ஜப்பானின் Nankai கடற்பகுதிதான் உலகிலேயே அதிகமான நிலநடுக்கங்களை சந்தித்துவரும் இடம். இந்தப்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களின் வலிமை ரிக்டர் அளவுகோளில் 8.3 ஆகும்.  இந்த இடம் ஜப்பானின் தென்மேற்கே உள்ளது. ஒரு பன்னாட்டு அறிஞர்குழு இந்த கடற்பகுதியில் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கென Chikyu என்று பெயரிடப்பட்டு ஜப்பானிய கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. Chikyu

ஜப்பானிய மொழியில் Chikyu என்றால் பூமிப்பந்து என்று பொருளாம். இந்தகப்பலில் தங்கி ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் குழுவில் ஐரோப்பா, சீனா, தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். 57,000 டன் எடையுள்ள இந்தக் கப்பலின் முதல் ஆய்வுப்பயணம் இதுவே என்பதும் உலகிலேயே மிகப்பெரிய ஆய்வுக்கப்பல் இதுதான் என்பதும் கூடுதல் சிறப்புகள். இந்தக்கப்பலில் இருந்துகொண்டு புவியோட்டின் tectonic platesஐ எட்டக்கூடிய 6,000 மீட்டர் ஆழத்திற்கு துளையிடுவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கப்பல் 12,000 மீட்டர்வரையில் பூமியை துளையிடும் ஆற்றல் கொண்டது.

பூமியின் மேலோடு பல அடுக்குகளைக் கொண்டது பூமியின் உட்பகுதியை கற்கோளம் என்றும் மென்பாறைக்கோளம் என்றும் இரு கூறுகளாக பிரிக்கிறார்கள். கற்கோளம் குளிர்ந்ததும், உறுதியானதும் ஆகும். மென்பாறைக்கோளம், சூடானதாகவும் உறுதி குறைந்ததும் ஆகும். மண்ணியல் கோட்பாட்டின்படி கற்கோளம் வெவ்வேறான tectonic தட்டுகளின் மீது திரவம் போன்ற மென்பாறைக்கோளத்தின்மீது மிதந்துகொண்டிருக்கிறது. மென்பாறைக்கோளத்தின் தன்மை இடத்துக்கு இடம் மாறுபடக்கூடியது. இவை tectonic தட்டுகளை வெவ்வேறு திசைகளில் நகரச்செய்கின்றன. இரண்டு தட்டுகள் சந்திக்கும் பொதுவான எல்லையில்தான் நிலநடுக்கம், எரிமலை போன்ற நிலஉருவவியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஒரு மெல்லிய tectonic மண்தட்டு வலிமையான கண்டத்தின்மீது மோதும்போது ஏற்படும் கீழ்நோக்கிய நகர்வு (subduction of two tectonic plates) குறித்த ஆய்வுகளை இந்தக் கப்பல் மேற்கொள்ளும். tectonic plates உரசிக்கொள்ளும் ஆழம்வரை துளையிட்டு மண்படிவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதுடன் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவிக்கும் கருவிகளைப் பொருத்துவதும் இந்த ஆய்வுகளின் நோக்கமாகும்.

நிலநடுக்கம் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதுதான் இந்த ஆய்வுகளின் நோக்கம் என்று இந்தக் குழுவைச் சேர்ந்த டாக்டர் ஹெரால்டு டோபின் கூறுகிறார். இவர் விஸ்கான்சி-மாடிஸன் பல்கலைக்கழகத்தின்  மண்ணியல் நிபுணர். நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னறிவிப்புகள் இப்போதும் கிடைக்கின்றன. ஆனால் அவை சில வினாடிகளுக்கு முன்பு மட்டுமே கிடைக்கின்றன. இந்த ஆய்வுகளின் அன்றாட முன்னேற்றத்தை NanTroSEIZE ன் இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். NanTroSEIZE என்பது Nankai Trough Seismogenic Zone Experiment என்பதன் சுருக்கப்பெயராகும்.

தகவல்: மு.குருமூர்த்தி

இன்னும் படிக்க: http://www.jamstec.go.jp/chikyu/eng/index.html.

Pin It