வாழிடங்களின் ஆரோக்கியம் மனிதர்களின் நலம் மட்டும் அல்ல; எல்லா உயிரினங்களின் நலமும் சேர்ந்ததுதான் அது என்பதை கொரோனா தொற்றுக் காலத்தில் உலகம் புரிந்து கொண்டது. தாவரங்கள், விலங்குகள், பறவையினங்கள் அடங்கிய உயிரினங்களின் உலகைப் பற்றி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகள் மனிதன் இதுவரை பார்த்த கண்களைக் கொண்டு சுற்றிலும் இருக்கும் உயிரினங்களை இனி பார்க்கக் கூடாது என்பதை உணர்த்துகின்றன.

எல்லா உயிரினங்களுக்கும் உணர்வுகள் உண்டு

மனிதனுக்கும் சுற்றுப்புறத்திற்கும், மனிதனுக்கும் எண்ணற்ற உயிரினங்களுக்கும் இடையில் இருக்கும் உறவை எவ்வாறு நீதியுடன் கையாளலாம் என்பது பற்றியே நவீன அறிவியல் இன்று மனித குலத்திற்கு எடுத்துச் சொல்கிறது. மற்ற உயிரினங்களுக்கும் மனிதனுக்கு இருப்பது போலவே உணர்வுகளும் சிந்தனைகளும் உண்டு என்பதை வெகுகாலம் ஆய்வாளர்கள் ஏற்கவில்லை. பாலூட்டிகளுக்கும், மனிதனுக்கு முன் தோன்றிய குரங்கினங்களுக்கும் உள்ள ஆற்றலும் அறிவுக்கூர்மையும் மீன்களுக்கு இல்லை என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது.

இன்றும் பல விஞ்ஞானிகள் மீன்கள் உணர்வு உள்ளவை என்பதை ஏற்க மறுக்கின்றனர். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக தொட்டி மீன்களின் நடத்தை பற்றி ஆராய்ந்து வரும் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த உயிரினங்கள் உணர்வுப்பூர்வமாக வாழ்கின்றன என்று வலியுறுத்திக் கூறுகிறார்கள்.koi fishமீன்களின் சிந்தனைகள், அவற்றின் சமூக, வாழ்வியல் முறைகளைப் பற்றி புதிய ஆய்வு முடிவுகள் இதுவரை மனிதகுலம் அறியாத பல வியப்பூட்டும் உண்மைகளைக் கூறுகிறது. ஒரு மீன், மற்றொரு மீனிடம் உள்ள பயம், பதட்டம் போன்ற உணர்வுகளைப் புரிந்து கொள்கிறது. அந்த உணர்வுகளை அது பகிர்ந்து கொள்கிறது என்று சமீபத்தில் சயன்ஸ் (Science) என்ற ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை கூறுகிறது.

மீன்களின் மூளையில் உள்ள ஆக்சிடாசின் (Oxytocin) என்ற வேதிப்பொருள் இதற்குக் காரணமாக உள்ளது என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.

ஜீப்ரா மீன்களில் நடந்த ஆய்வுகள்

ஆய்வுக்கூடத்தில் ஜீப்ரா (Zeebra) மீனின் மூளையில் இருந்து இப்பொருள் அகற்றப்பட்டு ஆராயப்பட்டது. அந்த மீன்கள், சக மீன்களின் பதட்டத்தைப் புரிந்து கொள்ள முடியாத உயிரினங்களாக (antisocial) மாறிவிட்டன! இப்பொருளை மீண்டும் செலுத்தியபோது அந்த மீன்கள் இயல்பான நிலைக்கு மாறின.

சக மனிதர்களைப் பரிவுடன் நடத்தும் நம் பண்பிற்கு (care) வரலாற்றுக்கால பழமை உண்டு. மனிதர்கள், பாலூட்டிகள், மீன்கள் போன்ற உயிரினங்கள் பரிணாம ரீதியில் தோன்றுவதற்கு முன்பிருந்த காலத்தில் வாழ்ந்த ஆதி உயிரினங்களிடம் இந்தப் பண்புகள் உருவாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

நிம்மதியில்லாத வாழ்வு

வளர்ப்பு மீன்களின் வாழிடம், கடல், ஏரி குளங்களைப் போன்றதல்ல. மீன் பண்ணை, ஆய்வுக்கூடம் மற்றும் மீன் தொட்டியில் வாழும் மீன்களுக்கு மின்சார வெளிச்சம் நிம்மதியில்லாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. பளபளப்பு மிக்கக் கண்ணாடிச் சுவர்களை அவற்றால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.

இயற்கையில் நீர் நிலைகளில் இருக்கும் தாது உப்புகள் தொட்டியில் இருக்கும் நீரில் இல்லை. இதுபோன்ற செயற்கை வாழிடச் சூழல்களில் வாழும் மீன்கள் மன அழுத்தத்தை (stress) அனுபவிக்கின்றன. அவை வேதனை உணர்வை வெளிப்படுத்துகின்றன. சில இன மீன்கள் புதிய சூழ்நிலைகளை விரும்புகின்றன. வேறு சில கூட்டு சேர்ந்து வாழ விரும்புகின்றன.

