அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
1800 களில் ஒரு வதந்தி உலவியது. மடகாஸ்கர் காடுகளில் சுற்றித்திரிந்த கார்ல் லிச்சி என்ற ஜெர்மானியர் ஒரு பெண்ணை மரம் விழுங்கியதைப் பார்த்ததாக கட்டுரை வெளியிட்டார்.
1950 களில் வெளியான கட்டுரையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கார்ல் லிச்சி என்கிற பெயரில் யாரும் மடகாஸ்கர் காடுகளை ஆராயவில்லை என்பதுதான் அந்த கட்டுரையின் உள்ளடக்கம்.
மனிதர்களைச் சாப்பிடும் மரம் இல்லாமல் போனாலும், சிறிய பூச்சிகளை விழுங்கும் பூக்களைக்கொண்ட பிட்சர் தாவரம் இருப்பது அந்தக்கட்டுரையில் உறுதி செய்யப்பட்டது. பிட்சர் தாவரங்கள் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.
பிட்சர் தாவரத்தின் பூக்கள் ஒரு பெரிய ஜாடியின் வடிவத்தில் இருக்கும். இலைகளின் உதவியால் சுரக்கும் வாசனையான படலம் பூக்களின் உட்புறத்தில் படிந்து கொள்கிறது. வேர்களால் உறிஞ்சப்படும் நீரில் இந்த வாசனையுள்ள படலம் கரைந்து பூவின் அடியில் தங்கி விடுகிறது. சிறு பிராணிகள் வாசனையால் கவரப்பட்டு நீரைக் குடிப்பதற்காக ஜாடிவடிவப் பூவிற்குள் செல்லும்போது பூ மூடிக் கொள்கிறது. பிராணிகளின் உடல் சிதைக்கப்பட்டு பிட்சர் தாவரத்தால் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- அ.வி.அஜிதா பாரதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலக தட்பவெப்ப நிலைகளில் மனிதன் அசைக்க முடியாத தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துகிறான் என்பது வெப்பநிலை ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தற்போது அதிகரித்துக் கொண்டுள்ள வெப்பநிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ மனிதனும் மனிதச் செயல்களும் காரணமாகிவிட்டன என்பதே உறுதியான உண்மை.
இத்தட்பவெப்பநிலை மாற்றங்களினால் பலவகை விலங்குகளும் செடிகளும் மறைந்து கொண்டு வருகின்றன. புவிவெப்பமடைதலே இம்மாற்றங்களுக்கு ஆணிவேராகக் கருதப்படுகின்றது. உலக தட்பவெப்ப மாற்றங்களுக்கு காரணம் பசுங்கூட (Green House) விளைவேயாகும். பசுங்ககூட விளைவு என்பது இயற்கையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு. இவ்விளைவினால் பூமியிலிருந்து பிரதிபலிக்கும் புற ஊதாக் கதிர்களும் அகச் சிவப்புக் கதிர்களும் வளி மண்டலத்தில் உள்ள பசுங்கூட வாயுக்களால் விழுங்கப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பவும் அனுப்பப்படுகின்றன. இதன் காரணமாக பூமி அதிக வெப்பமடைகிறது.
முன்பிருந்த தொழிற்சாலை கழிவுநீர்களில் இருந்து தற்கால தொழிற்சாலை கழிவுகளின் தன்மைகள் வேறாக மாறியுள்ளன. இதனால் ஒட்டுமொத்த ஹாலோ கார்பன் என்பவற்றின் அளவு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக புவி வெப்பமடைதல் ஒரு சதுர மீட்டருக்கு 2.450 சென்டிகிரேடு வெப்பம் என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. கரியமிலவாயு, மீத்தேன், குளோரா புளோரோ கார்பன், ப்ரியான், ஹாலஜன்ஸ், ஏரோசால் பிரப்பலெட்ஸ் போன்று பலவகையான குளிர் சாதனப் பெட்டிகளிலிருந்து வெளிவருகின்ற வாயுக்களே இந்த பசுங்கூட விளைவுக்கு காரணமாகின்றன. அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி புவி 2.50 பாரன் ஹீட் வரை வெப்பமாகிக் கொண்டேயுள்ளது.
