அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
எரிபொருளுக்காக பெட்ரோலியத்தை நம்பியிருக்கும் காலம் முடிவுக்கு வர இருக்கிறது. இத்துறையில் முதல் தடத்தை பதிக்கப்போகும் நாடு அமெரிக்க ஐக்கியநாடுகள் என்பதை சமீப கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீர்வாழ் உயிரினமான ஆல்காக்களில் இருந்து சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காமலும், அதே சமயம் பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக் கூடியதுமான விலையிலும் புத்தம்புதிய பயோ டீசலைத் தயாரித்துள்ளார்கள் வேதியியலாளர்கள்.
அண்மையில் அமெரிக்க வேதியியல் சொசைட்டியின் 237வது தேசீயக் கூட்டத்தில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. ஆல்காக்களில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும்போது இதுவரை உற்பத்தி செலவு மட்டுமே தலையாய பிரச்சினையாக இருந்துவந்தது. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பின்படி உற்பத்திசெலவு 40 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள கடல்கள், ஏரிகள், ஆறுகள் இவற்றிலெல்லாம் ஆல்காக்கள் அபரிமிதமாக கிடைப்பதால் மூலப்பொருள் தட்டுப்பாடு எனும் பேச்சே இருக்காது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உற்பத்தி முறையின்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கழிவுநீர் வெளியாவதில்லை. இந்த புதிய முறைக்கு “solid catalyst continuously flowing fixed-bed” method என்று பெயரிட்டுள்ளார்கள். மேலும் உற்பத்திக்கு குறைந்த இடப்பரப்பே போதுமென்பதால் தொழிற்சாலையின் அளவும் சிறியதாக இருக்கும்.
பயோ டீசல் தயாரிப்பில் தற்போது திரவ வினைஊக்கி பயன்படுத்தப்படுகின்றது. புதிய கண்டுபிடிப்பின்படி திடநிலையிலான வினை ஊக்கி பயன்படுத்தப்படுகிறது. திடநிலையிலான வினை ஊக்கிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தமுடியும் என்பதும், பயோடீசல் தயாரிப்பினை தொடர்ச்சியாக செய்யமுடியும் என்பதும் கூடுதல் சிறப்பு. பழைய முறையில் பயோ டீசல் உற்பத்தி செய்யும்போது திரவ வினைஊக்கிகளை அமிலத்துடன் நடுநிலையாக்கல் வினைசெய்து பிரித்தெடுக்கவேண்டி இருந்தது. இதனால் உற்பத்தியை இடையிடையே நிறுத்த வேண்டி இருந்தது.
புதிய முறை தொடர்ச்சியான உற்பத்தி முறை. ஓர் ஏக்கரில் விளைந்த சோயா பீன்களில் இருந்து தயாரிக்கப்படும் பயோ டீசலைக்காட்டிலும் 300 முதல் 400 மடங்கு அதிகமான உற்பத்தியை புதிய முறையில் ஈட்ட முடியும் என்கிறார் இதுபற்றிய அறிக்கையை அளித்த முதன்மை ஆய்வாளர் டாக்டர் பென் வென்.
- தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
நில நடுக்கோட்டுப் பகுதியில் காணப்படும் மழைக்காடுகளின் மொத்த பரப்பளவு 17.8 மில்லியன் சதுர கிலோமீட்டர். இவற்றில் 4.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் உலர்ந்த காடுகளும் அடக்கம். உலகில் உள்ள மழைக்காடுகளில் 50 சதவீதம் தென் அமெரிக்காவிலும் 30 சதவீதம் ஆப்பிரிக்காவிலும் மீதமுள்ளவை தெற்கு ஆசியா உட்பட பல இடங்களில் பரந்தும் காணப்படுகின்றன. பெட்ரோல் டீசல் போன்ற படிம எரிபொருட்களால் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடில் ஏறத்தாழ ஐந்திலொரு பங்கு இந்த மழைக்காடுகளால் உறிஞ்சி எடுத்துக் கொள்ளப்படுகிறதாம்.
