ரேங்காடன் டைப்பஸ் (Rhincodon typus) எனப்படும் திமிங்கல சுறாக்களை (Whale shark) எல்லோரும் சுலபமாக அடையாளம் காண முடியும். ஏராளமான புள்ளிகள், வரிகள் உள்ள வேறு ஒரு சுறா இனம் உலகில் இல்லை என்றே கூறலாம். இவை மீனவத் தொழிலாளர்கள் கூறும் வார்த்தைகள். 36 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வாழ்ண்ட மெகலோடன் (Megalodon) சுறாக்களின் இன அழிவிற்குப் பிறகு உலகில் மிகப் பெரிய மீன் என்ற பதவியை அலங்கரிப்பது சாதுவான இந்த ராட்சத உயிரினங்களே.இதைக் கூறும்போது சிலரின் மனதில் இயல்பாக அப்படியென்றால் நீலத் திமிங்கலங்கள்தானே உலகின் மிகப் பெரிய மீனினம் என்று ஒரு சந்தேகம் ஏற்படும். ஆனால் திமிங்கல சுறாக்களுக்கும் நீலத் திமிங்கலங்களுக்கும் பல வெளிப்படையான வேறுபாடுகள் உள்ளன. நீலத் திமிங்கலங்களே உலகின் மிகப் பெரிய உயிரினங்கள். என்றாலும் இவற்றை மீன் இனத்தில் உட்படுத்துவதில்லை. பொதுவாக முட்டை போட்டு வாரிசுகளை உற்பத்தி செய்யும் உயிரினங்களே மீனினத்தில் உள்ளன.
மனிதர்கள் போல நீலத் திமிங்கலங்களும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. இவை கால்சியத்தால் ஆக்கப்பட்ட எலும்புகள் (Calcified bones) கொண்ட, பிரசவிக்கும், பாலூட்டும், வாயு மண்டலத்தில் இருந்து காற்றை உறிஞ்சி சுவாசிக்க உதவும் நுரையீரல் (Lungs) கொண்டவை. முழு வளர்ச்சியடைந்த ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை ஏறக்குறைய 136 டன். இவற்றின் நீளம் 80 முதல் 90 அடி.
திமிங்கல சுறாக்கள் முட்டையிட்டு குழந்தைகளைப் பெறுகின்றன. மற்ற மீனினங்களில் உள்ளது போல நீரில் கரைந்திருக்கும் காற்றை சுவாசிக்கும் திறன் பெற்ற செதில்கள் உள்ளன. முழு வளர்ச்சியடைந்த ஒரு திமிங்கல சுறாவின் உடல் எடை சுமார் 20 டன். நீளம் 40 முதல் 45 அடி.
பலரும் பழங்கால பாட்டி கதைகள், துப்பறியும் நாவல்களில் எப்போதும் பழி வாங்கும் குணத்துடன் மனித இரத்தம் குடிக்கும் உயிரினமாக இவற்றைக் காண்பதுண்டு. இரத்தத்தின் வாசனையை உணர்ந்து, பாய்ந்து வரும், பிரம்மாண்டமான கப்பல்களையும் படகுகளையும் தகர்த்து தவிடுபொடியாக்கும் உயிரினமாகவே இவை பலராலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.
உலக மக்கள் மனதில் சுறாக்களை ஒரு குரூர விலங்காக சித்தரித்ததில் ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பர்க் (Steven Spielberg) மற்றும் ரென்னி ஹார்லிங் (Renny Harlin) ஆகியோரின் பங்கு மிகப்பெரியது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ் (Jaws) திரைப்படம் பீட்டர் பெஞ்ச்லியின் (Peter Benchley) 1974 நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
சுறாக்களை கொலையாளிகளாக சித்தரித்த ஜாஸ் படத்தின் வெளியீட்டுக்குப் பின் பல பகுதிகளில் மனிதர்களால் இவை பெருவாரியாகக் கொல்லப்பட்டன. இதை அறிந்து ஸ்பீல்பெர்க் மனம் வருந்தி செய்தி வெளியிட்டார்.
