கனடா நாட்டின் தலைநகர் டொராண்ட்டோவில், ஒரு தன்னாவ்வலர் குழு கட்டிடங்களில் மோதும், பயணத்தைத் தொடர முடியாமல் பாதி வழியிலேயே தவிக்கும் வலசைப் பறவைகளைக் காப்பாற்ற கிளம்புகின்றனர். ஒவ்வொரு நாள் விடிகாலைப் பொழுதிலும் ஒரு டஜன் தன்னார்வலர்கள் டொராண்ட்டோ வீதிகளில் சிறிய பறவைகளை சேகரிக்கின்றனர்.
சில நாட்கள் அவர்கள் நூற்றுக் கணக்கான பறவைகளை பொறுக்கி எடுக்கின்றனர். அவற்றில் பெரும்பாலானவை இறந்தவை அல்லது இறந்து கொண்டிருப்பவை. ஒரு சிலவற்றை அவர்களால் காப்பாற்ற முடிகிறது. அவை பழுப்பு நிறக் காகித உறைகளில் சேகரிக்கப்பட்டு வன உயிரி மீட்பு மையங்களுக்கு விரைந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. உயிரற்றவை பெரிய பனிக்கட்டிப் பெட்டியில் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை யாரும் எடுக்கவில்லை என்றால் இறந்த பறவைகளின் உடற்கழிவுகள் தூய்மைப் பணியாளர்களால் பெருக்கி சுத்தம் செய்யப்படுகிறது.
கனடாவில் இந்த அமைப்பின் டொராண்ட்டோ பிரிவைச் சேர்ந்த 135 தன்னார்வலர்கள் வீதிகளில் தினமும் விடிகாலையில் ரோந்து சுற்றி பறவைகளை மீட்கின்றனர். ஒரு நாள் விடிகாலையில் தேசாய், தங்க கிரீட கிங் லெட்(golden-crowned kinglet) பறவைகள் கூட்டம் ஒன்று பறந்து வந்து ஒரு பதினைந்து மாடி கண்ணாடிக் கட்டிடத்தின் மீது மோதுவதைப் பார்த்தார். மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கீழே விழுந்த அவற்றின் உடல்கள் திரும்பிப் பார்த்த இடங்களில் எல்லாம் இருந்தன.
"அது அதிர்ச்சியளித்தது. அவற்றைத் தரையில் பார்ப்பது மட்டுமில்லை, அவை மோதுவதைப் பார்ப்பதும் வேதனையானது. இதில் அவற்றின் வலுவற்ற தன்மை வெளிப்படுகிறது” என்று கூறும் தேசாய் அன்று மட்டும் 80 பறவைகளை மீட்பு மையத்திற்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கிறார். அவை அனைத்திற்கும் காரில் இடம் இல்லை. பல முறை பயணம் செய்து மீட்புப் பணியைத் தொடர்ந்தார். இன்னொரு 80 பறவைகள் இறந்தவை. அவை பனிப்பெட்டிக்கு அனுப்பப்பட்டன.
அவற்றில் சில தேசாயின் கைகளில் உயிரிழந்தன. பெரும்பாலான நாடுகளில் கட்டிடக் கண்ணாடிகளில் மோதி உயிரிழக்கும் பறவைகளின் எண்ணிக்கை பற்றி சரியான தரவுகள் இல்லை. பறவைகளின் வலசைப் பாதையில் உள்ள எந்த ஒரு நகரத்திலும் கண்ணாடி சாளரங்கள் உள்ள அடுக்கு மாடிக் கட்டிடங்களில் அவை மோதுவது தீவிரமாக உள்ளது. அமெரிக்காவில் இவ்வாறு ஆண்டுதோறும் ஒரு பில்லியன் பறவைகள் உயிரிழக்கின்றன என்று கருதப்படுகிறது.
வலசைப் பருவ விபத்து
சாளரங்களில் மோதும் பறவைகளில் 60% கொல்லப்படுகின்றன. சில சமயங்களில் ஓர் ஒற்றைக் கட்டிடமே பல பறவைகளின் உயிரைப் பறிக்கிறது. 2023 அக்டோபரில் ஒரு நாளில் மட்டும் சிகாகோ மெக்காமிக் ப்ளேஸ் (McCormick Place) என்ற இடத்தில் உள்ள வானளாவிய உயர் அடுக்கு மாடிக் கட்டிடங்களின் மீது மோதியதால் ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் உயிரிழந்தன.
