-temperatures-recycling?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It