ஆதிவாசி மக்களுக்காக விறகொடித்துக் கொடுக்கும் யானைகள்; தண்ணீர் தேடி அலைபவர்களுக்கு மண்ணுக்கு அடியில் நீர் இருப்பதைக் காட்டி உதவும் யானைகள்; ஒற்றைப்பட்டுப் போகும் குட்டி யானைகளுக்கு வயிறு நிறைய பால் கொடுக்கும் ஆதிவாசிப் பெண்கள்; கென்யாவில் சாம்புரு (Samburu) வனப்பகுதியில் ஆதிவாசி மக்களுக்கும், யானைகளுக்கும் இடையில் காலம்காலமாக இருந்து வரும் ஆத்மார்த்தமான சொந்தத்தின் கதை இது.

சாகசப் பயணி கிறிஸ்டின் அமுலிவார்

ஆப்பிரிக்க கண்டத்தில் பயணம் செய்த பிரெஞ்சு சாகசப் பெண் பயணி கிறிஸ்டின் அமுலிவார், தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களை வெளியுலகிற்கு எடுத்துச் சொன்னபோதுதான் இதைப் பற்றி உலகம் தெரிந்து கொண்டது. பெண்கள் முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹெர்ப்ளானெட் எர்த் (Herplanet Earth) என்னும் தொண்டு அமைப்பை கிறிஸ்டின் தலைமையேற்று நடத்தி வருகிறார். வீரசாகசங்களின் பெண் உருவம் என்று இவர் அழைக்கப்படுகிறார்.

இவர் தலைமையேற்று நடத்திய பெண்களின் பயணக் கதைகள் புதிய சரித்திரம் படைத்தன. ஆர்க்டிக்கிலும், அண்டார்டிக்கிலும் உறைய வைக்கும் கொடும் குளிர்காற்றையும், ஜோர்டான் பாலைவனத்தில் வெப்பக் காற்றையும், அது உருவாக்கும் புகைப்படலத்தையும் சமாளித்து பெண்கள் பயணம் செய்தனர். இவருடைய பயண அனுபவங்களை வன அறிவு (Wild wisdom) என்ற பெயரில் பெங்குயின் புத்தக நிறுவனம் நூலாக வெளியிட்டபோது, அதுவரை உலகம் அறியாத பல நெகிழ வைக்கும் வனக்காட்சிகள், வியப்பூட்டும் அனுபவங்களை உலக மக்கள் அறிந்து கொண்டனர்.herplanet tribe womanஆத்மார்த்தமான சொந்தம்

கென்யாவில் சாம்புரு ஆதிவாசிகள் இயற்கையுடன் இணைந்து வாழ்கின்றனர். சிறிது கூர்மையாக்கி செவிமடுத்தால் காட்டு யானைகளின் இதயத் துடிப்பைக்கூட இவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆதிவாசி மக்களின் மனது யானைகளுக்கும் தெரியும். காட்டில் விறகு சேகரிக்க ஆதிவாசிப் பெண்கள் செல்லும்போது அவர்களுக்காக யானைகள் மரங்களில் இருக்கும் காய்ந்துபோன குச்சிகளையும் கிளைகளையும் ஒடித்து தரையில் போட்டிருக்கும். அதை கட்டுகளாகக் கட்டி தலையில் சுமந்து செல்கிறார்கள் ஆதிவாசிப் பெண்கள். இதைப் பார்க்கும் எவருக்கும் ஆச்சரியம் ஏற்படும்!

தண்ணீர் தேடி

பாலைவனம் போன்ற பகுதிகளில் ஒரு துளி நீருக்காக மனிதர்களும் வன விலங்குகளும் அலைந்து திரிவது வாடிக்கையான ஒண்று. மனிதனைப் போல தங்களுக்கும் ஆறாவது அறிவு இருப்பது போல அந்த சமயத்தில் யானைகள் செயல்படும். சில பிரதேசங்களில் தன்ணீர் இருக்கும் இடம் தெரியும்போது அங்கே யானைகள் கூட்டமாகக் கூடி நிற்கும்.

ஆதிவாசி மக்களுக்கு யானைகளின் மொழி நன்றாகத் தெரியும். ஒட்டகங்கள் மேல் ஏறி ஆயுதங்களுடன் அங்கு சென்று குழி தோண்டிப் பார்ப்பார்கள். அதிசயம்! யானைகள் காட்டித் தந்த இடத்தில் நீர் இருக்கும். ஆதிவாசி மக்களுக்கு நீர் விலைமதிப்பு மிக்கது.