இது தொடர்ந்தால் இன்னும் நூறு ஆண்டுகளில்:
கடல் வெப்பமடைந்து கடல் நீர்மட்டம் உயரும்;
பனிமலைகள் உருகி மேலும் கடல் மட்டம் உயரும். இதனால் 21 ஆம் நூற்றாண்டிற்குள் கடல் மட்டம் 9 செ.மீ.இலிருந்து 88 சென்டி மீட்டருக்கு உயரும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
பருவகாலங்கள் மாறலாம்
வெப்பம் அதிகரிப்பதால் நீராவி அதிகரித்து மழை அதிகரிக்கலாம். இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வரலாம்.
இயற்கை சீற்றங்கள் புயல், சூறாவளி ஆகியன பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கலாம். அண்மையில் 2004 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 562 முறை சூறாவளி வந்ததாக சான்றுகள் பல உள்ளன.
உலகின் பல இடங்கள் பாலைவனங்களாய் மாறலாம்.
பல்வேறு வகையான செடிகொடிகள் மற்றும் விலங்கினங்கள் கூட அழிந்து விடலாம்.
பருவகால மாற்றத்தினால் விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.
மலேரியா, டெங்குகாய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் போன்ற வெப்ப மண்டல நோய்கள் குளிர்பிரதேசங்களுக்கும், காலரா, வயிற்றுப் போக்கு போன்ற தண்ணீரால் வரும் நோய்கள் வெப்ப மண்டலங்களுக்கும் இடம் மாறும்.
கடல் மட்டம் உயர்வதால் நிலப்பரப்பு குறைந்து மக்கள் நெருக்கம் அதிகரிக்கும்.
பல வகையான காடுகள் குறிப்பாக அலையாத்திக் காடுகள் அழியக்கூடும்.
இவை, உயிரிகளிடத்தே ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மனித இனம் எதிர்பாராத ஒன்றாய் இருக்கும் என்பதில் துளிகூட அய்யமில்லை. 1970களில் அமெரிக்கா மட்டுமே சுமார் 2,00,000 டன்னுக்கும் மேல் ஹாலோ கார்பன்களை வெளியேற்றியது. இதனை எதிர்த்து அய்க்கிய நாடுகள் அவை பல்வேறு ஒப்பந்தங்களைக் கொண்டு வந்தது.
நார்வே, ஸ்வீடன், கனடா போன்ற நாடுகளாலும் ஹாலோ கார்பன் வெளியேற்றம் தடை செய்யப்பட்டது. மேலும் நச்சுப் பொருள்களின் தடை ஆணையின் படி இவற்றின் உற்பத்தியும் பயன்பாடும் தடை செய்யப்பட்டன. அமெரிக்க வானியல் ஆராய்ச்சி மய்யமான ‘நாசா' 13.7.2004 அன்று பூமி வெப்பமடைதல் பற்றி ஆய்வு செய்ய செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியது.
அமெரிக்காவில் மட்டும் இருந்து 25 சதவிகிதம் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) வெளியேறுவதால் அமெரிக்க அதிபர் புஷ், தம் நாட்டு மக்கள் இதன் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தாம் இது குறித்து தீவிர முடிவுகள் மேற்கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார். இது போன்ற முடிவுகள் பிரிட்டனின் முதல் அமைச்சரான டோனி ப்ளேராலும் மேற்கொள்ளப்பட்டன.
