இந்தியாவில் கடல் ஆமைகளைப் பாதுகாக்க ஒற்றையாளாகப் போராடியவர் சதீஷ் பாஸ்கர். உயிரினங்களின் வரைபடத்தில் இருந்து ஒரு உயிரினம் மறைந்து போவதைத் தடுக்க பூமியின் வரைபடத்தில் இல்லாத தீவுகள் தேடியலைந்த ஆய்வாளர் என்று வர்ணிக்கப்படும் இவர், கடந்த 2023 மார்ச் 22 அன்று பெங்களூரில் காலமானார்.

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவில்

லக்‌ஷ தீவில் மனித வாசம் இல்லாத சுஹேலி (Suheli) தீவில் இருந்து பருவ மழைக்காலத்தில் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளில் ஒரு தண்ணீர் பாட்டிலில் அடைத்து பத்திரப்படுத்தி, சென்னையில் இருந்த தன் மனைவிக்கு அவர் ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.satish bhaskar 406கேரளக் கரை அல்லது கோவா கரைக்கு அடித்துச் செல்லப்படும் அந்த பாட்டில் கடிதத்தை யாரேனும் கண்டுபிடித்து சென்னைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று சதீஷ் நினைத்தார். ஆனால் 1982 ஜூலை 3 அன்று அனுப்பப்பட்ட அந்தக் கடிதம், 24 நாட்கள் 800 கிலோமீட்டர் கடலில் பயணம் செய்து ஸ்ரீலங்காவிற்குப் போனது. அந்தோணி டமேஷியஸ் என்ற மீனவர் கையில் கிடைத்தது. கடிதத்தில் இருந்த வாசகங்கள் அந்த மீனவத் தொழிலாளியை நெகிழச் செய்தது.

தான் யாரென்பதையும், அந்தக் கடிதம் தன்னை எந்த அளவிற்குப் பாதித்தது என்பதையும் எடுத்துக் கூறி ஒரு கவரிங் கடிதத்தை தன் குடும்பப் புகைப்படத்துடன் சேர்த்து அவர் அந்த கடிதத்தை சென்னைக்கு அனுப்பினார். “நீங்கள் குடும்பத்துடன் ஒரு தடவை ஸ்ரீலங்காவிற்கு வர வேண்டும்” என்றும் கவரிங் கடிதத்தில் நேசத்துடன் அவர் அழைப்பு விடுத்தார்.

தனிமையில் அந்தத் தீவில்

அந்த மழைக்காலத்தில் கடலுக்கு நடுவில் ஒரு தீவில் தன்னந்தனியாக வாழும் கணவரின் கடிதத்தை வாசித்த மனைவி பிருந்தாவால் கண்களில் இருந்து பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியவில்லை.

சதீஷ் பாஸ்கர் என்ற மனிதன் அந்த பெருமழைக்காலத்தில் எந்த நவீன வசதியும் இல்லாத அந்த தொலைதூர ஒற்றைத் தீவில் தனியாக வாழ்வது எதற்காக என்பதைப் புரிந்து கொண்ட பிரபல பத்திரிகையாளர் ஹாரி மில்லர், கடலில் மிதந்து வந்த அந்த கடிதத்தின் விவரங்களை இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தியாக வெளியிட்டார். செய்தியின் தலைப்பு “ராபின்சன் சதீஷ் பாஸ்”.

மனைவி பிருந்தாவையும், பிறந்து மூன்று மாதமே ஆன பெண் குழந்தையையும் சென்னையில் விட்டுவிட்டு, மழைக்காலத்தில் முட்டையிட வரும் க்ரீன் கடல் ஆமைகளைப் பற்றி அரபிக்கடலில் லக்‌ஷ தீவின் தொலைதூரத் தீவிற்குச் சென்று ஐந்து மாதம் தங்கியிருந்து சதீஷ் ஆராய்ந்தார்.