தொட்டியில் உணவு, சுத்தநீர் போல அவற்றின் வாழிடமும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளர்ப்பு மீன்களுக்காக பொதுவான ஒரு வாழிடச் சூழலை உருவாக்குவது சுலபமானதில்லை. ஒவ்வொரு இன மீனுக்கும் அவசியமான சூழல் வெவ்வேறானது. ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபட்ட வளர்ச்சிக் கட்டங்கள் உள்ளன.

ஈல் இன மீன்கள் குஞ்சாக இருக்கும்போது நதியில் மண்ணிற்கடியில் ஒளிந்து கொண்டு வாழ விரும்புகின்றன. வளர்ந்தவுடன் இந்த குணம் அவற்றிடம் காணப்படுவதில்லை.

நடத்தை ஆய்வுகள்

மீன்களின் நடத்தை ரீதிகள் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளன. 2007ல் ஆய்வுக்கூடங்களில் அடைக்கப்பட்ட நிலையில் வாழும் உயிரினங்கள் பற்றி நடத்தப்பட்ட எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு முடிவுகள் விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டன. இவற்றில் மீன்கள் பற்றிய ஆய்வுகள் 0.1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நடந்துள்ளது.

ஆய்வுக்கூடங்களில் தொட்டிகளில் நீண்டகாலம் வாழும் மீன்கள் போன்ற உயிரினங்கள் நிம்மதியில்லாத வாழ்வை நடத்துகின்றன. இதனால் மீன்களின் பதில் வினை புரியும் தன்மை வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் எவ்வாறு உண்மையானதாக இருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சால்மன் மீன்கள்

சால்மன் மீன்களின் எண்ணிக்கை குறைந்தபோது மீன் முட்டை பொரிக்கும் கூடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மீன் குஞ்சுகள் நதியில் விடப்பட்டன. ஆனால் அவை அந்த இயற்கை சூழ்நிலையில் வாழ முடியாமல் உயிரிழந்தன. இயற்கையான வாழிடச்சூழல் போல உருவாக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து கொண்டு வரப்பட்டவை, நதியில் விடப்பட்டபோது அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை உயிர் வாழ்ந்தன.

செடிகள், மறைவிடங்கள் இருக்கும் மீன் தொட்டிகளில் இந்த இன மீன்கள், இச்சூழல் இல்லாத தொட்டிகளில் இருக்கும் மீன்களை விட அதிக இனப்பெருக்கத் திறன் பெற்றவையாக இருந்தன. எதுவும் இல்லாத தொட்டியில் சிறிதளவு கற்கள் போடப்பட்டபோது அதில் இருந்த சால்மன் குஞ்சுகளின் மூளை வளர்ச்சி வேகமாக நடந்தது.

மீன் தொட்டியில் பாறைகளும், கற்களும்

நதிகளில் இருப்பது போல பாறைகள், கற்களை தொட்டியில் போட்டபோது இவற்றின் குஞ்சுகளிடையில் மன அழுத்தம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய கற்கள், மரக்கிளைகள் போடப்பட்ட தொட்டிகளில் வளர்ந்த மீன்களில் பாக்டீரியா தொற்று குறைவாகக் காணப்பட்டது. மிகச் சிறந்த வாழிடச் சூழலை ஏற்படுத்தினால் வளர்ப்பு மீன்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

தமக்கென்று விருப்பு வெறுப்புகள், தேவைகள், சிக்கலான வாழ்வியல் முறைகளை உடைய மற்ற உயிரினங்களை தன்னுடைய தேவைகளுக்காக பயன்படுத்தவே மனிதன் விரும்புகிறான்.

இதனால் மற்ற உயிரினங்களின் சுதந்திரத்தையும், உணர்வுகளையும் மனிதன் ஏற்க மறுக்கிறான், அலட்சியப்படுத்துகிறான், புறக்கணிக்கிறான். இந்த மனப்போக்கு இருப்பதாலேயே மனிதன் பல உயிரினங்களை தன்னை விட தாழ்ந்தவையாகக் காண்கிறான். சில உயிரினங்களை மட்டும் பாசத்துடன் வளர்க்கிறான். பாம்புகள் போன்ற வேறு சிலவற்றை ஈவு இரக்கம் இல்லாமல் கொல்கிறான்.

மீன்களும் இனவியல் இரைகளே. நிறவெறி, பாலியல் வேறுபாடு அநீதி போல இனவியல் வேறுபாடும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதிலிருந்து மனித குலம் மீளும் காலமே மற்ற உயிரினங்களுக்கு விடியல் காலமாக இருக்கும்.

