ஜோர்டான், ஓமான், அரபு எமிரேட்டுகள், கத்தார், பஹரின் நாடுகளின் தேசிய விலங்கு அரேபியன் ஒரிக்ஸ் (Arabean Oryx) என்று அழைக்கப்படும் பெரிய கொம்புடைய மான் இனம். நடுத்தர அளவுடையது. 1800களுக்கு முன்பு ஆயிரக்கணக்கில் அரேபியப் பாலைவனங்களில் மேய்ந்து திரிந்து வாழ்ந்தன.

பாலைவனத்தில் ஈட்டியையும், வாளையும் பயன்படுத்தி இவற்றை வேட்டையாடுவது சுலபமாக இல்லை. ஆனால் நவீன வாகனங்கள், ஆயுதங்களின் வரவுடன் 1930களில் இளவரசர்களும் எண்ணெய்க் கம்பெனிகளின் முதலாளிகளும் வாகனங்களையும், துப்பாக்கிகளையும் பயன்படுத்தி இவற்றை வேட்டையாடத் தொடங்கினர். சில நேரங்களில் வேட்டையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.

ஆபத்தாக மாறிய கொம்புகள்

அரேபிய துணைக்கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட இந்த இனம் 1970களின் ஆரம்பத்தில் அவற்றின் இயற்கை வாழிடங்களில் இன அழிவை சந்திக்கத் தொடங்கின. இவற்றின் நீண்டு வளர்ந்திருந்த கொம்புகள் வேட்டையாடுபவர்களுக்கு டிராபிகளாகக் கொண்டு செல்ல விருப்பமான பொருளாக மாறின. கொம்புகளுக்கு மருத்துவ குணம் உண்டு என்று அப்பகுதி நாட்டு வைத்தியத்தில் மூட நம்பிக்கை இருந்தது.arabian oryxஇவற்றை வேட்டையாடுவது சில கலாச்சாரங்களில் பதவி மற்றும் செல்வச்செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டபோது இவை காடுகளில் இருந்து முற்றிலுமாக மறையத் தொடங்கின. சில தனியார் விலங்குக் காட்சி சாலைகள் மற்றும் காப்பகங்களில் மட்டுமே இவை உயிர் பிழைத்து வாழ்ந்தன.

மீட்பின் தொடக்கம்

எப்படியாவது இந்த உயிரினங்களை அழிவில் இருந்து மீட்க வேண்டும் என்று சர்வதேச தளத்தில் குரல்கள் உயர்ந்தன. 1962ல் அமெரிக்காவின் மிகப் பெரிய விலங்குக் காட்சி சாலையான பீனிக்ஸ் காட்சி சாலையும், சர்வதேச தாவர மற்றும் விலங்கு பாதுகாப்பிற்கான அமைப்பும் (Flora & Fauna International) இணைந்து உலக வனநிதியத்தின் (WWF) நிதியுதவியுடன் பீனிக்ஸ் காட்சி சாலையில் இவற்றின் இனவிருத்திக்கான நடவடிக்கைகளைத் தொடங்கின.

ஒன்பது விலங்குகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆபரேஷன் ஓரிக்ஸ் (Operation Oryx) திட்டம் வெற்றி பெற்றது. 240 பிரசவங்கள் நடந்தன. இங்கிருந்து விலங்குகள் மற்ற காட்சி சாலைகளுக்கும் பூங்காக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. 1968ல் அரேபியாவில் ஓமானில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இவற்றை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கென்றே அல் ஐனில் காப்பகம் உருவாக்கப்பட்டது.

காட்டுக்குத் திரும்பிய மான்கள்

1980ல் இந்த விலங்குகளை காடுகளில் சுதந்திரமாக வாழவிடும் அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. சாண்டியாகோ காட்சி சாலையில் இருந்து இவை முதலில் ஓமானில் காடுகளில் சுதந்திரமாக வாழ அனுப்பி வைக்கப்பட்டன. இப்போது பல மேற்காசிய நாடுகளிலும் இவற்றைக் காண முடியும். 2000 மான்களைக் கொண்ட இவற்றின் மிகப் பெரிய கூட்டம் சௌதி அரேபியாவில் மகாசாட் அஸ்-சையது வனப்பாதுகாப்பகத்தில் வாழ்கின்றன.

