அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஜெயபாஸ்கரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மலைகளின் ஆண்டாக தனியாக ஒரு ஆண்டை அறிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் சபை. மக்களிடமிருந்து எப்படியாவது மலைகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற அவசியத்தின் விளைவாகவே இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. மலைத் தொடர்களும், அவற்றின் அழகும் கம்பீரமும் நாள் கணக்கில் நின்று ரசிக்கத்தக்கவை. நீளமான கடற்கரையைப் போலவே, நீளமான மலைத் தொடர்களையும் கொண்ட சிறப்பு நமது தமிழகத்திற்கு உண்டு.
அழகும் வளமும் நிறைந்த ஏராளமான மலைப் பகுதிகளைப் பெற்றிருந்தாலும் அவற்றை எந்த அளவிற்குத் தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் எனும் கேள்வி இன்று நம் முன்னே எழுந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டு வரை மலைகளையும், நிலப்பரப்புகளையும், கடல்களையும் காப்பாற்றியது ஒரு பெரிய காரியமே அல்ல. அது இயந்திரங்கள் இல்லாத காலம். இன்றைய காலமோ இயந்திரங்களின் காலம். மனிதகுலத்தின் நன்மைக்காகத் தான் இயந்திரங்கள் என்றாலும் அவை இயற்கைக்கு விரோதமாகவே பெரிதும் அரங்கேறி வருகின்றன.
தமிழகத்து மலைப்பகுதிகள் அனைத்தும் மிகவும் அடர்ந்த அல்லது ஓரளவு அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. அடர்ந்து உயர்ந்த மரங்கள் நிறைந்த மலைப் பகுதிகளில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் வாழ்கின்றன. சிறு சிறு மலைக் காடுகளிலும் பல்வேறு வகையான விலங்குகள் வாழ்கின்றன. விலங்குகளுக்குச் சொந்தமானவை காடுகள். ஆனால் பல்வேறு விதங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவற்றின் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. மலைப்பகுதிகளுக்கும் மனிதர்கள் புழங்கும் பகுதிகளுக்கும் இடையிலான மலையடிவாரப்பகுதி, மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதைத் தமிழகத்தின் பெரும்பாலான மலைப்பகுதிகளில் காணமுடிகிறது.
யானைகளின் காட்டிற்கும் மனிதர்களின் வயல்வெளிகளுக்கும் இடைவெளியின்றிப் போய்விட்டதன் விளைவாகவும் மலைப்பகுதிகளின் வறட்சி, தண்ணீர்ப்பற்றாக்குறை போன்றவற்றாலும் காட்டு விலங்குகள் - குறிப்பாக யானைகள் - காட்டைவிட்டு வெளியேறி வயல்வெளிகளைத் துவம்சம் செய்வதும் சில நேரங்களில் மின் கம்பிகளில் சிக்கி மாண்டு போவதும் நடந்து கொண்டிருக்கின்றன. அடர்ந்த காடுகளுக்கான மலையடிவாரப்பகுதிதான் அதிகமாகக் கவனம் செலுத்திப் பாதுகாக்க வேண்டிய, மரங்களையும் திட்டமிட்டு வளர்க்க வேண்டிய பகுதியாகும். ஆயினும், நமது மலையடிவாரங்களில் நடப்படும் மரங்களைவிட மலைப்பகுதிகளில் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை அதிகம். இன்றைய இயந்திர உலகில் ஒரு மரம் இரண்டே நாளில் கதவாகவும், சன்னலாகவும் மாறி விடுகிறது. ஆனால் ஒரு விதையை மரமாக்க இயற்கை எத்தனை ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க நமக்கு நேரம் இருப்பதில்லை.
விளைய வைத்து அறுத்துக் கொள்ளும் அவகாசமும் திட்டமும் இல்லாமற் போய்விட்டதன் காரணமாகவே பலநூறு ஆண்டுகளாக விளைந்திருக்கும் காடுகளின் மீது நாம் கை வைக்க ஆரம்பித்து விட்டோம். மிகப் பெரிய மலைத் தொடர்களை நாம் பெற்றிருப்பது போல் தெரிந்தாலும் நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் போன்றவற்றின் மலைப்பகுதிகளை விட நமது மலைவளப் பகுதி குறைவானதே யாகும். தொலைநோக்குப் பார்வையில், இந்தக் குறைவான மலைப் பகுதிகளை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
குளிர் மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் வசதி மிக்கவர்கள் நிலம் வாங்கிப் போடும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் அப்பகுதிகள் மாளிகைகள் நிறைந்த மண் மேடுகளாகக் காட்சியளிக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. இது ஒருபுறம் இருக்க சுற்றுலாப் பயணிகள் வீசியெறியும் கூளங்களால் - குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் - மேற்குறிப்பிட்ட மலைப்பகுதிகள் மாசடைந்து வருகின்றன. தன்னார்வ அமைப்புகளும் அரசும் எவ்வளவோ முயன்று பணி செய்தும், மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் அதிக அளவு சென்றடைந்து கொண்டிருக்கிறது. கொடைக்கானல் ஏரியைச் சுற்றிலும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களே அதிக அளவில் கரை ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.
