அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
குமிழ் பல்புகளைவிட சி.எஃப்.எல் பல்புகள் சிக்கனமானவை என்பது நமக்குத் தெரியும். ஆனால் சிஃஎப்.எல் பல்புகள் அதிக அளவில் பாதரச ஆவியை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கின்றன என்பதும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன என்கிற உண்மையும் நமக்குத் தெரியாது.
யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இதைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ளது. எஸ்தோனியாவில் சி.எஃப்.எல் பல்புகளுக்கு பதிலாக குமிழ் பல்புகள் பயன்படுத்தப்படுவதால் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலப்பது வெகுவாக குறைந்துள்ளதாம். எஸ்தோனியாவைப் போலவே, சீனா, ருமேனியா, பல்கேரியா, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் பாதரச ஆவி வளிமண்டலத்தில் கலக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளதாம்.
குமிழ் பல்புகள் அதிக மின்னாற்றலை செலவிடுவதால், மின் உற்பத்திக்கு அதிக படிம எரிபொருள் செலவாகிறது. அதிகமான படிம எரிபொருளை எரிப்பதால் வளிமண்டலத்தில் சேரும் பசுமைக்குடில் வாயுக்களும் அதிகரிக்கின்றன. இது புவி வெப்பமடைதலை விரைவுபடுத்தும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
வழக்கமான குமிழ் பல்புகளைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக சிஃஎப்.எல் பல்புகள் நீடித்து உழைக்கின்றன. குறைந்த மின்சக்தியில் அதிக ஒளியைத் தருகின்றன. இதனால் நிலக்கரி போன்ற படிம எரிபொருளைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் தேவை குறைகிறது. விளைவாக, நாட்டின் படிம எரிபொருளின் இருப்பு கூடுதலாகிறது. மேலும் படிம எரிபொருள் குறைவாக எரிக்கப்படுவதால் பசுமைக்குடில் வாயுக்கள் காற்று மண்டலத்தில் கலப்பதும் குறைவாகவே உள்ளது என யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் சி.எஃப்.எல் பல்புகளை தயாரிப்பதிலும், பயன்படுத்தியபிறகு அழிப்பதிலும் அதிகமான பாதரச நச்சு காற்றில் கலந்து விடுகின்றன. மின்கட்டணம் குறைவதை மட்டுமே நாம் கவனிக்கிறோம். ஆனால் பாதரச நச்சு வளிமண்டலத்தில் கலந்து விடுவதை நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.
- தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஓசூர் 'குரோ மோர் பயோடெக்' நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் திரு என்.பாரதி என்பவர் குளோனிங் முறையில் வாழை, கரும்பு, மூங்கில், சவுக்கு, சோற்றுக்கற்றாழை, சீனித்துளசி போன்றவற்றை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். தமிழக அரசுக்கு மூங்கில் வளர்ப்பது தொடர்பான ஆலோசகர் அவர்.
இவர் கண்டுபிடித்துள்ள பீமா மூங்கில் அடர்த்தியானது. அதனால் இயற்கையிலேயே வலிமையானது. சுற்றுப்புறத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடை இழுத்துக் கொள்ளும் ஆற்றல் பீமா மூங்கிலுக்கு நான்கு மடங்கு அதிகம். ஓர் ஏக்கரில் உள்ள மற்ற மரங்கள் 15 டன் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்வதாகக் கொண்டால் ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பீமா மூங்கில் 70 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறதாம்.
இப்போது உலகம் வெப்பமடைவதற்குக் காரணம் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற தொழில்வள நாடுகள்தான். உலகின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இதுபோன்ற நாடுகள் அவை வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் அளவிற்கு ஏற்ப மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டபோது அமெரிக்கா தவிர பிற நாடுகள் ஒப்புக்கொண்டன. அதன்படி உலகின் எந்த மூலையில் மரங்களை வளர்த்தாலும் அதற்கான செலவினத்தை மேலே சொன்ன நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பீமா மூங்கிலை இந்தியாவில் பயிர் செய்தால் பெருமளவு அன்னிய உதவி நமக்குக் கிடைக்கும் என்கிறார் திரு என். பாரதி. பீமா மூங்கிலின் அளப்பரிய பயன்களை பட்டியல் போடுகிறார் திரு. என். பாரதி.
