பாலூட்டிகள் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் மின்னுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. 86% பாலூட்டி இனங்களின் உரோமம் புற ஊதாக்கதிர் (UV) பட்டு ஒளிர்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பாலூட்டிகளில் ஒளிரும் பண்பு முன்பு நினைத்திருந்ததை விட பொதுவான ஒரு பண்பு என்று இந்த புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் ப்ளாட்டிப்யூசஸ் (platypuses) வாம் வௌவால் என்ற வௌவால் இனம் (wombats), டாஸ்மேனியா டெவில்ஸ் Tasmanian devils), எச்சிட்னெஸ் (echidnas), ஆரஞ்சு இலை மூக்கு வௌவால் (orange leaf-nosed bat), பில்பிஸ் (Bilbis) மற்றும் பேண்டிகூட்ஸ் (Bandicoots) போன்ற மார்சுப்பியல் (marsupial) பாலூட்டி விலங்குகளில் ஒளிரும் பண்பு காணப்படுகிறது என்று முன்பே கண்டறியப்பட்டிருந்தது. மார்சுப்பியல் பாலூட்டிகளில் பெண் விலங்குகள் குட்டிகளைப் பராமரித்து வளர்க்க வயிற்றுப் பகுதியில் பை போன்ற அமைப்பை (pouch) பெற்றுள்ளன.
A glowing orange leaf-nosed bat. Photograph: Western Australian Museum
ஒளிர்தலுக்கு காரணமாகும் உரோமம்
பாலூட்டிகளில் ஒளிரும் பண்பு மிகப் பொதுவான ஒன்று என்று 125 வகையைச் சேர்ந்த வெவ்வேறு இனப் பாலூட்டிகளை ஆராய்ந்த பிறகு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உயிரினங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஒளிரும் பண்பை வெளிப்படுத்துகின்றன. ஆய்வு செய்யப்பட்ட 125 இனங்களில் 86% அல்லது 107 விலங்கினங்கள் புற ஊதாக்கதிர்களின் கீழ் மின்னும் பண்பை உடைய உரோமத்தைப் (fur) பெற்றுள்ளன.
ஆய்வு செய்யப்பட்ட 125 பாலூட்டியினங்கள் இன்று வாழும் அனைத்து 27 பாலூட்டி வரிசைகளையும் உட்படுத்தியது. இது இன்று பூமியில் வாழும் பாலூட்டி குடும்பங்களில் பாதியை பிரதிநிதித்துவப் படுத்துகிறது.
ஒளிர்தல் பண்பு இரவு நேர விலங்குகளில் (nocturnal animals) மிகப் பொதுவாகவும் மிகத் தீவிரமாகவும் காணப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இப்பண்பு மலை வரிக்குதிரை, துருவக்கரடி போன்ற பகலில் சுறுசுறுப்பாக செயல்படும் விலங்குகளிலும் (diurnal animals) காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
“அதிக எண்ணிக்கையிலான பாலூட்டிகள் ஒளிரும் தன்மையைப் பெற்றுள்ளது இதுவரை அறியப்படாமல் இருந்தது. இந்த ஆய்வின் மூலமே இது வெளியில் தெரிய வந்துள்ளது. இவை ஒளிரும் தன்மையுடைய தோல் அல்லது உரோமத்தைப் பெற்றுள்ளன என்று இவ்வளவு காலம் தெரியவில்லை. புற ஊதாக்கதிர்கள் ஒளிர்தல் பண்புடைய விலங்குகளின் தோல் அல்லது உரோமத்தின் மீது படும்போது அதில் உள்ள புரதங்கள் அந்த கதிரியக்கத்தை உறிஞ்சி அதை பார்க்கக்கூடிய ஒளியாக உமிழ்கிறது.
