கீற்றில் தேட...

புவிவெப்ப அதிகரிப்பால் கடல்நீரின் வெப்பநிலை உயர்ந்துகொண்டிருக்கிறது. வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் கார்பன்டைஆக்சைடு வாயு கடல்நீரில் கரைந்துபோவதால் கடல் நீரின் அமிலத்தன்மையும் அதிகரிக்கிறது. அடுத்த 50 ஆண்டுகளில் உலகில் பாதிக்குமேற்பட்ட பவளப்பாறைகள் அழிந்துபோய்விடும் என்பதே அறிவியல் அறிஞர்களின் கருத்து. ஆனால் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெப்பத்தை தாங்கிவளரும் தகவமைப்பை சிலவகை பவளப்பாறைகள் பெற்றிருப்பதால் அழிவின் வேகம் குறைவாக இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் பவளப்பாறைகள் அழிவை நோக்கி இருக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும் நாம் நினைப்பதைக் காட்டிலும் பவளப்பாறைகள் மிகவும் உறுதியானவை என்கிறார் ஸ்டீபன் பாலும்பி. இவர் ஸ்டான்ஃபோர்டைச் சேர்ந்த மூத்த சுற்றுச்சூழல் அறிஞர். 2006ம் ஆண்டு இவருடைய குழு பசிபிக் கடலில் அழிவிலிருந்து கிளைத்தெழுந்த பவளப்பாறைகளை ஆய்வு செய்தது. இன்னும் 100 ஆண்டுகளில் கடல்நீரின் வெப்பநிலை பெருமளவு உயரக்கூடும் இல்லையா? அந்த வெப்பநிலையிலும் வளமாகவும் உறுதியாகவும் வளரக்கூடிய பவளப்பாறைகளை இந்தக்குழு கண்டறிந்துள்ளது. இந்த பவளப்பாறைகளில் வெப்பத்தை தாங்கிவளரும் ஆல்காக்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தக்குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் டாம் ஆலிவர், ஓஃபு என்னும் அமெரிக்க தீவில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டார். இந்தத் தீவில் ஏராளமான பவளப்பாறைகள் இருக்கின்றன. இங்கு புவிவெப்பத்தால் அழியக்கூடிய ஆல்காக்களும், புவிவெப்பத்தை தாங்கிவாழும் ஆல்காக்களும் ஒருசேர இருப்பதால் மிக அருமையான ஒரு ஆய்வுக்கூடமாக இந்தத்தீவு அமைந்துபோனது.

வெப்பமண்டல நாடுகளின் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு பவளப்பாறைகள் அடிப்படையானவை. பவளப்பாறைகள் zooxanthellae என்னும் ஒருசெல் ஆல்காக்களை சார்ந்து வாழுகின்றன. ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களும் மீன்வகைகளும் பவளப்பாறைகளில் குடியிருக்கின்றன. கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த மீன்களே உணவாகின்றன. புவிவெப்ப உயர்வால் பவளப்பாறைகள் எவ்வாறு வெளுத்துப்போகின்றன என்பதை விளக்கும் கட்டுரை இதே பகுதியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

ஓஃபு தீவின் குளிர்ச்சியான கழிமுகங்களில் வெப்பத்தை தாங்கி வளரும் ஆல்காக்கள் மிகக்குறைந்த அளவில் இருந்தன. ஆனால், இதே தீவின் வெப்பமான பகுதிகளில் வெப்பத்தைத் தாங்கி வளரும் ஆல்காக்கள் அதிக அளவில் இருந்தன. அதாவது வெப்பத்தை தாங்க இயலாத ஆல்காக்கள், தாங்களாகவே ஒதுங்கிக்கொண்டு வெப்பத்தை தாங்கக்கூடிய ஆல்காக்கள் வாழ இடம் கொடுக்கின்றன என்பதுதான் ஆய்வுகளின் முடிவு.

உலகில் எங்கெல்லாம் ஒஃபு தீவைப்போல வெப்பத்தை ஏற்றுவாழும் ஆல்காக்கள் மிகுந்துள்ளன என்கிற விவரம் செயற்கைக்கோளைக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது. புவியில் எங்கெல்லாம் ஓர் ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 31 செல்சியஸ் ஆக உள்ளதோ, அங்கெல்லாம் வெப்பத்தை தாங்க இயலாத ஆல்காக்கள், வெப்பத்தை தாங்கக்கூடிய ஆல்காக்களுக்கு வழிகொடுத்து ஒதுங்கிக்கொள்வதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பால்கூட இந்த ஆல்காக்கள் அழிவதில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் புவிவெப்பம் 2100ஆம் ஆண்டில் 2 முதல் 4.5 செல்சியஸ் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெப்பத்தை தாங்கி வளரும் ஆல்காக்கள் வெறும் 1.5 செல்சியஸ் வெப்பஉயர்வை மட்டும் ஏற்று வாழக்கூடியவை. என்னதான் வெப்பத்தை ஏற்றுவாழும் ஆல்காக்களால் பவளப்பாறைகள் வெளுத்துப்போவது தடுக்கப்பட்டாலும் மனிதர்களின் தவறுகளால் பவளப்பாறைகளின் அழிவின் வேகம் சற்று தூக்கலாகவே இருக்கிறது. மனிதத் தவறுகளால் இன்னும் 50 ஆண்டுகளில் பலமில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறைகள் அழிந்துபோவது நிச்சயம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தகவல்: மு.குருமூர்த்தி

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/05/090520100515.htm