நாடுகளுக்கிடையேயான புவிவெப்பம் தொடர்பான குழுவின் அறிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் 32 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவிடப்படுவதாக தெரிவிக்கிறது. இவற்றில் 15 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்திலேயே தங்கி பூமியை வெப்பமடையச் செய்கிறது. மீதமுள்ள 17 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு எங்கே போகிறது என்பதைக் குறித்த ஆய்வுதான் இப்போது நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ பாதியளவு கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் கரைந்து போகிறதாம். 4.8 பில்லியன் டன்கள் அளவிலான கார்பன் டை ஆக்சைடை இந்த மழைக்காடுகள் சாப்பிட்டு விடுகின்றன.
ஆப்பிரிக்காவின் கணக்கில் மட்டும் இந்த அளவு 1.2 பில்லியன் டன்களாகும். ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு ஹெக்டேர் காடும் 0.6 டன் கார்பன் டை ஆக்சைடை சாப்பிட்டுவிடுகிறது. ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளைப் பற்றிய நாற்பது ஆண்டு ஆய்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
ஆப்பிரிக்க காடுகள் மட்டுமின்றி, தென் அமெரிக்க, ஆசிய காடுகளிலும் பரந்து கிடக்கும் 2,50,000 மரங்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதன்மூலம் இயற்கை நமக்கு மிகப்பெரிய மானியத்தை அளிக்கிறது என்கிறார் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் ராயல் சொசைட்டி ஆய்வாளர் டாக்டர் சைமன் லூயிஸ். கோபன் ஹேகனில் இவ்வாண்டு நடைபெற உள்ள புவிவெப்பம் சார்பான பேச்சுவார்த்தைகளில் இந்த ஆய்வுமுடிவுகள் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டலத்தில் உள்ள அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மரங்களுக்கு உரமாக அமைவதால் மரங்களின் அளவு பெருக்கிறது. மரங்கள் தொடர்ந்து பெருத்துக்கொண்டே போவப்போவதில்லை என்பதும் இந்த மழைக்காடுகளை மட்டுமே தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கக்கூடாது என்பதும் தான் ஆய்வாளர்களின் எச்சரிக்கை. ஒவ்வோர் ஆண்டும் துடைத்தெடுக்கப்படும் 5 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடின் கார்பன் மதிப்பு 13 பில்லியன் பவுண்ட்கள் ஆகும். இந்த ஆய்வுகளின் முக்கியத்தை இந்த தொகையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். வளிமண்டலத்தை மாசுபடுத்துவதில் முன்னணியில் உள்ள நாடுகள் வனவளத்தை பாதுகாக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு கொடுக்கவேண்டிய நட்ட ஈட்டுத்தொகையை இந்த ஆய்வுகள் முடிவு செய்கின்றன. மழைக்காடுகளின் மரங்கள் பெருத்துக்கொண்டே போவதால் புவிவெப்ப மண்டல காடுகளின் பல்லுயிர்களுக்கிடையே ஏற்படும் மாற்றங்களையும் ஆராய்ந்து வருகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் காடுகளில் சேமிக்கப்படும் கார்பனின் அளவைக் கண்டறிய லைபீரியாவில் இருந்து தான்சானியா வரையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் 79 அடர்ந்த வனப்பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் இருந்த 70,000 மரங்களின் சுற்றளவுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பதிவு செய்யப்பட்டன. மரங்களின் உயரம், அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டு இந்த 79 வனப்பகுதிகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வளவு கார்பன் சேமிக்கப்பட்டுள்ளது என்பது கணக்கிடப்பட்டது. ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் இருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வளிமண்டலத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 1.2 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு இந்த வனப்பகுதிகளால் உறிஞ்சி எடுக்கப்படுவது கணக்கிடப்பட்டது.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
பூமியிலேயே ஆழமான பகுதியான சாக்கடலில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் மேற்குக்கரை, ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய பகுதிகள் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சந்திக்கவிருக்கின்றன. இதுபற்றிய ஆய்வு ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர் Shahrazad Abu Ghazleh மற்றும் அவரது குழுவினரால் நடத்தப் பெற்று வருகிறது. தற்போது நடந்துவரும் சாக்கடல்-செங்கடல், மத்திய தரைக்கடல்- சாக்கடல் இவற்றிற்கிடையேயான கால்வாய்ப் பணிகள் மூலம் சாக்கடலின் நீர்மட்டத்தை முந்தைய அளவிற்கு உயர்த்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மின் உற்பத்திக்காகவும், உப்புத்தன்மையை அகற்றி நன்னீராக மாற்றவும் இந்த கால்வாய் இணைப்புகள் உதவும். சாக்கடலின் நீர்மட்டம் குறைந்துபோனதற்கு புவி வெப்ப மாறுபாடு காரணமல்ல என்பதும், மனிதர்கள் தங்களுடைய தேவைகளுக்காக அதிக நீரை பயன்படுத்தியதும்தான் காரணம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
ஜோர்டானிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன்பாட்டிற்காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்களுடைய பொட்டாஷ் தொழிற்சாலைகளுக்கு தேவையான நீரை சாக்கடலில் இருந்து எடுத்துள்ளன.
