‘புவி வெப்ப அதிகரிப்பு’ என்பது இன்றைய மனிதகுலத்தின் தலைகாய்ந்த பிரச்சினை. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால் இந்த சிக்கல் தோன்றியிருக்கிறது. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு கடல்நீரில் கரையும்போது கடல் நீரின் அமிலத்தன்மை கூடுகிறது. விளைவாக கடல்வாழ் உயிரினங்களின் சமநிலை பாதிக்கப்படுகிறது. கடல்நீரில் சிறிதளவு அமிலத்தன்மை அதிகரித்தால் கூட கிளிஞ்சல்கள், சோழிகள், சிப்பிகள் இவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்டோனிபுரூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களின் இறுதி அறிக்கை கடல்நீரில் அமிலத்தன்மை கூடுவதால் ஓடுடைய கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டுகிறது. 

தேவைக்கு அதிகமாக மீன்பிடிப்பது, தீங்கு விளைவிக்கும் பாசிகளின் பெருக்கம், வளிமண்டல வெப்ப உயர்வு என்பவையெல்லாம் கடல் வளத்தை அழியச் செய்யும் காரணிகளாக இதுவரை கருதப்பட்டு வந்தன. இந்தப் பட்டியலில் இப்போது கடல்நீரின் அமிலத்தன்மையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

படிம எரிபொருள்களாகிய டீசல், பெட்ரோல் இவற்றை நாம் எரிக்கும்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு கடல்நீரில் கரைவதால் கடல்நீரின் அமிலத்தன்மை கூடுகிறது. அமிலம், கால்சியம் கார்பனேட் எனப்படும் சுண்ணாம்பு போன்ற காரங்களை கரைக்கும் தன்மை உடையது. கிளிஞ்சல்கள், சோழிகள், சிப்பிகள் இவற்றின் உடல் கூடுகள் கார்பனேட் படிவங்களால் ஆனவை. இந்த வகையான கடல்வாழ் உயிரினங்கள் வளர்ச்சிப் பருவத்தில் தங்களின் கார்பனேட் கூடுகளை உருவாக்க அதிக காலம் எடுத்துக் கொள்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின்போது செயற்கையாக கடல்நீர் தொட்டிகள் உருவாக்கப்பட்டன. 21ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னாலும் கடல்நீரில் ஏற்படக்கூடிய அமிலத்தன்மைக்கு ஏற்றவாறு பல்வேறு தொட்டிகளில் கிளிஞ்சல்களும், சோழிகளும், சிப்பிகளும் வளர்க்கப்பட்டன. இந்த உயிரினங்களின் கருவளர்ச்சி சோதிக்கப்பட்டதில் 50 சதவீதம் உயிரினங்கள் லார்வா பருவத்திலேயே அழிந்துபட்டன. மேலும் முழுவளர்ச்சி பெறுவதற்கான கால அளவும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. முழுவளர்ச்சி பெற நீண்ட காலம் ஆவதால் லார்வா பருவத்திலேயே இந்த ஓடுடைய உயிரினங்கள் அதிக காலத்தை கழிக்க வேண்டியிருந்தது. லார்வாக்கள் கடலில் நீந்தும்போது பிற கடல்வாழ் உயிரிகளால் உண்ணப்பட்டு விடுவதால் ஓடுடை உயிரினங்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்துவிடுகிறது. ஓடுடை உயிரினங்களைப் பாதுகாக்க, அவற்றை செயற்கையான கடல்சூழலில் வளர்த்து மீண்டும் கடலுக்குள் கொண்டுவிடும் வழிகளும் ஆராயப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இவற்றிற்காக அரசு மானியம் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/10/091026162546.htm

தகவல்: மு.குருமூர்த்தி

Pin It