(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஜூலை 29, பக்கம் 180)

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா! நான் பின்கண்டவாறு பிரேரேபிக்கிறேன்:         

ambedkar 583 “சுரங்க மகப்பேறு நல உதவிச் சட்டம், 1941ஐ திருத்துவதற்கான மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விழைகிறேன்.”

            இந்தத் திருத்தம் ஏன் அவசியமாகியுள்ளது என்பதை அவைக்கு நான் விளக்கிக் கூறினால் அது விரும்பத்தக்கதாக இருக்கும். சுரங்க மகப்பேறு நல உதவி சட்டத்தின் கீழ், சுரங்கத்தில் வேலை செய்யும் ஒரு பெண் 8 வார காலத்திற்கு நாள் ஒன்றுக்கு 8 அணா வீதம் மகப்பேறு நல உதவிபெற தகுதிபெறுகிறார். இந்த 8 வாரக் கால அளவு, ஒவ்வொன்றும் 4 வாரங்கள் கொண்ட இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பகுதி மகப்பேறுக்கு முந்தியும், மற்ற பகுதி மகப்பேறுக்கு பின்பும் மற்றபகுதி மகப்பேறுக்கு முந்திய 4 வாரங்கள் விருப்பப்படியான ஓய்வுக்கான கால அளவாகும். அந்தக் காலத்தில் ஒரு பெண் வேலை செய்து முழுச்சம்பளத்தையும் பெறலாம்; அல்லது வேலைக்கு வராமல் இருந்து பேறுகால நல உதவியைப் பெறலாம். மகப்பேற்றைத் தொடர்ந்துள்ள நான்கு வாரங்களைப் பொறுத்தவரை, அது கட்டாயமாக ஓய்வு எடுக்கும் ஒரு கால அளவாகும்; அந்த சமயத்தில் ஒரு பெண் கட்டாயம் வேலை செய்வது சட்டத்தை மீறுவதாகும், குற்றமுமாகும்; பேறுகால நலனைப் பெறுவதோடு மட்டும் திருப்தியடைய வேண்டும், மகப்பேறு நல உதவி சட்டம் 5வது பிரிவு பேறுகால நல ஊதியம் கொடுக்கப்படுவதற்கு வகை செய்கிறது; அந்தப் பிரிவின் 9 வது வரியில் இப்பொழுதுள்ள சொற்களை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் கவனிப்பார்களாயின், ‘வேலைக்கு வராமல் இருந்தால்” என்று இருப்பதைக் காண்பார்கள். இந்தச் சொற்கள் குறிப்பாக ‘வேலைக்கு வராமல் இருப்பது” என்னும் சொற்கள் தெளிவற்றவையாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. ‘வேலைக்கு வருவதிலிருந்து’ என்ற சொற்கள் ஒரு ஐயப்பாட்டை ஏன் கொண்டு வருகிறது என்று கூறப்பட்டது என்பதைச் சுருக்கமாக விளக்குகிறேன்.

            சுரங்க உரிமையாளரால் சுரங்கம் ஒரு குறிப்பிட்ட நாளில் மூடப்பட்டிருந்தது என வைத்துக்கொள்வோம். அப்போது மகப்பேறு நல உதவி பெற அந்தப் பெண் உரிமை பெறுகிறாளா? ‘வேலைக்கு வராமல் இருப்பது’ என்ற சொற்களின் பொருள், வேலை நடைபெறுகிறது என்று பொருள்படுகிறது; ஆனால் சுரங்கம் மூடப்படும்போது, அந்த வேலை நடைபெறவில்லை; எனவே ‘வேலைக்கு வருவதிலிருந்து’ என்ற சொற்கள் தெளிவற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளன. பல்வேறு மாகாணங்களில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு பேறுகால நலஉதவிச் சட்டங்களோடு, 5வது பிரிவை ஒப்பிட்டுப் பார்த்தேன்; அவற்றில் ’வேலைக்கு வருவதிலிருந்து’ என்ற சொற்கள் இடம்பெறவில்லை. இந்தச் சொற்களை எடுத்துவிடுவதன் மூலம் இந்த தெளிவற்ற நிலையை போக்கவேண்டியது அவசியமாகிறது. இந்தத் திருத்தத்தை இரு வேறுபட்ட திருத்தங்கள் மூலம் நிறைவேற்ற முயற்சிக்கப்படுகிறது. ஒன்று, எந்த சொற்கள் ஐயப்பாட்டினை ஏற்படுத்தினவோ அவற்றைப் பிரிவு 5இலிருந்து அகற்றி விடுவது! மகப்பேற்றிற்கு முந்தின நான்கு வாரக் காலத்தில், ஒவ்வொரு நாளும் மகப்பேறு நல உதவி பெற பெண் உரிமைபெற்றுள்ளார்’ என்ற வாசகத்துடன் அந்தப் பிரிவைப் படிக்க வேண்டும். இரண்டாவதாக, பேறுகாலத்திற்கு முந்தின நான்கு வார காலம் விருப்பப்படி ஓய்வு எடுத்துக்கொள்ளும் காலம், அந்த சமயம் அவர் வேலைக்குச் சென்று முழுச் சம்பளத்தையும் பெறுவதையும் தேர்ந்தெடுக்கலாம்; அல்லது வீட்டில் இருந்து கொண்டே பேறுகால நலனைப் பெறுவதோடு திருப்தியடையலாம் என்று ஏற்கெனவே கூறினேன். ஆனால் இந்த நான்கு வார காலத்தில் அவர் வேலைக்குச் சென்றால் அப்பொழுது, எந்தப் பேறுகால உதவி பெறவும் அவர் உரிமை பெற மாட்டார் என்ற உப-பிரிவைச் சேர்த்துள்ளோம். இந்த வார்த்தைகளோடு, நான் பிரேரபிக்கிறேன்:

            திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்):

            ‘சுரங்க மகப்பேறு நல உதவிச் சட்டம், 1941 ஐ திருத்துவதற்கான மசோதாவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென விழைகிறேன்.”

            தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

            பிரிவு 2 மசோதாவுடன் சேர்க்கப்பட்டது.

            பிரிவு 1 மசோதாவுடன் சேர்க்கப்பட்டது.

            தலைப்பும் பீடிகையும் மசோதாவுடன் சேர்க்கப்பட்டன.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென பிரேரேபிக்கிறேன்.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் பிரேரேபிக்கப்படுகிறது.

            ‘மசோதா நிறைவேறட்டும்.”

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா! நான் பின்கண்டவாறு பிரேரேபிக்கிறேன்:

   ambedkar 286  “மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) அவசரச் சட்டம், 1942ஐ திருத்தும் இந்த மசோதாவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.”

     இது ஒரு எளிமையான நடவடிக்கை. அவை நினைவில் கொள்வதுபோல், பல்வேறு அவசரச் சட்டங்கள் மூலம் பல்வேறு நபர்களின் சேவையை நாட்டின் பாதுகாப்புக்காக சர்க்கார் ஆணையின் மீது பெறப்பட்டிருக்கிறது.

     மதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: மொத்தத்தில் எத்தனை பேர்?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: என்னிடம் தகவல் இல்லை என அஞ்சுகிறேன்; ஆனால் பொதுவான உண்மை நன்கு தெரிந்ததே. அவற்றில் ஒன்று மோட்டார் வாகன ஓட்டுனர்களின் சேவை நாட்டுக்குப் பெறப்பட்டதாகும். அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டபிறகு, மற்ற அவசர சட்டத்தில், உள்ள ஒரு பிரிவு மோட்டார் வாகனங்கள் ஓட்டுனர் அவசரச் சட்டத்தில் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மோட்டார் வாகன ஓட்டுனரின் சேவை எந்த அதிகாரத்தின்படி கோரப்பட்டதோ, அந்த சேவையின் தேவை பூர்த்தியானபின், சொந்தக்காரர் அவரை மீண்டும் வேலைக்கு வைத்துக்கொள்ள கோரும் எந்தப் பிரிவும் அவசரச் சட்டத்தில் இல்லை. இந்த இடைவெளியை நிரப்ப இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்தத் திருத்தத்தின் நோக்கங்கள் மூன்று தன்மை கொண்டது. சர்க்காரால் ஒரு ஓட்டுனரின் சேவை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும், அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்தும் கட்டாயக் கடமை முதலாளிக்கு இருப்பதை இந்த திருத்தம் அறிவிக்கிறது. இரண்டாவது, முதலாளியின் இந்த பொறுப்பு சம்பந்தமாக எழக்கூடிய சர்ச்சைகளுக்குத் தீர்வு காணுவதற்கான வழிமுறைகளை வகுக்கிறது; மாகாண சர்க்கார் சார்பில் நியமிக்கப்படும் அதிகாரி பற்றி இந்த மசோதா குறிப்பிடுகிறது; மூன்றாவது, அந்த அதிகாரி பிறப்பிக்கும் ஆணையை நிறைவேற்றாததற்காக அபராதம் விதிப்பது பற்றியும் இதில் கூறப்பட்டிருக்கிறது. ஒரு மோட்டார் வாகன ஓட்டுனருக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு உரிமையின் வரம்புகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கின்றன மசோதாவின் மற்ற பிரிவுகள்; அவை இரு-தன்மை வாய்ந்தவை. முதலாவதாக, மீண்டும் வேலைக்கு சேர்க்கப்படும் உரிமையை கோருவதற்கு, அவர் ஆறுமாத காலத்திற்கு தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, நாட்டுக்கான சேவையிலிருந்து விடுபட்ட இரண்டு மாதங்களுக்குள் அவர் மீண்டும் வேலைக்கமர்த்தப்படுவதற்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகள் திருப்தி செய்யப்பட்டால், நாட்டு சேவைக்காக கோரப்பட்ட மற்றவர்கள் நிலையில் இவரையும் இந்த மசோதா வைக்கிறது. இந்த மசோதா பற்றி மேலும் சொல்ல எதுவுமில்லை. ஐயா! இந்த வார்த்தைகளுடன், மசோதாவை நான் பிரேரேபிக்கிறேன்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் வருமாறு:

‘மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) அவசர சட்டம், 1942ஐ திருத்தும் இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.”