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/nature-future-column-on-fishes-and-their-emotional-pain-1.8565835

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

சூழல் நட்புடைய உலக நாடுகளின் பட்டியலில் முதலில் நிற்பது சுவிட்சர்லாந்து. இங்கு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொல்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 26 மாகாணங்கள் உள்ள இந்நாட்டில் 25 மாகாணங்களிலும் வேட்டையாடுதல் சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது.

மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதால் இங்கு வேட்டையாடுதல் நடைபெறவில்லை. வன விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி கொல்லப்பட்டவற்றின் இறைச்சியை உணவாக உட்கொள்ள வேட்டையாடுதல் நடைபெறுகிறது. இந்நாட்டில் 30,000 முழுநேர வேட்டைக்காரர்கள் உள்ளனர். இதில் 1500 பேர் பெண்கள்.

2016ல் இங்கு 40,616 ரோ மான்கள், 11,873 சிவப்பு மான்கள், 11,170 சமோய்ஸ் என்னும் காட்டு ஆடுகள் வேட்டையாடப்பட்டன. இவை தவிர ஐபக்ஸ், குள்ளநரிகள், அணில்கள், முயல்களையும் வேட்டையாடுவதுண்டு. இவ்வாறு வேட்டையாடிய பிறகும் அங்கு உணவகங்களுக்குத் தேவையான விலங்கு இறைச்சியில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கிறது. அதனால் இந்நாடு மீதியை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

விவசாயத்திற்கும் வளர்ப்பு விலங்குகளுக்கும் தொல்லை தருவதால் பாதுகாக்கப்படும் விலங்கான செந்நாய்களையும் வேட்டையாட சுவிஸ் அரசு தீர்மானித்துள்ளது.huntingபின்லாந்தில் நடப்பதென்ன?

ஸ்கான்டிநேவியன் நாடுகள் என்றால், அங்கு நிலவும் சூழல் நட்புடைய வாழ்க்கைமுறையே நம் நினைவிற்கு வரும். கேரள மாநிலத்தைப் போல எட்டு மடங்கு பெரிய நாடு பின்லாந்து. உலகின் மிகச்சிறந்த வாழ்க்கைத் தரம் உள்ள நாடு என்று பெயர் பெற்ற இங்கு 300 செந்நாய்கள் வாழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த 2023ல் இவற்றில் 20 செந்நாய்களைக் கொல்ல அரசு முடிவு செய்தது. இங்கு மூன்று இலட்சம் வேட்டைக்காரர்கள் உள்ளனர்.

ஸ்வீடனும் நார்வேயும்

உலகப் புகழ் பெற்ற சூழல் போராலி க்ரெட்டா தன்பெர்க் வாழும் நாடான ஸ்வீடனில் 2023ல் மொத்தமுள்ள 400 செந்நாய்களில் 200 நாய்களைக் கொல்ல அரசு முடிவெடுத்து செயல்படுத்தியது. நோபல் விருதிற்கு புகழ்பெற்ற நார்வேயில் செந்நாய்கள் ஆடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அங்கு வாழும் 68 விலங்குகளில் 70 சதவிகிதம் விலங்குகளையும் கொல்ல முடிவு செய்தபோது சூழல் போராளிகளின் பலத்த எதிர்ப்பினால் இந்த எண்ணிக்கை பதினைந்தாகக் குறைந்தது.

ஜெர்மனி

இந்நாட்டில் பல விதமான வேட்டையாடல்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் தொகை நாட்டிற்கு கணிசமான வருமானத்தை ஈட்டித் தருகிறது. மான்கள், காட்டுப்பன்றிகள், முயல்கள் மற்றும் பலதரப்பட்ட பறவைகள் இங்கு வேட்டையாடப்படும் விலங்குகளில் ஒரு சில.

கொல்லப்படும் தேசிய விலங்கு

ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரு வேட்டையாடப்படும் முக்கிய விலங்கு. ஆண்டுதோறும் இருபது இலட்சம் கங்காருகள் அங்கு சுடப்பட்டு கொல்லப்படுகின்றன. கங்காரு சாது விலங்குதான் என்றாலும், எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவே அவை கொல்லப்படுகின்றன. தலையில் சுட்டு கொல்ல வேண்டும் என்பதே சட்டம். கொல்லப்பட்ட கங்காருவை அவர்கள் எரிப்பதில்லை, குழி தோண்டிப் புதைப்பதில்லை. உணவாக உட்கொள்கின்றனர். இங்கு நடைபெறும் கங்காரு வேட்டையே உலகின் மிகப் பெரிய வன விலங்கு வேட்டை.

நியூசிலாந்தில்

இங்கு விலங்குகளை வேட்டையாடுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய வன விலங்கு சரணாலயங்களில் கூட எந்த விலங்கினை வேண்டுமானாலும் வேட்டையாடலாம். ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டு பயணம் செய்வதில் எந்தத் தடையும் இல்லை. வேட்டையாடுதல் ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு.