அறிவியல் புனைக்கதை என்ற பெயரில் நீருக்கடியில் ஒரு காட்சிக்கூடத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சுறாக்களை கொலையாளிகளாக 1999ல் வெளிவந்த ஆழ்கடல் நீலம் (Deep Blue Sea) என்ற படம் சித்தரித்தது. ஆனால் உண்மையில் நாம் வெள்ளித் திரையில் பார்க்கும் திகிலூட்டும் காட்சிகளுக்கு எதிரானதே இவ்விலங்குகளின் சுபாவம்.
இவை மிக சாதுவானவை. பார்வைக்கு ராட்சத தோற்றத்துடன் இருந்தாலும் இவை பெரிய மீன்களைப் பிடித்து உண்னக்கூடிய திறன் பெற்றவை இல்லை. இவை வடிகட்டி உணவை உண்ணும் (filter feeder) வகையைச் சேர்ந்த விலங்குகள். கடலில் வாழும் சிறிய மீன்கள், செம்மீன்களே இவற்றிற்குப் பிடித்த உணவு. வாயைத் திறந்து இரையை உண்டு அதில் இருந்து உணவை வடிகட்டி நீரைப் பிரித்தெடுத்து வெளியில் விடுகின்றன.
வடிகட்டி உணவு உண்ணும் முறையைப் பின்பற்றுவதால் இவற்றிற்குப் பற்கள் இல்லை. மனிதர்கள் அருகில் இருப்பதை இவை பொருட்படுத்துவதில்லை. மனிதர்களைத் தாக்கியதாக இது வரை எந்த செய்தியும் இல்லை. இவற்றை நல்ல சுபாவத்துடன் சித்தரித்துள்ள ஹாலிவுட் படங்களும் உண்டு. சாகசத்திற்காக புறப்பட்டுச் செல்லும் மனிதர்களுக்கும் இந்த விலங்குகளுக்கும் இடையில் நிகழும் கதையை எஸ்பென்சாண்ட்பெர்க்கின் திரைப்படம் அழகாக எடுத்துக் கூறுகிறது. ஜோக்கிங் ரோனிங் எடுத்த படத்தில் இந்த உயிரினத்தின் சாந்தமான குணத்தை வெளிப்படுத்தும் அழகிய காட்சிகள் உள்ளன.
நீரை வடிகட்டி உணவு உண்ணும் இவை மற்ற உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கடற்பாசிகள், சயனோ பாக்டீரியாக்கள், டை ஆட்டம் (Diatom) போன்ற தீங்கு செய்யும் சிறு உயிரினங்களை உட்கொள்கின்றன. இதனால் கடலில் தீங்குயிரிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. கடல் சூழல் மண்டலம் பாதுகாக்கப்படுகிறது. மீன் வளம் பெருகுகிறது. கடலில் இவற்றைப் பார்த்தால் வலை நிறைய மீன் கிடைக்கும் என்று வயது முதிர்ந்த மீனவர்கள் சொல்வதுண்டு.
ஏன் திமிங்கல சுறாக்களைப் பாதுகாக்க வேண்டும்?
இன அழிவு ஏற்பட்டு பூமியில் இருந்து மறைந்த பல உயிரினங்களின் கதைகளுக்குப் பின்னால் மனிதனே காரணமாக இருக்கிறான். 1972ல் இந்தியாவில் வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லையென்றால் நாம் இன்று காணும் காடும், பல தாவர, விலங்குகளும் இல்லாமல் போயிருக்கும்.
1900 முதல் 1999 வரை மைசூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட van ingen and van ingen என்ற டாக்சிடெர்மி (taxidermy) விஞ்ஞானிகளின் ஆய்வகத்திற்கு இதில் முக்கியப் பங்கு உண்டு. இந்த நிறுவனம் 1890களில் யூஜின் வானின் ஜெண்ட் (Eugene Van Ingen) என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு இது அவருடைய மகன்கள் ஜான் டெ வெட் (John de Wet), ஹென்றி போத்தா(Henry Botha) மற்றும் எட்வின் ஜௌபர்ட் (Edwin Joubert) ஆகியோரால் நடத்தப்பட்டது.
