புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருமணத்தின் போது இரவிக்கை அணியும் உரிமையை பெற்ற முதல் தலித் பெண்!
புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிறுவனர் அய்யா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பவளவிழா மலரில் கண்ட ஒரு அரிய தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.
“புதுக்கோட்டை அரசியல் வீசிய புயல்கள்” என்கிற தலைப்பில் அந்தப் பவளவிழா மலரில் திரு.எஸ்.ஆரோக்கியசாமி என்பவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில், புதுக் கோட்டையின் அரசியல் வரலாறு குறித்து பல தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளார். அவற்றில், புதுக்கோட்டையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த க.மு.வல்லத்தரசு பற்றி அவர் எழுதியிருக்கும் ஒரு பகுதியை அப்படியே கீழே கொடுத்திருக்கிறோம்.
க.மு.வல்லத்தரசு அரசியல்வாதி மட்டுமல்ல. சமூக சீர்திருத்தச் சிற்பியும்கூட. அதற்கு ஓர் உதாரணம் மட்டும் தருகிறேன். என்னோடு கல்லூரியில் படித்த நண்பர் சோலை. இவர் புதுக்கோட்டை காந்தி நகரில் பிறந்து வளர்ந்தவர். மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் பாரதிதாசன் ஐ.ஏ.எஸ் முடித்து சட்டீஸ்கர் மாநிலத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறார். கல்லூரிக் காலம் முதல் இன்றுவரை என் இனிய நண்பராக இருப்பவர் சோலை. அவரது குடும்பத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை என்னிடம் விவரித்தார்.
என் நண்பர் சோலையின் தந்தை குட்டிச்சாமி, புதுக்கோட்டை சமஸ்தான பட்டாளத்தில் (ராணுவம்) சிப்பாயாக வேலை பார்த்தவர். அவர் சிப்பாயாக வேலை பார்த்ததால் சிப்பாய் குட்டிச்சாமி என்று அழைக்கப்பட்டார். அவருக்கு காரைக்குடியில் திருகவட்டி குட்டிச்சாமி மகள் பிரகதாம்பாளைப் பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.
அந்தப் பெண்ணின் மூத்த அண்ணன் கு.குருசாமி என்பவர் பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். காரைக்குடி பஞ்சாயத்து போர்டு உறுப்பினராகவும் செயல் பட்டதால் பல பெரிய மனிதர்கள் தொடர்பும் அவருக்கு இருந்துள்ளது. தன் தங்கை பிரகதாம்பாள் திருமணத்தைப் புரட்சிகரமாக நடத்த முடிவு செய்துள்ளார்.
அப்போது தலித் மக்கள் செருப்பு அணிந்து நடக்கக்கூடாது. தோளில் துண்டு அணியக்கூடாது. அப்படித் துண்டு அணிந்தால் மேல் ஜாதிக்காரர் களைப் பார்த்தவுடன் அந்தத் துண்டைத் தோளிலிருந்து எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும். தலித் பெண்கள் முழங்காலுக்கு மேல்தான் சேலையைக் கட்டிக்கொள்ள வேண்டும். மார்பகத்தை மூட இரவிக்கை (பிளவுஸ்) அணியக் கூடாது. இப்படியெல்லாம் சமூக அநீதி கோலோட்சிய கொடூரம் நிலவிய காலம்.
இந்தச் சூழ்நிலையில், பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட பெண்ணின் அண்ணன் குருசாமி தன் தங்கைக்கு மற்ற ஜாதி பெண்களைப் போல் இரவிக்கை அணிவித்துத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். அத்திருமணத்தைத் தலைமை ஏற்று நடத்தித் தர க.மு.வல்லத்தரசு அவர்களை அழைக்கிறார்.
வல்லத்தரசும் அப்போது பெரியாரின் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டவராக, சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புரை நிகழ்த்தி வந்தார். அதனால் அவரும் அத்திருமணத்திற்குத் தலைமை ஏற்க ஒத்துக் கொண்டார்.
