சூழல் பாதுகாவலர்களும், உயிரியல் அறிஞர்களும் பல சமயங்களில் உயிரினங்களின் சிவப்புப் பட்டியல் (Red list) பற்றிப் பேசுவதுண்டு. 1964ல் தோற்றுவிக்கப்பட்ட சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் (IUCN) பூமியில் இன அழிவை சந்தித்த, சந்திக்கும், அபாய நிலையில் இருக்கும் தாவர, விலங்குகளைப் பற்றி வெளியிடும் பட்டியல் இது. இப்பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட 20 இலட்சத்திற்கும் கூடுதலான உயிரினங்கள் பூமியில் வாழ்கின்றன. இதில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான உயிரினங்களே இப்பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பட்டியல் மூலம் இன அழிவு அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும் உயிரினங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை தரப்படுகிறது. சரியான விதத்தில் பாதுகாக்கப்படவில்லை என்றால் இவ்வுயிரினங்களில் பலவும் வருங்காலத்தில் அழிந்துபோகும் ஆபத்து உள்ளது.

அழிந்து விட்டவை (Extinct EX), அழியும் ஆபத்தில் உள்ளவை (Endangered EN), வருங்காலத்தில் அழியும் நிலையில் உள்ளவை (Vulnerable VU), அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடியவை (Threatened) போன்ற சொற்கள் உயிரினங்களின் ஆபத்தான நிலையை சுட்டிக் காட்டுகின்றன. இத்தகைய வகைப்பாடு சில அடிப்படை அம்சங்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுகிறது. உலகில் உள்ள எல்லா உயிரினங்கள் மற்றும் வாழிட சூழல் மண்டலங்களுக்கும் இந்த வகைப்பாடு பொருந்தும்.

இப்பட்டியல் உலகில் உள்ள உயிர்ப் பன்மயத்தன்மையைப் பற்றி பொதுவான ஒரு கருத்தை ஏற்படுத்துகிறது. உயிரினங்களின் மொத்த எண்ணிக்கை, வாழிட சூழல் மண்டலம், எல்லை, பயன்பாடும் வணிகமும், அச்சுறுத்தல்கள், தேவையான பாதுகாப்பு செயல்கள் பற்றிய விவரங்கள் இப்பட்டியலில் உள்ளன.cheetah rhinoஅரசு நிறுவனங்கள், வனம் மற்றும் வன உயிரியல் துறை, உயிர்ப் பன்மயத்தன்மை வாரியம், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இயற்கை வளங்களைத் திட்டமிடுவோர், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், உயிரி வளங்களுடன் தொடர்புடைய வணிகம் செய்வோர் போன்றோருக்கு இப்பட்டியல் உதவுகிறது.

பாலூட்டிகள், இருவாழ்விகள், பறவைகள், பவளப்பாறைகள், பைன் மரங்கள் உட்பட பல இனங்களைச் சேர்ந்த குழுக்கள் அழிவை சந்திக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உயிரினங்களின் அவ்வப்போதைய நிலையை ஆராய்ந்து பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் உயிரினங்கள் அவை இடம்பெற்றுள்ள வகையில் இருந்து மற்றொரு வகைக்கு மாற்றப்படுவதும் உண்டு.

இன்றுள்ள சிவப்புப் பட்டியல் நிலை

இப்போது இப்பட்டியலில் 1,502,300 உயிரினங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. இவற்றில் 42,100 உயிரினங்களுக்கும் மேற்பட்டவை இன அழிவை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருப்பவை. புதிதாக விவரிக்கப்பட்டுள்ள இனங்கள், அதிகம் அறியப்படாத குழுக்களில் உள்ள இனங்கள் போன்றவற்றில் 28% உயிரினங்கள் முதல்முதலாக விவரிக்கப்பட்டுள்ளன.

உலகில் உள்ள இருவாழ்விகளில் 41%, சுறாக்களில் 37%, கோனிஃபர்களில் 34%, பவளப்பாறைகளில் 36%, பாலூட்டிகளில் 27%, பறவைகளில்13%, ஊர்வனவற்றில் 21%, சைகாடுகளில் (Cycads) 69% இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உயிரினங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் குறைவு, மொத்த எண்ணிக்கை, புவியியல் பரப்பு, வளங்களின் விநியோக நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அழிந்தவை முதல் மதிப்பிடப்படாதவை வரை ஒன்பது குழுக்களாக உயிரினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எட்டாவது குழுவில் இருந்து முதல் குழுவிற்கு செல்லும்போது உயிரினங்கள் ஆபத்தான நிலையை எதிர்கொள்வதைப் புரிந்து கொள்ளலாம். முதல் குழுவில் உள்ள உயிரினங்கள் எவையும் இப்போது பூமியில் உயிருடன் இல்லை (EX). 

1 - அழிந்து போனவை (EX)

இவை இன அழிவைச் சந்தித்தவை. ஒருங்கிணைந்த ஆய்வுகள் மூலம் ஓர் உயிரினத்தைப் பற்றிய விவரங்கள் கிடைக்காமல் போகும்போது அந்த உயிரினம் அழிந்ததாக வகைப்படுத்தப்படுகிறது. மாமூத்கள், டைனசோர்கள், டோடோ போன்றவை எடுத்துக்காட்டுகள். அண்மைக் காலத்தில் பயணப் புறாக்கள் (Passenger pigeons) 1914ம் ஆண்டிலும் மற்றும் மேற்காப்பிரிக்க காண்டாமிருகங்கள் 2011ம் ஆண்டிலும் அழிந்து போன உயிரினங்களாக அறிவிக்கப்பட்டன.