மனிதர்கள் இங்கு குடியேறும் முன்புவரை இந்நாட்டில் இரண்டு வகை வௌவால்கள் மற்றும் இரண்டு வகை சீல்கள் மட்டுமே பாலூட்டிகளாக வாழ்ந்து வந்தன. ஐரோப்பிய குடியேறிகள் வேட்டையாட, உணவிற்காக தங்களுடன் விலங்குகளையும் இங்கு கூட்டிக் கொண்டு வந்தனர். இப்போது இங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கும், வடிவில் பெரிய சிவப்பு மான்கள் வேட்டையாடுபவர்களுக்கு மிகப் பிடித்தமான விலங்கு.

வேட்டையாடிக் கொன்ற மான்களை உண்பதற்கும், மான் தோலை சுவர் அலங்காரமாகப் பயன்படுத்தவும் வேட்டைக்காரர்கள் அவர்கள் வேட்டையாடியதை சொந்த நாடுகளுக்குக் கொண்டு செல்வதில் எந்தத் தடையும் இல்லை.

இந்தியாவில் இருந்து 1903ல் நியூசிலாந்திற்கு அன்பளிப்பாக அனுப்பப்பட்ட மூன்று இணை இமாலயன் தார் என்ற ஆடு வகையைச் சேர்ந்த விலங்குகள் 1970களில் நாற்பதாயிரமாக அதிகரித்தன. அதனால் இவை வேட்டையாடப்பட்டன. 1984ல் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் குறைவாக ஆனபோது இவற்றை வேட்டையாடுவதில் சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இப்போது இவற்றின் எண்ணிக்கை 1000.

பல இன மான்கள் தவிர பன்றிகள், வாத்துகளும் இங்கு வேட்டையாடப்படுகின்றன. 110 கிலோ வரை எடையுடைய பன்றிகள், நாய்கள் உதவியுடன் வேட்டையாடப்படுகின்றன. இயற்கையாக வளரும் விலங்குகளின் இறைச்சிக்கு சுவை அதிகம் என்பதால் சூழல் நாசத்தை ஏற்படுத்தும் பன்றி வேட்டை இங்கு பிரபலமானது.

வேட்டையாடச் செல்பவர்களுக்கு உதவ, உடன் செல்ல பலவித பாக்கேஜ்கள் உண்டு. ஐந்து நாள் வேட்டை, நான்கு நாள் இரவுத் தங்கல் மற்றும் இரண்டு ஆட்கள் உதவியுடன் டிராபி அல்லது வேட்டைப்பரிசாக பெரிய மான் ஒன்றின் தலையைக் கொண்டு செல்ல ஆகும் செலவு நான்கு இலட்சம் ரூபாய்!

அமெரிக்காவும் கனடாவும்

அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்பில் 60% இடங்களில் வேட்டைக்கு அனுமதி உண்டு. தேசிய வன விலங்கு சரணாலயங்களிலும் விலங்குகளைக் கொல்லலாம். ஆண்டுதோறும் ஒன்றரை கோடி வேட்டைக்காரர்கள் 20 கோடிக்கும் கூடுதலான வன விலங்குகளை கொல்கின்றனர். இது அங்கு வாழும் மக்கதொகையில் பாதியளவு. கனடாவில் ஆண்டுதோறும் 30 இலட்சம் உயிரினங்கள் 13 இலட்சம் வேட்டைக்காரர்களால் கொல்லப்படுகின்றன.

தீர்வு யார் கையில்?

வாழிடம் சுருங்கிய வன விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுதல் மற்றும் இனப்பெருக்க கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சில நாடுகள் முயல்கின்றன. என்றாலும் இது நடைமுறையில் முழு வெற்றி பெறவில்லை. இந்த இரண்டு செயல்களின்போதும் மனிதன் வன விலங்குகளுடன் நெருங்கிப் பழக நேரிடும்.

இதன் மூலம் இதுவரை அறியப்படாத பல புதிய நோய்கள் வனப்பகுதிகளில் வாழும் மற்ற விலங்குகளுக்குப் பரவலாம். வன விலங்குகளைப் பிடிக்கும்போது காயம் படும் விலங்குகள் பிறகு காடுகளில் வாழ இயலாமல் போகலாம். ஒரு இடத்தில் பிடிக்கப்படுபவை மற்றொரு இடத்தில் வாழ்வது சாத்தியமற்றதாகலாம். ஆப்பிரிக்காவில் யானைகளுக்கு இனப்பெருக்கத் தடை ஏற்படுத்த முயற்சிகள் நடந்தன.