1932 ஆம் ஆண்டு சிப்பாய் குட்டிச்சாமிக்கும், இரவிக்கை அணிந்து மணப்பெண்ணாக வீற்றிருந்த பிரகதாம்பாள் என்கிற பெண்மணிக்கும் க.மு.வல்லத்தரசு திருமணத்தை நடத்தி வைத்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் இரவிக்கை அணிந்து செய்துகொண்ட முதல் (புதுக்கோட்டை சமஸ்தானத்தில்) புரட்சிகரத் திருமணம் புதுக் கோட்டை காந்திநகரில் வல்லத்தரசு தலைமை ஏற்று நடத்தி வைத்தார் என்பது வரலாறு பதிவு செய்துள்ள உண்மை.
பகுத்தறிவு என்றால் எதிர்ப்பு இல்லாமலா? சுயமரியாதை என்றால் சும்மாவா இருப்பார்கள் பழைமைவாதிகள்? சமூகநீதியை மீறிவிட்டான் சிப்பாய் குட்டிச்சாமி. ஜாதிச் சம்பிரதாயங்களைப் புதைகுழிக்குள் அனுப்பி விட்டான். சமூகக் கட்டுப் பாடு என்னாவது? ஆகவே, சிப்பாய் குட்டிச் சாமியை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று அரசவையில் வழக்குத் தொடுத்தனர் பழமைவாதம் பேசும் பெருச்சாளிகள்.
ஜாதி வெறியர்கள் கொடுத்த வழக்கை அரசவையிலுள்ள அவையோர் தள்ளுபடி செய்து விட்டனர். சிப்பாய் குட்டிச்சாமி 1948 ஆம் ஆண்டு வரை சிப்பாயாகப் பணிபுரிந்து பிறகு தமிழ்நாடு காவல் பணியில் சேர்ந்து 1962 வரை பணியாற்றினார் என்பது வரலாறு.”
இந்த அரிய வரலாற்றுக் குறிப்பைப் படித்தவுடன், அய்யா பா.கிருஷ்ணமூர்த்தியின் மூலமாக, கட்டுரையாளர் அய்யா எஸ்.ஆரோக்கியசாமி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம். பிறகு அவருடைய நண்பரும், தன் பெற்றோரின் திருமணம் குறித்த இந்தச் சம்பவத்திற்குச் சாட்சியாக இருக்கிற அய்யா சோலை அவர்களிடமும் பேசி இந்த வரலாற்றுச் செய்தியினை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துகொண்டோம்.
அந்தத் திருமணத்தை நடத்தி வைத்த வல்லத்தரசு அவர்கள், அவரது சுயமரியாதைப் பிரச்சாரத்தின் காரணமாக நாடு கடத்தப்பட்டவர் என்பதைக் குடிஅரசு வழியாக அறிந்தேன். அது பற்றிப் பெரியார் வெளியிட்ட அறிக்கை இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
“புதுக்கோட்டையில் பிரபல வக்கீலாகவும், சமதர்ம வாதியாகவும், பாமர மக்களின் மூடப்பழக்க வழக்கங்களையொழித்து அவர்களைப் பார்ப்பனர்களிடம் ஏமாறாமலிருக்கும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கமுடையவராகவும் இருந்த திரு. முத்துசாமி வல்லத்தரசு பி. ஏ., பி. எல்., அவர்களைத் தமிழுலகம் நன்றாய் அறியும். சென்ற வருஷத்தில் புதுக்கோட்டையில் முனிசிபல் வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக நடந்ததாகச் சொல்லப்படும் கலகத்தை முன்னிட்டு இதுவரையிலும் அவரைக் கைது செய்து வைத்திருந்தார்கள்.
ஆனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சமஸ்தானத்தில் உள்ள பிரபலமானவர்களும், வெளியூர்களில் உள்ள சில பிரமுகர்களும் பலமான கிளர்ச்சி செய்து கொண்டு வந்தார்கள். இதன் பயனாக புதுக்கோட்டை அரசாங்கத்தாரும் அவரை விடுதலை செய்ததோடு மட்டும் அல்லாமல் இனி சமஸ்தானத்திற்குள்ளேயே வசிக்கக் கூடாதென, சமஸ்தானத்திற்கு வெளியிற் கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.