ரோமம் அல்லது தோல் மற்றும் புரதங்களின் மீது மோதி நமக்கு புலனாகக் கூடிய ஒளியாக இது மாற்றப்படுகிறது. அதனால்தான் ஒளிரும் உடற்பகுதிகள் நீலம், பச்சை அல்லது கறுப்பு நிறத்தில் ஒளிர்கின்றன. மனிதன் உட்பட எல்லா பாலூட்டிகளும் ஒளிரும் தன்மையுடைய பற்களைப் பெற்றுள்ளன. பல விலங்குகள் ஒளிரும் பண்புடைய நகங்களைப் பெற்றுள்ளன” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் மேற்கு ஆஸ்திரேலியா பாலூட்டிகள் அருங்காட்சியகத்தின் மேற்பார்வையாளருமான டாக்டர் கெனி ட்ராவுயிலன் (Dr Kenny Travouillon) கூறுகிறார்.
டுவார்ஃப் ஸ்பின்னர் டால்பின் (dwarf spinner dolphin) என்ற வகை பாலூட்டி இனம் மட்டுமே அவற்றின் உடலில் ஒளிரும் தன்மையுடைய ஒரே உறுப்பாகப் பற்களை பெற்றுள்ளன. பதப்படுத்துதல் செயல்முறையினால் ஒளிர்தல் நிகழ்கிறதா என்பதை அறிய ஆய்வாளர்கள் பாதுகாக்கப்பட்ட மற்றும் உறை நிலையில் வைக்கப்பட்ட இறந்த விலங்குகளின் உடல் மாதிரிகளை குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்த மாதிரிகளை ஆராய்ந்தனர்.
பதப்படுத்துதல் செயல்முறையால் ஒளிரும் பண்பில் தீவிரத் தன்மை சில மாதிரிகளில் வேறுபடுகிறது என்று ராயல் சங்கத்தின் (journal Royal Society Open Science) என்ற ஆய்விதழில் வெளிவந்த இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. பதப்படுத்தப்பட்ட பிளாட்டிபஸ் மாதிரிகளில் ஒளிர்தல் குறைவாக இருந்தது.
”போராக்ஸில் பதப்படுத்தப்பட்ட மாதிரி அதிகமாக ஒளிர்ந்தது. அதை விட அதிகமாக ஆர்சினிக்கில் பதப்படுத்தப்பட்ட மாதிரியில் ஒளிர்தல் காணப்பட்டது. ஆனால் வேறு உடல் மாதிரிகளில் இதே ஆய்வுகள் நடத்தப்பட்டபோது பலன் எதிர்மறையாக இருந்தது. பிரகாசமான ஒளிர்தல் உற்ற நிலையில் வைக்கப்பட்ட மாதிரிகளில் அதிகமாகக் காணப்பட்டது. இந்த மாதிரிகளில் பதப்படுத்துதல் மூலம் ஒளிர்தலின் தீவிரத் தன்மை குறைந்தது. கோ ஆலா (ko ala), டாஸ்மேனியா டெவில்ஸ், எட்ச்சிட்னெஸ் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு” என்று டாக்டர் கெனி கூறுகிறார்.
“அருங்காட்சியகத்தின் சில மாதிரிகளில் பதப்படுத்துதலால் ஒளிர்தலில் வேறுபாடு ஏற்படுவது இந்த ஆய்வில் தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த விலங்குகள் அவற்றின் இயல்பான வனச்சூழலில் எவ்வாறு ஒளிர்கின்றன என்பது பற்றி மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆராயப்பட்ட 86% வகை பாலூட்டிகளில் மட்டுமே ஒளிரும் தன்மையுடைய உரோமம் இருப்பது அறியப்பட்டுள்ளது என்றாலும் அவை அனைத்திற்கும் ஒளிரும் நகங்கள் அல்லது பற்கள் உள்ளன.
ஆராயப்பட்ட பல மாதிரிகளில் தூரிகை வால் பாசம்ஸ் (brushtail possums), கங்காருகள், கறுப்பு எலிகள், ஐரோப்பிய ஹெட்ஜ்காக்குகள் (European-hedgehogs) போன்றவற்றில் முந்தைய ஆய்வில் கூறப்பட்டதை விட ஒளிர்தல் குறைவாகவே உள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்த வேறுபாடு புவியியலால் ஏற்பட்டதா அல்லது பதப்படுத்துதலில் உள்ள செயல்முறை வேறுபாட்டால் நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை” என்று ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக விலங்கியல் ஆய்வாளர் லிண்டா ரைன்ஹோல்ட் (Linda Reinhold) கூறுகிறார்.
