21 ஆம் நூற்றாண்டில் ஓசோன் படலமே இல்லாமல் செய்துவிடுவது என்று மனிதகுலம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகத் தோன்றுகிறது. National Oceanic and Atmospheri Administration (NOAA) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள முடிவுகள் இப்படித்தான் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன. பூமியில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஒசோன் படலம் உதவியாக இருக்கிறது. ஒசோன் படலம் மெலிந்து போனால் சூரியனிடமிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் மிக எளிதாக பூமிப்பரப்பை வந்து சேரும். இதனால் பூமியில் வாழும் தாவரங்கள், நீர்வாழ் விலங்குகள், மனிதர்களின் உடல்நலம் இவற்றில் பாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

சர்வதேச சமுதாயத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட chlorofluorocarbonகளின் அளவு வளிமண்டலத்தில் இப்போது குறையத் தொடங்கியிருந்த போதிலும், ஓசோன் படலத்தை மெலிதாக்கும் நைட்ரஸ் ஆக்சைடின் அதிகரிப்பு மனித குலத்தை அச்சுறுத்திவருகிறது. நைட்ரஸ் ஆக்சைடின் அளவு வளிமண்டலத்தில் இப்போது இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறதாம். அதுவும் மனிதர்களின் செயல்பாடுகளால் அதிகரித்திருக்கிறது என்பதுதான் ஆய்வாளர்கள் தரும் எச்சரிக்கை மணி. பூமிப்பந்தின் பல்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்ட காற்று மாதிரிகளை ஆராய்ந்தபிறகு NOAA ன் விஞ்ஞானிகள் இந்த முடிவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஓசோன் படலத்தை மெல்லியதாக்கும் வாயுக்கள் ஹலோஜன் குடும்பத்தைச் சேர்ந்த குளோரின் மற்றும் புரோமின் வாயுக்கள்தான். 1987ல் ஏற்பட்ட மாண்ட்ரீல் ஒப்பந்தத்தில் ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும் chlorofluorocarbon மற்றும் ஹலோஜன் குடும்பத்தைச் சேர்ந்த குளோரின், புளோரின் வாயுக்களுக்கு கடிவாளம் போடப்பட்டது. ஆனால் நைட்ரஸ் ஆக்சைடின்மீது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. நைட்ரஸ் ஆக்சைடு பசுமை வாயுக்களுள் ஒன்று. எனவே புவிவெப்ப அதிகரிப்பிற்கும் இந்த வாயு காரணமாக இருக்கிறது. இத்துடன் ஓசோன் படலத்தைக் குறைப்பதற்கும் இந்த வாயுவே காரணமாக இருக்கிறது. ஏறத்தாழ வளிமண்டலத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு நைட்ரஸ் ஆக்சைடு மனிதர்களின் செயல்பாடுகளால் வெளியிடப்பட்டவை. மண்ணிற்கு உரமிடுதல், கால்நடைகளின் கழிவுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, பெட்ரோல் டீசல் எஞ்சின்களின் செயல்பாடு இவற்றால் நைட்ரஸ் ஆக்சைடு வெளியிடுதல் அதிகரிக்கிறது.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/08/090827141344.htm

தகவல்: மு.குருமூர்த்தி

 

Pin It