இன்றைக்குக் கிடைத்திருப்பனவற்றுள் மிகப் பழமையான தமிழ் நூல் தொல்காப்பியம் என ஏறத்தாழப் பெரும்பான்மையான ஆய்வறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் காலம் குறித்து அறுதியிட்டுச் சொல்ல இயலாவிட்டாலும் சங்க காலம் என ஏற்கப்பட்டிருக்கும் கி மு 2 முதல் கி பி 2 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்டதாகவோ அல்லது அதற்கு மிக நெருக்கமானதாகவோ தான் இருக்க முடியும்.
தொல்காப்பியம் மற்றும் அதனூடாகத் தமிழ் மாண்பின், மரபின் பெருமைகள் என விதந்தோதப்படுவனவற்றுள் முதன்மையானது தொல்காப்பியம் வரையறுக்கும் பொருள் இலக்கணம். மொழிக்கு மட்டுமன்றி மொழியைப் புழங்கும் மக்கள் திரளுக்கும் அவர்தம் வாழ்வியல் நடைமுறைகளுக்கும் வரம்புகளை, விதிமுறைகளை வகுத்தவன் தமிழன் என நாம் பெருமிதப்படுவதுண்டு. அத்தகு விதிமுறைகளினூடாக வெளிப்படும் ஆணாதிக்கத்தை, அப்படிச் சொல்வது சற்று மிகை எனத் தோன்றிடின் ஆண் முதன்மை நிலைப்பாட்டை ஆய்ந்திடப் புகுவோம்.
காதலின் தோற்றுவாய், காதல் நிகழ்வின் தொடக்க நிலையை, தொடங்குவதற்கான முன் நிபந்தனைகளைக் குறிப்பிடுகையில்
ஒத்த கிழவனும் கிழத்தியும் கான்ப
மிக்கோ னாயினும் கடிவரை இன்றே
என்பது சூத்திரம் (பொருள் 90). காணாமலேயே வருமளவுக்கு காதல் தற்போது பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தாலும் காணுதல் என்பதைப் புறவுருவாய் மட்டுமன்றி அகவுருவாயும் காணலாகும் எனப் பொழிப்புரை எழுதுதல் தகும். கிழவன் கிழத்திக்கு முன்பாக வைக்கப்பட்ட ‘ஒத்த’ என்னும் பெயரடை ஈண்டு உற்று நோக்கற்பாலது. ஒத்த என்னும் சொல் உயர்வும் தாழ்வுமான தன்மை அன்றைய தமிழ்ச் சமூகத்தில் நிலவியதனைக் குறிப்பால் உணர்த்துகிறது. சமநிலையிலுள்ள கிழவனுக்கும் கிழத்திக்கும் இடையில் தான் காதல் தோன்றிடலாகும். உயர்வும் தாழ்வுமானவர்கள் எதிரெதிரே நோக்குகையில் காதல் வரக்கூடுமா? வரலாம்; ஆனால் கூடாது என்றுரைக்கிறது தமிழ் இலக்கணம். சில வேளைகளில், ஆண் உயர்ந்த நிலையில் இருந்தாலும் தவறில்லை. ஆனால் பெண் உயர்ந்த நிலையில் இருந்து விடக் கூடாது என்பது சொல்லாது முடிக்கப்பட்டுள்ளது. சம நிலை என்பது என்ன? இளம்பூரணர் இதற்கான விடையை தொல்காப்பியரின் சூத்திரத்திலிருந்தே தருகிறார்.