கடந்த முப்பது வருடங்களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண்டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது. நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுர கிமீ அளவில் குறைந்து வருகிறது என்று இந்தக் குழுவின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்போது சாக்கடலை செங்கடலுடனும், மத்தியதரைக்கடலுடனும் இணைக்கும் கால்வாய்கள் வெட்டப்படுவதால் ஆண்டிற்கு 0.9 கன கிமீ அளவிற்கு சாக்கடல் மீட்கபடுமாம். இன்னும் 30 ஆண்டுகளில் சாக்கடல் முன்பிருந்த நிலைக்கு கொண்டுவரப்படும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். சாக்கடலைச்சுற்றி இயங்கும் பொட்டாஷ் தொழிற்சாலைகளும், சுற்றுலா தொழிலும் இன்னும் மேம்பட இந்த ஆய்வுகள் உதவுகின்றன.
முழுவதுமாக நிலத்தால் சூழப்பட்ட சாக்கடல் ஓர் உவர் நீர் ஏரி ஆகும். 330 மீட்டர் ஆழமுடைய சாக்கடல் பொதுவான கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை விட 6 முதல் 8 மடங்கு அதிக உப்புத்தன்மையைக் கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து தற்போது 418 மீட்டர்கள் கீழே அமைந்திருக்கிற சாக்கடல் தொடர்ந்தும் கீழே இறங்குகிறது. பூமியின் மேல் ஓடுகளின் மீது ஏற்படும் விரிசல்களினால் இந்த நீர் இறக்கம் ஏற்படுவதாக ஒரு கருத்தும் இருக்கிறது.
பல கனிமங்களின் படிவுகள் சாக்கடலின் கரையில் காணப்படுதல், மாசுபடாத வளி, வளியழுத்தம் அதிகமாக இருத்தல், புற ஊதாக்கதிர்களின் வீச்சு குறைவாக இருத்தல் ஆகியவை உடல் நலத்தை மேம்படுத்தும் காரணிகளாக இருப்பதால் உடல் மற்றும் அழகு சிகிச்சைகளுக்கு சாக்கடல் பகுதி இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இந்த ஆய்வுகள் ஒரு எச்சரிக்கை மணியாகும். நீர்வளத்தை எச்சரிக்கையுடன் கையாளத் தேவையான திட்டங்களை நமது நாடு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- பூவுலகின் நண்பர்கள், சென்னை
- பிரிவு: சுற்றுச்சூழல்
நமது பாரம்பரியச் செல்வங்களான இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது சட்ட ரீதியாக அரசின் கடமையாகிறது. இந்த வளங்கள் அனைத்தும் பொதுச் சொத்து. எனவே, அவை மக்களின் பயன்பாட்டுக்கு உரியவையே ஒழிய இவற்றை தனியார் உரிமையாக மாற்றக் கூடாது. இந்த அம்சம் உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.
தமிழகத்தில் தண்ணீரை தனியார் மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக நம்மிடையே இரண்டு முக்கிய உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது கேரளாவில் உள்ள பிளாச்சிமாடாவில் உள்ளூர் நிர்வாகம், மக்களால் துரத்தியடிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நிலைகொண்ட கோக கோலா நிறுவனத் தொழிற்சாலை. இந்த ஆலை ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் தாமிரபரணியில் இருந்து உறிஞ்சி, ஒரு லிட்டர் தண்ணீரை 13 ரூபாய்க்கு திரும்ப நம்மிடம் விற்கிறது. வாயை மூடிக் கொண்டிருந்தால் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்.