அனல் மின்சாரநிலையங்களில் பயன்படும் நிலக்கரி ஒரு டன் ஆறாயிரம் ரூபாய். அனல் மின்சார நிலையங்களில் பீமா மூங்கிலைப் பயன்படுத்தினால் ஒரு டன் இரண்டாயிரம் ரூபாய். நிலக்கரியை எரிப்பதால் காற்றுமண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவைவிட இருபது மடங்கு குறைவான கார்பன் மட்டும்தான் மூங்கிலை எரிப்பதால் வெளியாகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும்போது மூலப்பொருட்களுடன் பாதியளவு மூங்கில் இழைகளைக் கலந்து தயாரிக்கலாம் என்று பெங்களூரில் உள்ள ' இந்தியன் வுட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' கண்டுபிடித்துள்ளது. இதனால் பெட்ரோலின் உபயோகம் குறையும். மூங்கிலில் இருந்து பஞ்சு தயாரிக்க முடியுமாம். ஒரு ஏக்கர் பருத்தியில் 500 கிலோ பஞ்சு கிடைக்குமானால் ஒரு ஏக்கர் மூங்கிலில் 10 ஆயிரம் கிலோ பஞ்சு கிடைக்குமாம்.
பெரிய நிறுவனங்கள் செயற்கை இழைகள் தயாரிக்க யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கின்றன. பூமியின் நீராதாரத்தை வற்றச் செய்யும் பகாசுரன்கள் இவை. ஆனால் மூங்கில் மரங்கள் நீர் வளத்தை அழிப்பதில்லை. அரசு மூங்கில் வளர்ப்பதற்கு மானியம் தருகிறது. மானியத்தைப் பயன்படுத்தி மூங்கில் வளர்ப்பதற்கு தமிழக விவசாயிகள் முன்வர வேண்டுமென்கிறார் இந்தத் தமிழர்.
நன்றி: தினமணி கதிர்/07.09.2008
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
1800க்குப் பிறகு ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு 30 சதவீதம் அதிகரித்துவிட்டது. இயற்கை படிமங்களாகிய எண்ணெய், நிலக்கரி, இயற்கை வாயு இவற்றை எரிக்கும்போதும், காடுகளை அழிக்கும்போதும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும்போதும் அதிகமான அளவில் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளிப்பட்டு காற்று மண்டலத்தில் கலந்து விடுகிறது. உயிரினங்கள் சுவாசிப்பதாலும், எரிமலை புகை கக்குவதாலும் கூட காற்றில் கார்பன் டை ஆக்சைடு கலக்கிறது. இவையெல்லாம் இயற்கை நிகழ்வுகள் ஆகும்.
காற்று மண்டலத்தில் கலக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை கைப்பற்றி சேமித்து வைக்க இயலும். ஆனால் இதற்காக 40 சதவீதம் கூடுதலாக எரிபொருள் செலவு செய்ய வேண்டியிருக்கும். மேலும் தொழிற்சாலைகளை இயக்க ஆகும் மொத்த செலவு 60 சதவீதம் அதிகரிக்கும். காற்று மண்டல கார்பனை மூன்று வழிகளில் கைப்பற்றி சேமிக்க இயலும்.
முதலாவது முறையில் படிம எரிபொருள்களாகிய எண்ணெய், நிலக்கரி இவற்றை எரிக்கும்போது வெளிப்படும் கார்பனை கைப்பற்றி சேமிக்கிறார்கள். சிறிய தொழிற்சாலைகள் சிலவற்றில் இந்த முறை தற்போது கையாளப்பட்டு வருகிறது. இரண்டாவது முறையில் எரிபொருள் முதலில் வாயுவாக மாற்றப்படுகிறது. இந்த வாயுவில் இருந்து கார்பனும், நீரும் பிரித்தெடுக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன. மூன்றாவது முறைக்கு Chemical Looping Combustion என்று பெயர். எரிபொருளுடன் உலோகங்களை வினைபுரியச் செய்கிறார்கள். கார்பன் டை ஆக்சைடும், நீராவியும் பொதிந்திருக்கும் உலோகக் கட்டிகளாக அவை மாற்றப்பட்டு சேமிக்கப்படுகின்றன.