‘நாசா'வின் கருத்துப்படி பனிப்பிரதேசங்களில், பனிமலைகளும், பனிப்பாறைகளும் பத்தாண்டுகளுக்கு 9 சதவிகிதம் எனும் அடிப்படையில் உருகி வருகின்றன. இதனால் 40 சதவிகித பனிப்பாறைகள் குறைந்துள்ளன. மேலும் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்ட கரியமிலவாயுவில் 50% கடல் நீரில் கரைந்து, கடல் நீரின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் பவழப் பாறைகள் பெருமளவில் குறைந்தபடி உள்ளன. பல கடல் உயிரிகளும் அழிந்த வண்ணம் உள்ளன.
இத்தகைய மாற்றங்களையும், பேரழிவுகளையும் கண்டு நாம் அஞ்சினால், நமது இனம் மண்ணில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தால் நடைமுறையில் நாம் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாக வேண்டும். புவி வெப்பமடைதலை முழுவதுமாய் குறைக்க முடியாவிட்டாலும் நம்மால் இயன்றவரை அதன் வேகத்தையும் அளவையுமாவது கட்டுப்படுத்தலாம் அல்லவா? அதற்கு தனி மனிதர்களின் தனிப்பட்ட பல்வேறு பயன்பாடுகளை தவிர்த்தல் வேண்டும்.
அவசர அவசிய தேவைகளுக்கே தனியார் வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். பிற நேரங்களில் பொது போக்குவரத்து வாகனங்களை நாடுவது அதிக அளவில் வெளியேறும் CO2, N2O ஆகியவற்றை குறைக்க வழி வகை செய்கிறது.
எரிவாயுவிற்கும் மின்சாரத்திற்கும் பதிலாக சூரியனில் இருந்து கிடைக்கும் சூரியச் சக்தி, காற்றுசக்தி, நீர் சக்தி போன்று பலவற்றை நாம் பயன்படுத்தலாம். மேலும் கிராமப்புறங்களில் மிகுதியாகக் கிடைக்கும் சாண எரிவாயு மற்றும் அழுகிய பொருள்களிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை நாம் பயன்படுத்தலாம்.
பசுங்கூட விளைவினை ஏற்படுத்தக்கூடிய வாயுக்களை வெளியேற்றும் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிர்த்தல் அல்லது குறைத்தல் வேண்டும்.
இவை பற்றிய விழிப்புணர்வினை உலகின் பட்டி தொட்டிகளுக்கும் சென்றடைய நாம் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் தீவிரவாதத்தைவிட அதிதீவிரமான பிரச்சினை புவி வெப்பமடைதல் ஆகும். இவற்றை எல்லோரும் உணரும் வகையில் செய்து பூமியில் ஏற்படும் மாற்றங்களை குறைக்க வழி வகுப்போம். இயற்கை அன்னையை காப்பாற்றுவோம்.
(கட்டுரையாளர், விழுப்புரம் இ.எஸ். மெட்ரிகுலேசன் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கிறார்.)
(நன்றி : தலித் முரசு மே 2008)
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
டிலாவேர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள அண்மைக்கால ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான உண்மை வெளியாகி உள்ளது. தாவரங்களின் இலைகள் நோய்க்கிருமிகளால் தாக்கப்படும்போது, வேர்ப்பாகத்திற்கு உதவிகோரி ஓர் அவசர செய்தி போகிறதாம். இந்த செய்தியை வேர்கள் ஏற்றுக்கொண்டு மெலிக் என்னும் அமிலத்தை சுரக்கின்றனவாம். வேரிலிருக்கும் நன்மை செய்யக்கூடிய ஒரு பாக்டீரியா இந்த அமிலம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மேல்நோக்கி அனுப்பப்படுகிறதாம்.
