மரம் நடுதல் பூமி சூடாவதைத் தடுக்க உதவும் என்று கருதப்படுகிறது. ஆனால் இது வெப்ப மண்டலக் காடுகளில் உயிர்ப் பன்மயத் தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரே இன மரங்கள் நடுவது அந்தந்த இடங்களுக்கே சொந்தமான பாரம்பரிய தாவர, விலங்கினங்களை அழிப்பதுடன் சூழல் பாதுகாப்பில் மிகக் குறைந்த பயன்களையே தருகிறது என்று இது பற்றி சமீபத்தில் சூழலியல் & பரிணாமம் இன்றைய போக்குகள் (Journal Trends in Ecology & Evolution) என்ற இதழில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.eucalyptus treesஒற்றை இன மர வளர்ப்பு

ஒற்றை இன மரம் வளர்ப்பு (monoculture tree planting) திட்டங்கள் வெப்பமண்டல உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கிறது. இதனால் அமேசான், காங்கோ டெல்டா போன்ற சூழல் மண்டலங்களின் கார்பன் சேகரிப்பு மதிப்பு குறைகிறது. மரங்களை எரித்து கரித்தூள் உண்டாக்க காங்கோ டெல்டாவில் காடுகள் அழிக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையில் யூகலிப்ட்டஸ் மரத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

உமிழப்படும் மிதமிஞ்சிய கார்பனை வளிமண்டலத்தில் இருந்து பிரித்தெடுக்க ஒரே வகையான மரங்களை நட்டு வளர்க்கும் பிரம்மாண்ட மரம் நடுதல் திட்டங்களை அரசுகள் கைவிட்டுவிட்டு, இருக்கும் காடுகளை வணிக மயமாக்குதலில் இருந்து மீட்டு பாதுகாக்க வேண்டும்.

கார்பன் சேமிப்பிற்காக வணிகரீதியில் வெப்பமண்டலக் காடுகளில் பெருமளவில் உருவாக்கப்படும் பைன், யூக்கலிப்ட்டஸ் மற்றும் தேக்கு மரத் தோட்டங்கள் (tree plantations) உள்ளூர் தாவர சூழல் மண்டலத்தைப் பாதிக்கிறது. மண்ணை அமிலத் தன்மை உடையதாக்குகிறது, பாரம்பரிய தாவரங்களை மண்ணோடு மண்ணாக்குகிறது, காட்டுத்தீ சம்பவங்களுக்குக் காரணமாகிறது.

வெப்பமண்டல சூழல் மண்டலங்கள் கணக்கற்ற நன்மைகளை செய்து வருகின்றன. என்றாலும் சமூகம் அதன் மதிப்பை ஒரு மெட்ரிக் டன் கார்பன் சேகரிப்பு என்ற அளவில் குறைத்து விட்டது.

மரங்களை அதிக அளவில் நடுவது உயிர்ப் பன்மயத் தன்மை, சூழல் மண்டலச் செயல்பாடுகள், சமூகப் பொருளாதார நன்மைகளைத் தருகிறது என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை. சுழிநிலைக் கார்பன் உமிழ்வு (Zero Carbon emission) என்ற நோக்கத்துடன் உலகம் முழுவதும் தனிநபர், தனியார் மற்றும் பொதுத் துறைகளில் பசுமைப் போர்வை பரப்பை அதிகரிக்க மரம் நடுதல் பெருமளவில் நடைபெறுகிறது.

"காடுகள் ஒரே இனத்தைச் சேர்ந்த மரத்தோட்டங்களை விட 40 மடங்கு அதிக கார்பனை சேகரிப்பதற்கு உதவுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் ஒரே இனத்தைச் சேர்ந்த மரத் தோட்டங்கள் அதிகம் உருவாக்கப்படுவதால் விஞ்ஞானிகள் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக சூழலியலாளரும் ஆய்வுக் கட்டுரையின் முதன்மை ஆசிரியருமான ஜெஸ்வ அஃப்க்வெரா-குடியேரஸ் (Jesuas Aguirre-Gutiérrez) கூறுகிறார்.

“தேக்கு, யூக்கலிப்ட்டஸ், ஊசியிலைக் காடு மரங்கள் போன்றவை வளர்க்கப்படுவது உயிர்ப் பன்மயத் தன்மைக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை. மாறாக பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சுயலாபத்திற்காகவே இவற்றை வளர்க்கின்றன. மரங்களை, கார்பனை சேகரிக்கும் வெறும் குச்சிகளாக நடத்துவது ஆபத்தானது” என்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி உலகளாவிய மாற்றம் பற்றிய அறிவியல் துறை பேராசிரியர் சைமன் லூயிஸ் (Simon Lewis) கூறுகிறார்.

உயிர்ப் பன்மயத் தன்மையை அழித்த ஒற்றை மரக்காடுகள்

ஓர் ஆண்டு கார்பன் உமிழ்வை உறிஞ்ச அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்தின் பரப்பிற்கு சமமான பரப்பில் காடுகள் புதிதாக வளர்க்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியாக தோட்டங்கள் லாபம் தருபவை என்றாலும், அவை சூழலுக்கு நன்மை செய்வதில்லை. எடுத்துக்காட்டு பிரேசிலில் சராடோ சவானா (Cerrado savanna) என்ற பகுதியில் 40% கூடுதல் தோட்டங்கள் உருவாக்கப்பட்டது. இது, அங்கு இருந்த தாவரங்கள் மற்றும் எறும்புகள் போன்றவற்றின் 30% உயிர்ப் பன்மயத் தன்மையை அழித்து விட்டது.

காகிதங்கள், மரப் பொருட்களுக்கு தோட்டங்கள் அவசியம் என்றாலும், தொழில் ரீதியாக செய்யப்படும் மர வளர்ப்பு பிரச்சனையை மோசமாக்குகிறது. “மற்ற சூழல் மண்டலங்களால் ஏற்படும் நன்மைகளைப் புறக்கணித்து ஒரு சூழல் மண்டலத்தின் கார்பன் சேமிப்பு மதிப்பை மட்டும் பெரிதாகக் கருதுவது தவறு” என்று உலகில் நகரப் பகுதிகள், விவசாய நிலப் பகுதிகளுக்கு அப்பால் காடுகளை உருவாக்க 2.2 பில்லியன் ஏக்கர் பொருத்தமான இடம் உள்ளதைக் கண்டறிந்து மற்றொரு ஆய்வின் மூலம் கூறிய ஜூரிச் இ டி ஹெச் (ETH) ஆய்வு அமைப்பின் சூழலியல் பேராசிரியர் மற்றும் ஆய்வுக்குழுவின் இணை ஆசிரியர் தாமஸ் க்ரோதர் (Thomas Crowther) கூறுகிறார்.

இயற்கையின் ஒரு பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது, நாம் மற்ற பகுதிகளை பலி கொடுத்தே அதைச் செய்கிறோம். வரலாற்றுக் காலம் முதல் மரங்களை நாம் மரங்களுக்காக மரங்களாக மதித்தோம். ஆனால் இப்போது இந்த நிலை மாறி விட்டது. சூழலைக் காப்பதற்கு என்று சொல்லி நட்டு வளர்க்கப்படும் பெரும் பரப்பு ஒற்றை மரக் காடுகள் சூழலை அழிக்கின்றன. இந்த நிலை மாறினால்தான் புவி வெப்ப உயர்வால் அழியும் மிச்சம் மீதி தாவர விலங்குகள் உயிர் பிழைக்கும்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/oct/03/carbon-tree-planting-schemes-threaten-tropical-biodiversity-aoe?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்