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே
(பொருள் 269)
பிறப்பு என்பது பிறப்பினடிப்படையிலான குலத்தையும் குடிமை என்பது குடிச் சிறப்பையும் குறிக்குமாதலால் ஏறத்தாழ இன்றைய ஆணவக் கொலையாளர்களுக்குத் தொல்காப்பியரும் ஆதரவு தெரிவிக்கிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக ஆண் தாழ்ந்த வகுப்பாயிருக்கின்ற நிகழ்வுகளில் தான் இத்தகைய ஆணவக்கொலைகள் மிகுதியும் நடக்கின்றன என்பதை ஆண் ஒத்தவனாகவோ உயர்ந்தவனாகவோ தான் இருக்க வேண்டுமென்னும் தொல்காப்பிய வரைமுறையுடன் பொருத்திப் பார்த்தால் கோகுல் ராஜ், சரவணன், சங்கர் கொலைகளுக்குப் பின்னே தொல்காப்பியரும் இருக்கிறார் என்னலாகுமோ? சீமான் அவருடைய முப்பாட்டன் இழிவுபடுத்தப்படுவதாக சீறிடக் கூடும். ஆரியர்களின் நால்வருணப்பாகுபாட்டுக்கு நிகரான அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் பிரிவினையைத் தொல்காப்பியரும் ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி அது பிறப்பினடிப்படையிலானது என்பதாற்றான் பிறப்பைத் தகுதியாக்குகிறார்.
கண்டதும் காதல் அரும்புகிறது. அதனை வெளிப்படுத்தும் உரிமை ஆணுக்கே தரப்படுகிறது. காதல் இருபாலினத்தாரிடமும் இயல்பாய் எழும் உணர்வு தான் என்றாலும் ‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன (பொருள் 95); அச்சமும் நாணும் மடனுமுந் துறுத்த நிச்சமும் பெண்பாற் குரிய’ (பொருள் 96) என்பதால்.
தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
எண்ணுங் காலை கிழத்திக் கில்லை
என்பது தொல்காப்பியம் போடும் பண்பாட்டுத் தடையாணை (பொருள் 116). ஆனால் வேட்கையைப் புதுப்பானையிற் பெய்த நீர் வெளிப்படுதற்போல் குறிப்பாலுணர்த்த வேண்டும். பானையை உடைத்துக் கொட்டினாற் போல் பாவையிலும் திருமொழியிலும் வேட்கையை வெளிப்படுத்திய சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை இப்பின்புலத்தில் பார்ப்பதே பெண்ணியர்க்கும் பெரியாரியர்க்கும் உரியதாயிருக்கும். நாணும் மடனும் பெண்மைத்தென்பதால் குறிப்பினும் இடத்தினுமல்லது வேட்கையை வெளிப்பட உணர்த்துதல் பெண்ணுக்கு ஏற்புடைத்தன்று. ஆடவன் அருகுவந்து தன் வேட்கையை வெளிப்படுத்திய பின்னும் கூட உடன் படுதலையும் நேர்நின்று உரைத்தல் கூடாது.
சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின்
அல்ல கூற்று மொழி அவள்வயி னான
(பொருள் 108)
ஆமாம். தலையசைத்து ஒப்புதல் தெரிவிக்கக்கூடாது. தலை குனிந்து மறுத்தே உரைக்க வேண்டும். அதுதான் தலைவிக்குரிய நற்பண்பாகும். அந்த மறுப்பில் ஒளிந்துள்ள விருப்பைத் தலைவன் அறிந்து கொள்வான். அது தலைவனுக்குற்ற உரிமை; திறமை. பெண்டிர் உடன்பாட்டு நிலையிலுள்ளனரா அன்றி மறுக்கும் நிலையிலுள்ளனரா என்பதை இன்றும் புரிந்து கொள்ள இயலாதிருப்பதற்கு தொல்காப்பியம் அன்றே வகுத்த வரப்பும் ஒரு காரணமாயிருக்குமோ?
காதலிற் புகுந்தபின் பிறரறியா வண்ணம் எங்கு சந்திப்பது? இடத்தை யார் தீர்மானிப்பது? பெண் தான். ஆனால் அது ஒன்றும் உரிமையின் பாற்பட்டதன்று; உரிமை மறுப்பின்பாற்பட்டது. வரையறுக்கப்பட்ட தனது மனை எல்லை தாண்டி தலைவனின் எல்லை புகுதல் மனையுறை மகளிர்க்குஅறமன்றென்பதால் தம் வரம்புக்குட்பட்ட, அதாவது இல்லகத்துள் அல்லது மனையோர் கிளவி கேட்கும் தொலைவில் அல்லது எயிற்புறத்தில் கூடுதலுக்கொரு இடஞ்சுட்டும் பொறுப்பு தலைவிக்குண்டு.