டாக்சிடெர்மி என்பது மகத்தானவற்றின் பதப்படுத்தப்பட்ட வடிவங்கள் (Stuff of legends) என்று வர்ணிக்கப்படும் மிகப் பெரிய உயிரினங்களின் உடலை பாதுகாத்து வைப்பது. இறந்த விலங்குகளின் தோலையும் உடலையும் பதனிட்டு, அவற்றை இயல்பான தோற்றத்தில் காட்சிக்கு வைக்கும் ஒரு கலை இது. தமிழில் இதை "தோல் பதனிடுதல்" அல்லது "பதனிடுதல்" என்று அழைக்கப்படுகிறது.
இந்நிறுவனம் மைசூரில் செயல்பட்ட மொத்தம் 99 ஆண்டுகளில் ஆய்வாளர்கள் 43,000 சிறுத்தைப் புலிகள், புலிகள், யானைகள், மான்கள் போன்றவற்றை பதப்படுத்தி காட்சிப்படுத்தி வைத்தனர். இந்த வழக்கம் தொடர்ந்திருந்தால் இன்று இந்தியாவில் வன உயிரினங்கள் இல்லாமல் அழிந்து போயிருக்கும்.
சுவிட்சர்லாந்து க்ளாண்ட் என்ற இடத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமே (IUCN) ஆண்டுதோறும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்களின் பெயர்களை சிவப்பு பட்டியலில் (Red list) வெளியிடுகிறது. இதில் இருந்து உலகில் வாழும் அனைத்து உயிரினங்களின் சூழல் பாதுகாப்பு நிலையைத் தெரிந்து கொள்ளலாம். 2006 முதல் இந்த விலங்குகள் இந்தப் பட்டியலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
வலசை செல்வதில் ஆர்வம் காட்டும் உயிரினங்கள்
கடந்த 75 ஆண்டுகளில் இந்த உயிரினங்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கும் மேல் குறைவு ஏற்பட்டது. மிதமிஞ்சிய வளர்ச்சிப் பணிகள், கண்டுபிடிப்புகள் நடந்த ஒரு காலகட்டம் இது. இரண்டாம் உலகப்போர், அணு ஆயுதப் பரிசோதனைகளுக்கு கடல் சூழல் மண்டலங்களே பயன்படுத்தப்பட்டன. இது கடலில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்தது.
காலநிலை மாற்றம், விவேகமற்ற மீன் பிடித்தல், பெருகி வரும் சரக்குக் கப்பல் போக்குவரத்து, அறிவியல்பூர்வமற்ற கட்டுமானப் பணிகள், ஊக்குவிக்கப்படும் சுற்றுலாத் திட்டங்கள் போன்றவை திமிங்கல சுறாக்களின் எண்ணிக்கை குறையக் காரணமானது. பொதுவாக கடலின் மேற்பரப்பில் காணப்படும் இவை மெதுவாக பயணிப்பவை. இவற்றின் பிரம்மாண்டமான உடல் அளவும் இதற்கு ஒரு காரணம். சிறிய மீன்களைக் கூட நீரில் அதிவேகத்துடன் பாய்ந்து வந்து பிடித்துண்ணும் திறன் இந்த பாவப்பட்ட உயிரினங்களுக்கு இல்லை.
இதனால் பெரிய கப்பல்கள், மீன்பிடிப் படகுகள் இந்த உயிரினங்களின் மீது சுலபமாக மோதுகின்றன, கொல்கின்றன. இவை வடிகட்டி உணவு உண்ணும் உயிரினம் என்பதால் கடல் நீரில் கலந்துள்ள பிளாஸ்டிக், எண்ணெய் போன்ற நச்சு வேதிப்பொருட்கள் இவற்றின் வயிற்றிற்குள் சென்று மரணம் சம்பவிக்கிறது. இவையே இந்திய வன உயிரினச் சட்டப் பாதுகாப்பிற்குக் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் மீனினம். குஜராத் கடலோரப் பகுதிகளில் இவை அதி குரூரமாக வேட்டையாடப்பட்ட ஒரு காலம் இருந்தது.