தாவரங்கள் "குந்தித்தின்பவை" என்னும் கருத்து இதன்மூலம் தகர்க்கப்பட்டிருக்கிறது. மனிதர்களையும் விலங்குகளையும் போல தாவரங்களிலும் தூண்டல் துலங்கல் வினைகள் காணப்படுகின்றன என்பதையும் நாம் நினைப்பதை விட தாவரங்களுக்கு அதிகமான புத்திசாலித்தனம் இருக்கிறது என்பதையும் இந்த ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
தாவரங்களின் வேர்கள் மண்ணிற்குள் புதையுண்டு இருப்பதால் அவைகளுக்கு நகரமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இருந்த இடத்தில் இருந்துகொண்டே தாவரங்கள் புற உலகிலிருந்து உதவியைக் கேட்டுப்பெறுவது இயற்கையின் விநோதமில்லையா?
Arabidopsis thaliana என்ற தாவரத்தின் இலைகளை Pseudomonas syringae என்னும் நோய்க்கிருமியால் தாக்கச் செய்தனர். கொஞ்ச நாட்களில் நோயின் தாக்கத்தால் இலைகள் மஞ்சளாகிப் போயின. நோயின் அறிகுறிகளும் தாவரத்தில் தெரிய ஆரம்பித்தன. ஆனால் Bacillus subtilis என்னும் நன்மை செய்யும் நுண்ணியிரியை வேர்ப்பகுதியில் செலுத்தப்பட்ட தாவரங்கள் மட்டும் நோய்க்குறிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்ததை காண முடிந்தது. இது எப்படி?
Bacillus subtilis என்னும் நுண்ணியிரியை நம்முடைய விவசாயிகள் இப்போதும் தாவரங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க பயன்படுத்துகிறார்கள். தாவரங்களின் வேர்களைச் சுற்றிலும் ஒரு படலமாக இந்த நுண்ணியிரி படர்ந்துகொள்கிறது. தாவரங்களின் இலைகள் அவசர உதவி கோரத் தொடங்கியதும் வேர்கள் மெலிக் என்னும் கரிம அமிலத்தை சுரக்கின்றன.
மெலிக் அமிலம் Bacillus subtilis நுண்ணியிரியை இலையை நோக்கி ஒருதிசையாக ஈர்ப்பதை ஒரு நவீன தொழில் நுட்பம் மூலமாக விஞ்ஞானிகள் நிரூபித்தனர். LSM 510 DUO என்னும் லேசர் சாதனம் இதற்காக பயன்படுத்தப்பட்டது. டிலாவேர் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்த சாதனம் பல மில்லியன் டாலர்கள் மதிப்பு வாய்ந்தது.
ஒரு தாவரத்தின் ஏறத்தாழ பாதிப்பகுதி மண்ணுக்குள் புதையுண்டு இருப்பதால் வேரினுள் ஏற்படும் மாற்றங்களை படமெடுப்பது ஒரு மிகப்பெரிய சவால் ஆகும். ஆனால் டிலாவேர் பல்கலைக்கழகம் இதற்கான வசதிகளைப் பெற்றிருக்கிறது. ஒளி ஊடுருவும் அறைகளில், ஒளியியல் கருவிகளை இதற்காக இந்த பல்கலைக்கழகத்தில் பயன்படுத்துகிறார்கள்.
தாவரங்கள் உதவி கோரி எழுப்பும் எச்சரிக்கைகளை அறியவும், தாவர நுண்ணியிரிகளின் உதவியால் எவ்வாறு தாவரங்கள் நோய்களை எதிர்கொள்கின்றன என்பதையும் இந்த ஆய்வுகள் நமக்கு வெளிச்சமாக்குகின்றன.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
'மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அணுகுண்டுகளைப் போன்றவை, தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும். நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்துவிடும்' என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை மறைக்கும் வகையில் களப் பரிசோதனை விவரங்களை வெளியிட அரசு நிறுவனம் மறுத்துள்ளது. 'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்வது போல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்களை வெளியிட மறுப்பது அவற்றின் நம்பகத்தன்மையை பெருமளவு கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
பசுமைஅமைதி (கிரீன்பீஸ்) அமைப்பைச் சேர்ந்த திவ்யா ரகுநந்தன், நாட்டில் நடைபெறும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தொடர்பான களப் பரிசோதனை விவரங்களை வெளியிட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்திருந்தார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரிதொழில்நுட்ப பிரிவுக்கு இந்த மனு அனுப்பப்பட்டிருந்தது. இந்தியாவில் கத்தரிக்காய், கடுகு, நெல் உள்ளிட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு களப் பரிசாதனைகள் நடத்தப்பட்டுள்ளன. களப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட இடங்கள், அந்தப் பயிர்களில் உள்ள நச்சுத்தன்மை, ஒவ்வாமைத்தன்மை அளவீடு தொடர்பான பரிசோதனைகள் மற்றும் மரபணு மாற்றங்கள் மறுஆய்வுக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி குறிப்பு போன்றவற்றை அளிக்குமாறு திவ்யா கோரியிருந்தார்.