     தீர்மானம் நிறைவேறியது.

*     *     *

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): பிரிவு 2.

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஜூலை 29, பக்கம் 179-80)

     1சர் கவாஸ்ஜி ஜஹாங்கிர்: (பம்பாய் நகரம்:முகமதியர் நகர் பகுதி) ஐயா! நான் அறிந்தவரை இந்தப் பிரிவுதான் முக்கிய பிரிவு. யுத்த நோக்கங்களுக்காக சர்க்காரால் சேவைக்கு அழைக்கப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுனர்களுக்கு வேலைபெற்றுத் தருவது இந்த மசோதாவின் நோக்கம் என்று நான் காண்கிறேன்; முந்திய முதலாளி இரண்டு நிபந்தனையின்கீழ் அந்த மோட்டார்வாகன ஓட்டுனரை வேலைக்கு அமர்த்தும்படி செய்வதற்கான முயற்சி இது; அந்த நிபந்தனைகள் வருமாறு: முந்திய முதலாளியிடம் அவர் ஆறுமாதங்கள் வேலை பார்த்திருக்க வேண்டும்; அவரை வேலைக்கு அமர்த்த அவர் இரண்டு மாதங்களுக்குள் மனு செய்ய வேண்டும். இந்த விஷயங்களை மாண்புமிகு உறுப்பினர் கவனத்தில் கொண்டு இதுபற்றி பரிசீலனை செய்ய அவர் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மக்களுக்கும் நாட்டுக்கும் மாண்புமிகு உறுப்பினர் நன்மை செய்தவராகிறார்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மதிப்பிற்குரிய எனது நண்பர் சர் கவாஸ்ஜி ஜஹாங்கிர் கூறிய கருத்துகளைப் பொறுத்தவரை, முதலாளி தன்னுடைய முந்திய ஓட்டுனரை மீண்டும் வேலைக்கு அமர்த்திக்கொள்ளும்படிக் கோரப்படும்போது என்ன நிகழக்கூடும் என்பதைப்பற்றி அவர் உண்மையில் ஒரு பெரிய, கருப்புவர்ணத்தைப் பூசி பெரிதுப்படுத்தியுள்ளார் என்று கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த விஷயம் ஒரு பெரிய தகராறுக்குரிய விஷயமாக மாறி, வழக்கறிஞர்கள் வைத்து வாதாடும் அறைக்குச் செல்லும் என்று அவர் கருதுவதாகத் தோன்றுகிறது. ஆனால் இது அத்தனை சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்காது என்று நம்புகிறேன். மாகாணசர்க்கார் இது சம்பந்தமாக ஒரு அதிகாரியை நியமிக்கும் விதியையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அந்த அதிகாரி இரு தரப்பாருக்கும் ஏற்புடையவராக இருப்பார் என்று கூறுவதில் எனக்குச் சந்தேகமில்லை.

     சர் கவாஸ்ஜி ஜவாங்கீர்: அதை நாங்கள் தெரிந்து கொள்வது எவ்வாறு?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மாகாண சர்க்கார் அதனால் சாத்தியமான அனைத்தையும் செய்யும் என்று நாம் நம்ப வேண்டும்.

     சர் கவாஸ்ஜி ஜவாங்கீர்: ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டதும் விதிமுறைகள் மிக விரிவாக இருக்கும் என்பதையும், பிரச்சினை எவ்வளவு எளிதாக இருந்தாலும் இது எப்பொழுதும் கணிசமாக அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதையும் மாண்புமிகு உறுப்பினர் அறிய மாட்டாரா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பிரச்சினையை விரைவாக தீர்த்துவைப்பதில் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாது, எனவே, இந்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு என்னை நிர்ப்பந்திக்கும் அளவுக்கு இதில் எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன். எழக்கூடிய விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருக்குமெனக் கருதுகிறேன்; இரு சாராருக்கும் அதிக கஷ்டம் அல்லது கவலை ஏற்படுத்தாமல் அவற்றைத் தீர்த்துவைக்க முடியும்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் இதுதான்:

     “பிரிவு இரண்டு மசோதாவின் ஓர் அங்கமாக அமைந்துள்ளது.” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     பிரிவு 2 மசோதாவில் சேர்க்கப்பட்டது.

     பிரிவு 3 மசோதாவில் சேர்க்கப்பட்டது.

     பிரிவு 1 மசோதாவில் சேர்க்கப்பட்டது.

     தலைப்பும் பீடிகையும் மசோதாவில் சேர்க்கப்பட்டன.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா! நான் மசோதா நிறைவேற வேண்டுமென பிரேரேபிக்கிறேன்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): தீர்மானம் வருமாறு:

     ‘மசோதா நிறைவேறட்டும்.”

     தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

ambedkar and his wife savitha

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுப்பு II, மார்ச், 1943, பக்கம் 1649-51)

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, பின்கண்ட மசோதாவை முன்மொழிகிறேன்:

‘போர்க்காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பை முதலாளிகள் மீது சுமத்தவும் இந்தச் சுமையை ஈடுசெய்ய முதலாளிகள் காப்பீட்டிற்கு வகை செய்யவுமான மசோதா கீழ்க்கண்டவர்கள் கொண்ட தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்படுகிறது. சர் வித்தல் என்.சந்தவர்க்கர், திரு.எம்.என்.ஜோஷி, திரு.ஜம்னாதாஸ் மேத்தா, திரு.டி.எல்.ஜோஷி, திரு.காதிர் முகமது சபன், திரு.ஸி.ஸி.மில்லர், திரு.இ.ஐ.சி.குவில்ட் மௌலானா ஜாபர் அலிகான், திரு.யூசுப் அப்துல்லா ஹருன், ஹாஜி சௌதுரி முகமது இஸ்மாயில் கான், திரு.எச்.ஏ.சத்தார் எச்.எஸ்ஸாக்சேட், திரு.அமேந்திர நாத் சட்டோபாத்யாயா, திரு.ஆர்.ஆர்.குப்தா, மற்றும் தீர்மானத்தை முன்மொழிபவர்; இந்தக் குழுவின் கூட்டம் நடைபெற, அதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக இருக்க வேண்டும். இக்குழு சிம்லாவில் கூடுவதற்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.”

     திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல்ரஹீம்): மாண்புமிகு உறுப்பினர் பெயர்களைக் கொடுத்துள்ளாரா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, பட்டியலை இப்பொழுது அளிக்கிறேன்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல்ரஹீம்): பெயர்கள் ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு இந்த மசோதாவை சிபாரிசு செய்ய அவையின் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ள எனக்கு அவசியம் எற்படும் என நான் நினைக்கவில்லை. இந்த மசோதாவின் பிரதான ஷரத்துக்கள் மூன்று. முதலாவதாக, போர்க்காயங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுப்பதை இந்த மசோதா சாத்தியமாக்குகிறது. இரண்டாவது இத்தகைய இழப்பீட்டுத் தொகையை கொடுக்க வேண்டிய பொறுப்பு முதலாளிகளைச் சேர்ந்தது என இந்த மசோதா நிர்ணயித்துக் கூறுகிறது; மூன்றாவது, தங்கள் மீது சுமத்தப்படும் இந்தப் பொறுப்புக்கு ஈடுசெய்ய முதலாளிகளை காப்பீடு செய்யுமாறு நிர்ப்பந்திக்கிறது இந்த மசோதா.

     இப்பொழுது, இழப்பீட்டு பிரச்சினையை எடுத்துக் கொண்டால், அவையின் கவனத்தை ஈர்க்க நான் விரும்பிய விஷயம் என்னவெனில், இந்த மசோதா ஒரு இணைக்கப்பட்ட நடவடிக்கையாகும். இது தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஐயா, போர்க்காயங்கள் அவசரச் சட்டத்திற்கும் இந்த மசோதாவுக்கும் இடையேயுள்ள சம்பந்தம் பற்றி ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருப்பதை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் ஞாபகப்படுத்திக் கொண்டால், 1941 ஆம் வருட போர்க்காயங்கள் அவசரச்சட்டம், இழப்பீட்டுத் தகுதிபெறும் காயங்கள் எவை என்று வரையறுத்துக் கூறியிருப்பது தெரியவரும். அத்தகைய காயங்கள் அவசரச் சட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய மசோதா செய்வது என்னவெனில், போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தில் தகுதிபெறும் காயங்கள் என்று விவரிக்கப்பட்டவற்றின் இலக்கையும் எல்லையையும் பிரதானமாக அங்கீகரிப்பதுதான். இந்த மசோதாவுக்கும் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்திற்குமுள்ள சம்பந்தம் பற்றிய பிரச்சினையைப் பொறுத்தவரை, போர்க்காயங்களால் பாதிப்பிற்குள்ளானவருக்கு இந்த மசோதாவில் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை, தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களை கிட்டத்தட்ட பின்பற்றுகிறது என்ற உண்மையிலிருந்து மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்குத் தெளிவாகியிருக்கும்.