அவன்வரம் பிறுத்தல் அறம்தனக் கின்மையின்
களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும்
தான்செலற் குரியவழி யாக லான (பொருள் 118)
சரி. சந்திக்கும் போது என்ன பேசலாம்?
தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல்
எத்திறத் தானும் கிழத்திக் கில்லை (பொருள் 178)
தற்புகழ்ச்சி கூடாது என்பது சரியே. ஆனால் ஆணுக்கு மட்டும் அவ்வுரிமை தரப்படுகிறது.
கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி
கிழவோன் வினைவயின் உரிய என்ப (பொருள் 179)
இதுதான் பிரச்னை.
பாலுணர்வு உரிமை, பாலுறவு உரிமை ஆகியன குறித்தும் பேசலாம். தலைவன் விருப்பத்தின் பாற்பட்டல்லாது தன் விருப்பினால் தலைவனைக் கூடலிழைக்க அழைத்தல் கூடுமோ தலைவிக்கு? உடம்பும் உயிரும் ஒருசேர வாடிய போதும் உறுப்புநலனழிதல் குறித்துப் புலம்பலாமன்றி தலைவனைத் தனே சேர்தல் தலைவிக்கு உரிய நெறியன்று.
உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும்
என்னுற் றனகொல் இவையெனில் அல்லது
கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை (பொருள் 200)
ஏனெனில், செறிவும் நிறையும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலான (பொருள் 206).
கடுஞ்சுரத்திடை, கான்வழி, மலைவழி காதலன் பின்செலக் கடமையுடையவளுக்கு கடல் வழி போக மட்டும் உரிமை இல்லை. கடல் சீற்றத்திலிருந்து பெண்கலைக் காப்பாற்றும் நோக்கமோ? சுரம், கான், மலை வழிச் சென்று சேர்வது தமிழ் நாட்டுக்குள்ளாக. கடல் வழிச் செல்வது பிறர் நாடு. குலமகளிரைப் பிறர் நாட்டுக்குள் கூட்டிச் சென்றால் இனத் தூய்மை கெடும் வாய்ப்புண்டு. ‘முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை’ (பொருள் 37) என முட்டுக்கட்டை போடுவது இதனாற்றான். பொருள்வயின் பிரிதல் ஆடவர்க்கு இன்றியமையாததாகலினும் அவர்கள் முந்நீர்க்கப்புறம் செய்யும் முயற்சிகளினால் தமிழர் இனத்தூய்மை கெடாதென்பதாலும் நெய்தற்புறத்தே இத்தகு வழிப்போக்கர்க்குத் துணையாகும் பரத்தையர் தமிழ்நிலத்தினைப் போலவே பிற நிலங்களிலும் இருந்திருப்பாராகலானும் பெண்டிர்க்கு முந்நீர் வழக்கம் மறுக்கப்படுகிறது.
கடற்பயணம் தான் மறுக்கப்படுகிறது. காதற்பயணமுமா? ஆம். ஒருதலைக் காமத்தின் கண் ஒரு துறை மடலூர்தல். அதாவது, எல்லா வழியினானும் தன் உள்ளக்குறிப்பை வெளிப்படுத்திய பின்பும் எதிர் பெறா நிலையில், பனைமடலால் பரியுரு செய்து தலைவியின் பெயரெழுதி அதன் மேல் தலைவன் ஊர்ந்து வருதல். காதலினை முந்தி வெளிப்படுத்த உரிமை மறுக்கப்பட்ட நிலையில் மடலேறும் உரிமை எப்படி கிடைக்கும்?
எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான (பொருள் 38)
“காதல் பொதுவானது; புனிதமானது; எவரிடத்தும் எவர் மாட்டும் ஏற்படும் தகைமையது” என்றெல்லாம் இன்றைய திரைப்படங்கள் கூறுகின்றன. ‘அதுவே எம் இனப்பெருமை. காதலைப் போற்றுபவை எம் சங்கப் பாடல்கள். பொதுமைச் சமூகம் எம் சங்கத் தமிழ்ச் சமூகம்’ என நாமும் பெருமிதமடைவதுண்டு. ஆனால், தொல்காப்பியர் அப்படிச் சொல்லவில்லையே!
அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இலபுறத் தென்மனார் புலவர் (பொருள் 25)
அடியோர்க்கும் வினைவலர்க்கும் அன்பின் ஐந்திணை நுகரும் வாய்ப்பில்லையாம். புறத்தமைந்த கைக்கிளையும் பெருந்திணையும் மட்டுமே அவர்கட்குப் பொருத்தமாம். அடியோர் என்போர் பிறர் ஆணை கேட்டுக் குற்றேவல் புரிவோர்; வினைவலர் என்போர் உற்பத்தி வளங்களின் உடைமை இன்றி கைத்தொழில் புரிவோர். அவர்கட்கு ‘புறத்து கடிவரை இல’ என்பது புலவர் கருத்து. புறத்து எனின் அகத்திணைப் பகுப்புக்குள் நடுவணைந்திணைக்குப் புறத்தமைந்த கைக்கிளையும் பெருந்திணையும். கடிவரை இல எனின் கைக்கிளை, பெருந்திணையில் அவர்களைப் பாடத்தடை இல்லை எனப் பொருள். ஆன்பின் ஐந்திணையில் பாடத் தடையுண்டு என்பாது சொல்லாமல் விளங்கப்பெறும். இளம்பூரணர் “ அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயங்க வேண்டும். அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்பவர்க்குச் செய்தல் அரிதாகலானும் அவர் நாணுக்குறைபாடுடையராகலானும் குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவாராகலானும் இன்பம் இனிது நடத்துவோர் பிறரேவல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்குரியவராயினார்” என விளக்குகிறார். அகம் அறம், பொருள், இன்பம் மூன்றும் தழீயது. பொருள் இல்லையேல் அறநெறிப்படி நடக்க இயலாது. அத்தகையோர்க்கு இன்பம் நுகரும் தகுதி இல்லை. இது தான் உட்கருத்து. நடுநாள் யாமம் பகலும் துஞ்சாது கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கு காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் மலரைக் காத்திருந்து நுகர நேரமேது? அவனுக்கு அவ்வளவு நேரம் கிடைத்துவிட்டால் அவனை ஆணையிட்டு நடத்தும், அவன் உழைப்பால் பிழைக்கும் உடைமையாளர் கூட்டத்துக்கு உயர்வேது? அதனால் தான் உழைக்கும் வர்க்கத்துக்கு அன்பின் ஐந்திணையை அண்டும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
ஆக, ஆண் மைய, ஆண்வழிச் சொத்துரிமைச் சமூகம் அரும்பத் தொடங்கிய காலகட்டத்தில், பெண்கள் நிறை, கற்பு, நாண், நற்பண்புகள் என்ற பெயரில் இயல்பான உணர்வுகளையும் வெளிப்படுத்த உரிமை அற்றவர்களாய், ஆடவரின் உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் விழைவுகளுக்கும் ஏற்ப ஆடும் ஆடிப்பாவைகளாய் மாற்றப்பட்ட தருணத்தைத் தான் தொல்காப்பியம் குறிக்கிறது. அக்காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் வர்க்க வேற்றுமை தொடக்க நிலையிலும் ஆணாதிக்கம் முதிர்ந்த நிலையிலும் இருந்ததை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உலகின் பிற பகுதிகளின் சமூக வரலாறு எப்படி இருந்ததோ அதனை ஒட்டியே தமிழ்ச் சமூக வரலாறும் இருந்திருக்கிறது என்பதே உண்மை. எனவே தனிச் சிறப்பு மிக்க தமிழ் தேசியம் எனச் சொல்லிக் கொண்டு ஆணாதிக்க முதலாளித்துவத்துக்கு முட்டுக் கொடுக்காமல் சம உரிமையும் பொது உடைமையும் கொண்ட புதிய சமுதாயம் காண்பதற்கான போராட்டத்தை உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் மக்கள் திரளினருடன் ஒன்றிணைந்து தொடர்வதே நம் பணியாகும்.
- சி.அருள்