திறந்தவெளிப் பரப்பாக இருக்கும் காடுகளில் யானை போன்ற விலங்குகளுக்கு இனப்பெருக்கத் தடை ஏற்படுத்துவது சுலபமானதில்லை. இதற்கு மாற்றாக மக்கட்தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். காடுகளை மனிதன் ஆக்ரமிப்பதை நிறுத்த வேண்டும். வன விலங்குகளின் இயல்பான வாழிடங்களை அழிக்காமல் அவற்றின் போக்கில் அவற்றை வாழ விடுவதே சிறந்த தீர்வு என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/eco-story-column-by-vinay-raj-speaks-about-culling-and-it-s-implementation-in-eco-friendly-countries-1.8228451

Pin It

சூழல் பாதுகாவலர்களும், உயிரியல் அறிஞர்களும் பல சமயங்களில் உயிரினங்களின் சிவப்புப் பட்டியல் (Red list) பற்றிப் பேசுவதுண்டு. 1964ல் தோற்றுவிக்கப்பட்ட சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் (IUCN) பூமியில் இன அழிவை சந்தித்த, சந்திக்கும், அபாய நிலையில் இருக்கும் தாவர, விலங்குகளைப் பற்றி வெளியிடும் பட்டியல் இது. இப்பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட 20 இலட்சத்திற்கும் கூடுதலான உயிரினங்கள் பூமியில் வாழ்கின்றன. இதில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான உயிரினங்களே இப்பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பட்டியல் மூலம் இன அழிவு அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும் உயிரினங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை தரப்படுகிறது. சரியான விதத்தில் பாதுகாக்கப்படவில்லை என்றால் இவ்வுயிரினங்களில் பலவும் வருங்காலத்தில் அழிந்துபோகும் ஆபத்து உள்ளது.

அழிந்து விட்டவை (Extinct EX), அழியும் ஆபத்தில் உள்ளவை (Endangered EN), வருங்காலத்தில் அழியும் நிலையில் உள்ளவை (Vulnerable VU), அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடியவை (Threatened) போன்ற சொற்கள் உயிரினங்களின் ஆபத்தான நிலையை சுட்டிக் காட்டுகின்றன. இத்தகைய வகைப்பாடு சில அடிப்படை அம்சங்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுகிறது. உலகில் உள்ள எல்லா உயிரினங்கள் மற்றும் வாழிட சூழல் மண்டலங்களுக்கும் இந்த வகைப்பாடு பொருந்தும்.

இப்பட்டியல் உலகில் உள்ள உயிர்ப் பன்மயத்தன்மையைப் பற்றி பொதுவான ஒரு கருத்தை ஏற்படுத்துகிறது. உயிரினங்களின் மொத்த எண்ணிக்கை, வாழிட சூழல் மண்டலம், எல்லை, பயன்பாடும் வணிகமும், அச்சுறுத்தல்கள், தேவையான பாதுகாப்பு செயல்கள் பற்றிய விவரங்கள் இப்பட்டியலில் உள்ளன.cheetah rhinoஅரசு நிறுவனங்கள், வனம் மற்றும் வன உயிரியல் துறை, உயிர்ப் பன்மயத்தன்மை வாரியம், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இயற்கை வளங்களைத் திட்டமிடுவோர், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், உயிரி வளங்களுடன் தொடர்புடைய வணிகம் செய்வோர் போன்றோருக்கு இப்பட்டியல் உதவுகிறது.

பாலூட்டிகள், இருவாழ்விகள், பறவைகள், பவளப்பாறைகள், பைன் மரங்கள் உட்பட பல இனங்களைச் சேர்ந்த குழுக்கள் அழிவை சந்திக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உயிரினங்களின் அவ்வப்போதைய நிலையை ஆராய்ந்து பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் உயிரினங்கள் அவை இடம்பெற்றுள்ள வகையில் இருந்து மற்றொரு வகைக்கு மாற்றப்படுவதும் உண்டு.

இன்றுள்ள சிவப்புப் பட்டியல் நிலை

இப்போது இப்பட்டியலில் 1,502,300 உயிரினங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. இவற்றில் 42,100 உயிரினங்களுக்கும் மேற்பட்டவை இன அழிவை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருப்பவை. புதிதாக விவரிக்கப்பட்டுள்ள இனங்கள், அதிகம் அறியப்படாத குழுக்களில் உள்ள இனங்கள் போன்றவற்றில் 28% உயிரினங்கள் முதல்முதலாக விவரிக்கப்பட்டுள்ளன.

உலகில் உள்ள இருவாழ்விகளில் 41%, சுறாக்களில் 37%, கோனிஃபர்களில் 34%, பவளப்பாறைகளில் 36%, பாலூட்டிகளில் 27%, பறவைகளில்13%, ஊர்வனவற்றில் 21%, சைகாடுகளில் (Cycads) 69% இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உயிரினங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் குறைவு, மொத்த எண்ணிக்கை, புவியியல் பரப்பு, வளங்களின் விநியோக நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அழிந்தவை முதல் மதிப்பிடப்படாதவை வரை ஒன்பது குழுக்களாக உயிரினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எட்டாவது குழுவில் இருந்து முதல் குழுவிற்கு செல்லும்போது உயிரினங்கள் ஆபத்தான நிலையை எதிர்கொள்வதைப் புரிந்து கொள்ளலாம். முதல் குழுவில் உள்ள உயிரினங்கள் எவையும் இப்போது பூமியில் உயிருடன் இல்லை (EX). 