அடுத்ததாக சென்னை மாநகர மக்களின் (மேல்தட்டு, தொழிற்சாலைகள், மத்தியதர வர்க்கம் என்று வாசிக்கவும்) பகாசுர தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள வயல்களின் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதை சட்டப்படியாக்கினால் கோக கோலா ஆலையைப் போலவே தனியார் நிறுவனங்களும், லஞ்சமாக அரசியல்வாதிகளும் சம்பாதிக்கலாம் என்ற என்ற திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த ஏஜென்டான உலக வங்கி திட்டம் தீட்டி மாநில அரசுக்கு அனுப்பியிருப்பதாகக் கேள்வி. இவை இரண்டும் தண்ணீரை கூறு போட்டு விற்பதற்கு நடந்த, நடக்கப் போகிற உதாரணங்கள்.
இத்துடன் ஒரு கேலிக்கூத்தையும் மாநில அரசு தற்போது அரங்கேற்றி வருகிறது. கடல் நீரை குடிநீராக்குகிறேன், ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் முதல் தவணை வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தையும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமாக அல்லாமல், தண்ணீர் விற்பனை நிறுவனமாக பிற்காலத்தில் மாற்றிவிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வரிப்பணம் ஆயிரம் கோடி ரூபாயில் இந்த நாடகம் அரங்கேறுவதுதான் அவலம்.
நாட்டிலுள்ள நீர்நிலைகளில் உள்ள குடிப்பதற்கு உகந்த தண்ணீர்தான் கடலில் சென்று கலக்கிறது. இதை சேகரித்து பயன்படுத்துவதை விட்டுவிட்டு, அதை மாசுபடுத்தி கடலுக்குள் கலக்கவிட்டு, பின்னர் அதையே சுத்திகரித்து நமக்குத் தருகிறார்களாம். இந்த நிறுவனத்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. கட்டாயம் காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கும் அரசியல்வாதிக்கும் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
பொதுச் சொத்தான தண்ணீரை எப்படி அரசும் தனியாரும் கூட்டாக நம்மிடம் "விற்கிறார்கள்" என்பதற்கு இவை எல்லாம் தெளிவான உதாரணங்கள்.
தண்ணீர் விநியோகம்
இது மட்டுமில்லை. மாபெரும் தண்ணீரை மக்களுக்கு விநியோகிப்பதற்கு தீட்டப்படும் திட்டங்கள் எல்லாமே அதிகாரம் மிக்கவர்கள், வசதிமிக்கவர்களுக்காகத்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஏழைகள் தாகத்தில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் திட்டங்கள் எல்லாமே வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்டு தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பெரும் விவசாயிகளுக்கு பலனளிக்கின்றன.
இவ்வளவு காலம் வளங்குன்றும் வகையிலான பல்வேறு மறைமுகத் திட்டங்கள் அல்லது உள்ளூர் அரசுகளை ஊக்குவித்ததன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையையும், தண்ணீர் மாசுபாட்டையும் உலக வங்கி வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு தண்ணீர் பற்றாக்குறையை பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பாக மாற்றும் வேலையில் உலக வங்கி ஈடுபட்டு வருகிறது. உலக தண்ணீர் சந்தையின் மதிப்பு ரூ. 40,000,00 கோடி என்று உலக வங்கி மதிப்பிட்டிருக்கிறது.
இதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று யோசிப்பவர்கள், கொஞ்சம் உட்கார்ந்து சிந்தித்தால் எல்லாம் புரிந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் பாட்டில் அல்லது கேன் குடிநீர் வாங்கிக் குடிப்பதைப் பற்றி யாராவது யோசித்திருப்போமா? போவோர் வருவோருக்கெல்லாம் தாகத்தைத் தீர்த்த, தண்ணீர் பந்தல் வைத்த பாரம்பரியத்தைச் சேர்ந்த நாம், இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கிறோம். அந்த வகையிலேயே அரசு அடிப்படை உரிமைகளை மறுத்திருக்கிறது. குடிதண்ணீருக்காக ஒவ்வொருவரும் வரி செலுத்தும்போதும்கூட, குடிதண்ணீரை காசு கொடுத்தே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அடுத்த ஆண்டு வாக்கில் உலகில் 250 கோடி பேர் பாதுகாப்பான குடிநீர் இன்றித் தவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் பேர் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் அரசு விநியோகிக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும். அப்பொழுது உருவாகும் பற்றாக்குறையை பயன்படுத்தி லாபம் சேர்க்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.