நாட்டின் பொது ஜனங்களால் மதிக்கப்படுகின்ற ஒருவரை உண்மையிலேயே அரசாங்கத்தின் நன்மைக்காக உழைக்கப் பாத்தியமுடைய ஒருவரை இவ்வாறு வெளியேற்றுவதற்குக் காரணம் பார்ப்பன சூழ்ச்சியைத் தவிர வேறில்லை என்றுதான் நாம் கூற வேண்டியிருக்கிறது. திரு. வல்லத்தரசு அவர்கள், புதுக்கோட்டையில் உள்ள பார்ப்பனர்கள் கூடிக் கொண்டு செய்த காங்கிரஸ் கிளர்ச்சிக்கு விரோதமாகக் கூட்டம் நடத்தினார். காங்கிரஸ் கிளர்ச்சி தலையெடுப்பதற்கு விரோதமாக இருந்தார். பார்ப்பனர்களைப் பாமர மக்கள் நம்பி அவர்களுடைய சாஸ்திரங்களுக்கும், மதங்களுக்கும், சடங்குகளுக்கும் கட்டுப்பட்டுக் கிடப்பதை அகற்றப் பாடுபட்டார்.
பார்ப்பனர் சூழ்ச்சியில் ஈடுபட்ட பாமர மக்களைக் கண்விழிக்கச் செய்து பகுத்தறிவுடையவராக்கப் பிரசாரம் பண்ணும் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்டவ ராயிருந்தார். இதன் பயனாகப் புதுக்கோட்டையில், நமது சுயமரியாதை இயக்கமும், அதி தீவிரமாகப் பரவ ஆரம்பித்தது. இக்காரணத்தால் அந்தச் சமஸ்தானத் திலுள்ள பார்ப்பனர்கள் அனைவரும் அவர்மேல் துவேஷமும், பொறாமையுங் கொண்டு, அவரை எப்பொழுது அழுத்தலாம் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குப் புதுக்கோட்டை கலகமே ஒரு காரணமாக அகப்பட்டது. எப்படியோ எந்தக் காரணத்தாலோ, யார் வைத்த கொள்ளியோ வீடு வெந்து போயிற்று. அரசாங்கத்தாரும், ஒரு நல்ல தோழரை வெளியேற்றி விட்டார்கள் என்று நாம் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.
ஆனால் திரு. வல்லத்தரசு அவர்களை வெளியேற்றி விட்டதினால், புதுக்கோட்டையில் சமதர்மக் கொள்கை பரவவொட்டாமல் செய்து விடலாம் என்று வீண் எண்ணங் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் எண்ணம் பயனற்றது என்பதை மாத்திரம் கூறுகிறோம். இனிதான் அந்த சமஸ்தானத்தில் நமது இயக்கக் கொள்கைகள் அதி தீவிரமாகப் பரவுமென்பதைக் கூறுகிறோம். இறுதியாகத் திரு. வல்லத்தரசு அவர்களும், தம்மை சமஸ்தானத்தார் வெளியேற்றியது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தமது கொள்கையாகிய சமதர்ம ஊழியத்தைத் தளர்ச்சியின்றி பிரிட்டிஷ் இந்தியாவில் புரிந்து புகழ்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
பார்ப்பன ஆதிக்கம் பெற்ற சுதேச சமஸ்தானத்தில், சமதர்ம நோக்கமுடைய ஒரு பார்ப்பனரல்லாதார்க்கு நேர்ந்த கதியைப் பார்த்தவர்கள், இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த சுயராஜியம் ஏற்படுமாயின் சமதர்ம நோக்கமுடைய நம் போன்றவர்களுக்கெல்லாம் என்ன கதி நேருமென்பதைச் சிந்தித்துப் பார்க்கும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம். - குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.01.1932