1 - அழிந்து போனவை (EX)

இவை இன அழிவைச் சந்தித்தவை. ஒருங்கிணைந்த ஆய்வுகள் மூலம் ஓர் உயிரினத்தைப் பற்றிய விவரங்கள் கிடைக்காமல் போகும்போது அந்த உயிரினம் அழிந்ததாக வகைப்படுத்தப்படுகிறது. மாமூத்கள், டைனசோர்கள், டோடோ போன்றவை எடுத்துக்காட்டுகள். அண்மைக் காலத்தில் பயணப் புறாக்கள் (Passenger pigeons) 1914ம் ஆண்டிலும் மற்றும் மேற்காப்பிரிக்க காண்டாமிருகங்கள் 2011ம் ஆண்டிலும் அழிந்து போன உயிரினங்களாக அறிவிக்கப்பட்டன.

2 - காட்டில் இன அழிவைச் சந்தித்தவை (Extinct in the Wild EW)

இந்த வகை உயிரினங்கள் விலங்கு காட்சி சாலைகள், வளர்ப்பு மையங்கள், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் மட்டும் வாழ்பவை. பொதுவாக ஓர் உயிரினம் ஐம்பது ஆண்டுகளாக காடுகளில் காணப்படவில்லை என்றால் அந்த இனம் இவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது.

3 - அழிவின் விளிம்பில் உள்ளவை (Critically endangered CR)

இன அழிவைச் சந்திக்கும் ஓர் உயிரினத்தின் எண்ணிக்கை மோசமான நிலைக்குக் குறைந்தால் அல்லது வாழிட சூழல் குறிப்பிடத்தக்க விதத்தில் மாறினால் அவை அழிந்து போகும் வாய்ப்புகள் அதிகம். இத்தகையவை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களாகப் பட்டியலிடப்படுகின்றன.

4 - அழியும் ஆபத்தில் உள்ளவை (EN)

வனச்சூழலில் இன அழிவை எதிர்கொள்ளும் ஓர் உயிரினம் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றால் இவை பூமியில் உயிருடன் வாழ்வதற்கான அச்சுறுத்தல் அதிகமாகும்.

5 - ஆபத்தில் உள்ளவை (VU)

இந்த வகையில் உள்ள உயிரினங்களும் அழியும் ஆபத்தை எதிர்கொள்பவை. மிதமிஞ்சிய சுரண்டல், வாழிட அழிவு போன்றவற்றால் இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து குறையலாம். இவை இப்போது அதிக எண்ணிக்கையில் காணப்படலாம் என்றாலும், மிதமிஞ்சிய சுரண்டல், வாழிட நாசம் போன்றவை தடுக்கப்படவில்லை என்றால் இத்தகையவை வருங்காலத்தில் அழியும் ஆபத்திற்கு உள்ளாக நேரிடும்.

6 - எதிர்காலத்தில் ஆபத்திற்கு உள்ளாகக் கூடியவை (Near Threatened NT)

எதிர்காலத்தில் அழியக்கூடிய ஆபத்திற்கு உள்ளாகும் உயிரினங்கள் இந்த வரிசையில் சேர்க்கப்படுகின்றன. சில சமயங்களில் இத்தகைய ஒரு உயிரினம் அரிய வகை உயிரினமாகவும் (Rare Species) கருதப்படுகிறது.

7 - ஆபத்து இல்லாத உயிரினங்கள் (Least Concerned LC)

முன்பு உள்ள வகைகளின் அம்சங்களைக் கொண்டு ஆராயப்படும்போது ஓர் உயிரினம் அதிக எண்ணிக்கையில் நிறைய இருந்தால், இந்த வகையில் உட்படுத்தப்படுகிறது. இந்த உயிரினங்கள் வருங்காலத்தில் இன அழிவை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

அழியும் ஆபத்து குறைவானதே என்றாலும், உலகளாவிய உயிர்ப் பன்மயத்தன்மையின் அடிப்படையில் இப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தவையே என்பதால் ஐ யூ சி என் பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளன. இந்த வகை உயிரினங்கள் கண்காணிக்கப்பட்டு வருங்காலத்தில் ஆபத்தான நிலைக்கு செல்லாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க இது உதவுகிறது.

8 - தரவுகள் குறைவானவை (Data Deficient (DD))

ஓர் உயிரினத்தை அதன் எண்ணிக்கை மற்றும் அதன் பரவலை அடிப்படையாகக் கொண்டு அவை இன அழிவை சந்திக்கும் வாய்ப்பு பற்றி ஆராய அல்லது நேரடியாக மதிப்பிடத் தேவையான தரவு விவரங்கள் (data) போதிய அளவுக்கு இல்லையென்றால் அவை இந்த வகையில் உட்படுத்தப்படுகின்றன.