அவர் தங்கிய சுஹேலிக்கு மிக அருகில் மனிதர்கள் வாழும் தீவு கவரெட்டி தீவு. இந்தக் குட்டித் தீவில் இருந்து 52 கிலோமீட்டர் பயணம் செய்தால் மட்டுமே கவரெட்டியை அடைய முடியும். மழைக்காலத்தில் மழை பெய்யும்போது அங்கிருந்து ஒரு படகும் சுஹேலிக்கு வராது. அதனால்தான் சதீஷ் மனைவிக்கு எழுதிய கடிதத்தை பாட்டிலில் அடைத்து கடலலைகள் வழியாக அனுப்பி வைத்தார்!

ஒற்றைக் கதாநாயகன்

இந்தியாவில் கடல் ஆமை ஆய்வுகளின் வரலாற்றில் இது போல ஏராளமான கதைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் வெறும் கதைகள் இல்லை. சாகசம் நிறைந்த அபூர்வமான உண்மைச் சம்பவங்கள்! கதைகள் பல இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் சதீஷ் பாஸ்கர் என்ற இந்த நல்ல மனிதரே கதாநாயகன். இந்தியக் கடற்கரைகளிலும், தொலைதூரத் தீவுகளிலும் கடல் ஆமைகளின் போக்கையும், வரவையும் பற்றி ஆராய அலைந்தார்.

இந்தியாவில் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வுகளை இருபது ஆண்டுகளாக ஒற்றையாளாக செயல்பட்டு தன் தோளில் சுமந்தவர் அவர். ஒரு பள்ளிக் குழந்தையின் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் வாழ்க்கை கட்டுக்கதை போலத் தோன்றும் என்று ஒரு முறை அவர் தெற்கு கோவாவில் தன் வீட்டில் இருந்தபோது கூறினார். 7500 கிலோமீட்டர் நீளம் உடைய இந்தியக் கடற்கரையின் பல இடங்களுக்கும் கால்நடையாகப் பயணம் செய்து ஆராய்ந்தார்.

இந்தியாவில் இருக்கும் சுமார் 670 தீவுகளுக்கு கடல் ஆமைகளைத் தேடிச் சென்றபோது கொலையாளித் திமிங்கலச் சுறாக்கள் வாழும் பல கடற்பகுதிகளை நீந்திக் கடந்துள்ளார். பல சமயங்களில் கொடிய நஞ்சுடைய ஸ்டோன் பிஷ் உட்பட பல நச்சுப்பாம்புகள், காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இவருடைய நிஜவாழ்க்கை கட்டுக்கதைகள் கூட தோற்கும் விதத்தில் அமைந்தது.

வரைபடத்தில் இல்லாத தீவுகளுக்கு

கடல் ஆமைகள் இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற மனித வாசம் இல்லாத பகுதிகளுக்கே அதிகம் வருகின்றன. 400 மீட்டர் நீளம் 90 மீட்டர் அகலம் உள்ள தீவுகள் பூமியின் வரைபடத்தில் கூட காணப்படுவதில்லை. தங்கள் இனம் அழியாமல் இருக்க கடல் ஆமைகள், இது போன்ற உலகம் அதிகம் அறியாத சிறுதீவுகளையே சார்ந்து வாழ்கின்றன. குடிக்க சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காத இத்தகைய சிறு தீவுகளிலேயே சதீஷ் தன் ஆய்வுகளை மேற்கொண்டார். 1977ல் இவரது ஆய்வுகள் தொடங்கின.satishbhaskerகுஜராத் கடற்கரை முதல் அதிகம் அறியப்படாத நாட்டின் மிகத் தொலைவில் இருக்கும் பிரதேசங்களில் ஒன்றான மெரோ (Meroe) தீவு வரை பயணித்தார். இந்தோனேஷியாவில் நியூ கினி போன்ற தொலைதூரப் பகுதிகளிலும் கடல் ஆமைகளைத் தேடிப் பயணம் செய்தார். 1984-85 காலத்தில் உலக வன நிதியத்தின் (WWF) இந்தோனேஷியா பிரிவின் அழைப்பை ஏற்று, நியூ கினியின் மேற்கு மூலையில் இருக்கும் பொகல்ஹோஃப் கடற்பகுதியில் ஆய்வுகளை நடத்தினார். கடல் ஆமைகள் எங்கே, எத்தனை, எந்தெந்த இனங்கள் எங்கிருந்து வருகின்றன, இனப்பெருக்க காலம் எப்போது போன்ற விவரங்களைக் கண்டுபிடித்தார்.