இது பற்றி உலகிற்குத் தெரிவிக்க பிரபல சூழல் செயல்பாட்டாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும் 300க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவரும் சூழல் மற்றும் வன உயிரினங்கள் பற்றி ஆவணப் படங்களை எடுப்பதில் நிபுணருமான மைக் ஹெச் பாண்டெ (Mike H Pandey) அமைதியின் கடற்கரைகள் (Shores of the Sea) என்ற ஆவணப் படத்தை எடுத்தார்.
இந்த ஆவணப் படம் பன்னாட்டு அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படம் 2001ல் மத்திய அரசை திமிங்கல சுறாக்களை பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக அறிவிக்கத் தூண்டியது.
இந்த உயிரினங்கள் வலசை செல்வதில் ஆர்வம் மிகுந்தவை. நாடுகளின் கடல் எல்லைகளை இவை பொருட்படுத்துவதில்லை.
திமிங்கல சுறா பாதுகாப்புத் திட்டம்
அருகாமை நாடுகளின் கடல்கள் இவற்றிற்குப் பாதுகாப்பான இடங்கள் இல்லை என்று தோன்றினால் இவை இந்திய கடற்பகுதிகளுக்குள் வலசை வருகின்றன. சுமார் 8,000 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் இவற்றைக் காணலாம். குஜராத் சௌராஷ்டிரா கடலோரப்பகுதிகளில் ஆகஸ்ட் முதல் மார்ச் வரை உள்ள காலத்தில் இவை அதிகமாக காணப்படுகின்றன.
டிசம்பர் முதல் மே வரையுள்ள காலத்தில் கேரளா, லஷத் தீவு பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. இவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்க குஜராத் வன உயிரினங்கள் அறக்கட்டளை (Wildlife Trust of India WTI) நடத்திய செயற்கைக்கோள் கண்காணிப்பில் இருந்து இவை இந்தியாவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் இருந்து பயணம் தொடங்கி ஆப்பிரிக்கக் கிழக்குப் பகுதி வரை வலசை சென்றது கண்டறியப்பட்டது.
நாட்டில் திமிங்கல சுறாக்களைப் பாதுகாக்க இந்த அறக்கட்டளை பெரும் பங்கு ஆற்றி வருகிறது. பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாக அறிவிக்கப்பட்டது என்றாலும், ஒரு கடல் வாழ் உயிரினத்தைப் பாதுகாப்பது மிகக் கடினம். மீன் பிடி தொழிலாளர் சமூகம் மட்டுமே இவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.
2004ல் இந்த அறக்கட்டளையும் குஜராத் வனத் துறையும் சேர்ந்து குஜராத் வெராவல் (veraval) கடற்பகுதியில் திமிங்கல சுறா பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கியது. விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடந்தன. இதன் பலனாக கார்வா (Kharva) மீன் பிடி சமூகம் உட்பட பல மீனவ சமூகங்களும் இந்த விலங்குகளைப் பாதுகாக்க உறுதி மொழி எடுத்து செயல்படுகின்றனர். இருபது ஆண்டுகளில் மீனவர்கள் வலையில் சிக்கிய 958 திமிங்கல சுறாக்களைப் பாதுகாத்துள்ளனர். இதே போன்ற திட்டம் கேரளாவில் 2017ல் தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ் இது வரை கேரளாவில் எண்ணற்ற திமிங்கல சுறாக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. குஜராத்தில் வனத் துறையின் மூலம் இந்த உயிரினங்களை மீட்கும்போது மீனவர்களின் வலைக்கு ஏற்படும் சேதங்களுக்கு நஷ்ட ஈடாக ரூ 25,000 வழங்கப்படுகிறது. கேரளாவில் இந்திய வன உயிரின அறக்கட்டளை இதற்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி மீனவர்களுக்கு வழங்கி வருகிறது. இவை வில்லன்கள் இல்லை என்பதை உணர்ந்து மகத்தான திமிங்கல சுறாக்களை அழியாமல் பாதுகாப்போம்.
மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/international-whale-shark-day-feature-1.9857274
- சிதம்பரம் இரவிச்சந்திரன்