காலங்காலமாக மலைக்காடுகளில் வாழ்ந்து வரும் மக்களால் மலைகளுக்கும் அதன் காடுகளுக்கும் எந்த இடையூறும் நேர்ந்ததில்லை. காராளக் கவுண்டர்கள், முடுகர்கள், சோளகர்கள், இருளர்கள், புலையர்கள் போன்ற மலைவாழ்ப் பழங்குடி மக்கள் தமிழகத்தின் பல்வேறு மலைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரத்தின் எந்தச் சுவடும் இன்று வரை அவர்களுக்குத் தெரியாது என்பது கசப்பான உண்மையாகும். கோவை மாவட்டத்தின் அட்டுக்கல் மலைப்பகுதி இருளர்களையும், கல்கொத்தி மலைப்பகுதி முடுகர்களையும், திருமூர்த்தி மலைப்பகுதி புலையர்களையும், தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியின் தொங்கலூத்து, கலசப்பாடி, கருக்கம்பட்டி ஆகிய கிராமங்களின் காராளக் கவுண்டர்களையும் இவர்களைப் போன்ற இன்னும் பல்வேறு மலைவாழ் மக்களையும் பார்க்கிற எவருக்கும் இந்த உண்மை புரியவரும்.
தாம் வாழும் மலைகளே மலைவாழ் மக்களின் உலகமாக இருக்கிறது. பாறைகளும் மரங்களும் ஓடைகளுமாகப் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட மலைமக்கள் அப்பகுதிகளுக்கு, கரட்டியூர் அம்மன் படுகை, கோம்புத்துறை, குமரிப்பாறை, தங்கவலச கருப்புசாமி கோயில், பூதநாச்சித் தேருமலை என்றெல்லாம் பெயர்களைச் சூட்டி தங்களுக்குள் அடையாளம் காட்டிக் குறிப்பிட்டு அங்கெல்லாம் புழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்தந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது, உலகின் தட்பவெப்ப நிலையைப் பாதுகாப்பது, அருகிக் கொண்டே வரும் வன உயிர்களைப் பாதுகாப்பது, வனங்களில் வாழ்ந்தே பழகிப் போன, வனங்களிலேயே வாழ விரும்புகிற மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பது, பல கோடிக்கணக்கான மரங்களைப் பாதுகாப்பது என்கிற கோணத்தில்தான் மலைகளைப் பாதுகாப்பது என்கிற ஐ.நா. சபையின் பிரகடனத்தை ஒவ்வோர் அரசும் ஒவ்வொரு மனிதனும் புரிந்துகொள்ள வேண்டும்.
- ஜெயபாஸ்கரன்
- விவரங்கள்
- ஜெயபாஸ்கரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
தரைவாழ் உயிரினங்களில் மிகப் பெரியதும், பல்வேறு அல்லல்களுக்கு உள்ளாகி நாளுக்கு நாள் அழிந்து வருவதுமான யானைகளைப் பற்றிய செய்திகள் மனிதகுல வரலாறு நெடுகிலும் மண்டிக் கிடக்கின்றன. மன்னராட்சிக் காலங்களில் பல்லாயிரக்கணக்கில் போர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது முதல், இன்றைய கணிப்பொறி காலம் வரை யானைகள் மனித குலத்துக்குப் பல்வேறு வகையில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றன.
யானைகளைப் பாதுகாப்பதைக் காட்டிலும் அவற்றை எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டு பிழைக்கலாம் என்பதே மனிதர்களின் சிந்தனையாக இருக்கிறது. ஆசி வழங்கும் கோயில் யானைகள்; வித்தை காட்டும் சர்க்கஸ் யானைகள்; வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களைத் தூக்கிக் கொண்டு வந்து அதை லாரியில் ஏற்றிக் கொண்டிருக்கும் முகாம் யானைகள்; முகாம் யானைகளுக்குப் பயிற்சி கொடுக்கவும், அடங்காத யானைகளை அடக்கவும் பயன்படுத்தப்படுகிற ‘கும்கி’ யானைகள்; மனிதர்களின் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்கிற கவலையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டு யானைகள் என்று யானைகளில் எத்தனையோ பிரிவுகள்!