     ஐயா, மசோதாவைக் கொண்டுவருவதன் நோக்கம் இதுதான்: போர்க் காயங்கள் அவசரச் சட்டம் 1941ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போது, ஒரு கேள்வி எழுந்தது; அந்தக் கேள்வி, சாரமுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும்; துரதிருஷ்டவசமாக இந்த அவசரச் சட்டத்தின்படி தகுதிபெறும் காயங்களை ஒரு தொழிலாளி பெற்றால், அவருக்குக் கொடுக்கப்படும் தொகை, துயர் துடைப்பு உதவியா அல்லது இழப்பீட்டுத் தொகையா என்பதுதான் கேள்வி. துயர்துடைப்பு உதவிக்கும் இழப்பீட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகத் தெளிவானது. துயர் துடைப்பு என்பது ஒரு போர்க்காயத்தின் காரணமாக எற்பட்ட இயலாமையால் வழக்கமாகப் பெறும் சம்பளத்தை பெறுவதிலிருந்து தடுக்கப்படுவதால் ஏற்படும் கஷ்டங்களிலிருந்து வெளிவர உதவி செய்வது மட்டுமே. இழப்பீடு என்பது, தொழிலாளர் இழப்பீடு சட்டத்தின்படி, அவர் அடையும் நஷ்டத்தை முற்றிலுமாக ஈடுசெய்வதற்கு கொடுக்கப்படும் தொகையை நிர்ணயிப்பதை குறிக்கிறது. இந்தக்கேள்வி எழுப்பப்பட்ட போது, இங்கிலாந்தில் நிலவிய நிலைமைகளைப் பற்றி விசாரிக்கப்பட்டது; அப்பொழுது பல்வேறு வகை போர்க் காயங்கள் சட்டம், 1936 என்று அழைக்கப்பட்ட சட்டத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றம் இயற்றியுள்ளது பற்றி தெரியவந்தது. இந்த பிரிட்டிஷ் சட்டத்தின் ஷரத்துக்களை ஆராய்ந்தபொழுது, இந்தச் சட்டம் இடர்காப்பு உதவி மட்டுமல்லாமல் இழப்பீட்டு தொகையைக் கொடுப்பதையும் அனுமதிக்கிறது என்று தெரிந்தது. பிரிட்டிஷ் சட்டத் தொகுப்பில் வகுக்கப்பட்டுள்ள இந்தக் கோட்பாட்டை இந்திய சர்க்கார் பின்பற்றுவது விரும்பத்தக்கதல்லவா என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. இரண்டாவதாக, போர்க்காயங்கள் அவசரச் சட்ட ஷரத்துக்கள் போதுமானவை அல்ல என்றும், யுத்தக்கால அமைதிக்குலைவு ஏற்பட்டுள்ள வட்டாரங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அவர்கள் பணியில் ஸ்திரத்தன்மையுடன் வேலைசெய்வதற்காக இழப்பீட்டு தொகை அவசியம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்த இரு கண்ணோட்டங்களிலிருந்து முதலில் கருதிய துயர்துடைப்பு என்னும் கோட்பாட்டிற்குப் பதில் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுதொகை கொடுக்கப்பட வேண்டுமென்ற கோட்பாட்டை இந்திய சர்க்கார் ஏற்றுக்கொண்டது.

     போர்க்காயங்கள் அவசரச் சட்ட ஷரத்துக்களை பரிசீலித்தபேது, ரூ.24 மட்டத்தில் போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தின்கீழ் கொடுக்கப்பட்ட தொகை துயர்துடைப்பு மட்டுமல்லாமல் இழப்பீட்டுத் தொகையுமாகும் என்று தெரிந்தது. எனவே ரூபாய் 24க்கு மேல் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு அதிகப்படியான தொகை கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது; இந்த அதிகப்படியான தொகை இழப்பீட்டுத் தொகையாகும்; அதாவது, அவசரச் சட்டத்தின்கீழ் பெறும் தொகையுடன் இந்த அதிகப்படி தொகையுடன் சேர்ந்து இழப்பீட்டுத் தொகையாகவும் ஆகிறது. இந்தச் சட்டம் ஒரு துணை நடவடிக்கையாகும்; போர்க் காயங்கள், அவசரச் சட்டத்துக்குத் துணையான நடவடிக்கை இது; 1941 ஆம் வருடப் போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தின் ஷரத்துக்களை இது வளப்படுத்துகிறது.

     இந்த மசோதா எவ்வாறு போர்க்காயங்கள் அவசரச் சட்டத்துடனும் தொழிலாளர் ஈட்டூதியச் சட்டத்துடனும் இணைக்கப்பட்டது என்பதை அவைக்கு விளக்கியபின், இந்த துணைச் சட்டத்தை இந்திய சர்க்கார் கொண்டு வருவதற்கான காரணத்தை விளக்கியபின், இந்த மசோதாவின் இரண்டாவது பிரதான அம்சத்தை விளக்க முற்படுகிறேன்; அதாவது, இந்த இழப்பீடுக்கு முதலாளிகளைப் பொறுப்பாக்குவதாகும். போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தின் ஷரத்துக்களின் கீழ், துயர்துடைப்புத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட சர்க்கார், இந்த மசோதா பொருந்தக் கூடியவர்களுக்கு இழப்பீடுத் தொகைக்கும் இத்தகைய பொறுப்பை அது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்படலாம். இந்தப் பொறுப்பைச் சர்க்கார் ஏற்றுக்கொள்வது சாத்தியமல்ல என்பது தெளிவு; இந்த விஷயத்தின் சூழ்நிலையில் அது எதுவாகவேணும் ஆகலாம்; இந்தியா இப்பொழுது இருப்பதுபோல் இருந்தால், இதனால் எந்தப் பொறுப்பும் ஏற்படாமல் இருக்கலாம் அல்லது நிலைமை மேலும் மோசமடைந்தால், பொறுப்பு திட்டவட்டமில்லாது போகும்; இந்திய சர்க்காரின் ஆற்றல் திறனைப் பொறுத்த வரை, அத்தகைய வரைமுறையற்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி சர்க்காரை கோர முடியாது என்பது தெளிவு. இரண்டாவதாக, இந்த விஷயத்தில் சர்க்கார் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை பெரிதாக்கிக் கொள்ளமுடியும் என்று நான் கருதவில்லை; எந்த இழப்பீடு தொகை கொடுக்க வேண்டுமென முதலாளி கோரப்படுகிறாரோ, அதாவது நாம் அவர்மீது சுமத்தப்படும்தொகை, இ.பி.டி- ன் கீழ் இது வருவாய் செலவாகச் சந்தேகமின்றி அனுமதிக்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும்; இதன்விளைவாக, இதன் பிரதான பளு முடிவில் கஜானாவின் மீதுதான் விழும்.

     முதலாளிகள் மீது இந்தச் சுமையைத் திணிக்க இந்திய சர்க்கார் வழி செய்யும்பொழுதே, தனது சிப்பந்திகள்பால் தனக்குள்ள சொந்த கடமையை அது மறந்துவிடவில்லை. இந்த மசோதாவில் உள்ள ஒரு ஷரத்து, மாட்சிமைதங்கிய மன்னர்பிரானின் ஊழியர்களுக்கும் பெடரல் ரயில்வே ஊழியர்களுக்கும் பொருந்தாது என்று கூறுவதை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் காண்பார்கள். ஆனால் அதன் பொருள், இந்த மசோதாவால் மற்றவர்கள் பயனடைவது போல் மேற்சொன்ன சிப்பந்திகள் பயன் அடைய மாட்டார்கள் என்பதல்ல. பொதுத்துறைப் பணியாளர் விதிமுறைகளிலும் ரயில்வே தொழிலாளர்களுக்கான சட்டப்படியான விதிகளிலும் கண்டுள்ள அதிகப்படியான பென்ஷன் தொகைகளை வழங்க தயாராக இருப்பதாக பெடரல் ரயில்வேயும் இந்திய சர்க்காரும் தங்களுடைய ஊழியர்களுக்குத் தெரிவித்துள்ளனர் என்பதை இந்த அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

     ஐயா, முதலாளி மீது சுமத்தப்பட்ட பளுவை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கும் மூன்றாவது ஷரத்து மிக அவசியமானதும் சட்டப்படி மிகவும் கட்டுப்படுத்தும் ஒன்றுமாகும் என்பது எனது திட்டவட்டமான கருத்து. இந்த ஷரத்தின்நோக்கம், இந்த மசோதா வழிவகுக்கின்ற இழப்பீடு தொகையை எல்லா சந்தர்ப்பத்திலும் பெறுவதை உத்திரவாதம் செய்வதுதான். ஒரு தொழிற்சாலை குண்டுவீச்சுக்கு உட்பட்டால் அல்லது இடித்து நாசம் செய்யப்பட்டால், நலன்கள் வழங்கும் இந்த மசோதாவின் ஷரத்து அமுலில் இருந்தபோதிலும், இறுதியாகப் பார்த்தால் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு தொகையைப் பார்த்தால் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு தொகையைப்பெறும் சந்தர்ப்பம் இல்லாமல் போகலாம். எனவே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தொழிலாளிக்கு இந்த மசோதா வழங்கியிருக்கும் அனுகூலங்கள் போர்க்காயம் பெறும் துரதிருஷ்டவசமான நிலை ஏற்பட்டால் அவை அவருக்குக் கிடைப்பதைக் காப்பீடு உத்திரவாதம் செய்கிறது. இந்த மசோதாவின் விதிகளின்படி முதலாவதாக முதலாளியால் தொழிலாளிக்கு வழங்கப்படும், சர்க்காரால் நிர்வகிக்கப்படும் காப்பீட்டிலிருந்து முதலாளிக்கு அது ஈடுசெய்யப்படும். யுத்த முடிவுக்குப்பின் மொத்தச் சுமை எவ்வளவு என்று முடிசெய்யப்படும் காப்பீட்டு நிதிக்கு முதலாளி காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும்.

