இதுவரை மனிதன் ஆழ்கடலில் அறியாத இடத்தில் ஒரு அதிசய உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய நத்தை மீன் (Snailfish) வகை சூடொலிபாரிஸ் (Pseudoliparis) இனத்தைச் சேர்ந்தது. 2022ல் தொடங்கிய இந்த ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டு மாத ஆழ்கடல் ஆய்வின்போது விஞ்ஞானிகள் பயன்படுத்திய தானியங்கி வாகனங்களின் புகைப்படக் கருவியில் இந்த மீனின் படங்கள் பதிவாகியுள்ளது. 8000 மீட்டருக்குக் கீழ் ஆழ்கடலில் வாழும் ஒரு புதிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

தென்மேற்கு ஜப்பானில் இஸு-ஒகஸ்வாரா பள்ளத்தில் (IZu-Ogasawara trench) கடலின் 8336 மீட்டர் ஆழத்தில் இந்த உயிரினம் வாழ்வது தெரிய வந்துள்ளது. இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு சுடொலிபாரிஸ் பெலியிவி (Pseudoliparis belyaevi) இனத்தைச் சேர்ந்த வேறு இரண்டு மீன்களின் புகைப்படமும் ஆழ்கடல் வாகனத்தின் புகைப்படக் கருவியில் பதிவாகியிருப்பது தெரிய வந்தது. இவை ஜப்பானின் அதே பகுதியில் 8022 மீட்டர் ஆழத்தில் நீந்திக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.deepest fish in japanபத்தாண்டு ஆய்வுத் திட்டம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் மைண்டரூ (Minderoo) பல்கலைக்கழகத்தின் ஆழ்கடல் ஆய்வுப் பிரிவு விஞ்ஞானிகள் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர்.

8000 மீட்டர் ஆழமுள்ள ஜப்பான் கடற்பகுதி, 9300 மீட்டர் ஆழமுடைய இஸு-ஒகஸ்வாரா பள்ளம் மற்றும் 7300 மீட்டர் ஆழமுடைய யுக்கியு (Ryukyu) பள்ளம் ஆகிய பகுதிகளில் வாழும் ஆழ்கடல் மீனினங்கள் பற்றி அறிய இந்த ஆய்வுகள் நடந்தன. உலகில் ஆழ்கடலில் வாழும் மீனினங்கள் பற்றி அறிய நடைபெற்று வரும் பத்தாண்டு கால ஆய்வின் ஒரு பகுதியாக இந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆளில்லா ஆழ்கடல் மிதவை லேண்டர் (landers) வாகனங்கள் மற்றும் அவற்றில் பொருத்தப்பட்ட அதி நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய, மீன்களைத் தன்பால் ஈர்க்கும் தன்மையுடைய தூண்டில் கேமராக்களை (baited cameras) பயன்படுத்தி விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆழ்கடல் பள்ளங்களின் ஆழமான பகுதிகளில் இக்கருவிகள் மிதக்க விடப்பட்டன.

உலகில் இதுவரை தேங்கிய நீர் முதல் கடலின் ஆழமான பகுதிகள் வரை 4000 நத்தை மீன் இனங்கள் வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. இந்த வகையைச் சேர்ந்த சில மீனினங்கள் பெற்றுள்ள சிறப்புத் தகவமைப்பின் மூலம் இதே பேரினத்தைச் சேர்ந்த மற்ற நத்தை மீன்களைக் காட்டிலும் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இவை வாழ்கின்றன என்று இந்த ஆய்வுப்பயணத் திட்டத்தின் தலைவர் மற்றும் மைண்டரூ ஆழ்கடல் ஆய்வுப்பிரிவின் (UWAD) நிறுவனர் பேராசிரியர் ஆலன் ஜெமிசன் (Prof Alan Jamieson) கூறியுள்ளார்.

8000 மீட்டர் ஆழத்தில் வாழும் உயிரினத்தின் உடலமைப்பு எப்படி இருக்கும்?

மேற்பரப்பில் இருப்பதை விட கடலின் எட்டாயிரம் மீட்டர் ஆழத்தில் அழுத்தம் எட்டு மடங்கு அதிகமாக இருக்கும். உலகின் மிக ஆழமான கடற்பகுதியில் வாழும் இந்த மீனின் படத்தில் இருந்து அது கரணைகள் போன்ற காப்பு புடைப்புகளுடன் கூடிய, முண்டுமுடிச்சுகள் உள்ள, வளைந்து நெளிந்த அமைப்புடன் (gnarly) கறுத்த நிறத்தில் பெரிய பற்கள் போன்ற பகுதியையும் சிறிய கண்களையும் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது என்று ஆலன் கூறியுள்ளார்.