இப்படியாக தண்ணீர் மீதான உரிமையை தனியார் மயமாக்கி, அதை ஒரு விற்பனைப் பொருள் ஆக்குவது வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கும் அச்சுறுத்தல்களில் ஒன்று. ஏனென்றால் தண்ணீர் சுழற்சி என்பது வளங்குன்றாத வகையில் இருக்க வேண்டும் என்ற கடப்பாடுகளை மீறி, சந்தைத் தேவைக்கேற்ப சுரண்டப்படுவதால் தண்ணீருக்கான நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். பண்டைக் காலங்களில் இருந்தது போல தண்ணீரை பயன்படுத்துவதற்கும், சமஉரிமைப் படி பகிர்ந்து கொள்வதற்குமான உரிமை உள்ளூர் சமூகத்திடமே இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தண்ணீர் விநியோகத்தை தனியார்மயமாக்குவதன் தொடக்கமாக திருப்பூர் மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் குப்பை அப்புறப்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போல, இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2002 ஆம் ஆண்டு நியூ திருப்பூர் டெவலப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 1273 கோடி ரூபாய் ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மகிந்த்ரா-மகிந்த்ரா, யுனைடெட் இன்டர்நேஷனல், வெஸ்ட் வாட்டர், பெக்டெல் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் மகிந்த்ராவைத் தவிர மற்ற மூன்றும் பன்னாட்டு நிறுவனங்கள். காட் விதிமுறைப்படி, இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் திருப்தியில்லாவிட்டாலும்கூட, ஒப்பந்தத்தை மாநகராட்சி திரும்பப் பெற முடியாது.
திருப்பூர் குடிநீர் விநியோகம் தனியார் மயமாகி உள்ளது முதல் கட்டம். ஓனிக்ஸ்-நீல் மெட்டல் பனால்கா போன்ற குப்பையள்ளும் வியாபாரத்தைப் போலவே, இந்த குடிநீர் விநியோக வியாபாரமும் மற்ற மாவட்டங்களுக்கும் தொற்றுவியாதி போல் விரைவில் பரவக்கூடும்.
தொழிற்சாலைகள் சுரண்டல்
இதுதவிர காலங்காலமாக மக்கள், விவசாயத்தைவிட தனியார் தொழிற்சாலைகளே தண்ணீரை சுரண்டிக் கொழுத்து வருகின்றன. தண்ணீர் பொதுச் சொத்து என்ற பெயரில், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் தண்ணீரை பெற்று வருகின்றன. (ஆனால் பொதுமக்கள் கொட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்) நீர்வள ஆதார அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு இருபது ஆண்டுகளாக மாறவேயில்லை. ஆனால் மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் வசதியாக ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறது. தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீர் என்றால், அவை உறிஞ்சும் தண்ணீரை மட்டும் கணக்கிடுவது முறையற்றது. தொழிற்சாலைகள் அனைத்தும் தண்ணீரை மாசுபடுத்துகின்றன. அந்தத் தண்ணீரை ஆறு, குளம், வாய்க்கால், ஏரி, குட்டை, கடல் என்று பார்க்கும் இடமெல்லாம் திறந்துவிட்டு "பொதுச் சேவை" செய்து கொண்டிருக்கின்றன.
சராசரியாக வெளியேற்றப்படும் ஒவ்வொரு லிட்டர் மாசுபட்ட தண்ணீருக்கு பதிலாகவும் 5-8 லிட்டர் மாசுபடாத தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த தண்ணீரின் அளவில் 35-40 சதவீதம் தொழிற்சாலைகள் பயன்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் இதை மறைத்துவிட்டு மக்கள் பயன்படுத்துவது அதிகம், விவசாயம் பயன்படுத்துவது அதைவிட அதிகம் என்று பலரும் பட்டியல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தொழிற்சாலைகளுக்கும் சரி, தனிநபர்களுக்கும் சரி தண்ணீரை உரிய முறையில் சரியாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய அரசு விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். முதலாவதாக, தண்ணீர் பயன்பாட்டுக் கொள்கை என்பது பொது சுகாதாரம், தண்ணீர் கிடைக்கும்தன்மை சார்ந்தது. இரண்டாவதாக, திறன்மிக்க வகையில் தண்ணீரை பயன்படுத்தும் தொழிற்சாலை, மக்களை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். தொழிற்சாலைகள் பெறும் தண்ணீரின் அளவுக்கு ஏற்பவும், லாபத்தில் ஒரு பங்கையும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்படியில்லாமல், மக்களின் வரிப்பணத்தை வாரி தனியார் முதலாளிகளுக்குத் தருவதை எந்தச் சமூகமும் எதிர்த்தே நிற்கும்.