இவையெல்லாம் தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற சங்கதிகள். மனிதகுலம் வெளிக்காற்றில் கலக்கச் செய்யும் கார்பனின் அளவை சுயக்கட்டுப்பாட்டு முறையில் குறைக்க வேண்டும். இயலக்கூடிய இடங்களில் புகைக்கும் எந்திரங்களைத் தவிர்க்க வேண்டும்.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- வேணு சீனிவாசன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சுற்றுப்புற சூழலில் மாசுபாடு என்றதுமே நாம் பொதுவாக வெளி உலகத்தை மட்டுமே கருத்தில் கொண்டு புரிந்து கொள்கிறோம். அதாவது நமது வீட்டிற்கு வெளியே உள்ள இடம், நமது தெரு, நமது ஊர் என்று. ஆனால் சுற்றுச்சூழல் என்பது நாம் வசிக்கின்ற வீட்டுக்குள்ளேயும் இருக்கிறது. அதில் மாசுக்குறைவு ஏற்பட்டால் விபரீத விளைவுகள் உண்டாகும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த உணர்வு ஏற்படாத காரணத்தினால் வீட்டுக்குள்ளே இருக்கின்ற காற்று மாசுபட்டு அதனால் பலவிதமான நோய்த் தொல்லைகள் ஏற்படுகின்றன.
வீட்டுக்குள்ளே இருக்கின்ற காற்று மாசடைந்தால் கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம், உடலில் எரிச்சல், மயக்கம், வாந்தி, கண்பஞ்சடைதல் போன்றவை ஏற்படும். கட்டை, கரி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை சமையலுக்குப் பயன்படுத்துகின்ற கிராமத்து மக்கள் காற்று மாசுபாடு குறித்து அறிந்து கொள்ளவேண்டும். புகையும், கரியும் வெளியே செல்ல போதுமான ஜன்னல் வசதிகள் வீட்டில் இருக்க வேண்டும். இல்லை என்றால் அடுப்பில் இருந்து வெளிப்படும் புகை மூச்சடைப்பு, இருமல், கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். நாளடைவில் ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் ஆகியவை தோன்றும். எனவே இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாமல், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்.
நாம் வீட்டிற்குள்ளே இருக்கும் போது மிகவும் சுகமாக இருக்கிறோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வில் சிறிய மாறுதல்களை கவனிக்காமல் இருப்பது வழக்கம். ஆனால் முன்னெச்சரிக்கையோடு சில மாறுதல்களை கவனிக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக பெரிய ஆபத்துக்களை தடுக்க முடியும். உதாரணமாக வீட்டிற்குள்ளே நாம் சுவாசிக்கும் காற்று அசுத்தம் அடைந்து உடலுக்கு தீங்கு விளைவிப்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள சில எச்சரிக்கைகள் தேவை.
அவையாவன
1. வழக்கத்திற்கு மாறான, குறிப்பிடத்தக்க நாற்றம்
2. அழுகிய வாடை, அல்லது காற்றின் அடர்த்தி
3. காற்றின் சுற்றோட்டக்குறைவு
4. பழுதுபட்ட குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதன இயந்திரங்களின் இயக்கம்.
5. புகைபோக்கியில் ஓட்டை பெட்ரோல், டீசலை எரிக்கும் போது போதுமான அளவிற்கு காற்றோட்டம் இருந்து புகை வெளியே செல்லுகிறதா என்பதை கவனிப்பது.
6. வீட்டிற்குள்ளே இருக்கின்ற காற்றில் அதிக அளவு ஈரப்பதம்
7. வெளிச்சமோ அல்லது காற்றோ வராமல் கட்டப்பட்ட வீடுகள்
8. வீட்டில் எங்காவது பூஞ்சைக்காளான் மற்றும் ஸ்போர்கள் இருப்பது
9. புதுப்பிக்கப்பட்ட வீட்டிற்கோ அல்லது புதிய வீட்டிற்கோ சென்ற உடன் உடலில் ஏற்படும் மாறுதல்கள்.