யுத்த முடிவுக்குப்பின் நிர்ணயிக்கப்படும் இறுதி காப்பீட்டுக் கட்டணத்திற்கு எதிராக முன்பணத்தை முதலாளிகளிடமிருந்து சர்க்கார் வசூலிக்கும். செலுத்த வேண்டிய முன்பணம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை முடிவு செய்யப்படும். முதல் மூன்று மாதத்தில், முன்பணம் சம்பளப் பட்டியலில் ரூ.100க்கு எட்டு அணாவுக்கு மேல் இருக்காது. அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குப் பாக்கியுள்ள பொறுப்பு தொகைக்கு ஏற்ப அதுமாறும். முந்தின மூன்று மாதங்களில் எந்தக் காயங்களும் ஏற்படாமல் இருக்கலாம். அது அப்படியாயின், முதலாளியிடமிருந்து எந்த முன்பணமும் வசூலிக்கப்படாது என்பது தெளிவு. நான் கூறியபடி இந்தக் காப்பீடுத் திட்டத்தின் நற்பயன் என்னவெனில், அது தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை உத்திரவாதம் செய்கிறது; இரண்டாவதாக, நஷ்டம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது; தாக்குதல் அபாயத்திற்கு உட்படாத பிரதேசங்களில் வாழும் தொழிலாளர்களும் தாக்குதலுக்குட்பட்ட பிரதேசங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் காப்பீடுநிதிக்கு ஒருபங்கைச் செலுத்த வேண்டும். மூன்றாவதாக, இந்தப் பளு விகித விதிப்படி பிரித்துக் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு முதலாளியின் சம்பளப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது அது.

     ஐயா!! எனவே இந்த மசோதா ஒரு எளிமையான நடவடிக்கை என்பதைக் காணமுடியும். வாத-பிரதிவாதத்திற்கு உட்படாத நடவடிக்கை என்றும் கூறுவேன். இந்த மசோதாவுக்கான கருத்து 1942 துவக்கத்தில் பம்பாய் மில்முதலாளிகள் சங்கத்திலிருந்து வந்தது என்பதை அவை தெரிந்துகொள்ள விரும்பும்; இந்த ஆலோசனை இந்திய சர்க்காருக்கு அனுப்பப்பட்டபின், தொழிலாளர் இலாகாச் செயலாளர் சர் ஹென்றி ரிச்சர்ட்சன், சர் பிரடெரிக் ஜேம்ஸ், திரு.ஹட்டோ, திரு.குவில்ட், திரு.ஹூசேன்பாய் லால்ஜி ஆகியோரைக் கொண்ட ஒரு பூர்வாங்க மாநாடு 1942 ஏப்ரலில் நடைபெற்றது. அவர்களின் ஆலோசனைப்படி தொழிலதிபர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. இரு தொழிலதிபர்களின் அமைப்புகள் அணுகப்பட்டன; இரு அகில இந்தியத் தொழில் அதிபர்களின் அமைப்புகள் இந்த நடவடிக்கையை முழுமையாக ஆதரித்தன. தொழிலதிபர்களின் சம்மேளனத்தைப் பொறுத்தவரை, துரதிருஷ்டவசமாக அந்த அமைப்பு ஒரே கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒரு பகுதி சாதகமாக இருந்தது, மற்றொன்று சாதகமாக இல்லை. தொழிலாளர் பிரதிநிதித்துவம் பொறுத்தவரை, தொழிலாளர் நிலைக் குழு ஏகமனதாக இந்த நடவடிக்கைக்கு சிபாரிசு செய்தது. இந்த மசோதாவின் ஷரத்துக்களை முற்றிலுமாகப் புரிந்து கொள்ள வேறு அதிகமாக எதுவும் தேவை என்று நான் நினைக்கவில்லை. ஐயா, இந்தக் கருத்துரையுடன் இம்மசோதாவைப் பிரேரேபிக்கிறேன்.

*     *     *

     1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா! இன்று காலை நான் பிரேரேபித்த மசோதாவுக்கு இத்தகைய ஒரு பொதுவான ஆதரவு அளிக்கப்பட்டது அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். மசோதாவிற்கு எதிரான விமர்சனங்கள் அதிசயிக்கத்தக்க வகையில் சிலவையே; அவற்றில் பெரும்பாலானவை எனது மதிப்பிற்குரிய நண்பர்கள் திரு.மில்லரிடமிருந்தும் திரு.ஜோஷியிடமிருந்தும் வேண்டியது அவசியம் என்று திரு.மில்லர் சொன்னார். எந்த விஷயங்கள் அவர் மனதை வருத்திக்கொண்டிருக்கின்றன என்பதை தயவுசெய்து அவர் எனக்குத் தெரிவித்தால், அவர் விரும்பும் எந்தவிதத் தகவலையும் வழங்க எப்பொழுதும் நான் மகிழ்ச்சியடைவேன். அவர் எழுப்பிய மற்ற விஷயத்தைப் பொறுத்தவரை, அதாவது போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தின் கீழ் நாம் வழங்கிவரும் விகிதங்களுக்கும் இந்த மசோதாவின் கீழ் நாம் கொடுக்கவிருக்கும் விகிதத்திற்கும் இடையே பாகுபாடு உள்ளதாக அவர் மனதில் தோன்றியதைப் பொறுத்தவரை, அவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என நான் அஞ்சுகிறேன்; ஏனெனில் நான் எடுத்துரைக்க முற்பட்டது போல, இந்த மசோதாவின் நோக்கம் போர்க்காயங்கள் அவசரச் சட்டத்தின் கீழ் வருகிறவர்கள் நிலையையும் இந்த மசோதாவின் கீழ் வருகிறவர்கள் நிலையையும் உண்மையில் சமநிலைப்படுத்துவதே. நான் சுட்டிக்காட்டியபடி போர்க்காயங்களால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு நாம் கொடுத்துவந்த விகிதங்களை பரிசீலித்ததில், ரூ.24ம், அதற்கு மேலும் சம்பளம் பெற்றவர்கள் துயர் துடைப்புத் தொகை மட்டுமே பெற்றனர் என்பதையும் ரூ.24/- க்குக் கீழ் சம்பளம் பெற்றவர்கள் இழப்பீடு தொகை மட்டுமே பெற்றனர் என்பதையும் காணமுடிந்தது.

இப்பொழுது இந்தச்சட்டப்படி நாம் செய்யவிருப்பது, ரூ.24க்கு மேல் இருப்பவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவதாகும். பாகுபடுத்தும் நிலையை ஏற்படுத்துவதற்கு மாறாக, இந்த இரு சட்டங்களின் கீழ் தகுதிபெறும் எல்லாத் தொழிலாளர்களின் நிலையை சமநிலைப்படுத்துகிறோம் என்பதை எனது மதிப்பிற்குரிய நண்பர் காணமுடியும். என் நண்பர் திரு.மில்லர் எழுப்பிய விஷயத்தை நான் பாராட்டுகிறேன்; அதாவது 5வது ஷரத்து வகுக்கும் சிலவகைத் தொழிலாளர்கள் அல்லது சில பிரிவுத் தொழிலாளர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தால் பயன்பெறுவர்; இந்த சட்டத்தின் விதிமுறைகளிலிருந்து அது மிகத் தெளிவாகிறது. ஆனால் நான் சுட்டிக்காட்டியபடி இரு சந்தர்ப்பங்களைப் பொறுத்தவரை முதலாவதாக, எல்லாத் தொழிலாளர்களுக்கும் இழப்பீடு கொடுக்கும் சுமையைச் சர்க்கார் ஏற்றுக்கொள்வது சாத்தியமல்ல; இரண்டாவதாக சர்க்கார் முன்வைக்கக்கூடிய எந்தக் காப்பீட்டுத் திட்டத்தையும் பொறுத்தவரை, அது நிர்வாக ரீதியாக நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். எல்லா வகைப்பட்ட தொழிலாளர்களுக்கும் பொருந்துமாறு அதனை நடைமுறைப்படுத்தினால் சர்க்காருக்கு அது அதிக சுமையாக இருக்கும்; நிர்வாக ரீதியில் செயல்படுத்த முடியாததாகி விடும். பொறுப்பை நாம் நிச்சயம் சுமத்தக்கூடிய, காப்பீடு கட்டணத்தை செலுத்த ஒரு முதலாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

