கீற்றில் தேட...

மனிதன் பயன்படுத்தும் மருந்துகளால் விலங்குகளின் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை அதிர்ச்சி தரும் வகையில் மாற்றமடைகிறது. சூழல் மண்டலங்களை மாசுபடுத்தும் இவற்றால் அடிமையாதல், பதற்றம் மற்றும் பாலின மாறுபாடு போன்ற மாற்றங்கள் விலங்குகளிடம் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மெத்தம் பெட்டமீன் (methamphetamine) என்ற மருந்துப் பொருளுக்கு அடிமையான பழுப்பு நிற டிரவுட் (Brown drout) என்ற மீனினம் அந்த மருந்து அதன் உடலில் இருந்து நீக்கப்பட்டபோது இயல்பு நிலைக்குத் திரும்பியது.contamination 700இனச்சேர்க்கையின்போது வன்முறையில் ஈடுபடும் ஸ்டார்லிங் (starling) என்ற சிறிய பறவையினம், மன அழுத்த சிகிச்சைக்கு மருந்துகளால் எதிரிகளைக் கண்டு அஞ்சும் பண்பை இழந்த ஐரோப்பிய பெர்ச் (European perch) என்ற நன்னீர் மீனினம், காபினுக்கு (Coffin) அடிமையான மினோஸ் (Minnows) என்ற நன்னீர் மீனினம் போன்ற விலங்குகள் மருந்துப் பொருள் கழிவுகளால் பாதிக்கப்படுகின்றன.

நவீன மற்றும் சட்ட விரோத மருந்துகளின் மாசு வன உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது குறிப்பிடத்தக்க, எதிர்பாராத மாற்றங்களை சில விலங்குகளின் நடத்தை மற்றும் உடல் உள்ளுறுப்பு அமைப்பில் ஏற்படுத்துகிறது.

ஸ்டார்லிங் பெண் பறவைகள் கழிவுநீரில் கலந்திருந்த மன அழுத்தத்திற்கு எதிரான ப்ரோசாகட் (Prozacat) என்ற மருந்துப் பொருளால் ஆண் இனத்துடன் இணை சேர்வதில் ஆர்வம் காட்டுவது குறைந்து விட்டது.

இதனால் சிறிய முதல் நடுத்தர அளவு உள்ள ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் வட பகுதி மற்றும் வட அமெரிக்காவில் வாழும் இந்தப் பறவைகளின் ஆணினம் இணை சேர்வதில் வன்முறையைப் பின்பற்றுகின்றன.

பெண் இனத்தைக் கவர குறைவான பாடல்களையே ஆண் பறவைகள் பாடுகின்றன. மனிதர் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகளால் சில மீனினங்களில் பாலின மாறுபாடுகள் ஏற்படுகின்றன. ஆண் மீனின் இனப்பெருக்க உறுப்பு பெண்ணின் இனப்பெருக்க உறுப்பாக மாறுகிறது. இது இந்த உயிரினங்களின் எண்ணிக்கை குறைய காரணமாகிறது, உள்ளூர் இனங்கள் அழிகின்றன.

இந்தியாவில் காணாமல் போன கழுகுகள்

இது மனித குலத்திற்கு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். “செயல் மிகு மருந்துப் பொருட்களில் சேர்க்கப்படும் செயல்மிகு உள்ளடக்கப் பொருட்கள் (Active pharmaceutical ingredients (Api)) உலகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் கலந்துள்ளன. இப்பொருட்களால் மாசடைந்த நீர் வாழ் உயிரினங்களையே நாம் உண்கிறோம். சமீபத்திய சில பத்தாண்டுகளில் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது.

"உயிர்ப் பன்முகத் தன்மையின் பாதுகாப்பிற்கு இது அச்சுறுத்தலாகிறது. இதுஉலகளாவிய பிரச்சனை” என்று ஸ்வீடன் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவருமான மைக்கேல் பேர்ட்ரம் (Michael Bertram) கூறுகிறார். இந்த ஆய்வுக்கட்டுரை நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இயற்கை (Nature Sustainability) என்ற இதழில் வெளிவந்துள்ளது.

மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக பசுமை முறையுடன் அமைய வேண்டும். உற்பத்தியின் போது வெளியேற்றப்படும் இந்தப் பொருட்கள் மறு சுத்திகரிப்பு செய்யப்படாதபோது இவை நீருடன் கலக்கின்றன. மனிதன் உட்கொள்ளும் மருந்து அவனது உடலில் முழுமையாக சிதைவடைவதில்லை. அது கழிவாக வெளியேற்றப்படுகிறது. சூழலில் நேரடியாக சென்று சேர்கிறது.