சுற்றும் வேலி கட்டி பராமரிக்கப்படும் இந்தப் பிரதேசத்தின் பரப்பு திருவனந்தபுரம் மாவட்டத்தின் பரப்பிற்கு சமமானது. 2011ல் 1500 ஓரிக்ஸ் மான்கள் அவற்றின் இயல்பான வாழிடங்களில் நிறைந்தன. மற்ற பாதுகாப்பகங்களில் 6000 மான்கள் வாழத் தொடங்கின. சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் (IUCN) அழிந்துவிட்ட உயிரினங்களின் பட்டியலில் இருந்து இன அழிவைs சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலிற்கு மாற்றிய உலகின் முதல் உயிரினம் இவையே.

மீண்டும் ஆபத்து

பிறகு ஓமான் பாதுகாக்கப்பட்ட பகுதியின் 90 சதவிகிதத்தையும் எண்ணெய்க் கம்பெனிகளுக்கு விற்றது. இதனால் அங்கு இருந்த அரேபியன் ஓரிக்ஸ் சரணாலயத்தை ஐநா தன் பாரம்பரிய பெருமைமிக்க இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கியது. இங்கு 1996ல் இருந்த 450 மான்கள் வேட்டையாடல் மற்றும் உயிருடன் பிடித்தல் போன்ற விவேகமற்ற செயல்களால் 2007ல் 65 ஆகக் குறைந்தன.

பூமியில் வாழும் நான்கு ஓரிக்ஸ் இன மான்களில் அரேபியன் இனமே மிகச்சிறியது. ஓரிக்ஸ் இன மான்களில் இவை மட்டுமே ஆப்பிரிக்காவிற்கு வெளியில் வாழ்கின்றன. இவற்றுக்கு மணலும், காற்றும் நிறைந்த சூழலை சமாளிக்கும் ஆற்றல் உள்ளது. பளபளப்புடன் மின்னும் உடலின் மேற்பகுதி சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் கொளுத்தும் வெப்பத்தின் கொடுமையை இவை சமாளித்து வாழ்கின்றன.

பிளவுபட்ட குளம்புகள் மணலில் சுலபமாக நடக்க இவற்றிற்கு உதவுகின்றன. தண்ணீர் குடிக்காமல் நீண்ட காலம் வாழும் திறனுடைய இவை புதிய மேய்ச்சல் நிலங்கள் தேடி தொலைதூரம் வரை பயணம் செய்கின்றன. காலை மற்றும் மாலையில் சுறுசுறுப்புடன் செயல்படும் இவை பகல் நேரத்தில் கடும் கோடையைச் சமாளிக்க நிழல் இருக்கும் இடங்களில் ஓய்வெடுக்கின்றன. குளம்புகளால் மணலைத் தோண்டி குளிர்ச்சியான இடங்களைக் கண்டுபிடிக்கும் திறமையும் இவற்றிற்கு உண்டு.

தேசிய சின்னமாக வாழும் மான்

30 மான்கள் வரை கூட்டமாக வாழும் இவை சாதகமற்ற சூழ்நிலையில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வாழ்கின்றன. அப்போது ஆண் மான்கள் கூட்டத்தை விட்டு வெகுதொலைவுகளுக்கும் செல்வதுண்டு. வளைகுடா நாடுகள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தேசிய சின்னங்களில் இந்த மானின் படங்களைப் பார்க்கலாம். கத்தார் ஏர்வேஸில் உள்ள அடையாளச் சின்னம் (logo) இந்த மானே. ஓமானில் அல்-மகா விமான நிறுவனம், அல்-மகா பெட்ரோலிய நிறுவனத்தின் அடையாளச் சின்னமும் இதுவே.

ஒற்றைக் கொம்பா இல்லை இரண்டு கொம்புகளா?

பக்கவாட்டிலும் சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தும் இவற்றைப் பார்க்கும்போது இவற்றின் ஒரே அளவுடைய இரண்டு கொம்புகளும் ஒன்று போலத் தோன்றும். வேறு காரணங்களால் ஒரு கொம்பு இல்லாமல் போனால் அது மீண்டும் வளராது என்பதால் அந்த இடம் வெறுமையாக இருக்கும். ஒருவேளை இது புராணங்களில் வர்ணிக்கப்படும் குதிரையின் உடலும் ஒற்றைக் கொம்பும் உடைய யூனிகோன் என்ற விலங்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் இவை பாலைவனத்தின் யூனிகோன் என்றும் அழைக்கப்படுகின்றன.

இன்று இவை இன அழிவைச் சந்திக்கும் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் வாழ்ந்து வருகின்றன.

மேற்கோள்கள்https://en.m.wikipedia.org/wiki/Arabian_oryx

&

https://www.mathrubhumi.com/environment/columns/all-things-you-need-to-know-about-arabian-oryx-ecostory-1.8367510

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It