கடலைக் காதலித்த ஆய்வாளர்

தந்தை பாஸ்கரன், தாய் பத்மினி தம்பதிகளுக்கு ஒரே மகனாக 1946 செப்டம்பர் 11 அன்று கேரளா எர்ணாகுளம் மாவட்டம் சிராய் என்ற இடத்தில் பிறந்தார். தந்தை ராணுவத்தில் மேஜராகப் பணிபுரிந்தார். இந்தியாவில் பல இடங்களில் ஆரம்பக் கல்வி கற்றார். ஷில்லாங் செயிண்ட் எட்மண்ட் கல்லூரியில் இருந்து இண்டர் மீடியட் தேர்ச்சி பெற்றார். சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) மின் பொறியியல் பிரிவில் சேர்ந்தார்.

சென்னையில் இருந்தபோது கடல் மீது ஏற்பட்ட காதலே சதீஷின் வாழ்க்கையை மாற்றியது. சென்னை பாம்புப் பண்ணையின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற ஊர்வன பிரிவு ஆய்வாளர் ராமுலெஸ் விட்டேகருடன் (Romulus Whitaker) பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு இந்தியாவின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வின் தலையெழுத்தையே மாற்றியது. பொறியியல் படிப்பிற்குப் பதில் சதீஷின் கவனம் முழுவதும் பாம்புப் பண்ணை மீதே இருந்தது.

பொறியியல் நூல்களுக்கு பதில் உயிரியல் நூல்களே அவர் மனதைக் கவர்ந்தது! விட்டேகர் அந்த நேரத்தில் முதலைகளின் ஒரு பிரிவு (alligator) பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார். 2010ல் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வுகளுக்காக ஓர் ஆய்வாளரை அப்போது அவர் தேடிக் கொண்டிருந்தார். கடலைக் காதலிக்கும் சதீஷ் பாஸ்கரே அந்த பணிக்காக கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறியியல் படிப்பை முடிக்காமல் கடல் ஆமைகளின் இரகசியங்களைத் தேடி அந்த இளைஞர் புறப்பட்டார்.

சென்னை பாம்புப் பண்ணையின் கள அலுவலர் என்ற நிலையில் செயல்படத் தொடங்கினார். பிறகு இந்திய வன உயிரி நிதியம் (WWF) அவரை பணிக்கு அமர்த்தியது. பாம்புப் பண்ணையில் செயலாளராக இருந்த பிருந்தா பிரிட்ஜிக்க்கை 1981 ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைலா, ஐலின், சந்தியா என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

உலகில் உள்ள எட்டு கடல் ஆமை இனங்களில் ஆலிவ் ரெட்லி, க்ரீன், ஹாக்ஸ்பில் (hawksbill), லோஹர் ஹெட், தோல் முதுகு உள்ளிட்ட இனங்கள் இந்தியக் கரைக்கு வருகின்றன.

இவற்றில் லோஹர் ஹெட் இந்தியாவில் எந்த இடத்திலும் முட்டையிடுவதாக இதுவரை அறியப்படவில்லை. மற்றவற்றில் ஆலிவ் ரெட்லி இனமே இந்தியாவிற்கு அதிகம் வருகை தருகின்றன. உலகில் மிக அதிக எண்ணிக்கையில் இவை ஒரிசா கஹீர்மாதா கரையோரப் பகுதிக்கு இனப்பெருக்கம் செய்து முட்டையிட வருகின்றன. ஆனால் 17 ஆண்டு பணியில் சதீஷ், ரெட்லி இன ஆமைகள் பற்றிய ஆய்வுகளில் அதிகம் ஈடுபடவில்லை.