2 - காட்டில் இன அழிவைச் சந்தித்தவை (Extinct in the Wild EW)

இந்த வகை உயிரினங்கள் விலங்கு காட்சி சாலைகள், வளர்ப்பு மையங்கள், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் மட்டும் வாழ்பவை. பொதுவாக ஓர் உயிரினம் ஐம்பது ஆண்டுகளாக காடுகளில் காணப்படவில்லை என்றால் அந்த இனம் இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.

3 - அழிவின் விளிம்பில் உள்ளவை (Critically endangered CR)

இன அழிவைச் சந்திக்கும் ஓர் உயிரினத்தின் எண்ணிக்கை மோசமான நிலைக்குக் குறைந்தால் அல்லது வாழிட சூழல் குறிப்பிடத்தக்க விதத்தில் மாறினால் அவை அழிந்து போகும் வாய்ப்புகள் அதிகம். இத்தகையவை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களாகப் பட்டியலிடப்படுகின்றன.

4 - அழியும் ஆபத்தில் உள்ளவை (EN)

வனச்சூழலில் இன அழிவை எதிர்கொள்ளும் ஓர் உயிரினம் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றால் இவை பூமியில் உயிருடன் வாழ்வதற்கான அச்சுறுத்தல் அதிகமாகும்.

5 - ஆபத்தில் உள்ளவை (VU)

இந்த வகையில் உள்ள உயிரினங்களும் அழியும் ஆபத்தை எதிர்கொள்பவை. மிதமிஞ்சிய சுரண்டல், வாழிட அழிவு போன்றவற்றால் இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறையலாம். இவை இப்போது அதிக எண்ணிக்கையில் காணப்படலாம் என்றாலும், மிதமிஞ்சிய சுரண்டல், வாழிட நாசம் போன்றவை தடுக்கப்படவில்லை என்றால் இத்தகையவை வருங்காலத்தில் அழியும் ஆபத்திற்கு உள்ளாக நேரிடும்.

6 - எதிர்காலத்தில் ஆபத்திற்கு உள்ளாகக் கூடியவை (Near Threatened NT)

எதிர்காலத்தில் அழியக்கூடிய ஆபத்திற்கு உள்ளாகும் உயிரினங்கள் இந்த வரிசையில் சேர்க்கப்படுகின்றன. சில சமயங்களில் இத்தகைய ஒரு உயிரினம் அரிய வகை உயிரினமாகவும் (Rare Species) கருதப்படுகிறது.

7 - ஆபத்து இல்லாத உயிரினங்கள் (Least Concerned LC)

முன்பு உள்ள வகைகளின் அம்சங்களைக் கொண்டு ஆராயப்படும்போது ஓர் உயிரினம் அதிக எண்ணிக்கையில் நிறைய இருந்தால், இந்த வகையில் உட்படுத்தப்படுகிறது. இந்த உயிரினங்கள் வருங்காலத்தில் இன அழிவை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

அழியும் ஆபத்து குறைவானதே என்றாலும், உலகளாவிய உயிர்ப் பன்மயத்தன்மையின் அடிப்படையில் இப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவையே என்பதால் ஐ யூ சி என் பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளன. இந்த வகை உயிரினங்கள் கண்காணிக்கப்பட்டு வருங்காலத்தில் ஆபத்தான நிலைக்கு செல்லாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இது உதவுகிறது.

8 - தரவுகள் குறைவானவை (Data Deficient (DD))

ஓர் உயிரினத்தை அதன் எண்ணிக்கை மற்றும் அதன் பரவலை அடிப்படையாகக் கொண்டு அவை இன அழிவை சந்திக்கும் வாய்ப்பு பற்றி ஆராய அல்லது நேரடியாக மதிப்பிடத் தேவையான தரவு விவரங்கள் (data) போதிய அளவுக்கு இல்லையென்றால் அவை இந்த வகையில் உட்படுத்தப்படுகின்றன.

இதில் உள்ளவற்றின் எண்ணிக்கை, பரவல் பற்றி பட்டியலில் போதுமான விவரங்கள் இடம்பெற்றிருக்காது. இந்த வகையில் உள்ள உயிரினங்கள் பற்றி கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது.

9 - மதிப்பிடப்படாதவை (Not Evaluated NE)

ஓர் உயிரினம் சிவப்புப் பட்டியலில் இல்லை என்றால் அது மதிப்பிடப்படாத உயிரினமாகக் கருதப்படுகிறது. போதுமான விவரங்கள் இல்லாததால் அது மதிப்பிடப்படுவதில்லை. இத்தகைய உயிரினங்கள் இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் இணைய பக்கப் பட்டியலில் இடம்பெறுவது இல்லை.

பூமியில் வாழும் உயிரினங்கள் மற்றும் அவை பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி சிவப்புப் பட்டியல் நமக்கு எடுத்துக் கூறுகிறது.

மேற்கோள்https://www.mathrubhumi.com/environment/columns/about-all-you-need-to-know-about-iucn-and-red-list-1.8419533

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It