பொது மக்களைப் பொறுத்தவரை, இந்தப் பொறுப்பைச் சுமக்கக்கூடிய, காப்பீட்டுக் கட்டணத்தை தரும்படி கோரமுடிகிற ஒருவரை கண்டுபிடிப்பது சாத்தியமல்ல. விதி 5 விவரிக்கிற சில பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டும் என இந்தத் திட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்படி தேவைப்பட்டதற்கான நிச்சயமான காரணம் இதுதான். விதி 5 விவரித்த பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமென கட்டுப்படுத்திக் கொண்டதற்கான நியாயம் எதையும் நாங்கள் கூறவில்லை என்று மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.மில்லர் கூறினார். நான் அவருக்குக் கொடுத்திருக்கக்கூடிய பதில்கள் சிலவற்றை மதிப்பிற்குரிய என் நண்பர் திரு.ஜோஷி கொடுத்துள்ளார்; அவற்றைத் திருப்பிக் கூற நான் விரும்பவில்லை. நோக்கங்கள் – காரணங்கள் அறிக்கையிலேயே பதிலை உண்மையில் கண்டுபிடிக்கலாம். நோக்கங்கள் – காரணங்கள் பற்றிய (பாரா. 2) இந்த சட்டத்தை, அதில் விவரிக்கப்பட்ட பிரிவுத் தொழிலாளர்களுக்கு மட்டுமாகக் கட்டுப்படுத்திக் கொண்டது நாம் கொடுக்கக்கூடிய நல்ல பதிலாகும். தொழிற்சாலைகளிலும் தொழிற்கூடங்களிலும் அவர்கள் ஆபத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதை நோக்கங்களும் – காரணங்களும் என்ற அறிக்கை (பாரா 2) தெளிவாக்குகிறது. அதில் விவரிக்கப்பட்ட தொழிலாளர் பிரிவினருக்கு மட்டும் இந்தச் சட்டம் என்று மட்டுப்படுத்திக் கொள்வதற்கு கொடுக்கப்படக்கூடிய ஒரு நல்ல காரணம் எனக் கூறினேன். தொழிற்சாலைகளும் தொழிற்கூடங்களும் எதிரியின் தாக்குதலுக்கு சுலபமான இலக்குகள் என்பதை மறுக்க முடியாது. எனவே, பொதுமக்களை விட, இந்த இடங்களில் வேலை செய்வோர் ஆபத்திற்கு அதிகமாக உட்படுத்தப்படுகிறார்கள்.

     மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி எழுப்பிய கேள்வியைப் பொறுத்தவரை, இந்த மசோதா எல்லாத் தொழிலாளர்களுக்கும் பொருந்தாது என்பது; இரண்டு குறிப்பிடத்தக்க பிரிவினருக்கு இந்தச் சட்டத்தின் சிறப்பு சட்டப் பிரிவு விரிவாக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார், அதாவது அஸ்ஸாமில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் கப்பல் மாலுமிகளுக்கும்; இந்த பிரிவினர் விஷயத்தில் குறிப்பான பதில் தேவை என்பதில் சந்தேகமில்லை. ஐயா, இனி இந்த இரு குறிப்பிட்ட பகுதியினர் பற்றி திரு.ஜோஷியின் விமர்சனத்திற்கு எனது பொதுவான பதில் என்னவெனில், அவர் கூறியுள்ளது பற்றி சர்க்காருக்குத் தெரியும்; இதனால்தான், விதி 5ல் உபவிதி (C) ஐ சர்க்கார் உட்படுத்தியுள்ளது; இதன்படி இந்த மசோதாவின் விதிகளை எந்தத் தொழிலிலும் பணியாற்றும் மற்ற தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தும் அதிகாரத்தை சர்க்கார் தன்னிடம் வைத்துள்ளது. மசோதாவில் வரையறுக்கப்பட்ட தொழிலாளர் பிரிவினர்கள் இறுதியானது என்றோ மற்றவர்களைச் சேர்ப்பதற்கு சந்தர்ப்பம் எதுவும் இராதென்றோ சர்க்கார் கருதவில்லை.

     டாக்டர் பி.என்.பானர்ஜி: இது முடிவானதல்ல.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நீங்கள் குறிப்பிட்டது போல் இது முடிவானதல்ல; எனவே ஒரு நிலைமை எழுந்தால், இந்த மசோதாவின் விதிகள் மற்ற தொழில்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று சர்க்காருக்குத் தெளிவானால், அந்த விஷயத்தை சந்தேகமின்றி சர்க்கார் பரிசீலிக்கும்.

     அஸ்ஸாம் பிரச்சினையைப் பொறுத்தவரை, நான் குறிப்பிடுவது என்னவெனில், நான் கூறியபடி அபாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள இடங்கள் என்று கூறப்படும் இடங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு மட்டும் இந்த மசோதாவை எல்லைப்படுத்தியுள்ளோம். தற்சமயம் எங்களிடம் உள்ள தகவலின்படி, தேயிலைத் தோட்டங்கள் ஆபத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள மையங்கள் எனக் கூற முடியாது எனக் கருத தோன்றுகிறது. எந்த சமயத்திலும் தேயிலைத் தோட்டங்கள் ஆபத்திற்கு உட்படுத்தப்படும் அபாய மையங்களாக மாறினால் திரு.ஜோஷி இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளலாம் அல்லது சர்க்கார் தனது கவனத்திற்கு கொண்டுவந்து இந்த மசோதாவின் நலன்கள் அஸ்ஸாமிலுள்ள தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்துவதை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

     மாலுமிகள் சம்பந்தப்பட்டவரை, வர்த்தகத்துறை இந்த விஷயத்தை முன்கொண்டுவந்தது என்று நினைக்கிறேன்; ஒரு ஏற்பாடு ஏற்கெனவே அமுலில் இருக்கிறது என்று அறிகிறேன்; அதன்படி அதே அளவில் இல்லாவிடினும், எப்படியாயினும், நாம் கொண்டுள்ள திட்டத்திற்கு ஒத்ததான நிரந்தரக்குழு இதைப் பரிசீலித்து, ஏதாவது ஏற்பாடு – அது இந்த மசோதாவின் பிரதான அம்சங்களுக்கு முரணில்லாதிருந்தால் – செய்வது விரும்பத்தக்கது என்று எனது நண்பர் திரு.ஜோஷி கருதினால், நிரந்தரக் குழுவில் இந்த விஷயத்தை பரிசீலிப்பதற்கு எந்த ஆட்சேபனையையும் நிச்சயமாக எழுப்ப மாட்டேன்.

     மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.மில்லர் இந்த மசோதாவின் ஒன்று அல்லது இரண்டு பிரிவுகள் பற்றிக் குறிப்பிட்டார். முதலாவதாக உப-பிரிவு 5(3). இந்த உப பிரிவை எச்சரிக்கை உணர்வுடன் சர்க்கார் வேண்டுமென்றே அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறினார். ஏனெனில் பொருத்தமான நிலைமை எழலாம் என்றும் அப்பொழுது இந்த மசோதாவின் பிரிவுகள் விரிவுபடுத்தப்பட வேண்டி வரலாம் என்றும் சர்க்கார் நினைக்கிறது என்றார்.

     அவர் குறிப்பிட்ட மற்றபிரிவு, பிரிவு 10, உப பிரிவு (3). அவரது விமர்சனம் என்னவெனில், இந்தப்பிரிவின்படி, நிதியில் ஏதாவது மீதித் தொகை விடப்பட்டிருந்தால் அந்த அதிகப்படியான தொகை பொதுவருவாய் நிதிக்கு கொடுக்கப்படும் என்பது. இந்த விஷயத்தின் சூழ்நிலையில், இந்திய சர்க்காரின் கொள்ளையை நியாயப்படுத்த முடியாதது என திரு.மில்லர் ஏன் கூறுகிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். நான் ஏற்கெனவே குறிப்பிட்ட உண்மையை திரு.மில்லர் கவனத்தில் கொண்டால், அதாவது முதலாளிகளால் இந்த நிதிக்கு காப்பீட்டு தவணைகளாக கொடுக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி இருந்து வருகிறது என்பதாகும்; அப்படியாயின் இந்த மிச்சத் தொகையின் சட்டப்படியான உரிமையாளராக சர்க்கார் இருக்கவேண்டுமென்பது சரியானதே. இதற்குமேல் நான் கூற எதுவுமில்லை.

     திரு.ஈ.எல்.ஸி.குவில்ட் (பம்பாய்: ஐரோப்பியர்): மாண்புமிகு உறுப்பினரிடமிருந்து ஒரு கேள்வி நான் கேட்கலாமா? மில் தொழிலதிபர்கள் சங்கம் முன்முயற்சி எடுத்த திட்டம் என்று தமது துவக்க உரையில் அவர் கூறியது ஏன்?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அவர்கள் ஒரு யோசனையை முன்வைத்தனர்.