இந்தியாவில் ரெட்லி ஆமைகள் பற்றி பலர் ஆய்வு செய்கின்றனர். ஆனால் மற்ற இனங்கள் பற்றி இவரைத் தவிர வேறு எவரும் அப்போது அதிக கவனம் செலுத்தவில்லை. இதற்குக் காரணம் மற்ற இனங்கள் ஆள் அரவம் இல்லாத தொலைதூரத் தீவுகளுக்கே வருகின்றன. அந்த இடங்களே இவரின் செயல் தளமாக இருந்தது. இந்தியக் கடற்கரையில் க்ரீன் கடல் ஆமைகள் முட்டையிடுவதை 1982ல் லக் ஷதீவு சுஹேலி தீவில் முதலில் ஆராய்ந்தவர் இவரே.

தோல் முதுகு ஆமைகள் இனப்பெருக்கம் செய்து முட்டையிட அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வருவதை இவரே முதலில் கண்டுபிடித்தார். 1978ல் இந்த இன ஆமைகள் இப்பகுதி கடற்கரைக்கு இனப்பெருக்கம் செய்ய வருவதைக் கண்டறிந்து கூறினார். 1991-1995 காலத்தில் அந்தமானில் ஆள் நடமாட்டம் இல்லாத சவுத்ரீக் தீவில் பல மாதங்கள் தொடர்ந்து தங்கி இருந்து கடல் ஆமைகளின் இனப்பெருக்க முறைகளைக் கண்டறிந்தார்.

பிற்காலத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய ஆய்வுகளுக்கு இதன் மூலம் அவர் அடிப்படை அமைத்துக் கொடுத்தார். சென்னை பாம்புப் பண்ணையே 1990களில் இவருடைய ஆய்வுப் பணிகளுக்கு நிதி வழங்கியது. காலப்போக்கில் நிதி குறைந்ததால் 1995ல் சதீஷ் தன் ஆய்வுகளை இடையிலேயே கைவிட வேண்டி வந்தது. கடல் ஆமைகள் ஆராய்ச்சிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அதே ஆண்டு குடும்பத்துடன் கோவா சென்று வாழ ஆரம்பித்தார்.

விருதுகளும் அங்கீகாரங்களும்

தொழிற்ரீதியாக இவர் உயிரியல் படிக்கவில்லை, பட்டப்படிப்பும் இல்லை. ஒரு அமெச்சூர் ஆய்வாளராகவே வாழ்ந்தார். ஆனால் 1979 நவம்பரில் கடல் ஆமைகளின் பாதுகாப்பு குறித்து வாஷிங்டன் டி.சி.யில் முதல் சர்வதேச மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட இருவரில் ஒருவர் சதீஷ். கடல் ஆமைகள் பற்றிய ஆய்வுகளின் அங்கீகாரமாக 1984ல் ரோலக்ஸ் விருதுடன் ஒரு கைக்கடிகாரமும் பரிசாக இவருக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச கடல் ஆமைகள் சங்கத்தின் (International Sea Turtle Society - ISTW) 30வது ஆண்டு மாநாடு 2010 ஏப்ரலில் கோவாவில் நடந்தபோது அந்த அமைப்பால் அந்த ஆண்டிற்கான ISTW சாம்பியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இன அழிவில் இருந்து ஒரு உயிரினத்தைக் கைப்பிடித்து உயர்த்துவதற்கு, ஒரு மனிதர் அந்த உயிரினத்துடன் அதன் சூழல் மண்டலத்துடன் கொண்ட அர்ப்பணிப்பும் ஆர்வமும் எவ்வாறு உதவும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சதீஷ் பாஸ்கர் என்ற மகத்தான இந்த சூழல் போராளி!

** ** **

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/life-story-of-sea-turtle-conservator-satish-bhasker-by-joseph-antony-1.8416327

https://www.seaturtlesofindia.org/satish-bhaskar/

https://en.m.wikipedia.org/wiki/Sea_turtle

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It