இந்த கோரிக்கைக்கு எதிராக, மகாராஷ்டிரா கலப்பின விதை கழக நிறுவனம், மத்திய தகவல் கமிஷனுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் 2007 டிசம்பரில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீதிமன்றம் வர்த்தக நலனுக்கே முக்கியத்துவம் தந்து வருகிறது. வர்த்தக நலன்கள்-பொது சுகாதாரம் ஆகிய இரண்டுக்கும் இடையில், எல்லா நேரமும் வர்த்தக நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
வர்த்தக நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படைத் தகவல்கள் மறைக்கப்படும் ஆபத்து அதிகரித்து இருக்கிறது. மருந்து உற்பத்தி தொழிலில் இதுதான் பெருமளவு நடந்து வருகிறது. வர்த்தக நலன் பாதிக்கப்பட்டுவிடும் என்ற போர்வையில் களப் பரிசோதனை முடிவுகளை மருந்து நிறுவனங்கள் மறைக்கின்றன. ஆனால் பொது சுகாதாரமே முக்கியம் என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உண்மைத் தகவல்களை வெளியிட வலியுறுத்த வேண்டும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
இந்த பரிசோதனை முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எந்த வகையில் எதிர்வினை ஆற்றுகின்றன என்பதையும், மருந்துகள் எந்த வகை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று தெரிந்து கொள்வதும் பொது சுகாதாரத்துக்கு மிக முக்கியம். மனிதர்களிடம் அவை எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிய, களப் பரிசோதனை விவரங்கள் முக்கிய ஆதாரம். ஆனால் இந்த விவரங்கள் வசதியாக மறைக்கப்படுகின்றன. மறைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அந்நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. நிறுவனத்தின் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள 'டிரிப்ஸ்' எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தின் 'வர்த்தக அறிவுசார் சொத்து உரிமை ஒப்பந்தத்தை' மீறி தகவல்களை வெளியிட முடியாது என்று மாஹிகோ நிறுவனம் கூறியுள்ளது.
''இந்தத் தகவல்களுக்கு ஏற்கெனவே காப்புரிமை பெறப்பட்டு விட்டதால், அவை வெளியிடப்படுவது வர்த்தக நலன்களை பாதிக்கும் என்று கூறுவது அப்பட்டமான பொய்'' என்கிறார் கிரீன்பீஸ் அமைப்பின் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன். உணவு பாதுகாப்பு தகவல்களை வெளியிட வேண்டும் என்றுதான் திவ்யாவின் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது எந்த வகையிலும் வர்த்தக நலன்களை பாதிக்காது. பொது நலன் அடிப்படையில் மேற்கண்டது போன்ற தகவல்களை வெளியிடலாம் என்று தகவல் உரிமைச் சட்டம், டிரிப்ஸ் ஆகிய இரண்டின் கீழும் வழிவகை உண்டு. பொது சுகாதாரத்தை பாதிக்கக் கூடிய அனைத்தையும் பொது ஆய்வுக்கு உட்படுத்துவதே சரி என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதற்கு எடுத்துக்கட்டாக அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தை அவர்கள் கூறுகிறார்கள்.