பாலூட்டிகள் ஏன் ஒளிர்கின்றன?
பாலூட்டிகளில் ஒளிர்தலின் உண்மையான பொருள் இன்னும் புதிராகவே உள்ளது. என்றாலும் விலங்குகள் குறிப்பாக இரவு நேரங்களில் சுறுசுறுப்புடன் செயல்படும் விலங்குகளில் அவை பளபளப்புடன் தோற்றமளிக்க, அதன் பார்வையின் மூலம் நடைபெறும் சமிக்ஞைப் பரிமாற்றங்களை மேம்படுத்த ஒளிர்தல் உதவலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
”வழக்கமாக ஊண் உண்ணிகளின் முதுகுப்பகுதியில் வரிகள், புள்ளிகள் காணப்படுகின்றன. தங்கள் இனத்தைச் சேர்ந்த மற்ற விலங்குகளுக்கு தங்களை அடையாளம் காட்டுவதற்கு இது அவற்றிற்கு பயன்படுகிறது என்று கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலான விலங்குகளில் எதிரிகளால் அவற்றை எளிதாகப் பார்க்க முடியாத வயிற்றுப் பகுதியிலேயே ஒளிர்தல் நிகழ்கிறது.
ஒரே இனத்தைச் சேர்ந்த விலங்குகள் ஒன்று மற்றொன்றின் அருகில் வரும்போது அவை ஒளிர்தல் மூலம் ஒன்றையொன்று அடையாளம் கண்டு கொள்கின்றன. ஆய்வாளர்கள் ஆராய்ந்தவற்றில் மிக அதிகமான ஒளிர்தல் பண்பை வெளிப்படுத்திய மஞ்சள் மற்றும் வெள்ளை நிற உரோமத்தால் மூடப்பட்ட, பார்வை தெரியாத, நிலத்திற்கடியில் வலைகளை அமைத்து வாழும் தகவமைப்பை உடைய சதர்ன் மார்சுப்பியல் சிற்றெலிகள் (Southern MarsupialMole) போன்ற சில இன விலங்குகளில் ஒளிர்தல் எந்த செயல்முறை பயனையும் தருவதில்லை.
இவற்றில் நிறமூட்டப்பட்ட உரோமங்கள் இல்லாததால் ஏற்பட்ட ஒரு பக்கவிளைவே இது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெள்ளை தவிர மற்ற நிறத்தில் மனித தலைமுடி இருப்பதற்கு பிறவியிலேயே ஏற்படும் ஒளிர்தலே காரணம். இருக்கும் இடம், எதிரியின் இடம் அறிய இருப்பிடம் அறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மைக்ரோ வௌவால்கல் (microbats) போன்ற சில வகை பறக்கும் பாலூட்டிகளில் ஒளிர்தல் அதிக முக்கியத்துவம் பெறவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இரவு நேரங்களில் பூமிக்கு வரும் புற ஊதாக்கதிர்களின் அளவு குறைகிறது என்பதால் பாலூட்டிகளில் நிகழும் இந்த உயிரி ஒளிர்தல் (Bio Fluorescence) நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி இன்னும் அதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். மனிதரல்லாத பாலூட்டிகளில் இந்நிகழ்வு பற்றி முதல்முதலாக 1911ல் ஐரோப்பிய முயல்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பற்றிய செய்தி வெளிவந்தது.
“இந்த ஆய்வுக்கட்டுரையை வாசித்துவிட்டு செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் புற ஊதாக்கதிர்களை வெளியிடும் கருவிகளை வாங்கி செல்லப்பிராணிகள் மீது ஒளியைப் பாய்ச்சி ஆராய முற்படக் கூடாது. அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை! அவர்கள் புற ஊதாக்கதிர்களை கண்களில் பாய்ச்சக்கூடாது. அந்த கதிர்கள் அவற்றின் கண்களைப் பாதிக்கும்!” என்று கெனி கூறுகிறார்.
பாலூட்டிகளில் ஒளிர்தல் பற்றிய இந்த ஆய்வு இயற்கையின் படைப்பில் நமக்குத் தெரியாமலேயே நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்து வரும் அதிசயங்களில் ஒரு சிறு துளி மட்டுமே!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்