கொக்கேன் (cocaine), காஃபின் போன்ற சட்ட விரோதப் பொருட்கள், மெத்தம்பெட்டமின் போன்ற மருந்துப் பொருட்கள், பதற்றம், மன அழுத்தம் மற்றும் மனநலப் பிறழ்வைக் குறைக்க உதவும் மருந்துகள் சூழலில் கலக்கின்றன. தெற்காசியாவில் கால்நடைகளுக்கு வீக்க நிவாரணியாக டிக்ளோஃபினாக் (Diclofenac) என்ற மருந்து கொடுக்கப்பட்டது.

நச்சு மருந்தை உட்கொண்டு பின் இறந்த கால்நடைகளின் உடல் எச்சங்களை கழுகுகள் உண்டு அதன் பாதிப்பால் உயிரிழந்தன. இதனால் இந்தியாவில் 1992-2007 காலத்தில் கழுகுகளின் எண்ணிக்கை 97% குறைந்தது. இறந்த கால்நடைகளின் உடல் எச்சங்களை உணவாக உட்கொள்ள போதிய எண்ணிக்கையில் கழுகுகள் இல்லாமல் போனது. ரேபிஸ் வெறி நாய்க்கடி நோய் பெருவாரியாகப் பரவியது.

செயல்மிகு உள்ளடக்கப் பொருட்கள்

குறைவான அளவே காஃபினை உட்கொண்டாலும் ஃபேட் தலை மினோஸ் (fathead minnows) என்ற வட அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட சிறிய அளவுடைய மீன்கள் போதையில் வாழ்ந்தன. நுண்ணுயிரி எதிர்ப்பொருட்கள் நுண்ணுயிரிகளையும் மனித உடல் நலத்தையும் பாதிக்கின்றன.

குறைந்த அளவில் கலந்திருந்தாலும் மருந்துகள் உயிரியல்ரீதியான பாதிப்புகளை உருவாக்கும் வகையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. 104 நாடுகளில் 1052 இடங்களில் ஓடும் ஆறுகளில் குறைவான அளவுடன் 61 மருந்துகள் கலந்திருப்பது சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. இதில் 43.5 இடங்களில் சூழல் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது என்று வரையறை செய்யப்பட்ட அளவை விட ஒரு மருந்தேனும் இருப்பது தெரியவந்தது.

காலநிலை மாற்றம், வாழிட இழப்பு, மிதமிஞ்சிய பயன்பாடு போன்றவை ஏற்கனவே உயிர்ப் பன்மயத் தன்மையின் மீது அழுத்தம் செலுத்தும் நிலையில் மருந்துகளில் சேர்க்கப்படும் உள்ளடக்கப் பொருட்களால் ஏற்படும் மாசு தொடர்ந்து நிகழ்கிறது. சூழலில் இப்பொருட்களின் வாழ்க்கைச் சுழற்சி பசுமை நிறைந்ததாக மாற்றப்பட வேண்டும். இப்பொருட்களால் மருந்தியலாளர்கள், மருத்துவர்கள், தாதியர்கள், கால்நடை மருத்துவர்கள் சூழலில் உருவாகும் தாக்கத்தை அறிய வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட பின் மருந்துகள் சுலபமாக சிதையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். சூழலில் இந்த மாசு கலப்பதைத் தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு விரிவாக்கப்பட வேண்டும். தொடர்ந்தும் இவ்வகை மாசு ஏற்படுவதைத் தடுக்க பசுமை மருந்துகளின் மூலக்கூறு வடிவமைப்பை சூழலுக்கு நட்புடையதாக மாற்ற வேண்டும்.

“இவ்வகை மருந்துகள் அவற்றின் வாழ்நாள் சுழற்சி முழுவதும் அவை ஏற்படுத்தும் சூழல் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. மருந்துகள் பயனுள்ள விதத்தில், பாதுகாப்பானதாக உருவாக்கப்படுவதுடன் சூழலுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை குறைக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும். இதனால் வன உயிரினங்களும் மனித நலமும் பாதுகாக்கப்படும்” என்று ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரும் பாஸ்க் கண்ட்ரி (Basque Country) பல்கலைக்கழக மருத்துவப்பிரிவு பேராசிரியருமான கோர்க்கா ஆரி (Gorka Orive) கூறுகிறார்.

நவீன அறிவியல் தொழில்நுட்பம் நோய்களின் பிடியில் இருந்து மனிதர்களை காக்க உதவுவதற்கு பதில் சூழலையும் விலங்குகளையும் அழிக்கும் ஆயுதமாக மாறி விடக்கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் அது மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்வதற்கு ஒப்பானது என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/article/2024/jun/06/drug-pollution-wildlife-threat-aoe?

&

https://en.m.wikipedia.org/wiki/Fathead

&

https://en.m.wikipedia.org/wiki/Starling

சிதம்பரம் இரவிச்சந்திரன்