மனிதர்களின் கைகளில் சிக்காத காட்டு யானைகள் எந்த அளவுக்கு நிம்மதியாக வாழ்கின்றன என்பது தெரியவில்லை. ஆனால் பல்வேறு விதங்களில் மனிதர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான யானைகளில், எந்த யானையும் நிம்மதியாக இல்லை என்பது கண்கூடான உண்மை. முகாம்களில் உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு யானைக்கும், ஒரு நாள் உணவாக 100 கிராம் வெல்லம், 5 கிலோ கொள்ளு, 15 கிலோ ராகி ஆகியன உணவாக வழங்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதில் பெண் யானைகள், கருவுற்ற யானைகள், மற்றும் குட்டி யானைகளின் உணவு தொடர்பான அளவு விவரங்கள் மாறுபடுகின்றன. ஆனால் முகாம்களில் இல்லாமல் மனிதர்களுக்கிடையில் பல்வேறு தொழில் செய்து ஒடுங்கிக் கிடக்கும் எல்லா யானைகளுக்கும் இந்த அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
அடர்ந்த காடுகளில் விருப்பம்போல் கூட்டம் கூட்டமாக நடமாடி, மரங்களின் பசுந்தழைகளைத் தின்று, பெரிய பெரிய காட்டாறுகளில் நீர் குடித்து அங்கேயே விளையாடி மகிழும் உடல் அமைப்பு கொண்ட யானைகள், அருகம்புல்லும் முளைக்க வாய்ப்பில்லாத நகரத்துச் சூழலில் எப்படி வாழ முடியும் என்பது சமூகத்தின் கவலைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கிறது.
காடுகளில் வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு காட்டைவிட்டு வெளியேறுகிற பல யானைகள் அருகில் உள்ள விளைநிலங்களைத் துவம்சம் செய்து பயிர்களைத் தின்று பசியாறிச் செல்கின்றன. காடுகள் அழிக்கப்படுவது; யானையின் வாழிடங்கள் காப்பி, தேயிலை போன்ற விளை நிலங்களாக மாற்றப்படுவது; தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் காட்டு யானைகளின் வாழ்வுரிமை தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. ஆசிய யானைகளில் 50 விழுக்காடு தென்னிந்தியாவில் வாழ்கின்றன. இத்தகைய இயற்கையின் கொடை நமக்கு வாய்த்திருந்தாலும் இது குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியவில்லை.
1998ஆம் ஆண்டு முதல் 2001 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் 28 யானைகள் ரயிலில் அடிப்பட்டுச் செத்துப் போயின. இவற்றில் 15-11-2001ஆம் நாள் அசாம் மாநிலம் தின்சூக்கியா மாவட்டத்தில் ஒரே ரயிலில் 7 யானைகள் அடிப்பட்டு மாண்டன; 1980 முதல் 1986 வரை ஆறு ஆண்டுகளில் 100 ஆண் யானைகள் தந்தங்களுக்காகக் கொல்லப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட யானைகள் விஷ உணவை உண்டு மாண்டுபோய் விட்டன என்று வனத்துறையின் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இது தவிர காடுகளின் ஓரம் அமைக்கப்படுகிற மின்சார வேலியில் சிக்கிப் பல யானைகள் மாண்டு கொண்டிருக்கின்றன. யானை வாழிடங்கள் பல்வேறு வகையில் ஆக்கிரமிக்கப்படுவதை வசதியாக மறந்துவிட்டு, யானைகளின் அட்டகாசம் பற்றியே மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
1972ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1977ஆம் ஆண்டு மேலும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, யானைகளை வேட்டையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் யானைகள் பல்வேறு வகையில் அழிக்கப்பட்டு வருவதைக் கருத்திற் கொண்டு 1992ஆம் ஆண்டு யானைகள் பாதுகாப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அத்திட்டத்தை உரிய வகையில் செயற்படுத்துமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இப்பத்தாண்டுத் திட்டம் (1992 - 2002) நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தியபோது யானைகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாக வனத்துறை பட்டியலிட்டிருக்கிறது. அதன்படி 1991இல் 3260ஆக இருந்த தமிழக யானைகளின் எண்ணிக்கை 2001இல் 3635 ஆக உயர்ந்துள்ளது. முகாம் யானைகளும், சர்க்கஸ் மற்றும் கோயில் யானைகளும் காட்டு யானைகளின் கணக்கில் சேர்க்கப்படவில்லை.
