காலநிலை மாற்றத்தின் விளைவாக பூமியில் அண்டார்க்டிக்கா மிகப் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. இது போதாதென்று பல ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் அதன் சூழலை மேலும் மோசமாக்குகிறது. இந்த நிலநடுக்கங்களுக்கு புவி வெப்ப உயர்வுடன் நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும் இவை அங்கு உள்ள மிக முக்கியமான பனிப்பாறைகளை மேலும் ஆபத்தான நிலைக்கு ஆளாக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.antarctica 720விழித்துக் கொண்ட எரிமலை

பல நாட்களாக தூங்கிக் கொண்டிருந்த ஒரு எரிமலை வெடித்துச் சிதறியதால் இந்த நிலநடுக்கங்கள் ஏற்படத் தொடங்கின. அண்டார்க்டிகாவின் அடிப்பகுதியில் இந்த எரிமலை அமைந்துள்ளது. இதனால் எரிமலை வெடிப்பின் காட்சிகள் வெளியில் தெரிவதில்லை. ஆனால் எரிமலை அண்டார்க்டிகாவை அதன் அதிர்வுகளால் பாதித்துள்ளது. இது 2020 ஆகஸ்ட் முதல் தொடங்கி இதுவரை சுமார் 85,000 அதிர்வுகளை ஏற்படுத்தியது. இது 2020 நவம்பரில் முடிவிற்கு வந்தது.

பூமியில் இது போன்ற எரிமலைகள் பல பகுதிகளில் காணப்படுகின்றன என்றாலும் இப்பகுதியில் ஒரு எரிமலையுடன் தொடர்புடைய தொடர் அதிர்வுகள் இந்த அளவு அதிக எண்ணிக்கையில் முதல்முறையாக அங்கு நிகழ்ந்துள்ளன. பூமியின் மேலோட்டுடன் சேர்ந்தே இந்த எரிமலை அமைந்துள்ளது. எரிமலையில் இருந்து லார்வா வலிமையுடன் மேற்பரப்பிற்கு வருவதே இத்தொடர் அதிர்வுகளுக்குக் காரணம்.

பூமி தோன்றியதில் இருந்து அதன் சரித்திரத்தில் அதிஅபூர்வமாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இதனால் மனித ஆயுளில் அண்டார்க்டிக்காவில் இப்போது ஏற்பட்டுள்ள இந்நிகழ்வைக் காண்பது ஓர் ஆய்வாளர் என்ற நிலையில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று இது பற்றி ஆராயும் ஆய்வுக்குழுவின் தலைவர் சிமோன் சிஸ்கா கூறுகிறார். ஜி எஃப் எஸ் என்ற ஜெமன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே அண்டார்க்டிகாவில் நில அதிர்வுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

கடலின் அடித்தட்டில் இருந்து கணக்கிட்டால் ஏறக்குறைய 900 மீட்டர் உயரமுடைய எரிமலையே ஓர்க்கா சீ மவுண்ட். இந்த எரிமலை இப்போதுதான் முதல்முறையாக செயல்படத் தொடங்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அண்டார்க்டிக்காவின் வடமேற்கு முனையில் டிரான்ஸ்ஃபீல்டு ஸ்ட்ரைட் என்ற பகுதியில் இது அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும் இந்த எரிமலை மீண்டும் விழித்துக் கொள்ளக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஃபோனிக்ஸ் என்ற புவியின் தட்டு அண்டார்க்டிக்கா தட்டுடன் சேரும் பகுதியில் இது அமைந்துள்ளது. புவித்தட்டுகள் ஒன்று சேர்வதால் இப்பகுதியில் எண்ணற்ற விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இப்பிளவுகளே எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட லார்வாவை அதிக அளவில் வெளியில் கொண்டு வந்தது. இதனால் நில அதிர்வுகள் உருவாகின்றன. மூன்று மாத நீண்ட தொடர் அதிர்வுகளுக்குப் பிறகு அதிர்வுகள் மெல்லக் குறையத் தொடங்கி பின்னர் மறைந்து போயின.

எதிர்பாராமல் திடீரென்று வெடிக்கத் தொடங்கி பின்னர் மெதுவாக எரிமலையின் அதிர்வுகள் நின்று போனதன் பின்னால் இருக்கும் காரணங்களை ஆய்வாளர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர். லார்வாவின் சக்தி வாய்ந்த வெளியேற்றத்தினால் வெளியில் இருக்கும் பிளவுகள் பெரிதாகி விட்டன. இதனால் லார்வா பூமியின் மேலோடு பகுதியில் உருவாக்கிய பாதிப்பின் தாக்கம் குறைந்தது. படிப்படியாக அதிர்வுகளும் நின்றுபோயின என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ரிக்டர் அளவுகோலில் 6 வரை பதிவான நில அதிர்வுகள் எரிமலை திடீரென்று செயல்படத் தொடங்கியதால் உண்டானது என்று கருதப்படுகிறது. புவிவெப்ப உயர்வினால் ஆர்க்டிக் அண்டார்க்டிக் பனிக்கண்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் நேரத்தில் அண்டார்க்டிக்காவில் நிலநடுக்கம் அதிர்வுகள் மேலும் பூமியை அழிவின் பாதைக்கே இட்டுச் செல்லும் என்று அஞ்சப்படுகிறது.

துருவப்பகுதியில் பனிப்படலங்கள் உருகும் செய்திகள் அதிகரித்துவரும் சமயத்தில் எரிமலை என்ற பேராபத்தும் சூழலைக் காக்க மனிதன் உடனடியாக செயல்பட வேண்டும் என்பதையே உணர்த்துகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.