இதில் உள்ளவற்றின் எண்ணிக்கை, பரவல் பற்றி பட்டியலில் போதுமான விவரங்கள் இடம்பெற்றிருக்காது. இந்த வகையில் உள்ள உயிரினங்கள் பற்றி கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்பதையும் இது குறிக்கிறது.

9 - மதிப்பிடப்படாதவை (Not Evaluated NE)

ஓர் உயிரினம் சிவப்புப் பட்டியலில் இல்லை என்றால் அது மதிப்பிடப்படாத உயிரினமாகக் கருதப்படுகிறது. போதுமான விவரங்கள் இல்லாததால் அது மதிப்பிடப்படுவதில்லை. இத்தகைய உயிரினங்கள் இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் இணைய பக்கப் பட்டியலில் இடம்பெறுவது இல்லை.

பூமியில் வாழும் உயிரினங்கள் மற்றும் அவை பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி சிவப்புப் பட்டியல் நமக்கு எடுத்துக் கூறுகிறது.

மேற்கோள்https://www.mathrubhumi.com/environment/columns/about-all-you-need-to-know-about-iucn-and-red-list-1.8419533

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

உணவுப் பயிர்களில் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகளின் அழிவால் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஐந்து இலட்சம் மனிதர்கள் அகால மரணமடைகின்றனர் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் காய், கனி போன்ற ஆரோக்கியமான உணவுகளின் விளைச்சல் குறைகிறது. இதனால் மனிதர்கள் அதிகம் நோய்வாய்ப்படுகின்றனர். உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் முக்கால் வீதம் பூச்சிகளின் மகரந்த சேர்க்கையை நம்பியே இருக்கிறது. ஆனால் இந்த வகைப் பூச்சியினங்கள் இன்று அழிந்து வருகின்றன.

போதிய அளவு மகரந்த சேர்க்கை நடைபெறாததால் 3 முதல் 5% காய்கள், கனிகள் மற்றும் கொட்டைவகை உணவுகளின் உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. இதனால் குறைவான உணவு நுகர்வு, பூமியில் ஏற்படும் ஒட்டுமொத்த மரணங்களில் ஒரு சதவிகிதத்திற்குக் காரணமாகிறது. இதய நோய்கள், பக்கவாதம், சர்க்கரை நோய், சில வகை புற்றுநோய்கள் போன்ற உயிர் பறிக்கும் நோய்கள் சத்துள்ள உணவுகளின் நுகர்வின் மூலம் முற்றிலும் தடுக்கப்படக் கூடியவை.

நன்மை செய்யும் பூச்சிகளுக்கும், ஆரோக்கியத்தை இழப்பதால் நிகழும் மனித மரணங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி நடத்தப்பட்ட முதல் ஆய்வு இதுவே. இந்த ஆய்வுகள் உலகம் முழுவதும் இருக்கும் நூற்றுக்கணக்கான விவசாயப் பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகள், விளைச்சல் பற்றிய தகவல்கள் மற்றும் உணவு தொடர்பான ஆரோக்கியப் பிரச்சனைகள், உலக உணவு விநியோகம் பற்றிய கணினி மாதிரி ஆகியவற்றைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது.bee on flowerஉயிர்ப் பன்மயத்தன்மை பற்றிய சர்வதேச அரங்குகளில் உயிர்ப் பன்மயத்தன்மையின் இழப்பிற்கும், மனித உடல் நலத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படுவதில்லை என்று ஹார்வோர்டு பல்கலைக்கழக டி ஹெச் சான் (TH Chan) பொது சுகாதாரப்பள்ளி விஞ்ஞானி மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மூத்த ஆசிரியர் டாக்டர் சாமுவெல் மயர்ஸ் (Dr Samuel Myers) கூறுகிறார்.

ஏற்கனவே இருந்து வரும் ஆரோக்கியப் பிரச்சனைகளுடன் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய், சத்துப் பொருட்கள் குறைவினால் உருவாகும் உடல் மற்றும் மனநலக் கோளாறுகள் அதிகரிக்கின்றன. என்றாலும் இதற்குத் தீர்வு மனிதர்களாகிய நம் கையில் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நன்மை செய்யும் பூச்சிகளுக்கு நட்புடைய ரீதியில் பயிர் வளர்ப்பு, வயல்களில் பூ பூக்கும் தாவரங்களை அதிகம் வளர்ப்பது, நியோநிக்கோட்டினாய்ட்ஸ் (neonicotinoids) போன்ற களைக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்தல், வயல்களுக்கு அருகில் இருக்கும் இயற்கை வாழிடங்களைப் பாதுகாத்தல் அல்லது மீட்பதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளை மீண்டும் வயல்களுக்கு வரவழைக்கலாம். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வயல்களில் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. விளைச்சல் அதிகரித்ததால் பொருளாதாரம் மேம்பாடு அடைந்தது.