யானைகள் பாதுகாப்பில் 1977ஆம் ஆண்டு சட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்். ஆனால் எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் யதார்த்தம் அவ்வளவு நிறைவாக இல்லை. யானையை வைத்து மனிதர்கள் பல்வேறு விதங்களில் பிழைக்கும் நிலைக்கு முதலில் தடைவிதிக்கப்பட வேண்டும். யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது, மனிதர்களுக்காக உழைக்கும் யானைகளையும் உள்ளடக்கியதாக இருந்தால்தான் முழுமை பெறும். மனிதர்களால் கைது செய்யப்பட்டவை போல வாழ்ந்து கொண்டிருக்கும் யானைகளை விடுதலை செய்து மீண்டும் அவற்றை இயற்கையின் வனச் சூழலிலேயே வாழ வைப்பதுதான் உண்மையிலேயே யானை நலச் சட்டங்களை மதிப்பதாக அமையும்.
யானைகள் வாழ்வதற்கேற்ற வெப்ப மண்டலக்காடுகளை நாம் பெற்றுள்ளதால் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பையும் இயற்கை நமக்கு அளித்திருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
யானை என்பது நமது இயற்கை வளத்தின் அடையாளமாகும். இயற்கையான வனவெளிகளில் யானைகளைப் பல்லாயிரக் கணக்கில் வளர்ப்பது எனத் திட்டமிட்டுச் செயலாற்றினால், அதன் விளைவாகக் காடுகள் செழிக்கும். வளமான காடுகள்தான் மழை உள்ளிட்ட இயற்கையின் பல்வேறு கொடைகளை நமக்கு வழங்கும்.
- ஜெயபாஸ்கரன்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
தாவரங்களின் ஆண்பாகம் என்பது மகரந்தத்தூள்கள்.
பெண்பாகம் என்பது சூல்முடிகள்.
பறவைகள், காற்று இவற்றின் உதவியால் மகரந்தத்தூள்கள் சூல்முடியில் போய் ஒட்டிக் கொள்கின்றன. சூல்தண்டு வழியாக மகரந்தத்தூள் இறங்கி, ஒரே ஒரு மகரந்தம் மட்டும் சூலகத்திற்குள் போய்ச் சேருகிறது. இதைத்தான் தாவரங்களில் கருவுறுதல் என்கிறோம்.
மகரந்தத் தூள்களை ஏற்பதா, மறுப்பதா என்பதை சூல்முடிகள் ஆராய்ந்து முடிவு செய்கின்றனவாம். இந்த முடிவுகள் எப்படி செய்யப்படுகின்றன? புரத மூலக்கூறுகள்தான் இந்தப் பணியை செய்யுகின்றன என்கின்றனர் மிசெளரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
மனிதர்களுக்கு கண்களும் காதுகளும் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கான துணையை தேர்வுசெய்வதிலும் புணர்ச்சி செய்வதிலும் சிக்கல் இருப்பதில்லை. இருந்தாலும் மனிதர்கள் பால்வினை நோய்களை தேடிக் கொள்ளத் தவறுவதில்லை.
தாவரங்களுக்கு கண்கள் இல்லை. காதுகளோ, மூக்கோ இல்லை. என்றாலும் மரபியல் பண்புகளை பாதிக்கும் இனப்பெருக்கத்திற்கு தாவரங்கள் இடம் கொடுப்பதில்லை. மனிதர்களைப்போல் இனப்பெருக்கத்திற்கான மகரந்தச் சேர்க்கை தாவரங்களில் அவ்வளவு எளிதாக நடைபெற்று விடுவதில்லை.
மகரந்தம் தான் யார் என்பதை மூலக்கூறுகள் வழியாக சூல்முடிக்கு தெரிவித்தல் வேண்டும். சூல்முடி இந்த அடையாளத்தை புரிந்து கொண்டபிறகு மகரந்தச் சேர்க்கையை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.
மகரந்தங்கள் சூல்முடியை அடைந்ததும் அங்கே ஆண்-பெண் அறிமுகம் நடைபெறுகிறது. வார்த்தைகளுக்கு பதிலாக புரத மூலக்கூறுகளே இந்தப் பணியை செய்கின்றன. இவ்வாறு தாவரங்களின் இனப்பெருக்க நடைமுறையில் கருத்தரித்தலுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இதனால் தாவரங்களின் மரபுப் பண்புகள் காப்பாற்றப்படுகின்றன.