இறந்த பறவைகள் பனிப்பெட்டியில் (freezer) சேகரிக்கப்பட்டு ஆண்டிற்கு ஒரு முறை அகற்றப்படுகின்றன. அதற்கு முன் அவற்றின் வெளிப்புற வடிவமைப்பை வரைந்து பதிவு செய்து காட்சிப்படுத்த அவை பயன்படுத்தப்படுகின்றன. அந்த நேரம் தன்னார்வலர்களின் அஞ்சலி செலுத்தும் சோகமான நேரம். வட அமெரிக்காவில் வசந்த கால வலசைப்பருவம் மார்ச் பிற்பகுதியில் தொடங்கி ஜூன் கடைசி வரை நீடிக்கிறது.
ஆகஸ்ட் கடைசி முதல் அக்டோபர் கடைசி வரை தன்னார்வலர்களின் ரோந்துப் பணி வாரத்தில் ஏழு நாட்களும் சூரிய உதயம் தொடங்கி நான்கு மணி நேரம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பறவைகளின் உயிரைக் காத்த தேசாய் தன் மார்புப் பகுதியில் பொருத்தியுள்ள பனிப்பெட்டியில் ஆண்டிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகளின் இறந்த உடல்களையும் சேகரிக்கிறார்.
“வழக்கமாக செல்லும் பகுதிக்கு நான் செல்லவில்லை என்றால் வேறு எவரும் அங்கு செல்வதில்லை. அந்த இடத்தில் காயமடைந்து அனாதையாக பறவைகள் கிடப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. மனிதரின் உதவியில்லாமல் அவை உயிர் பிழைக்காது."
நெரிசல் மிகுந்த ஒரு நாளில் தேசாய் 25 பறவைகளைக் காப்பாற்றுகிறார்.
“மீட்பு மையத்திற்கு எடுத்துச் செல்லும் காயமடைந்த பறவைகளின் நிலை பற்றி அறிவதில்லை. அது மன நலத்தைப் பாதிக்கும். உதவிக்காக காத்திருக்கும் அடுத்த பறவைகளின் மீது கவனம் செலுத்துகிறேன். கட்டிடத்தின் மீது மோதாத ஒரு பறவையைக் கண்டால் மகிழ்ச்சி ஏற்படுகிறது” என்று கூறும் தேசாய் தான் இப்போது ஒரு பறவை ஆர்வலராக மாறி விட்டதாகவும், பறவைகளை புகைப்படம் எடுக்க வெளியில் செல்வதாகவும் கூறுகிறார்.
தன்னார்வலர்கள் தாங்கள் மீட்கும் பறவைகள் பற்றிய விவரங்களை உலகளாவிய மின்னனு பறவை மோதல் வரைபடம் (Global Bird Collision Mapper) என்ற செயலியில் பதிவேற்றுகின்றனர். இது வரை நூறாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கட்டிடங்கள் மீது மோதின. இவற்றில் 73,000 பறவைகள் உயிரிழந்தன.
அடுக்கு மாடிக் கட்டிடங்கள் மட்டும் பறவைகளின் உயிரைப் பறிப்பதில்லை. சாதாரண வீடுகளும் இதையே செய்கின்றன. ப்ளாப் அமைப்பு கட்டிட நிர்மாணத்தின்போது சாளரக் கன்ணாடிகளில் பறவைகளால் பார்க்கக்கூடிய சிறிய புள்ளிகள், சதுரங்கள், கோடுகள் போன்ற பாணியில் அமைந்த பறவை நட்புடைய சாளரங்களை கட்ட வலியுறுத்துகிறது. கறுப்பு நிறத் திரைச்சீலைகள், இரவில் விளக்குகளை அணைத்தல் போன்றவை பறவைகளைக் காக்க உதவும்.
“பறவை மீட்புப் பணியில் நான் தொடர்ந்தும் இருக்கக் காரணம் இந்த பணியின்போது பல சுவாரசியமான மனிதர்களை என்னால் சந்திக்க முடிகிறது. காலை ரோந்துப் பணியின்போது கையில் பை மற்றும் வலையுடன் செல்வதைப் பார்த்து பலர் என்னை என்ன செய்கிரீர்கள் என்று கேட்பார்கள். அத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி பறவை மீட்பு பற்றி விவரிப்பேன்” என்று பறவை ஆர்வலர் மிக்கி கூறுகிறார்.
சூழல் காக்கப் போராடும் போராளிகள் போல பறவைகள் என்ற இந்த அற்புத உயிரினங்களை தன்னார்வத்துடன் காக்கும் இது போன்ற எண்ணற்ற மனிதர்களால்தான் இயற்கை இன்னும் அழியாமல் உள்ளது!