     திரு.ஈ.எல்.ஸி.குவில்ட்: காப்பீட்டுத் தொகை முழுவதுமாக கொடுக்கப்பட்டபின் மீதமுள்ள தொகை தொழில்துறை ஆய்வுக்காக பயன்படுத்தப்படவேண்டுமென்று ஒரு யோசனையையும் அவர்கள் முன்வைக்கவில்லையா? அப்படியாயின் மாண்புமிகு நண்பர் அந்த யோசனையைப் பரிசீலிப்பாரா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: எனக்கு ஞாபகமில்லை. ஆனால் இந்த விஷயத்தைக் கவனிக்கிறேன்.

     திரு.தலைவர் (சையது குலாம் பிக் நைராங்): தீர்மானம் வருமாறு:

“போர்க்காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பை முதலாளிகள் மீது சுமத்தவும் அதை ஈடுசெய்ய முதலாளிகளைக் காப்பீட்டிற்கு வகை செய்யவுமான மசோதா கீழ்கண்டவர்களைக் கொண்ட தெரிவுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது: சர் வித்தல் சந்திரவர்க்கர், திரு.என்.எம்.ஜோஷி, திரு.ஜம்னாதாஸ் மேத்தா, திரு.ஹூசேன்பாய், ஏ.லால்ஜி, கான்பகதூர் மியான் குலாம் கதிர் முகமது சபன், திரு.ஸி.ஸி.மில்லர், திரு.ஈ.ஐ.ஸி, குவில்ட், மௌலானா ஜாபர் அலிகான், திரு. யூசுப் அப்துலா ஹருன், ஹாஜி சௌதுரி முகமது இஸ்மாயில் ஹருன், திரு.எச்.ஏ.சத்தார் எச்.எஸ்ஸாக் சேட், திரு.அமேந்திரநாத் சட்டோபாத்யாயா, திரு.ஆர்.ஆர்.குப்தா, மற்றும் தீர்மானத்தை முன்மொழிபவர்; இந்த குழுக் கூட்டம் நடைபெற, அதில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக இருக்க வேண்டும்; இந்தக்குழு சிம்லாவில் கூடுவதற்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.”

     தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஜூலை 29, பக்கம் 176-77)

     ambedkar 248 மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்), ஐயா! பின்கண்டவாறு பிரேரேபிக்கிறேன்:

     “இந்திய கொதிகலங்கள் சட்டம், 1923ஐ மேலும் திருத்துவதற்கான மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.”

     இந்த மசோதா ஒரு எளிமையான நடவடிக்கை; வாத-பிரதிவாதத்திற்கு உட்படாத ஒன்று; எந்தக்கோட்பாட்டையும் உட்படுத்தாதது. இக்காரணங்களைக் கணக்கில்கொண்டு, இந்த மசோதாவின் விதிகளை விளக்குவதற்காக மிக விரிவாகப் பேச நான் விரும்பவில்லை. இந்தத் திருத்த மசோதாவை கொண்டுவர சர்க்காரைத் தூண்டிய சூழ்நிலைமைகளை இங்கு கூறினால் அதுவே போதுமானதாகும். சுருக்கமாக, சூழ்நிலைகள் இவைதான்:

     1942 பிப்ரவரி 23ம் தேதி பம்பாயிலுள்ள ஒரு மில்லின் கொதிகலத்தில் விபத்து நடைபெற்றது; மிக மோசமான உயிர் சேதத்தை அது விளைவித்தது. இந்த விபத்து நடந்தபோது, இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக பம்பாய் சர்க்காரால் ஒரு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வெடிப்புக்குக் காரணம் வெப்பம்-எரிபொருள் முதலியவற்றை மிச்சப்படுத்துவதற்கான ‘எகானாமைசர்’ என்று அழைக்கப்படும் இயந்திரபாகத்தில் ஏதோ கோளாறு இருந்தது என்று விசாரணையில் தெரியவந்தது. ‘ஊட்டுக் குழாய்கள்” என்று தொழில்நுட்பரீதியில் அழைக்கப்படும் குழாய்கள் நீண்டகாலமாகவே உள்ளுக்குள் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவை பலஹீனம் அடைந்திருந்தன. இந்த விசாரணையின் முடிவு சர்க்காருக்கு வியப்பூட்டுவதாக இருந்தது; ஏனெனில், 1923 ஆம் வருட இந்திய கொதிகலங்கள் சட்டம், கொதிகலங்களின் ஆய்வாளர் இந்த கொதிகலங்களை அவ்வப்போது பார்வையிட்டு, கொதிகலங்கள் சரியாக இயங்கும் நிலையில் உள்ளனவா என்று சோதித்துச் சான்றிதழ் வழங்க வேண்டுமெனக் கோருகிறது.

     சிக்கனப்படுத்தும் கருவியின் ஊட்டுக்குழாய்கள் வேலை செய்ய லாயக்கற்றவை ஆகிவிட்டதைத் தெரிந்தும் சான்றிதழை வழங்க கொதிகலங்கள் ஆய்வாளர் எவ்வாறு முடிவு செய்தார் என்ற கேள்வி எழுகிறது. ஒரு விஷயம் தெரியவந்தது. அதாவது இந்திய கொதிகலங்கள் சட்டத்தின் 28வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளைப் பொறுத்தவரை, கொதிகலத்தில் இணைக்கப்பட்டுள்ள ஊட்டுக்குழாய்களையோ அல்லது வேறு எந்த துணைக் கருவியையோ சோதித்துப் பார்ப்பது கொதிகலங்கள் ஆய்வாளரின் பணியல்ல; இதன் காரணமாகவே, வெடித்த கொதிகலத்தின் விஷயத்தில் ஊட்டுக்குழாய்கள் சோதனை செய்து பார்க்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்தக்குறையைப் போக்குவதற்குத்தான் இன்றைய திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

     இந்த மசோதா இரு திருத்தங்களைச் செய்கிறது. முதல் திருத்தம் பிரிவு இரண்டிற்கு சிசி என்ற ஒரு புதிய உட்பிரிவைக் கொண்டு வருகிறது; அது விளக்கம் அளிக்கும் உட்பிரிவு ‘ஊட்டுகுழாய்” என்ற புதிய பதத்தைச் சேர்த்து, ஊட்டுகுழாய் என்றால் என்ன என்பதை விவரிக்கிறது. இரண்டாவது, ‘நீராவி குழாய்” என்று அழைக்கப்படுவதன் பொருளை விரிவுப்படுத்துகிறது. இன்று நடப்பிலுள்ள சட்டத்தின்படி நீராவிக்குழாய் என்பது பிரதான குழாய் என்று மட்டுமே பொருள்படும்; திருத்தத்தின் கீழ், நீராவிக்குழாய், பிரதான குழாய் மட்டுமல்லாமல் ஊட்டுக்குழாயையும் உட்படுத்தும். இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதும், நீராவிக்குழாய்களை மட்டுமல்லாமல் ஊட்டுக்குழாய்களையும் சோதனை செய்து பார்ப்பது கொதிகல ஆய்வாளரின் கட்டாயக் கடமையாக்குவதற்கு பிரிவு 28ன் விதிமுறைகளைத் திருத்துவது சர்க்காருக்குச் சாத்தியமாகும். இதன் காரணமாகத்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ஐயா, இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று பிரேரேபிக்கிறேன்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் பிரேரேபிக்கப்படுகிறது.

     “இந்திய கொதிகலங்கள் சட்டம், 1923ஐ மேலும் திருத்துவதற்கான மசோதா பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.”

     திரு.ஸி.ஸி.மில்லர்: ஒரு சிறுவிஷயம் பற்றி மாண்புமிகு உறுப்பினரிடமிருந்து விளக்கம் பெற விரும்புகிறேன். சிக்கனப்படுத்தும் கருவி என்றழைக்கப்படும் ஊட்டுகுழாய் அமைப்பு பற்றியது நான் கோரும் விளக்கம்; ஊட்டுக்குழாய் கொதிகலத்தின் பிரதான பாகத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அது அத்தியவசியமான பாகமல்ல; ஊட்டுக்குழாய்களின் தொடர்பை துண்டிக்க முதலாளி ஒப்புக்கொண்டாலல்லாமல், ஊட்டுக்குழாயில் சில குறைபாடு இருந்தால், கொதிகலம் நல்ல நிலைமையில் இருப்பதாக சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு ஆய்வாளருக்குச் சட்டப்படி உரிமை கிடையாது என்று நான் எடுத்துக்கொள்கிறேன்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஒரு திட்டவட்டமான பதிலை அளிப்பது எனக்குச் சாத்தியமல்ல என்பதை எனது நண்பர் புரிந்துகொள்ள வேண்டும்; எனினும் இந்த ஊகத்தை அவர் எழுப்பியதே சரியே.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் என்னவெனில்

           ‘இந்தியக் கொதிகலங்களின் சட்டம், 1923ஐ மேலும் திருத்துவதற்கான மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.”

     தீர்மானம் ஏற்கப்பட்டது. உட்பிரிவுகள் 2ம் 3ம் மசோதாவில் சேர்க்கப்பட்டன. உட்பிரிவு 1 மசோதாவில் சேர்க்கப்பட்டது.

     தலைப்பும் பீடிகையும் மசோதாவில் சேர்க்கப்பட்டன.

      மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென நான் பிரேரேபிக்கிறேன்.

