கீற்றில் தேட...

மனித இனத்தின் முன்னோர் என்று கருதப்படும் குரங்கினங்களில் அழியும் நிலையில் உள்ள உரங்கோட்டான்கள் சட்டப்படி பாதுகாக்கப்பட்டாலும், சட்டவிரோதமாக அவை போர்னியோ (Borneo) தீவில் அவை கொல்லப்படுவது அதிகரிக்கிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. போர்னியோவில் கடந்த ஐந்து முதல் பத்தாண்டுகளில் 30% கிராமங்களில் இது தொடர்கிறது.bornean orangutanஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கொலைகாரர்

இந்த உயிரினங்களை பாதுகாக்க அருகாமைப் பகுதிகளிலேயே பல திட்டங்கள் செயல்படுகின்றன என்றாலும் இந்த அழிவு வேலை தொடர்கிறது. உரங்கோட்டான்கள் அதிக அளவில் வாழும் இந்தோனேஷியாவில் கலிமண்ட்டன் (Kalimantan) பகுதியில் உள்ள 79ல் 30 கிராமங்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு கிராமத்தில் இருந்து ஒருவர் உரங்கோட்டானைக் கொல்கிறார் என்று இது பற்றி நடத்தப்பட்ட கள ஆய்வு கூறுகிறது. நானூறு கிராமங்களில் வாழும் மக்களிடம் இதற்கான நேர்முக ஆய்வுகள் நடந்தன.

கடந்த பத்தாண்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை உரங்கோட்டான்கள் கொல்லப்பட்டுள்ளன என்று முந்தைய ஆய்வுகள் கூறின. இப்போது வனப்பகுதிகளில் 100,000 என்ற எண்ணிக்கைக்கும் குறைவாகவே இந்த உயிரினங்கள் வாழ்கின்றன. பெண் உரங்கோட்டான்கள் ஒவ்வொரு ஆறு முதல் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஒரு குட்டியை ஈணுகிறது.

போர்னியோ தீவு மலேசியா, புருனை (Brunei) மற்றும் இந்தோனேஷியாவிற்கு நடுவில் சிதறியிருக்கும் ஒரு தீவுப்பகுதி. தீவின் மூன்றில் ஒரு பகுதி இந்தோனேஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

2020-2021 காலத்தில் ஒரு சமூக வளர்ச்சி அமைப்பு இந்த நேர்முகங்களை நடத்தியது. “உங்கள் கிராமத்தில் ஒருவர் உரங்கோட்டானை கொல்வது பற்றி எப்போது உங்களுக்குத் தெரிந்தது?” போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

“இவை நேரடியாகக் கொல்லப்படுவதில் பல விதங்கள் உள்ளன. சமூகரீதியில் இது சிக்கலானது. இது அதிர்ச்சி தரும் செய்தி” என்று குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளரும் ஆய்வுக்குழுவின் தலைவருமான எமிலி மாசிங்ஹாம் (Emily Massingham) கூறுகிறார். இவை பல்வேறு காரணங்களுக்காகக் கொல்லப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மக்கள் பயத்தின் காரணமாக இவற்றைக் கொல்கின்றனர். தோட்டங்கள், வயல் பகுதிகளுக்குள் இவை நுழைவதால் கொல்லப்படுகின்றன.

கொல்லப்படும் தாய் அனாதையாக்கப்படும் குழந்தை

தாய் உரங்கோட்டான்கள் கொல்லப்படுகின்றன. இதனால் அனாதையாக்கப்படும் குட்டிகள் பிடிக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. அல்லது காட்சிப்பொருளாக பயிற்சி அளிக்கப்பட்டு காட்சிக்கூடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பணப்பயிர் தோட்டங்களுக்குள் இவை சில சமயங்களில் நுழைவதால் கொல்லப்படுகின்றன. இறைச்சி மற்றும் உடற்பகுதிகளுக்காகவும் கொல்லப்படுகின்றன.

எண்ணைப்பனை வளர்ப்புக்காக இவற்றின் வாழிடப்பகுதிகளான பாதுகாக்கப்பட்ட காடுகள் அழிக்கப்படுவது இவற்றை மனிதக் குடியேற்றங்களை நோக்கி விரட்டுகிறது. ”இவற்றைப் பாதுகாப்பதற்காக நடைமுறையில் உள்ள திட்டங்களின் செயல்பாடுகள் இவை கொல்லப்படுவது பற்றிய உண்மையான விவரங்களுக்கு முரணாக உள்ளது. பாதுகாப்பு செயல்திட்டங்கள் மக்களிடையில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" என்று சூழல் பாதுகாப்பு அறிவியல் & செயல்முறை (journal Conservation Science and Practice) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.