ஆராய்ச்சியாளர்கள் NaTTS மற்றும் 120K ஆகிய இரண்டு சூல்முடி புரதங்களை ஆய்விற்கு பயன்படுத்தினார்கள். இந்த இரண்டு சூல்முடி புரதங்களும் சூலகத்திற்கு மகரந்தத்தை எளிதில் கொண்டுசெல்லும் இயல்புடையவை.
மறுபுறம் S-RNase-binding protein (SBP1), the protein NaPCCP ஆகிய மூன்று புரதங்களும் ஒரு என்ஸைமும் சூல்முடியுடன் இணைத்து வைக்கப்பட்டன. எந்தெந்த மகரந்த புரதங்கள் எந்த சூல்முடி புரதங்களுடன் இணைந்தன என்பது கண்டறியப்பட்டதில் மேற்கண்ட முடிவுகள் தெரிய வந்துள்ளன.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் மனிதர்களின் வாயில் உள்ள சிலபாக்டீரியாக்கள்தான் உணவுகளின் சுவையையும் மணத்தையும் அறிய உதவுகின்றன என்கிறார்கள்.
சில காய்கறிகளிலும், பழங்களிலும் மணமற்ற 'தையோல்' என்னும் கந்தக கூட்டுப்பொருள் அடங்கியுள்ளது. இந்த மணமற்ற தையோல் என்னும் வேதிப்பொருளை மணமுள்ளதாக மாற்றி நம்முடைய நாக்கிற்கு சுவையையும், மணத்தையும் அளிக்கும் வேலையை வாயில் உள்ள சில பாக்டீரியாக்கள் செய்கின்றன.
திராட்சை, வெங்காயம், மிளகு போன்ற உணவுப்பொருட்களில் இந்த தையோல் என்னும் வேதிப்பொருள் உள்ளது. வெங்காயத்தை கடித்த சிறிது நேரத்திற்குப் பிறகுதான் அதற்குரிய சுவையையும் மணத்தையும் அறிய முடிகிறது இல்லையா? ஆவியாகக்கூடிய வேதிக்கூட்டுப் பொருட்கள் இதுபோன்ற உணவுப் பொருட்களில் இருப்பதாகவும், இதன் காரணமாகவே சுவையையும் மணத்தையும் அறிவதில் தாமதம் ஏற்படுவதாகவும் இதுவரை கருதப்பட்டது.
சுவையறிவதில் பயிற்சிபெற்ற 30 நபர்களுக்கு இந்த 'மணமற்ற தையோல்' வேதிப்பொருளை உண்ணக் கொடுத்து விவரங்களை சேகரித்தனர். இந்த நபர்கள் சுவையையும் மணத்தையும் அறிவதற்கு 20 முதல் 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டனர். இவ்வாறு அறியப்பட்ட சுவையும் மணமும் மூன்று நிமிடங்களுக்கு நீடித்து இருந்தது.
மணமற்ற வேதிப்பொருட்களை மணமுள்ள தையோல்களாக மாற்றும்பணியை வாயில் உள்ள பாக்டீரியாக்கள் செய்வதாகவும், இதனால்தான் நமக்கு சுவையும் மணமும் அறிவதில் தாமதம் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
மேலும், வாயில் சுரக்கும் உமிழ்நீர் காரணமாகத்தான் இந்த தையோல்களினால் எழுந்த சுவையும் மணமும் நீடித்த நேரத்திற்கு வாயில் நிலைபெற்று இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- மு.குருமூர்த்தி
- பூச்சிகளை விழுங்கும் தாவரம்
- பூமி வெப்பம் அடைவது ஏன்?
- தாவரங்களின் தோள் கொடுக்கும் தோழர்கள்
- 'அப்பன் குதிருக்குள் இல்லை' பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
- டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
- 'விளக்குகளை அணைப்போம்' - கவனம் பெறும் புதிய சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
- கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்
- பாயத் துடிக்கும் பன்னிரண்டு நோய்கள்
- சி.எஃப்.எல். பல்புகளோடு போராடும் குமிழ் பல்புகள்
- சூழலைக் காக்கும் பீமா மூங்கில்
- கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் வழிகள்
- வீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு
- வானிலையை மாற்றும் காற்றாலைகள்
- கரியமில வாயுவை சேமித்து வைக்க முடியுமா?
- புவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய வழிமுறை
- வட இந்தியா - வேகமாகக் குறையும் நிலத்தடிநீர்
- ஓசோன் மெலிவு மனிதருக்கு நலிவு
- புவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்
- கிளிஞ்சலுக்கு வந்த இடைஞ்சல்
- கடலை விஷமாக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.