இரவும் பகலும் வனப் பயணம்

2019ல் கிறிஸ்டினின் கென்யப் பயணம் நடந்தது. பகலில் வனக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு நடப்பார்கள். காட்டில் பயணம் செய்யும்போது பயன்படும் தனிச்சிறப்புமிக்க கூடாரங்களில் இரவு தங்குவார்கள். கூடாரம் கட்டத் தேவையான பொருட்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை சுமந்து கொண்டு பெண்கள் குழுவுடன் ஒட்டகங்கள் பயணம் செய்யும். பகல் முழுவதும் கடுமையான வெப்பமும், இரவில் நடுங்க வைக்கும் குளிரும் நிலவும் காலநிலை. வண்ண வண்ண ஆடைகள் அணிந்து ஆதிவாசிகள் குழுவினருடன் செல்வர்.

பதவியைப் பொறுத்து ஆதிவாசி மக்கள் மாலைகளையும் ஆபரணங்களையும் கழுத்தில் அணிந்து கொள்கின்றனர். காலநிலை மாற்றத்தினால் ஆப்பிரிக்காவில் நில அமைப்பில் பல மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆதிவாசி மக்களின் நலனுக்காக இவரது குழு நிதி சேகரித்து வழங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் குழுவினர் ஆதிவாசிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.

பாடும் கிணறுகள்

நீருக்காக மக்கள் ஆழமான கிணறுகளைத் தோண்டுவர். நீர் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தால் பிறகு ஒரே ஆட்டம் பாட்டம்தான். அவர்கள் ஆனந்த நடனமாடுவர். பாட்டும் தாளமேளங்களுடன் களை கட்டும்போது தூரத்தில் இருந்து பசுக்களும் வரும். அந்தப் பாட்டுகள் அவற்றிற்கு வழக்கமானவை. தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தால் யானைகள் அந்த இடத்திற்கு துல்லியமாக வந்து நிற்கும். இதெல்லாம் இந்த வனப்பகுதியில் சாதாரணக் காட்சிகள்.

யானை பராமரிப்பு இல்லம்

சில சமயம் குட்டி யானைகள் குழியில் விழுந்துவிட்டால் அவற்றை வெளியில் எடுக்க பெற்றோர் யானைகள் முன்வருவதில்லை. ஆனால் ஆதிவாசி மக்கள் அவற்றை மீட்டு, ரெட்டேட்டி என்ற யானைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அழைத்துச் செல்வர். பால் கொடுத்து அவற்றைக் கவனித்துக் கொள்ள, சிறப்பு பயிற்சி பெற்ற ஆதிவாசிப் பெண்கள் அங்கு உள்ளனர்.

ஒரு துளி தண்ணீரை உதட்டில் நனைத்து வறட்சியைப் போக்கக் காத்திருந்தாலும் ஆதிவாசிகள் தண்ணீரைக் கண்டுபிடித்தால் அதை யானைகளும் மற்ற வன விலங்குகளும் அருந்த விட்டுக்கொடுப்பர். விலங்குகளிடம் அந்த அளவு கருணை மிக்க மக்கள். மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையில் இருக்கும் ஆத்மார்த்தமான சொந்த பந்தத்தை எடுத்துக்காட்டும் காட்சிகள் இவை.

அனாதைகளான குட்டி யானைகளை அபயம் கொடுத்து தாங்கள் பெற்ற குழந்தையைப் போல மக்கள் அவற்றை பராமரிக்கின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குட்டி யானைகளைப் பார்த்துக் கொள்ள பெண்கள் அடங்கிய தன்னார்வலர் குழு அந்த இல்லத்தில் செயல்படுகிறது. ஆப்பிரிக்காவில் யானைகளை பராமரிக்கும் சேவையில் பெண்கள் தன்னார்வத்துடன் பணிபுரியும் முதல் யானை பராமரிப்பு மையம் இதுவே.

இன்று உலக நாடுகளில் சாகசப் பயணத்தின் அடையாளமாக கிறிஸ்டின் கருதப்படுகிறார். அவர் நடத்தும் ஹெர்ப்ளானெட் எர்த் என்ற அமைப்பு இப்போது சர்வதேசப் புகழ் பெற்றுள்ளது. 2012ல் சிங்கப்பூருக்கு வந்த எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆறாவது பெண் வீராங்கணை வலேரி பாபி என்ற பெண்மணியை கிறிஸ்டின் சந்தித்தபோது, அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. பிறகு கிறிஸ்டின் தன் வாழ்வை சாகசப் பயணங்களுக்காகவும், பெண்கள் நல முன்னேற்றத்திற்காகவும், வனப் பாதுகாப்பிற்காகவும் அர்ப்பணித்தார். இதன் பலன் இன்று பல உலகம் அறியாத மனித விலங்கு நல அனுபவங்களாக வெளிப்படுகின்றன.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/travel/features/kenya-s-elephants-at-home-in-the-samburu-national-reserve-samburu-tribes-1.8503015

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It