தண்ணீர் உரிமைகளுக்காக போராடுவதுடன், தனிநபராக தண்ணீரை சேகரிப்பதில் நாம் நிறைய பங்காற்ற முடியும்.
- ஒவ்வொரு மாதத்துக்கான தண்ணீர் கட்டணத்தை பரிசோதனை செய்யுங்கள். குடிநீர் மீட்டர் சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதியுங்கள்.
- நீங்கள் நல்ல தண்ணீரை வாட்டர் டேங்கில் ஏற்றுபவராக இருந்தால் எத்தனை முறை மோட்டார் போட்டீர்கள் என்றும், லாரி மூலம் தண்ணீர் வரவழைப்பவர் என்றால் எத்தனை டேங்க் என்றும் கணக்கெடுங்கள்.
- குடிநீரையும் காசு கொடுத்து வாங்குகிறீர்களா? அதற்கு ஆகும் கட்டணத்தை கணக்கிடுங்கள்.
இவற்றை எல்லாம் செய்த பிறகு, எப்படி தண்ணீரை குறைவாகப் பயன்படுத்த முடியும் என்று திட்டமிட்டு செயலாற்றுங்கள்.
அன்றாட வேலைகளில் தண்ணீர் சேகரிப்பு
- பல் விளக்கும்போது கப்பில் எடுத்து பயன்படுத்தலாம், குழாயைத் திறந்துவிட வேண்டாம்.
- குளிக்கும் போது வாளியில் குளியுங்கள், ஷவர் வேண்டாம்.
- பிளஷ் டாய்லெட்டில் தண்ணீரை குறைவாக பயன்படுத்தவும், அதிக தண்ணீரை சேகரிக்கும் தொட்டி வேண்டாம்.
- காய்கறிகளை சட்டியில் இட்டு கழுவுங்கள், அப்படியே கழுவ வேண்டாம்.
- நடைபாதை, படி, வண்டி ஓடுபாதைகளை விளக்குமாறால் கூட்டுகள். தண்ணீரால் கழுவ வேண்டாம்.
- செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற, வாகனங்களைக் கழுவ வாளியை பயன்படுத்துங்கள், ஹோஸ் பைப் வேண்டாம்.
(இன்று உலக நீர் நாள். இந்த நாளில் நீரை சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வுடன் நமது நீர் உரிமை, அதற்கு நாம் கொடுக்கும் விலை பற்றி சிந்திப்பது அவசியம். அந்த நோக்கத்தை மேம்படுத்தும் எண்ணத்துடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது)
நன்றி: கோபர் டைம்ஸ், டவுன் டு எர்த், தர்ஸ்ட் ஃபார் பிராஃபிட், ம.க.இ.க.
- பூவுலகின் நண்பர்கள், சென்னை
- சூழல் சேதிகள்... வாசிப்பது கரிச்சான்
- காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகள் - தர்மசங்கடமான உண்மைகள் சமரசங்கள் தீர்வைத் தருமா?
- எலும்புகள்
- இணையத்தை துண்டித்த கேபிள் இணைப்பு
- உடல் பருமனாகிப் போவதற்கு காரணம் என்ன?
- நீரில் இருந்து நிலத்திற்கு.
- வேளாண்மையின் பகைவன்
- டிஜிட்டல் படுதாக்களில் ஜிலுஜிலுக்கும் சீமான்கள்
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?
- தாவரங்களின் இனப்பெருக்கம்
- சுவையறிய உதவும் வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
- பூச்சிகளை விழுங்கும் தாவரம்
- பூமி வெப்பம் அடைவது ஏன்?
- தாவரங்களின் தோள் கொடுக்கும் தோழர்கள்
- 'அப்பன் குதிருக்குள் இல்லை' பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
- டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
- 'விளக்குகளை அணைப்போம்' - கவனம் பெறும் புதிய சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
- கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்
- பாயத் துடிக்கும் பன்னிரண்டு நோய்கள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.