இதன் கறுப்பு நிறத்திற்கும் இது வாழும் ஆழ்கடற்பகுதிக்கும் தொடர்பில்லை என்று கருதப்படுகிறது. அடிக்கடி காண முடிவதில்லை என்பதால் இது போன்ற ஆழ்கடல் உயிரினங்களின் சிறப்புத் தகவமைப்புகளை ஆராய்வது கடினமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவற்றின் உடலில் நீச்சல் சிறுநீர்ப் பைகள் (swim bladders) காணப்படுவதில்லை. இது இவை மிக ஆழமான கடலில் வாழ உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

உயர் அழுத்தம் உள்ள பகுதிகளில் உடலில் வாயுக்குழி (gas cavity) போன்ற உடற்பகுதியைப் பெற்றிருப்பது மிகக் கடினம். இந்த மீன்கள் செதில்கள் அற்றவை. இதற்குப் பதில் இவை கூழ்மத் தன்மையுடைய அடுக்கைப் பெற்றுள்ளன. இது மீனின் உடற்செயலியக்கத்திற்கு உதவுகிறது என்று ஆலன் கருதுகிறார்.

சாதனை ஆழத்தில்

கேமராவில் இளம் மீன் ஒன்றின் படமே பதிவாகியுள்ளது. மற்ற ஆழ்கடல் மீன்கள் போல் இல்லாமல் நத்தை மீனினங்களில் வளர்ந்த மீன்களை விட இளம் மீன்களே அதிக ஆழமுடைய பகுதிகளில் காணப்படுகின்றன.

8000+ மீட்டர் ஆழத்திற்கும் அதிகமான பகுதிகளில் மிகச் சிறிய உயிரினங்களே அதிகமாக வாழ்கின்றன. இப்போது இஸு-ஒகஸ்வாரா பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மீன் இதற்கு முன் 2017ல் 8178 மீட்டர் ஆழத்தில் மரியான (Mariana) பள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நத்தை மீன் வாழ்ந்த ஆழத்தை விட 158 மீட்டர் அதிக ஆழத்தில் வாழ்கிறது. இது ஒரு சாதனை ஆழம். 2017 ஆய்வையும் ஆலன் ஜெமிசனே நடத்தினார். ஜப்பான் ஆய்வுகள் மரியானா பள்ளத்தில் வாழும் நத்தை மீன் உலகில் மிக ஆழமான கடற்பகுதியில் வாழும் மீனினமாக இருக்காது என்று முன்பு கருதப்பட்டதை உறுதி செய்துள்ளது என்று ஆலன் கூறுகிறார்.

கடலாழத்தில் ஒரு உயிரினத்தின் வாழ்க்கை

ஆழ்கடல் வாழ் உயிரினங்களின் தகவமைப்பிற்கு வெப்பநிலை மற்றும் அழுத்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. குளிர்ச்சி உள்ள பகுதிகளுக்குச் செல்லச் செல்ல தெளிவற்ற தன்மை அதிகமாகிறது. வெதுவெதுப்பான பகுதிகளுக்குச் செல்லச் செல்ல ஆழம் அதிகரிக்கிறது. ஜப்பான் பள்ளம் பசுபிக் பெருங்கடலில் மரியானா பள்ளத்திற்கு வட திசையில் தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு கடல் நீர் மரியானாவை விட சிறிதளவு அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது. இது நீரின் ஆழத்தில் வேறுபாடு ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 8200-8400 மீட்டர் ஆழத்தில் மீனினங்கள் வாழ்வது சாத்தியமற்றது என்று கருதப்பட்டது. மீன்கள் ஆஸ்மலைட் (Osmolyte) என்ற அழுத்தத்தை சமாளிக்கும் தன்மையுடைய திரவத்தை (fluid) பெற்றுள்ளது.

மீன்களுக்கென்று தனி வாசனை ஏற்பட இதுவே காரணம். உயிரி வேதியியல்ரீதியாக மீன்கள் வாழும் ஆழத்திற்கும் இந்த திரவத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. 8200-8400 மீட்டர் ஆழத்தில் வெப்பநிலை வேறுபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. செல்களில் உள்ள இந்த திரவத்தின் அடர்த்தி மேலும் அதிகரிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது ஐசஸ்மோசிஸ் (Isosmosis) என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆய்வின்போது 250 முறை ஆழ்கடல் மிதவை வாகனங்கள் பயன்படுத்தப்பப்டன. இந்த ஜப்பான் ஆய்வின்போது கேமராவின் சாளரப்பகுதி குறுகலாக்கப்பட்டது. ஒவ்வொருமுறை வாகனம் கடலின் 8336 மீட்டர் ஆழத்தில் நிறுவப்பட்டபோதும் இந்த மீன்கள் காட்சி தந்தன.

பூமியிலேயே ஆழமான பகுதியில் வாழும் இந்த மீனின் கண்டுபிடிப்பு இயற்கை என்னும் அற்புதக் கலைஞனின் படைப்பில் மனிதன் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதையே நினைவுபடுத்துகிறது!

மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2023/apr/03/scientists-find-deepest-fish-ever-recorded-at-8300-metres-underwater-near-japan?

&

Deepest ever fish caught on camera off Japan - https://www.bbc.co.uk/news/science-environment-65148876

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It