     திரு.தலைவர்: (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் வருமாறு:

     “மசோதா நிறைவேற்றப்படட்டும்”

     தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

      மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்:) ஐயா! மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி கூறியவற்றின் காரணமாக, அவர் எழுப்பிய விஷயங்கள் பற்றி சர்க்காரின் நிலையை நான் எடுத்துரைக்க வேண்டும் என்பது சரியானதே. ஒரு அர்த்தத்தில், திரு.ஜோஷியின் கூற்றுகள் பொருந்தாதவையாகத் தோன்றலாம். நாம் தேயிலைக் கட்டுப்பாடுச் சட்டம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். தொழிலாளர்களின் நிலைமைகளைப் பற்றி பரிசீலிக்கும் எந்த ஷரத்துகளும் இதில் இடம்பெற முடியாது என்பது தெளிவு. ஆனால், இதை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், வினியோகம் – தேவை பற்றிய சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுமென்று அரசு கோரப்படும்போது, தொழிலாளர் மீது அக்கறை கொண்டவர்கள் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று கேட்பது நியாயம் என்று ஒப்புக்கொண்டாக வேண்டும். இந்தக் கண்ணோட்டத்திலிருந்துதான். சர்க்கார் தரப்பிலிருந்து பதில் அவசியப்படுகிறது என்று கூறினேன்.

    ambedkar 184 ஐயா! திரு.ஜோஷி குறிப்பிட்ட முதல் விஷயம் என்னவெனில், தொழிலாளர்களுக்கான ராயல் கமிஷன் அறிக்கை கொடுத்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன என்றும், அந்தக் கமிஷனின் சிபாரிசுகளைப் பொறுத்தவரை இந்திய சர்க்கார் நடைமுறையில் எதுவும் செய்யவில்லை என்றும் கூறினார். இந்த விஷயம் பற்றி அலசி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ராயல் கமிஷன் செய்துள்ள சிபாரிசுகளைப் பரிசீலிக்க 12 ஆண்டுகள் என்பது எந்த சர்க்காருக்கும் ஒரு நீண்டகாலமே. ஆனால், நான் சுருக்கமாக குறிப்பிடப்போகும் விவரங்களிலிருந்து இந்திய சர்க்கார் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டை சுமத்த முடியாது என்பதை திரு.ஜோஷியும் இந்த அவையும் புரிந்துகொள்ள முடியும். தேயிலைத் தோட்டங்கள் சம்பந்தப்பட்ட வரை, தொழிலாளர்கள் சம்பந்தமாக ஐந்து சிபாரிசுகளை ராயல் கமிஷன் செய்தது. முதலாவது என்னவெனில். அஸ்ஸாம் தொழிலாளர் குடிபெயர்வு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது. இரண்டாவது சிபாரிசு அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய ஊதிய குழுமம் அமைக்கப்பட வேண்டும் என்பது. மூன்றாவது சிபாரிசு, குடிநீர், சுகாதாரம், சாக்கடை வசதி, வைத்திய வசதிகள், குடியிருப்பு ஆகியவை சம்பந்தமான விதிமுறைகளை வகுத்தளிக்கும் அதிகாரம் கொண்ட தொழிலாளர்கள் நலனுக்காக ஒரு சுகாதார அமைப்பு வசதியான வட்டாரங்களில் நியமிக்கப்பட வேண்டும் என்பது. நான்காவது சிபாரிசு, தொழிலாளர்களுக்கு காலம் தவறாமல் ஊதியம் கொடுப்பது, கொடுக்கப்பட்ட முன்பணத்தை பிடிப்பது ஆகியவைப் பற்றிய விதிமுறைகள் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வகுக்கப்பட வேண்டுமென்பது. கடைசி சிபாரிசு, பூங்காக்களில் பொதுமக்கள் சென்றுவர வழி செய்யும் விதிமுறைகள் ஆக்கப்பட வேண்டுமென்பது.

     சிபாரிசுகள் செய்யப்பட்டதும் நோக்கத்தை வீணாக்காமல் அவற்றை செயல்படுத்த வேண்டிய சரியான அதிகாரிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்திய சர்க்கார் பரிசீலித்தது; குடிபெயர்வு சட்டத்தை ரத்து செய்துவிட்டு பதிலாக வேறு ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்ற முதலாவது சிபாரிசை தவிர மற்றவை சட்டரீதியாக அடிப்படையில் ஸ்தலமட்டத்தில் கவனிக்கப்பட வேண்டியவை என்ற முடிவுக்கு வந்தது. இந்தச் சிபாரிசுகளை பொறுத்தவரை பொறுப்பை பிரித்துக் கொடுக்கும் விஷயத்தில் இந்திய சர்க்கார் மேற்கொண்ட கண்ணோட்டம் சரியானதல்ல என்று யாரும் கருத முடியும் என்று இந்திய தொழிலாளர் சம்பந்தமாக ராயல் கமிஷன் சிபாரிசுகள் பற்றி நான் நினைக்கவில்லை. இந்திய சர்க்கார் எடுத்த இந்த முடிவிற்கு ஏற்ப, இந்த மற்ற சிபாரிசுகளை பரிசீலித்து ஆவன செய்ய ஸ்தல சர்க்கார், அஸ்ஸாம் சர்க்காருக்கு உடனே அனுப்பியது; தொழிலாளர்கள் பற்றி ராயல் கமிஷன் செய்த முதல் சிபாரிசின்படி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் சட்டங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஐயா, துரதிருஷ்டவசமாக, அஸ்ஸாம் ஸ்தல சர்க்கார் இந்த விஷயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கான காரணங்கள் எனக்குத் தெரியாது. இந்தச் சிபாரிசுகள் செய்யப்பட்ட தேதியிலிருந்து இந்த அவையில் திரு.ஜோஷி இருந்திருக்கிறார் என்றாலும், இந்த விஷயத்தை அவர் எடுத்ததாகவோ, எடுத்துக்கொண்டதாகவோ எனக்குத் தோன்றவில்லை. ஐயா. இந்த விஷயத்தில் இந்திய சர்க்கார் செயல்பட்டது என்று நான் கூறிக்கொள்ள முடியும். தேயிலைக் கட்டுப்பாடு சட்டம் நீட்டிக்கப்படுவதற்காக 1938ல் சட்டமன்றத்திற்கு வந்தபோது இந்திய சர்க்கார் முன்முயற்சி எடுத்து தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை நிலைமைகள் பற்றி ஆய்வுசெய்ய அணுகியது. தொழிலாளர் இலாகா பிரதிநிதிகளுக்கும் தோட்ட முதலாளிகளின் பிரதிநிதிகளுக்குமிடையே ஒரு மாநாடு கூட நடைபெற்றது என்பதை மதிப்பிற்குரிய என் நண்பர்கள் திரு.கிரிப்பித்தும் சர்.பிரடெரிக் ஜேம்ஸூம் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும்.

     மௌலானா ஜாபர் அலிகான்: இந்த விஷயத்தில் ஆவன செய்யாததற்காக அஸ்ஸாம் சர்க்கார் மீது ஏன் இந்திய சர்க்கார் நடவடிக்கை எடுக்கவில்லை?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அந்த சமயத்தில் இந்த இலாகாவிற்கு பொறுப்பாக இருந்த உறுப்பினர் இந்த கேள்விக்கு நல்ல பதிலளித்திருக்க முடியும். நான் நேற்றுத்தான் வந்தேன்; அதனால் எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது. இந்தச் சிபாரிசுகள் என்னவாயின, விசாரிப்பதற்கான நேரம் வரவில்லையா என்று நான் கூறத் தயாராக இல்லை. ஐயா! இந்த விஷயங்கள் பற்றி முடிவு செய்ய நேரம் அநேகமாக வந்தபோது, புதிய அஸ்ஸாம் சர்க்கார், அப்பொழுது அது காங்கிரஸ் சர்க்கார், இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வது என்று முடிவுசெய்தது; ஒரு தீர்மானத்தின்மூலம் 1939 மே 23ம் தேதி ஒரு குழுவை நியமித்தது. தாங்கள் முதலில் அனுப்பிய ஆணையின் நிபந்தனைகளின்படி இவற்றை கவனித்துக் கொள்ளும், அதிகாரத்தை ஸ்தல சர்க்காருக்கு வழங்கியுள்ளதால் அஸ்ஸாம் சர்க்கார் எடுத்த இந்த நடவடிக்கையின் விளைவாக, களத்திலிருந்து இந்திய சர்க்கார் பின்வாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி இந்த விஷயம் பற்றிக் குறிப்பிட்டதால், சரியான காரணம் என்ன என்று கூற நான் தயாரில்லை; ஆனால், அந்தக்குழு உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது; அது அநேகமாக ஒரு மோதலாக வளர்ந்தது; இதன் விளைவு குழுவின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இறுதியில் அஸ்ஸாம் சர்க்கார் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் நடந்தது என்ன என்பது குறித்தும், ஏன் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டது என்பது பற்றியும் ஒரு அறிவிப்பை வெளியிட்டதுதான். இது நடந்தது ஜூலை கடைசியில். சில மாதங்கள் கழித்து யுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் யாரும், ஸ்தல சர்க்காரோ மத்திய சர்க்காரோ எந்தவித விசாரணையும் ஆரம்பித்திருப்பது சாத்தியமில்லை. தன் பக்கத்தில் எந்தவித செயலாற்றாமைக்கும் இந்திய சர்க்காரை உண்மையில் பொறுப்பாக்க முடியாது என்பதை இந்த சூழ்நிலைகள் திரு.ஜோஷியை முற்றிலுமாக நம்ப வைத்திருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