சூழல் சுகாதாரம் (Environment health prospective) என்ற ஆய்விதழில் இந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பல பூச்சியினங்கள் பற்றிய விவரங்கள் ஆராயப்பட்டது. அதிக மற்றும் குறைந்த விளைச்சலுக்கு இடையே உள்ள வித்தியாசத்தில் கால் பகுதிக்கு போதிய மகரந்தச் சேர்க்கையின்மையே காரணம் என்பது தெரிந்தது. பூச்சிகள் குறைவாக இருக்கும் இடங்களில் குறைவான விளைச்சல் ஏற்படுவது தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.

உலகளவில் பழ உற்பத்தியில் 4.7%, காய்கறி உற்பத்தியில் 3.2%, கொட்டைகள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் உற்பத்தியில் 4.7% குறைவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மக்களின் உணவு நுகர்வில் இந்தக் குறைவு எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மதிப்பிடப்பட்டது. பழங்கள், காய்கறிகள், இருவித்திலை தாவர உணவுப் பொருட்கள், கொட்டைகள் ஆகியவை மக்களின் உடல் நலத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், இதன் மூலம் தோன்றும் அகால மரணங்கள் பற்றி ஆராயப்பட்டது.

நடுத்தர வருமானம் உள்ள சீனா, இந்தியா, இரஷ்யா, இந்தோனேஷியா போன்ற நாடுகளே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. சத்துணவு குறைவு, புகை பிடித்தல், குறைவான உடற்பயிற்சியால் ஏற்படும் இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய்கள் போன்றவை அதிகம் உள்ள இந்நாடுகளில் இது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

பணக்கார நாடுகளில் உணவுப் பொருட்கள் உற்பத்தி குறைவதால் விலைவாசி உயர்ந்தாலும் மக்கள் சத்துள்ள உணவுகளை வாங்கி உண்கின்றனர். ஆனால் அங்கும் வருமானம் குறைவாக இருக்கும் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் குறிப்பிட்ட ஒரு நாட்டில் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் அந்நாட்டில் மட்டும் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. ஆனால் அந்நாடுகள் மற்ற நாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்து நிலைமையைச் சமாளித்தன. இப்போது இது உலகளாவிய ஒன்றாக மாறியுள்ளது.

பெருமளவில் நன்மை செய்யும் பூச்சிகள் மறைந்ததால் வருமானம் குறைந்த நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் வைட்டமின் ஏ, ஃபாலேட்டுகள் (folates) போன்ற நுண் சத்துகளின் குறைவு மற்றும் விவசாயிகளுக்கு இதனால் ஏற்படும் இழப்பு பற்றி ஆராயவில்லை.

காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும் நெல், கோதுமை, சோளம், பார்லி போன்ற கார்போஹைடிரேட் அதிகமுள்ள, மற்ற சத்துகள் குறைவாக உள்ள பயிர்களையே உலக மக்கள் அதிகம் உண்கின்றனர். இதனால் உலகம் முழுவதும் உடற்பருமன் , சர்க்கரை நோய் அதிகமாகிறது. மகரந்த சேர்க்கை அவசியமாக நடைபெற வேண்டிய ஆப்பிள், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி போன்ற காய், பழ வகைத் தாவரங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை நாம் அதிகம் உண்பதில்லை.

பயிருக்கு தீங்கு செய்யும் களைகளை அழிக்க உதவும் மற்ற பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதாலும் விளைச்சல் பாதிக்கிறது. மோசமான உடல்நிலை, அதனால் ஏற்படும் வேலையிழப்பு, சத்துணவுக் குறைவினால் ஏற்படும் உடல் ஊனங்கள் போன்றவை பொருளாதாரத்திலும், சுகாதார சேவைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உலக மக்கத்டொகை 10 பில்லியன் தொடும்போது வருங்காலத்தில் பூச்சிகள் அழிவினால் ஏற்படும் பயிர் உற்பத்தி பாதிப்பு இன்றுள்ளதைவிட பல மடங்கு மோசமாகவே இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஒவ்வொரு இயற்கை சூழலையும் மனிதன் மாற்றியமைக்கிறான். இதன் பலன்களை இன்றே அனுபவித்துக் கொண்டிருக்கிறான். கார்பன் டை ஆக்சைடின் உயர்வினால் உணவுப் பொருட்களில் சத்துகள் குறைவதை முந்தைய ஆய்வு முடிவுகள் கூறின. இந்நிலையில் மகரந்த சேர்க்கை செய்யும் பூச்சிகள் பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் நாளை உண்ண உணவில்லாமல் மனித குலம் அழிய வேண்டி நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/jan/09/global-pollinator-losses-causing-500000-early-deaths-a-year-study?CMP=Share_AndroidApp_Other

 - சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It