10. வீட்டு உபயோகப் பொருட்களுக்கு புதிய வண்ணம் பூசிய உடன் அடிக்கடி ஏற்படும் தும்மல், கண் எரிச்சல்.
11. வீட்டிற்குள்ளே இருப்பதை விட வெளியே இருக்கும் போது உடல் ஆரோக்கியமாக இருத்தல்
இவற்றை சரியாக கவனிப்பதன் மூலமாக வீட்டிற்குள்ளே உண்டாகும் காற்றுமாசை கட்டுப்படுத்தவும், நமக்கு நோய் வராமல் தடுக்கவும் முடியும். நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச்சூழல் நமக்கு பலவிதமான நன்மைகளைச் செய்து வருகிறது. மரங்களும், செடிகொடிகளும் நாம் வெளிவிடும் ஏராளமான கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு, பிராணவாயுவை வெளியிடுகின்றன. இதன் காரணமாக நம்மைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு பெருகுவது தடைசெய்யப்படுகிறது. சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவது தாவரங்களின் சேவையினால் தடுத்து நிறுத்தப்படுகிறது.
சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்கள் நமக்கு புற்றுநோயை ஏற்படுத்தும். இவ்வாறு நடக்காமல் காற்றுவெளியில் உள்ள ஓசோன் படலம் ஒரு கவசமாக இருந்து, புறஊதாக் கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பி வைக்கிறது. மண்புழுக்கள், சாணவண்டுகள், இன்னும் பெயர் தெரியாத நூற்றுக் கணக்கான உயிரினங்கள் மண்ணில் உள்ள கழிவுப்பொருட்களை உரமாக மாற்றுகின்றன. இதன் காரணமாக விவசாய நிலத்தின் சத்துக்கள் அதிகமாகின்றன. உற்பத்தி பெருகுகிறது.
பறவைகள், விலங்குகள், வண்டுகள், பூச்சிகள் ஆகிய உயிரினங்களைக் கொண்ட ஆரோக்கியமான சூழல், மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். தாவரங்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட வண்டுகளும், பூச்சிகளும் உதவுகின்றன. பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளி, போன்ற பூச்சிகளை அழிக்க பறவைகள் பயன்படுகின்றன.
எரிபொருட்கள், கடல் உணவு, காட்டு விலங்குகள், கயிறுகள், ஆகியவற்றை காடுகள் மற்றும் கடல்கள் நமக்கு அளிக்கின்றன. இவை மட்டும் அல்லாமல், இயற்கையாக ஏற்படும் கழிவுகள், மனிதனால் ஏற்படும் குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றை அழிப்பதிலும் இயற்கை பெரும்பங்கு ஆற்றுகிறது. இவைகளை மனதில் கொண்டு நாம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை எல்லாவகையிலும் முழுமுயற்சி செய்து தடுப்பது அவசியம்.
- வேணு சீனிவாசன்
- வானிலையை மாற்றும் காற்றாலைகள்
- கரியமில வாயுவை சேமித்து வைக்க முடியுமா?
- புவி வெப்பமயமாதலைத் தடுக்க புதிய வழிமுறை
- வட இந்தியா - வேகமாகக் குறையும் நிலத்தடிநீர்
- ஓசோன் மெலிவு மனிதருக்கு நலிவு
- புவி வெப்பமயமாதலும்..... மக்கள் நிலைமையும்
- கிளிஞ்சலுக்கு வந்த இடைஞ்சல்
- கடலை விஷமாக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்
- மரபு மாற்று விதைகள் – இயற்கையை விஞ்சுமா செயற்கை?
- வெப்பத்தை ஏற்று வளரும் பவளப்பாறைகள்
- கொல்லப்படும் சுற்றுச்சுழல் போராளிகள்
- சுற்றுச்சூழல் செய்திகள்
- திட்டமிடப்பட்டு அழிக்கப்படும் இயற்கை மரபுசார் விவசாயம்
- மீன் இனத்தை அழிக்கும் CO2
- கரியமில வாயுவின் இன்னொரு முகம்
- புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?
- பற்றி எரிகிறது பூமி
- முல்லை பெரியாறு அணை - ஓர் பார்வை
- பாழாகும் பாலாறு
- அண்டார்க்டிகாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.