     பிரதான கேள்வியைப் பொறுத்தவரை அதாவது தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை சர்க்கார் உணர்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சினை தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்று சர்க்கார் கருதுகிறது எனக் கூறுவதன் மூலம் ஆரம்பிக்கிறேன். தோட்டத் தொழிலாளர் பணி நிலைமைகள் பற்றி நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. தினசரி தாள்களில் பல்வேறு புள்ளி விவரங்களை நாம் பார்க்கிறோம். சிலோனில் இப்போது சம்பளங்கள் பற்றிய புள்ளி விவரங்கள், அஸ்ஸாம் தேயிலைத் தோட்டங்களில் சம்பளங்கள் சம்பந்தமான புள்ளி விவரங்கள் ஆகிய இந்த புள்ளி விவரங்கள் எவற்றுக்கும் சர்க்காரின் இணக்கத்தைத் தெரிவிக்க நான் தயாராக இல்லை. நம்மிடம் திட்டவட்டமான விவரங்கள் இல்லை. இந்த விஷயத்தில் இதுவரை எத்தகைய ஆய்வும் செய்யப்படவில்லை. ஒரு விஷயத்தை நான் கூறமுடியும்; தேயிலைத் தோட்டங்களின் நிலைமைகள் முறைப்படுத்தப்படாதவை; அவை இடத்திற்கு இடம் பெருமளவு மாறுபாடுடையவை. பொதுப்படையான, ஒன்றுபட்ட வேலைநிலைமைகள் இல்லை. இந்த நிலைமையைத்தான் சகித்துக் கொள்ள முடியும் என்று இந்திய சர்க்கார் கருதவில்லை. பாரபட்சமற்ற விசாரணை மூலம் கிடைக்கக்கூடிய போதுமான விவரங்கள் நம்முன் கொண்டு வரப்பட்டாலொழிய எந்த சட்டத்தையும் இயற்ற நம்மால் முடியாது என்பதும் தெள்ளத் தெளிவு. எந்த முயற்சியையும் தடைசெய்ய இந்திய சர்க்கார் கூறும் சால்ஜாப்பு அல்ல இது. தொழிலாளர்கள் கூறிய ராயல் கமிஷன் விதித்த நிபந்தனைகளில் இதுஒன்று என மதிப்பிற்குரிய நண்பர் திரு.ஜோஷியே ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். பல்வேறு பரிந்துரைகளை முன் வைக்கும்போது ராயல் கமிஷன் ஒரு ஷரத்தை சேர்த்திருந்தது; அதாவது, இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு முன்பு, தோட்டங்களில் நிலவும் நிலைமைகள் பற்றி திட்டவட்டமான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அது கூறிற்று. ஐயா, இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி இந்திய சர்க்கருக்கு எந்த சந்தேகமும் இல்லை. சர்க்கார் சார்பில் பேசும்போது, தேயிலைத் தோட்டங்களில் சரியான நல்வாழ்வு விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சர்க்கார் கருதுகிறது என்று கூற நான் தயாராக இருக்கிறேன். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. மதிப்பிற்குரிய எனது நண்பர் திரு.ஜோஷி கூறியதை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன். சிலோனில் நியாயமான சம்பள விகிதங்களைப் புகுத்துவது அவற்றை இந்தியாவில் தொழிலாளர்களின் நேர்மையான சம்பள விகிதங்களை அமுலுக்கு கொண்டு வராததற்கு நிபந்தனையாகவோ அல்லது முன்மாதிரியாகவோ இந்திய சர்க்கார் கருத முடியாது. எங்கெல்லாம் தொழிலாளர் மீது கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் தொழிலாளர்களுக்கு நியாயமான வேலை நிலைமைகள் அளிக்கப்படுவதற்கு பல்வேறு அவசரச் சட்டங்கள் மூலம் இந்திய சர்க்கார் வகை செய்துள்ளது. இந்த விஷயங்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் விஷயத்திலும் நிச்சயம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய சர்க்கார் கருதுகிறது. சென்ற காலத்தில் தேயிலைத் தோட்டங்களின் நிலைமை எவ்வாறு இருந்திருந்தாலும், அங்குள்ள இன்றைய நிலைமையில், ஒரு குழுமம் அவற்றின்மீது சுமத்தும் சம்பள விகிதங்களின் சுமையை அவை தாங்கிக் கொள்ள முடியும் என்பதையும் மறுக்க முடியாது.

     எனவே, இப்பொழுது எழும் ஒரே பிரச்சனை இதுதான்: இன்றைய நிலைமையில் ஒரு விசாரணையை நாம் நடத்த முடியுமா? இரண்டு பிரச்சினைகள் மீது அதாவது நியாயமான நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் எனது நண்பர் திரு.ஜோஷிக்கும் இந்திய சர்க்காரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எனக்குமிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை. தேயிலைத் தோட்டங்களில் ஒருபெரும்பகுதி இந்தியாவின் மேற்கத்திய எல்லையில், அஸ்ஸாமிலும் வங்காளத்திலும் உள்ளது என்பதை எனது நண்பர் திரு.ஜோஷியும் பிற உறுப்பினர்களும் நன்கு அறிவர். இந்த பிரதேசங்கள் எதிரியின் தாக்குதலுக்கு உட்படக்கூடியவை என்பதும் தெள்ளத் தெளிவானதே. அங்கு எந்த விசாரணையையும் துவக்கினால், அது அமைதிக்குலைவு நிலையை ஏற்படுத்தலாம். எனவே, மீதமுள்ள ஒரேகேள்வி, தென் இந்தியாவில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இந்த விசாரணையை நாம் ஆரம்பிக்கலாமா என்பதே. வடக்கு, தெற்கு இந்தியாவில் தேயிலைத் தோட்டங்கள் எவ்வாறு பிரிந்து கிடக்கின்றன என்பதை அவைக்கு கூற நான் விரும்புகிறேன். என்னிடம் உள்ள புள்ளி விவரங்கள் 1941ம் ஆண்டுக்கானவை. அவற்றின்படி பரப்பளவு வட இந்தியாவில் 607,000 ஏக்கர்; தென்னிந்தியாவில் 163,132 ஏக்கர்; தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, வட இந்தியாவில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 773,969; தென்னிந்தியாவில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர் எண்ணிக்கை 144,385 மட்டுமே.

     சர் எப்.இ.ஜேம்ஸ்: (சென்னை, ஐரோப்பியர்): இது தேயிலையை மட்டும் குறிக்கிறது, இல்லையா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆம். நாம் தேயிலையை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். நான் அளித்த இந்த புள்ளி விவரங்களிலிருந்து, தென்னிந்தியாவில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் அளவு வட இந்தியாவின் தேயிலைத் தோட்டங்களின் அளவில் ஒரு சிறுபாகமே என்பது தெளிவு.

     மௌலானா ஜாபர் அலிகான்: அஸ்ஸாமில் தேயிலை பயிரிடப்படும் பரப்பளவு எவ்வளவு?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் வடக்கு, தெற்கு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். அஸ்ஸாமை தனியாக எடுத்துக்கொள்ளவில்லை. வட இந்தியாவில் உட்படுத்தப்பட்டுள்ளது அஸ்ஸாம். தென்னிந்தியாவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாடு முழுவதிலுமுள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளரின் மொத்த எண்ணிக்கையில் ஒரு மிகச் சிறிய பாகமே என்பது புள்ளி விவரங்களிலிருந்து தெளிவு. இத்தகைய அரைகுறையான, குறுகிய தன்மை கொண்ட விசாரணையை மேற்கொள்வதால், நாட்டுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ எந்தவிதமான பலனும் விளையும் என்று இந்திய சர்க்காருக்குத் தோன்றவில்லை யுத்தம் ஏற்படுத்தியுள்ள நிலைமையில் மொத்தத் தேயிலைத் தோட்ட அளவில் மிகக்குறைவாக உள்ள பரப்பில் ஒரு விசாரணையைத் துவக்குவது சாத்தியமல்ல.

     திரு.தலைவர்: (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): இந்தத் தீர்மானத்தைப் பொறுத்தவரை தொழிலாளர் பிரச்சினை அதில் தற்செயலாக எழுந்ததுதான் என்பதை உணரும்படி மாண்புமிகு உறுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இதற்குமேல் சொல்வதற்கு எனக்கு வேறு எதுவுமில்லை.

     டாக்டர் சர்.ஜியா வுத்தீன் அகமது: தேயிலையை உற்பத்தி செய்யாது இருக்க தேயிலைத் தோட்ட முதலாளிகளுக்கு கணசமான தொகை அளிக்கப்பட்டதா? இதனால் நுகர்வோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா?

     மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: வாணிகத்துறைச் செயலாளர் பதிலளிக்க வேண்டிய விஷயம் இது.

     மதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள்: இப்போது தீர்மானம் முன்வைக்கப்படலாம்.

     திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): தீர்மானம் இதுதான்: ‘தீர்மானம் இப்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது”

     தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It