மனஅழுத்த பிரச்சினைக்கு அமெரிக்காவில் கொடுக்கப்படும் போர்சாக் என்ற மருந்து தொடர்பான களப் பரிசோதனை விவரங்கள், அது அளிக்கும் பலனை வெட்டவெளிச்சமாக்கியது. அதன் பிறகுதான் அரசு விதிமுறைகளில் உள்ள ஓட்டைகள் தெரிய வந்தன. போர்சாக் மருந்துக்கு நடத்தப்பட்ட களப் பரிசோதனை விவரங்களை ஆராய்ந்தபோது, அந்த மருந்து நோயாளிகளுக்கு போதுமான அளவு பலனை அளிப்பதில்லை என்று தெரியவந்தது.
இதேபோல ஜெர்மனியில் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் தொடர்பான களப் பரிசோதனை விவரங்களை வியாபார ரகசியம் என்று மான்சான்டோ நிறுவனம் மறைத்தது. அந்தத் தகவல்களை கிரீன்பீஸ் கோரிக்கை விடுத்து பெற்றது. பரிசோதனை விவரங்களின் அடிப்படையில், மக்காச்சோளத்தை சாப்பிட்ட எலிகளின் கல்லீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் என்பது தெரிய வந்தது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள், எதிர்விளைவுகள் பற்றி பதில் சொல்ல கடமைப்பட்டுள்ள மத்திய அரசு அதைப் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. பொதுமக்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச தகவல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் அங்கீகாரக் குழுவின் இணையதளத்தில் உள்ள சொற்ப தகவல்கள் மட்டுமே.
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இந்தியாவில் ஏற்கெனவே ரகசியமாக அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன. அதைச் செய்தது மான்சான்டோ நிறுவனம். சாதாரண விதைகளுடன், மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை மறைமுகமாக கலந்து கொடுத்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மாஹிகோ நிறுவனம் சர்ச்சைக்குரிய மான்சான்டோ பன்னாட்டு பயிர் நிறுவனத்துடன் நேரடி தொடர்பு வைத்துள்ளது. திவ்யாவின் மனு 2006 பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் எந்த பதிலும் தரப்படவில்லை. தாமதப்படுத்துவதன் மூலம் களப் பரிசோதனைகள் தொடர்பான தகவலை மறைக்க மாஹிகோ முயற்சிக்கிறது. பொது சுகாதாரம் - வர்த்தக நலன்களுக்கு இடையிலான போரில் இந்த மனு முன்னுதாரணமாக திகழும். இதுவரை வர்த்தக நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து தகவலை வெளிக் கொண்டுவர வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது.
- ஆதி
- டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
- 'விளக்குகளை அணைப்போம்' - கவனம் பெறும் புதிய சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
- கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்
- பாயத் துடிக்கும் பன்னிரண்டு நோய்கள்
- சி.எஃப்.எல். பல்புகளோடு போராடும் குமிழ் பல்புகள்
- சூழலைக் காக்கும் பீமா மூங்கில்
- கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் வழிகள்
- வீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு
- வானிலையை மாற்றும் காற்றாலைகள்
- கரியமில வாயுவை சேமித்து வைக்க முடியுமா?
- புவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய வழிமுறை
- வட இந்தியா - வேகமாகக் குறையும் நிலத்தடிநீர்
- ஓசோன் மெலிவு மனிதருக்கு நலிவு
- புவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்
- கிளிஞ்சலுக்கு வந்த இடைஞ்சல்
- கடலை விஷமாக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
- மரபு மாற்று விதைகள் – இயற்கையை விஞ்சுமா செயற்கை?
- வெப்பத்தை ஏற்று வளரும் பவளப்பாறைகள்
- கொல்லப்படும் சுற்றுச்சுழல் போராளிகள்
- சுற்றுச்சூழல் செய்திகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.