இத்தகைய திட்டங்களால் இவற்றைக் கொல்லும் மக்கள் மனப்போக்கில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை என்று மாசிங்ஹாம் கூறுகிறார். இவை மெதுவாகவே இனப்பெருக்கம் செய்கின்றன, நீண்ட நாள் உயிர் வாழ்கின்றன. அதனால் ஒரு உரங்கோட்டான் கொல்லப்படுவது கூட இவற்றின் எண்ணிக்கையை வெகுவாகப் பாதிக்கிறது.

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிராம மக்களிடையில் இந்த உயிரினங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கேட்கப்பட்டது. ஆனால் 40% கிராமத்தவர் மட்டுமே இந்த உயிரினங்களை அவற்றின் இயல்பான போக்கில் மனிதர்களின் குறுக்கீடுகள் இல்லாமல் வாழ விடுவதே சிறந்தது என்று கூறினர். 2000-2019 காலத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உலகில் வனச்சூழலில் போர்னியோ மற்றும் சுமத்ரா பகுதிகளில் மட்டுமே வாழும் இந்த இனக் குரங்குகளை அழிவில் இருந்து காக்க ஒதுக்கப்பட்டது.

புறக்கணிக்கப்படும் அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படும் இவற்றின் நேரடிக் கொலைச் சம்பவங்களைக் குறைக்க அல்லது தடுக்க உருவாக்கப்படும் திட்டங்கள் மக்கள் சமூகங்களுடன் இணைந்த அனுகுமுறையில் நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றைப் பாதுகாக்க ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி போதுமான அளவுக்கு சமூகங்களுக்குப் போய்ச் சேர்வதில்லை.

இந்த உயிரினங்கள் வாழும் பெரும்பாலான கிராமங்களும் வனச்சூழலை நம்பிய வாழ்வாதார அடிப்படையில் இயங்குகின்றன. இதனால் இங்கு எப்போதும் பதற்றம் நிலவுகிறது.

“இந்த ஆய்வு முடிவுகள் வேதனை அளிப்பவை. அதிர்ச்சி தருபவை. இன்னமும் நேரடிக் கொலைச்சம்பவங்கள் உரங்கோட்டான்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது” என்று டொரான்டோ யார்க் (York) பல்கலைக்கழகத்தின் உரங்கோட்டான் நிபுணர் டாக்டர் ஆண்ட் ரஸன் ( Dr Anne Russon) கூறுகிறார்.

மறைக்கப்படும் கொலைகள்

“வருத்தமளிப்பதாக இருந்தாலும் இந்த முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டவையே. சட்டப்படி பாதுகாக்கப்பட்டு அழியும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் வேட்டையாடப்படுவது பற்றிய விவரங்களைச் சேகரிப்பது கடினம். இவற்றின் கொலைகள் கட்டுக்கதைகளாக்கப்படுகின்றன. வெளியில் சொன்னால் பாதிக்கப்படுவோம் என்ற பயம் அல்லது வெளியில் உள்ளவர்களால் தவறாக நினைக்கப்படுவோம் என்ற எண்ணத்தால் கிராமவாசிகள் இவை கொல்லப்படுவது பற்றிய செய்திகளை வெளியுலகிற்கு மந்தகதியிலேயே சொல்கின்றனர்.

இதனால் இவற்றின் வேட்டையாடலால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய ஆய்வு முடிவுகள் உண்மை நிலையை வெளிப்படுத்த இயலவில்லை. உண்மையான கொலை பற்றிய எண்ணிக்கை விவரங்கள் அதிகமாக இருக்கலாம்” என்று கடந்த 27 ஆண்டுகளாக போர்னியோ உரங்கோட்டான்களைப் பற்றி ஆய்வுகளை நடத்தி வரும் மிஷிகன் பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ மார்ஷல் (Prof Andrew Marshall) கூறுகிறார்.

இப்போதுள்ள நிலையில் உரங்கோட்டான்களின் நிலைமை மோசமாகவே உள்ளது. இதில் எந்த முன்னேற்றமும் உண்மையாக ஏற்படவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். புதிய பலனளிக்கக்கூடிய உரங்கோட்டான் பாதுகாப்புத் திட்டங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப் படாவிட்டால் இந்த அற்புத உயிரினங்கள் நம் வாழ்நாளிலேயே முற்றிலும் அழிந்து போய்விடும்!

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/oct/11/borneo-orangutan-killings-likely-still-occurring-numbers-research?

சிதம்பரம் இரவிச்சந்திரன்